Published:Updated:

மெய்ப்பொருள் காண் - பொச்சு

மெய்ப்பொருள் காண் - பொச்சு
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண் - பொச்சு

சி.சரவணகார்த்திகேயன்

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாகத் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாகப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாக வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக் குறிப்பது.

ஆனால், அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில‌ இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற விநோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல்.

இன்னும் கொஞ்சம் நுட்பமாக இறங்கினால், பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச் சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தம்கொண்ட ‘புச்சம்’ என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து வந்தது என்று சொல்வோருண்டு (உதா:“புச்சம் ப்ரதிஷ்டா…” - தைத்திரீய உபநிடதம்).

மெய்ப்பொருள் காண் - பொச்சு

பொதுவாக, புட்டம் என்ற அர்த்தத்தில்தான் இது மக்களிடையே வழக்கிலிருக்கிறது. குழந்தைகள் மலங்கழித்துவிட்டு வருகையில், “பொச்சு கழுவிவிடவா?” என்றுதான் கேட்பார்கள். காலையில் துயிலெழத் தாமதமானால் “பொச்சுல வெயிலடிக்கத் தூங்கறான்” என்பார்கள். எள்ளலுக்குரிய‌ அபத்தமான சூழலைப் பற்றிய பேச்சில் “பொச்சுலதான் சிரிக்கணும்” என்பார்கள். திட்டும்போது “பொச்சுலயே போடு” என்பார்கள். “பொச்சுக் கொழுப்பா?” எனக் கேட்கும் வழக்கமும் உண்டு, “சூத்துக் கொழுப்பா?” என்ற பொருளில் (உதா: பாண்டியக் கண்ணனின் ‘சலவான்’ நாவல், பக்கம் 219). “பொச்சு தேச்சுக் குளிக்கணும்”, “பொச்சு மணலைத் தட்டிவிடு”, “பொச்சு வணங்காம உக்காந்து திங்கறான்”, “பொச்சு வத்துனா தானா வருவான்” எனப் பலவாறு புழங்குகிறது.

பொறாமை மற்றும் வயிற்றெரிச்சலைக் குறிக்கின்ற‌ பொச்சரிப்பு / பொச்செரிப்புகூட இதிலிருந்து வந்திருக்கும் எனத்தோன்றுவதுண்டு. “மொச்சைக்கொட்டை தின்றாலும் பொச்செரிப்பு; மோர் விட்டுச் சாப்பிட்டாலும் பொச்செரிப்பு” என்பது சொலவடை. போன இடத்தில் கைமறதியாய் ஏதேனும் பொருளை வைத்துவிட்டு வருவதைக் கிண்டல் செய்ய, “பேண்ட இடத்துல பொச்சை வெச்சிட்டு வந்தானாம்” என்பார்கள். ‘பொச்சு’ என்பது மலங்கழித்தலுடன் தொடர்புடைய‌ பிருஷ்டத்தையே குறிக்கிறது என்பதற்கான மற்றொரு உதாரணம் இது. அதே சமயம் “முட்டையிடும் கோழிக்குத்தான் பொச்சு வலிக்கும்” என்றொரு பழமொழியும் இருக்கிறது. அது முட்டை இடுகையில் பிறப்புறுப்பு வலிப்பதைக் குறிக்கிறதா அல்லது முட்டை மீதமர்ந்து அடைகாக்கும்போது புட்டம் வலிப்பதைக் குறிக்கிறதா என்பதில் தெளிவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் (பக்கம் 2912) ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு, பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம் ஆகிய பொருள்கள் உள்ளன‌. மைரன் வின்ஸ்லோ தமிழ் - ஆங்கில அகராதி (பக்கம் 816), ஜேபி ஃபேப்ரிஷியஸ் தமிழ் - ஆங்கில அகராதி (பக்கம் 281), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (6-ம் மடலம், 3ம் பாகம், பக்கம் 143), தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தமிழ் - தமிழ் அகரமுதலி, பழநியப்பா பிரதர்ஸ் பால்ஸ் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி (பக்கம் 623) ஆகிய ஐந்திலுமே கிட்டத்தட்ட இதே அர்த்தங்களே தரப்பட்டுள்ளன. ‘பொச்சு’ என்றால் ஐரோப்பிய அகராதி (EUdict), பெண்குறி என்ற பொருளையே அளிக்கிறது. யோனியில் அமைந்துள்ள பூப்பெலும்பை (Pubis) பொச்சு எலும்பு என்றும் குறிப்பார்கள். மக்களின் பயன்பாட்டில் ஒரு பொருள் இருக்க, பண்டிதர்கள் அகராதியில், அதற்கு நேரெதிர் (அல்லது சில மிமீ தூர) பொருள் வந்தது ஆச்சர்யத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியதே!

எனக்கு இது தொடர்பாக ஓர் ஊகம் இருக்கிறது. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ நூலில் பெருமாள்முருகன் ஒரு முக்கிய‌ விஷயத்தைச் சுட்டுகிறார். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் ‘அல்குல் தைவரல்’ என்று ஓர் இடத்தில் வருகிறது. காதலனைச் சந்திக்கையில் அவனுடன் கூட விரும்பும் பெண் நாண மிகுதியால் வெளிப்படையாக அதைச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறாள். அல்குல் என்பது யோனி; தைவரல் என்பது தடவுத‌ல். ஆனால், இதற்கு உரையெழுதிய நாவலர் சோமசுந்தர பாரதி (1942) ‘அல்குல்’ என்றால் பிருஷ்டம் என்று புதுப்பொருள் சொல்கிறார். அங்கே பெண்குறி என்று குறிப்பிட்டால், தமிழ்ப் பெண் பற்றிய பிம்பம் உடைந்து, கலாசாரம் கெட்டுவிடும் என்று அதைக் காக்கும் நோக்கில் பொருளைத் திரிக்கிறார். பிறப்புறுப்பை இருப்புறுப்பு ஆக்கிவிட்டார். கம்பராமாயணம், தனிப்பாடல்கள் எனத் தமிழ் இலக்கியம் நெடுகவும் இந்தக் கத்தரி ஒப்பனை வேலை நடந்திருக்கிறது. இந்த‌ உதாரணத்தை நீட்டித்துப் பார்த்தால், ஓரிடத்தில் எப்படி ‘அல்குல்’ பிருஷ்டம் ஆனதோ அதேபோல் மற்றோர் இடத்தில்  ‘பொச்சு’ பெண்குறி ஆகி இருக்கலாம் என்பது என் துணிபு. அச்சொல் புரியாத குழப்பத்தில் அல்லது வசையாகப் பயன்படுத்துகையில் அதன் வீரியத்தைப் பெருக்கிக் காட்டும் முனைப்பில் நிகழ்ந்திருக்கலாம்.

பெண்கள், பெண்குறி தொடர்பான‌ வசைகளைத் தவிர்ப்பதைக் கவனித்திருக் கிறேன். அது சுயஅவமதிப்பு ஆகிவிடும் என்ற ப்ரஞ்ஞையாக‌ இருக்கலாம். ஆனால், ‘பொச்சு’ என்ற சொல்லை சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆக, இது இருவருக்கும் பொதுவான ஆசனப் பகுதியையே குறிக்கிறது எனலாம்.

‘பொச்சு’ என்ற சொல் பெருவாரியாய்ப் புட்டம் என்ற பொருளிலேயே பயன்படுகிறது என்று தெரிகிறது. இன்னும் சரியாய்ச் சொன்னால் பலரால் அவ்வாறுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஜனநாயகத்தை இந்த‌ விஷயத்திலாவது நாம் மதிக்க வேண்டுமல்லவா?!