மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 105

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சரித்திரம்ஓவியங்கள்: ம.செ.,

மூஞ்சலிலிருந்து நாகக்கரட்டுக்கு இரவாதனைத் தன் இரு கைகளிலும் ஏந்திவந்தான் தேக்கன். மற்றவர்கள் எத்தனையோ முறை அவனிடமிருந்து வாங்க முயன்றும் அவன் தரவில்லை. பறம்பு ஆசான் மாவீரனுக்குச் செய்யும் மரியாதை இது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 105

சமதள வேந்தர்கள் படையோடு ஒப்பிட்டால், ஒவ்வொரு பறம்பு வீரனும் மாவீரனே. ஆனால், ஒரு பறம்பு வீரனை மற்ற பறம்பு வீரர்களோடு ஒப்பிட்டால் மாவீரர்கள் என வெகுசிலரே இருப்பர். இரவாதன் அப்படியொரு மாவீரன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், தட்டியங்காட்டுப் போரின் தொடக்கத்திலிருந்து அவன் நடத்திய ஒவ்வொரு தாக்குதலும் இணைசொல்ல முடியாதது.

முன்திட்டப்படி, இன்றைய போரில் மூஞ்சலின் வெளிப்புற அரணை முழுமுற்றாக அழித்தொழிக்கும் பொறுப்பு முடியனுக்கும் விண்டனுக்கும் உரியது. ஆனால், அவர்களால் மூஞ்சலுக்கு அருகில் போகவே முடியவில்லை. அதே வேளையில் தனக்கான பொறுப்பின்படி கடைசி பத்து நாழிகை இருக்கும்போது, எதிரிகளால் வெளிப்புற அரணை உடைத்துக்கொண்டு உள்நுழையவே முடியாது எனக் கருதப்பட்ட மூஞ்சலை, தனது குதிரையின் வேகத்தைக் குறைக்காமலே உடைத்துக்கொண்டு உள்நுழைந்தான் இரவாதன். அகப்படையையும், பொய்க்கூடாரங்களில் நூற்றுக்கணக்கில் இருந்த கவசப்படையையும் முற்றிலுமாக அழித்தொழித்தான்.

இந்நிலையில்தான் பொதியவெற்பன், உதியஞ்சேரல், சோழவேழன் ஆகிய மூவரும் தங்களின் சிறப்புப் படைகளோடு மூஞ்சலுக்குள் நுழைந்தனர். நன்கு திட்டமிட்டிருந்ததால் கரிணியும் பிடறிமானும் இரு பக்கங்களிலும் இணையற்ற தாக்குதலை நடத்த, மூன்றாம் நிலையைக் கடந்து நீலனின் கூடாரம் நோக்கி முன்னேறினான் இரவாதன். அவனது வேகத்தையும் தாக்குதலையும் யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. சூளூர் வீரர்களின் வாள்வீச்சு வேகம் வேந்தர்படைத் தளபதிகளால் தற்காத்துக்கொள்ளவே முடியாததாக இருந்தது. நிலைமை முற்றிலும் கைமீறிவிட்டதை உணர்ந்த நிலையில்தான் பேரரசர் குலசேகரபாண்டியனின் தனித்த பாதுகாப்புக்கான சிறப்புப் படையை வரவழைத்தான் பொதியவெற்பன்.

தட்டியங்காட்டில் கடுமையாக மோதிக்கொண்டிருந்த இருதரப்புத் தளபதிகளும், போர் முடிவுற்றதுக்கான முரசின் ஓசையைக் கேட்டதும் மூஞ்சலை நோக்கி விரைந்தனர். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வகையான பதற்றம் இருந்தது. மையூர்கிழார் தான் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மூஞ்சல் தாக்கப்பட்டுவிட்டதே என்ற பதற்றத்தில் விரைந்தார். இறுதியில் அபாயத்தை உணர்த்தும் ஒலியெழுப்பப் பட்டதால் மூஞ்சல் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கும் என்பதைக் கருங்கைவாணன் உணர்ந்தான். மூஞ்சலின் வலிமைமிகுந்த அமைப்பு வெளிப்புற மூடரண்தான். அதை உடைத்து உள்நுழையும் ஆற்றல்கொண்ட படையால் உள்ளுக்குள் போய் பேரழிவை உருவாக்க முடியும் எனத் தெரியும். ஆனால், அபாய ஒலி எழுப்பும் அளவுக்கு நிலைமை மாறும் என நினைக்கவில்லை. பறம்புப் படையின் முக்கியமான தளபதிகள் தட்டியங் காட்டில் தங்களுடன்தான் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். குதிரைப்படை மட்டுமே அங்கே போயுள்ளது என்பதால் அகப்படை எளிதில் சமாளிக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், நிலைமை ஏன் கைமீறிப்போனது என்பது வெளியில் இருக்கும் யாருக்கும் புரியவில்லை.

முரசின் ஓசை கேட்டதும் முடியன்தான் முதலில் பாய்ந்து போனான். `கடைசி நாழிகையில், மூஞ்சலில் இருந்து இரவாதனின் படை பின்வாங்கிவிட்டது. இடைநிலையில் நின்றுதான் அவன் போரிட்டுக் கொண்டிருப்பான்’ என நினைத்தான் முடியன். ஆனால், `இரவாதன், மூஞ்சலுக்குள் போய்விட்டான்’ என தேக்கன் கணித்திருந்தான். எனவே, அவனது சிந்தனை முழுவதும் மூஞ்சலை நோக்கியே இருந்தது.

எல்லோரும் மூஞ்சலின் அருகில் வந்து நின்றபோதுதான் மூஞ்சல் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடிந்தது. அகப்படை, கவசப்படை, வேந்தர்களின் சிறப்புப்படை, பேரரசரின் தனிப்படை அனைத்தையும் கொன்றுகுவித்த சூளூர் வீரர்களின் ஆடுகளம் எப்படி இருந்தது என்பதைப் பார்த்த கணம், மையூர்கிழாருக்கும் கருங்கைவாணனுக்கும் குருதியோட்டம் நின்றது. பிணக்குவியல்கள் கணக்கில்லாமல் இருந்தன. குருதி பொங்க மேலெழும் கதறல் பெருகி தட்டியங்காடு முழுவதும் எதிரொலித்தது. சில இடங்களில் யானை உயரத்துக்குக் கிடந்தன கொன்றழிக்கப்பட்ட வீரர்களின் உடல்கள்; பறம்பு வீரர்களின் குதிரைகள் கணக்கில்லாமல் கொன்றழிக்கப் பட்டுள்ளன. தட்டியங்காடெங்கும் முழுநாள் போரிலும் கொல்லப்பட்டவர்களை மொத்தமாகக் குவித்ததைப்போல் இருந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 105

அந்தத் தாக்குதலில் இரவாதனுடன் சென்ற சூளூர் வீரர்கள் யாரும் மிஞ்சவில்லை. ஆனால், ஒவ்வொருவனும் எண்ணற்றோரை வீழ்த்திய பிறகே வீழ்ந்தான். பொய்க்கூடாரங்களை பிடறிமான் தலைமையிலான வீரர்கள் முழுமுற்றாக அழித்து முடிக்கும்போது, தனது கவசப்படையோடு உள்நுழைந்து தாக்கினான் சோழவேழன். இடைவெளியோடு தொலைவில் நின்று போரிடுவதற்கும் நெருங்கி நின்று போரிடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

மூவேந்தர்களும் அவரவரின் சிறப்புப் படையோடு உள்நுழைந்தனர். அப்போது வரை மூஞ்சலின் வெளிப்புற அரண் வீரர்களால் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருந்தது. மூவேந்தர்களின் சிறப்புப்படை முழுமையாக உள்ளே வந்ததும் ஏறக்குறைய குவியலாக நின்று போரிடும் சூழல் உருவானது. ஒருவருக்கொருவர் வாளையும் ஈட்டியையும் இன்னபிற ஆயுதங்களையும் முழுமையாகச் சுழற்றி வீசவும் வாங்கித் தாக்கவுமான இடைவெளி இல்லாத நிலை இருந்தது. தனக்கு முன்னால் நிற்கும் வீரனோடு போரிட்டுக்கொண்டிருந்தால், முதுகுப்புறத்தில் நிற்பவன் நமது படையைச் சேர்ந்தவனா அல்லது எதிரிப்படை வீரனா என்பது தெரியாத நிலை உருவானது. இந்நிலை, வேந்தர்படைக்குப் பெருஞ்சிக்கலை உருவாக்கியது; ஆனால் சூளூர்ப்படைக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தியது. அடர்கானகத்தில் குழுவாக இயங்கினால் மட்டுமே வாழவும் தப்பிப்பிழைக்கவும் முடியும். எனவே, தன்னுடன் வருகிறவன் யார் என்பதைத் திரும்பிப் பார்க்காமலேயே அறிந்துகொள்ள எண்ணற்ற வழிமுறைகளைப் பறம்பு மக்கள் அறிந்தவர்கள். அவர்களால் அடர் இருட்டில்கூட குழுவாகச் செயல்பட்டு, தாக்குதலை முன்னெடுக்க முடியும்.

மூன்று வேந்தர்களின் சிறப்புப் படைகள், மூன்று சேனைவரையர்களின்கீழ் முப்பத்தாறு சேனை முதலிகளால் தலைமை தாங்கப்படுவதாக இருந்தது. அவர்களுடைய உத்தரவின்கீழ் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் தாக்குதலில் இறங்கினர்.

விரிந்து உள்வாங்கும் குந்தமும் பனங்கருக்குப்போல உடலெங்கும் எண்ணிலடங்காத கூரிய முட்களையுடைய கழுமுள் சாட்டையும் சூளூர் வீரர்களின் தனித்த ஆயுதங்கள். வேந்தர்படை வீரர்கள் எண்ணற்றோர் உள்ளே வந்தது சூளூர் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. தங்களின் ஒலிக்குறிப்புகள் மூலம் கண நேரத்துக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். மூன்று வேந்தர்களின் மூன்று வகையான சிறப்புப் படைகளையும் முழுமையாக உள்வாங்கும் வரை வாளால் தாக்குதல் நடத்தினர். நிலைமையைக் கணித்து கூவல்குடி வீரன் ஓசையிட்டதும் கரிணியின் தலைமையிலான படைவீரர்கள் தங்களின் இடுப்புப் பகுதியில் மெய்யுறைச்சட்டைக்குமேல் சுற்றிவைத்திருந்த கழுமுள் சாட்டையைச் சுழற்றத் தொடங்கினர். சாட்டையின் சிறு நுனி பட்டால் போதும், சதை கொத்தாகப் பிய்த்துக்கொண்டு வெளிவரும். ஒருவன் எதிரியின் காலுக்குக் கீழே சாட்டையைச் சுழற்றினால் மற்றொருவன் கழுத்துக்கு மேலே சாட்டையைச் சுழற்றினான். ஒவ்வொரு சாட்டையும் இரு ஆள் நீளமுடையது.

கேடயங்கள், வாளையும் ஈட்டியையும் எதிர்கொள்ளக்கூடியவை. கழுமுள் சாட்டைக்குத் தடுப்பாயுதம் எதுவுமில்லை. இப்படியோர் ஆயுதம் இருப்பதே சமவெளி மக்களுக்குத் தெரியாது. நினைத்துப்பார்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் கழுமுள் சாட்டையை, சூளூர் வீரர்கள் மின்னல் வேகத்தில் வீசத் தொடங்கினர்.

சதை மட்டுமன்று, கால் எலும்புகளையே பிய்த்துக்கொண்டு சென்றன சாட்டைகள். உச்சந்தலை முதல் கால்முட்டி வரை கவசம் அணிந்திருந்த சிறப்புக் கவசப்படையை முதல் தாக்குதலிலேயே அஞ்சிப் பின்வாங்கவைத்தனர். அப்போது பின்னிலையில் நின்ற பிடறிமானின் தலைமையிலான வீரர்கள் குந்தகத்தால் குத்தித் தூக்கத் தொடங்கினர். இருபெரும் பொறிகளில் சிக்கித் சிதையத் தொடங்கியது சிறப்புக் கவசப்படை.

எந்த ஒரு போரிலும் கவசப்படை இவ்வளவு கொடுமையான அழிவுக்கு ஆளானதில்லை. மூஞ்சலுக்குள் தாங்கள் உருவாகிய பொறியில் பறம்பு வீரர்கள் சிக்குவார்கள் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், சூளூர் வீரர்களின் பொறிக்குள் முழுமுற்றாக வேந்தர்படை சிக்கியது. அவசரத்தில் மூவேந்தர்களின் மூன்று சிறப்புப் படைகளும் மொத்தமாக உள்ளிறக்கியதால் அவர்களால் போரிடுவதற்குப் போதுமான களத்தை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தாக்குதலின் அளவு எல்லை கடந்ததாக இருந்ததால் வெளிப்புற அரணைக் காத்துக்கொண்டிருந்த வீரர்களையும் உள்முகத் தாக்குதலுக்குப் பயன்படுத்தவேண்டிய சூழல் உருவானது. இவையெல்லாம் சூளூர் வீரர்களுக்கு வாய்ப்பாகவே அமைந்தன.

சூளூர் வீரர்கள் எல்லோரும் இன்றைய நாளின் முடிவை தெளிவாகத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். தாங்கள் உயிருடன் திரும்பும் வாய்ப்பு மிகமிகக் குறைவே. ஆனால், நீலன் மீட்கப்பட்டே ஆக வேண்டும். அதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தி வேந்தர்படையை முழுமுற்றாக வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் போரிட்டனர். தட்டியங்காட்டில் இதுவரை நிகழாத பேரழிவை அவர்கள் நிகழ்த்திக் காட்டினர். எண்ணிக்கையில் இதைவிட அதிகமான வீரர்களை இந்தப் போர்க்களத்தில் பறம்புப்படை கொன்றழித்துள்ளது. ஆனால், அவர்களெல்லாம் பொதுவான படைவீரர்கள். இன்று சூளூர் வீரர்கள் அழித்தொழித்துள்ளதோ மூவேந்தர்களின் மிகச்சிறந்த படைவீரர்களின் தொகுப்பை. இந்த வீரர்களின் ஆற்றலை நம்பித்தான் வேந்தர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 105மூன்று பெருவேந்தர்களின் சிறப்புப் படைகளும் மூன்று வகையான தன்மைகளைக் கொண்டிருந்தன. கவச உடைகளில் தொடங்கி, பயன்படுத்தும் ஆயுதம் வரை நிறைய வேறுபாடுகள் மூன்று படைகளுக்கும் உண்டு. ஆனால், சூளூர் வீரர்களின் தாக்குதலுக்கு முன்னால் எந்தப் படையும் எந்நிலையிலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோரைக்கொண்ட கவசப்படையை சூளூர்ப்படையின் சில நூறு வீரர்கள் முழுமுற்றாக அழித்தொழித்தனர். இந்தத் தாக்குதலுக்கு நிகரான தாக்குதலை இதுவரை யாரும் கேள்விப்பட்டதுகூட இல்லை.

மலையெனக் குவிந்து கிடக்கும் வேந்தர்படை வீரர்களின் பிணங்களுக்குள் சூளூர் வீரர்களின் உடல்களைத் தேடி எடுக்கவேண்டி இருந்தது. போர் முடிவுற்ற ஓசை கேட்டதும் வேந்தர்படை வீரர்கள் அனைவரும் பாசறைக்குத் திரும்பினர். இறந்தவர்களை அப்புறப்படுத்துவது, வீரர்களின் வேலையன்று; போர்ப் பணியாளர்களின் வேலை. மூஞ்சலுக்குள் பறம்பு வீரர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் வெளியிலேயே காத்திருந்தனர். வேந்தர்களின் போர்ப் பணியாளர்கள், சூளூர் வீரர்களின் ஒவ்வோர் உடலாகத் தந்து கொண்டிருந்தனர். அதை வாங்கிய பறம்பு வீரர்கள், நாகக்கரடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அனைத்து உடல்களும் எடுக்கப்படும் வரை முடியன் அந்த இடம் விட்டு அகலவில்லை.

இரவாதனின் உடலைத் தேக்கன் தூக்கிச் சென்றான். அவன் பின்னால் பறம்பின் மொத்தப் படையும் வந்துகொண்டிருந்தன. நாகக்கரட்டுக்கும் இரலிமேட்டுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அவன் வந்தபோது இருள் முழுமைகொண்டிருந்தது. இரலிமேட்டிலிருந்து தேக்கனை நோக்கி ஓடிவந்தான் பாரி. அவனுக்குப் பின்னால் காலம்பன் உள்ளிட்ட மற்றவர்கள் ஓடோடி வந்தனர். பெருவீரனின் மரணம் மொத்தக் காட்டையும் உறையவைத்திருந்தது. சிறிய ஓசைகூட எழவில்லை. தீப்பந்தத்தோடு சில வீரர்கள் பாரிக்குப் பின்னால் ஓடிவந்துகொண்டிருந்தனர்.

எதிர்வந்த பாரி, தேக்கனுக்கு முன்னால் இரு கை ஏந்தி நின்றான். தேக்கனால் பாரியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. தலை குனிந்தபடி கையில் இருக்கும் இரவாதனையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், பாரியின் கைகளுக்கு இரவாதனை மாற்றவில்லை. எதிர்நிலையில் கையேந்தி நிற்கும் பாரி, கைகளைத் தளர்த்தவில்லை. இருவருக்கும் உள்ளோடும் குருதி உறைந்து நின்றுவிட்டதைப் போல் இருந்தது. முன்னும் பின்னுமாக வீரர்கள் சூழ்ந்தனர். தீப்பந்தங்களின் ஒளி இரவாதனின் மேலே படர்ந்தபடி இருந்தது.

பாரி குனிந்து இரவாதனைப் பார்க்கவேயில்லை; நிமிர்ந்தபடி தேக்கனையே பார்த்துக்கொண்டிருந்தான். தேக்கனோ நிமிர்ந்து பாரியைப் பார்க்கவேயில்லை; குனிந்தபடி இரவாதனையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குள்ளும் உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன.

பாரி குனிந்து இரவாதனின் உடலைப் பார்த்தாலோ, தேக்கன் நிமிர்ந்து பாரியின் முகத்தைப் பார்த்தாலோ உடைந்து நொறுங்கிவிடுவர். வீரர்களின் மரணத்தில் கண்ணீர் சிந்தக் கூடாது. அதுவும் பாரியும் தேக்கனும் கலங்கினால் நிலைமை என்னவாகும்? இருவரும் அதைத் தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தனர். மனதின் உறுதியை, கனத்த அமைதி நொறுக்கிக்கொண்டிருந்தது. ஆனால், என்ன செய்வதென்று யாருக்கும் விளங்க வில்லை. நின்ற இடத்தை விட்டு இருவரும் நகரவில்லை.

இந்தச் சூழலை எப்படிக் கையாள்வதென்று உடன் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. வாரிக்கையனும் கபிலரும் செய்தியைக் கேள்விப்பட்டு இடிந்துபோய் இரலிமேட்டின் குகை அடிவாரத்திலேயே உட்கார்ந்துவிட்டனர். பாரியுடன் வந்து நிற்கும் காலம்பன் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான். அவனுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.

ஒவ்வொரு கணமும் கடக்க முடியாத கணமாக உறைந்து நின்றது. தலை நிமிராமலே இருந்த தேக்கன், ஒரு கணத்தில் சட்டென்று இரவாதனைப் பாரியின் கைகளில் ஒப்படைத்து விட்டு அப்படியே அவன் கால் பற்றிக் கதறினான் ``காட்டின் தலைமகனை இழந்து விட்டோமடா பாரி!’’

வீரயுக நாயகன் வேள்பாரி - 105

மலை உடைந்து சரிவதைப்போல இருந்தது. வெடித்து மேலெழும்பியது வீரர்களின் ஓலம். ஆசானின் கதறல் காட்டையே உலுக்கியது. காரமலையின் முகட்டை முட்டியது தேக்கனின் விம்மல்.

கைகள் இரவாதனை ஏந்தி நிற்க, கால்களைத் தேக்கன் பற்றி நிற்க, கண்ணீரும் குருதியும் மேலெல்லாம் கொட்டியபடி பாறையென நின்றான் பாரி.

மற்ற வீரர்கள் ஆசானைப் பிடித்துத் தூக்க எண்ணினர். ஆனால், யாரும் அருகில் செல்லவில்லை. பறம்புத் தலைவனின் கால் பற்றிக் கதறும் ஆசானின் உச்சந்தலையில் இரவாதனின் குருதி விழுந்துகொண்டே இருந்தது. போர்க்களத்துக்குப் பொறுப்பு, முடியனும் தேக்கனும்தான். ``நாங்கள் மாவீரனைக் காக்கத் தவறிவிட்டோம். அவன் அனைத்துத் தாக்குதலையும் எங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தான். ஆனால், நாங்களோ அவனிடம் கூறிய திட்டப்படி செயல்படத் தவறிவிட்டோம். இந்த மரணம் முடியனும் தேக்கனும் கவனம் தவறியதால் நிகழ்ந்தது’’ எனப் புலம்பி அழத் துடித்தது தேக்கனின் மனம். ஆனால், சொல்லவந்த சொற்கள் எதுவும் மேலெழவில்லை. உடைந்து கதறும் ஆற்றாமையிலிருந்து மீள முடியவில்லை. சற்று நேரத்துக்குப் பிறகே பாரியின் கால்களிலிருந்து கைகளை விலக்கினான் தேக்கன். அந்த விலகுதலில் மனம் ஆழமான நிலையொன்றை எய்தியது.

அவரவர்தானே மீண்டுகொள்ள வேண்டும். அடுத்தவருக்கு ஆறுதல் உரைக்க பறம்பு வீரர்கள் யாரிடமும் சொற்கள் இல்லை. தேக்கன் கைகளை விடுவித்துக்கொண்ட பிறகு பாரி நடக்கத் தொடங்கினான். வீரர்களின் பெருங்கூட்டம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

தேக்கன், அந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. எல்லோரும் தன்னைக் கடந்து போகும் வரை அங்கேயே இருந்தான். அனைவரும் கடந்து சென்றனர். மனம் சற்று நிதானம்கொண்டது.

`ஏன் உடைந்து கதறினோம்? நமது கதறலையும் சேர்த்தல்லவா பாரி சுமந்து செல்கிறான். நாம் கட்டுப்படுத்தியிருந்திருக்க வேண்டும்’ என, எண்ணங்கள் தோன்றியபடி இருந்தன. எல்லோரும் போன பிறகு நான்கைந்து வீரர்கள் மட்டும் உடன் இருந்தனர். அவர்களையும் போகச் சொன்னான். ஆனால், வீரர்களோ தேக்கனுக்கு உதவுவதற்காக அங்கேயே நின்றனர். மீண்டும் சத்தம்போட்டு போகச் சொன்னான். அவர்கள் சென்ற பிறகு கைகளை ஊன்றி மெள்ள எழுந்து நின்று பார்த்தான். தொலைவில் இரலிமேட்டின் முதற்குகையின் அடிவாரத்தில் கூட்டம் கூடி நின்றது. மலையெங்கும் இருக்கும் தீப்பந்தங்கள் அந்த இடம் நோக்கிக் குவிந்தபடி இருந்தன. அந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் நாகக்கரட்டில் இருக்கும் தனது குடிலை நோக்கி மெள்ள நடக்கத் தொடங்கினான்.

குகை அடிவாரத்தில் வைக்கப்பட்ட இரவாதனின் உடலைப் பார்க்கும் ஆற்றலின்றி பாறை மறைப்பொன்றிலே ஒடுங்கிக்கிடந்தார் கபிலர். நேற்றிரவு பொற்சுவையின் மரணம் அவர் மடியில்தான் நிகழ்ந்தது. இன்றிரவோ இரவாதனின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. ஏது செய்வதென்று தெரியவில்லை. பாரியின் முகத்தைப் பார்க்கவோ, அவனிடம் பேசவோ மனதுக்கு வலுவில்லை. கையூன்றி உட்காரக்கூட வலுவின்றி, பாறையோடு பாறையாக சாய்ந்தே கிடந்தார். மூஞ்சலிலிருந்து சூளூர் வீரர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருந்தன. துயரத்தின் பேரலை காரமலை முழுவதும் பெருகிக்கொண்டிருந்தது.

அப்போது கூட்டத்துக்குள் யாரோ ஒருவன் வந்து, ``கபிலர் எங்கே?’’ என்று விசாரித்தான். வீரன் ஒருவன் பாறையின் அடிவாரத்தில் சாய்ந்து கிடக்கும் கபிலரைக் கைகாட்டிக் குறிப்பு சொன்னான். வந்துள்ளவன், திசைவேழரின் மாணவன். ஏற்கெனவே இருமுறை வந்தவன்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு நிலையில் கபிலரைக் காண்கிறான்.

இப்போது நிலைகுலைந்து கிடக்கும் கபிலரிடம் வந்து ``திசைவேழர், உங்களை அழைத்துவரச் சொன்னார்’’ என்றான்.

அதைக் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் கபிலர் இல்லை.

வந்தவன் மீண்டும் சத்தம் போட்டுச் சொன்னான்.

சற்றே கவனம்கொண்ட கபிலர், அவனை உற்றுப்பார்த்தபடி மறுத்துத் தலையை ஆட்டினார்.

அவனோ மீண்டும் வலியுறுத்தினான்.

பேசுவதற்குச் சொற்கள் மேலெழவில்லை. ஆனாலும் முயன்று சொன்னார் ``நான் வரும் நிலையில் இல்லை என்பதை திசைவேழரிடம் சொல்லிவிடு.’’

வீரயுக நாயகன் வேள்பாரி - 105

வந்த மாணவனுக்கு வேறென்ன செய்வதெனத் தெரியவில்லை. பெரும் புலவரிடம் இதற்குமேல் வலியுறுத்த முடியாது எனச் சிந்தித்தபடி எழுந்து நடக்க முற்பட்டான்.

இதைக் கவனித்தபடி இருந்த வாரிக்கையன், வந்தவனைக் கைகாட்டி நிறுத்தியபடி கபிலரிடம் வந்து, ``திசைவேழரிடம் போய் என்னவென்று கேட்டு வாருங்கள்’’ என்றார்.

``நான் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. என்னால் எதுவும் செய்ய முடியாது’’ என்றார் கபிலர்.

வாரிக்கையன் இங்குமங்குமாகப் பார்த்தார். அவரின் கண்கள் தேக்கனைத் தேடின. அவர் குடிலுக்குப் போய்விட்டதாக வீரன் ஒருவன் சொன்னான். கபிலரை நாம்தான் சமாதானப்படுத்தி அனுப்ப வேண்டும் என நினைத்துக்கொண்டு மீண்டும் கபிலரிடம் வந்தார்.

அவரோ வாரிக்கையன் சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை. ஆனாலும் வாரிக்கையன் விடவில்லை. ``நீங்கள்தான் பறம்பின் கோல்சொல்லி. எதிரிப்படையின் கோல்கொல்லி அழைக்கும்போது போகவில்லையென்றால், நமது தரப்புக் கருத்து கேட்கப்படாமலேயே போய்விடும் ஆபத்துள்ளது. எனவே, துயரத்தை விழுங்கி, கடமையை ஆற்றுங்கள்’’ என்றார்.

கபிலரோ கண்களை உருட்டி, பரிதாபமாகப் பார்த்தார். ``எனது உடலியக்கம் செத்துக்கிடக்கிறது. என்னால் எழுந்திருக்கவே முடியாது. பிறகு எப்படி..?’’ என்று சொல்லியபோதே கண்களில் நீர் கொட்டியது.

வாரிக்கையனால் கபிலரைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், வேறு வழியேதுமில்லை. அவர் போய்த்தான் ஆகவேண்டும் என எண்ணியபடி சொன்னார், ``யாராலும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனாலும் பொழுது விடிந்தால் நம் வீரர்கள் தட்டியங்காட்டில் போரிட்டுத்தானே ஆகவேண்டும்.’’

கபிலர் வாரிக்கையனைக் கவனித்தார்.

``மனம் நொறுங்கிக் கிடந்தாலும் எண்ணம் கைகூடினால் எழுந்து நிற்க முடியும் என்பதை ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறான். உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையா கபிலரே?’’

``புரிகிறது. ஆனால், நான் அதற்கான ஆள் இல்லையே. என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே காற்றில் கேட்ட கதறல் குரலோடு சேர்ந்து வாய்விட்டுக் கதறினார் கபிலர். கைகள் இரண்டையும் கூப்பி, கண்ணீர் பெருக வேண்டினார்.

கபிலரின் நிலை புரிகிறது. ஆனால், அப்படியே விட்டுவிட முடியாது என முடிவுக்கு வந்த வாரிக்கையன் சொன்னார், ``முடியனை நினைத்துப்பார்த்தீர்களா? சூளூர் வீரர்கள் எல்லோரின் உடலும் எடுக்கப்படும் வரை அவன் மூஞ்சல் விட்டு அகலாமல் அங்கேயே இருக்கிறான். பாரியை நினைத்துப்பார்த்தீர்களா? தேக்கனே காலைப் பிடித்து அழுத பிறகும் கலங்காமல் நிற்கிறான். அவர்களெல்லாம் இரவாதனைத் தங்களின் தோளில் போட்டு வளர்த்தவர்கள். வீரனின் மரணத்துக்குக் கைம்மாறு உண்டு. அதைச் செய்வதுதான் அவனுக்கு நாம் செலுத்தும் மரியாதை. இப்போது நீங்கள் பாடல் புனையும் புலவன் மட்டுமல்ல, பறம்பின் கோல்சொல்லி. எழுந்து நடங்கள். இரவாதனின் குருதி, மூக்கில் ஏறி உச்சந்தலையைச் சூடாக்கிக்கொண்டிருக்கிறது. எப்படி உங்களால் உட்கார்ந்துகொண்டு அழ முடிகிறது?’’ என்று குரல் உயர்த்தியவர், வந்திருந்த மாணவனைப் பார்த்து, ``அவரை அழைத்துக்கொண்டு போ’’ என்று ஆணையிட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டார்.

எங்கும் இருக்கும் வீரர்கள் வந்து மொய்த்துக்கொண்டிருந்தனர். குகை அடிவாரச் சரிவில் முண்டி உள்ளே போவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் தடுமாறி உள்ளே நுழைந்த வாரிக்கையன் நீண்டநேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தார் பாறையடிவாரத்தில் கபிலர் இல்லை.

நாகக்கரட்டிலிருந்து தட்டியங்காட்டை நோக்கி இறங்கும்போது அடர் இருள் அப்பிக்கிடந்தது. வீரர்கள் தீப்பந்தம் ஏந்தி முன் நடந்தனர். வழக்கம்போல் போர்க்களத்தின் நடுவில் இருக்கும் பரணில்தான் திசைவேழர் நிற்பார். அங்குதான் இருமுறையும் அழைத்துவரச் சொல்லிப் பேசியுள்ளார். இப்போதும் அங்கிருந்துதான் அழைத்துவரச் சொல்லியுள்ளார் என்று எண்ணியபடி நடந்தார் கபிலர். ஆனால் மாணவனோ, தட்டியங்காட்டின் நடுப்புறம் செல்லாமல் இடதுபுறம் சென்றான்.

``ஏன் இந்தப் பக்கம் செல்கிறாய்?’’ எனக் கேட்டார் கபிலர்.

அதற்கு அந்த மாணவன், ``இடதுபுறம் கடைசியாக இருக்கும் பரண்மீதுதான் திழைவேழர் நிற்கிறார். அங்குதான் அழைத்துவரச் சொன்னார்’’ என்றான்.

அதற்குமேல் கேட்கும் நிலையில் அவர் இல்லை. அவன் பின்னே நடந்து சென்றார்.

பரணின் அடிவாரத்துக்குக் கபிலர் வந்தபோது, மூவேந்தர்களும் வேந்தர்படைத் தளபதிகளும் நின்றிருந்தனர். திசைவேழர் பரண்மீது நின்றிருந்தார். ஏன் அனைவரையும் வரச் சொன்னார் என்பது யாருக்கும் தெரியவில்லை. வேந்தர்கள் மீண்டும் மீண்டும் கேட்டும் தளபதிகளிடம் விடை இல்லை. குலசேகரபாண்டியன் உள்ளிட்ட மூவேந்தர் குடும்பத்தினர் ஐவரும் வந்து நின்றிருந்தனர். மையூர்கிழார், கருங்கைவாணன் உள்ளிட்ட தளபதிகள் அணிவகுத்திருந்தனர். பறம்பின் தரப்பு கோல்சொல்லி வந்த பிறகே பேச முடியும் என்று திசைவேழர் சொல்லிவிட்டதால், யாரும் எதுவும் பேசாமல் அமைதிகாத்திருந்தனர்.

கபிலர் வந்ததும் அவரை பரண் மீது ஏறி வரச் சொன்னார். கபிலருக்கு, சற்றே ஐயம் உருவானது. பறம்பு வீரர்கள் ஓங்கலத்தைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியபோது விசாரணைக்கு அழைத்திருந்தார். திசைவேழர், அப்போது பரண்விட்டு கீழேதான் அமர்ந்திருந்தார். மறுநாள் போர்க்களத்தின் தன்மையைப் பற்றியும் தனக்கு உண்டான மன அழுத்தத்தைப் பற்றியும் விவாதிக்க வரச் சொன்னார். அப்போதும் கீழேதான் இருந்தார். அந்த இரு நிகழ்வுகளின்போதும் வேந்தர்கள் யாரும் இல்லை. ஆனால், இன்று வேந்தர்கள் அனைவரும் வந்து நிற்கின்றனர். திசைவேழரோ பரண் மேலிருந்தபடி தன்னையும் ஏன் மேலேறி வரச் சொல்கிறார் என எண்ணியபடியே பரண்மீது ஏறினார் கபிலர். முன்னும் பின்னுமாக இரு மாணவர்கள் அவர் ஏறிச் செல்ல உதவிசெய்தனர்.

பரணின் மேல்தளத்தில் நான்கு மூலைகளிலும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் சிறிய இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தார் திசைவேழர். மேலேறிச் சென்ற கபிலர், திசைவேழரை வணங்க முயன்றபோது அவரின் முகத்தைப் பார்த்ததும் சற்றே அதிர்ச்சிக்குள்ளானார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 105

முகம், கடுத்து உறைந்துபோய் இருந்தது. கண்கள் ஆற்றாமையால் கனன்றுகொண்டிருந்தன. வந்து நிற்கும் கபிலரை ஏறிட்டுப்பார்த்தார் திசைவேழர். துயரத்தின் பெருவலி கபிலரின் முகத்திலும் நிரம்பியிருந்தது.

கபிலரின் வரவுக்காகவே காத்திருந்த திசைவேழர் மெள்ள எழுந்து பரணின் முன்பகுதிக்கு வந்தார். கீழே எண்ணிலடங்காத பெரும்பந்தங்கள் எரிந்துகொண்டிருக்க, தேர்களின் மீது பேரரசர்கள் அமர்ந்திருந்தனர்.

திசைவேழர் பேச முன்வருவது அறிந்து மாணவன் ஒருவன் முரசின் ஓசையை மெள்ள எழுப்பினான். கீழே இருந்தவர்கள் மேலே பார்த்தபடி கவனம்கொண்டனர். முன்வந்து தடுப்புக்கட்டையைப் பிடித்தபடி திசைவேழர் கூறினார், ``இன்றைய போரில் நமது படை விதிகளை மீறிவிட்டது.’’

எல்லோரும் சற்று அதிர்ச்சியானார்கள். `விதியை மீறியவர் யார்?’ என்று ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். மையூர்கிழார் கருங்கைவாணனிடம் பார்வையாலே கேள்வியை எழுப்பினார்.

கருங்கைவாணனோ, ``அப்படி யாரும் நமது தரப்பில் விதிகளை மீறவில்லை’’ என்றான்.

தலைமைத்தளபதி என்ற முறையில் மையூர்கிழார்தான் இப்போது பேசவேண்டும். அவரோ கருங்கைவாணனின் மீது சற்றே ஐயம்கொண்டிருந்தார். அவனிடம் நன்றாக விளக்கம் கேட்டறிந்த பிறகுதான் பேசத் தொடங்கினார், ``நிலைமான் கோல்சொல்லியை வணங்குகிறேன். வேந்தர்படையில் யாரும் விதி மீறவில்லையே.’’

``போர்விதி மீறப்பட்டதை நானே கண்டேன்.’’

``அப்படியென்றால், யார் விதி மீறினார் என்பதைக் கூறுங்கள் திசைவேழரே’’ என்று பணிந்து கேட்டார் மையூர்கிழார்.

எல்லோரும் பரண்மீது உற்றுப்பார்த்தபடி இருந்தனர். திசைவேழர் சொன்னார், ``பொதியவெற்பனும் சோழவேழனும்.’’

அதிர்ந்து நின்றனர் அனைவரும்.

திசைவேழரின் குற்றச்சாட்டு, வேந்தர்களின் தரப்பிலிருந்த ஒவ்வொருவரையும் நடுங்கவைத்தது. அவரின் கூற்றுக்கு என்ன பதில் உரைப்பது, யார் பதில் உரைப்பது என்று யாராலும் முடிவுசெய்ய முடியவில்லை. குற்றம்சாட்டுவது எதிரிப்படை கோல்சொல்லி அல்ல; நமது படை கோல்சொல்லி. பக்கத்தில் பறம்புப்படை கோல்சொல்லி கபிலர் நின்று கொண்டிருக்கிறார். எனவே, இதை எந்தச் சொல்கொண்டு மறுப்பது?

சோழவேழன்மீதான குற்றச்சாட்டை மறுக்க, சோழனின் அமைச்சன் வளவன்காரி முன்வர ஆயத்தமானான். ஆனால், செங்கனச் சோழன் கண்களால் குறிப்பு கொடுத்த பிறகு, சற்றே ஒதுங்கி நின்றுகொண்டான். திசைவேழர் பாண்டியப் பேரரசரால் நியமிக்கப்பட்டவர். எனவே, அவர்களே இந்தப் பிரச்னையைத் தீர்க்கட்டும் என நினைத்தான்.

குலசேகரபாண்டியனோ அதிர்ச்சியுற்ற கண்களோடு அண்ணாந்து திசைவேழரையே பார்த்துக்கொண்டிருந்தார். `அவரது கூற்றை மறுத்து வாதாடுதல் எளிதல்ல. அமைச்சர் முசுகுந்தர் இருந்திருந்தால்கூட இந்தப் பிரச்னையை ஓரளவு தெளிவாகக் கையாள்வார். ஆனால், ஆதிநந்தியை நம்பி எப்படி முன்னெடுப்பது? அமைச்சனை நிறுத்திவிட்டு தளபதிகளைப் பேசவிட்டால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும்’ என்று நினைத்தபடி இருந்தார்.

குற்றச்சாட்டைக் கூறிய திசைவேழர், மறுமொழியை எதிர்பார்க்கவில்லை. தட்டியங் காட்டை விரிந்த கண்களோடு பார்த்தபடி சொன்னார், ``விதி மீறிய இருவரும் இக்கணமே இந்தப் போர்க்களம் விட்டு நீங்க வேண்டும். இனி, வாழ்வு முழுவதும் அவர்கள் ஆயுதங்களைக் கைக்கொள்ளக் கூடாது.’’

இடி விழுவதுபோல் இருந்தன திசைவேழரின் சொற்கள். உறைந்து நின்றனர் அனைவரும். குலசேகரபாண்டியனின் கண்கள் துடித்தன. பாண்டியப் பேரரசின் தலைமை அமைச்சன் ஆதிநந்தி உரத்தகுரலில் கத்திச்சொன்னான், ``நீங்கள் அறம் தவறிப் பேசுகிறீர் திசைவேழரே!’’

இடைவெளியின்றிச் சட்டெனச் சொன்னார், ``ஆம். நான் அறம் பிறழ்ந்தே பேசுகிறேன். அரண்மனையின் நம்பிக்கைக்கு உரியமுறையில் நடந்துகொள்வதை முற்றிலுமாக எனது ஆழ்மனம் துறந்துவிடவில்லை. அதனால்தான் எனது சொற்கள் இப்படி வந்துள்ளன. இல்லையெனில், அவர்கள் இருவருக்கும் மரணத்தையே தீர்ப்பாக வழங்கியிருப்பேன்.’’

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்