
சி.எம்.முத்து
இடையிருப்பு?
“என் கதைமாந்தர்களின் வாழிடம்.”
சி.எம்.முத்து?
“ ‘இடையிருப்பில் விழுந்த தமிழின் தப்புவிதை’ என்று தஞ்சாவூர் கவிராயர் சொல்வார்.”
விவசாயம்?
“விடவும் முடியவில்லை;
மீளவும் முடியவில்லை.”
காவிரி?
“இன்றைய வடிகால்.”
குலதெய்வம்?
“எழுத முதல் காரணம், ‘ஏழு முடிச்சும் இளைய முனி’ அதற்கொரு சாட்சி.”
தஞ்சை மக்கள்?
“எதையும் நம்பிப் பயணிப்பவர்கள். ஆனாலும், அப்பாவிகள்.”
கிடைத்த முக்கிய அங்கீகாரம்?
“வாசகர்கள்.”
சாதி?
“என்றோ முளைத்த களை.
இன்னும் மட்கிப்போகாமல்
இருப்பதுதான் வேதனை.”

தி.ஜானகிராமன்?
“என் உள்ளம் கவர்ந்த கள்வன்.”
தஞ்சை ப்ரகாஷ்?
“மிகப் பெரிய ஆசிரியர், ஆசீருபி. ‘என்’சைக்லோப்பீடியா.”
எழுதும் காரணம்?
“மன அவசங்களிலிருந்து விடுபடவும் தமிழுக்காகவும்.”
அப்பா?
“பெரும் தாக்கத்தையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தியவர். என்னுடைய ‘அப்பா என்றொரு மனிதர்’.”
இன்றைய தலைமுறை இழந்தது?
“பாசத்தை.”
பிடித்த பழமொழி?
“கொம்பால குருணி வந்தாலும்
கூர புடுங்குற மாடு ஆவாது.”
பெண்கள்?
“மாபெரும் சக்தி.”
‘கறிச்சோறு’?
“என்னை அடையாளப்படுத்தியது.”
அடுத்து என்ன?
“ ‘சவுக்கண்டி’ நாவல்.”
முதல் கதை வெளிவந்த நாள்?
“இன்றைக்கும் இனிக்கிறது. அன்று, ஆகாயத்தில் மிதக்காததுதான் பாக்கி.”
கள்ளக்காதல்?
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முளைத்த ஒரு விஷயம்.”
தொகுப்பு : அழகுசுப்பையா ச.
- ஓவியம் : பிரேம் டாவின்ஸி