
ஓவியங்கள்: செந்தில்
நடுநிசியில்
அயர்ந்து உறங்கும் பயணியைத்
தட்டி எழுப்பி
காபி குடிக்க அழைக்கிறான்
இரவு வியாபாரி.
தூக்கக்கலக்கத்தில் இறங்கி
சிறுநீரை ஐந்து ரூபாய்க்குக்
கழித்து ஏதும் வாங்காமல்
பேருந்து மாறி உறங்கி
இறுதி நிறுத்தத்தில்
உடைமைகளைத் தேடி
டிக்கெட் இல்லாப் பயணத்திற்கு
அபராதம் கட்டியவனை
கேலி பேசிச் சிரிக்கிறது
இழந்த பேருந்தின் டிக்கெட்.
சரியான நேரத்தில்
சரியான பேருந்தில்
சரியான சில்லறை கொடுத்தும்
ஊர் சேராத பயணங்கள்
பேருந்துநிலையத்தில்
எப்போதும் அலைகின்றன.
எத்தனையோ பேருந்து
வந்து போக
அவனுக்கான பேருந்து
இன்னும் வரவில்லை.
- காரைக்குடி சாதிக்

பெரிய வீட்டின் மிச்சம்
பெரிய வீட்டுப் பின் கதவின்
பூட்டுகளின் சாவி என்றோ
தொலைந்துவிட்டன
நீர் வற்றிய பின்கட்டுக்
கிணற்றின் சுற்றுச்சுவர்கூட
இடிந்துவிட்டது
வீட்டை நோக்கி வரும் சாலை
கூனிக்குறுகி கால்
பாதையாகிப்போனது
முகவரியே பாழடைந்த
பங்களா என்றானது
பின் ஒரு நாளில்
பெரிய வீட்டின் மிச்சம் என்பது
எப்போதாவது கேட்கும்
விசும்பல் சத்தம் மட்டுமே!
- கவிஜி
மூன்றாம் பரம்பரையின் திமிர்
பெரும் இடைவெளியை
நிரப்பிச் செல்கிறது
ஓர் ஆதிகால நிகழ்வு.
நிரப்பப்படாமலிருந்த இடைவெளியில்
மூன்றாம் பரம்பரையின் திமிரு
படர்ந்திருந்தன.
அப்பாவின் அம்மாவுக்கு
அந்த நிகழ்வில் உடன்பாடிருந்ததில்லை.
தாத்தாவின் கோபம் பற்றித்தான்
அப்பம்மா நிறைய பேசியிருக்கிறார்
என அம்மா நேற்று சொல்லும்போது
தாத்தாவின் பழைய டைரியை
எடுத்துத் தூசி தட்டியபோதுதான்
அந்தப் பரம்பரை இடைவெளியை
என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தது.
தாத்தாவின் கோபத்தில் நியாயம்
மறைந்து நிற்கிறது.
அப்பம்மாவைப் பேசவைக்க முயன்றபோதுதான்
நான் உட்பட வீட்டில்
எல்லோரும் ஆதிகாலத்துக்குள்
வாழத் தூண்டப்பட்டோம்.
பெரியப்பா விட்ட பெருமூச்சு
இப்போதுதான் அந்த இடைவெளியை
நிரப்பியது சம்மதத்தால்.
இப்போது நாங்கள் தாத்தாவுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது
பின்னோக்கிய கதை.
- ஜே.பிரோஸ்கான்.

சாயல்
ஏறிய நெற்றியும் நீண்ட மூக்கும்
அச்சுஅசலா தாத்தாதான்
சுருள்சுருளாய் முடி `அடியாத்தி
அவுக அம்மாச்சியை உரிச்சுவெச்சிருக்கா...
கண்ணு அப்படியே அத்தையோடது’
தொட்டிலில் தூங்கும்
குழந்தையின் சாயலை
ஆளாளுக்கு அளந்துவிட்டனா்.
எந்தக் கதைக்கும் பொருந்தாத
ஏதோ ஒரு கதை கேட்டு
இதழ் குவித்துச் சிரித்துக்கொள்கிறது
தூக்கத்தில் குழந்தை.
- காசாவயல் கண்ணன்.