சினிமா
Published:Updated:

நீளும் பயணம்! - சிறுகதை

நீளும் பயணம்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
நீளும் பயணம்! - சிறுகதை

ஹேமி க்ரிஷ் - ஓவியங்கள்: ஸ்யாம்

ரவு 10 மணியாகிவிட்டது. வெளியே ஆங்காங்கே பட்டாசுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தேவேந்திரன், சேகருக்காகக் காத்துக்கொண்டிருந்தான். 

நீளும் பயணம்! - சிறுகதை

``டிக்கெட் புக் பண்ணிட்டியா? இல்லல்ல... நாம சேர்ந்தே போலாம். இன்னும் ஒரு இடத்துலதான் கலெக்‌ஷன் பாக்கி. முடிச்சுட்டு வந்துடுறேன். 10 மணிக்கு பஸ் ஏறிடலாம்” என்று சேகர் சொன்னதால் இவன் புறப்பாடு தாமதமாகிக்கொண்டிருந்தது.

ஊரைவிட்டு வந்து நான்கு நாள்கள் ஆகிவிட்டன. திருவனந்தபுரம், கன்னியாகுமரி எனத் தன் வேலைகளை முடித்து இன்று காலையில்தான் நாகர்கோவில் வந்து சேர்ந்தான். மீனாட்சிபுரத்தில் அறை. `குழந்தைகள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்? நல்லவேளை போன வாரமே குழந்தைகளுக்கும் மைதிலிக்கும் துணி எடுத்தாயிற்று. இல்லையென்றால், நாளை தீபாவளியை வைத்துகொண்டு இன்றென்ன செய்ய?’ என அவனது மன ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தபோது சேகரிடமிருந்து அழைப்பு வந்தது.

``இன்னும் காரியம் முடியல. அந்தாளு இன்னும் வரலை. காத்துட்டுதான் இருக்கேன். நீ வேணா கிளம்பு. நான் கிளம்ப இன்னும் டைமாகும்னு நினைக்கிறேன்” எனக் கூறினான்.

தேவேந்திரனுக்கு எரிச்சலாக இருந்தது. முதலிலேயே கிளம்பியிருக்கலாம். மூணு லட்சம் ரூபாய் சரக்கு. யாராவது உடன் இருந்தால் பாதுகாப்பு என்றுதான் சேகருக்காகக் காத்துக்கொண்டிருந்தான். விடிந்தால் தீபாவளி வேறு. கூட்டம் அதிகமாக இருக்கும். பேருந்து கிடைக்குமா? பாதுகாப்போடு செல்லவேண்டுமே என்ற பயம் உண்டானது.

ஒரு லட்சம் ரூபாய் பணப்பையை மேலும் ஒரு மஞ்சள் பையில் போட்டு உள் டிராயரில் வைத்துக்கொண்டான். ரெண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி உள்ள பையைத் தனது துணிப்பையில் துணிகளுக்கு அடியில் வைத்தான். பண்டிகை நேரம் என்பதால், என்றைக்குமில்லாமல் அன்று சற்றுப் பதற்றமாக இருந்தது.

பட்டாசு வைத்திருக்கிறார்களா என, பேருந்தில் போலீஸ் சில சமயம் பரிசோதிப்பதுண்டு. அப்படி இவனையும் செய்தால் அவ்ளோதான், எல்லாம் முடிந்துவிடும்.

கள்ளத்தனத்தின் வெளிப்பாட்டில்தான் இந்த பயம் அவனுக்கு. தேவேந்திரன், அறையை உடனே காலிசெய்து புறப்பட்டான்.

வெளியே லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. ஆங்காங்கே பட்டாசுகள் நமத்து ஈனஸ்வரத்தில் வெடித்தன. மீனாட்சிபுரத்திலிருந்து நாகர்கோவில் பேருந்துநிலையம் வந்தான். எல்லாப் பேருந்துகளும் நிரம்பி வழிந்தன. பேருந்துநிலையத்தில் கால் வைக்க இடமில்லாத அளவுக்கு சகதியாக இருந்தது. ஈரத்தில் நைந்த குப்பைகளும், மூத்திர துர்நாற்றமும் சேர்ந்து ஈரம் சுமந்த காற்றைப் பாழ்படுத்திக்கொண்டிருந்தன. நேரடி பேருந்து கிடைக்காது. மதுரை செல்ல வேண்டும்.

`திருநெல்வேலி வரை வண்டி கிடைத்தால்கூடப் போதும். அங்கிருந்து மதுரைக்கு வண்டி நிறைய கிடைக்கும். மதுரையில இருந்து சேலம் போயிடலாம்’ எனக் கணக்குபோட்டான்.

பேருந்துநிலையத்துக்குள் திருநெல்வேலி பெயர்ப்பலகை தாங்கிய ஒரு பேருந்து நுழைந்ததும் எல்லோரும் அதை நோக்கிக் குவியத் தொடங்கினர். இவனுக்கு நிற்பதற்கு இடம் கிடைத்தது. கூட்டம் நெருக்கித் தள்ளியது. பொருளையும் பணத்தையும் பத்திரப்படுத்தவேண்டுமே என்ற கவலை அவனைச் சூழ்ந்தது. முக்கியமாக, பேன்ட் பாக்கெட்டை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவனுக்கு அப்படித்தான் ஒருமுறை அனுபவம் ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது விடுமுறைக்காக ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அவன் பேருந்தில் ஏறும்போது ஒரு பெருங்கும்பல் ஒன்று அவன் பின்னே ஏறத் தொடங்கியது.

அவன் ஏறிய பிறகு சாதாரணமாகப் பின்னாடி பார்த்தால் ஓரிருவர் தவிர யாரும் ஏறவில்லை. படிக்கட்டுகள் காலியாக இருந்தன. அவ்வளவு கும்பல் ஏறியதே எனக் குழப்பத்துடன் சீட்டில் அமர்ந்துவிட்டான். கண்டெக்டர் வரும்போது, டிக்கெட் எடுக்க பேன்ட் பாக்கெட்டில் கை விட்டபோதுதான் பார்த்தான், தனது பேன்ட்டின் பின்பக்கம் முழுவதும் கிழிக்கப்பட்டு, அவனுடைய பர்ஸ் களவாடப்பட்டதை. ஒரு மாதச் சம்பளம் பர்ஸில் வைத்திருந்தான். அவனுடைய மனைவி மைதிலி திட்டித்தீர்த்தாள்.

`இப்படி கொஞ்சம்கூட சாமர்த்தியமில்லாத மனுஷனை வெச்சுக்கிட்டு எப்படி இந்தப் புள்ளைக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேனோ!’ என இரண்டே வயதான குழந்தையின் அடுத்த 20 வயதுத் திட்டத்தை நினைத்து வருத்தப்பட்டாள். அவனுக்குச் சோறு இறங்கவில்லை; பல நாள் மனவருத்தத்திலேயே இருந்தான். ஆனால் இப்போது, லட்சம் மதிப்புள்ள பொருளையும் பணத்தையும் தன்னை நம்பி முதலாளி கொடுப்பதால், அவரின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே அவனை எப்போதும் தின்றுகொண்டிருந்தது.

அதிக பொதியைச் சிரமப்பட்டு இழுக்கும் மாட்டைப்போல், பேருந்து வேகம் பிடிக்க மறுத்தது. போதாதற்கு இந்த வண்டி மிகவும் ஓட்டை உடைசலாக இருந்தது. கையை அவ்வப்போது மாற்றி மாற்றி கம்பியைப் பிடித்துக்கொண்டே சற்று சிரமப்பட்டே வந்தான். எப்போதும் தனியார் பேருந்தில் வருவான். அதற்கு முதலாளியே பணம் கொடுத்துவிடுவார். ஆனால், பண்டிகைக் காலம் என்பதால் எல்லாப் பேருந்துகளும் முன்னரே பதிவாகிப்போனது. அதனால்தான் இன்று அரசுப் பேருந்தில் வருகிற நிலைமை. இரவு 1 மணிக்குப் பக்கமாக திருநெல்வேலியை அடைந்தது அந்தப் பேருந்து. இறங்கும்போது தனது துணிப்பையைக் கெட்டியாகப் பிடித்தபடி இறங்கினான். கைகள் சுளுக்கியதுபோல் ஒரு வலி.

மதுரை வண்டிகள் நிற்கும் இடத்தை நோக்கி ஓடினான். அப்போதுதான் கிளம்ப ஆரம்பித்திருக்கும் ஒரு வண்டியில் படி வரை கூட்டம் வழிந்தது. பயணிகளின் சலசலப்புடன், பேருந்தில் ஒலித்த பாடலும் சேர்ந்துகொண்டது. ``யய்ய... கால மிதிக்காதீக” என வண்டிக்குள் யாரோ ஒரு பெண்மணியின் எரிச்சல் குரல். ``அதுக்குத் தனிவண்டி புடிச்சுப் போகவேண்டியதுதான... பஸ்ல எதுக்கு வர்ற?’’ என ஒரு பதில் குரல் ஒலிக்கும்போது, அந்த வண்டி முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்த வண்டிக்கு அடுத்து கிளம்பப் போகும் பேருந்தில் ஏறுவதற்கு எல்லாரும் தயாராக இருந்தார்கள்.

``இந்த வண்டி எப்ப கிளம்புங்ணா?” என நடத்துநரிடம் கேட்டான்.

``1:30 மணிக்கு’’ என்று எங்கேயோ பார்த்தபடி சொன்னார். எல்லோரிடமும் சொல்லிச் சலித்திருப்பார்போல.

``ஏறிக்கலாங்களா?’’

``இன்னும் பத்து நிமிஷம் கழிச்சுதான்” என, கைக்கடிகாரத்தைப் பார்த்த பிறகு சொன்னார்.

அவனுக்குக் கண்கள் எரிந்தன. இன்னும் மூணு மணி நேரப் பயணம் செய்தால்தான் மதுரையே செல்ல முடியும். அர்த்தராத்திரியிலும் சுடச்சுட ஆவி பறக்கக் கடலை விற்றுக்கொண்டிருந்தார் தள்ளுவண்டிக்காரர். கூடை கூடையாய் பலரும் ஒவ்வொரு பேருந்தாய் ஏறி விற்று இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

`ஒரு தேநீர் அருந்தி வரலாம்’ என ஒரு கடையை நோக்கி நடந்தான். தங்களை உயிர்ப்பித்துக்கொள்ள ஏறக்குறைய எல்லாக் கடைகளிலும் இளையராஜா தேவைப்பட்டார்.

அந்தப் பேருந்தில் ஏற அனுமதி கிடைத்ததும் எல்லோரும் சுறுசுறுவென ஏறினார்கள். நல்லவேளையாக அவனுக்கு இருக்கை கிடைத்தது. ஜன்னல் அருகில் வசதியாக அமர்ந்தான். இரு கால்களுக்கு இடையில் தனது பையைக் கிடத்தி கால்களால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லா இருக்கைகளும் அமரப்பட்டுவிட்டன. இத்தனை பேர் எங்கு இருந்தார்கள்? இன்னும் சிலர் அவசரமாய் ஏறி கண்களால் இருக்கையைத் துழாவினர். அவர்களின் கண்கள் மிகவும் களைத்திருந்தன, சிவந்திருந்தன, அவனைப்போலவே.

ஆறேழு வயதுடைய குழந்தையை ஒரு கையால் பற்றியபடி, இடுப்பில் வெள்ளை நிற உறைசாக்கு மூட்டையை வைத்துக்கொண்டு ஒருத்தி ஏறினாள். அழுததுபோல் கண்கள் வீங்கி இருந்தன. மூட்டையைக் கீழே வைத்து அதன் மேல் குழந்தையை அமரச் செய்த பிறகு, அருகில் இருந்த கம்பியில் சாய்ந்து கொண்டாள். வதங்கிய மலர்போன்று இருந்தாள் அந்தப் பெண். இந்த நடுநிசியில் குழந்தையையும் பெரிய மூட்டையையும் சுமந்து வருகிறாள் என்றால், வாழ்க்கையில் எத்தனை சவால்களை மௌனமாக அவள் கடந்து கொண்டிருக்கிறாள் என தேவேந்திரனுக்குத் தோன்றியது. `இப்படியெல்லாம் தன் மனைவிக்கு எந்தவிதக் கஷ்டமும் தரவில்லையே. பிறகு ஏன் அவளுக்கு எப்போதும் ஒரு சலிப்பு?’ என நினைத்தான். வியர்வை கலந்த மனிதர்களின் வாசனையோடு அடுத்த சில நிமிடத்தில் வண்டி புறப்பட்டது. நாகர்கோவிலிலிருந்து வந்த வண்டியைப்போல் மோசமில்லை. அதுவும் பைபாஸ் வண்டி என்பதால் ஓரளவு வேகத்துடனே கிளம்பியது.

நல்ல வேகத்தில் அடித்த காற்றில் புறவழிச்சாலை வந்தபோது அவனை அறியாமலேயே கண்கள் சொக்கின. தேவேந்திரன், அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தான். வறண்ட பரட்டைத் தலைமுடி. அழுக்கு வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார். குடித்த வாடை லேசாக அடித்தது. கண்கள் சிவப்பேறி இருந்தன. அவனுக்கு அவரைப் பார்த்து நல்ல அபிமானம் வரவில்லை. `இரவு முழுவதும் பையைப் பத்திரமாகக் கொண்டு வர வேண்டுமே!’ என, கவலை உண்டானது. உடல் அசதியால் தன்னையும் அறியாமல் தூங்கிக்கொண்டு வந்தான்.

அவ்வப்போது திடுக்கிட்டு விழித்து தன் பையின் பத்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டான். சில இடங்களில் நல்ல மழைபோல. ஜன்னல் கதவை மூடிய பிறகும் அவனை நனைத்தது. ஜன்னலின் மேலிருந்து நீர் ஒழுகி இருக்கையையும் அவனையும் நனைத்தது. உள் டிராயரில் உள்ள பணம் நனைந்துவிடும் என, அருகில் இருந்தவரை எழுப்பி சற்றுத் தள்ளி அமரச் சொன்னான்.

அவர் மறுபக்கத்தில் பார்த்துவிட்டு, ``இதுக்கு மேல நகந்தா நான் கீழதான் விழணும்” என்று மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார். அவன் என்ன செய்வதெனப் பார்த்தான். அவர் தூங்கிவிட்டார் என்பதை உறுதிசெய்த பிறகு, தன்னுடைய உள் டிராயரிலிருந்து பணத்தை எடுத்து துணிப்பையின் அடியில் வைத்து மூடினான். `அவர் பார்த்துவிட்டாரா?’ என மறுபடியும் அவரை ஏறிட்டான். பேருந்தில் மங்கிய வெளிச்சம் இருந்ததால் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என அவனே சமாதானம் செய்துகொண்டான். அவனது இடதுபக்கம் முழுவதும் நனைந்திருந்தது. வண்டி வேகமெடுக்கும்போது ஜன்னலின் இடுக்கிலிருந்து குளிர் கசிந்தது. ஈரத்தால் தூக்கம் முற்றிலும் கலைந்தது. வெளியே மழை இல்லாததால் மீண்டும் ஜன்னல் கதவைச் சிறிது திறந்தான். மழை வந்து நின்ற ஈர வாசனை அடித்தது. நல்ல காற்று, எந்த ஊர் வந்திருக்கிறது எனத் தெரியவில்லை. இருள் அப்பியிருந்த இடத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான்.

குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதுபோல் ஆரம்பித்த தனது வாழ்க்கை, இப்போது ஊர் ஊராய்த் திரிவதில் தொடர்கிறது. சேலத்தில் வெள்ளிப் பட்டறையில் வேலைக்குச் சேரும்போது தேவேந்திரனுக்கு எதுவும் தெரியாது. சற்றும் சூதுவாது தெரியாமல் வளர்ந்தவன். இதனாலேயே தன் மனைவியிடம் எப்போதும் திட்டுவாங்கிக்கொண்டிருப்பவன். திருவண்ணாமலையில் அரசு பராமரிப்பில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு தொழிற்சாலையில் வேலைசெய்யும் வரை, எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தன. திடீரென தொழிற்சாலையில் நடந்த ஆள் குறைப்பில் வேலையை இழந்த ஆயிரக்கணக்கானோரில் இவனும் ஒருவன். குழந்தைகுட்டியுடன் தனது சொந்த ஊரான சேலத்துக்கே வந்துவிட்டான். சார்லஸ் அண்ணாதான் இவனை இந்த வெள்ளிப் பட்டறையில் சேர்த்துவிட்டார்.

ஆரம்பத்தில் சில மாதம் வரை எடுபிடியாக வேலைசெய்ய ஆரம்பித்தான். திடீரென, லைனுக்கு அவனையும் போகச் சொன்னார் முதலாளி. முதன்முறை அவன் போனபோது சந்திரனுடன் சேர்ந்து போனான்.

``வேலைக்கு எப்போ சேர்ந்த?’’

``அஞ்சு மாசமாச்சுண்ணே.”

சந்திரன் லேசான முறைப்புடன் நம்ப முடியாமல் பார்த்தார்.

``அதுக்குள்ள லைனுக்கு வந்துட்டியா? பரவாயில்லப்பா. முதலாளி அவ்ளோ சீக்கிரம் யாரையும் அனுப்ப மாட்டாரே. நானே, சேர்ந்து ரெண்டு வருஷம் கழிச்சுதான் லைனுக்கு வந்தேன். உன்மேல நம்பிக்கை வெச்சிருக்கார்போல. பார்த்து கவனமா வேலை செய்” என்று அறிவுரை கூறினார்.

திருவனந்தபுரமும், அதைச் சுற்றி உள்ள இடங்களும்தான் வெள்ளிப் பரிமாற்றம் நடக்கும் இடங்கள். மாதம் ஒருமுறை செல்லவேண்டிய சூழ்நிலை வரும். முதல் இரண்டுமுறை அவன் மற்றவர்களுடன் சென்றபோது கைபிடித்து ஊர் உலகத்தைப் பார்க்கும் குழந்தையின் மனநிலையில்தான் சென்று வந்தான். அதன் பிறகு மூன்றாவது முறை தனியாகச் சென்றபோதுதான் அவனுக்கு விஷயமே விளங்கியது.

வெள்ளியைக் கொடுத்த புரோக்கர் ஒருவர் ``என்னப்பா, இப்படி சாதாரணமா கொண்டுபோற? போலீஸ் பார்த்தா உள்ள போட்ருவாங்க..!’’

``ஏண்ணே?”

``ஏனா... உன் முதலாளி ஒண்ணும் சொல்லலையா? இதெல்லாம் லீகலா கொண்டுபோறதில்ல. தெரியாதா? இதெல்லாம் தெரியாமயா உன்னை லைனுக்கு அனுப்புனார்?’’ என்றான்.

இவன் எங்கே வேலை போய்விடுமோ என பயந்து ``இல்லைண்ணே. எனக்குத் தெரியும். பத்திரமாத்தான் கொண்டுபோவேன். ஏற்கெனவே சொல்லிருக்காங்க” என்று சொல்லிச் சமாளித்தான். இருந்தாலும் உள்ளுக்குள் உதறல். எப்படியோ அவன் வெள்ளியையும் பணத்தையும் பாதுகாப்போடு கொண்டுவந்து சேர்த்ததும்தான் தன்மேல் நம்பிக்கையே அவனுக்கு வந்தது. இப்போது செல்வது பழகிவிட்டது என்றாலும், ஊர் வந்து சேரும் வரை பயந்தபடிதான் வந்து போய்க்கொண்டிருக்கிறான்.

மைதிலி, அவனுக்கு அப்படியே எதிர். அவன் தரும் சம்பளத்தில் சீட்டு கட்டி, தேவையான பொருள் வாங்கி, சிக்கனமாகவும் சாமர்த்தியமாகவும் குடும்பத்தைக் கொஞ்சமும் சிரமமில்லாமல் பார்த்துக்கொண்டாள். இவனைத் திட்டிக்கொண்டேதான் எல்லாவற்றையும் செய்வாள்.

``இவரையெல்லாம் நம்பி பிரயோஜனமில்லை. கொஞ்சமாவது சாமர்த்தியம் உண்டா மனுஷனுக்கு. எல்லாம் நான்தான் பார்த்துக்கணும்’’ என்று பேச்சுக்கிடையில் முத்தாய்ப்பாகச் சொல்லாவிட்டால், இவளுக்கு அந்தச் சம்பாஷணைகள் நிறைவுறாது என்பதைப் பலமுறை கண்டுணர்ந்தான். அப்போது அவனுக்கு வராத சாமர்த்தியத்தை, வாழ்க்கை இப்போது வலுக்கட்டாயமாகக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தது.

அவனுக்கு நேரம் செல்லச் செல்ல மெதுவாய் தூக்கம் சொக்கிற்று. எவ்வளவு நேரம் தூங்கினான் எனத் தெரியவில்லை. திடுக்கிட்டு எழும்போது, பேருந்து நின்றுகொண்டிருந்தது; விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பேருந்து பாதிக்கும்மேல் காலியாக இருந்தது. அவன் அருகில் இருந்தவரும் இல்லை. பதறியடித்து தன்னுடைய பை இருக்கிறதா எனப் பார்த்தான். கால்களுக்கு இடையில் துவண்டு கிடந்த பையைப் பார்த்ததும்தான் அவனுக்கு உயிரே வந்தது. மோட்டலில் வண்டி நின்ற மாதிரி தெரியவில்லை. அந்தப் பெண் ஏறியபோது எங்கு நின்றாளோ அதே இடத்தில் அப்படியே நின்றுகொண்டு மலங்க மலங்க என்ன செய்வதென விழித்துக்கொண்டிருந்தாள். மூட்டையில் அமர்ந்திருந்த அந்தக் குழந்தை, தன் அம்மாவின் மீது சாய்ந்தபடி திவ்யமாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

`எந்த ஊர்?’ என ஜன்னல் வழியாகப் பார்த்தான். இருட்டாகத் தெரிந்தது. எல்லோரும் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். மணி 3-ஐத் தொட்டுக்கொண்டிருந்தது. ``என்னாயிற்று?’’ என இறங்கிக் கேட்டான்.

``ஏதோ பஸ்ல எவனோ கண்டக்டரை அடிச்சுட்டானாம். அதனால எந்த வண்டியும் போகக் கூடாதுன்னு வர்ற வண்டியயெல்லாம் புடிச்சு நிறுத்திட்டிருக்காங்க. போலீஸ் வர்ற வரைக்கும் காத்துட்டிருக்கணும்’’ என்றார் எரிச்சலுடன்.

`இதென்னடா இது... நமக்குன்னு மட்டும் எல்லாம் வந்து சேருதே. இதுநாள் வரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே’ என மனதுக்குள் கலங்கினான். அவன் பயம் அவனையும் மீறி வெளியே தெரிந்தது. ஏற்கெனவே இருந்த அலைச்சல், தூக்கமின்மையோடு இந்தப் பிரச்னையும் சேர்த்து கால்களை மேலும் பலவீனமாக்கி, உதறலைத் தந்தது.

`இதெல்லாம் ஒரு பிரச்னையா? இவ்ளோ பஸ், இத்தனை பேரு இருக்கிறப்போ... நம்மள மட்டும் வந்து அதுவும் இருட்டுல வந்து கண்டுபிடிச்சு நம்ம பையை சோதனை பண்ணுவாங்களா?’ என மனம் வாதம் செய்தது.

`சொல்ல முடியாது... நமக்குன்னு வாய்க்கிறது அப்படி. நேரம் நல்லா இல்லைன்னா, வீட்டுத் திண்ணையில சிவனேனு உட்காந்திருந்தாகூட சனி வந்து காலை இழுத்து வெளியே போடும்’ என்று அவனின் பாட்டி அடிக்கடி கூறுவதும் நினைவுக்கு வந்துதொலைத்தது.

இது எந்த ஊர் எனக் கேட்டு விசாரித்துக்கொண்டான். கிட்டத்தட்ட மதுரையை நெருங்கும் நேரம். `என்ன சோதனை இது?’ என நொந்துகொண்டான். இங்கிருந்து யாராவது இரு சக்கரம் அல்லது டெம்போ போன்ற வாகனம் வந்தால் தொற்றிக்கொள்ளலாம் என, பேருந்துகளை விட்டு விலகி நின்றான். அதற்குள் ஒன்றன்பின் ஒன்று எனப் பேருந்துகள் நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கின.

தீபாவளி என்பதால் வாகனங்கள் அந்தச் சமயத்திலும் வந்து போய்க்கொண்டிருந்தன. அவ்வப்போது வரும் இரு சக்கர வாகனங்களை மறித்தான். எதுவும் நிற்கவில்லை. முன்பின் தெரியாதவர்களுக்கு, அதுவும் இந்த நேரத்தில் யார் உதவி செய்வார்கள்? 

நீளும் பயணம்! - சிறுகதை

இரு சக்கர வாகனம் ஒன்றில் முன்பக்கம் ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு தூரத்தில் ஒருவர் வந்துகொண்டிருந்தார். இவன் அவசரம் என்பதுபோல் கை காட்டினான். மெதுவாய் வந்து நின்றது.

``டவுனுக்குப் போறீங்களா?’’

அவர் நின்றுகொண்டிருந்த வண்டிகளைப் பின்வரை பார்த்துவிட்டு... ``ஆமா” என்றார்.

``கொஞ்சம் என்னையும் ஏத்திக்கிறீங்களா? நான் சேலம் போகணும். ரொம்ப அவசரம்” என்றதும் பின் இருக்கையைக் காண்பித்து அமரச் சொன்னார்.

 தேவேந்திரனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவசரமாய் பையை மார்பில் அணைத்தபடி அமர்ந்துகொண்டான். அந்தப் பேருந்துக் களேபரத்தைத் தாண்டி அந்த இரு சக்கர வாகனம் மெதுவாய்ப் பயணித்தபோது தேவேந்திரன் பெருமூச்சு விட்டான். பயத்திலிருந்து விடுபட்டும் நேரம் இன்னும் சற்றுக் கூடுதலான நடுக்கத்தைத் தந்தது. சிறுநீர் கழிக்க வேண்டும் எனத் தோன்றியது. அப்போதுதான் நினைவுக்குவந்தது, மாலையிலிருந்து உண்டான களேபரத்தில் தான் சிறுநீர் கழிக்கவில்லை என்று.
 
``நான் திருமங்கலம் வரைக்கும்தான் போவேன் தம்பி” என்றார்.

``பரவாயில்லைங்ணா. அங்கிருந்து பஸ் ஸ்டேண்டுக்குப் போயிக்கிறேன்” என்று சொன்னேன்.

``என்ன இப்படி வண்டிகளப் போட்டுட்டாக... என்னாச்சு?”

``எவனோ விளங்காதவன் கண்டக்டர அடிச்சுட்டு, இருக்கிறவங்க உசுர வாங்கிட்டிருக்கான். பஸ்ஸெல்லாம் போகாத மாதிரி நிக்கவெச்சுட்டாங்க. போலீஸ் வரணும்போல” என்று களைத்துச் சொன்னான்.

``என்னமோ சண்டித்தனம் பண்ணுதாக...” என்றபடி அவர் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார்.

ஈரக்காற்று முகத்தில் பட்டுத் தெறித்தபடி வந்தது. குளிர், லேசாக அவனைக் குத்தியது. `என்ன பொழப்புடா... எந்த நேரத்துல கிளம்பினோம்?’ என்று வேதனைப்பட்டான். அரை மணி நேரத்தில் மதுரையை நெருங்கும் சுவடு தெரிந்தது.

திருமங்கலம் வந்ததும் வண்டியை அவர் மெதுவாக நிறுத்த முற்பட்டபோது ஒரு கல் இடறி, முன் வைத்திருந்த மூட்டையின் பாரம் தாங்காமல் வண்டி சமநிலை இழந்து கீழே விழுந்தது.

தேவேந்திரன் காலின்மேல் விழுந்த வண்டியின் சைலன்ஸர் அவன் காலை நன்றாகப் பதம்பார்த்தது, ``ஆஆ...” என்று அலறினான். அந்த வாகன ஓட்டியும் சமாளித்து வண்டியை மேலே தூக்கினார். தேவந்திரனின் கால் நன்றாகப் பழுத்திருந்தது.

``ஐயோ... நல்லா பழுத்திருச்சே. வலிக்குதா? ஏதாவது மருந்து வாங்கி வெச்சுட்டுப் போறீகளா?’’ என்று கேட்டார்.

``இல்லைங்ணா. பரவாயில்ல. நேரமாயிடும். நான் பாத்துக்கிறேன்” என்று வலியுடன் சொன்னான்.

`கூட்டிவந்து சேர்த்ததற்கு நன்றி சொல்வதா? இப்படி காலைப் பழுக்கவைத்ததற்கு வருத்தம் அடைவதா?’ என இருவருமே எதுவும் சொல்ல முடியாத நிலை.

இருப்பினும், தேவந்திரன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான். அவர், மூட்டையை இன்னொருவர் உதவியுடன் வைத்துக்கொண்டு வேறெங்கோ பயணப்பட்டார்.

அவன் அங்கிருந்து பேருந்து பிடித்து ஒருவழியாக மதுரைப் பேருந்துநிலையத்துக்கு வந்தடைந்தான். எப்போதும்போலவே பரபரப்பாக இருந்தது. அவன் கட்டணக் கழிவறைக்குச் சென்றுவிட்டு சூடாகத் தேநீர் அருந்தினான். ஏதோ ஒரு கடையில் `நீயல்லால் தெய்வமில்லை...’ என்ற முருகன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சேலம் வண்டிகள் நிற்கும் இடத்தில் புறப்படவிருக்கும் பேருந்தைப் பார்த்து ஏறிக்கொண்டான்.

நேற்று இரவு வரை கூட்டம் மிகுதியாக இருந்திருக்கும். இன்று பெரிதாக இல்லை. எப்படியும் நாலு மணி நேரம் ஆகும். அவன் பையை நெஞ்சின்மேல் வைத்து கைகளால் இறுக அணைத்துக்கொண்டான்.

வண்டி புறப்பட்ட சில நிமிடத்தில் வாயைத் திறந்தபடி தூங்க ஆரம்பித்தான். அவனுக்கு அவ்வளவு களைப்பு. கண் மூடித் திறக்கும்போது, திண்டுக்கல் வந்திருந்தது. `இப்பதானே கண் மூடினோம்’ என அவன் வியந்தான். அவன் ஊர் வந்தபோது மணி 10-ஐ நெருங்கியது.

நேராக அவனுடைய முதலாளியைப் பார்த்து பணத்தையும் சரக்கையும் ஒப்படைத்தான். அவர், அவனுக்கு தீபாவளி இனாமாக சில ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். அவனுக்கு அந்தப் பணம் அவனுடைய நேற்றைய சங்கடங்களைக் கழுவிச் சுத்தம் செய்ததுபோல் இருந்தது. முகம் மலர்ச்சியாய் வீட்டுக்குச் சென்றான்.

அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் மைதிலி முகத்தை அமிலம் பட்டதுபோல் எரிச்சலாக வைத்துக்கொண்டாள். பிள்ளைகள் புத்துடுப்பு உடுத்தியிருந்தார்கள். வாயில் கை வைத்தபடி அவனைப் பார்த்தார்கள். சற்றுமுன் நடந்திருக்கும் மைதிலியின் வசவுகளைக் குழந்தைகளின் பார்வையினூடே கண்டுணர்ந்தான். தொலைக்காட்சியில் பட்டுடை பளபளக்க, தொகுப்பாளினி சிரித்துக்கொண்டே ஒரு நடிகையிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவனுக்கு உடல் அசதியாக இருந்தது. அப்படியே படுத்தால் தூங்கிவிடலாம். பண்டிகையும் அதுவுமாக சரியாக இருக்காதே என, குழந்தைகளைக் கொஞ்ச முற்பட்டான். மைதிலியின் கோபம்வேறு அவனை இம்சை செய்தது.

மைதிலி மெள்ள முணுமுணுக்கத் தொடங்கினாள். அவனிடம் பெரிதான எதிர்வினை வராதுபோனதும் இன்னும் கோபம் பொங்கியது.

``வேலை முடிஞ்சதும் கையோடு வூட்டுக்குப் போகணுமே. தீவாளியாச்சேன்னு ஏதாவது பொறுப்பு இருக்கா? அப்படியே ஊர் மேஞ்சுட்டு ஜாலியா வர்றது. அவனவன் தீபாவளிக்கு பொண்டாட்டி புள்ளங்களோடு கோயிலுக்குப் போறத பார்த்தா... கண்ல ஒத்திக்கலாம். அப்படி என்ன தாந்தோன்றித்தனம்? எல்லாம்... எங்கப்பனைச் சொல்லணும். எதுக்கும் பிரயோஜனமில்லாத மனுஷனைத் தலையில கட்டிவெச்சுட்டு, சிவனேனு போயிட்டாரு” என்று இட்லியை பொத் பொதெனத் தட்டில் வைத்தாள். இட்லியிலிருந்து புகை ஒன்றுக்கொன்று மோதி மேலே சேர்ந்து போயின.

அவ்வளவு நேரம் மறந்துபோயிருந்த கெண்டைக்கால் சூட்டின் வலி, திகுதிகுவென எரிவதுபோலிருந்தது தேவேந்திரனுக்கு.