மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 6

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

``தர்மம் போடுங்க சாமி...’’ என்று நம் முன்னால் கையேந்தி நிற்கும் சகமனிதனுக்கு, சில்லறைகளை மிகுந்த பெருமிதத்தோடும் பெரும் கொடை வழங்கிய வள்ளல் முகத்தோடும் தர்மமிடுகிறோம். அவற்றைப் பெற்றுக்கொண்ட மனிதர், ``நீங்க நல்லா இருக்கணும் சாமி’’ என்று நம்மை ஆசீர்வதிக்கிறார். நாம் தரும் சில்லறையில் ஒரு பன், டீகூட வாங்க முடியாவிட்டாலும், `நீங்க நல்லா இருக்கணும் சாமி’ என்று ஆசீர்வதிக்கும் பண்பை, நாம்தான் அவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.

நான்காம் சுவர் - 6

``ஆன்மிகத்தின் அதீதநிலை, பிச்சையெடுத்தல்’’ என்றார் சின்ன வள்ளலார். எங்களின் ஆன்மிகத் தேடலின் ஞானகுருவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர் அவர். பார்ப்பதற்கு வள்ளலாரைப் போன்றே காட்சியளிப்பதால்,  `சின்ன வள்ளலார்’ என்றே நாமம் பெற்றார். மேலும் அவர், ``உன்னிடம் இருக்கும் `நான்’ எனும் அகந்தை, பிறரிடம் கையேந்தினால்தான் ஒழிந்துபோகும். யாவற்றையும் துறந்து பிச்சை புகுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்றார்.

`பூட்டிய கதவுகளின் முன்னால்

பஞ்சுப்பொதியைத் தலைக்கு அண்டக் கொடுத்து,

கவட்டில் கை வைத்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை,

யாரோ என எப்படிச் சொல்வேன்?’

என்ற தேவதேவனின் கவிதை நினைவுக்கு வந்துபோனது. நானும் வேலுவும் ஒருமுடிவுக்கு வந்தோம். தேவதேவனும் சின்ன வள்ளலாரும் சேர்ந்து குழப்பிய எங்களின் ஞானக்குட்டையில் மீன் பிடிப்பது எனத் தீர்மானித்தோம்.

``செஞ்சி போகும் வழியில் பொதுமண்டபத்தில் மைலோ என்கிற பிச்சைக்காரனைத் தெரியும்’’ என்றான் வேலு.

``மச்சி, வெயிட்டு கையி மைலோ... அங்க இருக்கிற பிச்சைக்காரங்களுக்கெல்லாம் தல... `மயில்வாகனம்’ங்கிற பெயரைத்தான் `மைலோ’னு சுருக்கியிருக்கான்’’ என்றான். கிளம்பினோம்.

ஆங்காங்கே பாறைகள் முளைத்திருந்த ஒரு நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கினான். ஒரு சாலை, கிளை பிரிந்து சென்றது.

``கொஞ்சதூரம் நடந்தா ஒரு மண்டபம் வரும். எல்லாப் பிச்சைக்காரர்களுக்கும் அந்த மண்டபம்தான் வூடு. வா... வா...” என்று நடந்தான்.

நான்காம் சுவர் - 6

தன் மாமா, கடனுக்கு பயந்து ஆறு மாதம் இங்குதான் மறைந்திருந்ததாக வேலு சொன்னது நினைவுக்கு வந்தது. மண்பாதையின் இருமருங்கிலும் மரங்களும் பாழ்மண்டபங்களும் புதர்களுமாக இருந்தன. ஞானத்தை அடைவதென்றால் சும்மாவா என்ன... பாழ்மண்டபத்தை அடைந்துவிட்டோம். ஏதோ பேய்ப் படத்துக்கு அரங்கம் அமைத்ததுபோன்றே இருந்தது. மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளைத் தொட்டிக்குள் பத்திக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

மண்டபத்தின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வீடுகள் இருந்தன. பழங்காலத்து சர்ச் ஒன்றும் தெரிந்தது. மண்டபத்தில் சிலர் படுத்தபடி இருந்தனர். இரண்டு பேர் ஆடு புலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். கிழத்தி ஒருவள் வானத்தை வெறித்தபடி இருந்தார். சுற்றி இருந்த யாசக நண்பர்கள் விநோத பட்சிகளாக எங்களைப் பார்த்தார்கள். `அவர்களையும் சகமனிதர்களாக நினைத்துப் படுக்க வந்த எங்களின் தியாகத்தைப் புரிந்துகொள்ளாத அப்பாவிகள்’ என்று மன்னிக்கும் மனோபாவத்தை ஆன்மிகம் எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. பாழ்மண்டபத்தின் தூண்கள் வழியே நிலவு, வெளிச்சத்தைத் தந்துகொண்டிருந்தது.

வேலு மைலோவைக் கேட்டதற்கு, ``பக்கத்து ஊர்ல முண்டக்கன்னியம்மாளுக்கு அன்னதானம் நடந்துச்சாம். சோறு மீந்துச்சுன்னு எங்களுக்கு எடுத்துக்கினு வரப் போயிருக்கான். நீங்க அவனுக்குச் சொந்தக்காரரா?” என, பெரியவர் பீடியைப் பற்றவைத்துக்கொண்டார்.

``மைலோ நமக்கு சிநேதகாரன் தாத்தா...” பிச்சைக்காரனாக மாறினாலும் `எனக்கு நண்பன்’ என்று சொல்லும் வேலுவை நண்பனாகப் பெற்றது பாக்கியம்தான்.

மைலோவின் வரவுக்காக ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டோம். ஒரு ரிக்‌ஷாவில் கோயிலின் அன்னதானத்தை எடுத்துக் கொண்டு வந்தார் மைலோ. குறைந்தது 45 வயதாவது இருக்கும். முன்நெற்றி கொஞ்சமாய் ஏறி, தாடியுடன் மாநிறத்தில் இருந்தார். வேலு நண்பன் என்றதும் நம் வயதுதான் இருக்கும் என எண்ணிக் கொண்டேன்.

``இன்னா வாத்தியாரே... எப்டியிருக்க?”

``வா வேலு... இன்னா திடீர்னு... மாமா எப்படி இருக்காப்ல?”

டபராவை ரிக்‌ஷாவிலிருந்து கீழே வைத்தோம். கோயிலின் சாம்பார் சாதத்துக்கு, பிரத்யேக வாசனை உண்டு. தொன்னையில் கொடுக்கப்பட்ட சாதத்தைக் குழைத்து அடித்தோம். மைலோவும் சாப்பிட்டு முடித்தார். சிவபானத்தை ஒருவர் இழுத்து இன்னொருவரிடம் கொடுக்க, அவர் பதுவுசாக வாங்கி இழுத்துக் கொண்டார். ஒரு தூணின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு வேலு, என்னை மைலோவுக்கு அறிமுகம் செய்துவைத்தான். ஞானத்தைத் தேடி வந்ததாகச் சொன்னதற்கு, விழுந்து விழுந்து சிரித்தார் மைலோ. எனக்கு ஒருமாதிரியாக இருந்தது.

``இன்னா வேலு... உன் மாமா கடன் பிரச்னைல்லாம் முடிஞ்சிச்சா?” மைலோ தனது கைப்பையிலிருந்து பீடியைத் தேடினார். பீடியை எடுக்கும்போது சிலுவை சுமந்த ஜெபமாலையும், தொழுகைக்கு அணியும் தொப்பியும் கையோடு வந்தன. நான் பார்த்ததைப் பார்த்துவிட்டார்.

என்னைப் பார்த்த மைலோ ``இன்னா வாத்தியார் பார்க்கிற... வெள்ளிக்கிழமை மதியம் ஜும்மா நேரம் தொப்பியப் போட்டுக்கிட்டு மசூதி வாசல்ல உட்காருவேன். அன்னிக்கு சாயங்காலமே பட்ட அடிச்சுக்கிட்டு சிவன் கோயில் வாசல்ல உட்காருவேன். ஞாயித்துக்கிழமை சர்ச் வாசல்ல சிலுவை போட்டுக்கினு இருப்பேன். பிச்சைக்காரங்களுக்கு எல்லா சாமியும் ஒண்ணுதான். நாங்க கடவுளோட கொய்ந்தைங்க” என்று பீடியைப் பற்றவைத்துக்கொண்டார்.

``இது தப்பில்லயா?” என்றேன்.

``தப்பு, சரி எல்லாம் இருக்கப்பட்ட உங்களுக்குத்தான். எங்களுக்கு சாதியும் கெடையாது... மதமும் கெடையாது. சொல்லப்போனா, பேரே கெடையாது. இதெல்லாம் பிச்ச எடுத்தாத்தான் உனுக்குப் புரியும்” பீடியை இழுத்துக்கொண்டார். உண்மைதான். பெயர் வைத்திருக்கும் நமக்குத்தான் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் எல்லா கெளரவங்களும் தேவைப்படுகின்றன. பெயரற்றவர்கள் பாக்கியசாலிகள்!

இருட்டியது. மைலோ கட்டையைச் சாய்த்தார். நானும் வேலுவும் படுத்துக் கொண்டோம். படுத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. வேலுவின் பக்கத்தில் படுத்திருக்கும் மைலோவுக்கும் ஒரு கதை இருக்கும். எங்கெங்கோ பதியனிட்ட இந்த வேர்களை, காலம் சுழற்றியடித்து ஒரு குடைக்குள் படுக்கச்செய்திருக்கிறது.

நான்காம் சுவர் - 6

``வாத்யாரே... இப்பல்லாம் மாமா கடன் வாங்குறதேயில்ல தெரியுமா?” வேலு மைலோவிடம் சொன்னான்.

``பிச்ச எடுத்துப் பழகிட்டா... கடன் வாங்க பயப்படுவாங்க...” என்றார்.

மண்டபத்தில் பாதிப்பேர் உறங்கிய நிலையில், துணிப்பையுடன் ஒரு பெண்மணி வந்தார். நான் படுத்திருந்த தலைமாட்டில் துணிப்பையை வைத்தார். முகம் சிடுசிடுவென இருந்தது. வாங்கி வந்திருந்த உணவுப் பொட்டலத்தைச் சாப்பிட்டார். எனக்குப் புரிந்துபோனது நான் படுத்திருப்பது அவரின் இடம். இந்தப் பாழ்மண்டபத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைப் பட்டா போட்டிருக் கிறார்கள். இங்கே நானும் வேலுவும்தான் புறம்போக்குகள். ஆனாலும், இப்போது எழுந்து சென்றால், தவத்தைப் பாதியில் முடிப்பதைப்போல ஆகிவிடும்.

சாப்பிட்டு முடித்தவர், நைந்த குவளையில் தண்ணீரை எடுத்து, கைகழுவிக்கொண்டார். தனது சாயம்போன முந்தியில் துடைத்துக் கொண்டார். வேலு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் படுத்திருந்த மைலோ எழுந்து தண்ணீரைக் கொஞ்சமாய்க் குடித்துக்கொண்டார்.

``ஏன் இம்மா நேரம்?” மைலோ, எனக்குப் பக்கத்தில் இருந்த பெண்மணியைப் பார்த்துக் கேட்டார்.

``தர்காவுல உக்காந்தா கலெக்‌ஷன் நல்லா இருக்கும்னு கலா சொன்னா... அவள நம்பிப் போயி உக்காந்தா... தம்புடி தேரல’’ என்றதும் மைலோ சிரித்தார். நானும் கமுக்கமாய்ச் சிரித்தேன். பெண்மணி என்னைப் பார்த்தார். என்மேல் இப்போது அவருக்குக் கோபம் அதிகமாகியிருக்கிறது என்பது புரிந்தது.

மைலோ படுத்துக்கொண்டார். ஆனால், தூங்காமல் விட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தார். வேலு, தூக்கத்தின்பால் ஞானத்தை அடைந்துகொண்டிருந்தான். அழுக்கில் ஊறிய பஞ்சுமூட்டையைத் தலைக்குக் கொடுத்து பெண்மணி படுத்துக்கொண்டார். தனக்குள்ளாகவே முனகிக்கொண்டார். `இவர்களோடு ஓர் இரவு தங்கி... யாரோ ஒருவனிடம் முழங்காலிட்டு யாசகம் கேட்கும் ஒருநாள் பிச்சாந்தேகியைப் பார்த்து இப்படி அலுத்துக்கொள்கிறாரே!’ என்று கோபம் வந்தது. அப்போதுதான் மனத்திரையில் வந்த சின்ன வள்ளலார் `பொறுமையோடு இறைவன் திருவடியை அடைந்துவிட்டால், முக்தியைப் பெறலாம்’ என்று அருளாசி வழங்கி மறைந்துபோனார்.

குளிரின் கூதலில் எதிரே படுத்திருக்கும் பிச்சைக்கார நண்பரின் வயிற்றில் காலைப் போட்டு சூட்டைப் பெற்றுக்கொண்டிருந்தது ஒரு நாய். உறங்கலாம் என்றிருந்த வேளையில் பெண்மணியின் முனகல் சற்று அதிகமாகவே கேட்டது. ``கம்னாட்டிவோ, சுத்தி எவ்ளோ எடம் இருக்குது... அத வுட்டுட்டு, என்னாண்டதான் வந்து கட்டைய சாய்ப்பானுங்களா... திருட்டுக் கம்னாட்டிங்க” என்று முகத்துக்கு நேரே போரைத் தொடங்கினார். வந்த உறக்கமும் வரவேண்டிய ஞானமும் இந்தப் பெண்மணியின் அறியாமையால் வராமல் போய்விடுமோ எனப் பொறுமை காத்தேன். பக்கத்தில் மைலோ தூங்காமல் இருந்தது, வேறு மாதிரியான சூழலைப் புரியவைத்தது. `யாசகனாய் மாறினால் ஞானத்தை அடைந்துவிடலாம் என்று குரு சொன்னாரே... இவர்களெல்லாம் பழுத்த யாசகர்களாயிற்றே! பிறகு ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள். ஒரு சிறு இடத்தை, ஓர் இரவு ஞானம் பெற வந்தவனுக்கு விட்டுத் தர மறுக்கும் இவர்கள், எப்படித்தான் முக்தியடைவார்களோ’ என்றும் தோன்றியது.

``பிச்சக்காரியக்கூட வுட மாட்டானுங்க... அலையறானுங்க... பிச்சக்காரக் கம்மினாட்டிங்க” என்று அவர் பாட்டுக்கு ஏகதேசத்தில் பொரிந்து தள்ளினார்.

`இதுவரை திட்டியதுகூட ஞானத்தின்பால் விட்டுவிடலாம். ஆனால், இப்போது வேறோர் ஆயுதத்தைக் கையிலேந்தி மல்லுக்கு நிற்கிறார். அடுத்ததாக எல்லை மீறிய பயங்கரவாதத்தில் நான் ஈடுபட்டேன் என்று கத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஒருவேளை கத்திக் கூப்பாடு போட்டுவிட்டால் `தர்மம் போடுங்க சாமி’ என்றவர்கள், தர்ம அடி போட்டுப் பிரித்துவிடுவார்கள். அதுகூடப் பரவாயில்லை. உண்மை தெரியாத வேலுகூட `இன்னா மச்சி, பிச்சக்காரியகூடவா... தப்பில்ல?’ என்று அறிவுரை சொல்வதாக ஊருக்கே சொல்லிவைப்பான். இனி, ஒரு நிமிடம்கூடத் தாமதிக்கக் கூடாது அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்’ எனத் தீர்மானித்தேன்.

மனத்திரையில் சின்ன வள்ளலார் தோன்றினார். `அவமானங்களைக் கடந்தால்தான் ஞானத்தின் எல்லை ஆரம்பம்’ என்றார்.

``அடப்போங்க குருவே, நிலைமை தெரியாமல்...’’ என்று அசட்டை செய்தபடி வேலுவை எழுப்பினேன்.

எழுந்தும் எழும்பாமல் இருந்தவனைக் கைப்பிடித்து, அந்தப் பெண்மணியின் பார்வை படாத இடத்தில் இருவரும் படுத்துக்கொண்டோம்.

வெள்ளைக் காகிதத்தில் கன்னாபின்னாவென ஒரு குழந்தை பேனாவில் கிறுக்கியதுபோல, எந்த ஒழுங்குமற்று யாவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நாங்கள் படுத்த இடத்தில் என் முகத்துக்கு அருகே மூத்த பிச்சைக்காரர் ஒருவர், ரத்தினக்கால் தோரணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் அப்படித் தூங்கியது ஒன்றும் பிரச்னையில்லை. கொஞ்சம் உள்ளாடையும் அணிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திரும்பிப் படுத்துக்கொண்டேன். `விடிந்தால் போதுமடா சாமி!’ என்பதாக, கண்களை இறுக்கி மூடினேன்.

ஒரு பொட்டுத் தூக்கமும் வரவில்லை. அந்தப் பெண்மணி தூங்கிவிட்டாரா எனப் பார்க்கலாம் என்றால், தர்ம அடி நினைவுக்கு வந்து பயமுறுத்தியது.

`காதறுத்த ஊசியும் வாராதுகாண் கடை வழிக்கே’ என்ற பட்டினத்தார்கூட இப்போது இருந்திருந்தால் `நிலம் எனது உரிமை’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரவருக்கான இடத்தைக் கேட்காமல்கொள்ளாமல் ஆட்கொண்டது தவறுதான் என்று மண்டைக்கு உறைத்தது. பாவம், அந்தப் பெண்மணியின் இரவு நம்மால் நரகமானதை நினைத்து, தண்ணீர் குடிப்பதைப் போல எழுந்து பார்த்தேன்.

பாழ்மண்டபத்தின் குறுக்குவெட்டுச் சித்திரமாகப் படுத்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் நடுவே, அந்தப் பெண்மணியும் மைலோவும் கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். வாழ்வின் எல்லாப் புறக்கணிப்புகளின் வெம்மை தாளாது தகித்துக்கொண்டிருக்கும் இரு ஜீவன்களின் அரவணைப்பு இது. காலம் கடந்து பூத்திருக்கும் இந்த அன்பின் பெயர்தான் `காதல்.’

ஓர் இரவில் நான் கண்ட ஞானம் இதுவன்றி வேறென்ன? அந்தப் பெண்மணியின் முகம் சலனமற்று உறங்கிக்கொண்டிருந்தது. யாரோ ஒருவனின் செல்ல மகளாகத்தானே அவர் பிறந்திருப்பார். யாரோ ஒருவனின் அன்பு மனைவியாகத்தானே அவர் இருந்திருப்பார். யாரோ ஒருவனின் தாயாகத்தானே அவர் வாழ்ந்திருப்பார். இப்போது மைலோவின் அணைப்பில் ஆசுவாசமாய் உணரும் அவரை, யாரோ ஒருவள் என தேவதேவன் கவிதையைப் போல நான் எப்படிச் சொல்ல முடியும்? காலமெனும் சக்கரம் திரும்பினால் அவளே என் தாய்; அவளே என் மகள்!

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சர்ச்சின் வாசலில் கழுத்தில் சிலுவை அணிந்து உட்கார்ந்திருந்தார் மைலோ. எதிர் பெண்கள் வரிசையில் மைலோவின் இணையர் உட்கார்ந்தி ருந்தார். எங்களையும் உட்காரச் சொன்னார். இரவின் கதையை வேலுவிடம் சொன்னதால் அவனே கேட்டான். மைலோவின் முகத்தில் வழிந்த புன்னகையை மறைத்துக்கொண்டு ``ஆமா வாத்யாரே... இனிமே எல்லாமே அவதான். ஏதோ தேக நோய்னு வூட்டவுட்டுத் தொரத்திட்டான்கலாம்... நம்ம டாவு அங்க இங்கன்னு அலைஞ்சு, நம்ம தொட்டிக்கு வந்துச்சு... நாமதான் பிச்சக்காரங்களுக்கெல்லாம் மேஸ்திரியாச்சே. இருந்துட்டு போட்டும்னு சேத்துக்குனேன்... மவன ஒரு மழ நாள்ல பக்குன்னு காதல் வருமா...” வாழ்வின் தீராத் துயரை நாள் கடந்து சொல்கிறபோது அது நமக்கே செய்தியாக மாறிவிடுகிறது.

சர்ச்சினுள்ளே பாதிரியாரின் குரல் கேட்டது `உன்னை பெருகப் பெருகவே பண்ணுவேன்.’ நான் விடவில்லை ``நீ ஏன் வாத்யாரே இங்க வந்த?” கதை கேட்பது என் கூடப்பிறந்தது.

``அத்த ஏன் கேக்குற வாத்யாரே... நமக்கு லவ் மேரேஜ்தான்... வந்தவள நானு புரிஞ்சுக்கல... அவ என்னையும் புரிஞ்சுக்கல. ஆனா, என் உயிர் நண்பன்னு கூட இருந்தவன் என் பொண்டாட்டிய புரிஞ்சிக்கினான். ஒருநாள் கண்ணுக்கு நேரா பார்த்துட்டன் வாத்யாரே... என்னென்னமோ தோணுச்சி... கொன்னுடலாம்னுலாம் நெனச்சன்... அவள கொன்னுட்டு ஜெயிலுக்குப் போறதான்னு உட்டுட்டேன். ஆனா இன்னா... என் அம்மாதான் புலம்பிப் புலம்பி செத்தேபோச்சு. ஒண்ணு கவனிச்சியா வாத்யாரே, அம்மாங்கதான் நம்மள வுட்டு ஓடுறதே இல்ல” என்று சிரித்தார்.

யாவற்றையும் எளிதாகக் கடந்துவிட மைலோவால் முடிகிறது. நாங்கள் அமைதியானோம்.

``இன்னா வாத்யாரே ஃபீலிங்கா... இதக் கேட்டீன்னா செம காமெடியா இருக்கும். போன வருஷம் கார்த்திக தீபத்துக்கு திருவண்ணாமலை கிரிவலத்துல கலெக்‌ஷன்ல உக்காந்துகினு இருந்தோம். சினிமாவுல வர்றா மாரியே எம் பொண்டாட்டி என் தட்டுல காசு போடுறா... கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்தான் என்னை அடையாளம் கண்டுக்கினா. மொகல்லாம் வேர்த்துடுச்சு... அவன் புருஷன் என்னைப் பார்த்ததும் வெச்சான் பயணம்... எனக்கு ஒரே சிரிப்பாப்போச்சு. தர்மம் போட்டவங்கள மனசார வாழ்த்தணும்னு எங்களுக்குப் பழக்கமாயிடுச்சு வாத்யாரே... `நல்லா இருக்கணும்மா மகாலட்சுமி’னு சொன்னதும் கண்ணக் கசக்கிட்டுப் போயிட்டா...” என்று சிரித்தவர். ``ஆனா... என் டாவு என்ன வுட்டு ஓடாது. ஏன்னா, ஒரு பிச்சக்காரன் மனசு ஒரு பிச்சக்காரிக்குத்தான் புரியும் வாத்யாரே...” என்று சர்ச்சினுள்ளே பார்த்தார் மைலோ.

நான் எதிர் வரிசையில் மைலோவின் மனைவியைப் பார்த்தேன். பெண் பாதிரி கொடுத்த கேக்கைச் சாப்பிட்டபடியே பக்கத்துப் பெண்ணோடு சிரித்துக்கொண்டிருந்தார். இந்தச் சிரிப்பை, மைலோவைத் தவிர அந்தப் பெண்மணிக்கு வேறு யாரால் கொடுத்துவிட முடியும்?

- மனிதர்கள் வருவார்கள்...