
ஆயுஷ்ராம்ஷாப்பிங் ஸ்பெஷல்
ஹாங்காங்கில் ஷாப்பிங் என்றதும் உறைய வைக்கும் ஏர் கண்டிஷனுடன் கலர் கலராக இருக்கும் ஷாப்பிங் மால்கள்தானே நினைவுக்கு வரும்? ஆனால் மேற்கத்திய நாட்டினரும் சரி, ஆசியாவிலிருந்து வருபவர்களும் சரி, முதல் நாள் இரவு மறக்காமல் செல்வது நைட் மார்க்கெட்டுக்குத்தான்.

டெம்பிள் ஸ்ட்ரீட் என்று சொல்லப்படும் (இங்கே கோயில் எதுவும் இல்லை) தெருவில் பகலில் வாகனங்கள் சென்றாலும் மாலை நான்கு மணிக்கு மேல் கொத்துக் கொத்தாகக் கடைகள் தான். உள்ளூர்த் தமிழர் ஒருவரிடம் என்ன கிடைக்கும் என்றதும், கிட்டத்தட்ட அடிக்க வந்துவிட்டார். “என்ன கிடைக்குமாவா? காட்டறேன்” என்றவரைப் பின்தொடர்ந்தேன்.
கடைகள் எல்லாம் எட்டுக்கு எட்டு அல்லது கொஞ்சம் பெரியதாக திருவல்லிக்கேணி மேன்ஷன் அறைகள் அளவுதான். முதலில் துணிக்கடை. சீனத் துணிவகைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஹாங்காங் சீன வியாபாரிகள் ஓரளவு, அதாவது பொருள்களைத் தலையில் கட்டும் அளவு ஆங்கிலம் பேசுகிறார்கள்.
சிகரெட் லைட்டர்கள் மட்டும் விதவிதமாக இறைந்துகிடக்கின்றன. “இதைப் பார்த்தீங்களா? துப்பாக்கி மாதிரி லைட்டர்”, “இது புயலே வந்தாலும் அணையாத லைட்டர்” என்றார் கடைக்காரர். “ஸாரி. நான் சிகரெட் பிடிக்கறதில்லைங்க” என்றேன்.

கொஞ்சம் நகர்ந்தால் அடுத்த கடையிலேயே எலெக்ட்ரானிக் சாதனங்கள். வீடியோ கேம்ஸ், வீடியோ தொலைபேசி, கண்காணிப்புக் கேமராக்கள், டிவிடி பிளேயர்கள், குட்டி ஸ்பீக்கர்கள், குட்டி டிவிக்கள்… இத்யாதி இத்யாதி. இதில் வேவு பார்க்கும் கருவிகளும் அடங்கும். உதாரணத்திற்கு சின்னதாக ஒரு சாவிக்கொத்து போல இருக்கிறது. அதில் ஒரு சிம் கார்டு போட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு வேண்டாதவர் இருக்கும் இடத்தில் போட்டு விட்டு அந்த சிம் கார்டுக்கு அழைத்தால் அவர்கள் பேசுவது பூராவும் உங்களுக்குக் கேட்குமாம்.

“வேணுமா இது?”
“எதுக்கு, ஜெயிலுக்குப் போறதுக்கா? அதெல்லாம் வேண்டாம். அடுத்தது?”
“என்ன வேணுமோ வாங்கிக்கலாம். ஒரு பேச்சுக்குச் சொல்றேன்... இந்தத் தெருவுல ஒரு முனைல ஒட்டுத் துணியே இல்லாம நுழைஞ்சா அடுத்த முனைல வெளிய வரும்போது கோட்டு சூட்டு போட்டுட்டு வெளிய வரலாம். அத்தனையும் கிடைக்குது போதுமா?”
“சரி... அங்க என்ன சின்னச் சின்ன கூடாரமா இருக்கு?”
“அங்கேதான் சீன ஜோசியம் பாக்கறாங்க.”

சீன சோதிடர்கள் கிளியெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள் நிறைய பேர். இங்கு ‘ஆங்கிலத்தில் குறி சொல்லப்படும்’ என்றும் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. சீன சோதிடத்திற்கும் நம்மூர் சோதிடத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டபோது, நம்மூரில் சூரியனை மையமாக வைத்துக் கணிக்கப்படும் விஷயங்கள் இங்கு சந்திரனை வைத்துச் சொல்லப்படுகிறது. ஆங்கிலம் தெரிந்த ஜோசியக்காரருக்கு ரேட் அதிகம்.
மாலை நான்கு மணிக்குத் தொடங்கும் நைட் மார்க்கெட் ஹாங்காங்கில் மிகப் பிரசித்தி. ஜோர்டன் என்ற இடத்தில் இருக்கும் நைட் மார்க்கெட் ஹாங்காங்கின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்று.
இதுபோலவே மாங்காக் என்ற பகுதியில் லேடீஸ் மார்க்கெட் என்ற ஒன்றும் இருக்கிறது. அதுவும் ஏறக்குறைய ஜோர்டன் நைட் மார்க்கெட் போலத்தான்.

இன்றைய தேதிக்கு செல்போன் கவர் விற்கும் கடைகள் அதிகம் வியாபித்திருக்கின்றன. சாம்சங், ஐபோன் கவர்கள்தான் அதிகம். அது போலவே இங்கு கிடைக்கும் பொருள்களில் கேமரா சமாச்சாரங்கள், குழந்தைகளுக்கு சாவி கொடுக்கும் பொம்மையில் தொடங்கி, ரிமோட் பொம்மை, பறக்கும் டிரோன் வரை விற்கப்படுகிறது. விர் விர்ரெனப் பறக்கும் அல்லது நடக்கும் பொம்மைகள் நம்மூர்ப் பொருட்காட்சிபோல இங்கு மட்டும்தான் ஓடுமா, இல்லை, வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்தாலும் ஓடுமா தெரியாது. ஆனால் விலை கம்மிதான். முப்பது டாலர் முதல் நூறு டாலர் வரை.
அடுத்ததாக, போலிப் பொருள்கள். அட மெய்யாலுமே போலிதான். கூச்சி, பிராதா, லூயி விட்டன் போன்ற பிரபல பிராண்டுகளின் போலிகள், மற்றும் ரோலக்ஸ், பதேக் பிலிப், ஒமேகா, ராடோ போன்ற கைக்கடிகாரங்களின் டூப்ளிகேட்டும் விற்கப்படுகின்றன.

பெண்களுக்கு இந்த ஷாப்பிங் இடம் சொர்க்க லோகம்தான். பத்து டாலர் முதல் நூறு டாலர் வரை கைப்பைகள் வாங்கிக் குவிக்கலாம். நல்ல வேளையாக மனைவியை அழைத்து வரவில்லை என்ற எண்ணம் வந்தது.

குடைக்கு என்று ஒரு கடை, பெட்டி வாங்க ஒரு கடை, சல்லிசாக வாட்ச் கடை, தொப்பிக் கடை, ஜீன்ஸ் கடை, விதவிதமாக நவரத்தினக் கற்கள் விற்கும் கடை (செயற்கைக் கற்கள்), கண் கண்ணாடிக் கடை, செருப்புக் கடை, சீன உடைகள் கடை, புத்தகக் கடை... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
கடைசியில் என்ன வாங்கினேன் என்கிறீர்களா?
அதெல்லாம் மனைவிகூட வந்தால்தான். சும்மா ஒரு ரவுண்டு பார்த்ததற்கே பர்ஸ் காலியானதுபோல ஓர் உணர்வு.