மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

கறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு
பிரீமியம் ஸ்டோரி
News
கறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

டீ கிளட்டரிங்

ம்பது, அறுபது வருடங்களைக் கடந்த அந்தக் காலத்து வீடுகள் பலவும் இன்றும் உறுதியாக, அஸ்திவாரம் ஆட்டம் காணாமல் அப்படியே நிற்பதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் புதிதாகக் கட்டிய வீடுகளில் ஆறே மாதங்களில் கறையான் பரவி, வீட்டின் முக்கியமான ஆவணங்களையும் காலங்காலமாகச் சேர்த்துவைத்த புத்தகங்களையும் நினைவுச் சின்னங்களையும் அரித்து காலி செய்துவிடுவதையும் பார்க்கிறோம். இன்றைய வீடுகளில் மனிதர்கள், செல்லப் பிராணிகளுடன் கறையான்கள், கரப்பான்கள், பல்லிகள், பூரான்களும் சேர்ந்தே குடித்தனம் செய்கின்றன.

ஆரோக்கியமான வீடு என்பது பூச்சிகள் இல்லாமலிருக்க வேண்டும். வீட்டின் கட்டடம் மற்றும் அங்கே வசிப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு பூச்சித் தடுப்பு எனப்படுகிற பெஸ்ட் கன்ட்ரோல் முக்கியம். இதில் வெறும் பூச்சிகள் மட்டுமன்றி எலிகள், புறாக்கள் போன்றவற்றின் தொல்லையிலிருந்தும் நம்மையும் வீட்டையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியம்.

கறையான் தடுப்பு... பூமி பூஜை போடும்போதே ஆரம்பமாகட்டும்!

கறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

கறையான்களிடமிருந்து கட்டடங் களைக் காப்பாற்ற வேண்டுமானால் அதற்கான வேலைகள் பூமி பூஜை போடும்போதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். பெஸ்ட் கன்ட்ரோல் கம்பெனிகளை அணுகினால் கட்டுமானப் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்பே, மண்ணில் உள்ள கறையான்களைக் கட்டுப்படுத்தும் வேலைகளைச் செய்வார்கள். கட்டுமான வேலைகள் `ப்ளின்த் பீம்'  (Plinth Beam) என்கிற நிலைக்கு வரும்போது, அடுத்த ரவுண்டு பெஸ்ட் கன்ட்ரோல் செய்வார்கள். இதன் மூலம் பூமியிலுள்ள கறையான்கள், கட்டடத்தில் ஊடுருவுவதைத் தவிர்க்கலாம். `ப்ளின்த் பீம்' என்பது அஸ்திவாரத்தின் முடிவு. அஸ்திவாரத்தையும் சூப்பர் ஸ்ட்ரக்ச்சர் (Super Structure) எனப்படும் பூமியின் மேலெழும் முதல் பகுதியையும் இணைப்பதுதான் ப்ளின்த் பீம். எனவே, இந்தப் பகுதியில் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யும்போது, அஸ்திவாரத்திலிருந்து சூப்பர் ஸ்ட்ரக்ச்சருக்குக் கறையான்கள் பரவுவதும் தடுக்கப்படும்.

ஏற்கெனவே கட்டிமுடிக்கப்பட்ட கட்டடங்களில் கறையான்கள் அரிப்பதை எப்படித் தடுக்கலாம்? இதுவே பெரும்பாலானவர்களின் கேள்வி. பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனங்களை அணுகினால், டெர்மைட் புரூஃப் செய்து தருவார்கள். அதில் உங்கள் வீட்டுத் தரையிலிருந்து நான்கு இன்ச் மேலே சுவரில் துளையிட்டு, மருந்து போட்டு, துளையை அடைப்பார்கள். இது கொஞ்சம் இம்சையான வேலைதான். ஆனாலும், அவசியம் செய்தே ஆக வேண்டிய வேலையும்கூட. அப்போதுதான் ஏற்கெனவே பரவிய கறையான்கள் மறையும்.  முதன்முறை பெஸ்ட் கன்ட்ரோல் செய்த உடனேயே மொத்த கறையான்களும் மொத்தமாக காலியாகிவிடாது. அவற்றின் ஆக்கிரமிப்பைப் பொறுத்து மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து இன்னொரு முறை செய்யவேண்டியிருக்கும்.

கறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு


உங்கள் வீட்டைப் புதுப்பிக்கிறீர்கள் என்றால், முதல் வேலையாக வீட்டுக்கு டெர்மைட் புரூஃப் செய்துவிடுங்கள். பாதிப்பைப் பொறுத்து எத்தனை வருடங்களுக்கொரு முறை பெஸ்ட் கன்ட்ரோல் தேவைப்படும் என்பதை அவர்களே சொல்லிவிடுவார்கள். கறையான்கள் தேக்கு மரத்தைத் தவிர எல்லா வகை மரங்களையும் அரித்துவிடும். கதவுகள், ஜன்னல்கள், ஃபர்னிச்சர்ஸ் என மரத்தால் ஆன அனைத்தையும் அரிக்கும் தன்மைகொண்டவை அவை.

இப்போது யுபிவிசி (அன்பிளாஸ்டிசைடு பாலிவினைல் குளோரைடு) என்கிற மெட்டீரியலில் கதவு, ஜன்னல்கள் கிடைக்கின்றன. மரப் பயன்பாட்டைக் குறைக்கிறோம் என்பது பெரிய ப்ளஸ் என்றால், இந்த மெட்டீரியலைக் கறையான்கள் அரிப்பதில்லை என்பது அடுத்த ப்ளஸ்.

எலிகளை விரட்டுவது எப்படி?

எலிக்காய்ச்சல் பீதி பரவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எலிகளைக் கட்டுப்படுத்துவது பற்றி அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். எலிகளின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மிகவும் நச்சுவாய்ந்தவை. அவற்றின் மூலம் பரவும் கிருமிகள் உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவை என்பதால், எலிகளிடமிருந்து விலகி இருக்கவேண்டியதும் அவசியமாகிறது.

கறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

எலிகள் வந்துவிட்டால் அவற்றைப் பொறிவைத்துப் பிடிப்பதுதான் வழக்கம். ஆனால், அவை வராமலேயே தடுக்க முடியும். வீட்டையும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்திருப்பதே முதல் வழி. எலிகள் தமக்கான இரையைத் தேடியே வருகின்றன. உங்கள் வீட்டிலும் வெளியிலும் அவற்றுக்கான இரைகள் கிடைக்கும்படியான சூழலை அமைத்துக் கொடுத்தீர்களானால் நிச்சயம் வரும். அதற்கு இடம் கொடுக்காமல் சுத்தமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

எக்ஸாஸ்ட் ஃபேனுக்கானது, சிம்னிக்கானது, வென்டிலேட்டருக்கானது என ஒவ்வொரு வீட்டிலும் நிறைய துளைகள் இருக்கும். அவற்றைப் பெரும்பாலும் நாம் மூடுவதில்லை. அதனால் அவை திறந்த அந்த வழிகளின் மூலம்தான் எலிகள் வீட்டுக்குள் வருகின்றன. இதைத் தவிர்க்க இரும்பு வலை (மெஷ்) வாங்கிப் பொருத்தினால் வெளியிலிருக்கும் எலிகள் வீட்டுக்குள் வருவதைத் தவிர்க்கலாம்.

ஈ, கொசு, புறா... அண்டவிடாமல் தடுக்கலாம்!

கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வலைகளும் இன்று மெட்டலில் கிடைக்கின்றன. அவ்வப்போது அவற்றை எடுத்துக் கழுவி உலரவைத்து உபயோகிக்கலாம். கொசுக்களைத் தடுக்க இந்த வலைகளைப் பொருத்தினால், ஜன்னல்களின் வழியே எலிகள் வீட்டுக்குள் வருவதையும் தடுக்கலாம்.
தினமும் வீட்டைத் துடைக்க கெமிக்கல் ஃப்ளோர் க்ளீனர்களையே உபயோகிக்கிறோம். அவை ஆரோக்கியமானவை அல்ல.

தண்ணீரில் 2 டீஸ்பூன் கல் உப்பும், 2 டீஸ்பூன் பொடித்த கற்பூரமும் கலந்து துடைத்தால் ஈக்களும் கொசுக்களும் அண்டாது.

நகர்ப்புறங்களில் புறாக்களின் தொல்லை இன்று மிக அதிகமாகியிருக்கிறது. அவற்றின் இறகுகள் உதிரும்போது ஆஸ்துமா பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகம். புறாக்களின் எச்சத்திலிருந்து பூச்சிகள் வரும். அவை அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, புறாக்களையும் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. மீன் வலைகள் மாதிரியே நைலான் வலைகள் கிடைக்கின்றன. அவற்றைப் புறாக்கள் வரும் இடங்களில் வைத்தால் அவற்றின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தலாம். காகங்கள், குருவிகளால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. புறாக்கள் அப்படியில்லை என்பதால், அவற்றிடமிருந்தும் விலகியே இருக்க வேண்டும்.

(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!)

- எழுத்து வடிவம் : சாஹா  ஓவியங்கள் : ரமணன்