
ஓவியம்: செந்தில்
ஜீரணம்
பேருந்தின்
சன்னலில்
வழியும் மழை நீர்
தெளித்து விளையாடுகிறாள்
பார்வையற்ற
யுவதி.
நிறுத்தமில்லா
இடத்தில்
வயோதிகனுக்காக
திட்டியபடியே
நிற்கிறது பேருந்து
உடனே ஒரு புகைப்பானைப்
பற்ற வைத்துக்கொள்கிறார்
ஓட்டுநர்.
சாலையோரத்தில்
புணர்ந்துகொண்டிருந்த நாய்களைக்
கடக்கிறது பேருந்தின்
கடைசி இருக்கை.
அந்தக்
கடைசி இருக்கையில்
வீறிட்டு அழுகிற
செவத்தகுழந்தைக்கு
சம்பந்தமேயில்லாத கறுத்த தாய்
ஜெலுஸில் மாத்திரையை
இரண்டாய் உடைத்து ஒரு பகுதியை
குழந்தைக்கு ஊட்டுகிறாள்...
மீதத்தை
அவளுக்கும்
உங்களுக்கும்
எனக்கும் தருகிறாள்...
ஜீரணமாவதற்குள்
வந்துவிடுகிறது
அவரவர்க்கான
நிறுத்தம்.
- தோழன் பிரபா.

ஞாபக மல்லி..!

கலைந்து கிடந்த
கோப்புகளை
அடுக்கிக்கொண்டிருக்கிறேன்
அலுவலகத்தில்...
இடையில் சிக்கிப் பழுப்பேறி
நைந்தும் சிரித்துக்கொண்டிருந்த
ஒற்றை மல்லிகைப் பூ
எதேச்சையாய்
விரல்களில் பட்டுவிட...
ஏனோ
ஞாபக அடுக்கு
பொல பொலவென சரிந்து விழுகிறது.
- வெள்ளூர் ராஜா
மரண நேரம்
கதை சொல்லி
சூபிச ஞானத்தில் உறங்குகிறது பறவை
அதன் இறக்கைகளை
எறும்பு ஒன்று வாய் பிளந்து கடிக்க
அமைதியின்மை தொலைத்து
வலி உணர்ந்த பறவை
அதன் சொண்டால்
எறும்பின் சருமத்தின்மேல்
மரணத்தை எழுத முனைகிறது
தப்பிக்க முடியாத எறும்பின் சருமத்தில்
மின் அலைகளாய்
பட்டுப்பட்டு விலகுகிறது மரண நேரம்
எறும்பு நினைத்துக் கூடப் பார்த்திருக்காது
பிரதியின் கதைசொல்லி
நான் என்பதால்
ராட்சதப் பறவை ஒன்றாக மாறி
பறவைக்கு மரண நேரம் ஒன்றைக் காட்டி அங்கிருந்து பறவையை விரட்டி விடுகிறேன்.
- ஏ.நஸ்புள்ளாஹ்.