மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 8

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

ல் கம்பத்தில் ஏறி எந்தப் பிடிமானமுமற்றுக் கயிற்றில் நடக்கும் நம் கலைகளின் மூதாதையன் பாபுஜியை நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும். ``மேல ஆகாசம்... கீழ பூமி... நடுவுல வாழ்க்க சாமி...” என்று சொல்வார் பாபுஜி. பனங்கொட்டைத் தலையில் கோணல்மாணலாக வெட்டிய முட்புதர்களைப்போல வளர்ந்திருக்கும் முடியும், படர்ந்த நெற்றியின் நடுவே பொட்டுபோல வட்டமாக ஒற்றை நாணயமாய்ப் பதிந்திருக்கும் தழும்பும், வெயிலின் வார்பிடித்த பாறையின் ஒரு துண்டை வெட்டிச் செய்த உடம்பும், முறம் போன்ற பாதங்களின் வெடிப்பு ரேகைகளில் பல ஊர் மண்களின் வாசனை கமழ்ந்துகொண்டிருக்கும் பாபுஜியை, கொத்தவால்சாவடியின் பரபரப்பான நாற்சந்தியில் ஒரு சாகசத்தில் சந்திக்க நேர்ந்தது.

நான்காம் சுவர் - 8

பஜாரில் ஜீன்ஸ் கடையில் வேலை செய்து கொண்டிருந்த நேரமது. கடை என்றால், நான்கு தார்ப்பாய்களால் சுற்றப்பட்ட கூடாரம் போன்றது. கோணியை இழுத்துவிட்டால் கடை மூடியதாக அர்த்தம். கொட்டுச் சத்தம் கேட்டதும் நானும் மாமாவும் சாகசத்தைப் பார்க்க வந்தோம். ஒரு மீன்பாடி வண்டியில் பேட்டரியில் வொயர் செருகி ஸ்பீக்கர் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது.

`வயிற்றுக்காக மனுஷன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு... ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம்தான்டா சோறு...’ டி.எம்.எஸ் உற்சாகத்தில் பாடினார். பாடலுக்கேற்றாற்போல் பாபுஜி அந்தரத்தில் நடந்துகொண்டிருந்தார். சுற்றி இருந்த கூட்டத்தை அவ்வப்போது பார்த்துச் சிரித்துக் கொண்டார். கையில் மூங்கில் கம்பு ஒன்றைப் பிடிமானத்துக்காக வைத்துக்கொண்டார். கட்டுக்கடங்காத கூட்டத்தில் தனக்கென ஒரு மேடை அமைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார் பாபுஜி. கீழே மீன்பாடி வண்டியில் வயதில் மூத்த ஒருத்தியும், இளைய ஒருத்தியும் குட்டைப் பாவாடையில் ஆடிக் கொண்டிருந்தனர். அந்தரத்துக் கம்பியில் நடந்து கொண்டிருந்த பாபுஜியை மாமா பார்க்காமல், கீழே நடனமாடிக்கொண்டிருக்கும் மூத்தவளின் தொந்தியை ரசித்துக்கொண்டிருந்தார். ``யோவ் மாமா...” என்றபோது என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்.

சாலையின் இந்தப் பக்கம் காய்கறிகளும் சகதியுமாக, கொத்தவால் சாவடியில் ``நாட்டுத் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கே...” என்று வியாபாரத்தினிடையே, அவ்வப்போது பாபுஜியின் சாகசத்தையும் பார்த்துக்கொள்கிறான் ஒருவன். அந்தப் பக்கம் பேருந்துகளின் ஹாரன் ஒலிகளும், வெளியூர்ப் பேருந்தைப் பிடிக்க விரைந்து செல்லும் பயணிகளும், கைவண்டியைத் தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டிருக்கும் முதியவனும் பாபுஜியைப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். குழந்தைகள் தான் உற்சாகத்தில் கைதட்டின.

கலைஞன் என்பவன், கைதட்டல்களால் நிறைந்து வழிபவன். உற்சாகமாகிப்போன பாபுஜி, கீழே பார்த்து தன் முதல் மனைவியிடம் கண்ணடித்தார். ஆடிக்கொண்டிருந்தவர், சைக்கிள் வீலை எடுத்து ஆடிக்கொண்டே தூக்கிப் போட்டார். அந்தர நடையிலிருந்த பாபுஜி, லாகவமாக வீலைப் பிடித்துக்கொண்டார். அந்த வீலில் மிதிக்கும் பெடல் இருந்தது. உட்காருவதற்கு ஒரு சீட்டும் இருந்தது. அது ஒரு வீல் சைக்கிள். கயிற்றில் அந்த சைக்கிளைப் பொருத்தி அநாயாசமாக அதில் ஏறி அமர்ந்துகொண்டார்.

நான்காம் சுவர் - 8

வாழ்வில் தடுமாற்றம் என்பது, இந்த மனிதர்களுக்கு வரவே வராதுபோல. ``எல்லோரும் ஜோரா ஒரு தடவ கைதட்டுங்க சாமியோவ்...” என்று இளைய மனைவி சொல்ல, செத்தவனுக்கு வெற்றிலைபாக்குக் கொடுப்பதுபோலக் கைதட்டினார்கள். குழந்தைகளின் கண்களிலிருந்த ஆவல், பாபுஜியை உற்சாகப்படுத்தியது. அந்தரக் கயிற்றில் பாபுஜி சைக்கிளை ஓட்டினார்.

`மல் கம்பத்தின் முடிவில் சைக்கிள் முட்டியதும் எப்படித் திரும்புவார்?’ என யோசித்தபோதே, பாபுஜி சைக்கிளைப் பின்பக்கமாகவும் ஓட்டினார். முற்றிலும் பாதைகள் மூடப்பட்டாலும் பாபுஜியால் தனக்கென ஒரு பாதையை உண்டாக்கிக்கொள்ள முடிகிறது. இப்படியாக முன்னும் பின்னும் சைக்கிளை ஓட்டியவர், மல் கம்பத்திலிருந்து இறங்கினார். ஆடிக்கொண்டிருந்த தன் மனைவிமார்களோடு தானும் ஒரு குத்தாட்டம் போட்டார்.

சுற்றி இருந்த ஜனம் சிரித்தது. ஆடிக்கொண்டே வந்தவர், தனது வீட்டிலிருந்து அதாவது மீன்பாடி வண்டியிலிருந்து கம்பியால் ஆன ஒரு வளையத்தை எடுத்து, தன் பிள்ளைகளிடம் வீசினார். எக்கிப் பிடித்த பிள்ளைகளைப் பார்த்து பாபுஜி கண்ணடித்தார். பால்மணம் வீசும் பிள்ளைகளின் சிரிப்பில் தன்னை மறந்தார். டோலக்கைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு வாசிக்கத் தொடங் கினார். பிள்ளைகள் இருவரும் அந்த வளையத்தைக் கையில் சுற்றிக்கொண்டே கூட்டத்தினர் முன்பு ஆடினார்கள். மனைவிமார்களும் குத்தி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

``ஊரான ஊருக்குள்ள வந்திருக்கிற நாடோடிங்க சாமி நாங்க... வணக்கஞ்சாமி... இவ்ளோண்டு ரிங்குக்குள்ளே... நம்மோ புள்ளைங்கோ நுழைஞ்சு வருங் சாமி... ஏ... புள்ள சோனா...” என்று டோலக்கை சூழ்நிலைக்கேற்றாற்போல் வாசித்தார். இப்போது சோனா சிறு வளையத்தில் தன் இரண்டு கால்களையும் நுழைத்தாள். சுற்றி இருந்த சோனா வயதையொத்த பிள்ளைகள், பள்ளிக்குப் போவதையும் மீறி, பார்த்துவிட்டுப் போகத் துடித்தார்கள்.

வளையம் சோனாவின் முட்டிக்குமேல் ஏற, இறுகியது. `இதில் எப்படி நுழைந்து வெளியே வரப்போகிறது பிள்ளை?’ என, சுற்றிலும் இருந்தவர்கள் சினிமாவின் கடைசிக் காட்சியை இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்ப்பதுபோலப் பார்த்தார்கள். நம் மக்களுக்கு, வேடிக்கைபார்த்தல் என்பது இயல்புகளில் ஊறிப்போனதுதானே... வளையத்தினுள்ளே வயிற்றை நுழைத்தாள் சோனா. இப்போது சோனாவைச் சுற்றி எல்லோரும் மறைந்துபோனார்கள். அவள் ஒரு காட்டில் மலைப்பாம்பு என உருமாறுகிறாள். செம்மறி ஆட்டை உள்ளே நுழைத்து மலைப்பாம்பின் பொறுமை கைக்கொள்கிறாள். சிரித்துக் கொண்டிருந்த சோனாவின் கண்கள், தன் வாழ்வின் மீதான தீராத பெரும் வாதையிலிருந்து நுழைந்து வெளியேறிவிடத் துடித்துக் கொண்டிருந்தன.

கூட்டத்தில் இருந்த ஒரு குழந்தையை வம்படியாக ஒருத்தி பள்ளிக்குக் கூட்டிச் சென்றாள். அந்தக் குழந்தை, `சோனா நுழைந்து வெளியே வந்துவிடுவாளா?’ எனத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தது. இப்போது வளையம் பாம்பின் கழுத்தில் வந்து நின்றது. டோலக் வாசித்துக்கொண்டிருந்த பாபுஜி ``சாவுக்கும் வாழ்வுக்கும் ஒரு சாண் உயரம்தான் சாமீ...” கழுத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் வளையத்திலிருந்து கைகளால் ஒரு சாண் வைத்து ``சோனா சாவத் தாண்டி வரணும்னு குலசாமிய வேண்டிக்கோ சாமீ” என்று டோலக்கைத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கினான். ஒரு பிடிச் சோற்றுக்கென வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிக்கொண்டிருக்கும் சோனாவை, உங்களைப்போலவே நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆடிமாத காலம் என்பதால், நாங்களும் தள்ளு படியில் துணிகளைத் தள்ளிக்கொண்டிருந்தோம். ஆகவே, இராப்போதுகளில்தான் வீட்டுக்குப் போக முடிந்தது. நசீர் கடையில் மொய்ங்காவை பேஜோ உதிர்த்துப்போட்டு மாமா ஜொள்வடிய சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு போன் வந்தது. ``சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... ஃப்ரெஷ் பீஸு அடுத்த வாரம் எறங்குது... நாலு நாள் ஊட்டிக்குக் கூட்டிட்டுப் போயி என்ஜாய் பண்ணுங்க சார்...” போனை வைத்துவிட்டு மொய்ங்காவோடு மல்லுகட்ட ஆரம்பித்தார் மாமா.

ஒரு சிகரெட்டைப் போடலாம் என நடந்தோம். கடையில் முதலாளி கணக்கு பார்த்துக்கொண்டி ருந்தார். புகைப்பதற்கு சுலாப் இன்டர்நேஷனல்தான் எங்கள் ஜாகை. அங்கே போனபோது காலையில் பார்த்த பாபுஜி அவரது வீட்டை (மீன்பாடி வண்டியைத்தான்) சுலாப்புக்குப் பக்கத்தில் நிறுத்தி விட்டு மங்கிய தார்ப்பாய் ஒன்றை சாலையில் விரித்து உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வளையத்தை விழுங்கிய மலைப்பாம்பு, மீன்பாடி வண்டியில் உட்கார்ந்து சிலேட்டில் `அனா ஆவன்னா’ எழுதப் பழகிக்கொண்டிருந்தது. குட்டைப் பாவாடையில் ஆடிக்கொண்டிருந்த தேவதைகள், சோற்றைப் பிசைந்து பிள்ளைகளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தார்கள். மீன்பாடி ஸ்பீக்கரில் சன்னமாக `துஜ் மே... ஹுன் மே... முஜ் மே... ஹை து... பூலோன் மே... பஷீ ஹே... ஜெய்சே குஷ்ஷீபூ...’ என்று முகமது ரஃபி பாடிக்கொண்டிருந்தார். சோடியம் விளக்கின் மஞ்சள் பூத்த ஒளியில் தனக்கென ஒரு குடிலை அமைத்து வாழ நாடோடிகளால்தான் முடியும். இந்தச் செடியை எங்கு நட்டாலும் வளர்ந்து பூத்துச் சிரிக்கும்.

நான்காம் சுவர் - 8

எல்லா மண்ணையும் பிசைந்து செய்த உருவங்கள்தான் நாடோடிகள். என்னவோ பாபுஜியிடம் பேசவேண்டும்போல் தோன்றியது. சுலாப் வாசலில் தங்கையா, கக்கா போகிறவனிடம் கல்லா கட்டிக்கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் போய் அமர்ந்துகொண்டேன். ``ஏமிரா... பிசினெஸு சூடு பிடிக்குதுபோல...” தங்கையா கலாய்த்தார். பாபுஜி என்னைப் பார்த்தார். நான் வணக்கம் சொன்னேன். பாபுஜி சாப்பிட்ட தட்டைக் கீழே வைத்துவிட்டு, எழுந்து எனக்கு வணக்கம் சொன்னார். அப்போதுதான் புரிந்தது இந்த மனிதனுக்கு வணக்கம் வைத்த முதல் ஆள் நான்தான் என்று.

``சாப்பிடுறீங்களா சாமீ...” என்று கேட்டார். சக மனிதனின் பசியை இவர்களைவிட வேறு யார் உணர்ந்துவிட முடியும்?

``இல்லண்ணே. இப்பதான் சாப்ட்டோம்” என்றேன். மாமா, தங்கையாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

``உங்க பேரு என்னண்ணே?”

``பாபுஜி... சாமி” என்றார். சாப்பிட்டு முடித்துக் கை கழுவிக்கொண்டார். ஒரு சிகரெட்டைக் கொடுத்தேன். ``வேண்டாஞ்சாமி. நமக்கு சுருட்டு தான்” என்று சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டார்.

``அந்தரத்துல நடக்குறீங்க... டைவ் அடிக்கிறீங்க... பிள்ளைங்க வரைக்கும் உங்க கலையைப் பண்ணுதுங்க. நீங்க யாருகிட்டண்ணே கத்துக்கிட்டீங்க?” சுருட்டை இழுத்துப் புகையை விட்டார். அடர்த்தியாக வெளியேறியது புகை.

``சாமீ... எங்கள `தொம்பரக்கூத்தாடிங்க’ன்னு சொல்லுவாங்க. பொதுவா `கழைக்கூத்தாடி’ன்னும் சொல்லுவாங்க. இந்த வெளையாட்ட காலங்காலமா எங்க பாட்டன் பூட்டன் அப்பன் சொல்லிக்கொடுத்ததுங்க. பொறந்து நடக்க ஆரம்பிச்ச உடனே வெளையாட்டச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுடுவோம். சோறு போடுற வெளையாட்டச் சொல்லிக்கொடுக்கணும்கிறது எங்க குலதர்மம். சோனாவுக்கு நா இல்லாமப் போனாலும் அவ கத்துக்கிட்ட இந்த வெளயாட்டு அவளக் காப்பாத்தும் சாமி...” என்றபோது சோனாவைப் பார்த்தேன். மலைப்பாம்பு என்னைப் பார்த்துச் சிரித்தது.

``ஆனா சாமி... சோனாவ எழுதப் படிக்க வெச்சிரணும்னு ஆசைப்படுறேன். ஏன்னா, இப்பல்லாம் சர்க்கஸ்காரங்க அங்கங்க டேரா போட ஆரம்பிச்சுட்டாங்க. வெளையாட்டுக்கு மூத்தவங்க இந்தத் தொம்பரக்கூத்தாடிங்கதான். ஆனா, ரோட்ல வெளையாடினா பிச்சை யெடுக்கிறவன்னுதான் காசு போடுறானுங்க. என் காலத்துல சோனாவ கொஞ்சம் படிக்க வெச்சுட்டனா போதும் சாமி” சுருட்டை முடித்து நசுக்கிப் போட்டார் பாபுஜி. அப்போது ஒரு தொப்பிக்காரர் வந்தார்.

``ஏய்... இங்க இன்னா வித்த காட்றீயா?” மீன்பாடி வண்டியின் ஸ்பீக்கரை லத்தியால் தட்டினார்.

பாபுஜி எழுந்து ``சாமீ... பொழைக்கிற வண்டிய தட்டாத சாமீ... ராவுக்குப் படுத்துட்டு பொழுதுக்குப் பொறப்பட்ருவோம் சாமீ” என்றார் பாபுஜி. இளைய மனைவியின் இடுப்பு முந்தியில் கை வைத்த தொப்பி, ``எவ்ளோ வெச்சிருக்க?” என்றார். அவரது முகம் அப்போது அவ்வளவு கேவலமாக இருந்தது. பாபுஜி தனது பெல்ட்டின் ஜிப்பைத் திறந்து 50 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். வாங்கிக்கொண்ட தொப்பிக்காரர், ``காலையில இருக்கக் கூடாது, புரியுதா?” என்று இளைய மனைவியைப் பார்த்துக்கொண்டே நடந்தார்.

எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. பாபுஜி வந்து அமர்ந்துகொண்டார். ``எங்க கை வைக்குறான் பாரு சாமீ... ரோட்ல வெளையாடுற பிச்சக்காரங்க தானேன்னு நினைச்சுட்டான். இந்த உலகத்துக்கு வெளையாடுற கலையைச் சொல்லிக்குடுத்த தொம்பரக் கூத்தாடிங்கடான்னு ஒரு இழு இழுத்திருப்பேன்... நாயி, இவன் இல்லன்னா இன்னொருத்தன் வருவான்” பாபுஜியின் சினம் நம்மால் புரிந்துகொள்ள முடியாதது. நாடோடிகளாக வாழ்ந்து, நம் பெண்டு பிள்ளைகளைக் கறையான்களிடமிருந்து காத்துக்கொண்டு ஜீவிதம் நடத்தினாலொழிய நமக்குப் புரியாது.

``நீங்க என்ன சாமீ பண்றீங்க?”

``பக்கத்துல ஜீன்ஸ் யாவாரம்ண்ணே.”

``சோனாவுக்குக்கூட ஒண்ணு எடுக்கணும் சாமீ...” என்றபோது சோனா சிலேட்டோடு மீன்பாடியிலிருந்து இறங்கி, பாபுஜி மடியில் வந்து அமர்ந்துகொண்டாள்.

``பப்பா... உன் பேரு எழுதியிருக்கேன். பாரு பப்பா” சிலேட்டில் `பபுஜீ’ என எழுதியிருந்தாள் சோனா. நானும் பார்த்தேன். பாபுஜி பெருமிதத்தோடு பார்த்தார்.

``நிரந்தரமா ஒரு இடம் இல்லாததால சோனாவ பள்ளிக்கூடத்துல சேத்துக்க மாட்ராங்க சாமீ... அவங்க பாக்குற பார்வையிலேயே சோனா அங்க இருக்கக் கூடாதுன்னு கூட்டியாந்திருவேன். ஒரு புண்ணியவதி, சோனாவுக்கு எழுதப் படிக்கக் கத்துத்தர்றாங்க. சனி ஞாயிறு அந்தம்மா வூட்டுக்கு சோனாவக் கூட்டிக்கிட்டுப் போவன்” `இப்பேர்ப்பட்ட கலைகளைச் சுமந்துகொண்டு வாழும் இந்த நாடோடிகள், இந்த தேசத்தில் பிறந்துவிட்டார்களே!’ என வருத்தமாக இருந்தது எனக்கு. இந்தக் கலைஞர்களைத் தூக்கிக் கொண்டாடியிருக்க வேண்டாமா இந்தச் சமூகம்? எந்த முகவரியுமற்று, அங்கீகாரமற்று, வீடற்று, நாடற்று சாகசக் கலை புரியும் இந்தத் தொம்பரக் கூத்தாடிகளின் கலைகளுக்கு முன்னால் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

`உன் கலைகளுக்குச் சில்லறைகளைப் போடும் இவர்களிடம் கை ஏந்த வேண்டாம் சோனா... உனது கல்வி சிறக்கட்டும். உனது கலை வாழ வைக்கும்’ என நினைத்துக்கொண்டேன். பாபுஜியிடம் சொல்லி விடைபெற்றேன். சோனா, பாபுஜியின் வெடித்திருந்த பாதத்தில் புகுந்திருந்த சிறு கல்லை சிறு குச்சியால் நிமிட்டி எடுத்துக் கொண்டிருந்தாள். சோனாவைப் பார்த்தேன். சோனா சிரித்தாள். என் பிள்ளை என்னைப் பார்த்துச் சிரிப்பதைப்போலவே இருந்தது.

றுநாள் வியாபார நேரத்தில் டோலக் வாசிக்கும் சத்தம் கேட்டது, சென்று பார்த்தேன். தூரத்தில் ஒரு கொம்பில் வயிற்றைக் கிடத்தி அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு பறவைபோல மிதந்துகொண்டிருந்தாள் சோனா. கூட்டத்தை விலக்கிப் பார்த்தேன். டோலக்கை மூத்தவள் வாசித்துக்கொண்டிருந்தாள். பாபுஜி, நெற்றியில் அந்தக் கொம்பையும் தன் பிள்ளை சோனாவையும் தாங்கிக்கொண்டிருந்தார். எல்லோரும் முதல் தடவையாக வெகுநேரம் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மலைப்பாம்பு, இப்போது பறவையாக மாறியிருந்தது. சோனாவைப் பார்த்தேன். வானத்திலிருந்து வந்த தேவன், களிகூர்ந்து ஆசி வழங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. சற்றே பிசகினால் சிதறி விழும் பறவையாகிவிடுவாள் சோனா.

திடுதிப்பென நெற்றியிலிருந்து கம்பை ஓர் எக்கு எக்கினார். கம்பு கீழே விழ, வானத்திலிருந்து தேவதை மிதந்து பூமிக்கு வந்தாள். பாபுஜி தன் பறவையைக் கைகொண்டு ஏந்திக்கொண்டார். எல்லோரும் கைதட்டினர். பூமிக்கு வந்த சோனா, அலுமினியத்தட்டை எடுத்து சுற்றிலும் நின்றுகொண்டிருந்தவர்களிடம் ஏந்தினாள். சில்லறை நிறைந்தது. சிலர் நழுவிக்கொண்டார்கள். எனக்கு வெய்யிலின் கவிதைதான் நினைவுக்கு வந்தது.

`ஆகாச விரிவு கண்டு அஞ்சி
இமைகளை இறுக்கிக்கொள்ளும் குழந்தை
கம்பத்தினுச்சியில் மல்லாந்து கிடக்கையில்
தயவுசெய்து பிச்சையிடுங்கள்
இன்றேல்,
வில் தைத்த பறவைக் குஞ்சாய்
வீழும் பிஞ்சுடம்பை ஏந்துகையில்
தகப்பனின் கைகளைத் தட்டிவிடுங்கள்.’

- மனிதர்கள் வருவார்கள்...