சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஆதியிசை தேடி அலைந்தோம்

ஆதியிசை தேடி அலைந்தோம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதியிசை தேடி அலைந்தோம்

ஆதியிசை தேடி அலைந்தோம்

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகில் ஒரு பெருங்கூட்டம் சூழ்ந்து நிற்கிறது. நடுவில், கோவணம் உடுத்தி,  உடலெங்கும் சேறுபூசி  விவசாயிகளின் வதைபாட்டை நாடகமாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் ‘திணைநிலவாசிகள்’ குழுவினர்.  நீளமான ஒரு குழாயைக் கொண்டு பழங்குடிகளுக்கே உரித்தான ஓர் அவல இசை எழுப்பி அந்தத் துயரத்தின் வலுவைக் கூட்டுகிறார் லியோன். மெள்ள எழும்பும் சாருமதியின் செவ்விந்தியத் தாலாட்டு, உயிரை அப்படியே உறைய வைக்கிறது. வதையுணர்ச்சியை முகத்தில் அப்பி நடிக்கும் நடிகர்களும், இசையும் பாடலும் அந்தச் சூழலை  உணர்வுமயமாக்குகின்றனர்.  

ஆதியிசை தேடி அலைந்தோம்

லியோனும் சாருமதியும் கோவையைச் சேர்ந்தவர்கள். சாருமதி, விமானி... கல்லூரிக்காலத்தில் என்சிசியில் இருந்தவர். விமானப்படை, கடலோரக் காவல்படையில் வந்த பணி வாய்ப்புகளையெல்லாம் உதறிவிட்டு இசை, நாடகம் என்று வந்துவிட்டார்.  லியோன், ஆங்கிலோ இந்தியன்.  இசைப்பின்னணி கொண்ட குடும்பம். இண்டர்நேஷனல் டிராமா அகாடெமியில் பணியாற்றியபோது நண்பர்களானவர்கள்... இப்போது, எல்லாப் பணிகளையும் விட்டுவிட்டு  உலகெங்கும் வாழும் பழங்குடிகளின் இசையைத் தேடிப் பயணிக்கிறார்கள். அழிவின் விளிம்பில் இருக்கும் அவர்களின் பாடல்களையும், இசையையும், இசைக்கருவிகளையும் மீட்டெடுத்து ஆவணப்படுத்துவதோடு நாடகங்கள் வழி அவற்றை உயிர்ப்பிக்கும் பணியையும் செய்கிறார்கள். மாணவர்களுக்கு நாடகம் குறித்தும் இசை குறித்தும் பயிற்சியளிக்க ‘ஹூடினி’ (whodini) என்ற தியேட்டரையும் நடத்துகிறார்கள்.

பயணிக்கும் இடமெல்லாம் பெரும்பொதியாக இசைக்கருவிகளையும் சுமந்து செல்கிறார்கள். ஆஸ்திரேலிய அபாரஜின் பழங்குடிகளின் டிஜிருடூ, ஹவாய் பழங்குடிகளின் யூக்கலில்லி, தென்னாப்பிரிக்கப் பழங்குடிகளின் ஜெம்பே, கலிம்பா என 20-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளைப் பயன்படுத்தி நவீன நாடகங்களுக்கு இசையமைக்கிறார்கள். மாணவர்களுக்கும் கற்றுத்தருகிறார்கள்.

“விமானப்படையில சேரணும்... இதுதான் என்னோட சிறுவயது ஆசை. அப்பா விமானநிலையத்தில அதிகாரியா இருந்தார். அவர் சொல்ற கதைகள், அனுபவங்கள் எல்லாம் கேட்கச் சிலிர்ப்பா இருக்கும். ஆனா, பேச்சு, பாட்டுன்னு இன்னொரு தடத்துக்கு வாழ்க்கை மாறுனது எப்படின்னு தெரியலை. கல்லூரியில நிறைய நாடகங்கள் செஞ்சோம். பாட்டும் பாட ஆரம்பிச்சேன். இயல்பாவே பூர்வகுடிகளோட பாடல்களுக்கு ஒரு சக்தியிருக்கு. அது உயிரோட ஆழத்துல இருந்து எழும்புற பாடல்... யூடியூப்ல பாடல்களைக் கேட்டு அதே மாதிரி பாட ஆரம்பிச்சேன். கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் விமானப்படையில சேர வாய்ப்பு வந்துச்சு. ஆனா, அதைத் தவிர்த்துட்டேன். இண்டர்நேஷனல் டிராமா அகாடமியில பயிற்சியாளரா சேரும் வாய்ப்பு கிடைச்சுச்சு. அங்கேதான் லியோனை சந்திச்சேன்... அவரோட நட்புக்குப் பிறகுதான் பழங்குடி இசையோட பல பரிமாணங்களைக் கத்துக்கிட்டேன். பழங்குடி சமூகங்களோட தங்கி, அவங்க பாடல்கள், இசை, இசைக்கருவிகள் பத்தி யெல்லாம் தெரிஞ்சு கிட்டோம்.  பழங்குடி இசைக்கருவிகளை அதே தன்மையோட செஞ்சு தியேட்டர்களுக்குப் பயன்படுத்த ஆரம்பிச்சோம்” என்கிறார் சாருமதி. 

ஆதியிசை தேடி அலைந்தோம்

லியோன், ஆங்கிலோ இண்டியன். அதனால் இயல்பாகவே  அவரது குடும்பத்தில் இசை ஒட்டியிருந்தது.

“வீட்டுல எந்தப் பக்கம் திரும்பினாலும் இசைக்கருவிகள் இருக்கும். கிடார், டிரம்ஸ் எல்லாம் ஒரு கட்டத்துல போரடிச்சுப்போச்சு. அந்தச் சமயத்துலதான் ஆஸ்திரேலியாவுல இருக்கிற என் உறவுக்காரங்க ஒரு டிஜிருடூ கருவியைப் பரிசாகக் கொடுத்தாங்க. அந்தக்கருவியும், அதுல இருந்து வந்த இசையும் என்னை வசீகரிச்சுடுச்சு. உலகத்துல எல்லா இசைக்கருவிகளையுமே மனிதர்கள்தான் செய்வாங்க. ஆனா, டிஜிருடூ இயற்கையே தயாரிக்கிற கருவி. யூக்கலிப்டஸ் மரத்துக்குள்ள கறையான் புகுந்து முழுதா அரிச்சிடும். அதைத் தேடிப்பிடிச்சு வெட்டி எடுத்துட்டுவந்து அந்தக் கறையானைத் தட்டி விட்டுட்டு அப்படியே வாசிப்பாங்க. லட்சத்துல ஒரு மரத்துலதான் ஒரு டிஜிருடூ கிடைக்கும். 

ஆதியிசை தேடி அலைந்தோம்

நான் தமிழகம் முழுதும் அந்தமாதிரி ஒரு யூக்கலிப்டஸ் மரத்தைத் தேடி அலைஞ்சேன், கிடைக்கலே. கடைசியா பிவிசி பைப் மூலம் அந்தக் கருவியைச் செஞ்சேன். கலிம்பாங்கிறது கொட்டாங்கச்சியில செய்யக்கூடிய எளிய வாத்தியம். அவ்வளவு உயிர்ப்பா இசை வெளிவரும். பெரு பழங்குடி களோட ‘ரேட்டல்ஸ்’ங்கிற வாத்தியத்தையும் செஞ்சு வச்சிருக்கேன். 

ஆதியிசை தேடி அலைந்தோம்



இன்னைக்கு பழங்குடி களோட வாழ்க்கைமுறையில நிறைய மாற்றங்கள் வந்திடுச்சு. அவங்க பண்பாட்டையும் மரபையும் தொலைச்சுட்டு தவிச்சுக்கிட்டிருக்காங்க. பல சமூகங்கள், இசை, பாட்டை யெல்லாம் விட்டு வெகுதூரம் விலகிட்டாங்க. குழந்தை களுக்குப் பழைய வாழ்க்கை முறையே தெரியலே. அதனால மாணவர்களை இலக்கு வச்சோம். ஊர் ஊராகப் போய் பிள்ளைகளுக்கு இசைப்பயிற்சியும் நாடகப்பயிற்சியும் கொடுக்கிறோம்.

தமிழகத்துல முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடிகள் இருக்காங்க.  அவங்ககிட்ட  அபூர்வமான, மந்திர சக்திமிக்க இசையும், பாடல்களும் இருக்கு. அதையெல்லாம் ஆவணப்படுத்தியிருக்கோம். இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கு...” என்கிறார் லியோன்.

திணைநிலவாசிகள், மீனவர்களாக மாறி அவர்களின் வாழ்க்கை வதைகளை நிகழ்த்த ஆயத்தமாகிறார்கள். லியோனின் டிஜிடிரூ உயிர்கொள்கிறது. ஹவாய் பழங்குடிகள் பாடும்,  மரணத்தை வென்று மீண்டுவரும் தங்கள் குலத்தலைவன் குறித்தான பாடலை  சோகம்ததும்பப் பாடி அந்தச் சூழலை மேலும் உயிர்ப்பிக்கிறார் சாருமதி.

வெ.நீலகண்டன் / படங்கள்: தி.விஜய்