தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்
பிரீமியம் ஸ்டோரி
News
21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

வினா நூறும் கனா நூறுமாக வாழ்வின் சிறகுகள் விரியத் தொடங்கும் வயது 21. பொறுப்புகள் புரிய தொடங்கும் பருவத்தின் ஆரம்பமும் அதுவே.

உயர்கல்வி, வேலை, நட்பு, காதல், திருமணம் என அந்த வயதில் நிச்சயம் மறக்க முடியாத நிகழ்வொன்று எல்லோருக்கும் இருக்கும்.

21 வயதில் அவள் விகடனுக்கும் அப்படி ஆயிரம் நினைவுகள்... நிகழ்வுகள்... அவற்றை இருபதோடு ஒன்றாகக் கடந்துவிட முடியுமா என்ன?

அவள் விகடனின் 21-வது பிறந்த நாள் சிறப்பிதழுக்காக 21 பிரபலங்களிடம் அவர்களுடைய 21 வயது நினைவுகளைப் பகிரச் சொல்லிக் கேட்டோம்.

சிலருக்கு அது அண்மையில் கடந்திருந்ததால் சட்டென நினைவுகள் மலர்ந்தன. இன்னும் சிலருக்கு வாழ்க்கையை ரீவைண்டு செய்தே நினைவு படுத்த முடிந்தது. ஆனால், அத்தனையும் சுவாரஸ்யங்களின் தொகுப்பாகவே இருந்தன.

மீண்டும் 21 வயதுக்குள் நுழைந்து திரும்பிய 21 பேரும் முத்தாய்ப்பாகச் சொன்ன ஒரு விஷயம் ரொம்பவே ஸ்பெஷல்.

அது, அவள் விகடனுக்கு அவர்கள் சொன்ன பிறந்த நாள் வாழ்த்து!

அவர்களோடு ‘அவள் விகட'னைக் கொண்டாடுவோம்!

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

சேலைக் காதல் - பாடகி மகாநதி ஷோபனா

துவரைக்கும் பாவாடை தாவணியிலும் காக்ராவிலும்தான் கச்சேரிகள் பண்ணிட்டிருந்தேன்.

21 வயசுலதான் முதன்முதல்ல புடவை கட்டிக்கிட்டு கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். லைட் புளூ கலர்ல அந்தப் பட்டுப்புடவையைக் கட்டுக்கிட்டு பாடின அனுபவத்தை மறக்க முடியுமா? அதுக்குப் பிறகுதான் என் சேலைக்காதல் ஆரம்பமானது. அந்தச் சேலை இன்னும் என்கிட்ட சென்டிமென்ட் கலெக்‌ஷன்ஸில் இருக்கு.

ஒண்ணுக்கு ரெண்டு மாஸ்டர்ஸ் டிகிரி படிப்பைத் தொடங்கினதும் அந்த வயசுலதான். பி.ஏ மியூசிக் முடிச்சிட்டு, மெட்ராஸ் யுனிவர்சிட்டியில எம்.ஏ மியூசிக்கும், அழகப்பா யுனிவர்சிட்டியில மாஸ் கம்யூனிகேஷன் அண்டு ஜர்னலிசமும் சேர்ந்தேன்.  அடுத்து எம்.பில் படிக்கணும், பிஹெச்.டி பண்ணணும் என்கிற கனவுகள் அப்பவே இருந்தன. மாஸ்டர்ஸ் முடிச்சதும், மியூசிக்ல எம்.பில் பண்ணினேன். அப்புறம் பிஹெச்.டி, என் வாழ்க்கைப் பயணத்தில் அது முக்கிய மான ஏணிப்படியா இருந்தது. மியூசிக் எம்.ஏ-வின் பின்னணியில ஒரு கனவும் லட்சியமும் இருந்தது. அதைப் படிக்கும்போதே    ஜர்னலிசம்   படிச்சதுக்கு    என் ஆர்வம்தான் காரணம். படிச்சிட்டிருக்கும்போதே கச்சேரிகளில் பிசியா இருந்ததால் என்னால ரெகுலர் காலேஜ் போய்ப் படிக்க முடியலை. ரெண்டு எம்.ஏ-வையும் கரஸ்பான்டென்ஸ்லதான் முடிச்சேன். என் வாழ்க்கையும் உலகமும் இசை சூழ்ந்தவை. அதனாலயே என் படிப்பும் இசை சார்ந்தே இருக்கணும்னு முடிவு பண்ணினேன். சிங்கப்பூரில் ஒரு பிரபல கோயில் கும்பாபிஷேகத்தில் பாடினது இன்னொரு மறக்கமுடியாத நினைவு. ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன்ல எட்டாவது கிரேடு முடிச்சதும் அதே வருஷம்தான்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியில் சென்டர் ஃபார் பெர்ஃபார்மிங் அண்டு ஃபைன் ஆர்ட்ஸ் துறையின் தலைவியா இருக்கேன். புதுசா தொடங்கப்பட்டது இந்தத் துறை.

இந்தப் பொறுப்புக்கான விதை  21 வயதில் நடப்பட்டதுனு சொல்லலாம். அந்தப் பதவியின் ஒவ்வொரு நாளும் என் 21 வயசின் தொடக்கத்தை நினைவுபடுத்தறது மாதிரியே என் அப்பாவையும் ஞாபகப்படுத்தும். நான் டாக்டரேட் வாங்கணும் என்பது அப்பாவின் கனவு. அதை நனவாக்கியிருக்கேன்.

21 வயசுல என்னையும் அறியாமல் இன்னொரு சாதனையும் நடந்திருந்தது. என்னுடைய ஆல்பங்களின் எண்ணிக்கை 150-ஐத் தொட்டிருந்தது. அதே வருஷம்தான் பாரத் கலாச்சார்லேருந்து ‘யுவகலா பாரதி’ பட்டமும் காஸ்மோபாலிட்டன் கிளப்பின் ‘இளம் சாதனையாளர்’ விருதும் வாங்கினேன். அந்த வருஷம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நிறைய நிறைய கச்சேரிகள் பண்ணியிருக்கேன். 21-ன் பெரும்பாலான நாள்கள் டிராவலில் போனது. முதன்முதல்ல வீட்டுல என் கல்யாணப் பேச்சு ஆரம்பமானதும் 21 வயசுலதான். மாஸ்டர்ஸ் முடிச்ச பிறகுதான் கல்யாணம்னு உறுதியா இருந்தேன். 21 வயசுல பாதி லட்சியங்களாகவும் பாதி சபதங்களாகவும் இருந்திருக்கு. எல்லாமே நிறைவேறினதில் மகிழ்ச்சி!

தல - தளபதி ரசிகை - நடிகை ரம்யா பாண்டியன்

ப்போ நான் அண்ணா யுனிவர்சிட்டியில பி.இ பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் கடைசி வருஷம் படிச்சிட்டிருந்தேன். கேம்பஸ் இன்டர்வியூ நடந்திட்டிருந்தது. முதல்ல நிறைய ஐ.டி கம்பெனிகள்ல இருந்து இன்டர்வியூ வந்தது. எனக்கு என் துறைசார்ந்த பிரதான கம்பெனிகள்ல வேலைக்குப் போகணும்னு ஆசை. அதனால, முன்னாடி வந்த அழைப்புகளை மறுத்துட்டேன். அப்புறம்... நாலாவதா அட்டெண்ட் பண்ணின இன்டர்வியூவில்தான் செலெக்ட் ஆனேன். அந்தத் தருணம், என் வாழ்க்கையில் முக்கியமானது. மே 12-ம் தேதி என்னுடைய ஐடி கார்டை காலேஜ்ல திருப்பிக்கொடுத்தேன். மே 13-ம் தேதி வேலையில சேர்ந்து கம்பெனி ஐடி கார்டு என் கைக்கு வந்தது. ஒருநாள்கூட வீட்ல இல்லை. 21 வயசின் முதல் முக்கியமான நிகழ்ச்சி இது!

அதே வருஷம்தான் `மங்காத்தா' படம் ரிலீஸாச்சு.  50 டிக்கெட்டை மொத்தமா வாங்கி வெச்சு, ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ்னு எல்லோரும் சேர்ந்து ஐநாக்ஸ்ல ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தோம். அஜித் சார் படம் ரிலீஸாகிற டைம்ல நான் தல ரசிகை. விஜய் சார் படம் ரிலீஸாகிறபோது நான் தளபதி ரசிகை.  இது 21-ன் இன்னொரு ஸ்பெஷல் மொமன்ட்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

ஜெயலலிதா மேடம் மூணாவது முறையா முதலமைச்சர் ஆனதும் அந்த வருஷம்தான். காலேஜ் ஸ்டூடன்ட்ஸுக்கு லேப்டாப் கொடுத்தாங்க. அண்ணா யுனிவர்சிட்டியில படிச்சிட்டிருந்ததால, எனக்கு முதல் பேட்ச்சுலேயே லேப்டாப் கிடைச்சது. அதைப் படிக்கிறதுக்கு யூஸ் பண்ணினதைவிடவும் படங்கள் பார்க்க யூஸ் பண்ணினதுதான் அதிகம். இது இன்னொரு நினைவு.

என் சித்தப்பா அருண்பாண்டியன் எம்.எல்.ஏ ஆனதும் அதேவருஷம்தான். எங்க குடும்பத்துலேருந்து ஒருத்தர் அரசியலுக்குள்ள நுழைஞ்சு, அதுல ஜெயிச்சது எங்க எல்லோருக்கும் மறக்க முடியாத சந்தோஷமான நினைவா அமைஞ்சது.

வேர்ல்டு கப் ஜெயிச்சதும் அந்த வருஷம்தான். காலேஜ்ல மாஸ் பங்க் பண்ணலாமானு யோசிச்சிட்டிருந்தோம். புரொஃபசர்கிட்டயே பர்மிஷன் கேட்டுப்பார்ப்போ மேனு கேட்டா, அவங்க ஓகே சொல்லிட்டாங்க. வீட்டுக்கு வந்து மேட்ச் பார்த்தோம். அது சூப்பரான நினைவு.

வேலைக்குப் போன பிறகுதான், ஷார்ட் ஃபிலிம் பண்ணிட்டு, அப்படியே சினிமாவுக்கு வந்தேன். வாழ்நாள் முழுக்க நான் நடிகையாகவே இருப்பேன்னு சொல்ல முடியாது. என் லட்சியம், கனவெல்லாம் பிசினஸ்தான். ஆனா, இந்த வயசை விட்டுட்டா, அப்புறம் நான் சினிமாவில் ஹீரோயினா நடிக்க முடியாது. அதனால இந்த டைம் சினிமாவுக்கானது. எதிர்காலம் என் கனவுகளுக் கானது.

2008-ல் காலேஜ்ல நான் ஃப்ரெஷர்ஸ் டேவில் ஸ்டூடன்ட்டா நின்னுருக் கேன். 2018-ல் அதே காலேஜ்ல ஃப்ரெஷர்ஸ் டேவுக்கு என்னை கெஸ்ட்டா கூப்பிட்டிருந்தாங்க. அந்தப் பத்து வருஷப் பயணத்தை நினைச்சு ரொம்பப் பெருமைப்பட்டேன். அந்தப் பத்து வருஷத்துல 2011 ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!

சர்ப்ரைஸ் விசிட் - ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி

எஸ்
.ஐ.ஈ.டி காலேஜ்ல இன்டீரியர் டெகரேஷன் முடிச்சேன். காலேஜ் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் என் ஃப்ரெண்ட்ஸ் சிலர் வெளிநாட்டுக்குப் போனாங்க. சிலர் அதே காலேஜ்லயே பி.ஜி பண்ணாங்க. நான் வேலைக்குப் போகணும் என்பது என் அம்மாவின் ஆசை. காலேஜ் முடிச்சதுமே பி.சி.ஸ்ரீராம் சாரும் ஜெயேந்திரா சாரும் நடத்துற `ஜே.எஸ் ஃபிலிம்ஸ்' விளம்பர கம்பெனியில அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்தேன். என் படிப்புக்கேத்த வேலையைத் தேடாம, புதுசா ஒரு துறையில சாதிக்கணும்னு ஒரு வெறியைக் கொடுத்தது அந்த 21 வயசு. என் வாழ்க்கையும் அங்கே யிருந்துதான் டேக் ஆஃப் ஆனதுன்னு சொல்லலாம்.

96-ம் வருஷம் நான் காஸ்டியூம் டிசைனரானேன். கிட்டத்தட்ட 20 வருஷங்களைத் தாண்டி, என் துறையில நான் வெற்றிகரமா இருக்கக் காரணம், 21 வயசுல நான் எடுத்த முயற்சியும் முடிவும்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

நான் ரொம்பச் செல்லமா வளர்ந்தவள். நான் கேட்காமலேயே எனக்கு எல்லாம் கிடைச்சது. நானும் சம்பாதிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. என் முதல் சம்பளம் 750 ரூபாய். சம்பளக் கவரை அம்மா அப்பாகிட்ட கொண்டுபோய்க் கொடுத்தபோது, அவங்க பட்ட சந்தோஷம் இப்பவும் எனக்கு ஞாபகமிருக்கு. அதுக்கப்புறம் எவ்வளவோ சம்பாதிச்சாலும் அந்த முதல் சம்பளம் அம்மா அப்பாவுக்கும் (வியட்நாம் வீடு சுந்தரம்) எனக்கும் தந்த சந்தோஷம் வேற லெவல்.  என் வேலையை நல்லா பண்ணணும், அந்த வேலைக்கு நான் தகுதியானவள்தான்னு நிரூபிக்கணும்கிற வெறியில எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டுப் பார்த்திருக்கேன்.

வீட்டுக்கே போகத் தோணாது. விடிய விடிய வேலையை அவ்வளவு ரசிச்சு செய்வேன். வேலை தெரியாத புதுப் பொண்ணாச்சேனு அவங்களும் தயங்கினதில்லை. எல்லா வேலைகளையும் கொடுப்பாங்க. ரெண்டு, மூணு வருஷங்கள் அந்த வேலையில இருந்தேன்.

எனக்கு ஆர்ட் டிபார்ட் மென்ட்டில் ஆர்வம் அதிகம். `சாபு சிரில் சார்கிட்ட சேரணும்'னு சொன்னபோது பி.சி சாரும் ஜெயேந்திரா சாரும் சந்தோஷமா வாழ்த்தி அனுப்பிவெச்சாங்க. சாபுசிரில் சார்கூட சில படங்கள், மிஸ் வேர்ல்டு ஷோனு நிறைய வொர்க் பண்ணினேன். இதெல்லாம் பண்ணின பிறகுதான் காஸ்டியூம் டிசைனிங் பண்ண ஆரம்பிச்சேன்.

என் 21 வயசுல ஒருமுறை அப்பா  ஆபீஸுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்குப் பயங்கர சர்ப்ரைஸ். `நான் உன்னைப் பார்க்க வரலைம்மா. ஜெயேந்திரா இருக்கானா?'னு கேட்டுட்டு உள்ளே வந்தார். `ஜெயேந்திரா, இனிமே இவ உன் பொறுப்பு. அவளை நீ ஆளாக்கிக் கொடுத்துடு'னு கையைப் பிடிச்சு சொல்லிட்டுப் போனார். நான் வேலைபார்க்கிறேன், வேலை கத்துக்கிறேன்கிறதுல அப்பாவுக்கு அவ்வளவு பெருமை. முதல் வேலை, முதல் சம்பளம், அப்பாவின் சர்ப்ரைஸ் விசிட்னு 21, என் ஆயுசுக்கும் மறக்க முடியாத வயசு!

இருளை விலக்கும் ஒளி - எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித்

ன்னளவில் நான் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கு ஒரு பட்டத்தின் நூலாக இருந்த வயது 21. உயரப் பறப்பதற்கான வெளிகளைத் தேடிய வயது. இந்த வயதில்தான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. என்னைப்  பற்றிய எந்தக் கனவுகளும் இல்லாதிருந்த உம்மாவும் வாப்பாவும் திடீரென மகளை ஆசிரியராகப் பார்க்க விரும்பி பலவந்தப்படுத்தினார்கள். `பத்திரிகைத்துறையில்தான் சேருவேன்' எனப் பிடிவாதமாக கொழும்பு நகருக்கு வந்திருந்தேன்.

`300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கொழும்பு நகரத்தில் ஒரு பெண் தனியாக  வாழவே முடியாது. உனக்குச் சிங்கள மொழி தெரியாது. அங்கெல்லாம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. சாக்லேட் தந்தே பெண்களைக் கடத்திக்கொண்டு போய்விடுவார்களாம்' என்ற எச்சரிக்கைகள், உபதேசங்களைக் கடந்து கொழும்பு நகரினுள் பிரவேசித்து ஒரு பூனையைப்போல பதுங்கிப் பதுங்கி நாள்களைக் கழித்துக்கொண்டிருந்தேன். முதன்முதலில் சிங்களத்தில் பேசக் கற்றதுகூட பேருந்தில் மிச்சப் பணத்தைக் கேட்பதற்கே. 

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

பரிச்சயமில்லாத மொழி, புதிய நட்புகள் என முற்றிலும் புதிய தளத்தில் புதியவளாகத் தெரிந்த வயது அது. என் உடை, உடல்மொழிகளை எல்லாம் எனக்குப் புரியாத சிங்கள மொழியில் கேலி பேசுகிறவர் களைக்கூட நண்பர்கள் என்று வெள்ளந்தியாக நம்பியிருந்ததும் இந்த வயதில்தான். மாலை 7 மணிக்குள் விடுதிக்கு வர வேண்டும் என்ற உத்தரவுக்குப் பயந்து ஓடிய நாள்கள் நினைவிலிருக்கின்றன.

காதலும் நேசமும் தவிர்க்க முடியாமல் துரத்தும் இந்த வயதில், உபதேசங்கள் உண்டுபண்ணும்  இயல்பான எச்சரிக்கை உணர்வினால் அதை முழுமையாக அனுபவிக்கவில்லை. எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமலேயே பல காதல்களைப் புறக்கணித் திருக்கிறேன். பெண் என்பதே உடல் என்றும், அந்த உடலை யாரும் தீண்டாமல் பாது காப்பதில்தான் பெண்ணின் கௌரவம்  உள்ளதென்றும் சொல்லித் தரப்பட்டவற்றை முற்றிலுமாக நம்பிக் கொண் டிருந்த வயது 21.

முட்டையின் ஓடுகளைத்  தகர்த்துக்கொண்டு தலை நீட்டும் பறவையைப்போல நடுக்கத்துடன் ஏக்கத்துடன் தொடங்கிய பயணம். நான் ஒரு பெண் என்ற எண்ணம் ஓர் அச்சமாக இருந்து, ஒரு புதிராக விலகி மெள்ளக் கர்வமாகவோ, பெருமிதமாகவோ மாறித் தொடங்கிய வயதும் அதுவே. சூரியனின் அதிகாலை ஒளிக்கீற்றைப்போல மெள்ள மெள்ளத் தடித்து இருளை விலக்கும் ஒளியாக என்னை எனக்கே அடையாளப் படுத்திய வயதும் அதுதான்!

கலாய் கேலி - காமெடியன் அறந்தாங்கி நிஷா

21
வயசுல பி.பி.ஏ முடிச்சுட்டு, புதுக்கோட்டை ஜேஜே காலேஜ்ல எம்.பி.ஏ ஹெச்.ஆர் சேர்ந்திருந்தேன். இஸ்லாமியச் சமூகத்தில் பெண்களைப் படிக்க வைக்கிறதே பெரிய விஷயம். நான் பி.ஜி அளவுக்கு வந்தது நிஜமாவே அதிசயம். பி.பி.ஏ முடிச்சதுமே அப்பா எனக்குக் கல்யாணம் பண்ணிடணும்னு சொன்னார். அதுலேருந்து தப்பிக்கிறதுக்காகவே நான் பி.ஜி-யில சேர்ந்தேன். அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட். `நானும்தான் கல்யாணம் முடிச்சேன். குழந்தை பெத்தேன். அவ வாழ்க்கையும் அப்படியே போக வேணாம். அவ குழந்தையை நல்லபடியா வளர்க்கணும்னா, அவ படிக்கட்டும்'னு சொன்னாங்க.

`ஒரு பெரிய பேங்க்ல மேனேஜர் இல்லைன்னா... பெரிய காலேஜ்ல மேனேஜ்மென்ட் டிபார்ட்மென்ட்டுல வேலை...' - இந்தக் கனவோடுதான் எம்.பி.ஏ-வில் சேர்ந்தேன். ஆனா, காலேஜுக்குள்ள நுழைஞ்சதும் என் கனவு சுக்குநூறா உடைஞ்சிருச்சு. என்னைத் தவிர எல்லாரும் சரளமா ஆங்கிலம் பேசறவங்க. கவர்மென்ட் ஸ்கூல்ல தமிழ் மீடியம்ல படிச்ச எனக்கு அந்தச் சூழல் சரிவரலை. முதல் நாளே காலேஜை விட்டு ஓடிவந்துடலாமானு யோசிச்சேன். பேங்க் கனவு மாறி, அரியர்ஸ் இல்லாம வெளியில வந்தா போதும்ங்கிற மனநிலைக்கு வந்துட்டேன்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

எம்.பி.ஏ படிச்ச அந்த ரெண்டு வருஷமும் எனக்கு காலேஜ் லைஃப், ஜெயில்ல இருந்த அனுபவத்தைத் தந்தது. என்னைக் கலாய்க்காத ஆளே இல்லை. என்கூட படிச்ச எல்லாப் பொண்ணுங்களுக்கும் லவ் லெட்டர் வந்திருக்கு. எனக்கு வரலை. ஆனா, என் வீட்டுக்காரரோடு நான் செம லவ்வுல இருந்தேன். அப்ப என்கிட்ட போன் கிடையாது. காலேஜ்ல உட்கார்ந்துதான்  அவருக்கு லவ் லெட்டர் எழுதுவேன்.

அன்னிக்கு என்னைக் கிண்டல் பண்ணினவங்களும், காலேஜ்ல இங்கிலீஷ் பேசினவங்களும், ஸ்டைலா க்ளாஸ் எடுத்தவங்களும் இன்னிக்கு ஹவுஸ் வொய்ஃப்பா இருக்காங்க.

`என் ஹஸ்பண்டுகிட்ட நீயும் நானும் ஒண்ணா படிச்சோம்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறார்டி. காலேஜ் போட்டோ இருந்தா அனுப்பி வைடி'னு கேட்கிறாங்க.

என்னதான் காலேஜ் லைஃப் எனக்கு ஜெயில் மாதிரி இருந்தாலும் ஒரு விஷயத்துல எனக்கு போதிமரமாகவும் இருந்திருக்கு. அன்னிக்கு அத்தனை கலாய்களையும் கேலிகளையும் சகிச்சுக்கிட்டு, சிரிச்சுக்கிட்டே கடந்து போகப் பழகினதாலதான், இன்னிக்கு காமெடியில என்னால அதைச் செய்ய முடியுது. எந்த காலேஜ்ல படிக்கிறபோது நான் தன்னம்பிக்கையே இல்லாத வளா ஃபீல் பண்ணினேனோ, அதே காலேஜுக்கு நான் மூணு முறை சீஃப் கெஸ்ட்டா போயிட்டேன். என் அனுபவங்களை ஸ்டூடன்ட்ஸ்கிட்ட பேசியிருக்கேன். மகிழ்ச்சியான தருணம் அது.

சாதனை நகரம் - பாலிவுட் கோலிவுட் ஹேர்ஸ்டைலிஸ்ட் ரேச்சல்

ன் பூர்வீகம் மணிப்பூர். தாய்மொழி மிசோ. சின்ன வயசுலேருந்து ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆகணும்கிறதுதான் என் கனவா இருந்திருக்கு. நினைவு தெரிஞ்ச பிறகு சென்னையில வந்து சாதிக்கணும்கிற எண்ணம் உருவானது. இன்னிக்கு சென்னை முழுக்க நார்த் ஈஸ்ட் மக்கள் எல்லாத் துறைகளிலும் நிறைஞ்சிருக்காங்க. ஆனா, நான் சென்னைக்கு வரும்போது மக்கள் என்னை எப்படி ஏத்துப்பாங்களோங்கிற தயக்கம் இருந்தது. இன்னிக்கு என்னையும் உங்களில் ஒருத்தியா, தமிழ் பேசற அளவுக்கு என்னை மாத்தின உங்க எல்லாருக்கும் காலத்துக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கேன். என்னை வளர்த்துவிட்ட சென்னையை மறக்க முடியாதது போலவே என் வளர்ச்சிக்குக் காரணமான அந்த வருஷத்தையும் மறக்க மாட்டேன்.

1997-ல்தான் நான் 21-வது வயசில் அடியெடுத்து வெச்சிருந்தேன். அந்த வருஷம் கொழும்புவில் `ஹேர் ஏஷியா பசிஃபிக் 97 - 98' என்ற இன்டர்நேஷனல் ஹேர்ஸ்டைலிங் போட்டியில முதன்முறையா கலந்துக்கிட்டு, அவார்டு வாங்கினேன். அந்த அவார்டு எனக்கு  மிகப்  பெரிய அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது. அதே வருஷம்தான் நான் ஃபேஷன் இண்டஸ்ட்ரியில் அடியெடுத்து வெச்சேன். பிரபல கோரியோகிராஃபர் சுனில் மேனனின் அறிமுகம் அந்த வருஷம்தான் கிடைச்சது. இன்னிக்கும் அவருடனான அந்த நட்பு தொடருது. வேற ஒருத்தர்கிட்ட வேலை பார்த்திட்டிருந்த நான், தனியா வேலைபார்க்க ஆரம்பிச்சதும் அதே 21 வயசுலதான்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

21 வயசுலதான் நடிகைகளுடனும் ஃபேஷன் துறையைச் சேர்ந்த பிரபலங்களுடனும் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். அப்படி நான் வொர்க் பண்ணின முதல் நடிகை நக்மா. இன்னிக்கு நான் வொர்க் பண்ணாத நடிகர், நடிகைகளே இல்லைனு சொல்லலாம். ஒரு விஷயம்... வெளியிலேருந்து பார்க்கிற உங்களுக்குத்தான் அவங்க எல்லாரும் செலிபிரிட்டீஸ். எனக்கு அவங்க யாரும் பிரபலமா தெரிய மாட்டாங்க. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் அவங்க சருமமும் தலைமுடியும்தான்!

இன்னிக்கு என் குடும்ப வாழ்க்கை சந்தோஷமா இருக்கிறதுக்கான முதல் ஸ்டெப்பும் அந்த வயசுல எடுத்ததுதான். என்னுடைய நீண்டகால நண்பர் புபேந்தர் சிங், அந்த வருஷம் என் காதலரா மாறினார். வேலை யில நிறைவா, சந்தோஷமா இருந்தோம்னா பர்சனல் வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும் என்கிறதுக்கு நானே உதாரணம். மனசுக்குப் பிடிச்ச வேலையும் வாழ்க்கையும் அமையுறது அதிர்ஷ்டம். தேவ்லினா, செஹல்னு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. வாழ்க்கையில இதுக்குமேல என்ன வேணும்னு கேட்கிற அளவுக்கு ஒவ்வொரு நாளை யும் எனக்கு மகிழ்ச்சியா அமைச்சுக்கொடுத்த கடவுளுக்கு நன்றி!

கனவு இல்லம் - நடிகை சுஜா வருணி

நா
ன் 14 வயசுலேயே நடிக்க வந்துட்டேன். அப்போ எங்க குடும்பம் ஏழ்மையில இருந்தது. பெரிய வசதிகள் கிடையாது. நான் நடிக்க வந்த பிறகுகூட பல வருஷமா வாடகை வீட்டுலதான் இருந்தோம். சினிமாக்காரங்கன்னா சொந்த வீட்ல இருந்தாதான் பெருமைங்கிற ஸ்டேட்டஸ் பற்றியெல்லாம் நான் என்னிக்கும் யோசிச்சதில்லை. எங்களுக்கு எது முக்கியமான தேவைனு பார்த்தேன். 14 வயசுல என் முதல் சம்பளத்தை அம்மாகிட்டதான் கொடுத்தேன். இப்பவும் எனக்கு வரும் சம்பளத்தை அம்மா கையில் கொடுத்துட்டு, எனக்கான தேவைகளுக்குப் பணம் வாங்கிப்பேன்.

அப்பா இல்லாம எங்களை வளர்க்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்காங்க. நான் தலையெடுத்ததும், அவங்களைக் கஷ்டமில்லாமப் பார்த்துக்கணும்கிறதுதான் என் மனசுல பிரதானமா இருந்தது. முதல்கட்டமா அவங்களை சொந்த வீட்டுல உட்காரவைக்கணும்னு ஆசைப்பட்டேன்.  உழைச்ச காலம் வரைக்கும் அம்மாவால வீடு வாங்க முடியலை. அன்பைத் தவிர வேற எதுவும் தெரியாத அந்த மனுஷிக்கு, ஏதாவது செய்யணும்னு நினைச்சேன்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

`மூன்றறிவு இருக்கிற காக்காகூட முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறதுக்குள்ளேயே கூடு கட்டுது. ஆறறிவு படைச்ச மனுஷங்களுக்கும் அந்தப் புத்திசாலித்தனம் வேணும். வாழ்க்கையில நீங்க சம்பாதிக்க ஆரம்பிச்சதும், உங்களுக்குனு ஒரு வீடு கட்டிக்கோங்க'னு எங்க தாத்தா அடிக்கடி சொல்வார்.  அது என் மனசுல ஆழமா பதிஞ்சிருந்தது.  சின்னதா, பெருசாங்கிறதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படலை. சொந்தமா ஒரு வீடுங்கிறது மட்டும் மனசுல வைராக்கியமா இருந்தது.

என் 21 வயசுல, சொந்த வீட்டுச் சாவியை அம்மாகிட்ட கொடுத்தப்போ, அவங்களுக்கு அவ்வளவு பெருமை. `என் மகள் வாங்கினது. அவ உழைப்பில் வாங்கினது'னு இன்னிக்கும் வீட்டுக்கு வர்றவங்ககிட்ட எல்லாம் பெருமையா சொல்வாங்க.  ரொம்பச் சின்ன வீடுதான். உண்மையைச் சொல்ல ணும்னா `கூண்டு'னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். ஆனாலும் எனக்கு ரொம்பவே சென்டி மென்ட்டலான வீடு அது. என் துக்கங்கள், சந்தோஷங்கள்னு ரெண்டையும் அந்த வீடு சமமா பேலன்ஸ் பண்ணி யிருக்கு.

எத்தனையோ ஊர்களுக்கு, வெளிநாடுகளுக்கு டிராவல் பண்ணிட்டேன். எந்த இடத்துலயும் கிடைக்காத பாசிட்டிவிட்டியும் சந்தோஷ மும் என் வீட்டுலதான் கிடைக்கும். எவ்வளவு மனசு கஷ்டத்தோடு இருந்தாலும் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் மனசு லேசாகிடும். கரியர்ல எனக்கு நல்ல மாற்றங்கள் வர ஆரம்பிச்சது, என் வருங்காலக் கணவரைச் சந்திச்சதுனு நிறைய நல்ல விஷயங்கள் இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் நடந்திருக்கு. இந்த வீடு மட்டுமில்லை, அதை எனக்கு சாத்தியப்படுத்தின 21 வயசும் எனக்கு லக்கி சார்ம்தான்!

உழைப்பும் உறுதியும் - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

மி
டில் க்ளாஸ் குடும்பத்துப் பெண் நான். அப்பாவுக்கு மாத சம்பளம். டாக்டர் ஆகணும்கிற கனவு நனவாகாததால், காயிதே மில்லத் காலேஜ்ல பி.எஸ்ஸி முடிச்சுட்டு, டபிள்யூ சிசி காலேஜ்ல எம்.எஸ்ஸி ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்டு டயட்டெடிக்ஸ் சேர்ந்திருந்த டைம் அது. அப்போ என் லட்சியமெல்லாம், வெறித்தனமா படிக்கிறது, நல்ல வேலையில செட்டிலாகிறது, நல்ல பேர் வாங்கறது, நல்லா சம்பாதிக்கிறது மட்டும்தான்.

ஸ்கூல் படிக்கிறபோதே அக்கம்பக்கத்துப் பசங்க, ஃப்ரெண்ட்ஸோட அண்ணன், தம்பிங்கனு நிறையபேர் லவ்வைச் சொல்லியிருக்காங்க. 21 வயசுலயும் அப்படியொரு முக்கியமான பிரபோசல் வந்தது. வழக்கம்போல அதுக்கும் `நோ' சொல்லிட்டேன்.

எம்.பி.பி.எஸ்-ல இடம் கிடைக்காததால பி.டி.எஸ் பண்ணலாம், பிசியோதெரபி பண்ணலாம்னெல்லாம் யோசிச்சேன். அப்பதான் என் அங்கிள் நியூட்ரீஷியன் கோர்ஸ் பற்றிச் சொன்னார். பல்வேறு காரணங்களால் ரொம்ப லேட்டாதான் எனக்கு அட்மிஷன் கிடைச்சது. சேர்ந்த உடனேயே எக்ஸாம்ஸ் வந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். மூணு மணி நேரம்தான் தூங்குவேன்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

அந்த கோர்ஸைப் பொறுத்தவரை டீச்சர்ஸ் பாடம் எடுக்க மாட்டாங்க. சிலபஸை எங்ககிட்ட கொடுத்துடுவாங்க. நாங்க மொத்தம் அஞ்சு பேர் இருந்தோம். ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் நாங்களா லைப்ரரியில புத்தகங்களை ரெஃபெர் பண்ணி நோட்ஸ் எடுத்து டீச்சர்ஸ்கிட்ட அப்ரூவல் வாங்கணும். அவங்க அப்ரூவ் பண்ணின பிறகு நாங்க ஒவ்வொருத்தரா க்ளாஸ் எடுக்கணும். முதன்முறை நான் க்ளாஸ் எடுத்த நாள் இன்னிக்கும் ஞாபகமிருக்கு. க்ளாஸ் எடுத்தேன்னு சொல்றதைவிடவும் நோட்ஸை அப்படியே படிச்சேன்னு சொல்லலாம். கைகால்கள் நடுங்க, கண்ணீர் வழிய நின்னுட்டிருந்தேன். என்கூட படிச்ச மத்த நாலு பேரும் எனக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க. அதுல ஒருத்தி, `நீ பயப்படுறதுல அர்த்தமே இல்லை. நீ எடுக்கிற பாடம் எங்க யாருக்கும் தெரியாது. நாங்க எல்லாரும் ஜீரோ. நீ ஒரு டீச்சரா எங்களுக்குப் புரியவைக்கிறதா நினைச்சு தைரியமா க்ளாஸ் எடு'னு சொன்னா. அந்த சப்போர்ட்டும் தைரியமும் தான் என்னை அந்த பயத்து லேருந்து மீட்டன. விடிய விடிய படிச்சுட்டு அடுத்த நாள் காலையில காலேஜுக்குப் போகணும். க்ளாஸ் எடுக்கணும். செமினார், தீசிஸ், புரொபஸர்ஸின் எதிர்பார்ப்புனு எம்.எஸ்ஸி-யின் முதல் வருஷம் பயங்கரமான நினைவுகள்கொண்டது. ரெண்டாவது வருஷம் இந்த பயம், பதற்றம் எல்லாம் மாற ஆரம்பிச்சது.

21 வயசு அனுபவங்கள்தான் இன்னிக்கு எனக்கான அடையாளத்துக்கும் அங்கீகாரத்துக்கும் காரணம். இப்போ ஆயிரம் பேர் இருந்தாலும் என்னால பயமோ, தயக்கமோ இல்லாம பாடம் எடுக்க முடியுது. என் 21 வயசுக் கனவுகள் எல்லாம் நிறைவேறியிருக்கு. ஆனா, அதீத உழைப்பும் பயிற்சியும் தேவைப்பட்டது. கனவுகள் சுமந்த 21-க்கு நன்றி!

சிறகுகள் விரிந்தன - எழுத்தாளர் அ.வெண்ணிலா

21
 
வயது ஆரம்பிச்சு ஒரு மாதத்தில் நான் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர்ந்தேன். வாழ்க்கையில்  திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்கிற மனநிலையில் இருந்த வயது அது. நட்பும் இலக்கியமும்தான் வாழ்க்கை என்கிற தீவிர மனநிலையில் இருந்தேன்.

எழுத வேண்டும் என்ற வேகம் வளர்ந்ததும் அந்த வயதில்தான். சிற்றிதழ்களில் கருத்தியல் சார்ந்த கட்டுரைகள் எழுத ஆரம்பிச்சது அந்த வயதில்தான். பெண்ணை அடிமைப்படுத்துகிற விஷயங்களைப் பற்றியும் பெரியாரின் கொள்கைகளைப் பற்றியும்தான் முதலில் எழுத ஆரம்பித்தேன். உதாரணத்துக்குப் பெரியார் சொன்னதுபோல வளையல் அணியக் கூடாது, ஆண் பெண் பாரபட்சமின்றிப் பழக வேண்டும் என்கிற விஷயங்களை அதிகம் எழுதியிருக்கிறேன். கவிதை எழுதுவேன் என்றெல்லாம் அந்த வயதில் நினைத்ததுகூட இல்லை.

வீட்டுச்சூழலும் வாசிப்புமே என்னை மாற்றின. தி.மு.க பொதுக்கூட்டங்களுக்கு அப்பாவோடு போயிருக்கிறேன். சுஜாதா, ரா.கி.ரங்கராஜன் கதைகளை எல்லாம் பின்னாள்களில்தான் படித்தேன். அதற்கு முன்புவரை பெரியார் சிந்தனைகளும் தி.மு.க சித்தாந்தங்களும்தான் என்னை பாதித்திருந்தன.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

வீட்டுக்கு நான் ஒரே பெண். முதல் வேலை, சம்பளம், அம்மா அப்பாவுக்குப் பொருளாதார பலத்தை உருவாக்கித் தந்தது என 21 வயது என் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனையாகவே இருந்திருக்கிறது.  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கத்தில் கீழ்பாலூரில் வேலை கிடைத்தது. முதல் 10 மாதங்கள் அங்கு தனியாகத் தங்கிதான் வேலை பார்த்தேன். ஏழாவது வகுப்பு ஆசிரியர். உலகத்தைத் தனியே பார்க்கும் சூழல் உருவான வயது அது. ஆண் நண்பர்களுடன் இயல்பாகப் பழகும்போது வேலையிடத்திலும் வெளியிலும் நிறைய விமர்சனங்கள் எழுந்ததுண்டு. நான் வெளியில் யார்கூடப் பேசினாலும் அவர்களை வீட்டுக்கும் அழைத்து வருவேன். அப்பா பெரியார் சிந்தனைகளில் நம்பிக்கை உள்ளவர் என்பதால் எதையும் தவறாகப் பார்த்ததில்லை.

என் முதல் சம்பளம் 800 ரூபாய். குடும்ப நல நிதிக்காக 10 ரூபாயைப் பிடித்துக்கொண்டு 790 ரூபாய் தருவார்கள். எனக்குத் தனி வீடு, சமையல் என சம்பளத்தைப்போல இன்னொரு மடங்கைச் செல வழித்துக் கொண்டிருந்தேன். வாரக் கடைசி வந்தால் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவேன். சம்பளத்தைப்போல இன்னொரு பங்கு தொகையை அப்பாவிடம் கடன் வாங்குவேன். ஆனாலும், நான் சம்பாதிக்கிறேன் என்கிற பொருளாதாரச் சுதந்திர உணர்வு ரொம்பவே ஸ்பெஷலாக இருந்தது. `வேலை கிடைச்சிருச்சு... அடுத்து கல்யாணம்' என்கிற பேச்சும் அந்த வயதில் வராமலில்லை. ஆனால், என் 27 வயதில்தான் திருமணம் செய்துகொண்டேன். அதுவரை என் பெற்றோர் என்னை வற்புறுத்தவில்லை.

சுருக்கமாகச் சொல்வதானால் புது உலகம், பொருளாதாரத் தன்னிறைவு என என் சிறகுகளை விரியச் செய்த வயது 21!

வேலையும் வாழ்க்கையும் - நடிகை தேவதர்ஷினி

த்தியமா சொல்றேங்க. 21 வயசுல நான் ஸ்கூல்ல இருந்தேன். குழப்பமா இருக்கா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...

எத்திராஜ் காலேஜ்ல பி.காம் முடிச்சுட்டு, அடுத்து ஏ.சி.எஸ் படிக்கிற ஐடியாவில் இருந்தேன். ஆனா, அடுத்தடுத்து அமைஞ்ச சீரியல்களால் படிப்பைத் தொடர முடியலை.

`மர்மதேசம்' தொடர்ல நடிக்க ஆரம்பிச்சது அந்த வருஷம்தான். ஸ்கூல்ல படிக்கிறவரைக்கும் அப்பா அம்மாவோடு ரொம்பப் பாதுகாப்பான உணர்வோடு இருப்போம். அடுத்து காலேஜ் வாழ்க்கை. அங்கேயும் இதுதான் படிக்கிறோம்; இதை நோக்கித்தான் பயணிக்கிறோம்னு ஓர் ஐடியாவோடு இருப்போம். `மர்மதேசம்'ல கமிட் ஆனேன். அந்த யூனிட் கிட்டத்தட்ட ஒரு ஸ்கூல் மாதிரியானதுதான். அதுவரைக்கும் காம்பியரிங் பண்ணிட்டிருந்த எனக்கு, நடிப்பு பற்றி எதுவுமே தெரியாமத்தான் அந்த யூனிட்டுக்குள்ள நுழைஞ்சேன். `மர்மதேசம்' யூனிட் ஸ்கூல் மாதிரின்னா, டைரக்டர் நாகா சார் ஒரு டீச்சர் மாதிரி. நடிப்புன்னா என்னன்னு கத்துக்க ஆரம்பிச்சது அங்கேதான்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

`மர்மதேசம்' சீரியல் முடிஞ்சதும் என் வாழ்க்கையில அடுத்து என்ன என்கிற கேள்வியை மட்டுமல்லாம அதுக்கான பதிலையும் அந்த வயசுதான் தந்தது. அடுத்து நான் என்ன மாதிரியான சீரியல்ஸ் பண்ணணும்கிற தெளிவுவந்தது. அப்பதான் சேத்தனைச் சந்திச்சேன். அந்த சீரியல் முடியுறதுக்குள்ள ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நேசிக்க ஆரம்பிச்சோம். சீரியல் முடியப்போகுதே... இனிமே மீட் பண்ண முடியாதோங்கிற நிலையிலதான் நாங்க எங்க கல்யாணத்தைப் பற்றி முடிவெடுத்தோம். `ரெண்டு பேரும் அவங்கவங்க வேலைகளைப் பார்த்திட்டிருப்போம். ஓரளவுக்கு செட்டிலானதும் கல்யாணம் பண்ணிக்கலாம்'னு முடிவுபண்ணினோம்.

`மர்மதேசம்' முடிஞ்சதும் `ரமணி வெர்சஸ் ரமணி' வாய்ப்பு வந்ததும் ஒரே வருஷத்துலதான். இன்னிக்கு காமெடியில எனக்குனு ஓரிடத்தைத் தக்கவெச்சிருக்கேன்னா அதுக்கான அஸ்திவாரத்தைப் போட்டுத் தந்தது `ரமணி வெர்சஸ் ரமணி' சீரியல். அப்போ எனக்கு காமெடி பண்றதுல பெரிய தயக்கம் இருந்தது. ஸ்கூல், காலேஜ்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கலைனா தலை வெடிக்கிற அளவுக்கு அப்பல்லாம் நான் பயங்கர சீரியஸ் கேரக்டர். `எனக்கு காமெடி வருமானு பயமா இருக்கு சார்... இன்னும் நான் அதுக்கு ரெடியாகலை'னு டைரக்டர்கிட்ட சொன்னேன். `இப்ப ரெடியாகலைன்னா எப்பவுமே முடியாது'னு சொல்லி, நாகா சார்தான் என்னை மோட்டிவேட் பண்ணினார்.

இதுதான் என் கரியர், நடிப்புல இதுதான் என் ஸ்டைல், இவர்தான் என் லைஃப் பார்ட்னர்னு 21 வயசுல நிறைய பெஸ்ட் முடிவுகளை எடுத்திருக்கேன். அந்த முடிவுகள்தான் இன்னிக்கு வரைக்குமான என் வாழ்க்கையை சந்தோஷமா கொண்டு போயிட்டிருக்கு.

அனுபவம் புதுமை - டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம்

லெக்ட்ரானிக்ஸ் ஃபிலிம் புரொடக்‌ஷன் படிக்கிறதுக் காக அமெரிக்கா போனபோது எனக்கு வயசு 21.

விடிஞ்சா என் பர்த்டே... தனியா இருக்கேனேன்னு பயங்கரமா ஃபீல் பண்ணிட்டிருந்தபோது, என் அமெரிக்கன் ஃப்ரெண்டு ஒருத்தங்க ‘ஒரு வாக் போகலாம் வா’னு கூட்டிட்டுப் போனாங்க. அப்படியே நடந்துக்கிட்டிருந்தோம். திடீர்னு ஒரு வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க... அந்த வீட்டுல 300 பேர் எனக்கு ஹேப்பி பர்த்டே விஷ் பண்றதுக்காக ரெடியா வெயிட் பண்ணிட்டிருந்தாங்க. அத்தனை பேரின் வாழ்த்து மழையில நனைஞ்சது மறக்கவே முடியாதது. இந்தியாவிலேருந்தும் எல்லாரும் போன் பண்ணி வாழ்த்தினாங்க. லைஃப்ல மறக்கவே முடியாத பர்த்டே அது.

21 வயசுலதான் டிரைவிங் லைசென்ஸ் டெஸ்ட் எடுத்தேன். பர்த்டே முடிஞ்சு ரெண்டாவது நாள் இந்தச் சம்பவம்... ரொம்ப சிரமமான அந்த டெஸ்ட்ல ஒருவழியா பாஸ் பண்ணி லைசென்ஸ் வாங்கினேன்.

நான் நல்லா டான்ஸ் பண்ணுவேன் என்கிறதால சியர் லீடிங் டீம்ல இருந்தேன். என் டான்ஸை பார்த்துட்டு அவங்க மிரண்டுட்டாங்க.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

படிக்கும்போதே காலேஜ்ல பார்ட் டைமா வேலையும் பார்த்துக்கிட்டிருந்தேன். 21 வயசுல சம்பாதிக்கிறோம் என்கிற பெருமையும் இருந்தது. ‘நீ உன் சொந்தக்கால்ல நிற்கக் கத்துக்கணும்’னு அப்பா சொல்லிட்டார். அதனால எனக்குப் பணம் அனுப்ப மாட்டார். என் வருமானத்துலதான் என் வாழ்க்கைத் தேவைகளைப் பார்த்துக்கணும். அமெரிக்காவில் 21 வயசானா தான் தனியா வீடெடுத்துத் தங்க அனுமதிப்பாங்க. அந்த அனுபவமும் எனக்குக் கிடைச்சது. எலெக்ட்ரிசிட்டி பில் உட்பட எல்லாம் நானே கட்டணும். அதுக்கு நான் சம்பாதிக்கணும். சிக்கனமா வாழறதுக்கு அங்கேதான் நான் கத்துக்கிட்டேன். அப்போ கஷ்டமா தெரிஞ்ச அதெல்லாம் இன்னிக்கு ரொம்பப் பெரிய விஷயமா, வாழ்க்கைக்கான பாடமா தெரியுது. அமெரிக்காவில் 21 வயசானாதான் செல்போன் வாங்க முடியும். ஸோ, என் முதல் செல்போனிலும் 21 வயசு இருக்கு.

ரொம்ப சிஸ்டமேட்டிக் கான வாழ்க்கைக்குப் பழகினதும் அப்போதுதான். இன்னொருத்தர் வாழ்க்கை யிலும் பிசினஸிலும் அநாவசியமா மூக்கை நுழைக்கக் கூடாது என்கிறதையும் அங்கேதான் கத்துக்கிட்டேன். 21 வயசுல வாழ்க்கையைத் தனியா எதிர்கொள்கிற அனுபவம் எனக்குக் கிடைச்சதை வரம்னே சொல்வேன்.

கல்வியே செல்வம் - நடிகை விஜி சந்திரசேகர்

பெ
ங்களூருல நான் லா காலேஜ்ல படிச்சிட்டிருந்தேன். பஸ்லதான் போயிட்டு வருவேன். 7 டு 12.30 வரைக்கும் காலேஜ். ஒருநாள் பஸ்ஸில் பயங்கரக் கூட்டம். யாரோ ஒருத்தர் என்னைத் தொந்தரவு பண்றதை ஃபீல் பண்ணினேன். எனக்கு என்ன பண்றது, எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியலை. பல்லைக் கடிச்சுக்கிட்டு நின்னுட்டிருந்தேன்.  பட்டை வெச்சு புடவை கட்டி, பின் பண்ணியிருந்தேன். பின் முதுகுல ஒரு கை தொட்டுக்கிட்டே இருந்தது. அப்புறம் அந்தக் கை இடுப்புக்கு வந்தது. அடிக்கணும்போல கோபம். ஆனாலும், உள்ளுக்குள்ள ஒரு பயம். புடவையில் குத்தியிருந்த பின்னை எடுத்து அவனை ரத்தம் வரும் அளவுக்குக் கீறி விட்டுட்டேன். `ஆஆஆஆ'னு அலறினான். யாருக்கும் என்ன நடந்ததுனு தெரியலை. அவன் அடுத்த ஸ்டாப்லயே இறங்கி ஓடிட்டான்.

அதே வருஷம் சென்னையிலயும் அதே மாதிரி ஓர் அனுபவம். சாந்தி தியேட்டருக்குப் படம் பார்க்கப் போயிருந்தோம். நான் சின்னப்பொண்ணுதானேனு எப்போதும் என்னை ஓரமா உட்காரவெச்சிடுவாங்க. பாவாடை தாவணியில போயிருந்தேன். பின் சீட்டுலேருந்து ஒரு கை நீண்டது. அப்பவும் அதே மாதிரி பின் எடுத்துக் கீறிவிட்டுட்டேன். ஒருவேளை சம்பந்தப்பட்ட அந்த ரெண்டு பேரும் இதைப் படிச்சாங்கன்னா அவங்களுக்குக் கட்டாயம் நான் ஞாபகத்துக்கு வருவேன். அவங்க கையிலும் நிச்சயம் அந்தத் தழும்பு இருக்கும். காலத்துக்கும் மறக்க முடியாத தண்டனை அது. 21 வயசுனு கேட்டதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த `மீ டூ' அனுபவங்கள்தான்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

பொதுவா பலரும் படிச்சு, முடிச்சிட்டு நடிக்க வருவாங்க. நான் `தில்லுமுல்லு'ல நடிச்சுட்டு, மறுபடி சட்டம் படிக்கப் போயிட்டேன். ஜட்ஜாகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, வாழ்க்கை வேற மாதிரி ஆயிடுச்சு.

குதிரைக்குக் கடிவாளம் கட்டின மாதிரி படிப்பு மட்டுமே லட்சியம்னு இருந்த வயசு அது. அந்தப் படிப்புதான் என்னை ஸ்ட்ராங்கான மனுஷியா மாத்தியிருக்கு. படிப்பு கொடுக்கிற பாசிட்டிவிட்டியை வேற எதனாலும் தர முடியாது. படிப்புதான் காஸ்ட்லியான ஜுவல். 

21 வயசுல எனக்குத் தெரியாம நடந்த லவ் பிரபோசல்ஸைக்கூட நான் பெருசா எடுத்துக்கலை.  அப்போ ஏதோ ஒரு நாட்டுக்கு அம்பாசிடரா போகணும்னெல்லாம் கனவுகண்டிருக்கேன். படிப்பை முடிச்சதும் கல்யாணம், குழந்தைங்க, அப்புறம் டி.வி என்ட்ரி, அடுத்து படங்கள்னு எல்லாம் வேற லெவல்ல நடந்தது. எது நடந்தாலும் நன்மைக்கேனு நம்பறவள் நான். நினைச் சதும் நடந்ததும் வேற வேறயா இருந்தாலும் அதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நாம செய்யற வேலை நம்மை சந்தோஷமா வெச்சிருக்காங்கிறதுதான் முக்கியம். 21 வயதுக் கனவுகள் நனவாகலைனாலும் நான் சந்தோஷமா இருக்கேன்!

வாழ்க்கையே மேஜிக்தான் - மேஜிக் கலைஞர் மனேகா சர்க்கார்

பெ
ண்களுக்கு மேஜிக் துறையெல்லாம் சரியா வராதுங்கிற பொதுக்கருத்தை உடைக்க நினைச்சேன். அதுவரை அப்பா பி.சி.சர்க்கார் ஜூனியரின் உதவியாளரா இருந்த நான், மேஜிக்கை முழுநேர வேலையா மாத்திக்கிறதுனு முடிவெடுத்தபோது எனக்கு 21 வயது.

நான் பண்ணின முதல் சோலோ மேஜிக் ஷோ...ஒன்றரை மணி நேர நிகழ்ச்சி அது. 23 வகையான மேஜிக் ஆக்ட்ஸ் பண்ணினேன். என் நிகழ்ச்சியை நான் `மேஜிக் ஷோ'னு சொல்ல மாட்டேன். அதை ‘டிராமேஜிக்’னுதான் சொல்வேன். டிராமாவும் மேஜிக்கும் கலந்தது அது.

ஷோ முடிஞ்சதும் சில பெற்றோர் தங்களுடைய பெண் குழந்தைகளோடு மேடைக்கு வந்தாங்க.  அப்போ ஒரு சின்னப் பெண், ‘எனக்கும் உங்களை மாதிரி  மேஜிஷியனாகணும். முடியாத விஷயங்களை முடியும்னு காட்டணும்’னு சொன்னா. அந்த வார்த்தைதான் என் வாழ்க்கைக்கான மந்திரம். அந்தத் தருணத்தை இப்ப நினைச்சாலும் சிலிர்க்கும்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

அதைவிடவும் பெருமைக்குரிய தருணம் ஒன்று உண்டு. அன்னிக்கு அப்பா பார்வையாளர்களில் ஒருத்தரா முதல் வரிசையில் உட்கார்ந்துக்கிட்டு என் நிகழ்ச்சியைப் பார்த்தார். ‘பி.சி.சர்க்கார் பொண்ணு எவ்வளவு பிரமாதமா ஷோ பண்றாங்க’னு அவர் பக்கத்துல இருந்தவங்க கமென்ட் அடிச்சதை ரசிச்சபடி பார்த்துக்கிட்டிருந்திருந்தார். ‘இன்னிக்கு நீ பார்க்கிறதும் கேட்கிறதும் தான் பாராட்டுனு நினைச்சிடாதே. உன் திறமையை நீ மேம்படுத்திக்கிட்டா நாளைக்கு இதைவிட அதிகமான பாராட்டுகள் குவியும். நாளை மறுநாள் அது  இன்னும் அதிகமாகும். ஏன்னா கற்றலுக்கு முடிவே இல்லை’னு அந்த மேடையில அப்பா சொன்ன அட்வைஸ்தான், இன்னிக்கு எனக்கான அடையாளத்தைத் தந்திருக்கு.

உலகளவில் மேஜிக் துறையில் இருக்கிற பெண்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவா இருக்கிறது வருத்தமா இருக்கு. ரொம்பப் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படற துறை இது. பெண்களால் பெஸ்ட் மேஜிஷியன்ஸ் ஆக முடியும்கிறது என் அசைக்க முடியாத நம்பிக்கை. ‘மாயாவிக்யான்’ என்பது என் ஷோவின் பெயர். என் ட்ரூப்ல 6 பெண்களும் 13 பசங்களும் இருக்காங்க. இதையெல்லாம் சாத்தியமாக்கினது 21 வயசு. வாழ்க்கையே மேஜிக்தான்னு வெறித்தனமா இருந்த வயசு அது.

ஆயுள்முழுவதும் கூட இருக்கப்போகிற அந்த உறவு மாதிரியானது எனக்கு மேஜிக். என் முதல் சோலோ ஷோவில் அந்தக் குட்டிப் பெண் சொன்னதுதான் நினைவுக்கு வருது... ஐ வான்ட் டு மேக் இம்பாசிபிள் திங்க்ஸ் பாசிபிள்!

முதல் காதல் - நடிகை, நாடகக் கலைஞர் வினோதினி வைத்யநாதன்

மு
தன்முதலா ஸ்ப்லெண்டர் பைக் ஓட்டக் கத்துக்கிட்டது 21 வயசுலதான். கீழே விழுந்து அடிபட்ட தழும்பு இன்னும் இருக்கு. 21 வயசுல எம்.பி.ஏ சேர்ந்தபோது என் வகுப்பில் பாதிக்குப் பாதி ஆண்கள். இன்னிக்கு எந்த ஆணிடமும் என்னால எந்தத் தயக்கமும் இல்லாம சக மனிதரா பழக முடியுதுன்னா அந்த நட்பின் தொடக்கம்தான் காரணம். என் ஆளுமையைச் செதுக்கி, முழுமையாக்கினது 21 வயசும் அப்போ நான் படிச்ச எம்.பி.ஏ-வும் தான்.

வாழ்க்கையின் பல முதல் அனுபவங்களும் எனக்கு பெங்களூரில் 21 வயதில் நடந்தவைதான். முதன்முதலா `பஃப்பு'க்குப்போனது, தனியா வீடெடுத்துத் தங்கினது, சம்மர் இன்டர்ன்ஷிப்பில் வேலைக்குப் போனதுனு 21-ல் நிறைய நினைவுகள் இருக்கு.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

`பப்பி லவ்'னு சொல்ற முதல் காதல் எனக்கு 21 வயசுலதான் வந்தது. நான் குழந்தைத்தனமா இருந்தேன். அவருக்கு எதிர்காலத்தைப் பத்தின கனவுகளும் திட்டங்களும் நிறைய இருந்தது.  அதுவே பிரிவுக்கான முகாந்திரமாகவும் அதே 21 வயசுலயே அமைஞ்சது. ரெண்டு பேர் எந்த உறவில் இருந்தாலும் ஆணும் பெண்ணும் சமத்துவத்தோடு (Similar Relationship Status) இருந்தால்தான் அது சரியானதா இருக்கும்னு நம்பறேன்.

சம்மர் இன்டர்ன்ஷிப்பில் 21 வயசுல முதன்முதலா வேலைக்குப் போனேன். 30-ல் கார்ப்பரேட் வேலை வேண்டாம்னு அதுலேருந்து விலகி வந்தேன்.

21 வயசுல வேலைக்குப் போனபோதே அதுக்கான விதை என் மனசுல விழுந்திருக்கணும். அது அவ்வளவு கொடூரமான அனுபவமா இருந்தது.

பெங்களூரு எம்.ஜி ரோட்டில் நான் ஒருபக்கமும் அப்பா இன்னொருபக்கமும் நடந்திட்டிருக்கோம். அவர்கிட்ட கோபமும் அழுகையுமா ‘எம்.ஏ லிட்ரெச்சர் படிச்சிருக்கலாமோ’னு புலம்பினது இன்னும் ஞாபகமிருக்கு. அவர் கொஞ்சம்கூட மசியலை. ‘பாதிக் கிணற்றைத் தாண்டிட்டே. நீ முடிச்சிட்டு வா... பார்த்துக்கலாம்’னு சொன்னார்.  இந்த மாதிரி பெற்றோரின் வற்புறுத்தலால் நம் கனவுகளை நனவாக்கிக் கத் தவறிடறோம். அம்மா அப்பாவுக்காகவும், சொந்தக் காரங்களுக்காகவும், சமூகத் துக்காகவும் பார்த்துப் பார்த்து, பிடிக்காததை எல்லாம் செய்து, கடைசியில சுற்றி வளைச்சுதான் நம்ம இலக்கை நோக்கித் திரும்பறோம்.

இன்னிக்கு இருக்கிற ஜெனரேஷன் அளவுக்கு அன்னிக்கு எனக்குத் தைரியம் இல்லை. ‘எம்.பி.ஏ வேண்டாம், நான் எம்.ஏ படிக்கிறேன்’னு சொல்ற துணிச்சல் இல்லை.

நான் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் பத்தி யோசிக்கிற ஆளில்லை. நிகழ்காலத்துல மட்டுமே நம்பிக்கை உள்ளவள். இந்தக் கணத்தை  சந்தோஷமா வாழ என்ன செய்ய முடியும்னு மட்டும்தான் யோசிப்பேன். அதுதானே எதார்த்தம்?

மேஜிக் வயது - சின்னத்திரை பிரபலம் டோஷீலா

ன் சொந்த ஊரு சேலம் பக்கம் இருக்கிற தம்மம்பட்டி. மஞ்சப்பையோடு சென்னை வந்தவள்னு பெருமையா சொல்லிப்பேன். லயோலா காலேஜ்லதான் படிச்சேன். 21 வயசுல சென்னை வந்ததும் எனக்கு எல்லாமே புதுசா இருந்தது. சென்னைக்கு வந்ததும் ஷேர் ஆட்டோவை வியப்பா பார்த்திருக்கேன். ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அந்தச் சூழலும் எனக்குப் புதுசு. வேற வேற மாநிலத்தைச் சேர்ந்தவங்க என்கூட தங்கியிருந்தாங்க.  எல்லோரும் அவங்கவங்க வேலையைப் பார்த்துக்கிட்டு, அந்தச் சின்ன இடத்துக்குள்ள வாழறதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன்.

21 வயசுல ரொம்ப ஸ்பெஷலான அனுபவம், மறக்க முடியாத அனுபவம்னா சூரியன் எஃப்.எம்மில் ஆர்.ஜேவா வேலைக்குச் சேர்ந்ததுதான்.  என்னுடைய கரியர்  ஸ்டார்ட் ஆகியிருந்த வயசு அது.  சிறகுகள் முளைச்சு உயரப் பறக்க ஆரம்பிச்ச வயசு.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

நான் சென்னைக்கு வந்த புதுசுல சூரியன் எஃப்.எம்மும் ரேடியோ மிர்ச்சியும் மட்டுமே இருந்தன.  சூரியன் எஃப்.எம் மாதிரி ஒரு பிரபல நிறுவனத்தில் ஒரு நாளைக்கு மூணு முக்கியமான ஷோஸ் என் குரலில் ஒலிச்ச அந்த நாள்களை மறக்கவே முடியாது.  காலேஜ் ஸ்டூடன்ட் மத்தியில என் குரலும் நான் பண்ணிட்டிருந்த ஷோஸும் பாப்புலரா இருந்தன. சென்னையில நான் எந்த இடத்துக்குப் போனாலும் அங்கெல்லாம் என்னுடைய குரலைக் கேட்கிறது ஊர்லேருந்து வந்த ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெருமையா இருந்திருக்கும்?  அந்த வருஷம் நான் ஆர்.ஜேவா இருந்ததால காலேஜ்ல ‘பெஸ்ட் ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்’ அவார்டு கிடைச்சது.

அப்போ சூரியன் எஃப்.எம் ஆபீஸ் அண்ணா அறிவாலயத்தில் இருந்தது. வேலைக்காக அங்கே போகிறபோது  தினமும் கலைஞர் ஐயாவைப் பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.  அரசியல்வாதிகள்னாலே ரொம்பப் பகட்டோடும் பக்கத்துல பத்து ஆட்கள் சூழவும் இருப்பாங்கனு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, கலைஞர் ஐயாவை அவ்வளவு எளிமையான நபரா பார்த்து ‘மிகப்பெரிய அரசியல் தலைவரான ஒருவரால் இப்படிக்கூட இருக்க முடியுமா’னு பிரமிச்சிருக்கேன். அவர் அங்கே வரும்போதும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர் அருகில் நடந்து போகக் கிடைச்ச சுதந்திரத்தை நினைச்சு வியந்திருக்கேன்.

சூரியன் எஃப்.எம் வேலையில சேர்ந்தபிறகு ஷேர் ஆட்டோவில் சென்னையையே வலம்வந்த நாள்கள் அதிகம். சென்னை வாழ்க்கைதான் சுதந்திரமா இயங்கவும் கத்துக்கொடுத்தது. சேலத்துப் பெண்ணா இருந்தாலும் கடைசி வரைக்கும் நீங்க எங்க வாழ விரும்பறீங்கனு என்னை யாராவது கேட்டாங்கன்னா சென்னைதான்னு சொல்வேன். எல்லாமே 21-ல் நடந்த மேஜிக்!

தாய்வீட்டுச் சீதனம் - நடிகை ஆர்த்தி கணேஷ்

டிக்காதவன்' படத்தில் கமிட் ஆனது 21 வயசுலதான். தனுஷ்கூட அது எனக்கு முதல் படம். `கொட்டைப் பாக்கு' பாட்டு சீன் உங்களுக்கே ஞாபகம் இருக்கும்.

அதே வருஷம், `வில்லு' படத்துல நயன்தாராகூட முதன்முதலா நடிச்சிருந்தேன். அதிரப்பள்ளி ஃபால்ஸ்ல ஷூட் பண்ணினாங்க.  `ஆர்த்தி, இவ்ளோ குண்டா இருக்கியே... உன்னால முடியுமா?'னு எல்லாரும் பயந்தாங்க. `குண்டூசினு சொல்றோம். பேர்லதான் குண்டு. ஆனா, அது ஒல்லி'னு அசால்ட்டா அந்த ஃபால்ஸ்ல ஏறி, இறங்கினேன். அப்புறம் `குரு என் ஆளு' படத்துல மாதவன் சார் தங்கச்சியா நடிச்சிருந்தேன்.  மாதவன் சார் எம்.பி.ஏ ஸ்டூடன்ட்ஸுக்கு க்ளாஸ் எடுக்கிறவர். நானும் அப்பதான் எம்.பி.ஏ முடிச்சிருந்த டைம். என் வைவா பத்தியெல்லாம் நிறைய கேட்டார். நான் ஏன் `மார்க்கெட்டிங் அண்டு ஹெச்.ஆர் ஸ்பெஷலைசேஷன்' எடுத்தேன்னு கேட்டார். நடிப்பைத் தாண்டி நிறைய விஷயங்கள் பேசினோம்.

`ஒரு பெண்ணுக்கு, தாய்வீட்டுச் சீதனம் என்கிறது படிப்புதான். அதைவிடப் பெரிய சீர் செனத்தியை எந்த அம்மா அப்பாவாலயும் கொடுத்துட முடியாது'னு எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க. என்னதான் மூணு வயசுலேருந்து நடிச்சிட்டிருந்தாலும் நான் எல்லோரையும்போல ரெகுலர் காலேஜ்லதான் படிச்சேன். மீனாட்சி காலேஜ். ஒரு மணி வரைக்கும் காலேஜ். அப்புறம் ஷூட்டிங் போயிட்டு, மறுபடி நைட் வந்து படிப்பேன்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

எனக்குச் சின்ன வயசுலேருந்தே படிப்பைவிடவும் நடிப்புப் பிடிக்கும். `ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தாதான் நடிக்க அனுமதி'னு சொல்வாங்க அம்மா. நடிப்புக்காகவே படிச்சேன்னு சொல்லலாம். ஒருவேளை மார்க் குறைஞ்சா,  `ஷூட்டிங் ஷூட்டிங்னு போனதுதான் காரணம்'னு யாராவது சொல்லிடக் கூடாதேனு நல்லா படிச்சேன்.

அதே 21 வயசு... திடீர்னு அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை. என் கல்யாணத்தைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க. கணேஷ் குடும்பமும் எங்க குடும்பமும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.  `என் தங்கை கல்யாணி'யில ஆரம்பிச்சு நானும் கணேஷும் நிறைய படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கோம். சூப்பர் 10, மானாட மயிலாட பண்ணினோம். திடீர்னு கணேஷ் அம்மாவும் பாட்டியும் தவறிட்டாங்க.  அவங்க ரெண்டு பேரும் போன பிறகு கணேஷுக்கும் அவங்க அப்பாவுக்கும் சாப்பாடு செய்து கொடுக்கக்கூட ஆள் இல்லாம கஷ்டப்பட்டாங்க. கணேஷோட  அப்பாதான் எங்க வீட்டுல பெண் கேட்டார். சாதி, மதம்னு எதுவும் பார்க்கலை. ரெண்டு பேரும் ஒரே துறையில இருக்கோம். என்னைப் புரிஞ்சுக்கிட்டவர், பெஸ்ட் ஃப்ரெண்ட் நல்ல லைஃப் பார்ட்னரா இருப்பார்னு தோணினது. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 

நாங்க இன்னிக்கு வரைக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். எங்களுக்குள்ள சண்டையே இல்லைனு பொய்யெல்லாம் சொல்லலை. நிறைய சண்டை போடுவோம். ஆனா, ஆரோக்கியமா விவாதிப்போம். நிறைய விட்டுக்கொடுத்து வாழக் கத்துக்கிட்டோம். ஒற்றுமையா இருக்கோம்... இருப்போம்.

லக்கி நம்பர் - ரேஸர் அலிஷா அப்துல்லா

நா
ன் பைக் ரேஸிங் போக ஆரம்பிச்ச நாள் முதல் இன்னிக்குவரைக்கும் பாராட்டுகளை விடவும் அதிகமான விமர்சனங்கள் வந்திருக்கு. ஒரு பொண்ணு வித்தியாசமான துறையில சாதிக்கிறாளேனு பார்க்காம, ‘பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தேவையா? கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டியோடு குடும்பம் நடத்தறதை விட்டுட்டு, உயிரைப் பணயம்வைக்கிற இந்த ரேஸெல்லாம் தேவையா?'னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. ஒவ்வொரு முறை அப்படிப்பட்ட பேச்சைக் கேட்கும்போதும் எங்கம்மாதான் எனக்கு தைரியம் சொல்வாங்க. ‘உன்னால முடியும். நீ போக வேண்டிய உயரம் அதிகம்’னு சொல்வாங்க. `நான் சாதிச்சிட்டேன். ஆனா, எல்லாப் பொண்ணுங்களுக்கும் அப்படியொரு அங்கீகாரமும் வெற்றியும் சாத்தியமா?' இந்தக் கேள்வி 21 வயசுலதான் என் மனசுல எழுந்தது. ஆனா, அதை அப்படியே மறந்து கடந்து போக முடியலை. மனசைக் குடைஞ்சுக்கிட்டே இருந்தது.

அந்த வயசுலதான் நான் என்னுடைய விமன் ரேஸிங் டீம் முயற்சிகளை ஆரம்பிச்சேன். நிறைய அலிஷாக்களை உருவாக்கணும்னு ஆசைப்பட்டேன். இந்தியாவில் நான் பெரும்பாலும் பசங்களோடுதான் ரேஸ் பண்ணியிருக்கேன். ஆனா, வெளிநாடுகளில் ரேஸ் பண்ற பொண்ணுங்களோட எண்ணிக்கைதான் அதிகம். இந்தியாவிலும் அப்படி பெண்களைத் தயார்படுத்தணும்னு வெறித்தனமா முயற்சிகள் எடுத்தேன்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

சென்னையில நிறைய லேடீஸ் காலேஜுக்குப் போய் ரேஸிங் பத்திப் பேசினேன். 21 வயசுப் பொண்ணு காலேஜ்ல வந்து என்னென்னவோ பேசுதுனு முதல்ல யாருமே என் பேச்சுல ஆர்வம் காட்டலை. மோட்டார் ஸ்போர்ட்ஸ், பொண்ணுங்களுக்குச் சரியா வராதுனு சொன்னவங்கதான் அதிகம். ஆனாலும், நான் என் முயற்சியைக் கைவிடலை. கிட்டத்தட்ட மூன்று வருஷப் போராட்டத்துக்குப் பிறகு அதுக்கான பலன் கிடைச்சது. நிறைய பெண்கள் முன்வர ஆரம்பிச்சாங்க,   பெங்களூரைச் சேர்ந்த ரேணுகாவைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  கார், பைக் ரெண்டுலயும் பிரமாதமா பண்ணிட்டிருக்காங்க.

பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், கொச்சின்னு பல இடங்கள்லேருந்து  கார் ரேஸிங்குக்கான பெண்களைத் தேர்வு செய்யற முயற்சி தொடருது. `அலிஷா அப்துல்லா ரேசிங் அகடமி' மூலமா, அடுத்த வருஷ ஆரம்பத்தில் என் டீமைச் சேர்ந்த பெண்களை  இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்புல கலந்துக்க வைக்கப்போறேன். 21 வயசு கனவு நனவாக எனக்கு எட்டு வருஷங்கள் தேவைப் பட்டிருக்கு. ஆனாலும், அது சந்தோஷமான சாதனை தான்...

21 வயதில்தான் சூப்பர் பைக் ரேஸிங் கத்துக்க முதன்முறையா வெளி நாட்டுக்குப் போனேன். 600 சிசி சூப்பர் பைக்கை எங்கம்மா எனக்கு கிஃப்ட் பண்ணினாங்க. சூப்பர் பைக் சாம்பியன்ஷிப்ல மூன்றாவது இடத்துக்கு வந்ததும் 21 வயசுலதான். எனக்கு நம்பர்ல எல்லாம் நம்பிக்கையில்லை. ஆனாலும் 21 மட்டும் லக்கி நம்பர்!

நிறை வாழ்வு - கவிஞர் குட்டி ரேவதி

21
வயதில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது வருடம் படிச்சிட்டிருந்தேன். ஒரு வருடம் தாமதமாகத்தான் சேர்ந்திருந்தேன். முழுநேர சித்த மருத்துவராவதுதான் என் கனவாக இருந்தது.

திருநெல்வேலி அப்போது ஒரு பண்பாட்டு - இலக்கிய நிகழ்வுகளுக்கான மையமாகவும் இருந்தது.  அப்போதுதான் எனக்கு ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ அறிமுகமானது. டிவிடி வசதிகள் இல்லாத காலம் அது.  ரயிலில் ஃபிலிம் கேன்கள் வந்திறங்கும். அவற்றை வைத்து அன்று மாலை படங்களைத் திரையிடுவார்கள்.

21 வயதிலேயே எனக்கு உலகம் பெரிதாக விரிந்திருந்தது. காரணம், திருநெல்வேலியின் விடுதி வாழ்க்கை. அந்த ஆற்றங்கரை ஊரும் அது சார்ந்த வாழ்வும்கூட எனக்குப் புதிதாக இருந்தன. அதுவரை வீட்டில் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டவள் நான். திருச்சியில் சிறுநகர வாழ்விலிருந்து வந்த எனக்கு, திருநெல்வேலி பெரிய வெளியை அறிமுகப்படுத்தியது. என் முழுமையான சுதந்திரம், பண்படுதல், ஆளுமை, என் லட்சியங்கள் என எல்லாமே அந்த வயதில்தான் உருவாயின.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

கல்லூரியில் யூனியன் செகரட்டரி, கல்சுரல் செகரட்டரி எனப் பல பொறுப்புகளில் இருந்தேன்.  யாரும் என் சுதந்திரத்தில் குறுக்கிடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவளாக இருந்திருக்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து திருநெல்வேலியில் காடு, ஆறு, மலை என ஓரிடம்விடாமல் சுற்றிப் பார்த்திருக்கிறேன். திருநெல்வேலியின் சாதிக்கலவரங்களோ, வன்முறைகளோ அப்போது எனக்குத் தெரியாது.

21 வயதில் என் நினைவுகளில் திருநெல்வேலி எப்போதும் ரொமான்ட்டிக்கான ஓரிடம்.

இன்று என்னுடன் இருக்கும் நண்பர்கள் பலரும் 21-ல் எனக்கு அறிமுகமானவர்கள். நான் இலக்கியத்துக்குள் வருவதற்கு, கவிதைகள் எழுதுவதற்கு, சினிமாவை நோக்கி நகர்வதற்கு என வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களுக்கும் அந்த நட்புதான் அடிப்படை

திருநெல்வேலி மாநகராட்சி நூலகத்தில் வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ வாசித்ததும் அந்த வயதில்தான். 

அந்த வயதில் பார்த்த பெர்க்மனின் படங்களும் பாவ்வோ பசோலினியின் படங்களும் மறக்க முடியா தவை. பாவ்லோ பசோலினி என்பவர் கவிஞராக இருந்து இயக்குநராக மாறியவர்.

கவிதைகள் எழுதுவேன். ஆனால், முழுநேரக் கவிஞராக மாறுவேன் என நினைத்ததில்லை. அதற்கெல்லாமும் 21 வயது வாழ்க்கை அனுபவங்கள்தான் உரமாக இருந்தன.

21 வயதை நான் முழுமையாக, நிறைவாக வாழ்ந்திருக்கிறேன். அந்த வயதை நினைத்துப் பார்க்கும்போது இன்னும் நிறைய செய்துவிட முடியும் என்கிற உற்சாகம் வருகிறது!

சவால் சக்சஸ் - மாடல், நடிகை சனம் ஷெட்டி

பெ
ங்களூருல எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் கடைசி வருஷம் படிச்சிட்டிருந்தேன். அப்பவே நான் மாடலிங் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ரகசியமான சினிமா கனவோடு இருந்த வருஷமும்கூட. கிட்டத்தட்ட 15 விளம்பரங்கள்ல நடிச்சு முடிச்சிருந்தேன்.

25-க்கும் மேலான ராம்ப் ஷோஸ் பண்ணியிருந்தேன்.

பெங்களூரைப் பத்திச் சொல்லவே வேண்டாம். ஃபேஷன் ஹப்பா இருந்தது. பிரசாத் பிடப்பானு பிரபல ஃபேஷன் கோ-ஆர்டினேட்டர்தான் எனக்கு மென்ட்டர். காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும்போது என்னை கிட்டத்தட்ட எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது. காலேஜ்ல என்ன நிகழ்ச்சி நடந்தாலும் என் பங்களிப்பு இருந்திருக்கு. ஒரு ஃபேஷன் டீமே என்கிட்ட இருந்ததால கோரியோகிராபியும் ட்ரெயினிங்கும் பண்ணுவேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் எங்க டீம்தான் ஜெயிக்கும். `நீ ரொம்ப க்யூட். உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு'ங்கிற கமென்ட்ஸ் எல்லாமும் கடைசி வருஷப் படிப்புல கொஞ்சம் அதிகமாவே இருந்தது. ஆனா, அப்போ என் லட்சியம், கனவெல்லாம் லைஃப்ல ஏதாவது பெருசா சாதிக்கணும்கிறதுல மட்டும்தான் இருந்தது.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

பெங்களூரு பொண்ணா இருந்தாலும் நான் தமிழ்ப் படங்களின் ரசிகை. குறிப்பாக மணிரத்னம் சார், கௌதம் மேனன் சாரின் வெறித்தனமான ரசிகை. அவங்க ரெண்டு பேர் படங்களிலும் நடிச்சிடணும்னு தினம் தினம் கனவு காணுவேன். காலேஜ் கட் அடிச்சிட்டு தியேட்டருக்குப் போயிருக்கேன்.

 `நீ விரும்பினதைச் செய். ஆனா, படிப்பை மிஸ் பண்ணிடக் கூடாது'னு அம்மா அப்பா சொல்லிட் டாங்க. 21 வயசுலயே ஆக்டிங் வொர்க்‌ஷாப்பெல்லாம் போய் நடிப்பு கத்துக்க ஆரம்பிச்சேன். நிறைய நிராகரிப்புகளைப் பார்த்திருக்கேன். கடைசி வருஷம் படிச்சிட்டிருந்தபோதுதான் காலேஜுக்கு லீவு எடுத்துட்டுப் போய் `அம்புலி'னு ஒரு தமிழ்ப் படத்துல நடிச்சிட்டு வந்தேன். ஒருபக்கம் காலேஜ்ல என் பேரும் செல்வாக்கும் அதிகமாயிட்டே இருந்தது. இன்னொரு பக்கம் சினிமாவுல எனக்கான இடத்தைத் தக்க வெச்சுக்க பெரிய அளவுல போராடிக்கிட்டிருந்தேன். மனசளவுல ரொம்ப நொந்துபோயிருந்தேன். ஆனா, ரொம்ப சீக்கிரமே அந்த அழுத்தத்துலேருந்து வெளியே வந்துட்டேன். எக்காரணம்கொண்டும் என் லட்சியத்தை விட்டுடக் கூடாதுனு உறுதியா இருந்தேன்.

இன்ஜினீயரிங் படிப்பு... மாடலிங் மற்றும் நடிப்பு... ரெண்டுமே அதிக உழைப்பும் நேரமும் தேவைப்படும் விஷயங்கள். சில நாள்கள் விடிய விடிய மாடலிங் ஷூட் இருந்திருக்கு. அடுத்த நாள் காலேஜ்ல எக்ஸாம்ஸ் இருந்திருக்கு. ஆனா, ரெண்டுமே நான் விரும்பித் தேர்ந்தெடுத்தத் துறைகள். அதனால கஷ்டமா பார்த்ததில்லை. அத்தனை சவால்களையும் தாண்டி, 21 வயசின் முடிவில் ரெண்டு துறைகளிலும் நான் சக்சஸ்ஃபுல்லான நபரா அடையாளப்படுத்தப் படவும் அதுதான் காரணம்!

அதிசயம் ஆனால் உண்மை - பாடகி ஷாஷா திருப்பதி

னடாவில் மாலிக்யூலர் பயாலஜியும் பயோ கெமிஸ்ட்ரியும் படிச்சிருந்த டைம் அது.  லைஃப் செம ஃபன்னா, ஜாலியா இருந்தது. ‘ஆருயிரே மன்னிப்பாயா’வும், ‘வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும்’னு ரெண்டு பாடல்களை எதேச்சையா கேட்டேன். ரெண்டுமே ரஹ்மான் மியூசிக்.

எனக்குள்ள என்ன நடந்ததுன்னே தெரியலை. அடுத்த ரெண்டு மாசத்துக்கு அந்த ரெண்டு பாடல்களைத் தவிர, வேற எந்தப் பாடலையும் நான் கேட்கலை. அந்தக் கணம்தான்... வாழ்க்கையில மியூசிக்கைத் தவிர வேற எதுவுமே என்னால பண்ண முடியாதுங்கிற முடிவுக்கு வந்தபோது எனக்கு வயசு 21. அந்த வயசுக்கான மெச்சூரிட்டி இல்லை. ரஹ்மான் சார் எவ்வளவு பெரிய லெஜெண்டுனு தெரியலை. வீட்டுல அம்மா அப்பாகிட்ட கிட்டத்தட்ட சண்டையே போட்டுக்கிட்டு, நான் ரஹ்மான் மியூசிக்ல பாடப் போறேன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டேன். நான் சூப்பரா படிக்கிறவள். ஸ்காலர்ஷிப்ஸ் கிடைச்சது.  நிறைய படிக்க வைக்கணும்னு கனவு கண்ட அப்பாவுக்கு என் முடிவு கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தது.
ஆனாலும், அம்மாவும் அப்பாவும் எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுத்து இந்தியா அனுப்பி வெச்சாங்க.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

இந்தியாவில் ஜிங்கிள்ஸ் பாடிக்கிட்டும் வாய்ஸ்ஓவர் கொடுத்துக்கிட்டும் என் கரியர் ஸ்டார்ட் ஆகியிருந்தது. ரியாலிட்டி ஷோஸ்ல கலந்துக்கிட்டேன். ஜிங்கிள்ஸ்ல நான் பாடிக்கிட்டிருந்தைப் பார்த்துட்டுதான் டைரக்டர் ப்ரியதர்ஷன் ‘பம்பம் போலே’ இந்திப் படத்துல வாய்ப்பு கொடுத்தார். ஒரே ராத்திரியில பாலிவுட்ல சிங்கராயிட்டேன். ஆனா, அந்தப் படம் சரியா போகலை. அதே வருஷம் கிட்டத்தட்ட 25 பாட்டுக்குமேல பாடினேன். ஒரு பாட்டும் எனக்குப் பேர் வாங்கித்தரலை. நான் அதுக்காகவெல்லாம் கவலையே படலை

ரஹ்மான் சார் மியூசிக்ல பாடணும் என்பது மட்டும்தான் என் வாழ்க்கையின் லட்சியமா இருந்தது. அந்த மேஜிக் நடக்க எனக்குப் பல வருஷங்கள் ஆனது. என் முதல் ஹிட் சாங் ரஹ்மான் சார் மியூசிக்ல நடக்கும்னு நம்பினேன். 21 வயசு ரஹ்மான் கனவு 26 வயசுலதான் நிறைவேறினது. திடீர்னு ஒருநாள் ரஹ்மான் சார் ஆபீஸ்லேருந்து அழைப்பு. ஆனா, அன்னிக்கு எனக்குப் பயங்கரமான ஜலதோஷம். தொண்டை கட்டியிருந்தது. இருமிக்கிட்டே இருந்தேன். சார் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, எனக்கு அன்னிக்கே பை சொல்லி அனுப்பியிருக்கலாம். ஆனா, ரஹ்மான் சார், ‘உடம்பு சரியானதும் தகவல் சொல்லிட்டு வாங்க’னு சொன்னார். அப்படி நடந்த அதிசயம்தான் ‘கோச்சடையான்’ படத்துல சார் மியூசிக்ல நான் பாடின ‘வாடா... வாடா...’. அதுக்குப் பிறகு சார்கூட நிறைய பாடி, நேஷனல் அவார்டு வாங்கற அளவுக்கு வளர்ந்துட்டேன். என் கனவை நனவாக்கி, என் லைஃபை ரசனையானதா மாத்தினது அந்த 21 வயசு தானே!

முதல் சம்பளம் - நடிகை ஜனனி ஐயர்

ப்ப நான் சவீதா இன்ஜினீயரிங் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ்  படிச்சிட்டிருந்தேன். முதன்முறையா கோ எட். பசங்களாலயும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும்னு அப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.  என்னுடைய ஒரு போட்டோ பத்திரிகை அட்டைப் படமா வந்தது. அதைப் பார்த்துட்டுதான் முதல் மாடலிங் வாய்ப்பு வந்தது. அந்த வருஷம் நான் காலேஜ்ல ரொம்ப பிரபலமாயிட்டேன். எல்லாருக்கும் நான் மாடலிங் பண்றது தெரிய ஆரம்பிச்சது. 21 வயசுல திடீர்னு ஓவர்நைட்டுல அத்தனை பேர் மத்தியில நாம பாப்புலராகிறது கெத்து ஃபீலிங்.

21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்

பட வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சது. ஆனா, வீட்டுல அம்மா அப்பா பயங்கர ஸ்ட்ரிக்ட். படமெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டிருந்தாங்க. எனக்கும் அந்த வயசுல சினிமாவைப் பத்தின சீரியஸான ஐடியா எதுவுமில்லை. படிக்கணும், பிளேஸ்மென்ட்டுல செலெக்ட் ஆகி 9 டு 5 வேலையில உட்காரணும்னு மட்டும்தான் நினைச்சிட்டிருந்தேன். 21 வயசுல ஒருவேளை என் வாழ்க்கையில் மாடலிங் வாய்ப்பு வராமப்போயிருந்தா, நான் நடிகையாகியிருப்பேனா தெரியாது.  ஏற்கெனவே பிளான் பண்ணினது மாதிரி எல்லாமே அமைஞ்சது. மாடலிங் மூலமாதான் எனக்கு பாலா சார் பட வாய்ப்பு கிடைச்சது. இன்னிக்கு ஜனனியா, ஒரு நடிகையா உங்க முன்னாடி பேசிட்டிருக்கேன்னா எல்லாமே 21 வயசு வாய்ப்புகள்தான். அந்த வயசுலேயே மாடலிங் பண்ணினதால எனக்கு கேமரா பயமில்லை.

21 வயசுல முதல் சம்பளத்தைக் கையில் வாங்கினதுதான் அந்த வயசின் பெஸ்ட் மெமரி. ஒரு பிரபல புடவைக்கடை விளம்பரத்துக்கு மாடலிங் பண்ணினதுக்காக 1,500 ரூபாய் சம்பளம் கிடைச்சது. ரொம்பப் பெருமையோடும் சந்தோஷத்தோடும் அந்தப் பணத்தை அம்மா அப்பாகிட்ட கொண்டு போய்க் கொடுத்தேன். வீட்டுல வேலை செய்திட்டிருந்தவங் களுடைய பையனுக்கு ட்யூஷன் ஃபீஸ் கட்டணும்னு பணம் கேட்டதாகவும், அதுக்கு இந்தப் பணத்தைக் கொடுத்துடலாமான்னும் கேட்டாங்க. அது எனக்கு இன்னும் சந்தோஷமா இருந்தது. இன்னிக்கும் நான் என் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் செலவு பண்ணிட்டிருக்கேன். இதை விளம்பரப்படுத்தறதுல எனக்கு உடன்பாடில்லை. ஆனா, 21 வயசு என் கைக்கு வந்த அந்த முதல் சம்பளமும், அம்மா அப்பாவோட எண்ணமும் நாளைக்கு வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கும்போதும் இப்படி உதவி பண்றதைத் தொடரணும்னு எனக்குள்ள பதிய வெச்சது. அதுக்காக அம்மா அப்பாவுக்கும் 21 வயசு வேலைக்கும் தேங்க்ஸ்!

- ஆர்.வைதேகி