தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

என்ஆர்ஐ மாப்பிள்ளையும் இந்தியச் சட்டமும்

என்ஆர்ஐ மாப்பிள்ளையும் இந்தியச் சட்டமும்
பிரீமியம் ஸ்டோரி
News
என்ஆர்ஐ மாப்பிள்ளையும் இந்தியச் சட்டமும்

சட்டம் பெண் கையில்!வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

என்ஆர்ஐ திருமணங்களில் பெண்கள் ஏமாற்றப்படும் நிலைவரும்போது, அவர்களுக்குச் சட்டம் எப்படித் துணை நிற்கிறது? சென்ற இதழைத் தொடர்ந்து இந்த இதழிலும், ஒரு வழக்கின் விவரத்தோடு தகவல்களைத் தொடர்கிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

விகாஷ் அகர்வால் வெர்சஸ் அனுபா வழக்கு

திருமணத்துக்குப்பின் விகாஷ் - அனுபா தம்பதி அமெரிக்காவில் குடியேறினர். அனுபா பல கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய சில மாதங்களிலேயே, அமெரிக்காவின் கனெக்டிகட் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார் விகாஷ். வலியோடு இந்தியா திரும்பிய அனுபா, தனது உரிமைக்காக நீதிமன்றத்தை நாடினார். விகாஷ் அகர்வாலிடம் இருந்து தனது பராமரிப்புச் செலவுக்காக மாதம் 62,250 ரூபாய் வீதம் ஜீவனாம்சத் தொகை பெற்றுத் தரும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால், ஜீவனாம்ச வழக்கு நடைபெறும் இந்த நேரத்தில் 30 நாள்களுக்குள் விவாகரத்து வழக்கு நடைமுறைகளை ஒத்திவைக்க வேண்டும் என்று, கணவர் விகாஷ் அகர்வாலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. விசாரணைக்கு விகாஷ் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

என்ஆர்ஐ மாப்பிள்ளையும் இந்தியச் சட்டமும்

இந்திய நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்றும், அமெரிக்க நீதிமன்றம் தனக்கு விவாகரத்து வழங்கிவிட்டதாகவும் விகாஷ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் அனுபா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என்று உத்தர விட்ட தீர்ப்பை ஏற்காமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் விகாஷ். இந்தியாவுக்கு வந்தால் தன்மீது மனைவி கொடுத்திருக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க காவல்துறை தன்னைக் கைது செய்ய வாய்ப்பிருப்பதால், நேரில் வர இயலவில்லை என்று தெரிவித்தார். ‘விசாரணைக் காக இந்தியாவுக்கு வரும் விகாஷைக் காவல்துறையினர் கைது செய்ய மாட்டார்கள்’ என்று நீதிபதிகள் உத்தர வாதம் அளித்தனர். அதன் பின்னரும் விகாஷ் நீதிமன்றத்துக்கு வரவில்லை. விகாஷ் சார்பாக அவருடைய அமெரிக்க வழக்கறிஞர் தாக்கல் செய்த அஃபிடவிட்டில், டெல்லி நீதிமன்றம் கொடுத்த இடைக் காலத் தடை உத்தரவை அவர் அமெரிக்க நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்தார். அமெரிக்க நீதிமன்ற விவகாரத்தில் இந்திய நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், நீதிமன்றம் அவருடைய கோரிக்கையை மறுத்துவிட்டதாகவும் விகாஷ் தரப்பு நியாயத்தை  அவர் வழக்கறிஞர் தெரிவித்தார்.

‘அமெரிக்க நீதிமன்ற விவகாரத்தில் நாங்கள் ஏன் தலையிடப் போகிறோம்? நேரம் குறைவாக இருப்பதால் அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்கை 30 நாள்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றுதான் விகா
ஷுக்குக் கட்டளையிட்டோம்' என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. டெல்லி நீதிமன்றத்தில் விகாஷுக்குப் பிறப்பித்த உத்தரவைப் பற்றி  அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்  எந்தக் குறிப்பும் இல்லை. அதனால் இங்கு கொடுத்த உத்தரவு நகலை அங்கு சேர்ப்பிக்கவில்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

விகாஷ், அனுபாவுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவில் தனக்கு வீடு இல்லை, சொத்து இல்லை, வங்கிக் கணக்கு இல்லை, வேலை இல்லை, தங்குவதற்கு இடமும் இல்லை; அதனால் தன்னால் நீதிமன்றத்துக்கு நேரில் வர இயலாது என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்ததாக, விகாஷின் வழக்கறிஞர் அவர் தரப்பை நியாயப்படுத்தினார்.

பொதுவாக, நீதிமன்றத்தில் விவாகரத்து பெற வேண்டும் என்றால் சட்டம் முன்வைக்கும் காரணங்களில் ஒன்றையாவது மெய்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழங்கப்படும் ‘நோ ஃபால்ட் டைவர்ஸ்’ (No Fault Divorce) இதற்கு விதிவிலக்கு. விவாகரத்து கேட்கும் தரப்பு அதற்கான எந்தக் காரணத்தையும் நீதிமன்றத்தில் முன்வைக்கத் தேவையில்லை. ‘அவன்/அவளோடு வாழ எனக்கு விருப்பமில்லை, விவாகரத்து வேண்டும்’ என்று மனு கொடுத்தால் போதும். இப்படித்தான், இந்தியாவிலிருந்து அனுபாவைத்  திருமணம் செய்து அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்ற  இரண்டே மாதங்களில் ‘நோ ஃபால்ட் டைவர்ஸு’க்கு மனு கொடுத்திருந்தார் விகாஷ். அனுபா இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதற்கான உதவியைக்கூடச் செய்யாமல் அவரைத் தவிக்கவிட்டார். ஆனால், தான் நேரில் ஆஜராகாமல் இருப்பதற்குத் தனக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார். நீதிமன்றம் அவர் முன்வைத்த எந்தக் காரணத்தையும் ஏற்பதாக இல்லை. விகாஷ் பலவிதமான வாதங்களை முன்வைத்தபோதும், அமெரிக்க வழக்கறிஞர் தன் பங்குக்கு ஆவணங்களைச் சமர்ப்பித்தபோதும், இந்திய நீதிமன்றத்தில் அவை எடுபடவில்லை. மேல்முறையீட்டு வழக்கில் எந்த வலுவும் இல்லாத நிலையில் விகாஷின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

என்ஆர்ஐ மாப்பிள்ளைகளுக்கும் இந்தியச் சட்டம் பாயும்!

நீதிமன்றத்தை நாடலாம்!

தி
ருமணம், குழந்தைப் பராமரிப்பு உரிமை, குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு, ஜீவனாம்சம், விவாகரத்து, பரஸ்பர விவாகரத்து போன்ற அனைத்துச் சட்டப்பிரிவுகளும் என்ஆர்ஐ திருமணம் செய்துகொண்டவர்களுக்கும் பொருந்தும். மாதம்தோறும் கொடுக்கும் ஜீவனாம்சத் தொகையைக் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125-ன் படியும், இந்து திருமணச் சட்டப் பிரிவு 24-ன் படி இன்டிரிம் ரிலீஃப் என்னும் இடைக்கால நிவாரணத் தொகையைப் பெறவும், பிரிவு 25-ன் படி முழுத் தொகையை ஒரே நேரத்தில் வழங்கும் அலிமோனி தொகையைப் பெறவும், இதர மதங்களைச் சேர்ந்தவர்கள் அவரவர்களின் சட்டம் வழங்கும் நிவாரணத்தைப் பெறவும் நீதிமன்றத்தை நாடலாம்.

சில ஆலோசனைகள்... 

•  என்ஆர்ஐ திருமணத் தகுதி, வேலைவாய்ப்பு, குடியிருப்பு ஆகிய தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்தியாவில் மாநில அளவில் தனி ஏஜென்சி இருந்தால், வெளிநாடுகள் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாதவர்கள் மாப்பிள்ளையின் சுயவிவரக் குறிப்பை இங்கு கொடுத்து சரிபார்த்துக் கொள்ளலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற ஏஜென்சிகளை நடத்தலாம்.

• கணவன் கொடுமைப்படுத்தினால் உதவிக்கு யாரை அழைக்க வேண்டும்; சட்ட நடைமுறைகள், அவசரத் தொடர்புக்கான தொலைபேசி எண்கள் கொண்ட கம்ப்ளீட் கைடு என்ஆர்ஐ பெண்களுக்குக் கொடுத்தனுப்பப்பட வேண்டும்.

• வெளிநாட்டு நீதிமன்றங்களில் பரஸ்பர விவாகரத்துக்கு மட்டும் அனுமதி அளித்து, தனித்தனியாகப் பதிவாகும் விவாகரத்து வழக்கை மறுதலிக்க வேண்டும். அல்லது விவாகரத்து வழக்கு மனைவிக்குத் தெரிந்துதான் பதிவாகியுள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் பாதிக்கப்படும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். இந்தக் கொள்கை முடிவை அயல்நாட்டு நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• இந்திய நீதிமன்றத்தில் என்ஆர்ஐ கணவனை கைது செய்ய உத்தரவிட்ட பின்னரும் அந்தத் தீர்ப்புக்குக் கட்டுப்படாமல் அவமதிக்கும் நபர்களை இந்தியாவுக்கு அழைத்துவரச் சட்டத்தின் ஷரத்துகளை வலிமைப்படுத்த வேண்டும்.

நினைவில் கொள்க...

• என்ஆர்ஐ மாப்பிள்ளையின் விசா பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாணவர் விசா, டூரிஸ்ட் விசா, தற்காலிக விசா என்று எந்த விசாவில் அவர் சென்றுள்ளார் என்ற விவரத்தைக் கண்டறிந்து, திருமணத்துக்குப் பின் உடன் அழைத்துச் செல்வதாகச் சொல்வது உண்மையா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

• அவர் ஏற்கெனவே திருமணமானவரா, விவாகரத்தானவரா என்பதையும் கண்டறிய வேண்டும்.

 திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் பிற்காலத்தில் சில சலுகைகளைப் பெற முடியும்.

•   அயல்நாட்டில் வசிக்கும் வாழ்க்கைத்துணை பணிபுரியும் அலுவலக முகவரி, அலுவலகத் தொலைபேசி எண், வீட்டு முகவரி ஆகியவற்றை விசாரித்து உறுதிசெய்து கொள்ள வேண்டும். இந்த விவரங்களை உறவினர்களிடமும் கொடுத்துவைக்க வேண்டும்.

• வெளிநாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முகவரி, செல்லும் நாட்டில் அவசர உதவிக்கான நபர்களின் தொடர்பு எண்கள், ஆபத்தான சூழலில் தொடர்புகொள்ள வேண்டிய நபர் பற்றிய விவரம், அந்த நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணம் ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

• கணவரின் மாத வருமானம், வருமான வரிக்கணக்கையும் தெரிந்துகொள்வது நல்லது.

• திருமணமாகிச் செல்லும் நாட்டில் உறவுகள், நண்பர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்களோடு தொடர்பில் இருப்பது அவசியம்.

ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி