மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)

என்ன செய்தார் எம்.பி? - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)

“குப்பைமேடு வழியுது... குடிதண்ணியும் நாறுது!”

#EnnaSeitharMP
#MyMPsScore

‘வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ - நம் தேசத்துக்குச் சொல்லப்படும் பழமொழி இது. சென்னையின் வட சென்னையைப் பொறுத்தவரை இதை அப்படியே திருப்பிப்போட்டுக் கொள்ளலாம். வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ராயபுரம், ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிகளில்கூட  அ.தி.மு.க ஜெயித்திருக்கிறது. ஆனால், 2009-ம் ஆண்டுவரை வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வால் காலூன்ற முடியவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக வட சென்னை தொகுதி அ.தி.மு.க வசம் வந்தது. தென் சென்னை, மத்திய சென்னையோடு ஒப்பிட்டால் 30 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறது வட சென்னை. இன்னமும் இங்கு முழுமையான பாதாளச் சாக்கடை வசதி இல்லை. குறுகலான சாலைகள்... குடிநீரில் கழிவு நீர் கலந்துவருவது எல்லாம் சாதாரணம். அதுவும் மழைக் காலம் என்றால் சொல்லவே வேண்டாம்... வட சென்னையே மிதக்கும். எந்தப் பெரிய திட்டமும் வட சென்னைக்குள் மறந்தும்கூட எட்டிப் பார்க்காது. உயர் அதிகாரிகள்கூட உள்ளே வரத் தயங்குவார்கள். இப்படி மொத்தமாக புறக்கணிக்கப்படும் வட சென்னையில், முதன்முறையாக அ.தி.மு.க எம்.பி-யானார் வெங்கடேஷ் பாபு. அவராவது வட சென்னையை வாழ வைத்திருக்கிறாரா? 

“அமைச்சர் ஜெயக்குமார் (ராயபுரம்), எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் (கொளத்தூர்), டி.டி.வி.தினகரன் (ஆர்.கே.நகர்) ஆகிய வி.ஐ.பி-களின் சட்டமன்றத் தொகுதிகள் வட சென்னை எம்.பி தொகுதிக்குள்தான் வருகின்றன. இடையில் இருமுறை சில மாதங்கள் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாக ஜெயலலிதாவும் இருந்துள்ளனர். ஆனாலும் வட சென்னை வளரவில்லை’’ என்று கொந்தளிக்கிறார்கள் வட சென்னைவாசிகள்.

என்ன செய்தார் எம்.பி? - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)

“வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் ராயபுரம் சட்டமன்றத் தொகுதியைத் தவிர மற்ற ஐந்து தொகுதிகளும் எதிர்க்கட்சி வசம் உள்ளன. எதிர்க்கட்சித் தொகுதிகள் என்றால், அவற்றைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு  என்ன கவலை! கேட்பார் இல்லாமல் நாறி கிடக்கிறது தொகுதி. போக்குவரத்து நெரிசல், தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதன் நீட்சியாக நோய்கள்  ஆகியவையே வட சென்னையின் நிரந்தர அடையாளங்கள். சென்னை துறைமுகத்திலிருந்து வெளியேறும் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளும், உயிர்ப் பலிகளும் வட சென்னைவாசிகளின் அன்றாட வாழ்வியலின் தவிர்.யாத துயரங்கள். உதாரணம், வில்லிவாக்கம் ரயில் நிலைய பாலம். பெரம்பூர் ஐ.சி.எஃப்-லிருந்து கொளத்தூருக்கு ஆறு கி.மீ சுற்றித்தான் மக்கள் சென்றுவருகிறார்கள். வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு குறுக்கே மேம்பாலம் அமைத்தால் சில நிமிடங்களில் சென்றுவிட முடியும். இந்த பாலத்துக்காக ரயில்வே வேலைகளைக் கிடப்பில் போட்டுவிட்டனர். இதை, கடந்த ஒன்றரை ஆண்டாக எம்.பி-யும் கண்டுகொள்ளவில்லை’’ என்று கோபம் பொங்கப்ப் புலம்புகிறார்கள் மக்கள்.

“வட சென்னையின் பழம் பெருமைகளில் ஒன்று ராயபுரம் ரயில் நிலையம். தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமான இது, கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகியவற்றுக்கு அடுத்து நான்காவது முனையமாக இதை மாற்றவேண்டும் என்பது வட சென்னை மக்களின் நீண்டகால கோரிக்கை. அதை நிறைவேற்றவே இல்லை” என்று வெங்கடேஷ் பாபு மீது தொகுதி மக்கள் புகார் வாசிக்கிறார்கள்.

பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகில் உள்ள ரயில்வே கேட், அந்த ஏரியா மக்களின் உயிரை வாங்கிக்கொண்டிருக்கிறது. “அடிக்கடி கேட் மூடப்படுவதால் மறுபக்கம் இருக்கும் போஜராஜன் நகர், மின்ட் மாடர்ன் சிட்டி பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இங்கு சுரங்கப் பாதை அமைக்க அமைச்சர் ஜெயக்குமார் தொடர் முயற்சிகள் எடுத்தார். ஆனால், எம்.பி வெங்கடேஷ் பாபு ஒருமுறைகூட எட்டிப் பார்க்கவில்லை.’’ என்கிறார்கள் போஜராஜ நகர் மக்கள். இவையெல்லாம் போக்குவரத்துத் தொடர்பான பிரச்னைகளில் சிறு சாம்பிள் மட்டுமே. இப்படி நூறு பிரச்னைகள் இருக்கின்றன.

மணலி பகுதியின் தொழிற்சாலைக் கழிவுகளால் வட சென்னையின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. “தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் காற்றும் நீரும் மாசுபடுகிறது. இதனால், ஏராளமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருள்கள் நிலத்தடியில் கசிவதால், நிலத்தடி நீர் முற்றிலும் கெட்டுவிட்டது. மணலி தொடங்கி காசிமேடுவரை பெட்ரோலியக் குழாய்களில் கசிவு ஏற்படுகிறது. இதனால், குடிநீர்க் குழாய்களிலும் எண்ணெய் கலந்துவருகிறது. தொழிற்சாலைகளிலிருந்து அடிக்கடி நச்சுக் காற்று வெளியேறி மக்களை மூச்சடைக்க வைக்கிறது. இந்தப் பிரச்னைகளை எம்.பி கண்டுகொள்ளவே இல்லை’’ என்கிறார்கள் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் சுற்றுவட்டார மக்கள். 

வட சென்னை தொகுதியின் ஒரு சாபக்கேடு கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு. சுகாதாரக் கேடு, ஈ, கொசுத் தொல்லை, துர்நாப்டலம் என நாள்தோறும் சித்ரவதையை கொடுங்கையூர் மக்கள் அனுபவிக்கிறார்கள். மழைக் காலத்தில் காலரா, டெங்கு போன்ற தொற்றுநோய்கள் அதிகம் பரவுவதும் இங்கிருந்துதான். “குப்பைக்கிடங்கை இங்கிருந்து மாற்ற வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை எப்போதுதான் நிறைவேறுமோ தெரியவில்லை. நீதிமன்றம் சென்று போராடியும் எங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. எங்கள் துயரங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் எம்.பி வெங்கடேஷ் பாபு’’ என்று அழாத குறையாக புலம்புகிறார்கள் கொடுங்கையூர்வாசிகள்.

தி.மு.க-வைச் சேர்ந்த வடசென்னை முன்னாள் எம்.பி-யான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினோம். “நாங்கள் நிதி ஒதுக்கித் தொடங்கிய திட்டங்களை அ.தி.மு.க ஆட்சியில் இழுத்தடிக்கிறார்கள். மூலக்கடை ஜங்ஷனில் மேம்பாலம் பணியைத் தொடங்கினோம். அதைக் கிடப்பில் போட்டனர். போராட்டம் நடத்தியதும் அதைக் கட்டி முடித்தனர். வியாசர்பாடி ரயில்வே மேம்பாலத் திட்டம் தொடங்கினோம். அதையும் இழுத்தடித்தே முடித்தனர். எண்ணூர் - அத்திப்பட்டு பாலத்தையும் காலதாமதம் செய்தே கட்டிமுடித்தனர். சென்னை துறைமுகத்திலிருந்து எண்ணூர்வரை சாலையை அகலப்படுத்தும் பணியை ஆரம்பித்தோம். அதையும் இழுபறியில்தான் முடித்தனர். இப்படி நாங்கள்தான் திட்டங்களை கொண்டுவந்தோம். அதன் பின்பு, இப்படியான புதிய திட்டங்கள் எதையும் அவர்களால் பட்டியலிட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கெல்லாம் வெங்கடேஷ் பாபு என்ன பதில் சொல்கிறார்? “ஜி.எஸ்.டி மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது, அ.தி.மு.க சார்பில் நான்தான் பேசினேன். ஜி.எஸ்.டி-யால் தமிழக அரசுக்கு வருடத்துக்கு ஏற்படும் பத்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை மத்திய அரசு ஐந்து வருடங்களுக்கு ஏற்றுக்கொள்வதாகச் சம்மதித்தது. இதற்கு நான்தான் காரணம்’’ என்றவரிடம், “தொகுதிக்கு செய்தது என்ன, ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு எம்.பி மேம்பாட்டு நிதியில் இருந்து பணம் ஒதுக்கவில்லை என்று சொல்கிறார்களே’’ என்று கேட்டோம். “உண்மைதான். கொளத்தூருக்கு நான் நிதி எதுவும் ஒதுக்கவில்லை. ஸ்டாலினே அவரது நிதியிலிருந்து ஒதுக்கிப் பணிகளைச் செய்கிறார். எம்.பி என்கிற முறையில் என்னிடம் எந்தக் கோரிக்கையும் வரவில்லை. ரயில்வே மேம்பால கோரிக்கை மட்டும் வந்தது. மூன்று மாதங்களில் அந்தப் பணிகள் முடியும். மீதி பணியை தமிழக அரசு விரைவில் முடிக்கும். ஸ்டாலின் செய்யும் வேலைகளுக்கு நாங்கள் தடை போடுவதில்லை’’ என்றார்.

“தீ விபத்து, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் விபத்தில் இறப்பது போன்ற சம்பவங்களில்கூட நீங்கள் ஆறுதல் சொல்வதற்கு போவதில்லை. தொகுதி பக்கமே உங்களைக் காணவில்லை என்கிறார்களே?” என்றோம். “நான் மக்களுடன்தான் வாழ்கிறேன். அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக தவறாகச் சொல்லியிருப்பார்கள். ராயபுரம் ரயில் நிலையத்துக்காகப் பேசினேன். அதை முனையம் ஆக்க ஸ்டான்லி அரசு மருத்துவனை இடத்தைக் கூடுதலாக கேட்கிறது ரயில்வே. மருத்துவமனை நிலத்தைக் கொடுக்க முடியுமா? அதற்குப் பதிலாக, தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்துவதாக ரயில்வே அதிகாரிகள் சொல்லியுள்ளனர். சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிவரை நான்காவது ரயில் பாதை போட வேலை நடக்கிறது. இப்போதைக்கு அத்திப்பட்டு வரை ரயில் பாதை போடப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் குப்பைகளைப் பிரிக்கும் பணியை மாநில அரசு செய்கிறது. காற்று மாசுபட்டிருப்பது உண்மைதான். மணலி சி.பி.சி.எல் நிறுவனத்தில் கேக்கர் என்கிற புது யூனிட்டை ஆறு மாதம் முன்பு ஆரம்பித்தனர். கண்ணுக்குத் தெரியாத துகள்கள் வெளியாகி, அந்தப் பகுதி மக்கள் படாதபாடு படுகிறார்கள். நானும் இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரிகளுடன் பேசிவிட்டேன். அவர்கள் காற்று மாசுபடுதலை 24 மணிநேரமும் கண்காணிப்பதாகச் சொல்கிறார்கள். பெட்ரோலியப் பொருள்கள் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு, குடிநீர் குழாயில் கலந்துவிடுகிறது என்பதும் உண்மைதான். இதற்குக் காரணம், குழாய்கள் 35 ஆண்டுகள் பழமையானவை என்பதுதான். துறைமுகம் - மணலிவரை கடல் ஓரமாக ராட்சதக் குழாயை அமைக்கும் பணி முக்கால்வாசி முடிந்துவிட்டது. மீதியும் முடியும்போது, இந்தப் பிரச்னை தீர்ந்துவிடும். எண்ணூர் துறைமுகம், சி.பி.சி.எல் போன்ற நிறுவனங்களின் தரப்பில் கடல் நீரைக் குடிநீராக மாற்றி, மக்களுக்கு விநியோகிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளன. நானும் வலியுறுத்தி வருகிறேன். ஒரு வருடத்திற்குள் தரமான குடிநீர் விநியோகம் நிச்சயம் கிடைக்கும். காவல் துறைக்காக தொகுதி முழுவதும் ஒரு கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி கேமரா பொருத்த பேசிவருகிறேன்’’ என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- ஆர்.பி., தமிழ்ப்பிரபா
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)

எப்படி இருக்கிறது எம்.பி ஆபீஸ்?

வி
யாசர்பாடியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர், ‘ஏரியாவில் இரவு நேரத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் இல்லாததால் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. இந்தப் பிரச்னையைத் தீர்க்க உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்துத் தாருங்கள்’ என்று எம்.பி அலுவலகத்தில் மனு செய்தார். மூலக்கொத்தளத்தில் உள்ள மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தில்தான் எம்.பி அலுவலகம் தனியாக இயங்குகிறது. தமிழரசனுடன் நாம் சென்றபோது, அலுவலகம் வெறிச்சோடிக் கிடந்தது. விசாரித்தபோது, “வேலுன்னு ஒருத்தர் இங்கேதான் எங்கேயாச்சும் இருப்பார். தேடிப்பாருங்கள்’’ என்றார்கள். ஒருவழியாக அவரைத் தேடிப்பிடித்து மனுவைக் கொடுத்தோம். “ஒரு வாரத்துக்கு முன்புதான் எம்.பி வந்துட்டுப்போனார். அடுத்த முறை வரும்போது, இதைச் சேர்த்துடுறேன்’’ என்றார். ஓட்டேரியில் உள்ள எம்.பி-யின் வீட்டிற்குப் போனால், காலை 11 மணி முதல் 2 மணி வரை அவரைப் பார்க்கலாம் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார் வேலு. இதுகுறித்து சிலநாட்கள் இடைவெளிவிட்டு எம்.பி-யிடம் கேட்டபோது, “மனுவை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ளேன்” என்றார்.

என்ன செய்தார் எம்.பி? - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)
என்ன செய்தார் எம்.பி? - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)

எம்.பி எப்படி?

டசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே. நகர், கொளத்தூர், பெரம்பூர், ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 300 பேரைச் சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)
என்ன செய்தார் எம்.பி? - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)