
அன்னிக்கு வஞ்சகமா கொல்லப்பட்ட பூவுளத்தா இன்னிக்குப் பலநூறு குடும்பங்களுக்குக் குலதெய்வமா இருந்து வழிநடத்துறா...
நம்ம மாலைக்குட்டி இருக்காரே... நல்ல வளமான ஆளு. சொத்து சொகமுனு நெறையக் கெடக்கு. பெரிய சனக்கட்டு. ஊருல பங்காளிகளோட சொத்துத் தகராறு. அதனால எல்லாரையும் ஒதுக்கிட்டு இந்த ஊருக்கு வந்து குடியிருக்காரு. மனுஷனுக்கு இந்தூர்லயும் நல்ல மருவாதி. நல்லது, கெட்டது பண்ணணும்னா யாரும் இவரில்லாம பண்ண மாட்டாக. பொதுக்காரியங்கள்லயும் ஈடுபாடான ஆளு.
மாலைக்குட்டிக்கு ஆறு ஆம்புளைப் பயலுவ. எல்லாம் வலுவான ஆளுக. வம்பு, தும்புன்னு வந்தா ஆறு பயலுகளும் கைகோத்துக்கிட்டு மல்லுக்கு நிப்பானுவ. நாலு தலைமுறைக்குச் சொத்து, தோளுக்குச் சமமா ஆறு ஆம்பளைப் பயலுக இருந்தாலும் மாலைக்குட்டிக்கு ஒரு பெரிய மனக்குறை உண்டு. ஆஸ்திக்கு ஆறு ஆம்பளைப் பசங்களைக் கொடுத்த செங்கிடாக்காரன், ஆசைக்கு ஒரு பொம்பளப் புள்ளையைக் குடுக்கலையே... வீட்டுக்குப் பக்கத்துலேயே செங்கிடாக்காரனுக்குப் பீடம் எடுத்துக் கோயிலு கட்டிக் கும்புட்டாரு மாலைக்குட்டி. தெனமும் போயி ‘எனக்கொரு பெண் வாரிசுக்கு வரம்குடு சாமி’னு கேக்காத நாளுல்ல. ஒருக்கா, மாலைக்குட்டி குரல் செங்கிடாக்காரனுக்குக் கேட்டிருச்சு.
அந்த தெய்வக்கருணையில பாக்கியத்தா முழுகாம இருந்தா. பத்தாம் மாசம், மலர்ந்த பூ மாதிரி அழகான ஒரு பொம்பளப் புள்ளையப் பெத்தெடுத்தா பாக்கியத்தா. பூமாதிரி இருந்ததால ‘பூவுளத்தா’னு பேரு வெச்சாக. ஆறு அண்ணங்காரனுவளும் உசுருக்கு உசுரா தங்கச்சிய பாத்துக்கிட்டானுவ. ஆயி அப்பனுக்கும் வாழ்க்கையே நிறைவான மாதிரி இருந்துச்சு.

பூவுளத்தா வளர்ந்தா. பெரிய மனுஷன் வீட்டுப் புள்ளைங்கிறதால அவளை ஊரே தம் வீட்டுப்புள்ள மாதிரி நெனச்சுச்சு. ஆடை, அணிகலன்னு புதுசு புதுசா வாங்கிக் குவிச்சானுவ அண்ணங்காரனுவ. பூவுளத்தாவும் அண்ணங்காரனுங்க மேல உசுரயே வெச்சுருந்தா.
பதிமூணு வயசுல பெரிய மனுசியானா பூவுளத்தா. அதுவரைக்கும் சிட்டுக்குருவி மாதிரி ஊருக்குள்ள சுத்தித்திரிஞ்ச அவளை, அதுக்குமேல வெளியில செல்ல அனுமதிக்கலே பாக்கியத்தா. ‘வயசுப்புள்ள, வெளியில போன நாலு நல்ல கண்ணுபடும், நாலு கெட்டக் கண்ணுபடும்... ஆவி கீவி அண்டிக்கும்’னு அவளுக்குப் பயம். பூவுளத்தாவும் வீட்டுக்குள்ளயே இருந்தா.
அந்தச் சுவத்துக்கும் இந்தச் சுவத்துக்கும் நடந்துக்கிட்டு எவ்வளவு காலத்துக்கு வீட்டுக்குள்ளயே கெடக்க முடியும். போரடிச்சுப் போச்சு புள்ளைக்கு. ஒருக்கா, அண்ணங்காரனுங்களைக் கூப்புட்டு, ‘என்னை மாதிரி புள்ளைகள்லாம் வீட்டுக்குள்ள உக்காந்துக்கிட்டு ராட்டை நூத்துக்கிட்டிருக்குதுக. எனக்கும் ஒரு ராட்டை வாங்கித்தந்தா நூப்பேன்ல’னு கேட்டா. ‘நம்ம அப்பன் சேத்து வெச்சிருக்கிற சொத்தே நாலைஞ்சு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம்னு இருக்கு. போதாக்குறைக்கு நங்கூரம் கணக்கா உனக்கு ஆறு அண்ணங்காரனுவ இருக்கோம். நீ எதுக்கு தாயி உடம்பை வருத்தி நூலு நூற்கணும்? உடம்புக்கு ஒப்புக்காமப் போயிரும். நீ பாட்டுக்குச் சாப்பிட்டமா, வீட்டுக்குள்ள விளையாண்டமானு இரு தாயி’ன்னான் மூத்தவன். ‘இல்லண்ணே... நான் சம்பாதிச்சுக் கொடுக்க ணும்னு இல்லே. நேரம் போவமாட்டேங்குது.ராட்டை இருந்தா சும்மா சுத்திக்கிட்டுக் கெடப் பேன்ல’னா பூவுளத்தா. அண்ணங்காரனுவளுக்குப் பாவமாப்போச்சு. ‘தங்கச்சிக்கு ராட்டை வாங்கித் தந்திருவோம்’னு ஆறு பயலுவலும் கிளம்புனானுவ.
ராட்டை வாங்கி ஆறு பேருக்கும் அனுபவமில்லை. ஊரு, ஊராச் சுத்தித் திரிஞ்சானுவ. ராட்டை செய்யற ஆட்களைக் கண்டுபிடிக்க முடியலே. வழியில மாடு ஓட்டிக்கிட்டு நாலைஞ்சு பேரு நடந்து வந்திக்கிட்டிருந்தாக. ஆறு பயலுகளும் முகம்வாடிச் சுத்துறதைக் கவனிச்ச அந்தாளுக, ‘என்னா தம்பிகளா... வாட்டமா அலையுறீக’ன்னு கேட்டாக. ‘ஒத்தைத் தங்கச்சி ஆசையா ராட்டை கேட்டா. நல்ல ராட்டை வாங்குறதுக்காக அலையுறோம். ஆனா, எங்கேயும் வாய்க்க மாட்டேங்குது’னான் மூத்தவன். ‘அடடே... தம்பியளா... என்கூட வாங்க. தெரிஞ்ச ஒருத்தரு ராட்டை செய்றாரு. வாங்கித்தாரேன்’னு கூட்டிக்கிட்டுப் போனாரு ஒரு பெரியவர். ராட்டைக்கு விலை தெகஞ்சு யாவாரம் முடிச்சு வாங்க ராவாகிப்போச்சு. அமாவாசை இருட்டு வேற. மழை வேற புடிச்சுக்குச்சு. அந்தப் பெரிய மனுஷன், ‘தம்பியலா... இந்த இருட்டுலயும் மழையிலயும் போக வேணாம். எம் வீட்டுல ராத்தங்கிட்டுக் காலையில கிளம்புங்க’னாரு.
முதல்ல தயங்குன பயலுக, கடைசியா இசைஞ்சானுக. ஆறு பேத்தையும் அந்தப் பெரிய மனுஷனோட சம்சாரம் நல்லா உபசரிச்சா. காயி, கறியெல்லாம் போட்டுக் கனமா சமைச்சுச் சாப்பிடக் கூப்புட்டா. கடைசிப்பய சத்தமில்லாம மூத்தவன்கிட்ட, முகம் தெரியாத வீட்டுல சாப்பிடுறோமே... நாளைக்கு எதுனா வம்பாகிறப்போகுது’ன்னான். ‘அடப்போடா சின்னப்பயலே. இதுல வம்பாகுறதுக்கு என்னடா இருக்கு? வந்தவுகளை இவ்வளவு சந்தோஷமா வரவேத்து சோறு போடுறாக. இவுகளால நமக்கென்ன பிரச்னை வரப்போகுது?’னு திட்டுனான் மூத்தவன். எல்லாப்பேரும் வயிறு முட்டத் தின்னுட்டு கதைபேச ஆரம்பிச்சானுவ. அந்தப் பெரிய மனுஷன் எல்லாருக்கும் வெத்திலை மடிச்சுக் குடுத்தார். நல்லாத் தூங்கி எழுந்திரிச்சு விடியக்காத்தால வீடு வந்து சேந்தானுவ ஆறு பேரும்.
அண்ணனுங்க வாங்கியாந்த ராட்டையப் பாத்தவுடனே பூவுளத்தாவுக்கு முகம் மலந்துபோச்சு. ஆசை ஆசையா வாங்கி நூற்க ஆரம்பிச்சா. பொழுது அதுபாட்டுக்கு வேகவேகமா ஓடுச்சு. பூவுளத்தாவுக்கு நிறைய சம்மந்தங்க வர ஆரம்பிச்சுச்சு. உறவுக்காரங்கள்லாம் வரிசையா வந்துபோக ஆரம்பிச்சாக. ஆனா, மாலைக்குட்டி யாருக்கும் பிடிகொடுக்கலே. ‘எம்மவ இருக்கிற அழகுக்குச் சீமையில இருந்து பெரிய குடும்பத்து மாப்பிள்ளைக வருவாக’னு சொல்லி அனுப்பி வெச்சுட்டாரு.
ஒருநா காலையில அஞ்சாறு ஆம்புள, பொம்புளைக தாம்பூலத் தட்டோட வீட்டுக்கு வந்தாக. அவுக யாரு என்னன்னு யாருக்கும் வெளங்கலே. வீட்டுக்குள்ளாற கூப்பிட்ட மாலைக்குட்டி, என்ன ஏதுன்னு விசாரிச்சாரு. ‘எங்களை உங்க பிள்ளைகளுக்கு நல்லாவே தெரியும். ராட்டை வாங்க வந்தப்போ எங்க வீட்டுல தான் தங்கியிருந்து கைநனைச்சுட்டு வந்தாக. உங்க மவளை எங்க புள்ளைக்குப் பொண்ணுக்கேட்டு வந்திருக்கோம்’னு சொன்னாக.

மாலைக் குட்டிக்குக் கோபம் தலைக்கேறியிருச்சு... கடுமையாப் பேசி தாம்பூலத் தட்டைத் தூக்கி வெளியே வீசிட்டாரு. ஆறு பயலுகளும் என்ன பேசுறதுன்னு தெரியாம மௌனமா நின்னானுவ.
அந்தக்குடும்பத்துக்குப் பெரிய அவமானமாப்போச்சு... ‘இன்னும் ஒருவாரத்துல ஒம்பொண்ணைச் சிறையெடுத்துக்கிட்டுப் போயி கல்யாணம் பண்றோம் பார்’னு சவால் விட்டுட்டுக் கிளம்பிட்டாக.
மாலைக்குட்டிக்கு உடம் பெல்லாம் வியர்த்துப் போச்சு. தம் புள்ளைகளைக் கூப்பிட்டாரு. ‘தோ பாருங்கடா... அவனுவ சாதாரண ஆளில்லை... காட்டானுக... அடுத்த எட்டு நாளும் ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பூவுளத்தாவுக்கு காவலிருக்கணும். ஊரு எல்லையைத் தாண்டி எவன் வந்தாலும் அவனுவளை வெட்டித்தள்ளணும்’னு சொல்லிட்டாரு.
ரெண்டு நாளு ஓடிப்போச்சு. அன்னிக்கு மூணாவது பயலோட முறை. நடுராத்திரி, நிலா வெளிச்சத்துல பளபளன்னு மின்னுது. அடிச்ச காத்துல பய கொஞ்சம் அசந்து தூங்கிட்டான். விழிச்சுப் பாத்தா பூவுளத்தாளைக் காணோம். பதறிப்போனான் பய. சத்தம்போட்டு அண்ணன் தம்பிகளையும் அப்பங் காரனையும் கூட்டிக்கிட்டு ஊரெல்லாம் தேடியலையுறாக. அதுக்குள்ள ஊருக்குள்ள செய்தி பரவி எல்லாப்பேரும் தீப்பந்தத்தோட கூடிட்டாக. எல்லையில, ஒரு பெரிய கூட்டம், பூவுளத்தாவை வண்டியில வெச்சுக் கொண்டுபோவுது. ஊர்மக்கள் அந்த வண்டியை நெருங்கிட்டாக.
மக்களெல்லாம் திரண்டு வர்றதைச் சிறையெடுத்த கூட்டம் பார்த்திடுச்சு. `இனிமே, இந்தப் பொண்ணைக் கொண்டுபோறது செரமம். ஆனாலும், நம்மை அவமானப்படுத்தினவன் மகளை அப்படியே விட்டுட்டும் போகக் கூடாது. காலம் முழுக்க உக்காந்து அழுவுற மாதிரி ஏதாவது செய்யணும்'னு யோசிச்சானுவ. பக்கத்துல ஒரு பாழுங்கிணறு இருந்துச்சு. அப்படியே பூவுளத்தாவைத் தூக்கி அந்தக் கெணத்துக்குள்ள போட்டுட்டு வண்டியைப் பத்திக்கிட்டு வேகவேகமா கிளம்பிட்டானுவ.
அண்ணங்காரனுங்க அலறி அடிச்சுக்கிட்டுக் கெணத்துக் குள்ள குதிச்சு தங்கச்சியைத் தூக்குனானுக. பாழாப்போன கெணறு, பூவுளத்தாவை காவு வாங்கியிருச்சு. ஊரே கதறித் துடிச்சுச்சு. எந்தப் பாவமும் செய்யாம, உயிரைவிட்டு வதங்கிப்போனப் பூ மாதிரி கிடந்த பூவுளத்தா உடலை ஊருக்குக்கொண்டு வந்து அடக்கம் செஞ்சாக.
பூவுளத்தா இறந்தாலும் அவ ஆன்மா அடங்கலே. ஊரையே சுத்திச்சுத்தி வந்துச்சு. பொண்டுக, புள்ளைகள்லாம் வெளிய நடமாடவே பயந்தாக. மாலைக்குட்டி செங்கிடாக்காரனுக்குக் கட்டின கோயில்லயே தம் மவளுக்கும் ஒரு பீடம் கட்டி வாரந்தவறாம படைப்புப் போட்டாரு. அதுக்குப் பெறகுதான் பூவுளத்தாளோட ஆங்காரம் அடங்குச்சு.
கன்னியாகுமரிக்குப் பக்கத்துல கொட்டாரம்னு ஓர் ஊரு இருக்கு. அங்கிருந்து, நடக்குற தொலைவுல இருக்கிற வடுகப்பற்று பகுதில கல்லா உறைஞ்சு நிக்குறா பூவுளத்தா. அவளுக்குப் பக்கத்துல மாலைக்குட்டிக்கும் ஒரு பீடம் வெச்சிருக்காக. அன்னிக்கு வஞ்சகமா கொல்லப்பட்ட பூவுளத்தா இன்னிக்குப் பலநூறு குடும்பங்களுக்குக் குலதெய்வமா இருந்து வழிநடத்துறா. இப்போ எல்லோரும் அவளை ‘பூலங்கொண்டாள்’னு அழைக் கிறாக!
- வெ.நீலகண்டன்
- ஓவியம் : ஸ்யாம் படம் : ரா.ராம்குமார்