மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 9

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

முகங்கள்பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

சம் போன கண்ணாடியின் முன்பு, குளித்து முடித்து ஈரத்துடன் வந்த கல்யாணி தன் மேனியை முழுவதுமாகப் பார்த்தாள். அங்க வளைவுகளில் ஆங்காங்கே நிதானித்து ரசித்தவள் “நல்லா எடுப்பாத்தாண்டி இருக்குறே, உனக்கென்னடி ராஜாத்தி” என்று தனக்குள்ளாகவே பேசிக் கண்ணாடியில் தன் முகத்தைக் கிள்ளி, தானே முத்திக்கொண்டாள். பெட்டியிலிருந்து அரக்கு நிறத்தில் ரோஜாப்பூ வரைந்த ஒரு புடவையைத் தேர்வு செய்து உடுத்திக்கொண்டாள். குட்டிகுராவை உள்ளங்கை முழுதும் கொட்டி முகத்தில் அப்பிக்கொண்டாள். புருவத்திற்கும் இமைகளுக்கும் மைதீட்டிக்கொண்டாள். கொஞ்சம் மஸ்காரா போட்டுக்கொண்டாள். மஸ்காராவைத் தீட்டிக்கொண்டே “மஸ்காரா போட்டு மயக்குறியே” என்ற பாடலை முணுமுணுத்துக்கொண்டாள். கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த பொட்டுகளில் எதைத் தேர்வு செய்வதென்று குழம்பியவள், ஸ்டார் பொட்டைப் பிய்த்து நெற்றியில் வைத்துக்கொண்டாள். இதழ்களுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனித்தாள். இதழ்களின் ரசம் குறைந்து வறட்சியாய் இருந்ததால் நாவின் நீர் கொண்டு ஈரப்படுத்திக்கொண்டாள். தோடைக் கழற்றிவிட்டு ஜிமிக்கிக்கம்மலை மாட்டிக்கொண்டாள். தையல் இலையில் மடித்து வைக்கப்பட்டிருந்த மல்லிகையைச் சூடிக்கொண்டாள். பேக்கில் இருந்த தாலியை எடுத்துக் கழுத்தில் போட்டுக்கொண்டு முழு ஒப்பனையோடு தன் முகத்தைப் பார்த்தாள் கல்யாணி. 

நான்காம் சுவர் - 9

மாமா சொன்னது உண்மைதான். கண்களில் கருவளையம் நன்றாகத் தெரிகிறதுதான். நெற்றி கொஞ்சம் ஏறி, முகம் சற்றுத் தொங்கியிருப்பதை உணர்ந்தாள். பேக்கை மாட்டியபடி அறையைப் பூட்டிகொண்டு தொழிலுக்குக் கிளம்பினாள்.

சுலாப் இன்டர்நேஷனலில் தங்கையா கலெக்ஷனில் மும்மரமாக இருந்தார். சில்லறைகளை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தவர் கல்யாணியைப் பார்த்தார். “இன்னா கல்யாணி, மேக்கப்பல்லாம் தெலுங்குப் பட ஹீரோயின் மாதிரி கும்சா இருக்குது?” என்றார். கல்யாணி தங்கையா உட்கார்ந்திருக்கும் நாற்காலிக்குப் பக்கத்தில் ஒரு திண்டில் வந்து அமர்ந்துகொண்டாள். தொந்தியைத் தள்ளிக்கொண்டு ஒருவர் வந்தார். “எவ்ளோ பாஸ்?” என்றார். “ஒண்ணுக்கா... ரெண்டுக்கா?” கேட்டார் தங்கையா. ரெண்டுக்கு என்பது போல் கை காட்டியவரிடம் சில்லறை வாங்கிப் போட்டு “தொட்டிக்குள்ள தண்ணியிருக்கு... மொண்டுக்கினு போ...” என்று கல்யாணி பக்கம் திரும்பினார். “ஏதாவது சாப்டியா?” இல்லை என்பதாய் கல்யாணி சொல்ல, டேபிளின் அடியில் வைத்திருந்த ப்ளாஸ்கை எடுத்து ரெண்டு லோட்டாவில் தேநீரை ஊற்றினார். “சட்ட வந்தானா?” தேநீரை வாங்கிக்கொண்டாள். தங்கையா பிஸ்கோத்துப் பொட்டலத்தை அவளிடம் பிரித்து வைத்தார்.

நான்காம் சுவர் - 9



“காத்தால வந்து குளிச்சுட்டுப் போனான்... வர்றேன்னுதான் சொன்னான்” தங்கையா தேநீரில் பிஸ்கோத்தை நனைத்தபடி, “கல்யாணி, பேசாம சட்டய கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருக்கலாம்ல... அவனும் ரொம்ப வருஷமா உன்ன டாவடிக்கிறான்... இப்பதான் உன் மார்க்கெட் டவுனா போய்ட்டிருக்குல்ல...” பீடியை எடுத்து அழுத்திப் பதமாக்கிக்கொண்டார். “அண்ணய்யா உனுக்கு நா இங்க வந்து உட்கார்றது பிடிக்கலனா சொல்லு... வரமாட்டேன். போயும் போயும் ஒரு மாமாப்பையனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்ற... ஒரு காலத்துல என்ன வெச்சு சம்பாரிச்சுத்தான் சொகுசா வாழ்ந்தான்... இந்தக் கல்யாணிக்கு எப்பவும் அவன் மாமாதான்... மாப்ளயாவ முடியாது... மார்க்கெட்டு போயிடுச்சுன்னு சொல்ற... கக்கூச இழுத்து மூடிட்டு, நீ வேணா வந்து பாரு... மார்க்கெட்ல வியாபாரம் யாருக்கு ஆவுதுன்னு பாப்பம்...” என்றதும் தங்கையா கதிகலங்கிப்போனார். “யம்மாடி தெரியாம சொல்லிட்டேன். அதுக்கு வயசானவன மல்லுக்கட்டச் சொன்னா நியாயமா?” முகத்தைப் பாவமாக வைத்து தங்கையா கேட்டதும் கல்யாணி சிரித்துவிட்டாள்.

ஸ்கூட்டரில் ஒரு நீண்ட பேக்கை மாட்டியபடி சட்டநாதன் சுலாப் இன்டர்நேஷனலில் வந்திறங்கினார். தட்டினால் தாரவாந்துவிடும் உருவம். டேபிள் பேனைத்  திருப்பினாலே எங்கே பறந்துவிடுவாரோ என்று அச்சப்படுகிற ஒல்லிப்பாச்சான். ஆனால், எண்பதுகளின் கிராப் வைத்து தலைமட்டும் கொஞ்சம் கனம் கூடியிருக்கும். கவரிங்கில் ஒரு பிரேஸ்லெட்டை மாட்டியிருப்பார். பாக்கெட்டில் சிறு நோட்டுப் புத்தகம் வைத்திருப்பார். எப்போதும் குறிப்புகளை எழுதி, யாருக்கு என்ன தேவையோ, அவர்களுக்கானதை ஒழுங்குபடுத்தும் ஊழியர். பொதுப்புத்தியில் மாமா.  
      
வண்டியை நிறுத்தி கல்யாணியைப் பார்த்ததும் சிரித்தார். தங்கையாவிடம் வந்து நின்றார். “வியாபாரம்லாம் எப்பிடி மாமூ?” சட்டை கலாய்த்தான். “ஏரியாவுக்கு ஒரு லோடு பேதி மாத்திர குத்தாக்கா... வியாபாரம் பிச்சிகினு போவும்” என்று சமாளித்தார் தங்கையா.

“எங்கத்தி பார்ட்டி”

“துபாய்க்காரனுங்கோ... மொத்தம் மூணு பேரு”

“மூணு பேருனா...”

“தனித்தனியாத்தான்... ஸ்டார் ஓட்டலாம்... வா போலாம்...”

இருவரும் ஸ்கூட்டரில் கிளம்பினார்கள். தங்கையா சில்லறைகளை எண்ணிக்கொண்டிருந்தார்.

அதுவொரு பண்டிகைக் காலம் என்பதால், அந்த ஸ்டார் ஓட்டல் சீரியல் செட்டுகளால் மினுங்கிக் கொண்டிருந்தது. சட்டை வண்டியை நிறுத்தினான். “கல்யாணி, நல்ல துட்டு பேசியிருக்கேன்... மேற்கொண்டு கட்டிங்கும் போட்ரு, சரியா...” ஓட்டலின் வரவேற்பறையை நோக்கி இருவரும் நடந்தார்கள். “அதெல்லாம் வுடு... இன்னா தங்கையா, உன் டாவுக்குத் தூதா? மாமா பையன் நீ... உனுக்கு நா பொண்டாட்டியா வந்து... சொல்லுங்க... சாப்புடுங்கன்னு சொல்லணுமா... கல்யாணிடா!” என்று சட்டையை வம்புக்கிழுத்தாள். “ரொம்ப ஆடாத... மார்க்கெட்ல லட்டு மாதிரி பீசுங்க வந்து எறங்கியிருக்குது... நீயெல்லாம் பென்ஷன் பீசு... உனுக்கு கஸ்டமரே என்னாலதான் கெடைக்குது... புரியுதா” லிப்டில் ஆறாவது மாடியை சட்டை அழுத்திவிட்டு கல்யாணியைக் காதலோடு பார்த்தான். “புல்லாங்குழல் மாதிரி இருந்துகினு இன்னா வாசிக்கிற நீ... எப்பனா மாட்டுவல்ல ஓடச்சிர்றேன் இரு...”
 
கடந்த பத்து வருடமாக இவர்களைப் பார்த்துவருகிறேன். இவர்களின் இந்த ஊடலில்தான் காசு, பணம், அன்பு, கருணை, துரோகம், போகம், மண்ணாங்கட்டி எல்லாம். 

நான்காம் சுவர் - 9

லிஃப்டில் தனியாக இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். “இன்னாடா மாமாப் பையா... ரொமான்ஸ் லுக்கு வுட்றீயா..!” என்று சட்டையின் வயிற்றை ஒரு கிள்ளு கிள்ளினாள்.   

“அய்ய பெரிய ஒலக அழகி, லுக்கு வுட்டாங்கோ” என்று சட்டை பதிலுக்கு கல்யாணியைக் கிள்ள மூன்றாவது தளம் வந்து நின்றது. ஒரு கோட்சூட் போட்ட கனவான் லிஃப்டிற்குள் நுழைந்தார். லிஃப்ட் மேலேறியதும் இருவரும் அமைதியானார்கள். கனவான் கல்யாணியைப் பார்த்தார். வேண்டுமென்றே மாராப்பைச் சற்று சரிய விட்டு கனவானைப் பார்த்துக் கண்ணடித்தாள். பதறிப்போன கனவான் கற்பைக் கையில் பிடித்துக்கொண்டு நான்காவது தளத்தில் வியர்த்து விறுவிறுத்து வெளியேறினார். “பாவண்டி பெருசு பயந்துடுச்சு” சட்டை சிரித்துக்கொண்டுதான் சொன்னான். “டேய் மாமாப் பையா... சின்னப் பசங்களக்கூட நம்பிடலாம்... இவனுங்க இருக்கானுங்களே... யப்பா... இதே மாரி ஒருத்தனோட போன வாரம் அனுப்ச்சியே... ஞாபகம் இருக்குதா...” சட்டை யோசித்து பின் நினைவு வந்ததாய் தலையசைத்தான். “டிரஸ்ஸ கழ்ட்டுன்னான்.... வழக்கமான தீர்ப்புதானன்னு கழ்ட்டுனா... என் புடவைய எடுத்து அவன் கட்டிக்கினு... அவன் பேன்ட்டு சட்டய என்ன போட்டுக்கச் சொல்ட்டான்... அதுகூடப் பரவால்லடா சட்ட... பொம்பள மாறியே ஒரு நட நடந்து பவ்யமா என் கிட்ட வந்து உக்காந்தான் பாரு... முடியலடா சட்ட...” சட்டை வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான். கல்யாணியும் சிரித்துக்கொண்டாள். ஆறாவது தளம் வந்தது. இருவரும் லிஃப்டை விட்டு வெளியேறினார்கள்.

சட்டை காலிங்பெல்லை அழுத்தினான். கதவை ஒருவன் திறந்தான். இருவரும் உள்ளே நுழைந்தார்கள். மூவரும் நடு வயதுக்காரர்கள்தான். இவர்களைத் தவிர போதையும் அந்த அறை முழுதும் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தது. மூவரும் போதையில் அரைக்கண்ணில் கல்யாணியைப் பார்த்தார்கள். கல்யாணியின் இடுங்கிய கண்கள், வறட்சி கொண்ட இதழ்கள் எதுவும் அவர்கள் எதிர்பார்த்தது போல இல்லையென்று சட்டையிடம் திரும்பினார்கள். “ஏய் புரோக்கர்... உன்கிட்ட என்ன சொன்ன மேன்... டீன் ஏஜ்ல கூட்டிட்டு வான்னா... இப்டி கிழத்தைக் கூட்டிட்டு வந்திருக்கே... நான்சென்ஸ் கூட்டிட்டுப் போடா...” என்றதும் கல்யாணி ஆங்காரமானாள். எதைச் சொன்னாலும் பொறுத்துக்கொள்வார்கள். இந்த வார்த்தை அவர்களின் உழைப்பின் மூலதாரத்தை பாதிக்கிற சொல். “யாரப் பாத்துடா கிழம்னு சொன்ன..?” என்று அந்த நடு வயதுக்காரனை ஓங்கி ஒரு அறை விட்டாள். மற்ற இருவரும் கல்யாணியை அடிக்க வர, மாகாளி ஆனாள். சரக்கு பாட்டிலை உடைத்துக் குத்தப் போக, சட்டை பிடித்துக்கொண்டான். மூவரும் கதி கலங்கினர். அமைதியாக இருக்கும்வரை பெண்கள் சலனமற்ற காடு. அது குலைந்து போனால் கொழுந்து விட்டு எரியும் தீக்காடு என்பதை சட்டை சொன்னபோது நான் புரிந்துகொண்டேன்.

“சரக்கு வேணும்... கஸ்டமர் வேணும்னு வெறி புடிச்சுக்கிட்டு இருக்காடா...” இந்த இரவில் சரக்கைப் பிடித்துவிடலாம். பண்டிகைக் காலத்தில் கஸ்டமர்களைப் பிடிப்பதென்பது எளிதான காரியமல்லவே என்று நான் யோசித்த வேளையில் சட்டை எதையோ யோசித்தவனாய் “டேய் மாப்ள, நீ கஸ்டமரா வர்றீயாடா...?” என்று ஒரு குண்டைப் போட்டார் சட்டை மாமா. எனக்குள்ளிருந்த அந்த பட்சி சட்டென எழுந்து அய்யய்யோவென உள்ளே சுருண்டுகொண்டது. “மாமா உன் வேலய... என்கிட்டயே காட்ற பாத்தியா...?” என்று முடியாததைச் சொன்னேன். “பாவண்டா அவ... ஒரு காலத்துல கல்யாணிதான் வேணுன்னு... ஒரு மாசம் வெயிட்டிங்ல இருந்து அவள புக் பண்ணுவாங்கடா... அவளால நா சம்பாதிச்சது அதிகம்டா... இன்னிக்கு எம் பொண்ணு படிக்குதுனா அது கல்யாணியாலதான்... எங்க எம் பொண்ணைக் கூட இந்தத் தொழிலுக்குக் கொண்டு வந்துருவனோன்னு பயப்படுவா... எம் பொண்டாட்டியும் செத்துப்போய்ட்டா, வாடி வாழலாம்னு... எவ்ளோ தடவ கேட்டுப் பாத்துட்டேன்... போடா மாமாப் பையா... உழைச்சி சோறு சாப்புடுவேன்... பொண்டாட்டின்ற பேர்ல எவனுக்கும் அடிமையா வாழ மாட்டன்னு சொல்லிருவா...” என்று பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனார் சட்டை.  

நான்காம் சுவர் - 9

சட்டையோடு அஸிஸ்டென்ட் மாமாவாக நானும் போனேன். “அவுனுங்கோ அப்டி சொல்ட்டா... கல்யாணிக்கா கெய்வி ஆய்டுமா?” என்றேன். என்னை சற்று நேரம் நிதானமாகப் பார்த்த சட்டை, “மாப்ள இந்தத் தொழில்ல இருக்குற முக்காவாசிப் பேரு அநாதைங்கடா... ஆத்தா உட்டுட்டுப்போனது... விரும்பி வந்தது... விரும்பாம வந்ததுன்னு ஆயிரம் கத இருக்குது... அநாதையா தொழில் பண்ணாலும்... இவங்களோட ஆதரவு இன்னா தெரியுமா... இவங்க வயசும்... அழகுந்தாண்டா... அது போயிடுச்சின்னு வையி... சிக்கி சின்னாபின்னப்பட்டுச் சாவணும்... கல்யாணிக்குக் கெழடு தட்டிப்போச்சின்னு அவ  அறிவுக்குத் தெரியாது... மனசுக்குப் புரிய கொஞ்ச நாள் ஆவும்டா... அதனாலதான் இப்பகூட எனக்கு கஸ்டமர் இருக்குது பார்றான்னு நிக்கிறா... நீ மாமாவா இருந்தாத்தான் உனுக்கு இது புரியும்...” சட்டை பேருந்து நிலையத்தில் இருப்பவனிடம் பேரம் பேசச் சென்றார். சட்டை சொன்னது எனக்குப் புரிந்தது. நானும் அருகில் போய் நின்று, என்னதான் பேசுகிறார்கள் என்று பார்த்தேன். அதற்குள் பேரம் முடிந்து வாடிக்கையாளனும் எங்களோடு வந்தான். நான் விட்டுக்கொடுத்த இடம் என்றறியாமல் நடை பயின்று வந்தான் வாடிக்கையாளன்.

வாடிக்கையாளனுக்கும் சேர்த்து சரக்கை ஊற்றினார் சட்டை. அவன்  பண்டிகைப் பயணமாய் நின்றிருந்தவன். சட்டையின் மொட்டை மாடி வீடு. உள்ளேயிருந்து வெளிப்பட்டாள் கல்யாணி. நான் பீரை மட்டும் அருந்திக்கொண்டிருந்தேன். விழாக்காலத்தில் சில நேரம் கடையிலேயே தங்கியும் விடுவதுண்டு, “இன்னாடா குஸ்மி... இங்க என்ன பண்ற...?” கல்யாணி சரக்கை உறிஞ்சிக்கொண்டாள். “நான்தான் கூட்டிட்டு வந்தேன்...” சட்டையும் கொஞ்சம் உறிஞ்சிக்கொண்டார். “பார்ட்டி யாரு... நீயா... இல்ல அவனா...?” கல்யாணி கேட்டதும் “அதோ அவருக்கா...” என்றேன். நம்மவர் மெல்லிதாகச் சிரித்தார். “டேய் மாமாப் பையா... உள்ள ரூம ரெடிபண்ணு...” என்றாள். நம்மவரைப் பார்த்து “உள்ள போ... வரேன்” என்று சிக்கனைக்  கடித்துக்கொண்டாள். நம்மவர் புதுப்பெண் போல முதலிரவு அறைக்குச் சென்றார். 

“ஏன்க்கா சட்ட உன்ன எத்தன வருஷமாக்கா சைட் வுடுது?” கொஞ்சம் போதையானேன்.

“இவனுக்கு முன்னாடி... நா வேற ஒரு மாமாகிட்டதான் தொழில் பாத்தேன்... அவன் ஃபிராடு கம்மினாட்டி... அப்புறந்தான் இலா இவன அறிமுகப்படுத்திச்சு... இவனுக்குப் பொண்டாட்டி இல்ல... என்னைப் பார்த்தவுடன பத்திக்கிச்சாம் இந்த மாமாப் பையனுக்கு... அப்போ நா எப்டி இருப்பேன் தெரியுமா உனக்கு...?” மகாராணியைப் போலப் பார்த்தாள். “இப்போ மட்டும் இன்னாக்கா... நீ அழகுதான்...” என்றேன். என்னைக் கிள்ளி முத்திக் கொண்டாள்.

தொழிலுக்குத் தயாரானாள். எழுந்தாள், நடந்தவள் திரும்பி “டேய் குஸ்மி... சட்டய எனுக்கு ரொம்பப் புடிக்கும்டா... நா அநாத இல்ல, எனுக்கு சட்டன்னு ஒரு மாமாப் பையன் இருக்கான்... வெளியில இருக்குற மாமாப் பசங்க இல்லடா என் சட்ட... நா ஒரு மாமாதாண்டான்னு தைரியமா சொல்றவன் என் சட்ட...” என்று அறைக்குச் சென்றாள். சட்டை அறையைத் தயார் நிலையில் வைத்து வெளியேறினார். “உள்ள போ... ஊருக்குப் போகணும்னு பறக்குறான்...” சட்டையை கல்யாணி மெலிதான புன்னகையோடு பார்த்து இடுப்பைக் கிள்ளினாள். “இன்னாடா மாமாப் பையா, டாவடிக்கிற பொம்பளய உள்ள போன்னு சொல்ற... இன்னா சீன் போட்றீயா...” என்று உள்ளே நுழைய முற்பட்டவள். “நா உழைச்சிதான் கடைசி வரைக்கும் சாப்புடுவேன்... புரியுதா?” என்று உள்ளே நுழைந்தாள் கல்யாணி. சட்டை என்கிற சட்டநாதன் மாமா காதலோடு கல்யாணியை உள்ளே அனுப்பிவிட்டு, கதவைச் சாத்தினார்.

- மனிதர்கள் வருவார்கள்...