Published:Updated:

மண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்!

மண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்!

மண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்!

‘கேள்விகள் பொதுவாகவே ஆபத்தானவை.
ஆள்பவர்களின் மனதில் எழுபவையும்
ஆளப்பட்டவர்களின் மனதில் எழுபவையும்.’

- மண்ட்டோ

ந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, தான் பின்பற்றாத ஒரு மதத்தில் பிறந்ததற்காக, மதத்தின் பெயரால் தனது நண்பனே தன்னைக் கொல்லக்கூடும் என்ற நிலையில், பாகிஸ்தான் எனப் பெயரிப்படப்பட்ட புதிய நிலப்பரப்புக்குச் செல்கிறான் ஓர் எழுத்தாளன். தான் வாழ்ந்த அம்ரித்ஸரைவிட்டு, தன்னை வளர்த்த பம்பாயைவிட்டு, லாகூர் நோக்கி தன் மகள்களின் பாதுகாப்பின் பொருட்டு புலம்பெயர்கிறான் அவன். தான் பிறந்த கிழக்கு பஞ்சாபின் லூதியானாவிலிருந்து, மேற்கு பஞ்சாபில் இருக்கும் லாகூருக்குச் செல்கிறான். ராவல் பிண்டியில் (இன்றைய பாகிஸ்தானில்) பிறந்து வளர்ந்த இந்துவான ஒருவன், இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஒருவனை மதத்தின் பெயரால் இங்கிருந்து  ‘வெளியேறு’ என்று சொல்லும் நகைமுரண்தான் மண்ட்டோவின் வாழ்க்கை. அதுவும், வெளியேறச் சொல்லி ஆயுதம் ஏந்துபவன் நண்பனாக இருக்கும்பட்சத்தில்?

சில எழுத்தாளர்களின் சிறுகதைகளை, புனைவுத்தன்மை மிகுந்த கட்டுரையா? உண்மைத்தன்மை மிகுந்த சிறுகதையா? என்று தீர்மானிப்பது கடினம். மண்ட்டோவின் கதைகளில் நிகழ்கிறவை உண்மைத்தன்மை மிகுந்தவை, பெரும்பாலும் உண்மை என்றே  அவரை வாசிப்பவர்கள் கருதுகிறார்கள். அவரது எழுத்தில் எழும் ரத்தத்தின் கண்ணீரின் நெடி, உங்களை நிஜத்தில் தும்மச் செய்யும். “ஏன் நீ எல்லாவற்றையும் இலக்கியமாகப் பார்க்கிறாய்?” என மண்ட்டோவிடம் அவரது நண்பரும் நடிகருமான ஷ்யாம் ஒருமுறை கேட்கிறார். அதே நண்பர்தான், வேறொரு சமயத்தில், “எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால், முஸ்லிம்களைக் கொல்லத் தயங்கமாட்டேன், அது நீயாக இருந்தாலும்!” என்று கோபத்தில் கூறுகிறார். ஆனால், மண்ட்டோ, ஒருபோதும் தன்னை இஸ்லாமியராகவோ மதப்பற்றாளராகவோ வெளிப்படுத்திக் கொண்டவரில்லை. ஆனால், மத அடையாளம் அவரை இறுதிவரை துரத்தியது. ‘என்னைப் பொறுத்தவரை, கோயிலும் மசூதியும் வெறும் கற்கள்; பசுவும் பன்றியும் வெறும் சதை’ என்று குறிப்பிட்டார் மண்ட்டோ. அவர் எப்போதும் தனது எழுத்துகளையும் வாழ்க்கையையும் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

மண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்!

மண்ட்டோவின் ஒரு கதையை வாசித்துவிட்டு, அடுத்த கதையை நோக்கி அவ்வளவு எளிதில் செல்ல முடியாது. குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாத விரக்தியில் முலையறுத்து ரத்தம் பீறிட நிற்கும் பெண் சித்திரம், அன்று வரை ராஜவம்சத்திலிருந்த ஒரு குடும்பம் பொதுவில் பலர் முன் ஆட வேண்டிய சூழ்நிலை வர, ஆடைகளை முற்றிலும் களைந்து ‘இதற்கு மேல் என்ன பார்க்க விரும்புகிறீர்கள்’ என நிர்வாணத்திமிரில் கேட்க, வெட்டிக்கொல்லப்படும் துயரம், தன் பெயரை மாற்றிச் சொல்லி தாக்குதலிலிருந்து தப்பித்துவிடலாம் என முயன்றும், பிறப்புறுப்பு அடையாளத்தால் கொல்லப்படுகிறவனின் மன்றாடல், இருள் அப்பிக்கிடக்கும் மருத்துவமனையில்  ‘யாரேனும் ஜன்னலைத் திறங்களேன்’ என மருத்துவர் சொல்லுமிடத்தில், ‘திற’ என்ற சொல் மட்டும் பிரக்ஞையில் உணர்ந்து குற்றுயிராகக் கிடக்கும் பெண் தன் கீழாடையின் நாடாவைக் கழற்றும் கொடூரம் என மண்ட்டோவின் கதைகளும் கட்டுரையும் வாசகனின் ரத்தத்தை உறையவைப்பவை.

மண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்!

‘இந்திய எழுத்தாளன்’, ‘பாகிஸ்தானிய எழுத்தாளன்’ என எவரும் தன்னை வகைமைப்படுத்திவிட முடியாத இடத்தில் தன் அடையாளத்தை நிரந்தரப்படுத்திக் கொண்டவர் மண்ட்டோ. சமூகத்தின் மீதான தனது கேள்விகளை, அரசுகளின் மீதான கோபத்தை, நேசித்த-பரிவுகாட்ட விரும்பிய பெண்களுக்கான அன்பை படைப்புகளாக அவர் எழுதிக்கொண்டே இருந்தார். ஜின்னாவின் நிலைப்பாடு பற்றி மண்ட்டோவுக்கு எப்போதும் ஓர் எதிர்மறையான கருத்து இருந்துவந்தது. காந்தியின் மீது எப்போதும் அவருக்கு ஒரு நேசம் இருந்துவந்தது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி தன்னை வந்தடைந்தபோது, மண்ட்டோ லாகூரில் இருந்தார். செய்தியறிந்ததும், சாப்பிட வாங்கிய உணவை அப்படியே யாரிடமோ கொடுத்துவிட்டுச் செல்வதாக படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள். நந்திதா தாஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மண்ட்டோ’ (MANTO) திரைப்படம் துண்டாடப்பட்ட நிலத்தின், மனித மனதின் ஒரு துயரச் சித்திரமாக சாதத்ஹசன் மண்ட்டோவின் வாழ்க்கையை அனுபவப்படுத்துகிறது.

தன் வாழ்நாள் முழுக்க இந்தியா - பாகிஸ்தான் பிரிவுக்கான வலியுடன் அலைந்துகொண்டிருந்த ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய படம்கூட இரண்டு நிலத்திலும் தனித்தனியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை என்ன மனநிலையில் எடுத்துக்கொள்வது? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தானில் ஒரு ‘மண்ட்டோ’வும், தற்போது இந்தியாவில் ஒரு ‘மண்ட்டோ’வும் வெளியாகியிருக்கிறது.

ஏறத்தாழ 10 ஆண்டுக்குப் பிறகு, நந்திதா தாஸ் இயக்கியிருக்கும் திரைப்படம் `மண்ட்டோ’. 2008-ம் ஆண்டு அவரின் முதல் திரைப்படமான `ஃபிராக்’ வெளியானபோது, அது வியந்து பேசப்பட்டது. 2002-ம் ஆண்டின் குஜராத் படுகொலைகள், எளிய மக்களின் வாழ்வை எவ்வாறு தலைகீழாக்கியது என்பதைப் பற்றியது `ஃபிராக்’. யாரும் பேசா பொருளைப் பேசத் துணிந்தது அந்தத் திரைப்படம். `மண்ட்டோ’வும் தன் வாழ்நாள் முழுவதும் அதைத்தானே செய்தார்!

‘Ten rupees’ எனும் சிறுகதையை எழுதுவதிலிருந்து படம் தொடங்குகிறது. தன் வீட்டிலிருக்கும் சிறுமியை நன்றாக ஆடை உடுத்தி, பாலியல் தொழிலுக்கு அனுப்புகிறாள் ஒரு பெண். அந்தச் சிறுமி வெகுளித்தனமாக, “தங்கையும் நன்றாக வளர்ந்துவிட்டாளே, அவளையும் அனுப்பலாமே?!” என்கிறாள். “அவர்கள் நிறைய பணம் கொடுத்திருக்கிறார்கள். பார்த்து நடந்துகொள்.” எனும் கனிவான அதிகார எச்சரிக்கையுடன் அவள் அனுப்பிவைக்கப்படுகிறாள். வாடிக்கையாளர்களுடன் காரில் பயணிக்கும் அந்தச் சிறுமி, புறாக்கூடுகளைப்போன்ற வீடுகளிலிருந்து பிரிந்து வானத்தை நோக்கி, ‘காட்டில் ஒரு பறவையாக பறக்க ஆசைப்படுகிறேன்’ எனப் பாடுகிறாள்; கடற்கரையில்  விளையாடுகிறாள்; ‘எல்லாம் முடிந்து’ நடுநிசியில் வீடு திரும்பும்போது, அவளை அன்றைக்கு விலைக்கு வாங்கிய பணக்காரர்கள் பெரிய மனதுடன், மேலும் பத்து ரூபாயை அவள் சட்டைப்பையில் திணிக்கிறார்கள். காரைவிட்டு இறங்கிய அச்சிறுமி, மீண்டும் காருக்கு வந்து, ‘எதற்கு இந்தப் பணம்’ என்பதுபோல், அந்தக் கசங்கிய பத்து ரூபாயை இருக்கையில் வைத்துவிட்டுச் செல்கிறாள். இந்தக் கதையை எழுதிவிட்டு, வலமிருந்து இடமாகத் தன் பெயரான ‘சாதத் ஹஸன்’ என உருது எழுத்தில் கையெழுத்திடுகிறார் மண்ட்டோ. அது மெள்ள மறைந்து ‘மண்ட்டோ’ என மாறுகிறது. அந்த அழகியல் காட்சியிலிருந்து  தொடங்குகிறது ‘மண்ட்டோ’ திரைப்படம். ‘பேனா என் கைககளில் இல்லாதபோது, நான் வெறும் சாதத் ஹஸன். இந்தப் பேனாதான் என்னை மண்ட்டோவாக மாற்றுகிறது’ என்ற அவரது சொற்கள் நமது நினைவில் ஒலிக்கின்றன.

ஆளுமைகளைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படங்களில், நடிகரின் முகமும் உடல்மொழியும் நிஜஆளுமையுடன் ஒத்துப்போதல் மிகவும் அவசியம். நவாஸுதீன் சித்திக்கி தனது நடிப்பாற்றலால் மண்ட்டோவை மீண்டும் உயிர்ப்பித்துத் தந்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன் முந்தைய கதாபாத்திரத்தினை விழுங்கி, புதிய வேறொரு நபராக, முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றுவது நவாஸுதீனுக்கு இயல்பாக வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் ‘லங்காதகணம்’ குறுநாவலில், அனுமார் வேஷம் கட்டும் ஒரு முதியவரைப் பற்றிய சித்திரிப்பில், ‘குரங்கின் பார்வையோடு, புதர்கள் மீது தாவிப் பாய்ந்தவராக, கிட்டதட்ட அந்தரத்தில் வருவதுபோல, அவர் மேடை நோக்கி வந்துகொண்டிருந்தார்’ என எழுதிச் செல்வார். அதுபோல, ஜிப்பா போன்றதொரு வெள்ளை சட்டை, கண்ணாடி, பையில் ஒரு சிகரெட் பாக்கெட், கலைந்த தலைமுடி, எதைப்பற்றியும் கவலைகொள்ளாத ஓர் அலட்சியப்பார்வை... புத்தகங்களின் அட்டைப் படங்களிலும் கதைகளிலும் கேட்ட மண்ட்டோவின் உருவம் இப்படியாகத்தான் நம்முள் பதிந்திருக்கிறது. அவ்வுருவம் அப்படியே திரையில் தோன்றி அசைவது ஓர் அற்புதம். படம் தொடங்கிய சில நிமிடக் காட்சிகளிலேயே நாம் நவாஸுதீனின் முகத்தை மண்ட்டோவின் முகமாக நம்பத்தொடங்கிவிடுகிறோம். அதில், தன் முதல் வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கிறது படக்குழு.

மண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்!

லாகூரில் தன் நாள்களைக் கடத்தும்போது, ஒரு பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைக்கான சன்மானப் பணத்தை வாங்கிவரச் சொல்லி, கூட்டாளி ஒருவரை அனுப்பிவிட்டு, வயிற்றைப் பிடித்தபடி மண்ட்டோ வெளியே அமர்ந்திருக்கிறார். அடுத்த வாரம்தான் கட்டுரையை வெளியிட முடியும் என வழக்கம்போல் கைவிரிக்கிறது அந்தப் பத்திரிகை அலுவலகம். (பம்பாயில் ஒரு கட்டுரைக்கு 50 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு 20 ரூபாய் என சன்மானம் நிர்ணயம் செய்கிறார்கள்). கோபத்தின் உச்சியில், மேல் மாடியிலிருக்கும் பத்திரிகை அலுவலகத்துக்கு வயிற்றைப் பிடித்தபடியே செல்கிறார் மண்ட்டோ. “அந்தக் கட்டுரையைக் கொஞ்சம் தர முடியுமா?” எனக் கேட்டு வாங்கி, கிழித்துக் காற்றில் வீசிவிட்டுச் செல்கிறார் மண்ட்டோ. இப்படித்தான் அவர் வாழ்ந்திருக்கிறார் என பட்டவர்த்தனமாகச் சொல்கிறது நந்திதா தாஸின் ‘மண்ட்டோ’.

அன்றைய பம்பாய் திரைப்படங்களில் மண்ட்டோ பணிபுரிந்துகொண்டிருந்த காலம். இண்டஸ்ட்ரியில் இனி, இஸ்லாமியர்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது என வாய்மொழியாக ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ‘என்னில் இருந்து அதைத் தொடங்குங்கள்’ என்று ஞானச்செருக்கோடு சவால் விடுத்தார் மண்ட்டோ. ஒரு பணக்காரர், “எனது திரைக்கதை எப்படி இருக்கிறது?” என்று வாசித்துச் சொல்லும்படி மண்ட்டோவிடம் கேட்கிறார். “உங்கள் திரைக்கதையை நான் வாசித்துச் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் பணம் தர வேண்டும்” என்கிறார் மண்ட்டோ. அந்த பணக்கார தயாரிப்பாளர் 100 ரூபாய் பணத்தை நீட்ட, “உங்கள் திரைக்கதை குப்பையாக இருக்கிறது” என்கிறார் மண்ட்டோ. படத்தில் இடம்பெறும் இந்தக் காட்சி, மண்ட்டோ எவ்வளவு தன்னம்பிக்கையும் கலைத்திமிரும் கொண்டு வாழ்ந்தார் என்பதற்கான சிறு உதாரணம். (இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’வின் திரைக்கதையை எழுதியவர் மண்ட்டோ. ஆயினும் திரைப்பட நிர்வாகம் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. அப்போது அவர் அந்தப் பட நிறுவனத்தில் கிளர்க்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் மண்ட்டோ. இந்த உண்மையை அவர் தனது நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.)

`என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்கிறீர்கள், அதைக்காட்டிலும் உண்மையான இந்த சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? என்று கேட்ட, மண்ட்டோவின் பிரதான கதைமாந்தர்கள் புறக்கணிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகள், மனநலம் குன்றியவர்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமிகள், பிச்சைக்காரர்கள் போன்றவர்கள்தாம். இந்தியாவில் மண்ட்டோவின் கதைகள் மீது மூன்று முறை வழக்கு பதியப்பட்டிருக்கிறது. லாகூர் செல்லும் மண்ட்டோ, தண்டா கோஷ் ‘Cold Meat’ எனும் கதையை எழுதுகிறார். ஆபாசச் சிறுகதை எனக் குற்றம் சாட்டப்பட்டு, அங்கு மீண்டும் நீதிமன்றப் படியேறுகிறார். ‘இந்தச் சமுதாயம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள உதவும் ஒரு கண்ணாடிதான் என் கதைகள்’ என நீதிமன்றக் கூண்டுக்குள் நின்றபடி பேசுகிறார். இந்தியாவும் பாகிஸ்தானும் பாரபட்சமின்றி மண்ட்டோவுக்குச் செய்த ஒரே விஷயம் வழக்குகள் போட்டதுதான். ஆம், பாகிஸ்தானிலும் மூன்று வழக்குகள்.

மண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்!

உலகத்தால் கொண்டாடப்பட்ட பல ஆண் ஆளுமைகளுக்குப் பின்னால் உறுதுணையாக நின்ற பல பெண்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். அப்படியான ஒருவர்தான் சஃபியா தீன். இவர், சஃபியா மண்ட்டோவாக மாறாமல் இருந்திருந்தால், அவரது பெயர் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மண்ட்டோ எனும் பயமறியாத எழுத்தாளனின் சில நல்ல தருணங்களிலும் பல மோசமான தருணங்களிலும் கூடவே நின்றவர் சஃபியா மண்ட்டோ. குடும்பத்தின் சுமையைத் தன் தோளில் ஏற்றிக்கொண்டிருந்த சமயத்திலும் ஈடில்லா கலைஞனின் சுயத்தை அப்படியே வைத்திருந்தவர் சஃபியா. இயலாமையும் விரக்தியும் நிறைந்த தருணத்தில்,  “வேண்டுமென்றால் என்னைவிட்டு நீ பிரிந்துவிடலாம்” என்று சொன்ன மண்ட்டோவிடம், “உங்கள் மீது நிலுவையிலிருக்கும் வழக்கு முடியாமல் இருக்கிறது. அது நல்லபடியாக முடியட்டும். பிறகு பிரியலாம்” என்று புன்னகையோடு சொன்னவர் சஃபியா. மனைவி மீதான மதிப்பை தனது எழுத்துகளின் வழியே நமக்கு அறியத் தந்திருக்கிறார் மண்ட்டோ. ‘சஃபியா தீனின் வருகைதான், பெண்களை நடத்தவேண்டிய விதத்தை எனக்குக் கற்பித்தது’ என்கிறார் மண்ட்டோ. வீரியம் நிறைந்த உண்மைகளை அதிநேர்மையுடன் பேசிய மண்ட்டோ, தனது கதைகளின் மீதான சஃபியாவின் கருத்தைக் கேட்காமல் பிரசுரத்திற்கு அனுப்பியதில்லை என்கிறார். மண்ட்டோ இறக்கும்போது, அவர் மிகவும் நேசித்த அவரின் மகள்கள் மூவருக்கும் வயது வரிசையே 5, 7, 9. சிகரெட்டை பற்றவைத்தபடியே, கதைகளை வாசித்துக்காட்டும்... மாதுளம்பழங்களை உரித்து ஊட்டிவிடும் சாதத் ஹசனைத்தான், அவர்களுக்கு அப்பாவாகத் தெரிந்திருக்கிறது. அப்பாவும் எழுத்தாளருமான மண்ட்டோவின் நேசக்கதைகளை மட்டுமே கூறி அவர்களை வளர்த்திருக்கிறார் சஃபியா தீன். மண்ட்டோவின் குடும்பத்துடன் பல நாள்கள் தங்கியிருந்து அவதானித்தது, பாத்திர வார்ப்பில் இயக்குநர் நந்திதா தாஸுக்கு மிகவும் உதவியிருக்கிறது.

படத்தில் வரும் ‘ஹிப்டுல்லா’, ‘டோபா டேக் சிங்’, ‘அங்கிள் சாம்’ குறித்த உரையாடல்கள், மண்ட்டோவின் கதைகளைச் சட்டென நினைவுக்குக் கொண்டுவருகின்றன. ஹிப்டுல்லா எனும் சொல்லை மண்ட்டோவும் அவரது நண்பரும் நடிகருமான ஷ்யாமும் படத்தில் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். டோபா டேக் சிங்கின் கதை, மண்ட்டோவுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. பிரிவினைக்குப் பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தமது தேசத்திலிருக்கும் (வேற்றுமத) மனவளர்ச்சியற்றவர்களை அந்தந்த தேசத்துக்கு அனுப்பிவைக்கின்றன. ‘அரசியல் கொள்கைகளை மாற்றிக் கொண்டதுபோல், மனவளர்ச்சியற்ற வர்களை மாற்றிக்கொண்டனர்’ எனக் குறிப்பிடுகிறார் மண்ட்டோ. பஷன் சிங் எனும் மனவளர்ச்சியற்ற பெரியவர், பாகிஸ்தானில் ‘டோபா டேக் சிங்’ எங்கு இருக்கிறது என்று அறியத் துடிக்கிறார். மனதளவிலும் உடலளவிலும் தேடிக்கொண்டேயிருக்கிறார். யாரிடமும் விடையில்லை. அது அவரது சொந்த நிலம் அல்லது எந்தப் பிரச்னையுமற்ற ஒரு அமைதியான நிலம் என்ற குறியீடாக அதை பொருள்படுத்திக்கொள்ளலாம். சில காலம் வரை வந்து கவனித்துக்கொண்டிருந்த அவரது குடும்பமும் இப்போதெல்லாம் வருவதில்லை. சடையாகிப்போன முடியோடு அந்தப் பெரியவர், தன் கேள்விக்கான விடை கிடைக்காமல் அலைந்து திரிந்துகொண்டேயிருக்கிறார். ஒருகட்டத்தில் அவர் ஒரு ‘சீக்கியர்’ என்பதால் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். இந்திய எல்லைக்கு வந்துசேர்ந்தவர், இங்கே ‘டோபோ டேக் சிங்’ எங்கிருக்கிறது எனக் கேட்கிறார். ‘அது பாகிஸ்தானில் இருக்கிறது!’ எனப் பதில் வருகிறது. எந்தப் பக்கம் செல்வதெனத் தெரியாமல், இரண்டு தேசத்துக்கும் நடுவே, நிலமற்ற நிலத்தில் அவரின் உயிர் பிரிகிறது. கிட்டத்தட்ட மண்ட்டோவின் நிலையும் அதுதான் என்பதைச் சொல்லி நிறைகிறது திரை.

300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட ரேடியோ உரையாடல்கள், ஏராளமான கட்டுரைகள், பட வசனங்கள் (மண்ட்டோ பற்றி சமீபத்தில் வெளியான நந்திதா தாஸின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டவை) என படைப்புகளாலும் கருத்துகளாலும்  நிறைந்த மண்ட்டோவின் வாழ்விலிருந்து, நமக்கு அதிகம் தெரிந்த பகுதிகளைவைத்து மட்டுமே கதை அமைத்திருப்பதை படத்தின் ஒரு குறையாகச் சொல்லலாம். மற்றபடி, உண்மையை அச்சமின்றி நெருங்கிச் சென்ற ஒரு கலைஞனின் வாழ்வை, மனஉலகை உண்மைக்கு நெருக்கமான காட்சிப்படுத்தியிருக்கிறது ‘மண்ட்டோ’. இப்படத்தை ஓர் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக்கொண்டு மண்ட்டோவின் படைப்புகளை வாசித்தல், மொழிபெயர்த்தல், விவாதித்தல், கொண்டாடுதல் என மண்ட்டோவை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். அதற்கான தேவையை இன்றைய சூழல் கொண்டிருக்கிறது என்பதை யாவரும் அறிவர். ‘இந்தியாவைக் காப்பாற்றுங்கள் எனச் சொல்கிறவர்களிடமிருந்து மட்டும் இந்தியாவைக் காப்பாற்றினால் போதுமானது’ என்று சொன்னவர் அல்லவா மண்ட்டோ!?

‘நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?’ எனும் கேள்விக்கு மண்ட்டோவின் பதில்:

மதிப்புக்குரிய சகோதர சகோதரிகளே...

எப்படி, எதற்காக எழுதுகிறேன் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது. ‘எப்படி’ என்ற இந்த வார்த்தையும் இவர்கள் என்னிடம் கேட்கும் கேள்விக்கான பொருளும் எனக்குப் புரியவேயில்லை. என் அகராதியின்படி, ‘எந்த ரீதியில்?’ என்பதாக இந்த ‘எப்படி’யைப் புரிந்துகொள்கிறேன். இதைப் பற்றி நான் என்ன சொல்லமுடியும்? என் வீட்டு முன்னறையில் உட்கார்ந்து, காகித அடுக்குகளை எடுத்து, எனது பேனாவை எடுத்து எழுதத் தொடங்குவேன். அதே அறையில் என் மூன்று சிறு மகள்களும் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அடிக்கடி அவர்களுடன் நானும் பேசிக்கொண்டிருப்பேன். அவர்களுக்குள் நடக்கும் சிறு சண்டைகளைத் தீர்த்துவைப்பேன். எனக்கான சாலட்டையும் நானே தயாரித்துக்கொள்வேன். யாரேனும் வீட்டுக்கு வந்திருந்தால், அவர்களை வரவேற்று பேசிக்கொண்டிருப்பேன். இந்த எல்லாமும் நடந்துகொண்டே இருந்தாலும், நான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன். இப்போது, ஏன் எழுதுகிறேன் என்று கேட்டால், அதற்கும் என்னிடத்தில் பதில் இருக்கிறது. குடிக்கு அடிமையாக இருப்பதைப்போலவே, நான் எழுத்துக்கும் அடிமையாக இருக்கிறேன். எழுதாதபோது, ஆடை உடுத்தாததைப்போல, குளிக்காமல் இருப்பதைப்போல உணர்கிறேன். நாளின் முதல் மதுவைக் குடிக்காமல் இருப்பதைப்போல உணர்கிறேன். உண்மையாகவே நான் கதைகளை எழுதுவதில்லை. அவை தன்னைத்தானே எழுதிக்கொள்கின்றன. அது ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல. நான் நிறைய கல்வி கற்றவனல்ல. ஆனாலும், 20 புத்தகங்களை எழுதியிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை, அவர்களது எழுத்தாளர் யாராக இருக்கக்கூடும் என வியக்கிறேன். அடிக்கடி ஆபாசக் கதைகள் எழுதியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மனிதனாக இருக்கிறேன். என்னுடைய ஃபவுண்டெயின் பேனா என்னிடம் இல்லாதபோது, நான் வெறும் சாதத் ஹசன். விஷயங்கள் தெரிந்த, அதைக் கொஞ்சமாக வெளிப்படுத்தத் தெரிந்த ஒருவன். பேனாதான் என்னை மண்ட்டோவாக உருமாற்றுகிறது. நான் எழுதிக்கொண்டிருக்கும் கதை, என்னுடைய எண்ணத்தில் ஏற்கனவே இருப்பில்வைக்கப்பட்ட ஒன்றல்ல. என்னுடைய சட்டைப்பையில் அது கவனிக்கப்படாமல் என்றும் இருக்கிறது. முதல் பத்தியை உருவாக்குவதற்காக எனது மூளையைச் சிரமப்படுத்தி பிழிந்தெடுக்கிறேன். கதைகளை எழுதும் எழுத்தாளனாக விரும்புகிறேன். ஒன்றுக்குப் பின் ஒன்றாக சிகரெட்டைப் பற்றவைக்கிறேன். முடிவில், களைப்படைந்த ஒரு பாலியல் தொழிலாளியைப்போல, எழுதப்படாத கதைகளுக்கான சிரமத்தால் அயர்ந்துபோகிறேன். திரும்பவும் எழுந்து மற்ற வேலைகளைச் செய்கிறேன். குருவிகளுக்கு உணவளித்துவிட்டு, குப்பைகளைக் கொட்டிவிட்டு, குழந்தைகளுடன் விளையாடத் தொடங்குகிறேன். வீட்டில் சிதறியபடிக் கிடக்கும் அவர்களது சின்னஞ்சிறு காலணிகளை, அவற்றின் இடத்தில் எடுத்துவைக்கிறேன். ஆனாலும், எதுவும் வருவதில்லை.

பெரிய மனிதர்களெல்லாம் கழிவறையில்தான் சிந்திப்பதாகக் கூறுவார்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனை எதுவும் கழிவறையில் எனக்குத் தோன்றுவதில்லை. நான் பெரிய மனிதன் இல்லை என்பதை இந்த ஆதாரத்துடன் என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள எழுத்தாளர்களில் முக்கியமானவனாக நான் கருதப்படுவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இந்த மலத்தை நம்பித் தொலைப்பதற்கான தந்திரத்தை நான் செய்திருக்கவேண்டும். மன்னியுங்கள், இப்போது நான் கழிவறையின் மொழியில் பேசுகிறேன். உண்மையைச் சொல்லவேண்டுமானால், சத்தியமாக நான் எப்படி எழுதுகிறேன் என்பதைப் பற்றிய ஒரு தெளிவும் எனக்கில்லை. எண்ணங்களே இல்லாமல் இருக்கும்போது, எங்கள் வீட்டு நிதித்தேவையை ஒற்றையாளாகச் சமாளித்துவரும் எனது மனைவி இப்படிச் சொல்வார்: “சிந்திப்பதை நிறுத்திவிட்டு எழுதத் தொடங்குங்கள்!” அதனால், எனது பேனாவை எடுத்து சில வரிகளைக் கிறுக்கிக்கொண்டிருப்பேன். எனது மனம் இன்னும் காலியாக இருக்கிறது - ஆனால், இப்போது எனது சட்டைப்பை நிரம்பிக்கிடக்கிறது. தனது சொந்த பாக்கெட்டில் கைவிட்டு, அதில் இருப்பவற்றை உங்களிடம் கொடுக்கும் ஒருவன் நான். என்னைப் போன்ற ஒரு முட்டாளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

(மெய்ன் அஃப்சானா க்யூ கர் லிக்தா ஹூ Main Afsana Kyon Kar Likhta Hoon என்னும் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

- கார்த்தி, ம.குணவதி