மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - தொட்டி - 16

தெய்வ மனிஷிகள் - தொட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வ மனிஷிகள் - தொட்டி

சம்பவத்துக்குச் சாட்சியா தொட்டி கூடவே கருப்புசாமியும் உக்காந்திருக்காரு!

ந்த மக்க இருக்காகளே, அவ்வளவு கட்டுப்பாடான ஆளுக. ஆம்புளை, பொம்புளை வித்தியாசமில்லாம எல்லாப் பேரும் சண்டை படிச்சவுக. வில்லு, வாளு, கத்தி, கோடாரி, பந்தம், ஈட்டின்னு எல்லா ஆயுதங்களையும் கத்து வெச்சிருந்தாக. புள்ளைகளுக்கு வெவரம் தெரிஞ்சவுடனே சண்டைப் பட்டறைக்கு அனுப்பி வெச்சிருவாக.

அந்த சனங்களுக்கு பிழைப்பே வேட்டையாடுறதுதான். கண்ணி சுத்தி முசல் புடிக்கிறதுலருந்து, வில்லடிச்சு வேங்கையை சாய்க்குறது வரைக்கும் எல்லா உத்தியும் தெரிஞ்சாளுக. மிருகங்களை அணைக்கட்டி வளைச்சுக்கொண்டு வர்றது, முசல்களை விரட்டிப் பிடிக்கிறதுன்னு நாய்க்கூட்டத்துக்கும் பயிற்சி குடுத்து வெச்சிருக்காக.

ஆம்பிளைகளுக்குச் சரிக்குச்சமமா பொம்பளைகளும் வேட்டைக்குப் போவாக.

ஆனா, பொம்பளைக எங்கே போனாலும் ஆறு மணிக்கு முன்னால வீட்டுக்குத் திரும்பிறணும். இது காலங்காலமா கடைப்பிடிக்கப்படுற ஒரு பழக்கம்.

தெய்வ மனிஷிகள் - தொட்டி
தெய்வ மனிஷிகள் - தொட்டி

அந்த சனங்களின் தலைவர் பேரு செங்காளை. அவுரு பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. பெரிய வீரன். வேழத்துக்கிட்டே தனியா மல்லுக்கு நின்னு செயிச்சு கொம்பை ஒடிச்சுக் கொண்டாந்தவரு.

செங்காளையோட ஒரே மவ, தொட்டி.  தேவதை மாதிரியிருப்பா. தொட்டியப் பெத்துப்போட்ட கையோட அம்மை வாத்துச் செத்துப்போனா அம்மா. ‘அம்மா இல்லாத பிள்ளையாச்சே’ன்னு அன்பைக் கொட்டிக் கொட்டி வளத்தாரு செங்காளை. சின்ன வயசுலயே யுத்தம் பழகினவ. வேட்டைக்கு இறங்கிட்டா வேங்கை மாதிரி பாய்வா. அப்பா மேல உசுரயே வெச்சிருந்தா புள்ள.

அன்னிக்கு நெறஞ்ச அமாவாசை. உக்கடத் தீ மூட்டி எல்லாப் பேரும்  உக்காந்து ஆட்டம்பாட்டம்னு கொண்டாடுனாக. எல்லாரையும் அமைதிப்படுத்திட்டு, “நீர்க்க மழை பேஞ்சு குளம் குட்டையெல்லாம் நெறஞ்சு கிடக்கு...  பச்சை பூத்து வனமே மங்கலகரமா மாறியிருக்கு. விலங்குகள்லாம் ஆங்காங்கே கண்ணுக்குத் தட்டுப்படுது. விடியக்காத்தால தினை மாவைக் கட்டிக்கிட்டு, எல்லாரும் தயாராயிருங்க”னு சொன்னாரு செங்காளை.

தொட்டிக்கு வேட்டைக்குப் போறதுன்னாவே கொண்டாட்டம்தான். வீட்டுக்குள்ள போயி, வில்லு, அம்பையெல்லாம் தூசு தட்டி எடுத்து வெச்சா. குதிரைக்குக் கூடுதலா கொஞ்சம் தீவனம் காட்டுனா.

விடிஞ்சிருச்சு... எல்லாரும் குதிரைகளைக் கிளப்பி தயாரா நின்னாக. தொட்டி வெள்ளைக்குதிரையில ராஜகம்பீரமா உக்காந்திருந்தா. செங்காளை கண்ணை மூடி கொஞ்சம் நேரம் அசையாம நின்னாரு.  மெதுவா கண்ணைத் தெறந்து, “செங்காத்து கிழக்காப்புல இருந்து வீசுது... போத்துக்குருவியும் அந்தப் பக்கம் கத்துது. நல்ல சகுனம் கெளம்பலாம்”னு சொல்லிட்டுக் குதிரையைக் கிளப்புனாரு.

நடு வனாந்திரத்துல பிரிஞ்சு போயி வேட்டையாடுனாக. காடே கலகலத்துப் போச்சு. குதிரை குளம்பு சத்தத்தைக்கேட்டு  மிருகங்கள்லாம் ஓலம் போட்டுக்கிட்டு ஓடி ஒளியுதுக. செங்காளையோட குழுவுல இருந்தா தொட்டி. வேங்கை, வேழம்னு பெரிய பெரிய விலங்குகளைத் தேடி வேட்டையாடுனாரு செங்காளை.

பொழுது மெள்ள மெள்ளக் கவியுது.

குதிரையெல்லாம் களைச்சு வாணி உதுக்குது. ஒவ்வொரு குழுவா ஒரு பொதுவிடத்துல வந்து குவியுறாக. அடிச்ச மிருகங்கள்லாம் மலை மாதிரி குவிஞ்சு கெடக்கு. செங்காளையும் அவரு கூட போனவுகளும் வந்துட்டாக. ஆனா, தொட்டிய மட்டும் காணல. செங்காளைக்கு அதிர்ச்சியாப் போச்சு. ‘கூடவே நின்னுச்சே புள்ள... எப்படித் தவறிப்போனா’னு குழம்பி, ஆளுகளை நாலு பக்கமும் அனுப்பித் தேடச் சொன்னாரு.

மெள்ள மெள்ள பொழுது சாயுது. தேடிப்போன ஆளுங்கெல்லாம் சேதியில்லாமத் திரும்பி வாராக. கூட வந்தப் பொம்பளைங்கெல்லாம் கண்ணு கலங்கி நிக்குறாக. செங்காளையும் கலங்கிப்போனாரு... “சரி... இருட்டாகுது...  நடக்குறது நடக்கட்டும்... இதுக்கு மேல வனத்துக்குள்ள இருக்க வேணாம்”னு சொல்லி எல்லாரையும் அழைச்சுக்கிட்டு ஊருக்கு வந்துட்டாரு.

காட்டுக்குள்ள ஒரு கடமானைத் துரத்திக்கிட்டுப்போன தொட்டி வழிதவறிப்போனா. எல்லாப் பக்கமும் ஒரே மாதிரியிருக்கு. புதுசா பேஞ்ச மழை காட்டை ஒரேமாதிரி மாத்திப்போட்டு வெச்சிருக்கு. வந்த வழியும் தெரியலே, போற வழியும் தெரியலே.

நல்லா இருட்டிருச்சு. குதிரையைப் போன போக்குல விரட்டுறா தொட்டி. நாசிக்கெட்டுன தூரம் வரைக்கும் மனுஷ வாடையே இல்லை. தன் சாதி சனத்தை நினைச்சா உள்ளுக்குள்ள பகீர்னு இருக்கு. இருட்டு கவியுறதுக்குள்ள போகலேன்னா வீட்டுக்குள்ள சேக்க மாட்டாகளேன்னு பயம். அவளையறியாம கண்ணு கலங்கி தண்ணி வடியுது.  ஓடுன குதிரை களைச்சு தட்டுத்தடுமாறி நிக்கிது. பசி, பயம், கவலைன்னு தொட்டிக்கும் உடம்பு சோர்ந்து போச்சு. மயங்கி விழுந்துட்டா.

தெய்வ மனிஷிகள் - தொட்டி
தெய்வ மனிஷிகள் - தொட்டி

மழைத்தண்ணி முகத்துல விழுந்து விழிப்பு வந்தப்போ நல்லா விடிஞ்சிருந்துச்சு. குதிரை ஒருபக்கம் மேஞ்சுக்கிட்டு கெடக்கு. மெதுவா எழுந்தா... குதிரையை இழுத்துக்கிட்டு, காட்டுப்பழங்களைப் பறிச்சுத் தின்னுக்கிட்டு கால்போன போக்குல நடந்தா. தூரத்துல கோடு கிழிச்ச மாதிரி புகை கிளம்புது. ஆஹா... மனுஷாளு இருக்காக.

ராஜ கம்பீர உடையோடவும், களைச்சுப் போன முகத்தோடவும் வந்து நிக்கிற பொண்ணைப் பார்த்து அந்த மக்களுக்குக் குழப்பமாகிப் போச்சு. ஊர்த்தலைவர் விசாரிச்சாரு. உண்மை விளங்கிருச்சு. ‘நேத்து, சில வேட்டைக்காரங்க, ‘கூடவந்த பொண்ணைக் காணோம்’னு தேடி வந்தாக. அது நீதானாம்மா’னு கேட்டு, ஆகாரம் கொடுத்து உக்காரவெச்சு உபசரிச்சாக. ஒருவழியா செங்காளைக்கு தகவல் போச்சு.

வேகவேகமா செங்காளையும் சனங்களும் வந்து சேந்தாக. ஊர்க்காரங்க, தொட்டிய அவுகக்கிட்ட ஒப்படைச்சாக. செங்காளைக்கு, உசுருக்கு உசுரா வளர்த்த ஒத்தை மக கிடைச்சுட்டாளேன்னு ஒருபக்கம் சந்தோஷம். ஒரு முழு ராத்திரி வீட்டுக்கு வராம வெளித்தங்குனவளை எப்படி சேக்குறதுன்னு குழப்பம்.  ஒருவழியா அந்த ஊர் மக்களுக்கு நன்றி சொல்லிட்டு தொட்டியக்  கூட்டிக்கிட்டு கிளம்புனாக எல்லாரும்.

யாரும் ஒரு வார்த்தை பேசலே. ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாக்கலே. தங்களோட ஊரெல்லையில இருக்கிற கருப்பசாமி முன்னால தொட்டிய நிறுத்துனாக. பெரியாளுகல்லாம் தனியாப் போயி கூடிப் பேசுனாக. கொசகொசன்னு பேச்சுச்சத்தம் மட்டும் தொட்டி காதுல விழுகுது. அடுத்து என்ன  நடக்கப்போகுதுன்னு தெரியலே.

செங்காளை முன்னால வந்தாரு. “மகளே... தொட்டி... நீ எம் மவளா இருந்தாலும் எல்லாருக்கும் நீதி ஒண்ணுதான். நம்ம குல வழக்கப்படி ராத்திரி வெளித்தங்குன பொம்பளைகளை ஊருக்குள்ள சேக்குறதில்லை. அப்படி சேக்குறது நம்ம சாமிக்கு ஆகாது. இனிமே உனக்கு இங்கே உறவுன்னு யாருமில்லை. இந்த ஊரும் உனக்குச் சொந்தமில்லை. எல்லாம் அந்துபோச்சு. இனிமே இந்த எல்லையைக் கடந்து ஊருக்குள்ள வரக் கூடாது”னு கையெடுத்துக் கும்புட்டாரு. கண்ணுல தண்ணி வழியுது. நாலு பெரியாளுக வந்து அவரைக் கைத்தாங்கலா  கூட்டிக்கிட்டுப் போனாக. கடைசி வரைக்கும் திரும்பியே பாக்கலே அந்த மனுஷன்.

தொட்டி கலங்கிபோனா. ‘நான் என்ன தவறு பண்ணினேன்? வனத்துக்குள்ள பாதை தவறிப்போனது என் தப்பா? எனக்கு ஏன் இந்தத் தண்டனை? இந்த ஊரைப் பாக்காம, உறவைப் பாக்காம எப்படி வாழுவேன்? உசுருக்கு உசுரான அப்பனைப் பாக்காம எப்படி இருப்பேன்?’ 

கருப்பசாமி பக்கம் திரும்பி கதறி அழுதா தொட்டி. அவளை தேத்த, தலைகோதி ஆறுதல் சொல்ல ஒருத்தரும் வரலே. அந்தக் கருப்பனும் கல்லாட்டம் உக்காந்து வேடிக்கைதான் பாத்தான். கத்தி கத்தி தொண்டைத்தண்ணி வத்திப்போச்சு. ‘கருப்பா... இனி ஏன் நான் உசுரோட இருக்கணும்’னு கேட்டுக்கிட்டே முன்னால ஊன்றியிருந்த சூலாயுதத்தைப் புடுங்கி வயித்துல சொருகிகிட்டா தொட்டி. கருப்பன் கோயிலே ரத்தத்தால செவந்துபோச்சு. நாலைஞ்சு துடிப்போட அடங்கிப்போனா மனுஷி.

அவளைக் காப்பாத்தி அப்பங்காரன் கிட்ட சேத்த ஆளுங்கல்லாம் செய்தி தெரிஞ்சு ஓடி வந்தாக. தேவதை மாதிரிப் பொண்ணு சூலத்துல பாஞ்சு ரத்த வெள்ளத்துல கிடக்குறதைப் பாத்து கதறி அழுதாக. ‘இவ சாதாரணப் பொண்ணுல்லே... கன்னி தெய்வம்’னு சொல்லி அவளைச் சாமியா கும்புட ஆரம்பிச்சாக.

கரூர்ல இருந்து திண்டுக்கல் போற சாலையில மணவாடின்னு ஓர் ஊரிருக்கு. அங்கேதான் இருக்கா, தொட்டி.  சம்பவத்துக்குச் சாட்சியா தொட்டி கூடவே கருப்புசாமியும் உக்காந்திருக்காரு!

- வெ.நீலகண்டன் 

ஓவியங்கள் : ஸ்யாம்