
ஓவியங்கள்: ம.செ.,
பொழுது இருளத் தொடங்கியது. மேட்டுக்கரை யிலிருந்து ஒரு பல்லக்கு புறப்பட்டது. வழிகாட்டியாக முன்னே சென்றான் காராளி. அவன் மனம் அளவுகடந்த பதற்றத்தில் இருந்தது. இன்றோ, நாளையோ பொற்சுவையை அழைத்துக்கொண்டு வருவதாகக் கபிலரிடம் சொல்லிவந்தான். வேந்தர்களின் யானைப்படை வீரர்கள், காடுகளுக்குள்ளிருந்து முற்றிலும் அகன்று விடவில்லை. அங்கொருவர் இங்கொரு வராகத் தட்டுப்படுகின்றனர். பறம்புப்படையினர் கண்ணில்பட்டால் கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் பதுங்கித் திரிகிறார்கள். இன்று ஒரு பொழுது கடந்துவிட்டால் பதுங்கி இருக்கும் ஒருசிலரும் வெளியேறிவிடுவார்கள். எனவே, நாளை இரவு இரலிமேட்டுக்குப் போகலாம் என்று எவ்வளவோ சொல்லியும் பொற்சுவை கேட்கவில்லை. ``இன்றே போக வேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். எனவே, மிகுந்த பதற்றத்தோடு முன்னே சென்று கொண்டிருந்தான் காராளி.

அவன் இருக்கும் இடத்திலிருந்து இரலிமேட்டுக்குச் செல்ல, குறுக்காக நடந்தால் இரு பொழுதுகளில் போய்விடலாம். ஆனால், புதர்கள் நிறைந்த அந்தப் பாதையில் பல்லக்கைத் தூக்கிச்செல்வது கடினம். எனவே, சுற்றிச்செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்றின் வழியே அழைத்துச் சென்றான். இரவு வேளை என்பதால் அவனது பதற்றம் அதிகமாக இருந்தது. அவன் இந்த மலைப்பகுதியை நன்கு அறிந்தவன். விலங்குகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இளவரசி யாரின் பயணத்தை வேந்தர்படையினரோ, வெங்கல்நாட்டினரோ பார்த்துவிடக் கூடாது. அப்படி நேர்ந்தால் அஃது இளவரசியின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். எனவே, மிகுந்த எச்சரிக்கையோடு அழைத்துச்சென்றான்.
பல்லக்குக்குள் பொற்சுவையும் சுகமதியும் எதிரெதிராக உட்கார்ந்திருந்தனர். அது, பெருமெத்தையும் விரிசிறகும்கொண்ட பெரும்பல்லக்கன்று; ஒரு நார்க்கயிறும் இளம்பஞ்சு தூவியும்கொண்ட குறும்பல்லக்கு. ஒருவர் மட்டுமே பயணிப்பதற்கானது. ஆனால், அதில் இருவர் பயணித்தனர். ``நான் இறங்கி நடந்து வருகிறேன்” என்று சுகமதி எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். பொற்சுவை கேட்கவில்லை. ``நீ பல்லக்கில்தான் வரவேண்டும்” என்று உள்ளே அமர வைத்துக்கொண்டாள். அண்ணகர்கள், பல்லக்கைத் தூக்கி நடந்தனர்.
``இந்தச் சிறிய இடத்தில் நீங்கள் தனியே அமர்ந்து வருவதுதான் வசதியாக இருக்கும். இப்போது பாருங்கள், கால் நீட்டக்கூட முடியாமல் குறுக்கி உட்கார்ந்திருக்கிறீர்கள். எனது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. நான் இறங்கி நடந்து வருகிறேன் இளவரசி” என்று சொல்லி, பல்லக்கை விட்டு இறங்க மீண்டும் அனுமதி கேட்டாள்.
``எனது வாழ்வின் மிக முக்கியமான இந்த நேரத்தில், நீ எனக்கு மிக அருகில் இருக்க வேண்டும் சுகமதி.’’
``எல்லா நேரங்களிலும் நான் உங்களுக்கு அருகில்தானே இருக்கிறேன் இளவரசி?”
இளஞ்சிரிப்போடு பொற்சுவை சொன்னாள், ``நீ என்னை விட்டகலாத நிழல். ஒளியின்போது நிழல் வெளியில் இருக்கும். இருளின்போது நிழல் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்துகொள்ளும். அதனால்தான் இந்த இருளில் என் அருகில் உன்னை உட்காரவைத்துக்கொண்டேன்.”
பொற்சுவையின் சொற்கள் அன்பால் மயக்கின. ஆனால், அன்பைப் பெறத் தகுதியானவர்கள்தாம் அதை உள்வாங்க வேண்டும். சுகமதியோ தனக்கு அந்தத் தகுதி இல்லை என்று எப்போதும் நம்புகிறவள். தான் பொற்சுவையின் பணிப்பெண். `நீரோ, பாலோ, தேனோ தன்மீது எது கொட்டினாலும் உள்ளிறங்க அனுமதிக்காத கல்போலத்தான் பணிப்பெண்ணின் மனம் இருக்க வேண்டும்’ என்று சிறு வயது முதல் சொல்லி வளர்க்கப்பட்டவள். எனவே, சுகமதியை அந்த வார்த்தைகள் ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனாலும் பொற்சுவையின் வார்த்தைகளை வேறு திசைக்கு மாற்ற விரும்பினாள் சுகமதி.
பல்லக்கில் சிறு கண்ணாடிக்குடுவையில் விளக்கொளி சிந்திக்கொண்டிருந்தது. பொற்சுவையின் முகத்தை உற்றுப்பார்த்தபடியே சொன்னாள், ``நீண்டகாலத்துக்குப் பிறகு உங்களின் முகம் பூத்து மிளிர்கிறது இளவரசி.”

``அப்படியா..!” என்று மகிழ்வு பொங்கக் கேட்டவள், ``பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆசானையும் பார்த்தறியாத பாரியையும் காணப்போகிறேன் அல்லவா... எனது முகம் மலராமல் என்ன செய்யும்? நான் காற்றில் மிதந்துகொண்டிருக்கிறேன் சுகமதி. எனக்குள் கவிதைகள் ஊற்றெடுக்கின்றன. சக்கரவாகப்பறவை வந்திறங்கும் நாளன்று நாம் எப்படி மகிழ்ந்திருப்போமோ, அதைவிடப் பலமடங்கு மகிழ்வில் மனம் கூத்தாடுகிறது.”
``எனது மனமும் மகிழ்வில்தான் இருக்கிறது இளவரசி. அதேநேரம் உள்ளுக்குள்ளிருக்கும் அச்சம், நேரம் கூடக்கூடப் பெருகுகிறது.”
``ஏன்?”
``இந்தப் பயணத்தின் ரகசியம் வெளியில் தெரிந்துவிட்டால்..?”

``இந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவேறுகிறதா என்பதுதான் முக்கியம். மற்றதெல்லாம் பொருட்டல்ல.”
``நீங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் அந்த முடிவை மட்டும்தான் பொருட்படுத்துவீர்கள். ஆனால், நீங்கள் எடுக்கும் எந்த முடிவையும்விட நீங்கள்தான் எனக்கு முக்கியம்.”
சிரித்தாள் பொற்சுவை.
போர்க்களம் விட்டு அகன்று நாகக்கரட்டுக்கு வந்த பிறகு கூடாரங்களில் ஆயுதங்களை வைத்துவிட்டு வீரர்கள் உணவருந்தினர். இன்றைய போர், சிறுபாதிப்புகூட யாருக்கும் ஏற்படாத வகையில் முடிவுக்கு வந்தது. உணவருந்தி முடித்தவுடன் இரவாதனின் தலைமையிலான விற்படையின் பெரும்பிரிவு தென்திசை நோக்கிப் புறப்பட்டது.
இருளினூடே புரவிகள் வேகம்கொண்டன. சற்றே நீண்ட பயணம் அது. குளவன்திட்டின் பின்புறத்தை அடைய குதிரைகள் விரைந்தன. வீரர்கள் வருவதற்கு முன்பே அங்கு எண்ணற்ற தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நேற்றிரவே இந்தத் திட்டம் பேசப்பட்டுவிட்டதால், அதற்கான ஏற்பாட்டை முன்கூட்டியே தொடங்கி விட்டான் இரவாதன். இந்தப் பணிக்காகப் பகல் முழுவதும் இந்த இடத்தில் பலர் வேலைபார்த்துள்ளனர். வீரர்கள் வந்தடையும்போது அவர்களின் பயிற்சிக்கான ஆயத்தம் முழுமை பெற்றிருந்தது.
இந்தத் தாக்குதலுக்கு, இரவாதனுடன் பிடறிமானும் கரிணியும் தலைமை யேற்கவிருந்தனர். மூஞ்சலுக்குள் மூன்று விதமான தாக்குதலை நடத்த வேண்டி யுள்ளது. கவச உடை பூண்ட அகப்படை வீரர்களைத் தாக்கி அழிப்பது ஒன்று. பொய்க்கூடாரங்களில் குவிந்துள்ள வீரர்கள் சாரிசாரியாக வெளிவந்து தாக்குதலைத் தொடுப்பர்; அவர்களைத் தாக்கி அழிப்பது இரண்டு. நீலன் இருக்கும் கூடாரம் நோக்கி முன்னேறிப் போய் அவனை மீட்பது மூன்று. இந்த மூன்றும் தனித்தனியான தன்மைகளோடு செய்யப்படவேண்டிய தாக்குதல்கள்.
குறிப்பாக, மூஞ்சலுக்குள் நுழைந்த பிறகு வில்லால் தாக்குவதற்குத் தேவையான இடைவெளிகள் போதுமான அளவுக்கு இருக்காது. பெரும்பாலும் வாள்வீச்சுக்கும் ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களாலான தாக்குதலுக்கும்தான் அதிக தேவை இருக்கும். பறம்புப்படையின் முதற்பெரும் ஆற்றல், வில்லில்தான் இருக்கிறது. அதை அதிகம் பயன்படுத்த முடியாத நிலையில், மாற்றுத்திட்டத்தையும் அதற்குப் பொருத்தமான ஆயுதங்களையும் முடிவுசெய்யவேண்டியிருந்தது.
மூஞ்சலுக்குள் நுழையவிருக்கும் அனைத்து வீரர்களுக்கும், நடத்தப்போகும் தாக்குதலைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை. இரவாதன் முன்சொல்லியபடி, மூஞ்சலின் முழு வரைபடம் ஆயத்தநிலையில் இருந்தது. அதை வைத்து, தாக்குதல் திட்டத்தைத் தனது படைக்கு விளக்கத் தொடங்கினான். இரவு முழுமைக்கும் நீளும் பயிற்சி தொடங்கியது.
வெங்கல்நாட்டின் கடைசிக் குன்றைக் கடந்து பல்லக்குப் பயணித்துக்கொண்டி ருந்தது. மலைமீது பல்லக்கைத் தூக்கிச் செல்லும்போது உள்ளுக்குள் அசைவும் சரிவுமாக இருந்தது. சிறுபல்லக்கில் இருவர் எதிரெதிரே உட்கார்ந்திருந்ததால் சரிவில் இறங்கும்போதும் மேட்டில் ஏறும்போதும் பிடித்துக்கொள்ள வசதியாக இருந்தது. தனது கையோ, காலோ பொற்சுவையின் மீது படும்போதெல்லாம் மன்னிப்பு கேட்டபடியே இருந்தாள் சுகமதி.
அண்ணகர்கள், பெருஞ்சரிவு ஒன்றில் பல்லக்கை இறக்கிக்கொண்டிருந்தனர். முன்புறம் கால் மடக்கி உட்கார்ந்திருந்த சுகமதியின் கால்களை இறுகப் பிடித்தபடி சரிந்துவிடாமல் தன்னை நிலை நிறுத்திக்கொண்டாள் பொற்சுவை. சுகமதியோ தனது கால் பகுதியை இளவரசி பிடித்தபோது துடித்துப்போனாள். எவ்வளவு முயன்றும் விலக்க முடியவில்லை. ஆனால், பொற்சுவையோ சரிந்து கொண்டிருப்பதால் மட்டும் பிடிக்கவில்லை; அவளுக்கு அது பிடித்திருந்தது.
`உனது கை, எனது உடலில் பட்டால் அத்தனை முறை மன்னிப்பு கோருகிறாயே, எனது கை உனது காலில் பட்டால் என்ன செய்வாய்?’ என்பதுபோலத்தான் இருந்தது அவளது செய்கை. பல்லக்கு, சரிவு நிலையிலிருந்து சற்றே சமநிலை அடைந்தது. பொற்சுவை, பல்லக்கில் இருந்த சிறுமணியில் ஓசையெழுப்பினாள். அண்ணகர்கள் நடப்பதை நிறுத்தி, தாங்குகோல்களால் பல்லக்குக்கு முட்டுக்கொடுத்தனர். முன்னால் சென்றுகொண்டிருந்த காராளி, வேகவேகமாகப் பல்லக்கின் அருகில் வந்து நின்றான்.
திரையைச் சிறிதே விலக்கி ``வெங்கல்நாட்டின் ஆறு ஊர்களின் எல்லையைக் கடந்துவிட்டோமா?” எனக் கேட்டாள்.
``இன்னும் சிறுபொழுதில் கடந்துவிடுவோம் இளவரசி. பள்ளத்தாக்குக்கு அருகில் வந்துவிட்டோம்” என்றான்.
``விரைவுபடுத்து” என்று சொல்லியபடி திரையை மூடிக்கொண்டாள். அண்ணகர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினர்.

``ஏன் இளவரசி இவ்வளவு முக்கியமாகக் கேட்கிறீர்கள்?” என்று வினவினாள் சுகமதி.
அண்ணகர்கள் முழுவேகமாக நடக்கத் தொடங்கும் வரை அமைதிகாத்தவள் பிறகு சொன்னாள், ``இந்தப் போரின் ஒரு பகுதிதான் தட்டியங்காட்டில் நடக்கிறது. இன்னொரு பகுதி இந்த ஆறு ஊர்களில்தான் நடந்துகொண்டிருக்கிறது.”
புரியாமல் விழித்தாள் சுகமதி. ``இந்த ஆறு ஊர்க்காரர்கள்தாம் போரிலே ஈடுபட மாட்டோம் என்று சொல்லிவிட்டார்களே. பிறகு எப்படி..?”
``அதனால்தான் எல்லா வகையான உளவுத்தொழிலுக்கும் இந்த ஊர்கள் களமாக அமைந்துவிட்டன. மூவேந்தர்களும் தனித்தனியாக இந்த ஊரார்களைக்கொண்டு பறம்பை உளவுபார்க்கின்றனர்.”
சற்றே அதிர்ச்சியோடு சுகமதி கேட்டாள் ``அப்படியென்றால், நாம் செல்லும் செய்திகூட உளவுபார்க்கப்பட்டிருக்குமா?”
சுகமதியின் கண்களை உற்றுப்பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``பேரரசர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கும் போது, நாம் என்ன செய்கிறோம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு அல்லவா?”
திடுக்கிட்டாள். ``பேரரசர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா இளவரசி?”
``ஆம். அந்தச் செய்தியை அறிந்ததால்தான் இன்றே செல்ல வேண்டும் என முடிவுசெய்தேன்.”
``போரை நிறுத்துவதற்கான பேச்சுக்குத்தானே பாரியைப் பார்க்கப்போவதாகக் கூறினீர்கள்?”
``அது கடந்த வாரச் சூழல். இனி இந்தப் போரை யாராலும் நிறுத்த முடியாது. அந்நிலை கடந்துவிட்டது.”
``அப்படியென்றால், யாருடைய வெற்றிக்காவது உதவப்போகிறீர்களா?”
``வெற்றி தோல்வியைப் போர்க்களம்தான் தீர்மானிக்கும். அதில் நாம் ஏன் உதவ வேண்டும்?”
``பிறகு, இந்தப் பயணத்தின் நோக்கம்தான் என்ன?”
``பாரியை, சதியால் வீழ்த்தத் திட்டமிட்டுள்ளனர். இன்றிரவு அந்தச் சதி நிகழப்போகிறது. அதைத் தடுக்கவே நான் போகிறேன்.”
மிரண்டது சுகமதியின் முகம். ``நீங்கள் சொல்வது உண்மையா இளவரசி? நம் பேரரசரா இந்தச் செயலைச் செய்யப்போகிறார்?”
``நம் பேரரசர் அல்ல. சோழப்பேரரசர் அந்தச் செயலைச் செய்யப்போகிறார்.”
சற்றே நிம்மதியானாள் சுகமதி. தமது பேரரசுக்கு எதிரான செயலில் தாம் ஈடுபடவில்லை என்பது அவளின் பெருமூச்சுக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அதைப் பொற்சுவை கவனிக்காததுபோல இருந்துகொண்டாள்.
``கொலைச் சதியை நிறுத்தப்போகும்போதுகூட உங்களின் முகம் பதற்றமேதுமின்றி இருக்கிறதே!”
``செய்யப்போகும் செயலின் முக்கியத்துவம். சிறு ஐயம்கூட எனது நடவடிக்கையின் மீது ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உள்ள தெளிவு. உண்மையில் எனது வாழ்நாளில் இவ்வளவு பதற்றத்தை நான் இதற்கு முன்னர் அடைந்ததில்லை. ஆனால், அதை வெளிக்காட்டிவிடக் கூடாது என்பதில் முழு கவனத்தோடு இருக்கிறேன். எனது முகம் முழுமையாகப் பூத்திருக்கிறது என்பதை நீயே நம்பிய பிறகு, வேறு யார் ஐயம்கொள்ள முடியும்?”

இந்தப் பயணத்தின் தன்மை, இப்போதுதான் சுகமதிக்கு முழுமையாகப் புரியத் தொடங்கியது. ``நான் மறுபடியும் கேட்கிறேன், இதனால் உங்களுக்கு ஆபத்து ஏதும் வந்துவிடாதே!”
``அது, நம் பேரரசர் எவ்வளவு ஒற்றறிகிறார் என்பதைப் பொறுத்தது.”
``இளவரசியாரின் செயலை அவ்வளவு துல்லியமாக ஒற்றறிகின்றனரா?”
``ஆம். காராளியின் எல்லா நடவடிக்கைகளும் அவர்களால் கண்காணிக்கப்படுகின்றன.”
நடுங்கிப்போனாள் சுகமதி. ``என்ன சொல்கிறீர்கள் இளவரசி? அவனை நம்பித்தானே இந்தப் பயணத்தையே மேற்கொள்கிறோம். அப்படியென்றால், இது உறுதியாக ஆபத்தில் போய்த்தான் முடியும்.”
``காராளியிடம் பொய் இல்லை. அவன் உண்மையான கலைஞன். ஆனால், அவனுடைய எல்லா நடவடிக்கைகளும் ஒற்றறியப்படுகின்றன. அவன் நமக்குச் சொல்வதைப்போல அவனைப் பற்றி வேறு யாரோ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். போர்நிறுத்ததுக்காகப் பேசப்போவதாக இருந்தால் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டிருக்க மாட்டேன். ஆனால், இது பாரியின் உயிர் பறிக்கும் சதி தொடர்பானது. இதைக் கேள்வியுற்ற பிறகு எப்படி நான் போகாமல் இருக்க முடியும்?”
``கேள்விப்பட்டது உண்மை என எப்படி நம்பினீர்கள்?”
``எல்லாவற்றையும் உண்மையில்லை என நம்பு. அப்போதுதான் உண்மை எதுவோ அது மட்டும் தனித்துத் துலங்கும்.”
``உங்களைப் போன்ற இளவரசியார்களுக்குத் தான் அது முடியும். எங்களைப் போன்றோர் எல்லாவற்றையும் நம்பவே பயிற்றுவிக்கப் பட்டவர்கள்.”
``பிறகு ஏன் கேள்வி எழுகிறது சுகமதி?”
அமைதி சூழ்ந்தது.
குளவன்திட்டிலிருந்து வந்த பாரியும் காலம்பனும் குடிலில் உணவருந்திக்கொண்டி ருந்தனர். மற்றவர்கள் பாட்டாப்பிறையில் அமர்ந்திருந்தனர். தேக்கன் நேற்றைப்போல் இன்றைக்கும் வரவில்லை. தனது குடிலிலேயே தங்கிவிட்டான். வாரிக்கையனும் நாகக்கரட்டின் மீதே இருந்துவிட்டார். உதிரனும் ஈங்கையனும் விண்டனும் எதிர்ப்புறம் நின்று பேசிக்கொண்டிருக்க, அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கபிலர். அவரது மனம் மிகுந்த கலக்கத்தில் இருந்தது.
தேக்கனிடமோ, முடியனிடமோ கலந்துகொள்ளாமலேயே பொற்சுவையை அழைத்துவரச் சொல்லிவிட்டோமே என்ற தவிப்பு அடங்கவில்லை. அந்நேரம், பாரியைப் பார்த்துவிட்டு முடியன் பாட்டாப்பிறை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் இங்கு வருவதற்குள் எதிர் சென்று பேசிவிடலாம் என அவனை நோக்கி நடந்தார். தீப்பந்த வெளிச்சம் சிறிது தொலைவுக்குத்தான் இருந்தது. ஆனாலும் வேகமாக நடந்து முன் சென்றார்.
மேலேயிருந்து இறங்கிக்கொண்டிருந்த முடியனைப் பார்த்ததும் தேக்கனின் உடல்நலம் பற்றிக் கேட்டறிந்தார். சொற்களின் வழியே தனது கவலை வெளிப்பட்டுவிடாதவாறு சொல்ல முனைந்தான் முடியன். அதே முயற்சியோடுதான் தொடர்ந்து வந்த கபிலரின் சொற்களும் இருந்தன. நேற்று தன்னைத் தேடி வந்த காராளி சொல்லிய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். ``தேக்கனையோ, உன்னையோ கலந்துகொண்டுதான் அவனுக்கு மறுசொல் சொல்லவேண்டும் என்று நெடுநேரம் காத்திருந்தேன். ஆனால், இருவரும் வந்துசேரவில்லை. வேறு வழியில்லாமல் அழைத்துவரச் சொல்லிவிட்டேன்” என்றார்.
அதிர்ச்சிக்குள்ளானான் முடியன். ``ஏன் அப்படிச் சொன்னீர்கள்? போர்ச்சூழல் எவ்வளவு மோசமாகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள். இந்நிலையில் அவர்கள் இங்கு வருவது எந்த வகையிலும் பொருத்தமல்ல” என்று கூறினான்.
``எனக்கும் புரிந்தது. அதனால்தான் அதைத் தவிர்க்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து சேராததால் என்னால் வேறு முடிவெடுக்க முடியவில்லை” என்றார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வீரன் ஒருவன் முடியனைக் கண்டு பேச பாட்டாப்பிறையிலிருந்து மேலேறி வந்தான்.
``காராளி என்பவன், நாகக்கரட்டின் வடமுனைப் பள்ளத்தாக்குக்கு வந்துள்ளான். அவனோடு பல்லக்கு ஒன்றும் வந்துள்ளது. கபிலரிடம் கேட்டுவிட்டுத்தான் வருவதாகச் சொல்கிறான். உள்ளே அனுமதிக்கலாமா?” என்று கேட்டான்.
முடியன், கபிலரைப் பார்த்தான். ``நாளைதான் வருவான் என நினைத்தேன்” என்று மெல்லிய குரலில் சொன்னார் கபிலர்.
வருவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என முடியனால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவு தொலைவு வந்த பிறகு திருப்பி அனுப்புதல் முறையல்ல என்று மட்டும் தோன்றியது. ``சரி, காராளியை அங்கேயே நிறுத்திவிடுங்கள். பல்லக்கை மட்டும் அனுப்பிவையுங்கள். வழிகாட்ட நம் வீரர்கள் வரட்டும்” என்றான்.

பள்ளத்தாக்கின் நுழைவுப்பகுதியில் காராளி நிறுத்தப்பட்டான். பறம்புவீரர்கள் இருவர் வழிகாட்ட அண்ணகர்கள் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு பின்தொடர்ந்தனர்.
பல்லக்குக்குள் உரையாடல் இறுக்கம்கொள்ளத் தொடங்கியது. சுகமதிக்கு அச்சமும் பதற்றமும் அதிகமாகின. அடுத்து என்ன நடக்கும் என்பதை அவளால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. முகத்தில் வியர்வை துளிர்த்தது. ``சிறு பல்லக்கு என்பதால் காற்றோட்டமாக இல்லை” என்று பொற்சுவையிடம் சமாதானம் சொல்லிக் கொண்டாள். ஆனால், பொற்சுவைக்கு வியர்க்கவில்லை. அவள் தெளிவுகொண்டிருந்ததால், தான் செய்யப்போகும் வேலை எத்தகையது என்பதைப் பற்றிப் பலமுறை மனதுக்குள் சிந்தித்துப் பார்த்துக்கொண்டாள். வாழ்வு, முன்னிலும் பொருள்பொதிந்த இடத்துக்குத் தன்னை இட்டுச்செல்வதாக உணர்ந்தாள்.
சுகமதியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. `இவ்வளவு பெரிய செயலுக்குப் போகும்போதுகூட இளவரசியால் எப்படி இயல்பு மாறாமல் இருக்க முடிகிறது? என்னதான் சிந்தனையை ஒருமுகப்படுத்தினாலும் மனதின் ஆழத்திலிருக்கும் உணர்வு, நீருக்குள் இருக்கும் காற்றுக்குமிழியைப்போல முகத்தில் வெளிப்பட்டுத்தானே ஆகவேண்டும். ஆனால், பொற்சுவையின் முகத்தில் எதையும் கண்டறியவே முடியவில்லையே?’ எனச் சிந்தித்தவண்ணமே இருந்தாள்.
இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கில் சமதளப்பயணம் என்பதால் இடுக்கி நெருக்கி உட்காரும் நிலையில்லை. ஆனாலும் சுகமதியால் இயல்பாய் இருக்க முடியவில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், பொற்சுவையின் முகத்தைப் பார்ப்பதும், பிறகு பார்வையைத் தவிர்த்து, குனிந்து கால்விரல்களைப் பார்ப்பதும், சிறு விளக்கின் அசைவைப் பார்ப்பதுமாக வந்தாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, எதையோ சொல்ல, தலை நிமிர்ந்து பொற்சுவையைப் பார்த்தாள். அவளது முகத்தில் மாற்றங்கள் தெரிந்தன. தனது எண்ணத்திலிருக்கும் குழப்பம்தான் அப்படித் தோன்றுகிறது என நினைத்துக் குனிந்து கொண்டாள்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொற்சுவையின் முகத்தைப் பார்த்தாள். அவளது முகத்தில் வியர்வைத் துளிகள் இருந்தன. சுகமதி அதிர்ச்சிக்குள்ளானாள். திடீரென இளவரசிக்கு என்ன ஆயிற்று எனப் புரியவில்லை. `காற்றோட்டம் குறைவாக இருப்பதால் வியர்க்கிறதோ!’ என நினைத்து, ``பல்லக்கின் திரையை விலக்கட்டுமா இளவரசி?” என்று கேட்டாள்.
``வேண்டாம்” என்று மறுத்தாள் பொற்சுவை. இவ்வளவு நேரம் பேசிவந்த குரலின் இனிமை இப்போது இல்லை. அவளது எண்ணம் குழப்பத்துக்குள் மூழ்குவது தெரிந்தது. சுகமதி, அவளது முகத்தையே உற்றுப்பார்த்தாள்.
பொற்சுவையின் கண்கள் இங்குமங்குமாக அலைமோதின. சுகமதி தன்னைக் கண்டறிகிறாள் என்றுகூட அவளால் கணிக்க முடியவில்லை. மனம் தத்தளித்தபடி இருந்தது. என்ன செய்வதென அறியாத பதற்றம் சூழ்ந்தது. சட்டெனச் சொன்னாள், ``உனது காதில் இருக்கும் அணிகலனைக் கழற்று.”
சுகமதிக்குப் புரியவில்லை. `எனது காதணியை ஏன் கழற்றச் சொல்கிறாள்?’ என்று மனம் குழம்பியபடி இருக்க, கைகள் காதணியின் திருகாணியைத் திருகிக்கொண்டிருந்தன.
அவளின் கைகள் செய்துகொண்டிருந்த அதே வேலையை, பொற்சுவையின் விரல்களும் செய்துகொண்டிருந்தன. அவள் தனது காதணியின் திருகாணியைக் கழற்றிக் கொண்டிருந்தாள். ஏன் இதைச் செய்கிறாள் என்று சுகமதிக்கு முற்றிலும் விளங்கவில்லை.
சுகமதி அணிந்திருந்தது சிறிய வடிவிலான பூங்குழைக் காதணி. அதை அவள் கழற்றும்போதே பொற்சுவை தான் அணிந்திருந்த பெரிய வடிவிலான மகரக்குழைக் காதணியைக் கழற்றி சுகமதியின் கைகளில் கொடுத்தாள்.
அதை வாங்கியபடி புரியாமல் விழித்த சுகமதியைப் பார்த்து ``நீ இந்தக் காதணியை இட்டுக்கொள்” என்றாள்.
``இளவரசி அணிந்திருக்கும் மகரக்குழைக் காதணியை நான் மாட்டுவதா?!” சொல்லும்போதே அச்சத்தில் நடுங்கினாள்.
ஆனால் பொற்சுவையோ, ``நான் வேறு காரணத்துக்காகச் சொல்கிறேன், அணிந்துகொள்” என்றாள். சுகமதி மீண்டும் மறுக்கவே, சற்றே கோபத்தை வெளிக்காட்டினாள்.
அதன் பிறகு சுகமதியால் மறுக்க முடியவில்லை. பாண்டியநாட்டு இளவரசியின் விலைமதிப்பற்ற மகரக்குழைக் காதணியைத் தனது காதில் மாட்டிக்கொண்டாள்.
பொற்சுவை, சுகமதியின் காதுகளையே உற்றுப்பார்த்தாள். மகரக்குழைக் காதணி ஆடியபடியே வந்தது.
காதணியையே பார்த்துக்கொண்டிருந்த பொற்சுவை, பல்லக்கில் சுடர்விட்டுக்கொண்டிருந்த சிறுவிளக்கை எடுத்து அதை சுகமதியின் கைகளில் கொடுத்தாள்.
அவள் என்ன செய்கிறார் என, சுகமதிக்குப் புரியவில்லை. ஆனாலும் அவள் சொன்னபடி விளக்கை இறக்கிப் பிடித்துக்கொண்டாள்.
பொற்சுவையோ, பல்லக்கின் திரையை மிகச்சிறிய அளவு மட்டும் விலக்கி வெளிப்புறமாகப் பார்த்தாள்.
இவ்வளவு சிறிய அளவு விளக்கொளியில் எதைப் பார்த்துவிட முடியும் எனப் புரியாமல் தவித்தாள் சுகமதி.
சிறிது நேரத்துக்குப் பிறகு விளக்கை மீண்டும் மேலே மாட்டச் சொன்னாள்.
சுகமதி விளக்கை மாட்டினாள்.
``தங்களின் நடவடிக்கை எதுவும் புரியும்படி இல்லை இளவரசி.”
``சிறிது நேரம் பொறு சொல்கிறேன்.”
பொற்சுவையின் மனம் சற்றே அமைதிகொண்டது. அடுத்து என்ன செய்யவேண்டும் என விரைவாக முடிவெடுக்கத் தொடங்கினாள். இதை சுகமதிக்குத் தெரியப்படுத்துவது அவசியம் எனத் தோன்றியது.
இதுவரை பேசியதைவிட மெல்லிய குரலில் சொன்னாள், ``நான் சொல்வதைக் கேட்டு அச்சப்படாதே. நமது பல்லக்கைத் தூக்கி வருகிறவர்கள் அண்ணகர்கள் அல்லர்.”
ஒரு கணம் நடுங்கி மீண்டாள் சுகமதி, ``என்ன சொல்கிறீர்கள் இளவரசி?”
``ஆம். நினைவுதெரிந்த நாள் முதல் பல்லக்கில் பயணிப்பவள் நான். பல்லக்குப் பயணத்தின் அத்தனை விதத்தையும் என்னால் எளிதில் கண்டறிய முடியும்.”
கண்ணிமைக்காமல் பார்த்தாள் சுகமதி.
``அண்ணகர்கள் பல்லக்கைத் தூக்குவதற்கும் மற்றவர்கள் பல்லக்கைத் தூக்குவதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. அண்ணகர்கள் பல்லக்கைத் தூக்கிச்செல்வது நீரில் மிதக்கும் பூவைப் போன்றது. அதுவே மற்றவர்கள் தூக்கிச்செல்வது கூடையில் தூக்கிச்செல்லும் பூவைப்போன்றது. வீசும் காற்றுக்கும் தூக்கிச்செல்பவரின் தோள் குலுங்கலுக்கும் பூ ஆடிக்கொண்டேதான் இருக்கும்.”
``இவர்கள் அண்ணகர்கள் இல்லையா இளவரசி?”
``ஆம். எனக்கு முதலிலேயே சிறிய ஐயம் வந்தது. ஆனால், மேடு பள்ளத்தில் பல்லக்கைத் தூக்கி வந்ததாலும், சிறுபல்லக்கில் இருவர் மிக நெருக்கமாக உட்கார்ந்திருந்ததாலும் கண்டறியாமல் விட்டுவிட்டேன். இப்போது சமதளத்தில் செல்லும்போது எனது மகரக்குழைக் காதணிகள் காதுமடல்களிலிருந்து அசைந்து அசைந்து கழுத்தைப் போய்த் தட்டிக்கொண்டே இருந்தன. இவ்வளவு கனமான காதணிகள் இப்படி அசையும்படி அண்ணகர்கள் ஒருபோதும் பல்லக்கைத் தூக்கிச்செல்ல மாட்டார்கள். அதனால்தான் உனது காதில் மாட்டி அவை அசையும் விதத்தைப் பார்த்தேன்.”
``திரையை விலக்கிக் கீழே பார்த்தது?” என்று கேட்டு முடிக்கும் முன் பொற்சுவை சொன்னாள், ``ஐயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா? அதனால் விளக்கின் ஒளியில் தூக்கிச்செல்பவர்களின் கால்களைப் பார்த்தேன்.”
சுகமதியின் கண்கள் நடுங்கியபடியே அவளது முகத்தைப் பார்த்தன. பொற்சுவை சொன்னாள், ``அண்ணகர்களின் கால்களில் முடி இருக்காது. ஆனால், இந்தக் கால்களை நீ பார்க்கிறாயா?” என்றாள்.
பதறினாள் சுகமதி, ``அப்படியென்றால் நம்மைத் தூக்கிச்செல்வது யார் இளவரசி?”
சற்று அமைதிக்குப் பிறகு சொன்னாள், ``நம் அண்ணகர்களை நமக்குத் தெரியாமலேயே மாற்ற, வேறு யாரால் முடியும்? நம் பேரரசர்தான் இதைச் செய்திருப்பார்.”
``ஏன்?”
``பாரியைக் கொல்ல நம் மூலம் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடாக இஃது இருக்கலாம்.”
சொல்லும்போதே பொற்சுவைக்கு வியர்த்து அடங்கியது. ``கொலையைத் தடுக்க வருவதாக நினைத்து, கொலையாளிகளை அழைத்து வந்துள்ளேன்.”
சுகமதிக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. பொற்சுவையின் கண்களைக்கூட அவளால் பார்க்க முடியவில்லை; நீர் பெருகியது.
பல்லக்கு சட்டென நின்றது. பறம்புவீரர்கள், ``பல்லக்கை இங்கு இறக்குங்கள்” என்று சொல்வது கேட்டது.
பதறிய சுகமதி, பொற்சுவையின் கைகளை இறுகப்பற்றினாள்.
``நான் உங்களை இறங்க விட மாட்டேன்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் பொங்கியது.
அவளின் பிடியிலிருந்து கைகளை விலக்கி, அவளின் தலையைத் தொட்டபடி பொற்சுவை சொன்னாள், ``பதற்றப்படாதே. நாம் எண்ணிய இடத்துக்குத்தான் வந்துள்ளோம். இனி பின்வாங்க முடியாது. நமது அறிவு நமக்குக் கைகொடுக்கும். நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.”
``இல்லை. நான் கடமை வழுவ மாட்டேன். உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர அனுமதிக்க மாட்டேன்” என்று பதறினாள்.
``நீ எனது கனவின் மிச்சம். உனது வார்த்தைகளில்தான் அது முழுமைகொள்ளப் போகிறது. இங்கு என்ன நடந்தாலும் பல்லக்கை விட்டு நீ கீழிறங்கக் கூடாது” என்று சொல்லியபடி சட்டெனத் திரை விலக்கி வெளியேறினாள் பொற்சுவை.
தூக்கிவந்த அறுவர் தலைவணங்கி நின்றிருந்தனர். அவர்களுக்கு அருகில் பறம்பு வீரர்கள் நால்வர் நின்றிருந்தனர். பல்லக்கிலிருந்து வெளிவந்ததும் எதிரில் இருந்த மரத்தின் அடிவாரத்தைப் பார்த்தாள். அங்கு நிறைய தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. மரத்தின் அடிவாரத்தில் இருந்த கல் இருக்கைகளில் ஆறேழு பேர் பேசிக்கொண்டிருந்தனர். இடது ஓரத்தில் ஆசான் கபிலர் இருந்தார்.
பாட்டாப்பிறையின் வலது ஓரத்தில் பாரி இருந்தான். இடையில் முடியன், ஈங்கையன், உதிரன், விண்டன், காலம்பன் ஆகியோர் இருந்தனர். ஆனால், பொற்சுவை யாரையும் பார்க்கவில்லை. நேராக, கபிலரை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
மனதுக்குள் எண்ணங்கள் புரண்டெழுந்து கொண்டிருந்தன. சோழனின் சதித்திட்டத்தை எப்படிச் சொல்வது? உடன் வந்துள்ள பாண்டிய வீரர்களின் தாக்குதலை எப்படித் தடுப்பது? எதுவுமே அவளுக்குப் பிடிபடவில்லை. கண்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை. ஆசானின் முகம் மட்டுமே தெரிந்தது. அவரின் அருகில் வந்து நின்றாள் பொற்சுவை. `வேகமாக வந்துவிட்டோமா?’ என ஒரு கணம் எண்ணினாள். என்ன முடிவெடுப்பது என்பதறியாத பதற்றத்தோடு பணிந்து ஆசானின் கால்களைத் தொட்டாள்.
கண் கலங்கிய கபிலர், அவளுக்கு வாழ்த்து சொல்லி எழுந்திருக்கச் சொன்னார். ஆனால், பொற்சுவையால் எழுந்திருக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்பது அவளுக்குப் பிடிபடவில்லை. குனிந்து வணங்கியபடி இருந்தவளின் மனம் கொந்தளித்தபடி இருந்தது. தன் வழியாகப் பாரியை எப்படி அடையாளம் கண்டறிவார்கள்; தாக்குதலுக்கு என்ன உத்தியை வகுத்திருப்பார்கள் எனச் சிந்தித்தபடியே எழுந்தாள்.
ஆசான் வாஞ்சையோடு அவளின் தலையைத் தொட்டு வாழ்த்து சொல்லியபடி இருக்க, அவர் முகத்தைப் பார்த்ததும் பொற்சுவை கேட்டாள், ``ஈங்கையன் எங்கு இருக்கிறார் ஆசானே?”
சற்றே அதிர்ச்சிக்குள்ளானார் கபிலர். `பாரியைத்தானே கேட்பாள் என நினைத்தோம். ஏன் ஈங்கையனைக் கேட்கிறாள்?’ எதுவும் புரியவில்லை. இடதுகையை நீட்டி மூன்றாவதாக நிற்பவனைக் காட்டினார் கபிலர்.
பொற்சுவையின் கால்கள் அவனை நோக்கித் திரும்பின. பல்லக்கின் மேற்பிடிமானங்கள் முழுவதும் உள்ளொடுங்கிய ஈட்டிகளால் ஆனவை. `பொற்சுவை, கபிலரை வணங்கிய பிறகு பாரியை வணங்கிப் பேசுவாள். அந்தக் கணத்தில் அவனைத் தாக்கி அழிக்கவேண்டும்’ என்னும் ஆணையோடுதான் நன்கு பயிற்சிபெற்ற வீரர்களைக் குலசேகரபாண்டியன் அனுப்பியிருந்தார். பொற்சுவையின் கால்கள் ஈங்கையனை நோக்கி நகரத் தொடங்கியபோது பாண்டிய வீரர்கள் பல்லக்கோடு ஒட்டியுள்ள ஈட்டியை இறுகப்பற்றினர்.
பொற்சுவையின் மனம் தள்ளாடியது. `பாரி எங்கு இருக்கிறான்; ஒரு கணமேனும் அவன் முகத்தைப் பார்க்க வேண்டும்’ என மனதுக்குள் தோன்றியது. `ஒருவேளை அந்த முகத்தைப் பார்த்துவிட்டால், தன்னை அறியாமலே கைகள் குவிந்து தாள்பணிந்துவிடுவோம். வேண்டாம்’ என மனதின் அடங்காத தவிப்போடு மூன்றாம் நிலையில் இருந்த ஈங்கையனின் முன்னால் வந்து நின்றாள். உடன் நிற்கும் யாருக்கும் எதுவும் புரியவில்லை.
ஈங்கையனைப் பார்த்தபடி கைகளைக் குவித்து கால் தொட்டு வணங்க மண்டியிட்டாள் பொற்சுவை. ஈங்கையன் பதற்றத்தோடு அவளைத் தடுக்க முற்படும்போது பாண்டிய வீரர்களின் ஈட்டிகள் மின்னலெனப் பாய்ந்தன. அருகில் நிற்பவர்கள் என்னவென்று அறியும் முன்பு அடுத்தடுத்து இறங்கின ஈட்டிகள். மற்றவர்கள் ஈங்கையனை நோக்கி ஓடிவருவதற்குள் கபிலரின் முகம் நோக்கிப் பீய்ச்சியடித்தது ஈங்கையனின் குருதி. கணநேரத்தில் பாட்டாப்பிறை போர்க்களமானது.
எதிர்பாராத கணத்தில் தாக்குதலில் இறங்கிய பல்லக்குத் தூக்கிகளைச் சுற்றி நின்றிருந்த பறம்புவீரர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டிச் சரித்தனர். ஒருவன்கூட உயிர் தப்பவில்லை. அலறல் ஒலி மேலெழும் முன்பே எல்லாம் முடிந்தன.
தாக்குதல் ஓசை கேட்டுப் பதற்றத்தோடு பல்லக்கை விட்டு வெளியில் வந்தாள் சுகமதி. மரத்தடியைப் பார்த்த கணத்தில் ``ஐயோ... இளவரசி..!” என்று உயிர் உருகக் கத்திக்கொண்டு ஓடினாள்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன்