மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER

கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER

கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER

90 -களின் இறுதிக்காலம். இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஹீரோ அவர். “தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா” என்ற வரிகள் அவருக்கு சரியாகப் பொருந்தும். டாப் கியரில் போட்டு கரியர் வண்டியைத் தூக்கியடித்துக்கொண்டிருந்தவருக்கு வந்தது ஒரு ஸ்பீடு பிரேக்கர். வதந்திதான். ஊர் வாயை மூடமுடியவில்லை. அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார் எனக் குக்கிராமம் வரை விசில் அடித்துக்கொண்டிருந்தது அந்த வதந்தி. உடனடியாக அவரால் வெளியே வர முடியாத பர்சனல் விஷயத்தில் சிக்கியிருந்தார். அவர் பி.ஆர்.ஓ-க்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். “ஆளக் காட்டுங்கப்பா” என்றனர் மீடியாவும் ரசிகர்களும் பொதுமக்களும். அவர் வெளியே வந்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க சில நாள்கள் ஆகிவிட்டன.

கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER

இதே சம்பவம் இப்போது நடந்தால்? ஒரே ஒரு ட்வீட் தான். முடிந்தால் வீடியோ ட்வீட். அல்லது இன்று எடுத்தது என்ற அடையாளத்துடன் ஒரு புகைப்படம் “I am safe guys. God bless” எனத் தட்டிவிட்டால் அனைவரும் அதை ரீட்வீட் செய்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். 19 எழுத்துகள்தான். ஆனால், எத்தனை பேரின் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் இல்லையா? இது ட்விட்டரின் நற்பலன்களின் ஒரேயொரு துளிதான். இன்னும் ஏராளமான, அட்டகாசமான காரியங்களின் காரியகர்த்தா இந்தச் சின்ன நீலக்குருவி. இந்தக் குருவிக்கு உருவமும் உயிரும்கொடுத்தவர் ஜாக் டோர்ஸி. ட்விட்டர்களுக்குச் செல்லமாக, ஜாக்.

கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER



ஜாக் டோர்ஸிக்கு சிறுவயதிலிருந்தே ஓர் ஆசை உண்டு. நியூயார்க் நகரத்தின் லைவ் மேப் ஒன்றை உருவாக்க வேண்டும். நகரும் கார்கள் தொடங்கி அனைத்தும் லைவாக இருக்க வேண்டும். அடிக்கடி ஊர்மாறும் குடும்பம் ஜாக்குடையது. எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊரின் மேப் வாங்கி நள்ளிரவு வரை சுற்றுவார். யாரிடமும் பேச மாட்டார். பேசினாலும் குறைவாகத்தானிருக்கும். காரணம், திக்குவாய். இந்த மிகக்குறைவாகப் பேசும் ஜாக்கின் தன்மையே, ட்விட்டரின் வார்த்தைச் சிக்கனத்துக்குக் காரணம்.

சிறுவயதிலே கணினிமீது ஜாக்குக்கு அளவற்ற காதல்.  14வது வயதில் நியூயார்க்கின் மினியேச்சர் ஒன்றை உருவாக்கினார். எலக்ட்ரானிக் தகவல் களஞ்சியமான அதில் வாகன ஓட்டிகள், குறிப்பாக லாரி ஓட்டுநர்கள் தங்களின் இருப்பிடத்தை, தகவலைச் சுருக்கமாகச் சொல்லும் வசதியிருந்தது. அப்போதே `இவன் டெக் கில்லி’ என ஜாக்கை அறிந்தவர்கள் முடிவு செய்தார்கள்.

கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER

டீன் ஏஜின் முடிவில் ஒரு நிறுவனத்துக்குப் புது ஐடியா ஒன்றைக் காண்பிக்கச் சென்றிருந்தார் ஜாக். அதன் உரிமையாளர் “2 நிமிஷம்ப்பா” என உள்ளே சென்றவர் மறந்துவிட்டார். தமிழ் சினிமாக் கதாநாயகிபோல பல மணி நேரம் அங்கேயே காத்திருந்தார் ஜாக். பொறுமை பலனளித்தது.  19 வயதில் 30 பேர் கொண்ட டீமை இயக்கும் வாய்ப்பு ஜாக்குக்குக் கிடைத்தது.

காலம் ஜாக்கை ஓடியோ (Odeo) என்ற ஸ்டார்ட் அப்புக்கு அழைத்து வந்தது. Podcast எனப்படும் ஒலிக்கோப்பைகளை உருவாக்கிக்கொண்டிருந்த அந்நிறுவனம், இனி அது வேலைக்காவாது என முடிவு செய்தது. வேறு என்ன செய்யலாம் என ஊழியர்களிடம் ஐடியா கேட்டது. ஜாக்குக்குக் கிடைத்த ஜாக்பாட் அந்த வாய்ப்பு.  தன் ஐடியா ஜீபூம்பாக்களைக் கிறுக்கி வைத்த நோட்பேடைத் தேடினார். அதில் அப்போது அவருக்குப் பிடித்த ஒரு ஐடியாவை டிக் அடித்தார். ஒரு வலைதளம். நாம் எங்கேயிருக்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சுருக்கமாக, எளிமையாகச் சொல்லும் தளம். ஒரு பேப்பர், பேனாவில் உருவானதுதான் ட்விட்டர். 
 
அந்த அலுவலகத்தில் அப்போது யாருக்குமே வேலையில்லை என்பதால், ஜாக்கின் அறிவுக்குழந்தையை எல்லோரும் ஊட்டி வளர்க்க ஆரம்பித்தார்கள். போஷாக்காக வளர்ந்த ட்விட்டர். 2006, மார்ச் 22 அன்று இணைய உலகில் பிறந்தது.

``just setting up my twttr”

இதுதான் ஜாக் எழுதிய முதல் ட்வீட். ஆரம்பத்தில் அமெரிக்கர்கள் ட்விட்டரைக் கழுவி ஊற்றினார்கள். அதன் நிறுவனர்களில் ஒருவரான வில்லியம் என்பவரே “ட்விட்டர் ஐஸ்க்ரீம் மாதிரி. நல்லாருக்கும். ஆனா எதுக்கும் யூஸ் இல்லை” என்றார். ஆனால், நடந்தது வேறு.  
 
நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம்  தொடர்பான தகவல் பரிமாற்றங்களை விரைவாகவும் எளிதாகவும் செய்ய ட்விட்டரைவிட வேறு நல்ல தளம் இன்றைய தேதியில் கிடையாது. 2006-ம் ஆண்டு, மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ட்விட்டரைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சான்ஃப்ரான்ஸிஸ்கோ நிலநடுக்கம்தான். தொலைக்காட்சிகளைவிடவும் வேகமாகச் செய்திகளைப் பரப்பியது ட்விட்டர். நம்ம ஊரிலும் சென்னை வெள்ளம், ஓகி புயல் சமயங்களில் ட்விட்டர் வெகுவாக உதவியது.

கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER



சான்ஃப்ரான்ஸிஸ்கோ நிலநடுக்கத்துக்குப் பிறகு ட்விட்டரின் தேவையை நெட்டிசன்கள் புரிந்துகொண்டார்கள். அதே லாஜிக்கைப் பல விஷயத்துக்குப் பயன்படுத்தினார்கள். லைவாக ஒரு விஷயத்தைப் பகிர்வது சுவாரஸ்யத்தைக் கூட்டுவதைக் கண்கூடாகப் பார்த்தார்கள். படம் பார்த்துவிட்டு வந்து அதற்கு விமர்சனம் எழுதுவதைவிடத் திரையரங்கில் அமர்ந்துகொண்டே லைவாக கமென்ட் போடுவது கூடுதலாக ரசிக்கப்பட்டது. இதனால் அடுத்த சில மாதங்களிலேயே பயனர்களின் எண்ணிக்கை டெராபைட் வேகத்தில் கூடி, ட்விட்டர் சர்வரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. எதிர்பாராத வளர்ச்சி ட்விட்டரை நிலைகுலையச் செய்தது. 2017-ன் தொடக்க மாதங்களில் பலமுறை ட்விட்டர் ஹேங் ஆனது. “ஐயோ... ட்விட்டர் வேலைக்காவாது” என பயந்த நெட்டிசன்கள் ட்விட்டரைப் போலவே வேறு ஏதும் தளமிருக்கிறதா எனத் தேடத் தொடங்கினர். அப்போதுதான் ட்விட்டரின் பலமும் அதிலிருக்கும் சந்தை வாய்ப்பும் முதலீட்டாளர்களுக்குப் புரியத் தொடங்கியது. ட்விட்டர் சர்வரின் நிலநடுக்கத்தைச் சரிசெய்ய நிவாரண நிதி போல முதலீட்டாளர்கள் பணத்தை வாரி வழங்கினர். ட்விட்டர் தலை நிமிரத் தொடங்கியது.

2009-ல் உலகின் மூன்றாவது மிகப்பெரிய சமூக வலைதளமானது ட்விட்டர். அப்போது தேர்தல் பிரசாரத்தில் இருந்த பராக் ஓபாமாவின் உற்ற தோழனே ட்விட்டர்தான். வாக்குறுதிகள், எதிர்க்கட்சிகளுக்குக் கேள்விகள், அவர்கள் கேள்விகளுக்கு பதில்கள் என ட்விட்டரைத் தேர்தல் பொறுப்பாளராகவே மாற்றியிருந்தார் ஒபாமா. உலகமே உற்றுநோக்கும் ஒரு தேர்தலில் இவ்வளவு பெரிய பங்கு வகித்தால், உலகின் ஒட்டுமொத்தப் பார்வையும் அதன் மேல் விழாதா?! ட்விட்டர் உலக நாடுகள் அனைத்துக்கும் கிளைபரப்பத் தொடங்கியது. ``ட்வீட்தான் பாஸ் சிறுசு... ட்விட்டர் ரொம்பப் பெருசு!” என ஜாக், பன்ச் அடிக்குமளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது. இன்று ஜாக்கின் சொத்து மதிப்பு 44,000 கோடி. ட்விட்டரின் மதிப்பு 55,000 கோடி.

உலக மொழிகள் அனைத்தின் எழுத்துகளுக்கும் ஒரு வலிமை உண்டு. அதை இன்னும் அதிகமாக்கிய பெருமை ட்விட்டருக்கு உண்டு. ஆரம்பத்தில் 140 எழுத்துகளை மட்டுமே அனுமதித்த ட்விட்டர், இப்போது 280 எழுத்துகள் வரை அனுமதிக்கிறது. ஆனால், அதிலும் மிச்சம் செய்து 40-50 எழுத்துகளிலே பல புரட்சிகளையும், அரசியல் மாற்றங்களையும் ட்விட்டர் சாதித்திருக்கிறது. 2011-ல் நடந்த எகிப்துப் புரட்சி தொடங்கி இப்போது நடந்துகொண்டிருக்கும் #Metoo பிரசாரம்வரை ட்விட்டர் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது. ட்விட்டர் மூலம் யாரோ செய்தார்கள் என்றாலும் அதற்குக் கருவியாக இருந்த ட்விட்டருக்கும் நிச்சயம் அதில் பெரும்பங்கு உண்டு.

ஃபேஸ்புக்குக்கும் ட்விட்டருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு ஃபேஸ்புக் நண்பர்களைத் தெரியாதவர்கள்போல மாற்றும். ட்விட்டர் தெரியாதவர்களையும் நண்பர்கள் ஆக்கும். ஆமாம், ட்விட்டரில் கருத்துக்குத்தான் முக்கியம். அதை யார் சொல்வதென்பது முக்கியமல்ல. ஃபேஸ்புக்கில் உங்கள் புகைப்படத்தை அப்லோடு செய்தால் நிறைய லைக்ஸ் வரும். ஆனால், ட்விட்டரில் நீங்கள் எழுதும் சுவாரஸ்ய ட்வீட்டுக்குத்தான் ரீட்வீட் கிடைக்கும். இரண்டுமே சமூக வலைதளங்கள் என்றாலும் ட்விட்டரின் வடிவம் கூடுதல் சுவாரஸ்யம் கொண்டது. ஃபேஸ்புக்கில் ஒருவர் ஸ்டேட்டஸ் போட்டால், அதன்  கீழே நாம் கமென்ட் செய்ய முடியும். அது, ஒருவர் மேடையிலிருந்து பேசுவதும், நாம் கீழிருந்து அவருடன் உரையாடுவதும் போன்றது. ட்விட்டரில் அப்படியில்லை. எல்லோரும் சமம். இங்கே யாருக்கும் தனி மேடையில்லை. இந்த வடிவத்தை உள்வாங்கிக் கொள்வதில் ஆரம்பத்தில் சிக்கலிருக்கலாம். ஆனால், உள்ளே வந்தபின் எண்டெர்டெயின்மென்ட்தான். அதனால்தான் பிரபலங்கள் பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை அட்மினிடம் கொடுத்துவிட்டு, ட்விட்டரை அவர்களே கையாள்கிறார்கள்.

இன்று ட்விட்டரில் ஒவ்வொரு மாதமும் 40 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஆக்டிவாக இருக்கிறார்கள். தொடங்கியபின் பல ஆண்டுகள்வரை ட்விட்டர் வருமானமே பார்க்காமலிருந்தது. காரணம், மற்ற சமூக வலைதளங்களிலிருக்கும் அளவுக்கு இங்கே விளம்பரங்கள் கிடையாது. சென்ற ஆண்டுதான் 18,000 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது ட்விட்டர். உலக அளவில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக்கியிருக்கிறது. குறிப்பாக பிரபலங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைத்திருக்கிறது ட்விட்டர். மிக விரைவாகத் தகவல்களைப் பரிமாற உதவுகிறது. கருத்து ரீதியிலான விவாதத்தை எல்லைகள் கடந்து நிகழ்த்தக் களம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது ட்விட்டர். அந்த வகையில் மனிதனின் அறிவுவளர்ச்சியில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ஜாக் டோர்ஸியும் அவர் அறிவுக்குழந்தையும்.

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா