
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்
காட்சி ஒன்று
``ஆக்சுவலா ட்வென்ட்டி ஃபைவ் தௌசண்ட்... பெர் டேக்கு நா சார்ஜ் பண்றேன். பட், உங்களுக்காக ட்வென்ட்டி பண்ணிக்கலாம் ப்ரோ” `16 வயதினிலே’ படத்தில் வரும் டாக்டரைப்போலவே ஆங்கிலோ இண்டியன் கணக்காய்ச் சொன்னார் கஜேந்ரா. நமது இயக்குநருக்கு, அவரின் தன்னம்பிக்கை பிடித்ததாய் என்னிடம் சொன்னார். ``பேமென்ட் விஷயத்த மேனேஜர்கிட்ட பேசிக்கங்க சார். ஆனா, இந்த ரோல் நீங்கதான் பண்றீங்க” இயக்குநர் வாக்குறுதி தந்தார். மகிழ்வோடு கைகுலுக்கிய கஜேந்ரா, மேனேஜரிடம் சென்றார். அவரின் விண்ணப்பத்தை ``ஆக்சுவலா...” என்று சொல்லி முடித்தார். மேனேஜர் சிறிது நேரம் அமைதிகாத்தார். ``சார், உங்களுக்கு சிக்ஸ் டேஸ் ஷூட்... பெர் டேக்கு ஒரு எய்ட் பிஃப்டி பண்ணிக்கலாமா?” என்றதும் கஜேந்ரா விக்கித்துப்போனார். ``ஆக்சுவலா... நா...” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே மேனேஜர் ஆயிரம் ரூபாயை அட்வான்ஸ் என கஜேந்ரா முன்னால் நீட்டினார். சிலபல தேவைகள் கஜேந்ரா கண்முன்னால் நிற்க, ஆயிரத்தை வாங்கிக்கொண்டார். ``ஆக்சுவலா... நா ட்வென்ட்டி தௌசண்ட் குறைக்கிறதில்ல. பட், நல்ல டிரக்டர்னால எய்ட் பிஃப்டிக்கு ஒத்துக்கிறன். ஒரு ரெக்யூஸ்ட் என்னன்னா... கஜேந்ரா இந்த அமௌன்ட்டுக்கு ஆக்ட் பண்றார்னு சொல்லிக்க வேணாம். ஏன்னா, வெளிய ட்வென்ட்டி ஃபைவ் வாங்குறன். ஓகே... பட், ஆக்சுவலா...” என்று கஜேந்ரா தொடர்ந்தபோது, மேனேஜர் போனை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டார்.

காட்சி இரண்டு
காவேரி கார்னரில் எப்போதாவது தேநீர் இடைவேளையில் மணியேட்டனைப் பார்த்துவிடுவதுண்டு. பாலக்காட்டு மாதவன் போன்றதொரு முகம். பளபளக்கும் வேட்டியின் முனையைப் பிடித்துக்கொண்டு வந்தார்.
``எந்த சாரே... சுகந்தன்னே? ஒரு சாயா குடிக்கோ...” என்று எனக்கும் சேர்த்துச் சொல்லிவிடுவார்.
``எந்தா சேட்டா... ஏதாகிலும் விசேஷம் உண்டோ?” நானும் கேரளத்து மைந்தனாகிவிடுவேன்.
``எந்தா இப்படிக் கேட்டு... மூணு படம் புக் ஆகியல்லோ... சாருக்கு ஒரு சர்ப்ரைஸ் சொல்லட்டா...” இந்த இடத்தில் நான் ஆச்சர்யத்தோடு முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும். மணியேட்டன் முகத்தை ஜபர்தஸ்தாக வைத்துக்கொண்டு ``மூணு பிக்சரில் ஒரு பிக்சர்... தனி ஒருவன் பார்ட் டூவாக்கும். அதிலே நானே மெயின் வில்லனாக்கும். இதிலே பிரகாஷ்ராஜுக்கு ஏக வருத்தம் என்றும் கேள்விப்பட்டேன் சாரே...” என்று ஒரு மசால்வடையைப் பிட்டு வாயில் போட்டுக்கொண்டார்.
கடந்த சில வருடங்களாக `இந்தியனி’ல் வில்லனாகவும், `பாட்ஷா’வில் வில்லனாகவும் நடிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். தேநீரைக் குடித்து முடித்தோம். காசைக் கொடுக்கப் போனபோது, ``எந்த சாரே... ஞானாக்கும் நிங்களைக் கூப்பிட்டது...” என்று மசால்வடைக்கும் தேநீருக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு அருகில் வந்து ரகசியமாகச் சொன்னார், ``தனி ஒருவன் மேட்டர் வெளியே சொல்லவேண்டாம் சாரே...” என்று மணியேட்டன் சிரித்தார். ``சொல்ல மாட்டேன்’’ என்று சிகரெட் பற்றவைத்துத் திரும்பினேன்.
ஓர் உதவி இயக்குநரிடம் ``தனி ஒருவன் பார்ட் டூவில்...’’ என்று உற்சாகமாய் ஆரம்பித்தார் மணியேட்டன்.
இப்படியான காட்சிகளை கோடம்பாக்கத்தில் எங்கும் பார்க்கலாம். தன் கனவுகளுக்குத் தானே ஒப்பனை செய்து... ஒப்பனை செய்து நிஜங்களைத் தவறவிட்ட `துணை நடிகர்கள்’ எனும் பெயரில் வலம் வந்துகொண்டிருக்கும் ஜீவன்கள். வெளிவராத சில திரைப்படங்களின் எழுத்தாளன், உதவி இயக்குநர் என்ற முறையில் இவர்களின் வாழ்வை அருகில் இருந்து தரிசித்தவன்.
ஊரே பட்டாசு வெடித்துக்கொண்டிருக்க, சொந்த ஊருக்குக்கூடப் போக முடியாமல் மொட்டைமாடியில் தகித்துக் கொண்டிருக்கும் அறையில் வெற்றிக்காக தவத்தை மேற்கொள்பவர்கள்.
``உத்துப் பாத்தன் மாப்ள... மங்கலா அஜித் பின்னாடி நீர்தான நிக்கீரு... உமக்கு எதுக்குயா இந்த வேண்டாத வேல? பேசாம ஊருக்குக் கெளம்பி வாரும்...” என்ற அறிவுரையைக் கேட்டுக் கேட்டுப் பழகிய நம்பிக்கையாளர்கள்.
கஜேந்ரா, மணியேட்டனுக்கெல்லாம் மூத்த துணை நடிகர். இவர்களின் ஏஜென்ட் வைரத்தை, ஏதாவது ஒரு ஸ்டுடியோவில் நீங்கள் பார்த்திருக்கலாம். அறுபதை நெருங்குபவர். கழுத்துக்குக் கீழே அத்தனையும் வயிறுதான் என்றிருப்பவர். ஒரு பலூனை ஊதி, முடி போட்டுவைத்தால் ஓர் உருவம் வருமல்லவா, அப்படித்தான் வைரத்தின் மேனி ஜொலித்துக்கொண்டி ருக்கும். நடக்கும்போது வயிறு குலுங்கி, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஒரு சேவலின் ராக்கால கொக்கரக்கோபோல வைரத்தின் குரல் அடித்தொண்டையிலிருந்து பெண்மை கலந்து மெல்லிதாக வரும். ஆனால், வருகிற வார்த்தைகளெல்லாம் வல்லினம் என்பது வேறுவிஷயம்.

``எல்லா அசிஸ்டென்ட் டைரக்டருக்கும்... வணக்கத்த சொல்லிக்கிறேன்... பத்து நாள் அவுட்டோர் ஷூட்டிங்குன்னு டைரக்டர் சார் சொன்னார். ரொம்ப சந்தோஷம்... அம்பது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கேட்டாங்க. பத்திரமா பாத்துக்கோங்க சார்...” என்று பவ்வியமாக வணக்கம் வைத்து விடைபெறுவார்.
இப்படித்தான் ஒரு படப்பிடிப்பில் காட்சிப்படி வில்லனின் சூழ்ச்சியால், கதாநாயகனை இன்ஸ்பெக்டர் கைதுசெய்ய வேண்டும். வைரம்தான் ஏஜென்ட். நான் உதவி இயக்குநர், அந்த வெளிவராத படத்தில். போலீஸ் கான்ஸ்டபிள் காஸ்டியூமை ஒருவர் போட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். போன படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்துவிட்டதால் இந்தப் படத்தில் கான்ஸ்டபிளாக வந்தால் மரியாதை குறைந்துவிடும் என்று சீரியஸாக மல்லுக்கட்டுகிறார். அவரைப் பார்க்கையில் ஆச்சர்யமாக இருந்தது. அவர் உலகத்தில் இன்ஸ்பெக்டராகவே அவர் மாறியிருக்கிறார். வைரம், வயிற்றைத் தள்ளிக்கொண்டு சம்பவ இடத்துக்கு வந்தார்.
``ஏண்டா மூதேவி... அசிஸ்டென்ட் டைரக்டர் சார்கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாது?” என்னிடம் திரும்பி ``சார், இவன் இன்ஸ்பெக்டரா வர்ற படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுது. ஊர்ல இன்ஸ்பெக்டரா பண்ணிட்டன்னு பில்டப் பண்ணிட்டான் மூதேவி. இப்ப கான்ஸ்டபிள்னா எவனா பொண்ணு தராமப்போயிட்டா... அதான் பயப்படுறான்” என்று கதாபாத்தி ரங்களாகவே மாறிப் பேசிக்கொண்டி ருந்தார்கள். பிறகு, கான்ஸ்டபிள் உடனே பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டரானார். இன்ஸ்பெக்டர் சரசரவென டெபாசிட் இழந்து கான்ஸ்டபிளாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
என்னைத் தனியாகக் கூப்பிட்டார் வைரம். ``அசிஸ்டென்ட் டைரக்டர் சார்... இது உங்களுக்கு மொத படம்னு நினைக்கிறன், கரெக்டா?” என்று கேட்டார். நானும் `ஆமாம்’ எனத் தலையசைத்தேன். ``கான்ஸ்டபிள்னா 300 ரூபாதான் பேமென்ட் கொடுப்பானுங்க. இன்ஸ்பெக்டர்னா 450 ரூபா கொடுப்பானுங்க. பாவம் அந்த மூதேவிக்குக் கொழந்த பொறக்கப்போவுது... கூட 150 ரூபா கெடச்சா சந்தோஷம்தான அசிஸ்டென்ட் டைரக்டர் சார்” என்றுவிட்டு, திரும்பி ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டைப் பார்த்து, ``ஏய் மூதேவி... நைட்டுலாம் முழிச்சிட்டு இருக்கிறது. பகல்ல ஷூட்டிங்ல வந்து தூங்கறது. டைரக்டர் சார் கூப்பிடுறாரு பாரு... எந்திருச்சி போடி மூதேவி” என்று கத்தினார். அந்தப் பெண் சாவதானமாய் எழுந்து ``ஏமி பாவா... லன்ச்சுல சிக்கன் பீஸே லேது... இத கேக்கல... திட்ட வந்துரு...” என்று நிறைமாத கர்ப்பிணிக் கூட்டத்தோடு நின்றாள்.
இன்ஸ்பெக்டர் கதாநாயகனைக் கைதுசெய்யும்போது, கூட்டத்தில் நின்று, மகாத்மாவைக் கைதுசெய்வதைப்போல அழுதுகொண்டிருந்தாள் அந்தப் பெண். இயக்குநர் பேக்கப் சொன்னதும் வைரத்தை மொய்த்தபடி துணை நடிகர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சினிமாவில் என்னையும் `சார்’ போட்டு அழைத்த மனிதர் என்பதால், ``அண்ணே போயிட்டு வரண்ணே...” என்றேன். ``நாளைக்குப் பார்ப்போம் அசிஸ்டென்ட் டைரக்டர் சார்...” என்றார். இன்ஸ்பெக்டராக நடித்த நபர் 450-ஐப் பெற்றுக்கொண்டு உற்சாகமாக நடந்தார்.
மறுநாள் படப்பிடிப்பு ரத்தானதால் அலுவலகத்தில் இருக்கும் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இயக்குநர் அழைத்தார். 2,000 ரூபாயைக் கொடுத்து வைரத்திடம் கொடுக்குமாறு சொன்னார். யூனியனுக்குப் போனேன். மொட்டைமாடியில் இருப்பதாக ஒரு நடிகர் சொன்னார். அவரைப் பல படங்களில் நடந்தும், ஓடியும், நின்றும் பார்த்திருக்கிறேன். மாடியில் ஏறி நடந்தபோது வைரத்தின் ``ஏண்டி மூதேவி...” என்று திட்டிச் சிரிக்கும் முகம் நினைவுக்கு வந்து போனது.
மொட்டைமாடியில் வெற்றுடம்பில் கைலியோடு வைரம் போத்தலை உறிஞ்சிக்கொண்டிருந்தார். அவருடன் நேற்று இன்ஸ்பெக்டராக நடித்த நபரும் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் உற்சாகமானார். ``அசிஸ்டென்ட் டைரக்டர் சாருக்கு என்னோட வணக்கத்த சொல்லிக்கிறேன். இப்படி உட்காருங்க சார்...” என்று சொன்னார். உட்கார்ந்தேன். ``சார் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாருண்ணே…” 2,000-த்தைக் கொடுத்தேன். வாங்கியவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார். ``ரொம்ப நன்றிண்ணே...” உற்சாகமானார் இன்ஸ்பெக்டர்.
``சார், இந்த லேகியம் மூதேவிக்கு இன்னிக்குத்தான் கொழந்த பொறந்தது. செலவுக்குக் காசு இல்லைன்னு நின்னான். ஆனா சார், இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இவன் காட்டுல மழதான்...” போத்தலைக் கொஞ்சம் உறிஞ்சிக்கொண்டார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த 2,000 ரூபாயை வைத்து ஒரு குடும்பம் ரெண்டு வருடம் எப்படி வாழ்ந்துவிட முடியும்? ``பின்ன என்ன சார்... இந்த வருஷத்துல... எந்தப் படத்துல கொழந்த பொறந்தாலும் இந்த மூதேவி பெத்த ஸ்ரீதேவி, இந்தக் கொழந்ததான் சார் நடிக்கும். புரியல... அந்தக் கொழந்தையே இதுதான் சார்...” என்று வைரம் சிரித்தார். இன்ஸ்பெக்டரும் சிரித்தார்.
``சார், 30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு படத்துல... பொறந்த கொழந்தைய காட்டி `இந்த அரச பரம்பரைக்கு ஒரு வாரிசு வந்துடுச்சி’ன்னு டாக்டர் அந்தக் கொழந்தய கேமரா முன்னாடி காட்டுவார். `இளவரசர் வாழ்க... இளவரசர் வாழ்க’ன்னு மக்கள் கோஷம் போடுவாங்க. அந்த இளவரசர் வேற யாரும் இல்ல... நான்தான். உண்மையைச் சொல்லணும்னா நான்தான் சார் பார்ன் ஆக்டர்” என்று, இளவரசர் இல்லை, இன்ஸ்பெக்டர் இல்லை, லேகியம் சிரித்தார். அப்போதுதான் புரிந்தது. நான் பார்த்த அத்தனை படங்களிலும் பிறந்த குழந்தைகளும் துணை நடிகர்கள்தான் என்று. ஏவி.எம் உருண்டையை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் யாரோ ஒருவன், அரச பரம்பரையின் வாரிசு என சினிமாவில் பிறந்திருப்பான்... இல்லை நடித்திருப்பான்.
இருவரும் கொஞ்சம் போதையானார்கள். கலகலவெனவும் பொலபொலவெனவும் வைரத்தின் அங்கங்கள் அவரின் பேச்சை மீறி ஆடிக்கொண்டிருந்தன. ``நேத்து ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் சார், ஸ்பாட்ல அசந்து தூங்கிட்டான்னு ஷீலாவ `முண்டம்’னு திட்டியிருக்காரு... ஷீலா ஹீராயினா ஒரு படம் புக் ஆனா... அவளுக்குப் புடிச்ச கெரகம்... படம் பாதியிலேயே நின்னுடுச்சு... ஒருவேளை அந்தப் படம் வந்து ஓடியிருந்தா அந்த சார் இன்னிக்கு ஷீலாவ பாத்து அந்த வார்த்த கேப்பாரா சார்... சொல்லுங்க சார்... ஷீலா வேற யாரும் இல்ல சார்... லேகியத்தோட பொஞ்சாதிதான்” என்று லேகியத்தைக் காட்டினார். ஒரு வம்சத்தின் கனவை மிகவும் சாதாரணமாகச் சொல்லி முடித்தார் வைரம்.
நான்கூட ஒரு தடவை ஸ்பாட்டில் ஒரு துணை நடிகையை கெட்ட வார்த்தை போட்டுத் திட்டியிருந்தது நினைவில் வந்து போனது. ``சரக்கு பத்தல ஒரு குவார்ட்டர் வேணும்... வாங்கிட்டு வாங்கடா...” என்றார் வைரம். லேகியத்தொடு நானும் சென்றேன்.
சென்னைக்கு வந்து இறங்கும் ஒவ்வொரு ரயிலிலும், பேருந்திலும் கனவுகளைச் சுமந்துகொண்டு `நடிகனாகியே தீருவேன்’ என்று இறங்கும் ஓர் இளைஞனாக வைரமும் இறங்கினார். தனது ஊர்ப் பையனோடு மேன்ஷனில் வாசம்புரிந்தவர். கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினார். கனவுகளோடு வருடங்களும் வளர்ந்துகொண்டிருந்தன. சில படங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாக வந்ததை ஊருக்குப் போன் போட்டு சந்தோஷமாகச் சொன்னார்.
ஒரு கேரக்டர் ரோலில் நடித்துவிட வேண்டும் எனத் தீவிரம்கொண்டார். ஊரிலிருந்து போன் வந்தது. அம்மாதான் பேசினார். ``வைரக்கண்ணு நம்ம சொந்தத்துலயே ஒரு பொண்ண பேசியிருக்கேன்டா... சினிமான்னாலும் பரவால்லன்னு சொல்லிட்டாங்க. `அடுத்த மாசம் நிச்சயம் வெச்சுக்கலாம்’னு சொல்லிட்டேன்...” மேன்ஷன் அறையின் தவிப்புகளில் இருந்த வைரமும் திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டார்.
அப்போதுதான், அவருக்கு ஒரு வாய்ப்பு வந்தது. படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்றும், கதையின் திருப்புமுனையே வைரத்தால்தான் என்றும் இயக்குநர் சொல்ல, வைரத்தின் கனவுகள் பட்டை தீட்டப்பட்டன.
அம்மாவிடம் செய்தியைச் சொன்னார். ``எல்லாம் கல்யாண ராசிதான்’’ என்றார்கள் சகநடிகர்கள். நல்ல தொகையும் நடிப்பதற்குச் சொல்லி யிருந்தார் இயக்குநர். வைரத்துக்கு, சென்னையில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுக்க, போதுமான தொகை அது. கேரளாவில் ஷூட்டிங். வந்திருந்த நடிகர்களில் ஒருவரையும் திரையில் வைரம் பார்த்ததில்லை. நம்மைப்போலவே எல்லோரும் புதுமுகம் என சந்தோஷமடைந்தார்.
முதல்முறையாக வைரத்துக்குத் தனியாக ஒரு மேக்கப்மேன் ஒப்பனை செய்தார். வைரம் அந்தச் சொற்ப நேரத்தில் `மடை திறந்து தாவும் நதி அலை நான்...’ பாடலை முழுவதுமாகப் பாடி முடித்தார். படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தார். இயக்குநரிடம் ஆசீர்வாதம் பெற்றார் வைரம். ``வைரம், நீங்க என்ன பண்றீங்க... அந்த மொட்டமாடியில டிவி ஆன்டனாவ சரிபண்றா மாதிரி கீழ பாக்குறீங்க...” வைரம், மேனி முழுவதும் காதுகளாக்கிக் கேட்டுக்கொண்டிருந்தார்.
``அப்போ கீழ பாத்ரூம்ல ஹீரோயின் குளிச்சிக்கிட்டு இருப்பாங்க. நீங்க பாத்து மூடாவுறீங்க... இத ஹீரோயின் பார்த்துடுறாங்க. திடீர்னு உங்களப் பாத்து சிரிப்பாங்க. அங்க கட் பண்ணி ஓப்பன் பண்ணுனா... நீங்களும் ஹீரோயினும் ஷவர் பாத்துல குளிக்கிறீங்க... கொஞ்சம் எமோஷனலா... ஃபீலிங்கா... புரியுதா வைரம்...” இயக்குநர் சொல்லி முடிக்க, வைரத்துக்கு வேறு மாதிரி முகம் மாறுவதை இயக்குநர் புரிந்துகொண்டார்.
``வைரம், தப்பா யோசிக்காதீங்க... லைஃப்ல நாம அவசரப்பட்டுப் பண்ற தப்பால என்ன நடக்குது அவ லைஃப்லன்னு சமூகத்துக்கு மெசேஜ் சொல்ற படம். அவார்டு பிக்சர்ல நடிக்கிறீங்க... ஆல் த பெஸ்ட்...” என்றார் இயக்குநர். வைரமும் இயக்குநரின் நடிகராக, அந்த நடிகையோடு ஷவரில் குளித்தார். சில இடங்களில் அவரை மீறி சிலிர்த்தும்போனார். ``கமான் எமோஷனலா குளிங்க... ஃபீலிங் பண்ணுங்க வைரம்” இயக்குநரின் சொல்லுக்கு ஏற்றாற்போல் குளித்து முடித்தார் அல்லது நடித்து முடித்தார்.
சில மாதங்களில் வைரமும் அந்த நடிகையும் குளித்துக்கொண்டிருக்கும் காட்சி போஸ்டராக சந்துபொந்துகளில் எல்லாம் ஒட்டப்பட்டிருந்ததை சகநடிகர்கள் வைரத்திடம் சொன்னார்கள். ``ஆனாலும் ஃபீலிங்கா குளிக்கிறயா நீயி...” என்று ஒருவன் கலாய்த்தான். பதறியடித்துக் கொண்டு போன வைரம், அந்தப் போஸ்டரைப் பார்த்தார். இப்படியொரு போஸ்டரில் எம்.ஜி.ஆரைப்போல போஸ் கொடுக்க ஆசைப்பட்ட வைரம், ஒரு காலை நடிகையின் மேல் வைத்துக்கொண்டு, முண்டு கட்டிக்கொண்டு முகத்தில் அந்த ஃபீலிங்கோடு குளித்துக்கொண்டிருந்தார். `அவளின் ராத்திரிகள்’ என்று அந்தப் படத்துக்கு டைட்டில் போட்டிருந்தார்கள். `இது அவார்டு பிக்சர் வைரம்’ என்று சொன்ன இயக்குநரின் மீது கொலைவெறி வந்தது வைரத்துக்கு.
``ஒரே போஸ்டர்ல ஓகோன்னு வாழ்க்கை முடிஞ்சுபோனது அண்ணனுக்குத்தான்...” என்றார் லேகியம்.
``ஆனா சார், கல்யாணம் நின்னுபோனது... எல்லாரும் கிண்டல் பண்ணதெல்லாம்கூட அண்ணனுக்கு வருத்தம் இல்ல... அவங்க அம்மா கடைசிவரைக்கும் பேசலங்கிறது எப்பயாவது சொல்லி அழும்...” லேகியம், குவார்ட்டரை வாங்கிக்கொண்டார். ``எங்களோட எல்லா நல்லது கெட்டதுக்கும் வைரம்தான் அப்பா அம்மா எல்லாம். இன்னிக்கும் வேல கொடுத்துப் பாத்துக்கிற மொதலாளி.”
மொட்டைமாடிக்கு வந்து பார்த்தோம். வைரம் உட்கார்ந்த மேனிக்கு நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார். லேகியம் அந்தப் போஸ்டரை எனக்குக் காண்பித்தார். குளித்துக்கொண்டிருந்த வைரத்தின் முகம் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
- மனிதர்கள் வருவார்கள்...