மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!

மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!

மாத்தியோசி

சில மாசங்களுக்கு முன்ன, சேலத்துல இருந்து சென்னைக்குப் பேருந்து மூலமா பயணம் செய்தேன். வழக்கமா, ரயில் மூலமாத்தான் போவேன். எட்டு வழிச்சாலை பிரச்னை வந்த பிறகு, சாலை வழியா போய்ப் பார்க்கணும்னு எண்ணம் உருவானது. சும்மா சொல்லக் கூடாதுங்க, சேலம்-சென்னை நெடுஞ்சாலை அற்புதமா இருக்கு. கண்ணை மூடிட்டு, திடீர்னு திறந்துப் பார்த்தா ஏதோ, வெளிநாட்டு சாலையில பயணம் செய்யுற மாதிரி இருந்துச்சி. இந்த நெடுஞ்சாலை வழியா கார்ல பயணம் செய்யுறவங்க ஆசிர்வதிக்கப் பட்டவங்கனுதான் சொல்லணும்.

ஏன்னா, நினைச்ச இடத்துல, நல்ல உணவகத்துல வண்டியை நிறுத்தி, ஆற அமரச் சாப்பிடலாம். ஆனா, பேருந்து மூலமா பயணம் செய்யும்போது, சென்னை வந்து சேரும் வரையிலும் நல்ல சோறு சாப்பிட முடியாது. மோட்டல்ன்னு சொல்ற நெடுஞ்சாலை உணவகத்துல சாப்பிடறதுக்காக வண்டியை நிறுத்தினா, இறங்கி பார்க்கிறதுக்குக்கூட அச்சமாக இருக்கும். இதனால, பேருந்துல ஏறும்போதே, பழம், பொரிகடலைனு நொறுக்குத் தீனியை உஷாரா வாங்கிட்டுத்தான் ஏறுவேன். இந்த முறையும் அப்படித்தான் புறப்பட்டேன். வழக்கம்போல விழுப்புரத்தைத் தாண்டின உடனே, ‘பேரணி’ங்கிற ஊர்ல இருந்த உணவகத்துல வண்டியை நிறுத்தினாங்க.

மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!

ரொம்ப நேரமா உட்கார்ந்து பயணம் செய்றோம், கொஞ்சம் இறங்கி நடப்போம்னு நினைச்சி, வண்டியை விட்டு இறங்கினேன். என்ன ஆச்சர்யம், ‘‘ஐயா, இங்க கம்பு, சோளம், கேழ்வரகுனு சிறுதானியத்துல செய்த பாரம்பர்ய உணவு கிடைக்கும்’’னு அன்பா ஒருத்தர் வழிகாட்டினாரு. ‘‘கழிவறையைப் பயன்படுத்த காசு கொடுக்க வேண்டாம். திறந்த வெளியில யாரும் போகாதீங்க’’னு  இன்னொருத்தர் சத்தமா சொல்லிக் கிட்டிருந்தாரு.

அட, எல்லாமே வித்தியாசம இருக்குன்னு, உணவகத்துக்குள்ள போய்ச் சுத்திப் பார்த்தேன். சுத்த பத்தமா இருந்துச்சி. உணவு மேசையில இருந்த தண்ணீர் கூஜாவை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணி குடிச்சேன். ஓர் உணவகத்தோட தரத்தை தெரிஞ்சிக்க, அங்க தண்ணியைக் குடிச்சாலே தெரிஞ்சிடும். தண்ணியும் குடிக்கிற மாதிரி இருந்துச்சி. சரின்னு, சிறுதானியத்துல செய்த பலகாரங்களை வாங்கி ருசிப் பார்த்துட்டு, சூடா ஆவி பறக்க ஒரு டம்ளர் காபி குடிச்சிட்டு, பட்டுன்னு பேருந்துல ஏறினேன். ‘‘இப்படி நல்ல உணவகத்துல வண்டியை நிறுத்தினதுக்கு நன்றி’’னு ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் ஒரு கும்பிடுப்போட்டேன். ‘‘ஐயா, எங்களுக்கு மட்டும் நல்ல உணவு சாப்பிடணும்னு அக்கறை இல்லையா என்ன, சேலத்துல இருந்து சென்னை வரையிலும் நல்ல உணவகம் நிறைய இருக்கு. ஆனா, அங்கெல்லாம் பேருந்தை நிறுத்தி சாப்பிடற வசதி கிடையாது. இங்கதான், இந்த வசதி இருக்கு. இதுபோலப் பல உணவகம் உருவாகணும்’’னு சொல்லிட்டு, எல்லாரும் வண்டியில ஏறி உட்கார்ந்துட்டாங்களானு கணக்கு எடுக்க ஆரம்பிச்சாரு, அந்த நடத்துநர்.

இந்தியா முழுக்கப் பல மாநிலங்களுக்குப் பேருந்து மூலமா பயணம் செய்திருக்கேன். ஆனா, தமிழ்நாட்டுல உள்ள மாதிரி, நெடுஞ்சாலை உணவகங்களைப் பார்த்து அச்சப்பட்டதில்லை. பக்கத்து மாநிலமான கர்நாடகாவுல பயணிகளைக் கனிவா கவனிப்பாங்க. சாலையோர உணவகத்துல சர்வ சாதாரணமா கேழ்வரகு களி (ராகி மொந்தா), கூழ்... கிடைக்கும். இதுக்குத் தொட்டுக்க விதவிதமான ஊறுகாய் இருக்கும்.

ஒருமுறை உத்தரப் பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துல (Indian Veterinary Research Institute-IVRI) இருந்து புதுடெல்லிக்குப் பேருந்து வழியா பயணம் செய்தேன். பாதி வழியில வண்டியை ஓர் உணவகத்துல நிறுத்தினாங்க. உணவகத்துல வேலைப்பார்க்குற ஆள்கள், கல்யாண வீட்டுக்குப் போன மாதிரி, விழுந்து விழுந்து கவனிச்சாங்க. வண்டியில இருந்த அத்தனை பேரும், கீழே இறங்கிக் குட்டி நடைப்போட்டாங்க.

மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!

சில பேரு சப்பாத்தியை ருசிப்பார்த்துக் கிட்டிருந்தாங்க. இன்னும் சிலபேரு, வாய் நிறைய இனிப்பு பீடாவைச் சுவைச்சிக்கி ட்டிருந்தாங்க. சாப்பிட்டு முடிச்சி, உணவுகளோட விலைப்பட்டியலைப் பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்துச்சி. மற்ற உணவகத்தைக் காட்டிலும், இங்க விலை குறைவா இருந்துச்சி. கல்லா பெட்டியில உட்கார்ந்திருந்த உணவக உரிமையாளர்கிட்ட பேச்சுக் கொடுத்தேன். ‘‘அதீதீ தேவோ பவ’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அதாவது, ஒவ்வொரு விருந்தினரும் கடவுள் என்பதுதான் இதற்கான விளக்கம். கடவுள்கிட்ட அடிச்சி, புடுங்கி காசு வாங்குறது நியாம் கிடையாது. எல்லோருக்கும் வயிறு நிறைய சோறு போடுவதில் ஒரு திருப்தி இருக்கிறது. அதுவும், பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு உடல் நலம் முக்கியம். உணவில் கோளாறு ஏற்பட்டால், அவர்கள் செல்லும் பயணம் கெட்டுவிடும்’’னு அக்கறையாகச் சொன்னாரு.

இப்படித்தான், மலேசியா நாட்டுக்குப் பயணம் போயிருந்த சமயம் ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டுச்சி. பினாங்கு மாநிலத்துல இருந்து, கடா மாநிலத்துல உள்ள கடாரம் பகுதிக்கு போகணும்னு நினைச்சேன். நம்ம ராஜேந்திர சோழன், தமிழ்நாட்டுல இருந்து பெரிய கடற்படையைத் திரட்டிக்கிட்டு வந்து, கடாரம் பகுதியை வெற்றிப் பெற்றதாலத்தான், ‘கடாரம் கொண்டான்’னு அவருக்குப் பட்டப்பெயர் வந்துச்சி.

இவ்வளவு தூரம் வந்துட்டு, தமிழ் மன்னன் கால்பதித்த பகுதியைப் பார்த்தே ஆகணும்னு ஒத்த கால்ல நின்னேன். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தோட கல்வி அதிகாரி சுப்பாராவ், பயண ஏற்பாடுகளைச் செய்துகொடுத்து கூடவே வந்தாரு. ராஜேந்திர சோழன் கால்பதித்த பகுதி, இப்போ அடர்ந்த வனமா இருக்கு. தொல்லியல் ஆய்வுகள் நடத்தி, அந்தப் பகுதியில தொல்பொருள் காட்சியகத்தை அமைச்சிருக்காங்க. ஆற அமர எல்லாத்தையும் பார்த்துட்டுப் புறப்படும்போது, பசி வயித்தைக் கிள்ளுச்சி.

மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!

‘‘ஐயா, நம்ம காடி(கார்)யில ஒரு அழுத்து அழுத்தினா ஆர்.ஆர் நெடுஞ்சாலை உணவகம் வந்திடும். அங்க போய்ப் பசியாறலாம்’’னு சொல்லிட்டுச் சுப்பாராவ் கையைப்பிடிச்சி வண்டியில உட்கார வைச்சாரு. வண்டி கொஞ்ச நேரத்துல நெடுஞ்சாலை ஓரத்துல இருந்த உணவகத்துக்குள்ள போச்சி. மலேசியாவுக்கு வந்தும், நெடுஞ்சாலை உணவகமான்னு பயந்தேன். ஆனா, உள்ளே போய்ப் பார்த்தா, நட்சத்திர உணவு விடுதி மாதிரி இருந்துச்சி.

வாழைப்பழம் தொடங்கி, பப்ளிமாஸ் வரையிலும் விதவிதமான பழங்களை விற்பனைக்கு வைச்சிருந்தாங்க. அந்தப் பழ வகையில, ரெண்டு சாப்பிட்டு முடிச்சிவுடனே, பசி பறந்து போயிடுச்சி. ‘‘மலேசியா நாடு முழுவதும், நெடுஞ்சாலையில் ஆர்.ஆர்னு சுருக்கமா, சொல்ற ரெஸ்ட் அண்டு ரெஸ்டாரன்ட் (Rest and Restaurant) குறிப்பிட்ட தூரத்துல இருக்கு லா. மலேசியா நாட்டு அரசாங்கத்து மேற்பார்வையில இவை நடத்தப்படுது. மிகவும் குறைந்த விலையில் உணவு, பழங்களை... விற்பனை செய்றாங்க. குறைந்த விலையில தங்கும் விடுதிகூட இருக்குது லா’’னு சுப்பாராவ், சுருக்கமா சொன்னாரு. உடனே, நம்ம நாட்டுலேயும் ஆர்.ஆர் உணவகம் உருவாகணும்னு எனக்கு ஏக்கம் உருவாச்சிங்க.

- மண்புழு மன்னாரு,  ஓவியம்: வேலு