
சுந்தரி ஜகதீசன்
நம் முன்னோர் சுருக்கமாக `பணத்தை மண்ணில் போடு; இல்லை, பொன்னில் போடு' என்று கூறிவிட்டார்கள். வீடு என்பது இருப்பிடம்; பாதுகாப்பு; முதலீடு... இவை எல்லாவற்றையும் தாண்டி அன்றாட தேவையும்கூட.

ஆனால், இன்று இந்தியாவில் விலை போகாமல் கிடக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல லட்சங்களில் உள்ளன. இதற்குப் பல காரணங்கள். ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட் விலை ரூ.60 லட்சம். அதில் வரக்கூடிய வாடகை ரூ.15,000. ஆனால், வீட்டுக் கடனுக்குக் கட்ட வேண்டிய இ.எம்.ஐ தொகை ரூ.42,000. அதுவும் 20 வருடங்களுக்கு. அடுத்த 20 வருடங்கள் நாம் இதே ஊரில் இருப்போமா, நம் வேலை நிலைக்குமா, நிலைத்தாலும் ரூ.42,000 மாதத் தவணை கட்ட நம்மால் முடியுமா? இப்படியெல்லாம் நம் சிந்தனை செல்வது நியாயம்தானே?
மேலும், சில பில்டர்கள் ஐந்தாறு வருடங்கள் இழுத்தடிப்பதும், முறையான அனுமதியோ, பத்திரங்களோ இன்றி செயல்படுவதும் நம்மைப் பயமுறுத்துகிறது. சரி, வீடு வேண்டாம்; நிலம் வாங்கிப் போடலாம் என்றால், நிலத்தின் விலை கைக்கெட்டாமல் பறக்கிறது; நில அபகரிப்பு வேறு அச்சுறுத்துகிறது.

ஆனாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கூரை அவசியம் என்பதால், நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிலத்தின் விலையைக் கட்டுப்படுத்த கைடுலைன் வேல்யூ முறைப்படுத்தல், நில மோசடிகளைக் கட்டுப்படுத்த பவரை ரிஜிஸ்டர் செய்தல், பில்டர்களைக் கட்டுப்படுத்த ‘ரெரா ஆக்ட்’ என்று பல முனைகளில் முயற்சி செய்து வருகிறது. நமக்கும், குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், அரசு மானியம், வட்டிக்கும் அசலுக்கும் வரிவிலக்கு என்று சலுகைகளை வழங்குகிறது.
இந்தச் சலுகைகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு நமக்கே நமக்கென ஒரு வீடு வாங்குவதில் எந்தத் தவறுமில்லை. ஆனாலும், மனை, வீடு என ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது பல விஷயங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம். முதலில் நீங்கள் வாங்கும் வீடு, உங்களது சொந்தப் பயன்பாட்டுக்கா என்று பாருங்கள். வாங்கும் வீட்டில் நீங்களே குடியிருக்கும்பட்சத்தில், இ.எம்.ஐ கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், எதிர்காலத்தில் அந்த வீடு உங்களுக்குச் சொந்தமாகிவிடும். ஆனால், அந்த வீட்டை வாடகைக்கு விடும்பட்சத்தில் அதன்மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கும். ரூ.20 லட்சம் செலவழித்து வாங்கும் வீட்டின் மூலம் அதிகபட்சம் ரூ.5,000 கிடைக்கும். அதே பணத்தை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டால் ரூ.10,000-க்கு மேல் வட்டி கிடைக்கும். எனவே, வாடகை வருமானம் அதிகமாக இருந்தால் மட்டுமே, சொந்த உபயோகத்துக்காக இல்லாமல் இருந்தாலும் வீடு வாங்கும் முடிவை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே, ஒரு வீடு இருக்கும்பட்சத்தில் இன்னொரு வீடு என்பது தேவைதானா என்று யோசிக்க வேண்டும். காரணம், ரியல் எஸ்டேட்மூலம் கிடைக்கும் வருமானம் என்பது உறுதியில்லாதது. சில ஆண்டுகளில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஏறும்; சில ஆண்டுகளில் ஆமை வேகத்தில் நகரும். எனவே, நாம் இருக்க ஒரு வீடு இருக்கும்போது, இரண்டாவதாக இன்னொரு வீட்டை வாங்குவதைவிட, மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன்மூலம் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைப் பார்க்க முடியும்.
மூன்றாவதாக, வீட்டுக் கடன் வாங்கும்போது முடிந்த அளவு உங்களிடம் உள்ள பணத்தை அதிகமாகப் போட்டு, குறைந்த அளவில் கடனை வாங்குவது நல்லது. கடன் தொகை அதிகமாக இருக்கும்போது, அதற்கான வட்டியும் அதிகமாக இருக்கும். எனவே, வீட்டுக் கடனை முழுவதுமாகத் திரும்பக் கட்ட நீண்ட காலம் பிடிக்கும். எனவே, வீட்டுக் கடன் என்பது குறைவாக இருப்பதே நல்லது. அந்தக் கடனையும் குறித்த காலத்துக்குமுன்பே கட்டி முடிப்பதன்மூலம், வட்டியாகக் கட்டும் பணம் மிச்சமாகும். அதை வேறு முதலீடுகளில் முதலீடு செய்வதன்மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்.
வீடு வாங்க நினைத்தால், இந்த விஷயங்களை எல்லாம் மறக்காதீர்கள்!
- ப(ய)ணம் தொடரும்
