
கே.என்.செந்தில், படங்கள் : ரமேஷ் கந்தசாமி
மாற்றமேயில்லாத சலிப்பூட்டும் ஒருபடித்தான நிரல்களைக்கொண்ட வழமையானதொரு நாளாகவே அது இருந்தது, வீடு திரும்பும் வரை. வீட்டினுள் நுழைந்ததுமே ஏற்கமுடியாத விசித்திரத்தைக் காண நேர்ந்ததுபோல மாறிய முகங்கள் மெழுகால் செய்யப்பட்டவையாகச் சலனமற்று என்னை உற்று நோக்கின. அது ஒருவகையான முறைப்பு போன்றும் தோன்றியது. சகஜமாகயிருக்க முயன்று சிரித்ததும், ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் சத்தம் தணிக்கப்பட்டு ‘போலீஸ் வந்து உன்னயக் கேட்டுட்டுப் போச்சு...’ என்றாள் அம்மா. அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து வேகமாக வந்த அப்பா, ‘அப்படி நீ என்ன பண்ணுன..?’ என அதட்டும் தொனியில் கேட்டுவிட்டு, தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றார். அது எதுவும் காதில் விழாமல் அம்மா சொன்ன அந்த முதல் தகவலிலேயே சிக்குண்டிருந்தேன். அதற்குள்ளாக அந்தச் சில நிமிடங்களில் மூன்று நான்கு வாழ்க்கைகளை வாழ்ந்து தீர்த்துவிட்டிருந்தேன். ஒன்றில் சிறையினுள் எவரிடமும் பேசாமல் வெறித்து அமர்ந்திருக்கிறேன். மற்றொன்றில் ‘பேர் மாறிடுச்சு... நீங்க இல்ல சார்... ஸாரி!’ எனக் காவல்துறை உயரதிகாரி மன்னிப்பு கோருகிறார். வேறொன்றில் அடி தாங்காமல் ‘எனக்கொன்னும் தெரியாது...’ எனத் திரும்பத் திரும்ப அனத்தியபடியே கிடக்கிறேன்.
அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு, நீர் கேட்டபோதும் பதற்றம் தணிந்திருக்கவில்லை. அப்போது வயிற்றில் சுரந்த அமிலத்தின் காரத்தை மட்டுப்படுத்த அபரிமிதமான அளவு தண்ணீர் குடித்தேன். அந்தக் கொள்ளளவைச் சாதாரணமான வேளையொன்றில் விழுங்கியிருந்தால் எக்கி எக்கி வாந்தியெடுத்திருக்கக்கூடும். இன்னதென்று அறியாத பயம் குடிகொண்டுவிட்டால் அசாதாரணமான தளத்திற்கு மனமும் உடலும் நகர்ந்துவிடும் போலும். உடைமாற்றாமலேயே ஸ்டேஷனுக்குச் செல்ல ஆயத்தமானதைக் கண்டு, ‘ஏதோ கேஸ்ஸுனு சொன்னாங்க...’ என அம்மா இழுத்தாள். நீண்ட பெருமூச்சுடன் ‘எதையும் உருப்படியா முழுசா காது கொடுத்துக் கேட்றாத... பாதி பாதியாச் சொல்லி என்னயப் போட்டு அழு...’ எனச் சுவரதிரக் கத்தினேன். வெளியே வந்து, உடன் அழைத்துச் செல்ல, தெரிந்த முகம் ஏதேனும் தட்டுப்படுகிறதா? என்று பார்த்தேன். இனி அவர்கள்வேறு வந்து தனியாகப் புதிய அமிலத்தைக் கரைப்பார்களே எனும் பீதியில் தனியாகவே சென்றேன்.

வீட்டிலிருந்து காவல்நிலையத்துக்கு ஒரு நிமிட நடைத்தூரம்கூட இல்லை. பத்திருபது தப்படிகளுக்குப்பின் சாலையைக் கடக்க வேண்டும், அவ்வளவே. கால்கள் பின்னின. சாலையின் இப்பக்கமாக இருந்து ஸ்டேஷனுக்குள் வெண்குழல் விளக்குகளின் அடியே நடமாடும் காக்கிகளை நோட்டமிட்டபடியே நின்றிருந்தேன். பிறகு விடுவிடுவென உள்ளே சென்று நடுக்கமில்லாத இயல்பான குரலில் அந்தப் பெண்காவலரின் பெயரைச் சொல்லி, ‘இல்லீங்களா...’ எனக் கேட்டுவிட்டு, ‘தேடீட்டு வீட்டுக்கு வந்திருந்தாங்களாம்...’ என்றேன். ‘தேடீட்டு’ என ஏன் சொன்னேன் எனப் புரியாமல் அலைபாயும் கற்பனையை நிறுத்தவும் இயலாமல் நிற்கும் என்னை ஏறிட்டு நோக்கியபின், கணினியில் கவனம் பதித்தவராக, “பாஸ்போர்ட் அப்ளை பண்ணியிருந்தீங்களா?” என்றார்.
“இல்ல சார்...”
தட்டச்சுவதை நிறுத்தித் தலைதூக்கிப் பார்த்த பிறகு, “அவங்க கிளம்பிட்டாங்க... காலைல வாங்க, பாத்துக்குவோம்.” என மீண்டும் பணியில் முனைந்தார். மறுசொல் பேசாமல் திரும்பியபோது, அனிச்சையாக மனம் உச்சரித்த பெயர் காஃப்கா. அந்த வேளையில் ‘விசாரணை’ நாவலின் நாயகனான யோசப்.க-வாக என்னை நினைத்துக்கொள்வது மகிழ்ச்சி கலந்த பீதியை அளித்தது.
அடுத்த நாள் அலுவலகத்துக்குச் செல்லாமல் ஸ்டேஷனில் காத்திருந்தேன். சாலை மறியலை ஒழுங்குபடுத்தச் சென்றவர் மதியம்போல ஆகியும் திரும்பாததால், நிலைமையைச் சொல்லி அவரது எண்ணைப் பெற்று, பேசிய பிறகு ‘இதற்குத்தானா இவ்வளவு அக்கப்போர்கள்’ எனச் சிரிப்பு வந்தது. நேற்றிலிருந்து உக்கிரமாக இருந்த நிமிடங்கள் சட்டென மடைமாறிவிட்டன. காற்றில் மிதந்துவிட முடியும் என்பதுபோல எடையற்று மிக லகுவானவாக ஆனேன். மனம் அணியும் ஒப்பனைகளை வியந்து தீராது என்று பட்டது.
மூன்று நான்கு வருடங்களுக்குமுன் நடந்த விபத்துக்கான வழக்கில் சாட்சியாளனாகச் சேர்க்கப்பட்டிருந்தேன். அதற்காகக் குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றம் செல்ல வேண்டும். தேதியை மறுமுறை கேட்டபோது, அடுத்த நாள் நேரில் வரச் சொல்லிவிட்டு, வரும்போது தெருவில் வசிக்கும் இன்னொருவரின் பெயரைச் சொல்லி அவரையும் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார். என்னைக் குழந்தையிலிருந்தே அறியும் அண்ணன் அவர். அதேபோல இருவரும் சென்று வழக்கு விபரங்கள் அடங்கிய தாளைப் பெற்று, படித்துக் கையெழுத்திட்டுக் கொடுத்து வந்தோம். வழக்கு, மன்றத்துக்கு வர இன்னும் பத்து நாள்கள் இருந்தன.
தெருக்கோவிலுக்குப் பூசாரியாக வந்து சேர்ந்தவன் சம்பத் (பெயர் மாற்றப்படவில்லை). 20 வயதேயான சிறிய பையன் என்பதால் தெருவாசிகளின் அதிகாரத்திற்குக் குறைவிருக்கவில்லை. வந்த சில வருடங்களிலேயே திருமணமும் ஆனது. தாமதமேயின்றி குழந்தையும். அவன் வயதுடைய தெருப்பையன்களோடு சீக்கிரத்திலேயே கலந்துகொண்டுவிட்டான். கோயிலின் எதிரிலிருக்கும் திண்ணையில் நடுநிசி தாண்டியும் சிரிப்பும் பேச்சுமாகக் கிடக்கும். மது அருந்தும் பழக்கமும் அவனுக்கிருந்தது. அவன் கோயிலின் சிறிய வளாகத்துக்குள் இருக்கும் ஒற்றை ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் குடிவந்தான். அது சிறிய புயலைக் கிளப்பியது. வெளியே போகச் சொல்லி அதட்டியவர்களுக்கு எதிர்நின்று பதில் சொன்னான். அவனைக் கிளப்பவைக்க ஆள்கள் செய்த முயற்சிகளையெல்லாம் லாகவமாகக் கடந்து வந்தான். கைக்குழந்தையுடன் மனைவியை ஊருக்குப் பஸ் ஏற்றிவிட்டு வந்த சில நாள்களுக்குப்பின், நண்பர்களுடன் வெளியே சென்றவன், நடு இரவில் பிரதான சாலையில் பைக்கை ஓட்டிச் சென்றபோது, எதிர்வந்த வாகனம் நிலை தடுமாறித் தூக்கி வீசியது. டிவைடரில் போய் விழுந்தவன் பலத்த அடிபட்டு இறந்தான். மறுநாள் காலைதான் விஷயம் தெருவுக்குள் நுழைந்தது.
காலையில் சென்றபோது, அவன் உடல் கிடந்த அடையாளமாக சாக்பீஸால் படம் வரையப்பட்டிருந்ததைக் கண்டேன். அவன் மீதிருந்த கசப்புகளால் தெருக்காரர்கள் சாட்சியாக மாற மறுத்துப் பின்வாங்கினர். அவனது முகம், 20 வயதுகூட நிரம்பாத மனைவி, கைக்குழந்தை என வரிசையாகக் கண்ணெதிரே வந்துசென்றனர். தயங்காமல்போய் என் பெயரை எழுதிக்கொள்ளச் சொன்னேன்.
பத்து மணிக்கும் முன்பாகவே கோர்ட்டுக்குச் செல்லும் பிரதான வாயிலில் இருவரும் காத்திருந்தோம். உண்மையில் அண்ணன் என்னிடமிருந்து விலகி நின்றிருந்தார். நேற்றே ஸ்டேஷனுக்கு அழைத்து ‘என்னென்ன கேள்வி கேட்பார்கள், அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும், தலையாட்டாமல் வாயைத் திறந்துதான் பேச வேண்டும், ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு அதை மாற்றிக்கொள்ளக் கூடாது. நன்றாகக் கேள்வியைக் கேட்ட பிறகே பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் காவலரால் அறிவுறுத்தப்பட்டோம். பதில்களை ஒரு முறை சொல்லச் சொல்லிப் பரிசோதித்தார். சரியாக மட்டுமல்ல, புதிய சொற்களைப் போட்டு (எழுத்தாளராமா…!) சொன்ன பதிலில் சிரிப்பென்று அறிய முடியாத சிரிப்பை உதிர்த்துவிட்டுப் புருவம் உயர்த்தினார். அண்ணன் திணறுவது கண்டு ‘கூட்டிக்கிட்டுப்போய் ட்ரெய்னிங் கொடுங்க...’ என்றார். மிதப்புடன் அவர் கையைப் பற்றி, ‘வாங்கண்ணா...’ என அழைத்தேன். ‘நீயென்ன பெரிய இவனா..!’ என்கிற ரீதியில் ஏறிட்டுப் பார்த்தார். அவரை மேலும் உசுப்புவதுபோல ‘டவுட்னா கேளுங்ணா...’ என்றதும், ‘வாயில நல்லா வந்துரும்... ஒழுங்கா போயிடு’ என மிரட்டுவதுபோல விரலை ஆட்டினார். ‘வந்தா துப்பிட்டு வாங்க... வெயிட் பண்றேன்...’ எனச் சிரித்தேன். ‘போடா... அவர் சொல்லும்போது தெளிவாப் புரிஞ்சுது. நீ யென்னமோ நீட்டி முழக்கி எதையெதையோ பேசுன பின்னாடி எல்லோமே மறந்துபோச்சு. இப்படிப் போட்டுக் கொழப்புறயே, என்னத்த நீ எழுதுற...படிக்கறவங்களை நெனச்சா பாவமாத்தான் இருக்கு.’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். என்னை எழுதுகிறவன் என அறிந்த ஒருசில தெருக்காரர்களில் அவரும் ஒருவர். ‘வளரத் தெரியாம வளந்துட்டு ஸ்டேஷனை மறைக்காத... தள்ளி நில்லு.’ என அங்கேயே என்னை விட்டுவிட்டு வேகமாகச் சென்றார்.
‘எப்படி மடக்கிக் கேட்டாலும் பதில்ல இருந்து மாறிடாதீங்க... கொழப்பறதுக்காகவே வேற வேற மாதிரி கேப்பாங்க இந்த வக்கீலுங்க... பயந்துக்காதீங்க... நீங்கவேற சின்ன சைஸ் ஆளா இருக்கீங்களா...சட்டுன்னு ஏமாத்தி விஷயத்தைக் கறந்துருவாங்க.” அவர் தேநீரிலிருந்து எழும் ஆவியையே உற்றுப் பார்த்தபடி ஒரு தடவை எச்சிலை விழுங்கினார். நேற்றைய கோபங்களை மறந்திருந்தார். இருண்ட முகத்துடன் இன்னும் களைகட்டத் துவங்காத கோர்ட் வளாகத்தைப் பார்த்தார். தாசில்தார் அலுவலகத்துக்கு முந்தைய அந்தக் கட்டடத்தில் ஆள்களின் நிழல்கள் அப்போதுதான் விழத்தொடங்கின.
‘ஸ்டேஷன்ல சொல்லிக் கொடுத்ததை ஒரு தடவை சொல்லுங்க பாப்போம்..’ என்றதும் முன்வரிசைப் பள்ளிச் சிறுவனைப் போல ஒப்பிக்க ஆரம்பித்தார்.
‘ண்ணா... வேற வெனையே வேண்டாம். யாரோ கத்துக்கொடுத்துச் சொல்றீங்கனு பளிச்சுனு தெரிஞ்சுரும். அப்டீயே கேஷுவலா எங்கிட்ட பேசற மாதிரி இருக்கணும்.’ அங்கிருந்து கிளம்பி விடுவதற்கான முகக்குறியோடு சாலையை வெறித்தார்.
“கையக் கட்டிக்காதீங்க. நாம எந்தத் தப்பும் செய்யல, சாட்சி சொல்லத்தான் வந்திருக்கோம்.’ என்றபின், “சொல்றதெல்லாம் காதுல விழுகுதா..?”
“பேசாம தனியாவே கோர்ட்டுக்கு வந்திருக்கலாம். அவங்களவிட நீ பேசறதுதான் பயமா இருக்கு...” என மீண்டும் கோர்ட்டையே பீதியுடன் பார்த்தார்.
அதற்குள் அலைபேசி ஒலித்தது. காவலர்தான், சென்றோம். கேஸ் கட்டுடன் நின்றிருந்தார். “பன்னெண்டு மணிக்குத்தான் கூப்பிடுவாங்க... அதுக்கு முன்னாடி மூணு நாலு கேஸ் இருக்கு... வெயிட் பண்ணுங்க.” என்றார். அதே ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அதுவரை அவிநாசி கோர்ட்டைப் பார்த்திருக்கவில்லை, அது செயல்படும் விதத்தையும். முன் நின்றவரை விலக்கி, எட்டிப் பார்த்தபோது இரு வரிசையிலும் பத்துப் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய மெஸ்போல சிறியதாகப் புழுக்கத்துடன் இருந்தது. வெளியே நின்றிருந்த வேப்பமரங்களின் காற்றுக்காகத் திறந்துவிடப்பட்டிருந்த ஜன்னல்களில் காலம் உறைந்திருந்தது. இரட்டைச் சார்பு ஓடுகள் வேயப்பட்ட பழைய பாணிக் கல்கட்டடம் அது. புதிய கற்கள் பதிக்கப்பட்ட வராந்தாவில், கைதிகளின் உறவினர்கள் தீராத விடுகதைகளின்முன் அமர்ந்திருப்பவர்களைப்போல வாய்பிளந்து நல்ல சொல் காதில்விழ வேண்டிக் காத்திருந்தார்கள். தாடி மண்டிய, கைலி கட்டிய கைதியை வெளியே கூட்டிவந்ததும், மூலையில் சுருண்டுகிடந்தவள் வால் மிதிக்கப்பட்ட நாய்போல புரண்டு எழுந்து கைக்குழந்தையை அவனை நோக்கி வீசுபவள்போலக் கொண்டுசென்று, அவன் கண்முன்னே குழந்தையைவைத்து உலுக்கினாள், அது வீறிட்டது. அவன் தலை மேலும் மேலும் குனிந்துகொண்டே சென்றது. “போம்மா அந்தாண்ட...சத்தமெல்லாம் போடக் கூடாது...’ எனக் கண்டித்த போலீஸை அவன் இறைஞ்சுவது போலப் பார்த்தான். அவர் தலையசைத்து “சீக்கிரம்...” என்றார். ஒன்றிரண்டு நிமிடங்கள் அவளுடன் பேசினான். பிறகு, பாக்கெட்டிலிருந்த பணத்தை அப்படியே அவளிடம் தந்துவிட்டு “போலாங்க சார்...” என்றான். அவனது இளகிய முகம் அழுததைக் காட்டியது. அழும் அந்தக் குழந்தையைக் கைகளில் வாங்கவேயில்லை என்பதைக் கண்டேன். வாங்கிக் கொஞ்சிவிட்டுச் சிறைக்குத்தானே போக வேண்டும். அந்த நினைவு அவனை அறுக்கக்கூடும் என்பதால் இருக்கலாம் என நினைத்தேன். இந்த நரகத்தின் காட்சிகள் எப்போது தீரும்? என்பது தெரியாமல் அண்ணனை நோக்கினேன். இறுகிய முகத்துடன் சலனமற்று கற்தூண்போல நின்றிருந்தார். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மெதுவாகத் திரும்பி, ‘பாப்பாவைப் பாக்கணும்போல இருக்கு...” என்றார்.

கேஸ் எண் படிக்கப்பட்டு உள்ளே விசாரணை போய்க்கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப்பின் அழைக்கப்பட்டேன். கூண்டில் ஏறி நின்று நீட்டிய புத்தகத்தில் பிரமாணம் செய்ததும் அதுவரை உடலிலிருந்த பலமனைத்தும் பிடுக்கப்பட்ட காற்றுபோலக் குறைந்துகொண்டே வருவதை உணர்ந்தேன். அந்தப் புழுக்கத்துக்குள்ளும் நடுங்கியது. சொல்லித் தந்திருந்தவைகள் அனைத்தும் மறப்பது போலவும் மீண்டும் நினைவுக்கு வருவதுபோலவும் மறுபடியும் நினைவிலிருந்து அழிவது போலவும் ஊசலாட்டம் காட்டிக்கொண்டிருந்தது. நீதிபதி அமர்ந்திருக்கும் விதத்தைக் கண்டதும் குள்ளமாகத்தான் இருப்பார் என்று தோன்றியது. வக்கீல் எழுந்து வருகையில் போலியாக வரவழைக்கப்பட்ட துணிச்சலுடன் மிடுக்காக நின்றேன்.
“செத்துப் போனவர யெத்தன வருஷமாத் தெரியும்..?”
“நாலஞ்சு வருஷமா...”
“தெரியுங்கறீங்களா தெரியாதுங்கறீங்களா... கம்ளீட் பண்ணுங்க!”
“நாலஞ்சு வருஷமாத் தெரியும் சார்..”
“எப்படி..?”
சொன்னேன்.
“எந்த தேதில ஆக்ஸிடன்ட் நடந்தது?”
அதையும் சரியாகவே சொல்லிவிட்டேன்.
“அப்பவே அங்க போயிட்டீங்களா?”
“இல்ல... காலையிலதான் போனேன்.”
நீதிபதி வக்கீலை நோக்கிச் சிரித்தார். அவரும் புன்முறுவலை அவருக்கு வழங்கிவிட்டு,
“எங்க வச்சு ரிப்போர்ட்ல கையெழுத்துப் போட்டீங்க...”
“ஸ்பாட்லதான்..”
“அது எப்படி, காலைல நீங்க போனப்ப அங்க யாராவது இருந்தாங்களா?”
என்ன சொல்வதென்று தெரியாமல், காவலரை மெதுவாகத் தலைதூக்கிப் பார்த்தேன். எரியும் குழம்புபோல நின்று முறைத்துக் கொண்டிருந்தார். “ஐய்ய்யோ... ஏதோ சொதப்பிட்டேன் போலிருக்கே...”
“சார் மறந்துட்டேன். நைட்டே அங்க போயிட்டேன். அந்த வரைபடம் எல்லாம் கண்முன்னாடிதான் போட்டாங்க. அங்கேயே சைனும் பண்ணிட்டேன்.”
“ஸ்பாடுக்கு லேட்டாத்தான் போனேன்னு எழுதின பேப்பர்ல கையெழுத்துப் போட்டிருக்கீங்களே... எது உண்மை?”
எப்போ போட்டேன்.? எந்தப் பேப்பர்? ஒன்றுமே விளங்கவில்லை.
“ஸ்டேஷன்ல வச்சு எழுதின ரிப்போர்ட்ல ஸ்டேஷன்ல வச்சே படிச்சுப் பார்த்து கையெழுத்துப் போட்டீங்க... கரெக்டா?”
“அதாவது சார்... ஆக்ஸிடன்ட்னு கேள்விப்பட்டதுமே போயிட்டேன். ரிப்போர்ட் எல்லாம் அங்க வச்சுதான் எழுதினாங்க...”
“அப்ப கையெழுத்து ஸ்டேஷன்ல வச்சு போட்டீங்க...”
“ஆமா சார்... ஆமா சார்...”
“சரி நீங்க போங்க...”
வெளியே வந்தேன். ஓரளவுக்குச் சரியாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. இனி எந்த கேஸுக்கு என்றாலும் தாராளமாகச் சாட்சி சொல்லிவிடலாம் எனத் தெம்பு வந்துவிட்டது. நன்றாகச் சொல்லித் தந்த போலீஸ்காரரைப் பார்த்துக் கைக்குலுக்கி விட்டுத்தான் போக வேண்டும்.
அண்ணனும் சாட்சி சொல்லி முடித்துவிட்டு வெளியே வந்தார். கூடவே காவலரும். குலுக்குவதற்காகக் கை நீட்டியபடியே சென்றேன்.
“என்ன சார் அவ்வளவு தூரம் சொல்லிக் கொடுத்தும் இப்படிப் பண்ணீட்டீங்க...?”
திகைத்து, “ஏன் சார்...”
“இப்படிப் பேசுங்கன்னு சொன்னதைப் பூராவும் ஆப்போஸிட்டா சொல்லியிருக்கீங்க...”
அவரது முதுகுக்குப் பின்னால் அண்ணன் குதித்துச் சிரித்துக்கொண்டிருந்தார்.
“தலையத் தலைய ஆட்டினீங்களே சார்...இவரப் பாருங்க, எக்குத்தப்பா சொல்லிடுவாருன்னு இருந்தேன். கரெக்டா நூல் அளவுகூட மாத்தாம சொல்லிட்டாரு.”
மிகவும் தயங்கி “சார் கேஸ் ஜெயிக்குமா?” எனக் கேட்டுவிட்டு மணலைக் கால்களால் கிளறினேன்.
“ஆமா... இந்த மாதிரி சாட்சி சொன்னா…” என்ற பிறகு ஒருமாதிரியாகப் பார்த்தார்.
‘உண்மையிலயே நீ படிச்சிருக்கியா...ஏதாவது தலையில இருக்கா..?’ என்பதுதான் அதன் பொருள்.
“சார்... இவரு எழுத்தாளருங்க. கதையெல்லாம் எழுதுவாரு.”
சற்று தூரம் போனவர் திரும்பி வந்து, ‘எதுக்கு இப்படி வளந்து வச்சிருக்கற’ என்பதுபோல தலையிலிருந்து கால் வரை ஒரு தடவை பார்த்தார். பிறகு, தலையைத் தூக்கி “அதையாவது சரியா எழுதுவீங்களா..? இல்ல இந்த மாதிரிதான் குழப்பி வைப்பீங்களா..!” என்றார்.