
ஓவியங்கள்: ம.செ.,
வேந்தர் தரப்பினர் நடுங்கி நின்றனர். திசைவேழரின் கூற்று யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அதை யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், எதிர்கொண்டே ஆகவேண்டும். என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் திணறினர்.
அமைச்சன் ஆதிநந்தி பேச முன்வந்தபோது, குலசேகரபாண்டியன் தனது கையசைவில் அதை நிறுத்தினார். அவரது கண் பார்வை மையூர்கிழாரை நோக்கிப் போனது. அவர் எந்த அவையிலும் வலிமையான உரையாடலை முன்வைக்கக்கூடியவர். இப்போது அவர் தளபதியாக இருந்தாலும் திசைவேழரை எதிர்கொள்ள அவரே பொருத்தமானவர் என்று குலசேகரபாண்டியனுக்குத் தோன்றியது.

பேரரசரின் கண்ணசைவில் உத்தரவைப் புரிந்துகொண்டார் மையூர்கிழார். இருக்கும் இடத்திலிருந்து சற்று முன்வந்து பெருங்குரலெடுத்துக் கூறினார், ``திசைவேழரை வணங்குகிறேன். எதன் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறீர்?”
``போரின் விதி மீறப்பட்டதாக நிலைமான் கோல்சொல்லி கூறிவிட்டால் தண்டனையைத் தாழ்ந்து பெறவேண்டும். அதுதான் விதி.”
``நான் விதியை மீறவில்லை. விளக்கம்தான் கேட்கிறேன்.”
``என்ன விளக்கம் வேண்டும் உனக்கு?”
``அவர்கள் இருவரும் விதியை மீறியதாக நீங்கள் சொல்வதற்கான விளக்கம்?”
``போர் முடிவுறும் முரசின் ஓசை கேட்கும்போது பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் கூடாரத்தினுள் இருந்த நீலனை வெளியில் அழைத்துவந்துவிட்டான். ஆனால், முரசின் ஓசை கேட்டதும் தனது ஆயுதங்களைத் தாழ்த்தி அப்படியே நின்றான். மூஞ்சலை விட்டு வெளியேறாத நிலை என்பதால், நீலனை மீண்டும் கூடாரத்துக்குள் அனுப்பினான். போர் முடிவுற்ற பிறகு மூஞ்சலை விட்டு வெளியேற்றக் கூடாது என்பதால் அப்படிச் செய்தான்.

நீலன் கூடாரத்துக்குள் நுழைவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த இரவாதனை, பின்புறமிருந்து பொதியவெற்பனும் சோழவேழனும் சரமாரியாக அம்பெய்தித் தாக்கினர். அவர்களுடன் படையணியினரும் சேர்ந்து தாக்கினர். போர் முடிவுற்ற பிறகு ஆயுதங்களைத் தாழ்த்தி நின்றுகொண்டிருந்தவனை விதிகளை மீறிக் கொலைசெய்தனர் இருவரும்.”
சொல்லி முடிக்கும் முன் சினம்கொண்டு கத்தினான் சோழவேழன், ``நாங்கள் அதற்கு முன்பே அம்பெய்திவிட்டோம்.”
``நாங்கள் அம்பெய்திய பிறகுதான் உங்களின் முரசின் ஓசை கேட்டது” என்று உரக்கக் குரல்கொடுத்தான் பொதியவெற்பன்.
திசைவேழரின் உடல் நடுங்கியது. தனது கூற்றை மறுத்து மேலெழும் சொற்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இடைவெளியின்றி மையூர்கிழாரின் குரலும் மேலெழுந்து வந்தது, ``அரசப்பெருமக்கள் சொல்லும் விளக்கம் ஏற்புடையதா திசைவேழரே?”
மேலேறிய சினத்தைக் கட்டுப்படுத்தியபடி சொன்னார், ``நிலைமான் கோல்சொல்லி ஒரு பொய்யின் மீது விளக்கம் அளிக்கும் அளவுக்குத் தாழ்ந்துவிடவில்லை.”
மையூர்கிழார் சற்றே அதிர்ச்சியானார். திசைவேழரைக் கைக்கொள்வது எளிதன்று என்பது தெரியும். ஆனாலும் அவரின் குணமறிந்து உரையாடலை வேறு திசைக்குத் திருப்புவதே இப்போதிருக்கும் ஒரே வழி எனத் தோன்றியது. ``நான் பொய்யின் மீது விளக்கம் கேட்கவில்லை திசைவேழரே! அவர்களின் கூற்றுக்குப் பிறகு உங்களின் குற்றச்சாட்டின் மீதான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.”
``நான் சொல்வது குற்றச்சாட்டன்று, தீர்ப்பு.”
எந்தச் சொல்லாலும் தான் அதிர்ச்சிக்குள்ளாக வில்லை என்பதைக் காட்டிக்கொள்ள இடைவெளியின்றி மையூர்கிழார் சொன்னார், ``உண்மைதான் திசைவேழரே. நீங்கள் சொல்வது தீர்ப்புதான். நான் கேட்பது அந்தத் தீர்ப்பின் மீதான சிறிய விளக்கம் மட்டுமே.”
``இன்னும் என்ன விளக்கம் தேவை?”
``முரசின் ஓசைக்கு முன்பே அவர்கள் அம்பெய்திவிட்டதாகக் கூறுகின்றனரே?’’
``அவர்கள் இருவரும் இரவாதனின் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியாகி நின்றிருந்தனர். கடைசி நாழிகையில் நீண்டநேரம் அவர்கள் அம்பெய்யவில்லை. முரசின் ஓசை கேட்ட பிறகு, இரவாதன் ஆயுதங்களைத் தாழ்த்தி உள்நுழையும் நீலனை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் இவர்கள் பின்னாலிருந்து அம்பெய்தனர். அதாவது, போரிட்டுக்கொண்டி ருக்கையில் இரவாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. முரசின் ஓசை கேட்டு அவன் ஆயுதங்களைத் தாழ்த்திய பிறகு கோழைகளைப்போல, பின்னாலிருந்து தாக்கினர்.”

``என் தந்தையை `கோழை’ என்றா சொல்கிறீர்?” எனத் துடித்தெழுந்தான் செங்கனச்சோழன். பாண்டிய இளவரசனை இகழ்வதற்கு எதிராகக் கருங்கைவாணனின் குரல் அதைவிட மேலேறிவந்தது.
எதிர்த் தாக்குதலைப்போல மற்றவர்களை உரத்துக் குரல்கொடுக்க இடம் தந்துவிட்டு, அதே நேரத்தில் தான் பணிந்து கேட்பதைப் போன்ற குரலில் மையூர்கிழார் கேட்டார், ``எம் தரப்பு நிலைமான் கோல்சொல்லி நீங்கள். உங்களிடமிருந்து நான் தெளிவு பெறவே விரும்புகிறேன். எனவே, தவறாகக் கருதவேண்டாம். நீங்கள் நின்றிருக்கும் இந்தப் பரணிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது மூஞ்சல். அங்கு போர் நடந்துகொண்டிருந்தது. அம்பெய்தது முரசின் ஓசைக்கு முன்பா... பின்பா... என்பதை இங்கிருந்து கணிப்பது எளிதல்லவே!”
``இங்கிருந்து மூஞ்சல் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
``இரண்டு காதத் தொலைவில் இருக்கிறது.”
``அதோ அந்த விண்மீன் கூட்டம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
வானத்தில் ஒளிரும் விண்மீன்களைக் காட்டி திசைவேழர் கேட்டதும் சற்றே அதிர்ந்து நின்றார் மையூர்கிழார். சட்டென விடை சொல்லவில்லை. இதற்கு விடை சொன்னால் திசைவேழர் அடுத்து என்ன சொல்வார் என்பதை உணர முடிந்தது. தலைநிமிர்ந்து விரிந்த கண்களால் வானத்தைப் பார்த்தார் மையூர்கிழார்.
இரலிமேட்டின் குகையடிவாரத்துக்குக் கொண்டுவரப்பட்ட சூளூர் வீரர்களின் உடல்கள், வரிசையாக வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இன்னும் சில வீரர்களின் உடல்களே வரவேண்டியிருந்தன. அனைவரையும் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன.
போர்க்காலத்தில் இறுதிச்சடங்குகளை விரைவில் முடித்தாகவேண்டும். அப்போதுதான் அந்தத் தாக்கத்திலிருந்து மற்ற வீரர்கள் வேகமாக வெளிவருவர். அதன்பிறகு அவர்கள் தூங்கியெழுந்து மறுநாள் போருக்கு ஆயத்தமாக வேண்டும். உடல்நிலையும் மனநிலையும் போர்க்களத்துக்கான முழுத் தகுதிகொண்டிருக்க வேண்டும். எனவே, மரணத்தை ஒரு வாள்வீச்சுபோல கணப்பொழுதில் கடந்தாக வேண்டும். அதுதான் போர்க்களத்தின் விதி. வீசிச் சென்ற வாள், காற்றில் தனது தடத்தை விட்டுவைப்பதில்லை. அதேபோல்தான் வீரனின் நினைவுகள் போர்க்களத்தில் தங்கக் கூடாது. எல்லாம் உடனடியாக அகற்றப்பட்டாக வேண்டும்.
ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளவை மாவீரர்களின் உடல்கள். அதனால்தான் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு வீரரும் அவர்களின் குருதியை எடுத்து மார்பெங்கும் பூசி வஞ்சினம் உரைத்தனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களைத் தனதாக்கத் துடித்தனர். அவர்களின் வீரம் தங்களின் உடலெங்கும் நிலைகொள்ள வேண்டும் என வேண்டினர். சூளூர் வீரர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, காடு அதிரக் கத்தினர். ஆவேச உணர்வு எங்கும் பீறிட்டுக்கொண்டிருந்தது. காரமலையெங்கும் குரலின் வழியே சினத்தை நிறுத்தினர்.
தனித்திருக்கும் கரும்பாறைப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது இரவாதனின் உடல். அவன் தலைக்கு மேல் பெருந்தீப்பந்தம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பந்தச்சுடரின் செந்நிற வெளிச்சம் குருதியைப் பீச்சிக்கொண்டிருந்தது. சுடரும் குருதியின் பேரொளி தனது உடலின் மேல் விழ ஒவ்வொரு வீரனும் முண்டியடித்து உள்நுழைந்து கொண்டிருந்தான். நிலைமை இப்படியே போனால் இரவு முழுமையும் கழிந்துவிடும். தூக்கமே இன்றித்தான் நாளை பறம்பு வீரர்கள் போர்க்களத்தில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும் என்று சிந்தித்த வாரிக்கையன், தேக்கனை அழைத்துவந்து விரைவாக இறுதி நிகழ்வை முடிக்கவேண்டும் எனத் திட்டமிட்டான்.
தேக்கனை உடனே அழைத்துவரச் சொல்லி அவனது குடில் நோக்கி வீரன் ஒருவனை அனுப்பிவைத்தான்.
பள்ளத்தாக்கில் இரவாதனைப் பாரியிடம் ஒப்படைத்த தேக்கன், தனது குடிலுக்கு வந்துசேர்ந்தான். அவனது எண்ண ஓட்டங்கள் நிலைகொள்ளாமலிருந்தன. எவ்வளவு பெரிய நெருக்கடியிலும் இடரிலும் கலங்காது முடிவெடுக்கும் ஆற்றலைப் பறம்புநாட்டுத் தேக்கன்கள் இழப்பதில்லை. ஆனால், தன்னால் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லையே என்ற பதற்றம் முதன்முறையாகத் தேக்கனுக்கு ஏற்பட்டது.
போர்க்களத்தை, அதன் போக்கை, வேந்தர்படையின் தாக்குதல் உத்திகளை, பறம்புப்படையின் வலிமையை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்த்தபடியே இருந்தான். பறம்புநாட்டுத் தேக்கனாக, தான் இந்தக் கணம் எடுக்கவேண்டிய முடிவென்ன என்ற கேள்வியை எழுப்பி வெவ்வேறு விடைகளை அதற்குப் பொருத்திப் பார்த்தான். ஒவ்வொரு விடைக்கும் ஒவ்வொரு விளைவு இருந்தது. எந்த முடிவு என்ன விளைவை உருவாக்கும் என்பதை ஓரளவு தெளிவாக உணர முடிந்தது. ஆனால், போர்க்களத்தில் எல்லாவற்றையும் துல்லியமாக முன்னுணரவும் முன்திட்டமிடவும் முடியாது. எனவே, கேள்விகளை எல்லாவிதமான வாய்ப்புகளின் வழியேயும் மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருந்தான்.
குடிலின் படல் திறந்து உள்நுழைந்தான். வெளியில் எரிந்துகொண்டிருந்த பந்தத்திலிருந்து விளக்கை ஏற்றிக் குடிலுக்குள் கொண்டுவந்து வைத்தான். வழக்கமாக தேக்கனுக்குப் பணிவிடை செய்ய அங்கு இருக்கும் வீரர்கள் எல்லோரும் இரலிமேட்டுக்குப் போய்விட்டனர். யாரும் அங்கு இல்லை.

தனது இருக்கையில் அமர்ந்தான். `போர்க்களத்தில் போரிடத் தகுதியின்றி பறம்பு ஆசான் நிற்பது எவ்வளவு பெரிய இழப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நான் முழு ஆற்றலோடு இன்று களத்தில் நின்றிருந்தால் முடியனோ, நானோ மூஞ்சலை அடைந்திருப்போம். இரவாதனை இழந்திருக்க மாட்டோம். ஆயுதங்களைக் கைக்கொள்ள முடியாத எனது இருப்பு, பறம்பு வீரர்களுக்கான மரண வழித்தடமாக மாறி நிற்கிறது.
நான் இருக்கும் வரை, பாரி பறம்பின் எல்லையை விட்டு வெளிவந்து களமிறங்க முடியாது. பாரி களம் இறங்காதவரை இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க முடியாது. பறம்புநாட்டு மாவீரர்களையும் இணையற்ற போராளிகளையும் இனியும் நாம் போர்க்களத்தில் பலிகொடுக்கக் கூடாது. அதற்கு இருக்கும் ஒரே வழி, பாரி களம் இறங்க நான் வழிவிடுதல் மட்டுமே’ - எண்ணங்களை ஒருங்கிணைத்து முடிவுக்கு வந்தான். இதைவிடச் சிறந்த முடிவெதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. எனவே, முடிவைச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கினான்.
கடந்த சில நாள்களாகப் பயன்படுத்தாமல் இருந்த அவனது வில், குடிலின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. எழுந்து போய் அதை எடுத்து வந்தான். இருக்கையில் உட்கார்ந்தபடியே நாணை இறுக்கிக் கட்டினான். அம்பறாத்தூணியைக் கண்கள் தேடின. மேல்மூங்கிலில் அது தொங்கிக்கொண்டிருந்தது.
மீண்டும் எழுந்து போய் அதை எடுக்கவேண்டியிருந்தது. விலாவெலும்பு குத்தி உள்ளிறங்கிக்கொண்டிருந்தாலும் தனக்குப் பிடித்த அம்பை எடுக்க வழக்கம்போல் அவனது கைகள் விரைந்து சென்றன.
போரின் போக்கறிந்து, கடைசி ஐந்து நாழிகை இருக்கும்போது திசைவேழர் இடதுபுறம் இருக்கும் மூன்றாம் பரணுக்கு வந்துசேர்ந்திருந்தார். நடந்தது அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அறிந்திருந்தார். அவர் சொல்லும் சான்றுகளை மையூர்கிழாரால் மறுக்க முடியவில்லை. சொற்களால் அவருடைய எண்ணங்களைத் திசைதிருப்ப முடியுமா என்று செய்துபார்த்த முயற்சிகளால் எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை. உரையாடலை இதற்கு மேலும் நீட்டிக்க முடியாத நிலை உருவானது.
அடுத்து என்ன செய்யலாம் என மையூர்கிழார் யோசித்தபடி நின்றிருந்தபோது பாண்டியநாட்டு அமைச்சன் ஆதிநந்தி சொன்னான், ``திசைவேழரை மீண்டும் வணங்குகிறேன். நீங்கள் சொல்லியபடி அவர்கள் முரசின் ஓசை கேட்ட பிறகே அம்பெய்தனர் என வைத்துக்கொள்வோம். போரின் விதிகள் தட்டியங்காட்டுக்குத்தானே பொருந்தும். மூஞ்சல், தட்டியங்காட்டை விட்டு வெளியில்தானே இருக்கிறது.”
திசைவேழரின் சினம் உச்சத்தைத் தொட்டது. கண்களை இறுக மூடி நஞ்சை விழுங்குவதைப்போலக் கேள்வியை விழுங்கினார். ஆனாலும் தனது கடமையிலிருந்து நழுவக் கூடாது என எண்ணியபடி சொன்னார், ``பறம்பு வீரர்கள் நள்ளிரவில் வந்து மூஞ்சலைத் தாக்கியிருந்தால், அவர்கள் போர்விதிகளை மீறிவிட்டார்கள் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்களா? போர்விதிகள் என்பவை, போரிடும் காலம் முழுவதும் போரிடுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள். அவை இடத்தோடும் பொழுதோடும் தொடர்புடையவை அல்ல. அந்த நெறிகளைக் கடைப்பிடிக்கும் மனநிலையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். ஏனென்றால், உங்கள் வீரத்தின் மீது உங்களுக்கு இருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.”
சொல்லின் தாக்குதலால் நிலைகுலைந்து நின்றனர் வேந்தர்கள். திசைவேழர் அதே குரலில் தொடர்ந்தார், ``எனது தண்டனையை ஏற்பதற்கான கடைசி வாய்ப்பை வழங்குகிறேன். பொதியவெற்பனும் சோழவேழனும் இக்கணமே ஆயுதங்களைத் துறந்து போர்க்களம் விட்டு வெளியேறுங்கள்.”
அமைதி அப்படியே நீடித்தது. வேந்தர்களின் முகங்கள் இறுக்கம்கொண்டன. ``கிழவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்றான் பொதியவெற்பன். உதியஞ்சேரல் ஏதோ சொல்லவந்தான். அப்போது திசைவேழரின் குரல் முன்னிலும் உரத்து வெளிப்பட்டது.
``போர் விதிமுறைகளை ஏற்று முரசின் ஓசை கேட்டதும் ஆயுதங்களைத் தாழ்த்திய இரவாதனே! உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். விதிமுறைகளை மதிக்கத் தெரியாத வேந்தர்படைக்கு நிலைமான் கோல்சொல்லியாக இருந்த நான் இந்தத் தவற்றுக்குப் பொறுப்பேற்று எனக்கு தண்டனை வழங்கிக்கொள்கிறேன்.

இதோ, எனது கண்களுக்கு முன்னால் ஒளிவீசும் விண்மீன்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனதுக்குள் போரொளியாகச் சுடர்விடுவது மூஞ்சலுக்குள் நீ வெளிப்படுத்திய வீரமே. உன்னைப்போன்ற நெறி பிறழாத மாவீரர்கள் என்றென்றும் போற்றப்படுவீர்கள். நீ இரவாப்புகழுடன் வாழ்வாய்! இரவாதன் மரணமற்றவன் என்பதைக் காலம் உணர்த்தும். தட்டியங்காட்டுப் போரின் நினைவிருக்கும் வரை உனது புகழ் இருக்கும்!”
சொல்லியபடி பரணின் முன்புறமிருந்த கம்பங்களை விட்டு, பின்புறமாக வந்து தனது சிற்றிருக்கையில் அமர்ந்தார். உடலெங்கும் இருந்த நடுக்கம் வடிந்து அமைதிகொண்டது.
`என்ன செய்யப்போகிறார் திசைவேழர்?’ என்று பதற்றம்கொண்டார் கபிலர்.
திசைவேழரோ, இருக்கையில் அமர்ந்ததும் தனக்கு எதிரே நாழிகை வட்டிலில் இருந்த நாழிகைக்கோல் இரண்டையும் தன் இரு கைகளிலும் எடுத்து மேலேந்தினார்.
கால்விரல்களால் நாணை அழுத்திக்கொண்டு வலதுகையால் வில்லை இழுத்து மேலே தூக்கினான் தேக்கன். கால்விரல்கள் இரண்டும் அம்பைக் கவ்விப்பிடித்திருந்தன. அம்பின் முனை நடுவயிற்றின் விலாவெலும்புக் குழியில் இருந்தது. கால்விரல்களை அழுத்திக்கொண்டு வலதுகையால் வில்லை மேல்நோக்கி நன்றாக இழுத்து விசையைக் கூட்டினான்.

அண்ணாந்து மேலே பார்த்தார் திசைவேழர். வானில் உள்ள அனைத்து விண்மீன்களும் அவருடைய கண்களையே பார்த்துக்கொண்டி ருந்தன. கருவிழிகள் முழுச் சுற்றுச் சுற்றி வட்டமடித்தன. இரு கைகளிலும் ஏந்திய கூர்முனைகொண்ட நாழிகைக்கோல்களை, தனது குரல்வளையை நோக்கி இறுக உட்செலுத்தினார்.
கால்விரல்கள் விடுவித்த கணத்தில் விசைகொண்ட அம்பின் முனை, விலாவெலும்புக் குழிக்குள் புகுந்து பின்புறமாக எகிறியது.
இரு கைகளாலும் இழுத்துக் குத்தப்பட்ட நாழிகைக்கோல்கள் நெஞ்சுக்குழிக்குள் கீழிறங்கின. குருதி கொப்பளித்து மேல்வர, தேக்கனும் திசைவேழரும் மெள்ள சாய்ந்தனர். கண்களின் ஒளி எளிதில் மங்கிவிடுவதில்லை. நினைவுகள் கடைசியாகச் சுழன்றடித்து மேலேறின.
எவ்வியூர் நாகப்பச்சை வேலியின் மணமே தேக்கனின் நினைவெங்கும் படர்ந்தது. பகரியை வேட்டையாடி, அதன் ஈரலைத் தின்றுவந்த அந்த நாள் நினைவில் மேலெழுந்தது. கொற்றவையின் கூத்துக்களம் நினைவுக்கு வந்தது. அலவனின் கண்களில் நீல வளையம் பூத்து அடங்கியது. திரையர்களை விரட்டிக்கொண்டு இரவு பகலாக ஓடிய ஓட்டம் அறுந்து அறுந்து மேலெழுந்தது. இறுதியில் காலம்பனின் கதை கேட்டு, பாரி கதறி அழுததும், பாரியை அறிந்தவுடன் காலம்பன் கதறி அழுததும் தோன்றிய கணத்தில் கீதானியின் முகம் தோன்றி மறைந்தது.
மலைவேம்பின் ஆறாம் இலை காடெங்கும் நிரம்பியிருக்க, எங்கும் குலநாகினிகளின் குரவையொலி கேட்டபடி இருந்தது. கருவிழிகள் துடித்தபடி இருக்க, இமைகள் மெள்ள கவியத் தொடங்கின.
பொதிகைமலையின் உச்சிப்பாறையில் நின்று அடர்சிவப்பு நிறம்கொண்ட செவ்வாய்க்கோளைப் பார்த்துக்கொண்டிருந்தார் திசைவேழர். தனது நாடியை மேல்நோக்கி நிமிர்த்தி, வானின் ஒளியைக் கைநீட்டிச் சொல்லிக்கொண்டிருந்தார் அவர் தந்தை. குதிரைத்தலைபோல் இருக்கும் ஆறு புரவிகளும் பொற்கால் கட்டில்போல் இருக்கும் கணையும் மனக்கண்ணில் ஒளிவீசியபடி இருந்தன. சிறுபுலியின் கண்போல் அறுவை இருமீன்கள் அவரை உற்றுநோக்கின.
இமைக்கும் தன்மைகொண்ட விண்மீன்களைப் பார்த்துக்கொண்டே இருப்பது வாழ்வின் பேரானந்தம். மனம், இக்கணத்தில் விண்மீன்களை எண்ணிப்பார்க்க நினைத்தது. ஆனால், சட்டென முடத்திருக்கண்ணனின் முகம் நினைவுக்கு வந்தது. தவறிழைத்தவன் தண்டனையின் வழியே காட்டிக்கொடுத்த நிலம் என்று அவர் சொன்ன சொல், அவரை நோக்கித் திரும்பியது. பக்கத்தில் அந்துவன் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
காடறிய அழைத்துச் செல்வதன் குறியீடான சாமப்பூவின் மணத்தை மோந்தபடி தேக்கனின் நினைவு அறுந்தது.
கார்த்திகையின் ஆறாம் ஒளியைச் சுற்றி இளநீல வட்டம் இருப்பதைப் பார்த்தபடியே கண்ணொளி மங்கி அணைந்தது திசைவேழருக்கு.
தேக்கனைப் பார்த்துவர அனுப்பப்பட்ட வீரன், குடிலுக்குள் நுழையும்போது தேக்கன் குருதிவெள்ளத்தில் கிடந்தான். உயிர் பிரிந்துவிட்டதை அறிந்த வீரன் தனது இரு கைகளிலும் பறம்பு ஆசானைத் தூக்கிக்கொண்டு இரலிமேடு நோக்கி ஓடத் தொடங்கினான்.
அவன் கூவல்குடிக்காரன். தேக்கனைத் தூக்கிக்கொண்டு புறப்படும்போதே கூவலாய்க் கதறத் தொடங்கினான். அவனது கூவல்குரல் மலையெங்கும் எதிரொலிக்கக்கூடியது. கண்ணீரைக் காரமலையெங்கும் தூவினான். பறம்பு ஆசானின் மரணம் பச்சைமலையின் ஒவ்வோர் உயிருக்கும் சொல்லப்படவேண்டியது. கூவல்குடி வீரன் அத்தனை ஒலிகளிலும் தேக்கனின் மரணத்தைக் கூவினான்.
ஒவ்வோர் ஒலிக்குறிப்பும் ஒவ்வோர் உயிரினத்தினுடையது. குரலின் தன்மையைக்கொண்டு பறவைகளைப் பத்து இனங்களாகப் பிரித்திருந்தது கூவல்குடி. பத்து இனங்களின் குரல்களுக்கு ஏற்ப தேக்கனின் துயர்மிகு மரணத்தைக் கூவினான். மணி ஒலிக்கும் குறிப்பில் சொன்னான். அது மண்ணுக்குள்ளிருக்கும் உயிரினங்களுக்கு உரியது. உணவைக் கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல் என ஐவகையிலும் உண்ணும் விலங்குகள் நிலத்துக்கு அடியில் உண்டு. அனைத்து விலங்குகளின் செவிகளிலும் மணியோசை ஒலிக்குறிப்பே சென்று சேரும். மிகநீண்ட நேரம் தேக்கனின் மரணத்தை மணியோசைக் குறிப்பின் மூலம் சொன்னான். எலி வலையின் அடியாழத்தில் இருக்கக்கூடியது கருங்கற்தலையன். அதன் செவியிலும் விழுந்தது தேக்கனின் மரணம்.
பிறகு குழலொலியில் சொன்னான். மேகத்தின் ஒலியில் சொல்லத் தொடங்கியபோது எங்கும் பாறை உருள்வதுபோல் இருந்தது. பெருவிலங்குகளுக்கான ஓசை அது. தும்பிகளுக்கான ஒலியில் சொல்லியபோது துயரத்தின் பேரலை இருளெங்கும் படர்ந்தது. தூக்கி வந்தவன் கண்ணீரின் வலுத்தாங்காமல் மண்டியிட்டு அமர்ந்தான். ஆனால், எதிரில் இருந்த காரமலை, ``என் மகனை என்னிடம் தா” என்று கைநீட்டி அழைத்தது. மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினான். நாகக்கரட்டிலிருந்து பள்ளத்தாக்கில் இறங்கியபோது பேராந்தையின் குரலெடுத்துக் கூவினான். காட்டையே நடுங்கச்செய்யும் குரல் அது. கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோட, விலங்குகளுக்கும், மரம் செடி கொடிகளுக்கும், எண்ணிலடங்காத உயிரினங்களுக்கும் சொல்லிக்கொண்டே ஓடினான்.
அவனது நாக்கு பாம்பைப்போன்று சுழன்று சுழன்று வளைந்து ஒலி எழுப்பியது. உதடுகள் விதவிதமாய்க் குவிந்து விரிந்து கூர்மைகொண்டு கூவின. ஒருகட்டத்தில் அவனது குரல் கேட்டு எங்கெங்கும் இருக்கும் கூவல்குடியினர் ஒன்றுசேர்ந்து ஓசை எழுப்பத் தொடங்கினர். நாகக்கரடு, இரலிமேடு, காரமலை என இருளெங்கும் நிறைந்தது தேக்கனின் மரணம்.
மூஞ்சலில் சூளூர் வீரர்களின் உடல்கள் அனைத்தும் எடுக்கப்பட்ட பிறகு அங்கிருந்து முடியன் புறப்படும்போது மூன்றாம் பரணின் அடிவாரத்தில் பெருங்கூட்டம் இருப்பதையும், எண்ணற்ற பந்தங்கள் எரிந்துகொண்டி ருப்பதையும் பார்த்தான். அந்த இடம் நோக்கி அவன் போனபோது எல்லாம் முடிந்திருந்தன.
பரண் மீதிருந்து தடுமாறிக் கீழிறங்கிய கபிலரை, தொலைவில் கும்மிருட்டுக்குள் இருந்தபடியே பார்த்துக்கொண்டு நின்றான் முடியன். கபிலர் எப்போது அங்கு வந்தார், அங்கு என்ன நடந்தது என அவனுக்குப் புரியவில்லை. ஆனால், எல்லாவிதத்திலும் தளர்ந்துபோய் இருக்கும் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என எண்ணியபடி நின்றுகொண்டே இருந்தான்.
பரண்விட்டு இறங்கிய கபிலரின் அருகில் சென்ற மையூர்கிழார் கை குவித்தபடி எதையோ கூறினார். ஆனால், குவித்த அவன் கைகளைத் தட்டிவிட்டபடி அந்த இடம்விட்டு வேகமாக அகல முயன்றார் கபிலர். இதைப் பார்த்த முடியன், தன்னுடன் இருந்த வீரர்களை உடனடியாகக் கபிலரிடம் அனுப்பினான்.
பத்துக்கும் மேற்பட்ட குதிரைவீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்துவந்து நின்றனர். பறம்பு வீரர்கள் வந்ததறிந்த கபிலர், உடனடியாக ஒரு குதிரையின் மீது ஏறினார். பரண் அடிவாரத்தில் இருந்த வேந்தர்படைக் கூட்டத்தினர் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அத்தனை குதிரைகளும் இருளுக்குள் மறைந்தன.
குருதி படிந்திருந்த திசைவேழரின் மேல்துணியைக் கைகளில் எடுத்துவந்தார் கபிலர். அது என்னவென்று யாருக்கும் தெரியாது. முடியன், கபிலர் எல்லோரும் நாகக்கரட்டை நெருங்கியபோது கூவல்குடியினரின் ஓசை மலையெங்கும் எதிரொலிப்பதைக் கேட்டனர். நள்ளிரவில் மலையெங்கும் இப்படி ஓசை எழுப்பவேண்டிய தேவை என்ன என்று கபிலருக்கு விளங்கவில்லை. உடன் இருந்த கூவல்குடி வீரன், கண்ணீரோடு ஆசானின் மரணத்தைச் சொன்னான்.
குதிரைகள், இரலிமேட்டுக்கு வந்து சேர்ந்தன. வீரர்களை விலக்கியபடி முடியனும் கபிலரும் மற்ற வீரர்களும் மேலேறி வந்தனர்.
தேக்கனின் உடலருகே வாரிக்கையன் உட்கார்ந்திருந்தார்.
முடியன் நேராக தேக்கனின் உடலருகே வந்து அவரது கால்களைத் தொட்டுத் தூக்கி, தனது நெஞ்சிலே வைத்து இறுகப் பற்றிக்கொண்டான். நெஞ்சம் முழுவதும் அடங்காத சினம் உருத்திரண்டு நின்றது. ஆசான் தேக்கனையும் மகன் இரவாதனையும் ஒருசேர இழந்தாலும் பறம்புநாட்டு முடியனாய் கலங்கிடாது எதிர்கொண்டான்.
முடியன் இதைச் செய்துகொண்டிருக்கும்போது கபிலர், இரவாதனின் அருகில் போய் நின்றார். அவன்மீது திசைவேழரின் குருதி படிந்த மேலாடையைப் போர்த்தினார். பரண் மீதிருந்து எடுத்துவரப்பட்ட மேலாடையை ஏன் இரவாதனின் மீது போர்த்துகிறார் என யாருக்கும் புரியவில்லை.
இரவாதனின் காலருகே வந்து உட்கார்ந்து அவனுடைய பாத அடிகளை எடுத்துத் தனது மடிமீது வைத்துக்கொண்டு அந்த மாவீரனின் இறுதிக்கணத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் கபிலர். திசைவேழரின் குருதி இரவாதனின் காலுக்கு அடியில் தேங்கியது.
வேந்தர்கள், அடுத்து செய்யவேண்டியது என்ன என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். மூஞ்சலில் இருந்து வீரர்களின் உடல்கள் இன்னும் அகற்றி முடிந்தபாடில்லை. எனவே, அங்கு அமர்ந்து பேசும் சூழல் இல்லை. பரணை விட்டு அகன்று போர்க்களத்தின் தனித்ததோர் இடத்தில் பந்தங்கள் ஏற்றப்பட, அங்கு அமர்ந்து பேசத் தொடங்கினர்.

மூஞ்சல், முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது. பேரரசர் குலசேகரபாண்டியனின் கூடாரத்தையும் நீலன் இருக்கும் கூடாரத்தையும் தவிர மற்ற கூடாரங்கள் அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் தமது போர் நடவடிக்கைகளை எப்படி அமைத்துக்கொள்வது என்பதைப் பற்றிய பேச்சு நீண்டது.
யாராலும் முழுக்கவனத்தோடு கருத்துகளை முன்வைக்க முடியவில்லை. ஏனெனில், அழிந்தது மூஞ்சல் மட்டுமல்ல; மூவேந்தர்களின் சிறப்புப்படைகளில் பெரும்பகுதி. இப்போதும் மூவேந்தர்களின் படையில் பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களெல்லாம் படைத்தொகுப்பில் இடம்பெறக்கூடிய வீரர்கள்தாம். நிலைப்படை வீரர்கள் எண்ணிக்கை மிகக்குறைவே. அதுமட்டுமல்ல, திசைவேழரின் மரணம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பெருங்கேள்வியாக இருந்தது.
தளபதிகளின் கருத்துகள் முதலில் கேட்கப்பட்டன. அவர்களோ இன்றைய போரில் பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் கொல்லப்பட்டதையும், பறம்பின் குதிரைகள் பெருமளவு கொல்லப்பட்டதையும் வியந்து ஓதினர். தமது படையில் வலிமையான எண்ணிக்கையில் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே, வழக்கம்போல் முழுத்திறனோடு மறுநாளைய போரை எதிர்கொள்வோம் என்றனர்.
அமைதியாக நின்றிருந்த கருங்கைவாணனைப் பார்த்தார் குலசேகரபாண்டியன். சற்றுத் தயக்கத்துக்குப் பிறகு அவன் கூறினான், ``மூஞ்சல் அழிக்கப்பட்டதைவிட மிகவும் கவலைக்குரியது, நாம் பாதுகாத்து வைத்திருந்த நஞ்சுகளும் அவை இருந்த கூடாரமும் முழுமையாக அழிந்ததுதான். இந்தப் போரில் இணையற்ற ஆயுதத்தை இன்று நாம் இழந்துவிட்டோம். அதற்கு நிகரானது எதுவுமில்லை” என்றான்.
கருங்கைவாணன் சொல்லியபோதுதான் உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் நிலைமையைக் கவனம்கொள்ளத் தொடங்கினர். மூவேந்தர்களுக்கும் நேற்றிரவு பாரியைக் கொல்ல நடத்தப்பட்ட திட்டங்களின் முடிவு முழுமையாக வந்து சேரவில்லை. அந்தக் குழப்பத்திலேயே இன்றைய நாளின் பெரும்பகுதி களத்தில் நின்றனர். களத்தின் கடைசி ஐந்து நாழிகையில் ஏற்பட்ட கடும் தாக்குதலுக்குப் பிறகுதான் மூஞ்சலைக் காக்கப் பெருமுயற்சி செய்தனர். அந்த முயற்சியின் இறுதியில் இரவாதனைக் கொல்ல முடிந்ததே தவிர, மூஞ்சலின் அழிவைத் தடுக்க முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக திசைவேழரின் குற்றச்சாட்டும் மரணமும் எல்லோரையும் நிலைகுலையவைத்துள்ளன. போர்க்களத்தில் எந்தக் கணத்திலும் தனது இயலாமை வெளிப்பட்டுவிடக் கூடாது எனக் கருதிய குலசேகரபாண்டியன், நாள்தோறும் நிகழும் எண்ணற்ற மரணத்தைப்போலவே திசைவேழரின் மரணத்தையும் கையாண்டார்.
கருங்கைவாணன் தனது பேச்சைத் தொடர இருந்தான். அதற்கு அடுத்தபடியாக மையூர்கிழார் புதிய திட்டங்களைப் பற்றிக் கூற ஆயத்தமாக இருந்தார். இந்நிலையில் சேரநாட்டின் அமைச்சன் வளவன்காரி எழுந்து சொன்னான், ``பெரும் தளபதிகள் பேசும்முன் அமைச்சனாகிய நான் எனது கருத்தைக் கூற, வேந்தர்களின் அவை இடம் தருமா?”
திடீரென சேர அமைச்சன் ஏன் பேச நினைக்கிறான் என்று யாருக்கும் விளங்கவில்லை. குலசேகரபாண்டியன் சரியெனக் கையசைத்தார்.
அவன் சொன்னான், ``இப்போரில் நமக்கான பெரும்பாதுகாப்பு அரண், திசைவேழரும் அவரால் காக்கப்பட்ட போர்விதிகளும்தான். அவற்றை நாம் இழந்துவிட்டோம். நடந்தது அனைத்தையும் கபிலர், பாரியிடம் தெரிவிப்பார். இனி பறம்பின் தாக்குதல் போர்விதிகளுக்கு உட்பட்டு இருக்காது. அவர்களின் இயல்புமுறைகளின்படி தாக்குதலைத் தொடுத்தால் நம்மால் எதிர்கொள்ள முடியாது.”
சொல்லி முடிக்கும்முன் ``ஏன் முடியாது?” என மேலேறி வந்தது மையூர்கிழாரின் குரல். ``திசைவேழரின் மரணம் மிகச்சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்துவதே அறிவுடைமை.”
``என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார் குலசேகரபாண்டியன்.
சொல்ல முன்வந்தார் மையூர்கிழார்.
போர்நெறிகளைக் காக்க திசைவேழர் உயிர்துறந்தது, தேக்கன் உயிரை ஈந்து சொல்லிச்சென்ற செய்தி அனைத்தும் இரலிமேடெங்கும் நிரம்பின. பொழுது நள்ளிரவைத் தொட்டது. இனியும் இந்நிலை நீடிக்கக் கூடாது என நினைத்த வாரிக்கையன், ``சரி, அடக்கத்துக்கான பணியைத் தொடங்குவோம்” என்றான்.
இறுதி வேலைகளைச் செய்ய, பெரியவர்கள் எழுந்தபோது, ``எதுவொன்றும் செய்ய வேண்டாம்” என்றது பாரியின் குரல்.
குரல் கேட்ட திசை நோக்கி எல்லோரும் திரும்பினர். கருந்திட்டுப் பாறையிலிருந்து எழுந்து வந்த பாரி, அடுக்கிவைக்கப்பட்டுள்ள வீரர்களின் முன் நின்றபடி சொன்னான், ``தட்டியங்காடெங்கும் குவிந்து கிடக்கும் எதிரிகளை வென்று, நீலனை மீட்டுவந்த பிறகு இறுதிச்சடங்கை நடத்துவோம். அதுவே இந்த மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதை.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன்