
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

“பாசி மணி... ஊசிமணி வாங்கலியோ... சாமியோவ்” என்று நம்முன்னால் கருக மணிகளைக் கடை விரிக்கும் குறத்தி மூதாட்டி ஒருவளின் சுருக்கம் விழுந்த ரேகைகளின் சிரிப்பைப் பார்த்திருக்கிறேன். விசித்திரக் கோடுகளால் நிரம்பிய வதனம் எந்தச் சித்திரக்காரனாலும் வரைந்துவிட முடியாத வரலாற்று சோகத்தைக் கொண்டிருக்கும். கறை படிந்த அம்மூதாட்டியின் சிரிப்பு நம்மை ஆசீர்வதிப்பதைப் போலவே எப்போதும் தோன்றும். நிலத்தைப் பற்றிக்கொண்டு வாழும் இவர்களை இதுவரை நான் உயிரோடுதான் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு மரணமே கிடையாதா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். தன் பேத்தியானவளின் விரலைப் பற்றிக்கொண்டு நடக்கும் அம்மூதாட்டியை இரண்டு நாள்களாகப் பார்க்க முடியவில்லை. பேத்தியின் கழுத்தில் மூதாட்டி அணிந்திருந்த நவரத்தின மாலை தொங்கிக்கொண்டிருந்ததைத்தான் பார்க்க முடிந்தது. என் கணிப்பில் அம்மூதாட்டி இறந்திருக்க வேண்டும்.
இறப்பதென்பது அதிசயமா என்ன... எல்லோரும் ஒரு நாள் போய்த்தான் ஆக வேண்டும் என்றெல்லாம் யோசித்தாலும், எவ்வளவோ மரணங்களை இந்த வாழ்வு சந்திக்க வைத்தாலும் இதுவரை குறவர்களின் மரணத்தைப் பார்த்ததே இல்லை என்ற விஷயம் உறைத்தது. நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

பேட்டையில் ஒரு காலி கிரவுண்டில் அம்மூதாட்டியின் கூடாரம் சில மாதங்களாக முளைத்திருந்தது. அவர்கள் கூடாரம் அமைத்த இடத்தை ஒரு கனவான் தற்போது வாங்கியிருந்தார். தான் ஒரு பெருந்தகையாளன் என்று நிரூபிக்கவே குறவர்களின் கூடாரங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தார். சம்பளமில்லாத காவலர்கள் என்பதே கனவானின் தனிக்கணக்கு. இருந்துவிட்டுப்போகட்டும்.
குறவர்களின் பிரேதத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் எனக் கூடாரத்தை நோக்கி நானும் பச்சையும் நடந்தோம். பச்சை ஒரு திருடன் என்றாலும் எனக்கு நண்பன் என்பதால் அவ்வப்போது ஏதாவதொன்றை அவன் விருப்பப்படி எடுத்துக்கொள்வான். கேட்டால் “சுட்றது வேற... எடுக்கறது வேற மச்சி” என்று தத்துவம் பேசுவான். கனவானின் நிலத்தில் பார்த்தபோது ஒரு குறத்தியானவள் கருத்த பூனையொன்றின் தலையை அருவாமணையால் அறுத்துக்கொண்டிருந்தாள். செங்கற்களை மூட்டி அடுப்பு சமைத்து சோறு ஒரு பக்கம் கொதித்துக்கொண்டிருந்தது. பேத்தியும் பேரன்களும் நிலத்தைக் கீறி விளையாடிக் கொண்டிருந்ததை, கிழிந்த பாயில் படுத்தபடி இவ்வம்சத்தின் மூத்த கிழவன் ரசித்துக் கொண்டிருந்தான். அநேகமாக அம்மூதாட்டியின் கணவன் இவனாகத்தான் இருக்குமென நினைத்துக்கொண்டேன். கிழவனின் மகன் கூடாரத்தின் உள்ளே போவதும் வருவதுமாக இருந்தான். எதையோ வெட்டி முறித்தாற்போன்று அவன் மேனி வியர்த்துக் கொட்டியது. உடம்பில் ஒட்டியிருந்த மண்ணையும் தண்ணீரால் கழுவிக் கொண்டான். நெடுக வளர்ந்த உடம்பு. கூடாரத்திலிருந்து வெளியேறியவனுக்கு உடம்பில் ஏன் இவ்வளவு மண் என்று யோசித்தேன். பச்சை கிரவுண்டிற்குள் போக எத்தனித்தபோது தடுத்தேன். “மச்சி... என்னமோ நடக்குதுடா... கிரவுண்டுக்கு பேக்சைடு போயி பாப்போம்... என்னதான் பண்றாங்கன்னு” என்று மைதானத்தின் பின் தெரு வழியாக எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஓர் அடர்ந்த மரத்தில் நாங்கள் திருட்டு பீடி புகைப்பதற்காக உருவாக்கிய செடிகளால் அமைத்த இடத்தில் நானும் பச்சையும் உட்கார்ந்துகொண்டோம். வெளியிலிருந்து பார்த்தால் மரம் மட்டுமே காட்சியளித்துக்கொண்டிருக்கும்.

உள்ளே ஒரு பாய் விரித்திருப்போம். கிட்டத்தட்ட இதுவும் ஒரு கூடாரம் போலத்தான். மரப்பொந்துகளில் மறைத்து வைத்த சொக்கலால் பீடியைத் தேடி எடுத்தான் பச்சை. எங்கள் கூடாரத்திலிருந்து பார்த்தால் அவர்களின் கூடாரம் தெளிவாகத் தெரிந்தது. பிச்சை பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். மெள்ள இருட்டத் தொடங்கியது. இந்த இடம் பேட்டையின் ஒதுக்குப்புறம் என்பதால் ஜனங்களின் நடமாட்டம் வெகுவாகக் குறையத் தொடங்கியது.
சோற்றைப் பதம் பார்த்து வடித்து வைத்தாள் மருமகள். கொதித்துக்கொண்டிருந்த குழம்பில் கறிகள் மேலெம்பி வந்தன. மசாலா வாசனை எங்கள் கூடாரத்தில் நுழைந்து நாவில் ஜீராவை வரவழைத்தது. குழம்பும் கூடி வந்ததால் கிழவனிலிருந்து பிள்ளைகள் வரை கடித்துத் துப்பி மென்று தின்றார்கள். “மச்சி பூனக் கறி சாப்டிருக்கியா... ஆஸ்துமாக்கு ரொம்ப நல்லது” என்று பீடியை இழுத்துக்கொண்டான். சாப்பிட்டு முடித்ததும் கிழவன் எழுந்தான். தன் மகனிடம் ஏதோ சொன்னார். அவன் ஒரு கொட்றாவில் கல் உப்பும் மஞ்சளும் எடுத்து தகப்பனிடம் கொடுத்தான். தினை மாவைத் தேனில் பிசைந்து ஓர் உருண்டையை மருமகள் கையில் வைத்துக்கொண்டாள். பிள்ளைகளிடம் கருகமணியைக் கொடுத்தவன், கையில் மம்பட்டியுடன் கூடாரத்திற்குள் சென்றான். கிழவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கூடாரத்தில் நுழைந்தான். கிழவனைத் தொடர்ந்து மருமகளும் பிள்ளைகளும் கூடாரத்திற்குள் நுழைந்தார்கள். எனக்கும் பச்சைக்கும் ஒன்றும் புரியவில்லை. கூடாரத்தின் பின்பகுதித் துணி மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. திரை விலகாமல் உள்ளே இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது. இவர்களின் திரை நூற்றாண்டுகளாய் இவர்களாகவே தங்களுக்குள் போட்டுக்கொண்டது. மண்வெட்டியில் மண்ணை வாரிப் போடும் சப்தம் கேட்டது. “மச்சி கெய்விய கூடாரத்துக்குள்ளயே பொதைக்குறானுங்கடா... புரியுதா” என்றான். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

கூடாரத்தின் திரை என் மனக்கண்ணில் விலகியது. இவ்வம்சத்தின் மூத்தவளுக்கான இறுதிச் சடங்கை மகன் செய்துகொண்டிருந்தான். தேனையும் தினைமாவையும் பேத்தியும் பேரனும் தன் மூதாதையளுக்கு வாயில் வைத்து ஊட்டி விடுகிறார்கள். கிழவியைக் குழியில் இறக்கினார்கள். தன் மனைவிக்குக் கல்லுப்பையும் மஞ்சளையும் கிழவன் கொட்டினான். பெருத்த ஓலத்தை மிகவும் சன்னமாக யாரும் கேட்காவண்ணம் தன்னோடே கரைத்துக் கொண்டான் கிழவன். கருகமணிகளை, பேத்தி தன் பாட்டிக்குப் போட்டு விட்டாள். கையிலிருந்த பாசிமணிகளையும் ஊசி மணிகளையும் குழிக்குள் போட்டு மம்பட்டியால் மண்ணை வாரிப் போட்டான். கல்லறை போல மண்ணைக் கட்ட ஆசைதான். மரணத்தை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பது மரபு. ஆகவே, குழியை வெட்டியதுபோலவும், பிணத்தை அடக்கம் செய்ததுபோலவும் தெரியாமல் தடயமின்றி நிலத்தை சமன் செய்து முடித்தான்.
இவ்வுலகில் நடந்து நடந்து நமக்கெல்லாம் பாதையை உண்டு பண்ணியவர்கள் இந்த மூதாதையர்கள்தாம். வாழத்தகுந்த பூமி யென முதலில் அவதானிப்பவர்களைப் பராரிகளாக்கி, நாம் பட்டா போட்டுக் கொள்வதை வழமையெனக் கொள்ளும் பாதுகாப்பு மனிதர்கள். அவர்கள் இந்த துரோகத்தையெல்லாம் சட்டைசெய்வதில்லை. மாறாக நம்மை ஆசீர்வதித்து “பாசிமணி ஊசிமணி வாங்கலியோ சாமியோவ்” என்று உழைத்தபடி பயணிக்கிறார்கள். ஒரு பறவையைப் போல வாழ இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பழத்தை விழுங்கி அந்த விதை செரிமானம் பெற்று, பின் கக்காவாக விழுந்த விதைதான் மரமாகிறது. எங்கெங்கோ விழுந்த விதைகள் இவர்கள். எங்கெங்கோ பூத்து நம்முன் சிரித்துக்கொள்கிறார்கள். எந்நிலத்தில் கூடாரத்தின் ஜம்பர் அடிக்கப்படுகிறதோ அதுவே அவர்களின் வீடு, அதுவே அவர்கள் இடுகாடு. பன்னெடும் காலமாய் நாமெல்லாம் ஓரிடத்தில் உண்டு, ஓரிடத்தில் செரித்து, ஓரிடத்தில் மரித்துப் போகும் அற்பத்தனமான வாழ்வை இவர்கள் கைக்கொள்ள வில்லை. இவர்கள் பயணிகள். வாழ்வைக் கழிப்பவர்கள் அல்லர், வாழ்வை அதன் போக்கில் வாழ்பவர்கள். கூடவரும் பயணிகளின் வாழ்வு முடிந்துவிடுமெனில் கூடாரத்தின் வீட்டில் புதைத்துவிட்டு வேறொரு நிலத்தை நோக்கிப் பயணிப்பவர்கள். நிலத்தை பற்றி வாழ்பவன் எந்த நடுக்கத்திற்கும் அஞ்சுவதில்லை.
மறுநாள் நானும் பச்சையும் அந்தக் கிழவனிடம் பேசியே தீர வேண்டும் எனக் கனவானின் மைதானத்துக்குச் சென்றோம். கூடாரம் இல்லாமல் மைதானம் வெறிச்சோடி இருந்தது. இப்படிச் சில ஜீவன்கள் வாழ்ந்ததாய் எந்தத் தடயமும் இல்லை. நதியின் அடி நீரோட்டமென இந்நிலத்திலிருந்து கடந்துவிட்டார்கள். கூடாரம் இருந்த இடத்திற்குச் சென்றோம். அம்மூதாட்டியைப் புதைத்த எந்த அறிகுறியும் இல்லை. “மச்சி, நீயா கற்பன பண்ணி பொதச்சிட்டாங்கன்னு சொல்றியா...?” பச்சை கேட்டான். அப்போதுதான் பார்த்தேன், ஒரு கருகமணி அம்மூதாட்டியின் இல்லாத கல்லறையின் மேல் இருந்தது. எடுத்து, பச்சையிடம் காண்பித்தேன். “இந்தப் பாட்டிய இங்கதான் பொதச்சிருக்காங்க” என்றேன்.
சில நாள்களுக்குப் பிறகு, அந்நிலத்தில் பூமி பூஜை நடந்தது. மூதாட்டியைப் புதைத்த அதே இடத்தில் கனவான் அமர்ந்துகொண்டு பக்தியோடு பூமிக்குப் பால் வார்த்துக் கொண்டிருந்தார். அம்மூதாட்டிக்கான தர்ப்பணம் என்றே எனக்குப் பட்டது. மூன்று செங்கற்களை நட்டு வணங்கிக்கொண்டார்கள். நூற்றாண்டுகளாய் மனிதர்களாகவே நாம் நினைக்காத நம் மூதாதையர்களுக்கு எப்படியும் ஒரு நாள் நீங்கள் வணங்கித்தான் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப் புதைத்துவிட்டுப் போகிறார்கள் போல என்றும் தோன்றியது.

அப்போதுதான், குட்டியானையில் விஜயன் மேஸ்திரி தன் பெண்டு பிள்ளைகளோடும், மனைவிமார்களோடும், நான்கைந்து வேலையாட்களோடும் வண்டியில் அடைத்துக் கொண்டு வந்திறங்கினார். பாம்பு நாகராஜைத்தான் அந்நிலத்திற்கு வாட்ச்மேனாக கனவான் நியமித்திருந்ததால் நாங்கள் வருவதும் போவதும் எந்தத் தடையுமில்லாமல் இருந்தது. பாம்புக்கு குவார்ட்டரை வாங்கிக் கொண்டு போனேன். அவருக்கு இப்படியான எடுபிடிகளைச் செய்தால் கோனார் கடை புரோட்டா நிச்சயம் உண்டு. கிரவுண்டில் பிரதான வெளியில் தனக்கென ஒரு கூரை அமைத்துக்கொண்டார் பாம்பு. பெரிய டார்ச்லைட் ஒன்றும், தண்ணீர்க் குடமும் வைக்கப்பட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் உற்சாகமானார். “மாமே நீ கேட்ட கிச்சலிக்கா ஊறுகா இல்ல... இந்தா பூண்ட நக்கிக்கோ...” குவார்ட்டரைக் கொடுத்தேன். “டேய் குஸ்மி... நா இன்னா சாப்புடோணும்னு... நீ முடிவு பண்ணக்கூடாது புரியுதா” என்று ஊறுகாயை வாங்கிக்கொண்டார். நானும் அமர்ந்து கொண்டேன். எதிரே விஜயன் மேஸ்திரி கூடாரத்தின் கம்பை உயர்த்திக் கயிற்றை இழுத்து ஜம்பரை அடித்தார். இதைப் பார்த்த எனக்கு கிழவனின் நினைவு வந்துபோனது. சிறிது நேரத்தில் தனக்கான வீட்டைச் சொற்ப நேரத்தில் அவர்களால் உருவாக்கிவிட முடிகிறது.
குறவர்களைப் போலவே இருந்தது அவர்களின் சமையல் செய்முறையும். என்ன, பூனை போன்ற ஜீவன்கள் இல்லாமல், பொதுவுடைமையான கோழிகளையே அவர்களும் கொன்று தின்று மகிழ்ந்தார்கள். “யோவ் மாமா... யார்யா இவுங்கலாம்...” கோனார் கடை புரோட்டாவைப் பிட்டு சால்னாவில் தோய்த்து வாயில் போட்டுக்கொண்டேன். “மாப்ள இவங்களும் நாடாறு மாசம்... காடாறு மாசம்னு வாழ்றவங்கதான்... வீடுன்னு எதுவும் கெடையாது... இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு இவுங்க கட்டப்போறாங்கல்ல இதுதான் இவுங்க வூடு” போத்தலை உறிஞ்சிக்கொண்டார். நான் விஜயன் மேஸ்திரியைப் பார்த்தேன். அவர் தற்காலிகமாகத் தன் மனைவி மக்களுக்காக, குளியலறை என்று சொல்ல முடியாத ஒரு மறைப்பைத் தார்ப்பாய் கொண்டு கட்டினார். மேஸ்திரியின் இரு பிள்ளைகளும் கூடாரத்தின் இங்குமங்குமாக ஐஸ்பாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எந்த நிலத்திலும் குழந்தைகள்தான் குழந்தைகளாக இருக்கிறார்கள்.
பிறகான நாள்களில் எப்போதாவது அந்தப் பக்கம் போவதுண்டு. கடக்காலில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டடம் முளைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் பாம்புவிடமிருந்து போன் வந்தது. கொஞ்சம் பதற்றமான குரல்தான். பச்சையையும் அழைத்துக்கொண்டு சென்றேன். பச்சைக்குத்தான் பேட்டைவாழ் வஸ்தாதுகளைத் தெரியும். ஏதாவது ஒன்றென்றால் அவன் பார்த்துக்கொள்வான் என்கிற தைரியம்.
விஜயன் மேஸ்திரியும், பாம்புவும் சரக்கடித்துக் கொண்டிருந்தனர். கொஞ்சம் வளர்ந்த கட்டடத்தில் இரண்டு பில்லர்களுக்கு நடுவே புடவையால் தூளி கட்டி, பிள்ளைகள் ஆடிக்கொண்டிருந்தனர். அடுப்பில் சோறு கொதித்துக்கொண்டிருந்தது. மேஸ்திரியின் மனைவி இன்னொரு அடுப்பில் குழம்பைக் கூட்டிக்கொண்டிருந்தார். அப்போதுதான் கவனித்தேன், அவர் நிறைமாத கர்ப்பிணியென்று. “டேய் பச்ச... நேத்து எவனோ நம்ம புள்ளீங்கோ... நைட்டு எறங்கி மேஸ்திரி சம்சாரத்துகிட்ட சில்மிஷம் குடுத்துருக்கானுங்கடா... புள்ளத்தாச்சிப் பொம்பளன்னுகூட பாக்காம கை வச்சிருக்கானுங்கடா...” என்றபோது மேஸ்திரி அழத்தொடங்கினார். பச்சை அவரை சமாதானம் செய்தார். “எங்க போனாலும் எங்கள தொரத்துறாங்கய்யா... ஊரு பேரு இல்லாத... நாதியத்த பயலுவதான்னு நெனைக்கிறானுங்க... ஈனப்பயலுவ... ராவுக்கல்லாம் அடிவவுறு வலிக்குதுன்னு அழுதாய்யா...” மேஸ்திரி கல்ப்பாக உறிஞ்சிக் கொண்டார். “டேய், அது யாருன்னு பாருங்கடா... நம்மள நம்பித்தான் வந்திருக்காங்க... அசிங்கமால்ல..?” பாம்பு உண்மையில் வருத்தம் கொண்டார். “விடுங்க... நாகண்ணே... இவனுங்கள மாதிரி எத்தன பேரு தெரியுமா... எங்க வீட்டுப் பொம்பளையாளுங்க நிம்மதியா கக்கூசுக்குக்கூட போக முடியாது...எவனாவது பாத்துகிட்டு இருப்பானோன்னு நெனச்சி நெனச்சி எம் பொண்டாட்டி இருட்டுனதுக்கப்புறம் வெளிக்கு போக ஆரம்பிச்சாய்யா... காலைலேருந்து அடக்கி அடக்கி அவளுக்கு மூலமே வந்துருச்சுய்யா... வீட்டு தூரம்னா அவ பட்ற கஷ்டம்... அந்த ஆண்டவனுக்குத்தான்யா வெளிச்சம்” ஒரு மனிதன் இவ்வளவு வெகுளித்தனமாகப் பிறனிடம் தான் சொல்ல முடியாதவகைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறான். “மேஸ்திரி ஒன்னும் கவலப்படாதீங்க... இந்த வீடு கட்டி முடிக்கிற வரைக்கும்... கீழ் ரூம நீங்க யூஸ் பண்ணிக்கங்க... நா மொதலாளிகிட்ட சொல்ல மாட்டேன்... கதவு போட்ட கக்கூசுக்குள்ள நிம்மதியா ஆய் போலாம்... இன்னா சொல்றீங்க” என்று பாம்பு சியர்ஸ் சொன்னார். மேஸ்திரி கண்களைத் துடைத்துக்கொண்டு பாம்புவைப் பார்த்தார்.
மூதாட்டியின் கல்லறையின் மேல் எழுப்பப்பட்ட வீடு முழுமையடைந்தது. உள்ளூர் அரசியல்வாதிகளின் பிளக்ஸ்சோடு புதுமனை புகுவிழாவிற்கு ஏக தடபுடல் நடந்து கொண்டிருந்தது. பிரியாணி என்று பாம்பு சொன்னதால் பாம்புவின் அழைப்பின் பேரில் விழாவிற்கு நாங்களும் கலந்துகொண்டோம். விஜயன் மேஸ்திரி பழுப்பு நிற வெள்ளை வேட்டியில் புத்துணர்ச்சியோடு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார். பிரியாணிகளை முடித்து, விழா கலைந்த நேரம். கனவான் மேஸ்திரியையும் பாம்புவையும் அழைத்தார். இருவருக்கும் ஒரு தாம்பாளத் தட்டில் சில பல பழங்களோடு வேட்டி சட்டையும் சில நூறு ரூபாய்த்தாள்களையும் வைத்து வழங்கினார். இருவரும் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டனர். குட்டியானையில் கூடாரத் துணிகளும் தார்ப்பாய்களும் தட்டுமுட்டு சாமான்களும் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். கடந்த ஆறு மாத காலம் இந்த வீடு விஜயன் மேஸ்திரியின் வீடு மாதிரி. இப்படியான மாதிரிகளில் உண்டு, உறங்கி, புணர்ந்து மடிந்த தன் மூதாதையர்களையும் மேஸ்திரி நினைத்துக்கொண்டார். குட்டியானையில் தன் பிள்ளைகளை ஏற்றிவிட்டு தன் மனைவியை ஏற்றினார். அவளது கையில் பால் மணம் மாறா பச்சிளம் ஏகாந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்தது. இம்மண்ணில் புதையுண்டுபோன மூதாட்டியின் சாயல் அந்தக் குழந்தையின் முகத்தில் தென்பட்டது. “இன்ஜினீயர் சார் அடுத்து கர்நாடகாவுல வேல எடுத்துருக்கார்ணே... உப்ளின்னு ஒரு இடமாம்... ரொம்ப சந்தோசம்ணே... ஏய் மேகா நாகண்ணனுக்கு டாட்டா சொல்லு” மேகா பாம்புக்கு டாட்டா சொன்னாள். மேஸ்திரியின் மனைவி போய் வருவதாகத் தலையசைத்தார். அப்போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது. எந்தக் கண்களும் பார்த்துவிடாத கதவுகள் கொண்ட ஒரு கழிப்பறை இந்த நாடோடித் தாய்க்கு வாய்த்துவிட வேண்டுமென்று.
- மனிதர்கள் வருவார்கள்...