
ஓவியங்கள்: ம.செ.,
தட்டியங்காட்டில் ஆறாம்நாள் போர் தொடங்கவிருந்தது. இருபக்கமும் படைகள் அணிவகுத்தன. வழக்கம்போல் திசைவேழர் பரண்மீது ஏறினார். நேற்றைப்போல இன்று இருக்காது; தாக்குதல் முழு அளவில் இருக்கும் என்று நினைத்தபடி நாழிகைக்கோலின் நிழலை உற்றுநோக்கிக்கொண்டிருந்தார். இருபக்கப்படைப் பிரிவுகளும் ஒன்றினை ஒன்று எதிர்நோக்கியபடி இருந்தன.

போர் தொடங்கும் நேரம் நெருங்கிய பின்னும் உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் கூடாரத்தை விட்டு வெளிவரவில்லை. ஈங்கையன் தங்களுக்கு வழங்கிய வாக்குப்படி நடந்துகொண்டானா என்பது தெரியவில்லை. ஆனால், பறம்புப்படை முழுமையாகத் தட்டியங்காட்டில் வந்து அணிவகுத்து நிற்கிறது. அப்படியென்றால் பாரி கொல்லப்படவில்லையா; என்னதான் நடந்தது என்பதை அறிய இருவரும் தவித்தனர்.
இன்னொரு பக்கம் குலசேகரபாண்டியனின் கூடாரத்தில் பொதியவெற்பன் இருந்தான். நேற்றிரவு இரலிமேடு நோக்கிப் புறப்பட்ட பொற்சுவை இன்னும் வந்துசேரவில்லை. அழைத்துச்சென்ற காராளியும் வரவில்லை என்று ஆறு ஊர்களிலும் உள்ள உளவுக்காரர்களிடமிருந்து உறுதியான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அப்படியென்றால், அங்கு என்னதான் நடந்தது; பல்லக்குத்தூக்கிகளாக அனுப்பப்பட்ட பாண்டியநாட்டு வீரர்கள் தங்களுக்கு இட்டபணியைச் செய்தார்களா; பாரி கொல்லப்பட்டானா, இல்லையா; பறம்புப்படை வழக்கம்போல் வந்து அணிவகுத்து நிற்பதைப் பார்த்தால் பாரி கொல்லப்படவில்லை என்று தெரிகிறது. ஒருவேளை பாரி தாக்குதலுக்கு உள்ளாகி அவனுக்குச் சிகிச்சையளிக்கின்றனரா; பொற்சுவை என்ன ஆனாள் என்ற விடைதெரியாத கேள்விகளுக்குமுன் நிலைகொள்ளமுடியாத பதற்றத்தில் நின்றுகொண்டிருந்தார் பேரரசர் குலசேகரபாண்டியன்.
போர் தொடங்கும் நேரம் நெருங்கியதால் செங்கனச்wசோழன், “நாம் முதலில் போர்க்களம் புகுவோம்; இல்லையென்றால் பாண்டியனுக்கு நம்மீது ஐயம் உருவாகும். ஈங்கையனின் தாக்குதல் என்னதான் ஆனதென்று அங்கிருந்தபடியே தெரிந்துகொள்ள முயல்வோம்” என்று உதியஞ்சேரலிடம் சொன்னான். அவனது கூற்றினை உதியஞ்சேரலும் ஏற்றான். இருவரும் கவசம்பூண்டு போர்க்களம் புறப்பட்டனர்.
பாண்டியனுக்கும் இதே நிலைதான். நாம் போர்க்களத்தில் இல்லையென்றால் சேரனுக்கும் சோழனுக்கும் நம்மீது ஐயம் வரும். எனவே வழக்கம்போல் நாம் போர்க்களம் செல்வோம். பாரியின் மீதான நம் வீரர்களின் தாக்குதல் பற்றி அங்கிருந்தபடியே அறிந்துகொள்ள முயல்வோம்” என்று சொல்லி, பொதியவெற்பனுடன் போர்க்களம் புறப்பட்டார் குலசேகர பாண்டியன்.

பறம்பு வீரர்கள் வழக்கம்போல் முழு ஆற்றலோடு களத்தில் நின்றனர். ஆனால், பறம்புத் தளபதிகள் எல்லோரும் பெருங்கலக்கத்தில் இருந்தனர். நேற்றிரவு நடந்த நிகழ்வு அவர்கள் அத்தனை பேரையும் உலுக்கியிருந்தது. பாட்டாப்பிறையில் அனைவரும் இருக்கும்பொழுதே பாரியைக் கொல்ல நடந்த முயற்சி அவர்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சுகமதியின் கதறலும் கபிலரின் கண்ணீரும் யாரையும் இயங்கவிடவில்லை. எல்லோரும் நிலைகுலைந்து நின்றனர். பாண்டிய வீரர்கள் எறிந்த ஈட்டிகள் பொற்சுவையையும் வீழ்த்தின. கபிலர் ஓடிப்போய் அவளைத் தூக்கும் முன்பே உயிர்பிரிந்தது. அதன் பின்புதான் பல்லக்கிலிருந்து சுகமதி வெளியில் வந்தாள்.
பொற்சுவையின் நிலைகண்டு கதறிக்கொண்டு ஓடினாள். குருதியில் மூழ்கிக்கிடந்த பொற்சுவையின் கால்களைத் தனது மடியில் எடுத்துவைத்துக்கொண்டு காடதிரக் கதறினாள். அவள் சொல்லி அழுத சொற்களை நினைக்க நினைக்க முடியனின் கண்களில் நீர்பொங்கியபடி இருந்தது.
பறம்புப்படையின் முன்பகுதியை வழக்கம்போல் அவன் குதிரையில் சுற்றிவந்தான். எதிரிகளும் தங்களின் படைகளை அணிவகுத்து நிறுத்தியிருந்தனர். தேர்ப்படையில் கருங்கைவாணன் நின்றுகொண்டிருந்தான். படையின் நடுப்பகுதியில் மையூர்கிழார் நின்றுகொண்டிருந்தார். குதிரையில் சென்றுகொண்டே எல்லாவற்றையும் பார்த்தபடி படையைக் கடந்தான் முடியன். அவனால் சிந்தனையை ஒருமுகப்படுத்த முடியவில்லை.

எப்பொழுதும்போல் படையின் இறுதிப்பகுதியில் நின்றுகொண்டிருந்தான் தேக்கன். நேற்றிரவு அவன் நாகக்கரட்டில் கூடாரத்தில் தங்கியிருந்தான். நடந்த தாக்குதலைக் கேள்விப்பட்டு அவசர அவசரமாக அங்கு ஓடினான். பாட்டாப்பிறைக்குத் தேக்கன் வந்து நின்றதும் அவன் கால்களைப்பற்றிக் கதறினார் கபிலர். பெரும்புலவரின் கண்ணீர்பட்ட கணத்தில் தேக்கனின் உடலே நடுங்கியது.
குருதிபொங்கும் பொற்சுவையின் உடலை மடியில் கிடத்தியிருந்த கபிலர், எதிரில் சாய்ந்துகிடந்த ஈங்கையனையும் பார்த்துக் கதறிக்கதறி அழுதார். எல்லாக் கொலைகளுக்கும் தானே காரணம் ஆகிவிட்டதாக நினைத்தார். அத்தாக்குதலை யாராலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
ஈங்கையன்மீதான இரக்கமும் தங்களின் கண்முன்னால் ஒரு பெண் கொலைசெய்யப்பட்டுவிட்டாள் என்ற பதற்றமும் அனைவரையும் நிலைகுலையச் செய்தன. நள்ளிரவுக்குப்பின் சுகமதி பேசத் தொடங்கினாள். பொற்சுவையின் உடலில் கசிந்துகொண்டிருக்கும் குருதி பாரியின் உயிர்காக்கச் சிந்தப்பட்டது என்பதை அறிந்தபொழுது பறம்பே உறைந்துபோனது.
திசைவேழர் தன் கைகளை உயர்த்தியவுடன் போர்முரசங்கள் முழங்கின. தட்டியங்காட்டுப்போரின் ஆறாம்நாள் தொடங்கியது. படைகளின் தாக்குதல் தொடக்கத்திலேயே வீறுகொண்டு இருப்பதுபோல் அவருக்குத் தெரிந்தது. பறம்புப்படை வழக்கம்போல் அணிவகுத்திருந்தது. இரவாதன் இரவு முழுவதும் குளவன்திட்டின் அடிவாரத்தில் தனது படையைப் பயிற்றுவித்தான். அவனுடன் சேர்ந்து மூஞ்சலைத் தாக்கி நீலனை மீட்பதற்கான திட்டத்தின் தளபதிகளான கரிணியும் பிடறிமானும் இடமும் வலமுமாக வந்து நின்றனர். குளவன் திட்டிலிருந்து நேராகத் தட்டியங்காட்டுக்கு வந்துசேரத்தான் பொழுது சரியாக இருந்தது. நேற்றிரவு நடந்தது எதுவும் இரவாதனுக்குத் தெரியாது. வழக்கம்போல் பீறிடும் ஆற்றலோடு களம்வந்து நின்றான் இரவாதன்.
போரின் முதல் நாழிகையிலேயே ஆயுதங்களின் சீற்றம் அதிகமிருந்தது. குறிப்பாக வேந்தர்படையின் தாக்குதல் மிகுவலிமையோடு இருந்தது. பறம்பின் விற்படை எதைநோக்கித் திரும்பி நகர்வது என்பதை இன்னும் முடிவுசெய்யாமல் இருந்தது. எப்பொழுதும் உதிரன் போர்தொடங்கிய கணத்திலேயே அதனை முடிவுசெய்வான். ஆனால் இன்று அவன் முடிவேதுமின்றிக் களத்தில் நின்றான். நேற்றிரவு பாட்டாப்பிறையில் தாக்குதல் நடத்தபொழுது அவனது கையருகேதான் ஈங்கையன் இருந்தான். அவன்மீது ஈட்டிகள் பாய்ந்தபொழுது துடித்துப்போனான் உதிரன். தாக்குதல் நடத்திய பாண்டியனின் பல்லக்குத் தூக்கிகளை கணநேரத்தில் பறம்புவீரர்கள் வெட்டிவீசினர். ஆனாலும் ஈங்கையனை இழந்ததால் வந்த ஆவேசம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
சுகமதி பேசத் தொடங்கிய பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. வேட்டுவன் பாறைக்கு அருகில் சிகிச்சை எடுத்துவந்த ஈங்கையனையும் அவன் தோழர்களையும் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று தெரிவித்தது நீலனும் உதிரனும்தான். அவர்களைப்பற்றி இன்னும் நன்கு விசாரித்து அறியாமல் தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனாலும் துரோகம் கழுத்துவரை வந்து நின்றதை யாராலும் எளிதில் கடக்க முடியவில்லை. தேக்கன், முடியன், உதிரன், விண்டன் என எல்லோரும் தட்டியங்காட்டில் நிலைகுலைந்து நின்றுகொண்டிருந்தனர்.
வேந்தர்களின் தரப்பில் குலசேகரபாண்டியன், செங்கனச்சோழன், உதியஞ்சேரல், பொதியவெற்பன் ஆகிய நால்வரும் விடை அறிய முடியாத கேள்விகளோடு நின்றுகொண்டிருந்தனர். அவர்களால் போர்க்களத்தில் கவனங்கொள்ள முடியவில்லை. தாம் பெரிதும் நம்பிய திட்டத்தால் ஏற்பட்ட பயனென்ன என்பதை எவ்வகையிலும் உறுதிப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், அவர்கள் தளபதிகளான உறுமன்கொடி, துடும்பன், வெறுகாளன், மாகனகன், கருங்கைவாணன், மையூர்கிழார் ஆகிய யாருக்கும் எவ்விதக் குழப்பமும் பதற்றமும் இல்லை. நேற்றிரவு நடந்த எதுவும் அவர்களுக்குத் தெரியாது. எனவே, அவர்கள் போர்க்களத்துக்குரிய செயல்திட்டங்களோடு நின்றனர்.
தாக்குதலின் தன்மையை வழக்கம்போல் குளவந்திட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் பாரி. நேற்றிரவு கண்களுக்கு முன் பீறிட்ட குருதியெல்லாம் தன்பொருட்டே பீறிட்டது. கபிலரின் மடிமீது சாய்ந்துகிடந்த பொற்சுவையை நெடுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். இன்னொரு புறம் ஈங்கையனின் உடல் கிடந்தது. சுகமதி சொல்லக்கேட்ட பின் அவனது உடலை யாரும் மடிமீது தூக்கி வைத்துக்கொள்ளவில்லை.
கொல்லப்பட்ட இருவருக்குமாகக் கலங்கிய உள்ளம் சிறிதுநேரத்திலேயே ஒருவருக்கு எதிராக மாறியது. பெருகிய குருதி துரோகத்தால் காய்ந்தும் தியாகத்தால் ஒளிர்ந்தும் வெளிப்பட்டது.
ஈங்கையன் தன் குலங்காக்கத்தானே இக்கொடிய செயலுக்கு ஒத்துக் கொண்டுள்ளான். தலைமுறை தலை முறையாகப் போராடியும் சோழப்பேரரசை வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் தன் குலங்காக்க அவன் செய்த கடைசி முயற்சியாக இது இருந்துள்ளது. ஏதோ ஒருவகையில் அவனது குருதியிலும் தியாகத்தின் சிற்றொளி அடங்கியிருந்தது. மீதமிருக்கும் கரும்பாக்குடி வீரர்கள் அனைவரும் இரவோடு இரவாகப் பறம்பு வீரர்களால் சூழப்பட்டனர். ஒரு சிலருக்கு மட்டுமே இத்திட்டம் தெரிந்திருந்தது. மற்றவர்களுக்குத் தெரியவில்லை. இவர்களை என்ன செய்வது; கைது செய்து சிறையிடுவது என்ற பழக்கமே பறம்பில் இல்லை. தலைவன் செய்த தவற்றுக்காக மற்றவர்களை தண்டித்தல் தகுமா; இப்படியே அனுப்பினால் எதிரிகளோடு சேர்ந்து நமக்கு எதிராகப் போரிடவும் வாய்ப்புள்ளது என்று பறம்புத் தளபதிகள் தங்களது அறத்திற்கும் ஈங்கையனின் துரோகத்திற்கும் இடையில் முடிவெடுக்க முடியாமல் அல்லாடினர்.
பாரி குளவன்திட்டு நோக்கிப் புறப்படும்பொழுது “ஈங்கையனின் இறுதிச் சடங்கினைச் செய்ய அவர்களை அனுமதியுங்கள்” என்று தேக்கனிடம் சொல்லி விட்டுப் போனான். அவனது சொல்லிலிருந்தே இச்செயலின்பால் அவன் கொண்டுள்ள கருத்தைத் தேக்கனால் புரிந்துகொள்ள முடிந்தது.
“போர் முடியும் வரை ஆயுதங்களைத் தொடக்கூடாது. மீறி ஆயுதங்களைக் கைக்கொண்டால் அதற்குரிய விளைவிற்கு ஆளாவீர்கள்” என்று கூறி, அவர்கள் இருக்க வேண்டிய இடத்தையும் தெரிவித்தான். அவர்கள் அனைவரையும் காரமலையின் பின்புறம் அழைத்துச்செல்ல, பறம்புவீரர்கள் ஆயத்தமாயினர்
தேக்கன் தட்டியங்காட்டுக்கு வந்துசேர்ந்த சிறிதுநேரத்திலேயே போர் தொடங்கியது. வழக்கம்போல் இருபக்க அணிகளும் போரிட்டுக்கொண்டிருந்தன. அவனுடைய எண்ணங்கள் முழுக்க நேற்றிரவு நடந்த நிகழ்வுபற்றியே இருந்தது. ‘கபிலர், பொற்சுவை வருவதற்கு அனுமதிகொடுக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? குகைக்காவலின்பொழுது ஈங்கையனால் பாரியை ஒன்றும் செய்துவிட முடியாது. அது கொடிவரிசைகொண்ட குகை. பாரி எங்கு துயில்கிறான் என்பதையே கண்டறிய முடியாது. காவல் எல்லையைத் தாண்டி உள்ளே நுழைந்திருந்தால் வெளிவருதற்கான வழியையே கண்டறிய முடியாது. ஒன்றினுள் ஒன்றாகப் பின்னல் தொடர்புகளைக்கொண்ட அக்குகைக்குள் நுழைபவன் எளிதில் சிக்கிக்கொள்வான். ஈங்கையனின் நோக்கம் அனைவராலும் அறியப்பட்டிருக்கும்.
கோட்டைகளிலும் அரண்மனையிலும் நடக்கும் சதியைப்போல எந்தவொரு தாக்குதலையும் பறம்பில் எளிதில் நடத்திவிட முடியாது. ஆனால் யாராக இருந்தாலும் ஏமாறும் ஓர் இடமுண்டு. அதுதான் பறம்பு வீரர்கள் பல்லக்கின் தன்மையை அறியாமல் பாட்டாப்பிறை வரைக்கும் அதை அனுமதித்தது. அந்த வகையான பல்லக்கினை இதற்கு முன்னால் பார்த்தறியாததாலும் இரவு நேரமாக இருந்ததாலும் அதன் மேற்புறத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஈட்டிகளைக் கவனிக்காமல் விட்டனர்.

சில நாள்களாக ஈங்கையனின் தாக்குதல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதற்குக் காரணம் அவன் வகுக்கப்பட்ட படையினூடே தாக்கிமுன்னேறும் பயிற்சியற்றவன் என நினைத்தோம். ஆனால், அவன் எதிரிகளால் இயக்கப்பட்டுள்ளான் என்பதை அறியாமல் போய்விட்டோம்’ என்று எண்ணங்களை ஓடவிட்டபடி ஈட்டியை ஊன்றிப்பிடித்து நின்றுகொண்டிருந்தான் தேக்கன்.
பொழுது உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. பறம்பின் வீரர்கள் வழக்கம்போல் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தனர். தனித்த உத்திகள் வகுக்கப்படாத நிலையில் நின்றுதாக்கும் முறையை அவர்கள் கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர். வாட்படைத் தளபதியாக இருக்கும் தேக்கன் பின்வரிசையில் இருப்பதால் இளம்வீரன் அருவன் படையை வழிநடத்தினான்.
முடியனின் சிந்தனையில் வெறுமை மேவி இருந்தது. பறம்பின் உள்நிலத்துக்குள் தனது கைக்கெட்டும் தொலைவில் எதிரியின் ஈட்டிகள் பாய்ந்திருக்கின்றன என்றால் நாம் இன்னும் எச்சரிக்கையோடு இருந்திருக்க வேண்டும். தான் தவறவிட்ட இடமென்ன என்று சிந்தித்தபடி இருந்தான். வேந்தர்படையின் தாக்குதலில் ஏதோ வேறுபாடு இருப்பதை அவ்வப்பொழுது பார்க்க முடிந்தது. ஆனால், பெரிதாக எதுவும் தோன்றவில்லை.
பகற்பொழுதின் இருபதாவது நாழிகை நெருங்கிக்கொண்டிருந்தபொழுது வேந்தர்படையின் தாக்குதலில் வேகம் கூடியது. அத்தாக்குதலை எதிர்கொள்ளப் பறம்பு வீரர்களுக்கு சற்றே நேரம் தேவைப்பட்டது. வெறும் தடுப்பரண் தாக்குதல் மட்டுமே போதாது, உத்தியை மாற்ற வேண்டும் என்பதை உதிரன்தான் முதலில் உணர்ந்தான். கூவல்குடியினர் மூலம் செய்தி முடியனுக்குச் சொல்லப் பட்டது. அவன் அதை உணர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்ற சிந்தனையில் இருந்தான். ஆனால், எதிரியின் தாக்குதல் திட்டம் என்னவாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. வேந்தர்படையின் தாக்குதல் பலமடங்கு வீரியமடைந்தது.
அப்பொழுதுதான் முடியன் ஒன்றைக் கவனித்தான். காலையிலிருந்து கருங்கைவாணன் தேர்ப்படையிலேயே நின்றிருந்தான். ஏன் வேறுபக்கம் போகாமல் இங்கேயே இருக்கிறான் என்று சிந்தித்த பொழுதுதான் மையூர்கிழாரின் நினைவு வந்தது. தலைமைத்தளபதியிடம் மற்ற தளபதிகளுக்குச் செய்தியைச் சேர்க்க மூன்று போர்ப்பணியாளர்கள் இருப்பர். தனித்த ஆடையமைப்புகொண்ட அவர்கள் மூவரும் இன்று மையூர்கிழாரின் அருகில் நின்றனர். முடியன் காலையில் பார்த்த காட்சியை இப்பொழுது மீண்டும் நினைவுபடுத்திப்பார்த்தான். சற்றே அதிர்ச்சியாக இருந்தது.
‘இன்றைய போரின் தலைமைத் தளபதியாக மையூர்கிழாரா களத்தில் நிற்கிறான்?’ எண்ணிப்பார்த்தபடியே அதனை உறுதிசெய்தான். அப்படியென்றால் தாக்குதலின் உத்தி வழக்கமானதாக இருக்காது. நமது தாக்குதலை உடனடியாக வேகப்படுத்த வேண்டும் என முடிவுசெய்தான். கூவல்குடியினர் மூலம் அனைத்துத் தளபதிகளுக்கும் செய்தி அறிவிக்கப்பட்டது.
நிலைமையை உணர்ந்தவுடன் உதிரன் தனது விற்படையை வேந்தர்படையின் நடுப்பகுதியை நோக்கி முன்னகர உத்தரவிட்டான். தொலையிலக்க அம்புகள் சீற்றம் கொள்ளத்தொடங்கின.
தாக்குதலின் வேகம் இருபக்கமும் மிக வலிமையோடு இருந்தது. வேந்தர்படை பறம்பின் விற்படையை மட்டும் தற்காத்து எதிர்கொண்டது. மற்ற படைகளைத் தாக்கி முன்னேறியது. பறம்புப்படைகள் வேந்தர்படையை முழுமையாக எதிர்கொண்டன.
முடியனின் உத்தரவு இரவாதனை அடையும்பொழுது சரியாக இருபது நாழிகை முடிந்திருந்தது. நேற்றுக்கு முந்தைய இரவில் பேசப்பட்டபடி கடைசி பத்து நாழிகைக்கான போர் உத்தி தொடங்கி விட்டது எனக் கருதிய இரவாதன் தனது குதிரைப்படையின் தாக்குதலை எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தோடு முன்னெடுத்தான்.
நேற்றிரவு நடந்ததெதுவும் இரவாதனுக்குத் தெரியாது. அதே நேரம் அதற்கு முந்தைய நாளிரவு பேசப்பட்ட தாக்குதல் உத்தியை நிறைவேற்றும் நிலையில் முடியன் இல்லை. இப்பொழுது அவன் வேந்தர்படையின் தாக்குதலை எதிர்கொள்வதற்கான திட்டத்தையே வகுத்தான். முடியனின் சிந்தனை முழுவதும் மையூர்கிழாரைச் சுற்றியே இருந்தது. அவன் கருங்கை வாணனைப்போலப் பெருவீரனல்லன்; ஆனால், பறம்பைப்பற்றியும் பறம்பின் தாக்குதல்முறையைப் பற்றியும் ஓரளவு தெரிந்தவன். எனவே, அவனை மிகுந்த எச்சரிக்கையோடு கையாளவேண்டும் என எண்ணினான்.
இரவாதனின் தாக்குதல் சீறி முன்னேறியது. நேற்று இரவு முழுவதும் பயிற்சி பெற்ற அப்படையணியினர் தங்களின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினர். மூஞ்சலை அடையும் வரை யார் முன்னிலையிலிருந்து படைநடத்த வேண்டும் என்று இரவாதன் தீர்மானித்திருந்தான். அவர்கள் அதேபோல, படையை மூஞ்சலை நோக்கி அழைத்துச்சென்றுகொண்டிருந்தனர்.
மற்ற பகுதியில் வேந்தர்படையின் தாக்குல் வலிமைமிகுந்ததாக இருந்தது. பறம்புப்படை திறனோடு அதனை எதிர் கொண்டது. உதிரன் தனது விற்படையை எப்பக்கமாகக் கொண்டுசெல்ல என்று கேட்டு முடியனுக்குச் செய்தி அனுப்பினான். முடியனோ ஆபத்து எப்பக்கம் அதிகம் என்பதை இன்னும் கணிக்கவில்லை. கருங்கைவாணனின் மீதும் அவனுக்கு ஐயம் இருந்தது. மையூர்கிழாரின் மீதும் அவனுக்கு ஐயம் இருந்தது. இருவரில் யாரை நோக்கி உதிரனின் படையணியைத் திருப்புவது என்பதை முடிவுசெய்ய, சற்றே நேரம் தேவைப்பட்டது.
வழக்கம்போல் பறம்பின் விற்படையை எதிர்கொள்ள முடியாமல் வேந்தர்படைத் தளபதி துடும்பன் பின்வாங்கத் தொடங்கினான். வாட்படைத் தளபதி மாகனகனை, பறம்புத் தளபதி அருவன் எதிர்கொண்டான். தாக்குதல்கள் தீவிரமடைந்துகொண்டிருந்தன. தேர்ப்படைத்தளபதி வெறுகாளனோடு கருங்கைவாணனும் இணைந்து கொண்டான். எனவே, பறம்புத் தளபதி விண்டனால் முன்னகர முடியவில்லை. ஆனால், பின்வாங்காமல் சமாளித்துக் கொண்டிருந்தான். மையூர்கிழார் எப்பக்கம் போகப்போகிறான்; அவனது உத்தி என்னவாக இருக்கிறது என்பதை அறிவதிலேயே முடியன் கவனமாக இருந்தான்.
இந்நிலையில் இரவாதனின் தலைமையிலான குதிரைப்படை நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் மூஞ்சலை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே திட்டமிட்டபடி மூஞ்சலை ஒரே நேரத்தில் மூன்று முனைகளிலிருந்து தாக்குதல் தொடுக்க வேண்டும். முடியன் ஒருபக்கமும் விண்டன் ஒருபக்கமும் தாக்கி மூஞ்சலின் அரணை உடைக்க வேண்டும். உடைத்தவுடன் உள்ளே நுழையாமல் முன்றடுக்கு அரணை முழுமையாக அழிக்கும் பணியைச் செய்ய வேண்டும். உள்நுழைந்து தாக்கி நீலனை மீட்கும் பணி இரவாதனுடையது. அதே சிந்தனையோடு இரவாதனின் படை முன்னகர்ந்து கொண்டிருந்தது.
குளவன்திட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பாரிக்கு, களத்தில் நடக்கும் தாக்குதலில் வேறுபாடுகள் இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால், என்னவென்று பிடிபடவில்லை. கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். இரவாதன் தலைமையிலான குதிரைப்படை சீறும் அம்புபோல் எதிரிகளைக் கிழித்து உள்நுழைந்துகொண்டிருந்தது. குளவன் திட்டிலிருந்து பார்க்கும்பொழுது அதன் வேகத்தைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தது. மற்ற படைப்பிரிவுகளோடு வேந்தர்படை மிகக்கடுமையாகப் போரிட்டுக்கொண்டிருக்கும்பொழுது குதிரைப்படையை மட்டும் ஏன் அவ்வாறு எதிர்கொள்ளாமல் இருக்கின்றனர் என்ற ஐயம் உடனே தோன்றியது. களத்தை இன்னும் சற்றுநேரம் கூர்ந்துகவனித்தான் பாரி.
எதிரிகள் மாறுபட்ட உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். நம் வீரர்கள் அதைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்று தோன்றியது. இவ்வெண்ணம் உருவாகிக்கொண்டிருக்கும்போதே இரவாதனின் குதிரைப்படை பாதித் தொலைவைக் கடந்து உள்ளே போய்விட்டது. நினைத்ததைவிட வேகமாக அவன் உள்ளே போய்க்கொண்டிருந்தான். அவனைச் சிக்கவைக்க எதிரிகள் வகுத்த போர் உத்திக்குள் மிகவேகமாக உள்நுழைந்து கொண்டிருந்தான். உடனடியாகக் கூவல்குடியினருக்கு உத்தரவிட்டான் பாரி.
குளவன்திட்டிலிருந்து கூவல்குடியினரின் மறைபொருள் குறிப்பு நாகக்கரட்டிலிருக்கும் கூவல்குடியினருக்கு வந்து சேர்ந்தது. வாரிக்கையன் தலைமையில் செய்தியைச் சொல்வதற்கான வீரர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். இரவாதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி, பின்தங்கச் சொல்வதற்கான உத்தரவினைப் பாரி தெரிவித்திருந்தான். உடனடியாக அதற்கான ஓசை எழுப்பப்பட்டு, இரிக்கிச்செடியின் ஒளிரும் பால்கொண்ட குறிப்புகள் காட்டப்பட்டன.
நாகக்கரட்டிலிருந்து ஓசை எழுப்பப் பட்டவுடன் அது யாருக்கு என்பதைத்தான் முதலில் அனைத்துத் தளபதிகளும் பார்ப்பர். அது குதிரைப்படைத் தளபதிக்கான குறிப்போடு சொல்லப்படும் ஓசையாதலால் மற்றவர்கள் தாங்கள் முன்னெடுக்கும் தாக்குதலில் கவனம் செலுத்துவர். இரவாதனோ மூஞ்சலை அடையும் நோக்கோடு மின்னல் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்தான். அவனது காதில் எவ்வித ஓசையும் விழவில்லை. அவன் தனது கவனத்தை எதைநோக்கியும் திருப்ப ஆயத்தமாக இல்லை. மூஞ்சலின் அரண் உடைந்து சிதறும் கணத்தைக் காணும் நோக்கில் குதிரையை விரட்டிக்கொண்டிருந்தான்.
நாகக்கரட்டிலிருந்து மீண்டும் மீண்டும் ஓசை எழுப்பப்படுவதை சிறிதுநேரங் கழித்தே முடியனால் உணரமுடிந்தது. அது இரவாதனுக்கானது, அவன் எதிரிப் படைக்குள் அதிக தொலைவு உள்ளே போயுள்ளான் என்பது அதன் பிறகுதான் தெரியவந்தது. அப்பொழுதுதான் நேற்றுக்கு முந்தைய நாள் உருவாக்கப்பட்ட திட்டம் நினைவுக்கு வந்தது. நேற்று இரவு நிகழ்ந்த நிகழ்வால் அத்திட்டத்தை நிறைவேற்றுதல் குறித்து வேறுயாருடனும் முடியன் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால், இரவு முழுவதும் பயிற்சியிலிருந்த இரவாதன் காலையில் நேரடியாகக் களத்துக்கு வந்தான். ஏற்கெனவே, வகுக்கப்பட்ட திட்டப்படி இருபதாம் நாழிகை முடிந்தவுடன் அவன் முன்னேறிப்போகிறான் என்பது முடியனுக்குப் புரிந்தது.
ஆனால், இதற்குள் மையூர்கிழார் வகுத்த உத்தியும் இருக்கிறது என்பதை அவன் முதலில் கணிக்கவில்லை. மற்ற படைகளை வலிமையோடு தாக்கி முன்னேறவிடாமல் நிறுத்திவிட்டு, குதிரைப்படையை மட்டும் முழுமையாக உள்வாங்கி அழிக்கும் திட்டத்தை மையூர்கிழார் தீட்டியிருந்தான்.
நாக்கரட்டிலிருந்து மீண்டும் மீண்டும் குறிப்பொலி எழுப்பப்பட்டது. இப்பொழுது அபாயக் குறிப்பொலியாக ஒலிக்கத்தொடங்கியது. இரவாதன் மூஞ்சலை நெருங்கிவிட்டான். ஏற்கெனவே திட்டமிட்டபடி மற்ற இரு தளபதிகளும் இரு திசைகளிலிருந்தும் மூஞ்சலை நோக்கி முன்னேறுவார்கள் என்ற எண்ணத்துடனே மூஞ்சலின் அரணை நோக்கி அம்புகளைச் செலுத்தத் தொடங்கினான்.
முடியனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எதிரிகளின் தாக்குதல் மிகக்கடுமையாக இருந்தது. எப்படையையும் முன்னுக்கு நகர்த்த முடியவில்லை. வேந்தர்படையினர் முழுமையான ஆற்றலோடு தாக்கிக்கொண்டிருந்தனர். கருங்கைவாணனும் வெறுகாளனும் தேர்ப்படையின் மீது கடுந்தாக்குதலை நடத்திப் பெருஞ்சேதத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். நிலைமையை உணர்ந்து உடனடியாக முடியன் அவ்விடம் போனான். ஆனால் அவனது கவனம் முழுவதும் கூவல்குடியினரின் குறிப்பொலியின் மீதே இருந்தது. செய்தியை நேரடியாகச் சொல்ல உதிரனையோ, அருவனையோ அனுப்பலாமா என்று சிந்தித்தான். ஆனால் எல்லா முனையிலும் தாக்குதலின் வேகம் உச்சங்கொண்டிருந்தது.
சூளூர் வீரர்கள் அறுபது வகையான ஆயுதங்களைக் கையாளத் தெரிந்தவர்கள். பேரரசர்களைக் காப்பதற்கான தேர்ந்த பயிற்சிகொண்ட அகப்படையினைத் தாக்கி அழிக்க, கரிணியின் தலைமையிலான பிரிவு முழுத்திட்டமிடலோடு பாய்ந்து முன்னேறியது. பொய்க்கூடாரங்களிலிருந்து வெளிவரும் எண்ணிலடங்காத வீரர்களைக் கொன்றுகுவிப்பதற்கான திட்டத்தோடு பாய்ந்து முன்னேறினர் பிடறிமான் தலைமையிலான வீரர்கள்.
கரிணியும் பிடறிமானும் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் தாக்குதலைத் தொடுக்கின்றனரா என்று பார்ப்பது இரவாதனின் வேலையல்ல; அவனது ஒரே இலக்கு நீலன் இருக்கும் கூடாரத்தை நோக்கி எதிரிகளைக் கொன்றழித்து முன்னேறுவது மட்டும்தான்.
மூன்றுதன்மைகளில் தெளிவாக வகுக்கப்பட்ட திட்டத்தோடும் பறம்பினர் இப்போரில் இதுவரை பயன்படுத்தாத பல்வேறுவிதமான ஆயுதங்களோடும் இரவாதனின் குதிரைப்படை மூஞ்சலை நோக்கி வந்தது. பகழி அம்புகளால் மூஞ்சலின் வெளிப்புற அரண் தகர்த்தெறியப் பட்டது. சங்கிலித்தொடர்போல் அடுத்தடுத்து வந்து இடைவெளியை நிரப்பும் அவர்களின் மூன்றடுக்கு ஏற்பாடுகளை எல்லாம் இடியெனத் தாக்கி நிலைகுலையச் செய்தனர்.
யாராலும் உடைக்கவோ உள்நுழையவோ முடியாது என்று சொல்லப்பட்ட மூஞ்சலின் வெளிப்புற அரணை, குதிரையின் வேகத்தைக் குறைக்காமலேயே உடைத்து உள்நுழைந்தனர் சூளூர் வீரர்கள்.
ஒற்றை நுனியில் உடைத்து உள்நுழைந்தவர்கள் விசிறியைப்போல கணநேரத்தில் அரைவட்டமாக விரிந்தனர். வெளியிலிருக்கும் மொத்தக்குதிரைப் படையும் உள்ளே வந்து வட்டத்துக்குள் சேர்ந்தபின் அது வட்டவடிவப் படையமைப்பாகத் தன்னை மாற்றிக் கொண்டது. வட்டம் எல்லா திசைகளிலும் ஒரே நேரத்தில் விரியத்தொடங்கியது. கணக்கில்லாத அம்புகளும் ஈட்டிகளும் வெடித்து வெளிவர, வட்டம் தன்னைப் பெரிதுபடுத்தியபடியே இருந்தது.
நாகக்கரட்டிலிருந்து மீண்டும் மீண்டும் கூவலொலி எழுப்பப்பட்டு, இருக்கிச்செடியின் ஒளிரும் குறிப்புகள் காட்டப்பட்டுக்கொண்டே இருந்தன. களத்தில் நின்ற பறம்புத் தளபதிகள் அனைவரும் குறிப்பொலியைக் கவனித்தனர். இடைவிடாத குறிப்பொலி அனைவருக்கும் பதற்றத்தை உருவாக்கத் தொடங்கியது.
நாகக்கரட்டின் மேலிருந்து வாரிக்கையன் காட்சியைத் தெளிவாகப் பார்த்தான். மூஞ்சலை உடைத்து இரவாதன் உள்நுழைந்துகொண்டிருந்தான். அன்று முடியன் கவலையோடு சொன்னது நினைவுக்கு வந்தது. “இரவாதன் தாக்குதல் போரில் நிகரற்றவனாக இருக்கிறான். ஆனால், களத்தின் முழுமையைக் கவனித்து முன்னேறுவதில் குறைபாடு உடையவனாக இருக்கிறான். அது ஆபத்தை உருவாக்கிவிடும்.”
காட்சியைப் பார்த்துக் கொண்டி ருப்பதைத் தவிர வேறெதையும் வாரிக்கையனால் செய்ய முடியவில்லை. குளவன்திட்டிலிருந்தும் இதே ஒலிக்குறிப்பு மீண்டும் மீண்டும் வருகிறது. என்ன செய்வதென்று புரிபடாமல் நின்றான் வாரிக்கையன்.
உதிரன், விண்டன், அருவன், முடியன் என யாரும் தங்களின் இடம்விட்டு நகரமுடியாத நிலைக்கு உள்ளானார்கள். வேந்தர்படை முழுவலிமையோடு இறங்கிவந்து மறித்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறது. மூஞ்சல் இருப்பதோ தட்டியங்காட்டின் வடமூலையில். மொத்தப்படையையும் பிளந்துகொண்டு அந்தக் கடைசிப்பகுதிக்குப் போய் இரவாதனுக்கு உதவுவது எப்படி என யாருக்கும் புரியவில்லை.
கருங்கைவாணன், வேந்தர்படையின் தேர்ப்படைத் தளபதி வெறுகாளனோடு இணைந்து வலிமைமிகுந்த தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருக்கிறான். பறம்புத் தளபதி விண்டனால் மட்டும் அதை எதிர்கொள்ள முடியாது என்பதால் அவனுடன் முடியன் இணைந்து நிற்கிறான். அப்படியிருந்தும் தாக்குதலின் வேகம் இணையற்றதாக இருக்கிறது.
போர்ச்சூழலில் என்ன முடிவெடுப்பதென்றே தெரியாத ஒரு கணத்தை முதன்முறையாக முடியன் சந்தித்தான். உணர்ச்சியின் படபடப்பு அவனை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சட்டென ஒரு முடிவுக்கு வந்தான். இரவாதன் தன் மகன் என்ற உணர்வில் எந்தவொரு முடிவையும் எடுத்துவிடக் கூடாது. நடைபெற்றுக்கொண்டிருப்பது பெரும்போர். இதில் கணிப்புகளும் உத்திகளும் பிழைபடும் வாய்ப்புகள் உண்டு. அப்பிழையை உணரும்பொழுது சரிசெய்யும் முயற்சிக்காகப் பேரிழப்புகளைக் கண்டுவிடக் கூடாது. எண்ணங்கள் மனத்துக்குள் உறுதியாகிக்கொண்டிருக்கும் பொழுது, தேக்கன் அவ்விடம் வந்து சேர்ந்தான்.
அதே நேரத்தில், எதிரில் நின்று போரிட்டுக்கொண்டிருந்த கருங்கை வாணனை நோக்கி விரைந்து வந்தார் மையூர்கிழார். இரண்டு பக்கமும் தலைமைத்தளபதிகள் பதற்றத்தோடு இருந்தனர். முடியனைப் பார்த்துத் தேக்கன் சொன்னான், “நாக்கரட்டிலிருந்து மீண்டும் மீண்டும் குறிப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. இரவாதனின் படை தனித்துப்போய் மாட்டிக்கொள்ளக் கூடாது. நீ உடனடியாக இவ்விடம் நீங்கி, அவனோடு போய்ச் சேர்.”
திடீரென மையூர்கிழார் வந்து நின்றதைப் பார்த்துக் கருங்கைவாணன் திகைத்துப்போனான். என்னவென்று கேட்பதற்குள் அவரே சொன்னார், “எதிரிகளின் குதிரைப்படையைப் பின்புறமாக உள்ளிழுத்து, சூழ்ந்து தாக்கி அழிப்பதற்கான உத்தியைத்தான் நாம் வகுத்தோம். ஆனால் அவர்களோ, நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மூஞ்சலையே உடைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டார்கள்.” மிரட்சியுற்றான் கருங்கைவாணன். “மூஞ்சலின் காப்பரணை உடைத்துவிட்டார்களா?”
“ஆமாம். அதனால்தான் நான் விரைந்து இங்கு வந்தேன். நீங்கள் உடனடியாக இவ்விடம் விட்டு மூஞ்சலை நோக்கிப் போகவேண்டும்.”
பதற்றத்தோடு தேக்கன் சொன்னான், “நீ இவ்விடம் விட்டு விலகிச்செல். எது செய்தாவது இரவாதனுக்குத் தீங்கு நேராமல் தடு.”
தேக்கனின் சொல்கேட்டுக் கடுஞ்சினத்தோடு பதிலுரைத்தான் முடியன், “கருங்கைவாணனும் வெறுகாளனும் இணைந்து நின்று தாக்கிக் கொண்டிருக்கின்றனர். நான் இவ்விடம் விட்டு அகன்றால் நமது தேர்ப்படையைப் பெருஞ்சேதத்துக்கு உள்ளாக்கிவிடுவார்கள். அதுமட்டுமல்ல, இங்கிருந்து எதிரிகளின் மொத்தப் படையையும் கிழித்துக் கொண்டுபோய் நான் மூஞ்சலை அடைவது இயலுகிற செயலல்ல.”
“எம்முயற்சியாவது செய். இவ்விடம் விட்டுப் போ” என்றான் தேக்கன்.
“எதிரி உன்னையும் என்னையும் குறிபார்த்துத்தான் தேர்ப்படையில் வந்து வலிமைகொண்ட தாக்குதலை நடத்துகிறான். நான் இவ்விடம் விட்டுப் போனால், உன்னையோ, விண்டனையோ இழப்பேன். அதே நேரம் மூஞ்சலையும் சென்றடைய மாட்டேன்” என்று அம்பினை நாணில் தொடுத்தபடியே கத்தினான் முடியன்.
மையூர்கிழாரின் சொல்கேட்டுப் பெருங்கோபத்துடன் கத்தினான் கருங்கைவாணன், “நான் இவ்விடம் விட்டு இப்பொழுது அகன்றால் நமது தேர்ப்படையை முற்றிலும் இழக்கநேரிடும். எதிரிப்படையின் தலைமைத்தளபதி முடியனின் தாக்குதலை ஒருபொழுதுகூட வெறுகாளனால் எதிர்கொள்ள முடியாது. குதிரைப்படையையும் யானைப் படையையும் இழந்து நிற்கும் நாம் தேர்ப்படையையும் இழக்க நேரிடும். எனவே, நான் இவ்விடம் விட்டு அகல்வது அறிவீனம்.”
“அப்படியென்றால் இரவாதனைக் காப்பாற்ற முடியாதா?” எனக் கத்தினான் தேக்கன்.
“அப்படியென்றால் மூஞ்சலைக் காப்பாற்ற முடியாதா?” எனக் கத்தினார் மையூர்கிழார்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன்