
ஓவியங்கள்: ம.செ.,
ஆறாம் நாள் போரின் கடைசி நான்கு பொழுதுகள் மீதம் இருந்தன. தட்டியங்காட்டில் இதுவரை இல்லாத வகையில் இருதரப்பும் பதற்றத்தில் நிலைகுலைந்துகொண்டிருந்தன. மையூர்கிழாரால் கருங்கைவாணனை மூஞ்சலை நோக்கி அனுப்ப முடியவில்லை. தேக்கனால் முடியனை இரவாதனை நோக்கி அனுப்ப முடியவில்லை. யார் எங்கு நிலைகொண்டு தாக்குவது என்பதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருந்தது.

திசைவேழர், பரண்மேல் திணறியபடி நின்றுகொண்டிருந்தார். போர்க்களத்தின் நடுப்பகுதியில் தாக்குதல் வீரியம்கொண்டிருந்தது. அதேநேரம் தட்டியங்காட்டின் இடது விளிம்புக்கு அப்பால் மூஞ்சல் பகுதியில் வலிமைமிகுந்த தாக்குதல் நடக்கிறது. நேரமாக ஆக போரின்விதிகள் எல்லா இடங்களிலும் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இருதரப்பிலும் கடும்தாக்குதல் நடக்கிறது. தான் நடுவில் இருக்கும் பரணில் நிற்பதா அல்லது இடதுபக்கக் கடைசிப்பரணில் நின்று மூஞ்சலைக் கவனிப்பதா என முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் நின்றார் திசைவேழர்.
குளவன்திட்டில் நின்றுகொண்டிருக்கும் பாரி, போர்க்களத்தின் தன்மையை உற்றுப்பார்த்தபடி இருந்தான். எங்கும் குழப்பம் சூழ்ந்திருப்பதைத் தெளிவாக அறிய முடிந்தது. நாகக்கரட்டின் மேலிருந்து இரவாதனுக்குரிய மறைக்குறிப்புகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டுக்கொண்டிருந்தன. கூவல்குடியினரின் ஓசை இடைவெளியின்றி வெளிப்பட்டது. வாரிக்கையனுக்கு வேறு என்ன செய்வது என்பது பிடிபடவில்லை.
போர்க்களத்துக்கு உள்ளே இருப்பவர்களும் களத்தை விட்டு வெளியே நிற்பவர்களுமாக எல்லோரும் ஒரே நேரத்தில் பதற்றத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர். நிலைமை என்னவாகும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. சரியும் மஞ்சள் வெளிச்சத்தினூடே களத்தை உற்றுநோக்கிக்கொண்டிருந்த பாரியின் சிந்தனை, முடிவை நோக்கி நகர்ந்தது. இனி தாமதிக்க வேண்டாம் என எண்ணிய கணத்தில், கையை உயர்த்தினான் பாரி. அருகிருந்த கூவல்குடியினர் அதற்கேற்ற ஓசையை வெளிப்படுத்தினர். நாகக்கரட்டில் இருந்தவர்களுக்கான உத்தரவு குளவன்திட்டிலிருந்து வந்தது. போர்க்களம் நோக்கி வெளிப்படுத்தும் ஓசையை உடனடியாக நிறுத்தினான் வாரிக்கையன்.
இரவாதன், மூஞ்சலுக்குள் தனது முழுப்படையுடன் நுழைந்துவிட்டான். இனியும் பின்னோக்கி வரச்சொல்லும் மறைகுறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருப்பது தவறு. உள்ளே நுழைந்தவன் இதுவரை நாகக்கரட்டின் குறிப்புகளைக் கவனித்தறியவில்லை. இனி தற்செயலாகக் கவனித்துவிட்டால் உள்ளே தாக்குதல் தொடுத்து முன்னேறுவதா அல்லது வெளியேறுவதா என்ற குழப்பத்தை அவனுக்கு உருவாக்கும். அந்தத் தடுமாற்றம் தாக்குதலை வலிமையிழக்கச்செய்து ஆபத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, கூவல்குடியின் ஓசையை நிறுத்தச் சொன்னான் பாரி. முழுமையான திறனோடு உள்ளே நுழைந்தவனை எந்த விதத்திலும் திசைதிருப்ப வேண்டாம். இதுவரை செய்த முயற்சிகள் சரி; இனி இதைத் தொடரக் கூடாது. வீரத்தின் விடை என்னவோ அதை ஏற்க ஆயத்தமாவோம் என்று நிலைகொண்டான் பாரி.
குழப்பமும் பதற்றமும் நிலவிய இந்த நேரத்தில் பாரி எடுத்த இந்த முடிவு களத்தில் உடனே விளைவை உருவாக்கியது. தேக்கனோடு முரண்பட்டு உரையாடிக்கொண்டிருந்த முடியன் நிம்மதிப்பெருமூச்சு விட்டான். கூவல்குடியினரின் குறிப்பொலி நின்றுவிட்டது. இரவாதன் மூஞ்சலுக்குள் நுழையாமல் நின்றுவிட்டான் என்ற முடிவுக்கு வந்தான். பறம்புத்தளபதிகள் அனைவரும் அவ்வாறே நினைத்தனர். பதற்றத்திலிருந்து பறம்புத்தளபதிகள் வெளிவந்த கணத்தில் தாக்குதலின் வேகம் மேலும் வலிமையடையத் தொடங்கியது.

எதிர்ப்பக்கம் நின்றிருந்த கருங்கைவாணனுக்கும் மையூர்கிழாருக்கும் இந்த ஓசை நிறுத்தப்பட்டதன் காரணம் புரியவில்லை. அவர்களின் குழப்பம் அதிகரித்தது. பறம்பின் தரப்பில் தாக்குதலின் வேகம் அதிகரிக்க, மையூர்கிழாரின் குழப்பம் மேலும் அதிகமாகியது.
முடியனோடு அவ்வளவு நேரம் உரத்தகுரலில் பேசிக்கொண்டிருந்த தேக்கன், தனது பேச்சை நிறுத்திக்கொண்டான். முடியனின் தாக்குதல் தீவிரமாகியது. அவன், கருங்கைவாணனை நோக்கிச் சீற்றத்துடன் முன்னேறினான். தேக்கன் தாக்குதல் களத்தை விட்டு, தனது இடத்துக்குப் பின்நோக்கி நகர்ந்தான். அவனால் நிலைமையை உணர முடிந்தது. இரவாதனின் படை மூஞ்சலுக்குள் முற்றிலும் நுழைந்திருக்கும். இனியும் பின்வாங்கச்சொல்லும் குறிப்பொலிகள் வேண்டாம் எனப் பாரி முடிவெடுத்திருப்பான் எனக் கருதினான்.
நேற்றைக்கு முந்தைய நாள் இரவு மூஞ்சலைப் பற்றி இரவாதன் விளக்கியவை எல்லாம் அவனின் நினைவுக்குள் மேலெழுந்துகொண்டிருந்தன. மூஞ்சலைப் பற்றி அவனுக்கிருந்த தெளிவும் சூளூர் வீரர்களின் தாக்குதல் திறனும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் அதேநேரம், மூவேந்தர்களின் அகப்படையையும் கவசப்படையையும் எளிதாகக் கருதிவிடக் கூடாது. அதுமட்டுமன்று, ஏற்கெனவே முடிவுசெய்ததைப்போல முடியனும் விண்டனும் அங்கு போகவில்லை. இந்நிலையில் தான் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய திட்டம் இரவாதனுக்கு இருக்குமா? மூஞ்சலுக்குள் நுழைந்த பிறகு நீலனை மீட்கும் சிந்தனை மட்டுமே தீவிரம்கொள்ளும். உணர்வின் உந்துதலில் இணையற்ற தாக்குதலை நடத்துவான். அந்தத் தாக்குதல், எதிரியைக் கலங்கடிக்கும். அதேநேரம் மையப்பொறியைத் தாக்கி முன்னேறுபவனுக்குத் தேவையான முழுமைகொண்ட தெளிவு அவனிடம் இருக்குமா? இன்னொரு வகையில் சிந்தித்தால், ஏறித்தாக்குபவனுக்குச் சூழலைப் பற்றி முழுமையும் தெரியாமல் இருத்தல் நல்லது. வீரத்தின் மீது அறியாமை கலந்த குருட்டுத்தனம் படிந்திருந்தால் அது உருவாக்கும் விளைவு எண்ணிப்பார்க்க முடியாததாக இருக்கும்.
இன்றைய போர் இதுநாள் வரை நடந்ததைப் போன்ற நிலையில் முடியப்போவதில்லை. இரவாதன், போரின் போக்கைத் தனது கையில் எடுத்துக்கொண்டான். இனி அவனது வீரமே எல்லாவற்றையும் முடிவுசெய்யும். எண்ணங்கள் மேலெழுந்தபடி இருக்க, படைப்பிரிவின் இறுதிப்பகுதியில் வந்து நிலைகொண்டான் தேக்கன்.
எதிர்த்திசையில் படையின் மூன்றாம்நிலைக்குப் பின்னால் வேந்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். காற்றின் துணைகொண்டு பறம்பு வீரர்கள் அம்பெய்த பிறகு, தங்களின் பாதுகாப்பு முறையை வேந்தர்கள் மாற்றியமைத்துக்கொண்டனர். படைப்பிரிவையொட்டி நிற்காமல் தனித்து நிற்கின்றனர். ஒருவேளை காற்றில் கூரம்புகள் பறந்துவந்தால், கவசவீரர்கள் கணநேரத்தில் பாதுகாப்புக் கூண்டை உருவாக்குவார்கள். அம்புகளும் ஈட்டிகளும் உள்நுழைய முடியாத கவசக்கூண்டாக அது இருக்கும்.
மூஞ்சலுக்குள் எதிரிகளின் படைப்பிரிவு ஒன்று நுழைந்துவிட்ட செய்தி வேந்தர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இது யாரும் எதிர்பாராத ஒன்று. காலையில் மையூர்கிழாரிடம் படையின் தலைமைப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோதுதான் இந்தத் திட்டத்தை அவர் கூறினார். பறம்புப்படையில் வலிமைமிகுந்தவை விற்படையும் குதிரைப்படையும்தான். விற்படையைச் சூழ்ந்து அழிக்க முந்தையநாள் கருங்கைவாணனால் வகுக்கப்பட்ட திட்டம் முழுத் தோல்வியில் முடிந்தது. இன்று குதிரைப்படையை உள்ளிழுத்துத் தாக்கி அழிக்கும் திட்டத்தை மையூர்கிழார் சொன்னார். பறம்பின் மொத்தப்படையையும் முன்னகரவிடாமல் தாக்கும் அதேநேரம் குதிரைப்படையை மட்டும் முழுமையாக உள்வாங்கினால் சூழ்ந்து தாக்கிக் கடும் அழிவை உருவாக்க முடியும். குதிரைப்படையின் அழிவு பறம்புக்குப் பேரிடியாக அமையும் என்றான். நேற்றிரவு பொற்சுவை சென்ற இடத்தில் என்ன நடந்தது என்று தெரியாத குழப்பத்தில் இருந்த குலசேகரபாண்டியன், மையூர்கிழாரின் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்தார். மற்ற இரு வேந்தர்களும் அதே குழப்ப மனநிலையில் இருந்ததால் இந்தத் திட்டம் பற்றிக் கூடுதலாக உரையாடிக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது அதுவே பேராபத்தாகிவிட்டது. உள்ளிழுத்த குதிரைப்படை நாம் நினைத்ததைவிட வீரியமான தாக்குதலை நடத்தி மூஞ்சலின் அரணை உடைத்து உள்நுழைந்துவிட்டது.

ஆபத்து உச்சக்கட்டத்தை அடைந்தது. ``மூஞ்சலுக்குள் நுழைந்த ஒருவன்கூட உயிரோடு திரும்பக் கூடாது; அனைவரையும் கொன்று புதையுங்கள்” என்று உத்தரவிட்டார் குலசேகரபாண்டியன்.
இணையற்ற தாக்குதல் திறனும் தற்காப்புத் திறனும்கொண்ட கவசப்பெரும்படையோடு உதியஞ்சேரல், சோழவேழன், பொதியவெற்பன் ஆகிய மூவரும் புறப்பட்டனர். வேந்தர்களுக்குரிய இசை வாத்தியங்களை அந்தப் படையின் முன்கள வீரர்கள் முழங்கியதும் குதிரைகளும் தேர்களும் பாயத் தொடங்கின. தட்டியங்காட்டை விட்டு வெளிப்புறத்தில் இந்த நிலம் இருப்பதால் ஈக்கிமணலும் கருமணலும் இங்கு இல்லை. எனவே, குதிரைகள் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தோடு மூஞ்சலை நோக்கி விரைந்தன.
குளவன்திட்டின்மேல் நிற்கும் பாரி, மூன்று நாள்களுக்குப் பிறகு இடதுபுறமாகத் திரும்பி குகையில் இருக்கும் விளக்கைப் பார்த்தான். அருகில் நின்றிருந்த இகுளிக்கிழவனுக்கு, பார்வையின் பொருள் புரிந்தது. ஆனால், விளக்கின் சுடர் அசைவற்று எரிந்தது. கண்கள், மூஞ்சலை நோக்கிப் பாய்ந்து செல்லும் வேந்தர்களின் கவசப்படையையே பார்த்துக்கொண்டிருந்தன.
இரவாதனின் தலைமையிலான சூளூர்ப்படை, மூஞ்சலுக்குள் முழு வட்ட அமைப்பை உருவாக்கி முன்னகர்ந்துகொண்டிருந்தது. வட்டவடிவப் பெரும்பாறையொன்று மெள்ள உருள்வதைப்போல அதன் தன்மை இருந்தது. மூஞ்சலின் அகப்படைக்கு, முன்னகர்ந்துவரும் சூளூர்ப்படையை எப்படி நிறுத்துவதென்று தெரியவில்லை. ஏனெனில், எந்த ஒரு வீரனும் இதில் தனித்து இல்லை. உருளும் பாறையைக் கண்டு விலகும் உயிரினங்கள்போல அகப்படையினர் விலகவேண்டியிருந்தது.
சூளூர்ப்படையினரின் மெய்யுறைச் சட்டை ஆயுதங்களால் துளைக்க முடியாதது. அதேநேரம் மிகக் குறைந்த எடையுடையது. வேந்தர்களின் அகப்படை பெரும் எடைகொண்ட இரும்பாலான கவச உடையைக் கொண்டது. எனவே, வீரர்களால் வேகம்கொண்டு பாய முடியாது. பறம்புப்படையின் ஒவ்வொரு வீரனும் எண்ணற்ற ஆயுதங்களைத் தன் தோளிலும் இடுப்பிலும் தொங்கவிட்டுள்ளான்.
உள்ளே நுழைந்த படை இதுவரை தாக்குதலைத் தீவிரப்படுத்தவில்லை. முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. பிறகு எந்தத் திசை நோக்கி நகரவேண்டுமென முடிவுசெய்தது. சூளூர் வீரன் ஒருவன் கொண்டுவந்த மூங்கில் ஒன்றை வட்டத்தின் நடுவில் நேராக நிமிர்த்தினான். இன்னொரு வீரன் கண்ணிமைக்கும் வேகத்தில் அதன் மேல் ஏறினான். மூஞ்சல் முழுவதும் இருக்கும் கூடாரங்களின் மேற்கூம்பைப் பார்க்கும் உயரத்துக்கு ஏறினான்.
சூளூர் வீரர்களை முன்னின்று தாக்கிக் கொண்டிருந்த அகப்படையினர், திடீரென ஒருவன் எதிரிகளின் வட்டப்படையின் நடுவில் மூங்கிலை நட்டு கிடுகிடுவென மேலேறிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். முதலில், அவர்களுக்கு அது பிடிபடவில்லை. பிறகு அகப்படைத் தளபதி, மேலேறுபவனை நோக்கித் தாக்குதல் தொடுக்க உத்தரவிட்டான். முன்னிலை வீரர்கள் வில்லெடுத்து அம்பெய்தனர். அம்புகள் பாயும் முன்பு மூங்கிலின் மேலேறியவன் ஏறிய வேகத்தில் மூஞ்சல் முழுமையையும் கண்களைச் சுழற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கீழே குதித்தான். அம்புகள் காற்றில் பறந்துகொண்டிருந்த போது அவன் தரையிலே நிலைகொண்டான்.
அவன் சொல்லப்போகும் திசைக்காகத்தான் இரவாதன் காத்திருந்தான். கபிலர் நீலனுக்கு வழங்கிய போர்வை எண்ணற்ற மருத்துவ வேர்களால் பின்னப்பட்டது. அதில் காற்றில் தீயும் வேரொன்று இருக்கிறது. அதிலிருந்து சிறிது சிறிதாகக் கசியும் புகையால் கூடாரத்தின் மேற்பகுதியில் கருநீலம் படிந்திருக்கும். மூங்கிலின் மேலேறியவன் அந்தக் கூடாரத்தைப் பார்த்தவுடன் மேலிருந்து கீழே குதித்தான்.
குதித்தவன் குறிப்பைச் சொன்ன கணத்தில் முன்வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் தாக்குதலைத் தொடங்கினான் இரவாதன். அதுவரை முன்னும் பின்னுமாக அசைந்தபடி நின்றுகொண்டிருந்த பாறை, கடகடவென உருளத் தொடங்கியதுபோல் இருந்தது. பறம்பின் தரப்பில் அம்புகளும் ஈட்டிகளும் பீறிட்டபோது அகப்படையினர் முன்னகர முடியாமல் தடுப்பு உத்தியைக் கைக்கொள்ளத் தொடங்கினர்.
வட்டவடிவப் பேருருளை மூன்றாகப் பிளக்கத் தொடங்கியது. கரிணியின் தலைமையிலான வீரர்கள் அகப்படையை எதிர்கொள்ள உருவிய வாளோடு பாய்ந்து முன்னேறினர். அவர்கள் பிரியும் வேகத்திலேயே பிடறிமானின் தலைமையிலான குழுவினர் பொய்க் கூடாரங்களில் உள்ளவர்களை எதிர்கொள்ள, தனித்து முன்னேறினர். இருபெரும் கூராகப் படை பிளவுபட்டபோது நீலனை நோக்கிச் செல்ல ஆயத்தமானது இரவாதன் தலைமையிலான குழு.

வேந்தர்படை வீரர்கள் அனைவரும் வலதுகையில் ஆயுதமும் இடதுகையில் கேடயமும் ஏந்தியிருந்தனர். ஆனால், பறம்புவீரர்கள் யாருடைய கையிலும் கேடயம் இல்லை. எல்லோரும் இரு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியபடி இருந்தனர். உடல் முழுக்க மெய்யுறைக் கவசம் இருக்கிறது; அதுபோதும். இப்போதைய தேவை நீலனை மீட்பது மட்டும்தான். எனவே, ஒவ்வொரு வீரனும் எண்ணிலடங்காத வீரர்களைக் கொன்றுகுவிக்கும் வெறியோடு மூஞ்சலுக்குள் நுழைந்துள்ளனர்.
கரிணியின் தலைமையிலான படை தாக்குதலைத் தொடங்கிய கணமே, அதன் வேகம் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. தாக்குதலின் ஆற்றலால் வேந்தர்களின் அகப்படை சற்றே பின்வாங்கியது. பிடறிமானின் தலைமையிலான அணி முன்னகரும்போதே படையின் நடுப்பகுதியிலிருந்து மூன்று பெருமூங்கில்களை மேலே உயர்த்தி முக்கோண வடிவில் மூன்றின் முனைகளையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி நிறுத்தினர். மறுகணமே எண்ணற்ற வீரர்கள் ஒருவர்பின் ஒருவராக அதில் ஏறி, கோபுரம் போன்ற அமைப்பை உருவாக்கினர். மூங்கிலின் பிடிமானத்தோடு ஒருவர் தோளில் ஒருவர் ஏறி, கூடாரத்தைவிட அதிக உயரத்தை உருவாக்கிக்கொண்டனர். இவையெல்லாம் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் படையின் நடுப்பகுதிக்குள் நடக்கின்றன.
கோபுரத்தில் மேலேறியவர்கள் உச்சியில் இருந்தபடி கூடாரத்தின் மேல் நிலையில் தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். பகழி அம்புகள், கூடாரத்தின் மேற்கூரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே இறங்கின. உடலெங்கும் கவசம் அணிந்த வீரர்கள், மேற்கூரையிலிருந்து பாய்ந்துவந்து தலையையும் கழுத்தையும் தாக்கும் அம்புகளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொய்க்கூடாரத்தில் இருந்த வேந்தர்படை வீரர்கள், இடைவிடாது கூரையைப் பிளக்கும் அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் சிதறி வெளியேறினர். பொய்க்கூடாரம் ஒன்று கலைந்த வேகத்தில் அதன் கூச்சலும் கலவரமும் மற்றவற்றைக் கலைத்தன. அகப்படை சிதறி, பொய்க்கூடாரங்கள் கலையத் தொடங்கும்போது வேந்தர்கள் கவசப்படையோடு மூஞ்சலுக்குள் நுழைந்தனர்.
இடதுபுறமாக உதியஞ்சேரல் நுழைந்தான். அவன் கண்முன்னே, சிதறும் அகப்படையைக் கொன்றுகுவித்து முன்னகர்ந்துகொண்டிருந்தது சூளூர்ப்படை. எதிர்த்திசையில் அதைவிட வேகமாக இன்னொரு படை போய்க் கொண்டிருந்தது. அப்பக்கமிருந்து உள்ளே நுழைந்தான் சோழவேழன். பிடறிமானின் தாக்குதல் பொய்க்கூடாரங்களைப் புரட்டியது. மூஞ்சலின் கட்டுக்கோப்பு குலைந்துகொண்டிருந்த போது வேந்தர்கள் மூவரும் தங்களின் சிறப்புப் படையோடு உள்நுழைந்தனர்.
மிகக்குறுகிய நேரத்தில் சூறைக்காற்றுபோல தாக்குதல் நடத்திய பறம்புப்படை, மூஞ்சலின் மொத்த இயக்கத்தையும் நிலைகுலையச்செய்தது. தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியை வேந்தர்களால் நம்ப முடியவில்லை. ஆனாலும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்க அவர்களுக்கு அதிக நேரமாகவில்லை. பல போர்களையும் தாக்குதலையும் வெற்றிகரமாக நடத்திய எண்ணற்ற அனுபவம்கொண்டது வேந்தர்களின் சிறப்புப்படை. இதுபோன்ற சூழலை எத்தனையோ முறை கையாண்ட தளபதிகள் அதில் இருந்தனர்.
உதியஞ்சேரலின் படை கரிணியின் தலைமையிலான படையோடு மோதத் தொடங்கியது. அதே நேரத்தில் சோழவேழனின் படை பிடறிமானின் படையை எதிர்கொண்டது. எண்ணிப்பார்க்க முடியாத வலிமையும் தாக்குதல் திறனும்கொண்ட இருதரப்புச் சிறப்புப்படைகளும் ஒன்றையொன்று எதிர்கொண்டன.
இருபக்கச் சிறகுகளிலும் கரிணியும் பிடறிமானும் எண்ணிலடங்காத ஆயுதங்களின் வழியே வேந்தர்படையைத் தாக்கிக்கொண்டிருந்த போது, தனது இரையைக் கவ்வ விண்ணிலிருந்து வெட்டி இறங்கும் கழுகின் வேகத்தில் நீலனின் கூடாரம் நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தான் இரவாதன். மூஞ்சலுக்குள் நுழைந்த இடத்திலிருந்து நீலனின் கூடாரம் இருக்கும் இடம் வரை மூன்று தடுப்புநிலைகள் உள்ளன.
வெளிப்புற அரணை உடைத்து முதல் தடுப்புக்கு அருகில் பறம்புப்படை வந்தபோது வேந்தர்கள் மூவரும் வந்துசேர்ந்தனர். ஆனால், அப்போது இரவாதன் இரண்டாவது தடுப்பைத் தாக்கிக்கொண்டிருந்தான். நிலைமையைக் கணிக்கும் நேரம்கூட வேந்தர்களுக்கு வாய்க்க வில்லை. அவன் இரண்டாவது தடுப்பை உடைக்கும்முன் தனது படை அவ்விடம் விரைந்து செல்ல உத்தரவிட்டான் பொதியவெற்பன்.
இரவாதனின் வேகமும் தாக்குதலின் தன்மையும் யாராலும் கற்பனைசெய்ய முடியாத அளவுக்கு இருந்தன. தென்னோலையைக் கிழித்துக்கொண்டு உள்ளிறங்கும் மூங்கிற்கழிபோல எதிரிகளின் கவசங்களைத் துளைத்து உள்ளிறங்கின பகழி அம்புகள்.

அம்பென்பது மூன்று விசைகள் மையம்கொள்வது. இழுத்து வளைக்கும்போது உள்ளுக்குள் விரியத்துடிக்கும் நரம்பு; பின்னிழுக்கும்போது முன்வாங்கத் துடிக்கும் நாண்; முன்னும் பின்னுமாக வீரனின் இரு கைகளைக்கொண்டு கூட்டப்படும் விசை. இந்த மூன்றின் குவிமையமே விடுபடும் அம்பாய் ஏகிச்செல்லும். இந்த மூன்றும் வேந்தர்படையைவிட மூன்று மடங்கு அதிக ஆற்றலோடு வெளிப்பட்டன சூளூர் வீரர்களிடம். குறுங்காது முயலின் குருதிவாடை காற்றெங்கும் மிதந்துகொண்டிருந்தது.
பொதியவெற்பனின் சிறப்புப்படை இரவாதனின் படையை நோக்கி முன்னேறியது. அப்போது சற்றும் எதிர்பார்க்காமல் சூளூர் வீரர்கள் விசிறி வடிவ உருளிகளான எறிவட்டுகளை வீசத் தொடங்கினர். ஈட்டி என்றால் போர்வீரன் ஒன்றைத்தான் வைத்திருக்க முடியும். ஆனால், ஒவ்வொரு வீரனும் பத்துக்கும் மேற்பட்ட எறிவட்டுகளை இடுப்பிலே கோத்துவைத்திருந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்த எறிவட்டுகள் அனைத்தும் கவசவீரர்களின் கழுத்துக்குக் குறிவைக்கப்பட்டன.
பாய்ந்துவந்த வேந்தரின் கவசப்படை இரு பனை தொலைவிலேயே நின்று எறிவட்டுகளைக் கவசங்களால் தடுக்கவேண்டிய நிலை வந்தது. அப்போது மூன்றாவது தடுப்பு நோக்கி இரவாதன் முன்னேறிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த பொதியவெற்பன், உலோக வில்லில் தணல் அம்புகளால் இரவாதனை நோக்கிக் கடும்தாக்குதல் நடத்தியபடி ``அவனை நோக்கித் தேரை விரைவுபடுத்து” என்று கத்தினான்.
மூஞ்சலின் வெளிப்புற அரண் மீண்டும் ஒன்றுக்கொன்று செருகி அடைப்பை உருவாக்கியது. ஆனால், உள்ளே நுழைந்த சூளூர் வீரர்கள் தங்களை நோக்கி மொய்க்கும் வேந்தர்படையைக் கணக்கில்லாமல் கொன்றுகுவித்தனர். கவசங்களின்மேல் வெட்டியிறங்கும் வாளின் ஓசை மூஞ்சலை நடுங்கச்செய்தது, கொற்றவாளும் கணிச்சி எனும் கோடரிவகை ஆயுதமும் சூளூர் வீரர்களின் உடல் உறுப்பைப்போன்றவை. பெருமரத்தையும் கணிச்சிகொண்டு ஒரே வீச்சில் வெட்டிச் சரிக்கும் சூளூர் வீரர்களின் வேகம் கவசங்களைக் கிழித்து இறங்கிக்கொண்டிருந்தது.
இரவாதன் மூன்றாவது தடுப்பை நெருங்கும்போது பொதியவெற்பனின் தேர் விரைந்து அவ்விடம் வந்தது. நிறைந்த பூண்களைக்கொண்ட கொடிஞ்சி வகைத்தேர், கதிரவன் ஒளியில் கண்களைப் பறித்தபடி வீரர்களைப் பிளந்துகொண்டு வந்தது. கவச வீரர்களின் தாக்குதலுக்கிடையே திரும்பி மீளும் கணத்தில் தன்னை நோக்கி வரும் தேரைப் பார்த்தான் இரவாதன். அவனைச் சூழ்ந்திருந்த கவசவீரர்களைத் தாக்கிக்கொண்டிருந்த அதே வேகத்தில் தனது முதுகிலே இருந்த மூவிலை வேலை எடுத்து மின்னலென வீசினான்.
தேரின் இடதுபுறச் சக்கரத்தின் நடு அச்சைப் பிளந்து உள்ளிறங்கியது மூவிலை வேல். என்ன நடந்தது என்பதை வீரர்கள் உணரும்முன் தரையிலே உருண்டுகொண்டிருந்தான் வளவன். அவனைத் தாண்டி வீசப்பட்டான் பொதியவெற்பன். உடைந்த தேரை, கனைப்பொலியோடு வேகம் குறையாமல் இழுத்து முன் சென்றன குதிரைகள். கொடிஞ்சி வகைத் தேரைத் தனியொருவன் உடைக்கவும் முடியும் என்பதை யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
தேரிலிருந்து சரிந்தவனை நோக்கித் தாக்குதலைத் தொடுத்து உயிர் பறிப்பதற்கெல்லாம் இரவாதனுக்கு நேரமில்லை. அவனது வேகத்துக்குக் குறிக்கீட்டாக எது வந்தாலும் இடியெனத் தாக்கி அழித்தபடி நீலனின் கூடாரம் நோக்கி விரைவது மட்டுமே அவன் வேலை. ஏறக்குறைய அவன் நீலனின் கூடாரத்தை நெருங்கினான். அவ்வளவு நேரமும் அவனது வேகத்தைத் தடுக்க அணியணியாய் வந்து அகப்படை வீரர்கள் போரிட்டனர். ஆனால், மூன்றாவது தடுப்பைப் பிளந்து உள்நுழைந்த வேகத்தில் பொதியவெற்பனின் தேரை ஒரே வேலால் நொறுக்கிக் கவிழ்த்ததைப் பார்த்த யாரும் அதன் பிறகு எதிர்கொண்டு நிற்கவில்லை.
விழுந்து எழுந்த வேகத்தில் தனது காப்புப்படையோடு இரவாதனை நோக்கிப் பாய்ந்தான் பொதியவெற்பன். பாண்டிய இளவரசனின் தலைசிறந்த பாதுகாப்புப் படையினர் பதினாறு பேர் இரவாதனைச் சுற்றிவளைத்தனர்.
இடதுகையில் நீள்மழுவும் வலதுகையில் ஈர்வாளும்கொண்டு இரவாதன் தாக்கிய வேகம் பதினாறு பேரையும் நடுங்கச்செய்தது. பறம்பின் சிறப்பு உலோகக் கலவையால் நாள்கணக்கில் ஊறவைக்கப்பட்ட வாள் அது. வேறெந்த உலோகத்துடனோ, கரும்பாறையிலோ மோதினால்கூட முனை மழுங்காது, அதே நேரம், எதிர்வீசப்படும் வாளை வெட்டிக்கூறாக்கும் வலுவுள்ள ஈர்வாள் அது. இரவாதனின் வலதுகை வேகம் பாரியே வியக்கக்கூடியது. அதனால்தான் அவன் செலுத்தும் அம்பு யானையின் கழுத்தில் ஒரு பகுதியில் தைத்து மறுபகுதியில் எட்டிப்பார்க்கிறது. அதுவும் நீலனின் கூடார வாயிலில் நடக்கும் இந்தத் தாக்குதலில் மரக்குச்சிகளை வெட்டித்தள்ளுவதைப்போல பாண்டிய வீரர்களின் வாள்களைச் சீவித்தள்ளினான். இடதுகை மழுவின் முன் விளிம்பில் கைகளும் தலையுமாக மாட்டிய எதிரிகளின் உறுப்புகள் மீன் செதில்களைப்போலச் சீவப்பட்டு எல்லா திசைகளிலும் பறந்துகொண்டிருந்தன. பீறிடும் நீரூற்றுக்கு இடையே குளித்து நகர்பவனைப்போல் குருதி ஊற்றுக்கு இடையே நகர்ந்துகொண்டிருந்தான் இரவாதன்.
அவனை மறிக்கும் ஆற்றல் அங்கு இருக்கும் யாருக்கும் இல்லை. சினம்கொண்ட வேட்டை விலங்கின் எட்டுப்பற்களையும் தனது முகத்தருகே பார்த்ததைப்போல இரு கைகளாலும் ஆயுதங்களைக் கைக்கொள்ளும் இரவாதனைப் பார்த்து மிரண்டு நின்றான் பொதியவெற்பன்.
நீலனின் கூடாரத்துக்குள் நுழைய சில அடிகளே இருந்தபோது பாய்ந்து முன்சென்று தடுக்கலாமா என நினைத்த பொதியவெற்பன், சட்டென, பின்னால் நிற்கும் போர்ப்பணியாளனுக்கு உத்தரவிட்டான். அவன் உடனடியாக அபாயச் சங்கை ஊதினான். குலசேகரபாண்டியனின் அருகில் இருந்த சிறப்புப்படை வீரர்கள் மூஞ்சலை நோக்கி விரையத் தொடங்கினர்.
குளவன்திட்டிலிருந்து போர்க்களம் முழுவதையும் பார்த்த பாரியால் மூஞ்சலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. மூஞ்சல் தட்டியங்காட்டை விட்டு மிகத்தள்ளி இருப்பதாலும் கூடாரங்கள் மறைத்திருப்பதாலும் உள்ளுக்குள் நடக்கும் தாக்குதலைத் துல்லியமாகப் பார்த்தறிய முடியவில்லை. ஆனால், களத்தில் மூன்றாம்நிலையைக் கடந்து நின்றிருந்த குலசேகரபாண்டியனின் படைகள் மீண்டும் மூஞ்சலை நோக்கி விரைவதைப் பார்த்தான் பாரி. கடைசிக்கணத்தில் மூஞ்சல் தன்னைக் காத்துக்கொள்ள முடியாமல் திணறுவதை உணர்ந்தான். இப்போது பறம்புத்தளபதிகளில் யாராவது ஒருவர் மூஞ்சலில் இருக்க வேண்டும் என அவன் மனம் துடித்தது.
கருங்கைவாணன் தலைமையிலான படையை உடனடியாக மூஞ்சலுக்கு வரச்சொல்லி மையூர்கிழாருக்குச் செய்தி வந்தது. மூஞ்சல் பேராபத்தில் சிக்கிக்கொண்டது. தான் சொன்ன நேரத்தில் கருங்கைவாணன் அங்கே போயிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது; தலைமைத் தளபதியாகத் தான் பொறுப்பேற்றதை விரும்பாததால் அவன் தனது கட்டளையை ஏற்க மறுக்கிறான் என்று அவருக்குத் தோன்றியது. மீண்டும் மையூர்கிழார் சொன்னபோது கருகைவாணன் ஏதோ சொல்லவந்தான். ஆனால், அதற்குள் தனது குரலைப் பல மடங்கு உயர்த்தியபடி கத்தினார் மையூர்கிழார்.
அதன் பிறகு கருங்கைவாணன் மறுப்புச் சொல்லவில்லை. `மிக விரிந்த போர்க்களத்தில் வந்துசேரும் செய்திகளை எப்படிக் கையாள்வது என்பது தனித்த கலை; இவனது நாடே இந்தப் போர்க்களத்தைவிடச் சிறியது; இவன் இதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?’ என்று எண்ணியபடி தனது தேரைத் திருப்ப உத்தரவிட்டான் கருங்கைவாணன்.
தாக்குதல் உச்சம்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் கருங்கைவாணன் ஏன் விலகிச்செல்கிறான் என்பது அவனது தேர்ப்படைத் தளபதி வெறுகாளனுக்குப் புரியவில்லை. ஆனால், எதிர்த்து நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் முடியனுக்குப் புரிந்தது. கருங்கைவாணனை இந்த இடம் விட்டு நகரவிடக் கூடாது; அதற்கு ஒரே வழி, அவனது பார்வை அகலும் முன் அவனது தளபதியான வெறுகாளனைக் கொன்று வீழ்த்துவது மட்டுமே என முடிவுசெய்தான்.
அவ்வளவு நேரமும் கருங்கைவாணனின் படைப்பிரிவைத் தாக்கிக்கொண்டிருந்த முடியன், தன் வளவனை நோக்கிச் சொன்னான்... ``நேராக வெறுகாளனை நோக்கித் தேரை நிற்காமல் செலுத்து. எக்காரணத்தாலும் வேகத்தைக் குறைக்காதே.” சொல்லி முடிக்கும்போது பாய்ந்துகொண்டிருந்தன குதிரைகள். அம்புகளை எடுத்து நாணேற்றி விடுவிக்கும் நேரம்கூட முடியனுக்கு இல்லை. கருங்கைவாணன் தனது தேரை மூஞ்சல் நோக்கித் திருப்பிவிட்டான். அவனது பார்வை மறைவதற்குள் வெறுகாளன் வீழவேண்டும்.
கருங்கைவாணன் இங்கிருந்து புறப்படும்போது எதிரிப்படைத் தளபதி தன்னை நோக்கி முன்னேறிவருகிறான் என்பதை அறிந்த கணமே அச்சம் மேலேறத் தொடங்கியது. அவன் வழக்கத்தைவிட வேகமாகவே அம்பை வில்லில் பூட்டினான். அப்போது உள்ளங்கை அளவு வண்டுகள் சீறிவருவதுபோல அவனை நோக்கி வந்தன. `என்ன அவை?’ என்று அவன் பார்க்கும்போது மார்பெலும்பிலும் இடதுதொடையிலும் இரண்டு உள்ளிறங்கின. முன்னுதடு முழுக்கப் புலிநகங்களாலான வட்டுடைத் தட்டு அது. காற்றை அறுத்தபடி சீவிச்செல்லும்; தேர்ந்த வீரன் கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னிரண்டு தட்டுகளை எறிவான். பிளிறும் யானை, துதிக்கையைக் கீழிறக்கும் முன் சாய்த்துவிட முடியும். வெறுகாளனால் எப்படி அதை எதிர்கொண்டு நிற்க முடியும்?
தேரைத் திருப்பிய கணத்தில் வெறுகாளன் வீழ்த்தப்பட்டதை அறிந்து. களம் நடுங்கக் கத்தினான் கருங்கைவாணன். மொத்தக் காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்த மையூர் கிழாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முடியன் மீண்டும் தனது தேரைப் பழையநிலைக்குக் கொண்டுவந்தான். வரும்போதே விண்டனை நோக்கிக் குரல்கொடுத்தான் முடியன், ``கணப்பொழுதும் காலம் தாழ்த்தாதே; ஏறித்தாக்கு!”
விண்டன் முன்னிலும் வேகமாக முன்னேறினான். அதைப் பார்த்தபடி கொப்பளிக்கும் ஆவேசத்தோடு தாக்குவதற்காகப் பாய்ந்து வந்தான் கருங்கைவாணன்.
எந்தத் தூண்டிலைப் போட்டால் மூஞ்சலை நோக்கிப் போகவிடாமல் திருப்ப முடியுமோ, அந்தத் தூண்டிலை முடியன் வீசியவுடன் திரும்பினான் கருங்கைவாணன். அவனது தாக்குதல் உத்தி இன்னும் கடுமையாக இருக்கும் என எண்ணும்போது ஆறு பரண்களின் மேலிருந்தும் முரசின் ஓசை மேலெழுந்தது.
யாரும் எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. அதிர்ந்து பார்த்தனர் பலரும். நினைவு மீண்டவனைப்போல சட்டெனத் திரும்பிய மையூர்கிழார், ``மூஞ்சலை நோக்கித் தேரை விரட்டு” என்றார்.
அவர் போகத் தொடங்கியதும் அவரைவிட வேகமாக மூஞ்சலை நோக்கி விரைந்தான் கருங்கைவாணன். தட்டியங்காடெங்கும் கடைசி ஐந்து பொழுதுகளில் நினைத்துப்பார்க்க முடியாதபடி தாக்குதல் தொடுத்த வீரர்கள், முரசின் ஓசை கேட்டதும் ஆயுதம் ஏந்திய கைகளைத் தளர்த்தினர். ஆனால், தளபதிகள் முன்னிலும் வேகமாகவும் படபடப்புடனும் மூஞ்சலை நோக்கி விரைந்தனர்.
கருங்கைவாணனின் தேரைத் தொடர்ந்து அதே வேகத்தில் முடியன் வந்துகொண்டிருந்தான். மூன்று நாள்களாகக் குதிரை ஏறாத தேக்கன், முடியனை விஞ்சியபடி குதிரையில் பாய்ந்துகொண்டிருந்தான். விலா எலும்பு உள்குத்தி இறங்குவதெல்லாம் தேக்கனின் நினைவிலேயே இல்லை. அவனைத் தொடர்ந்து உதிரன் வந்துகொண்டிருந்தான்.
மூஞ்சலின் வெளிப்புற அரண் அருகே வந்து நின்றது முடியனின் தேர். அவனுக்கு முன்னால், தன் கண்களையே நம்ப முடியாமல் உறைந்து நின்றான் கருங்கைவாணன். அவர்கள் உயிரெனக் காத்த மூஞ்சல், கண் பார்க்கும் எல்லை வரை நொறுக்கப்பட்டுக்கிடந்தது. வெட்டுப்பட்ட வீரர்களின் உடல்கள் மலையெனக் குவிந்திருந்தன. தேரையோ குதிரையையோ உள்ளே கொண்டுசெல்ல முடியாத அளவுக்கு எல்லாம் நிலைகுலைந்திருந்தன.
எந்த ஒரு போர்க்களத்திலும் குறுகிய வட்டத்துக்குள் இத்தனை ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கருங்கை வாணன் திகைத்து நின்றபோது முடியனின் கண்கள் துடித்தபடி இருந்தன. மூஞ்சலுக்குள் ஒருசில வீரர்கள் மட்டுமே இங்கும் அங்குமாகத் தென்பட்டனர். கவசப்படையோ, அகப் படையோ, சூளூர்ப்படையோ எந்தப் படையைச் சேர்ந்த வீரர்களும் கண்ணில்படவில்லை. குதிரைகள் கணக்கில்லாமல் குத்திச் சாய்க்கப் பட்டுள்ளன. குவிந்துகிடக்கும் பிணக்குவியலின் மீது மிதித்து நடக்க முடியவில்லை. எல்லோரும் அப்படியே நின்றிருந்தனர்.
தொலைவில் ஒருவன் மட்டும் நடந்துவருவது தெரிந்தது. யாரவன் என்று யாராலும் அடையாளம் காண முடியவில்லை. செந்நிறக் குருதியில் மூழ்கி எழுந்து வந்துகொண்டிருந்தான். கால்களை இழுத்து முன்னகர முடியவில்லை. ஆனாலும் விடாமல் முயன்று வந்தான். உடலில் எங்கெல்லாம் வெட்டுப்பட்டுள்ளது என்பது எதுவும் தெரியவில்லை. குருதி கொட்டியபடி இருந்தது. அவனது உடலமைப்பைப் பார்த்ததும் அவன் இரவாதன் இல்லை என்பது தெரிந்தது.
கையின் வலதுமூட்டின் ஓரச்சதையில் துளைத்திருந்த சிறுவாள் ஒன்று அப்படியே இருந்தது. அதைப் பிடுங்கக்கூடிய வலிமையின்றி நடந்துவந்தான். சற்று அருகில் வந்ததும் முடியன் அடையாளம் கண்டான், அவன் கரிணி என்று.
கண்டுணர்ந்த நேரத்தில் அவனை நோக்கி ஓடினான் முடியன். ஆனால், முன்னால் இருந்த வேந்தர்படை வீரர்கள் ``மூஞ்சலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று வாளால் மறித்து நிறுத்தினர்.
துடித்துப்போய் நின்றான் முடியன். தேக்கனும் உதிரனும் அவனருகில் பதற்றத்தோடு வந்து நின்றனர்.
கரிணி மூஞ்சலின் எல்லையை வந்தடைவதற்கு வெகுநேரமானது. உயிரை இழக்காமல் நடந்துவந்தவன், முடியனின் அருகில் வந்ததும் தான் கையில் கொண்டு வந்த வாளை, பறம்பின் குடிமுடியனிடம் ஒப்படைத்தபடி அப்படியே மண்ணில் விழுந்தான்.
முடியன் கையில் வாங்கியது இரவாதனின் ஈர்வாள்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன்