
ஓவியங்கள்: ம.செ.,
இரவின் பத்தாம் நாழிகை தொடங்கியது. மையூர்கிழார், தனது திட்டத்தை முழுமையாக விளக்கினார். ``கிழக்குப் பக்கம் காட்டாற்றைக் கடந்தால் செவ்வரிமேடு உண்டு. அங்கு புதிய மூஞ்சலை அமைக்க, தளபதிகளுக்கு உடனடியாக உத்தரவிடுங்கள். செவ்வரிமேட்டை விட்டு இன்னும் பின்னால் சில காதத் தொலைவில் எங்களது பழைய கோட்டை ஒன்று உள்ளது. அளவில் மிகச் சிறியது. அந்தக் கோட்டைக்குள் நீலனைச் சிறைவைத்துவிடுவோம்.”

மையூர்கிழார் கூறுகின்ற நிலப்பகுதிகளைத் தளபதிகளும் அறிவர். எனவே, அவர் சொல்வதை உற்றுக்கவனித்தனர். மையூர்கிழார் தொடர்ந்தார். ``உறுமன்கொடியின் தலைமையிலான படை இப்போதிருக்கும் மூஞ்சல் பகுதியில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். இவற்றிலிருந்து ஒரு காதத் தொலைவில் துடும்பனின் தலைமையிலான படை நிலைகொள்ளட்டும். அதற்கடுத்து காட்டாற்றைக் கடந்து செவ்வரிமேடு இருக்கிறது. மேட்டில் கருங்கைவாணனும் நானும் நமது படையின் வலிமைகொண்ட பகுதியில் நிற்கிறோம். பறம்புப்படை இங்கிருந்து தாக்குதலைத் தொடங்கும்போது, நமது முன்களத் தளபதிகள் சரியான நேரத்தில் பின்வாங்கி, காட்டாற்றை நோக்கி அவர்களை இழுத்துவர வேண்டும். அவர்கள் நீலனை மீட்க, நமது திசை நோக்கி வந்துதான் ஆகவேண்டும். மிகவும் பள்ளமான நிலப்பகுதியில் ஓடும் காட்டாற்றைக் கடந்து அவர்கள் மேலேறும்போது, நாம் மேட்டு நிலத்திலிருந்து அவர்களின் மீது வலிமையான தாக்குதலை நடத்தி அழித்தொழிக்கலாம்.”
பொதியவெற்பன் உற்சாகமடைந்து கூறினான், ``நாம் முன்னரே திட்டமிட்டபடி மலையை விட்டு நன்கு தள்ளிக் களம் அமைத்துக்கொண்டால், நாகக்கரட்டின் மேலிருந்து வழிகாட்ட முடியாது. அவர்கள் பெருமளவுக்குக் குதிரைகளை இழந்துவிட்டனர். இனி, அவர்களின் தொடர்புகள் முற்றிலும் அறுந்துவிடும். இன்றைய போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்களை இழந்துள்ள அவர்களை முழுமையாகக் கொன்றழிக்க இது நல்ல திட்டம்.”
மையூர்கிழார் சொல்லத் தொடங்கும்போதே காரமலையின் உச்சியில் ஒரு சிறு புள்ளியின் அளவுக்கு நெருப்பின் சுடர் தெரிந்தது. பந்தங்களை ஏந்தி ஓரிருவர் நடமாடுகின்றனர் என எண்ணினார். சிறிது நேரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்னல் வெட்டத் தொடங்கியது. ``மழை வரும் அறிகுறியாதலால் பேசி முடித்து, செயலில் வேகமாக இறங்க வேண்டும்’’ என்றார் சோழவேழன்.
தளபதி உறுமன்கொடி கேட்டான், ``நீலனைச் சிறை வைக்கப்போகும் பழைய கோட்டைக்கான பாதுகாப்பு என்ன?”
``அந்தக் கோட்டை மிகவும் வலிமையானது. அங்கு, எமது வெங்கல்நாட்டின் தேர்ந்த போர்வீரர்கள் இருக்கிறார்கள். அதற்குமேல் வேறெதுவும் தேவையில்லை” என்றார்.
இதைச் சொல்லியபோது அவரின் கண்களுக்கு, காரமலையில் வேறு சில திசைகளிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பந்தங்கள் சிறு புள்ளிகளாய்க் கீழிறங்கி வருவது தெரிந்தது. `என்ன இது?’ என்று இப்போது சற்றுக் கூர்மையுடன் கவனித்தார்.
அதுவரை பேசாமல் இருந்த கருங்கைவாணன் சொன்னான், ``நீங்கள் சொல்லும் திட்டத்தில் காட்டாற்றுப் பகுதி தாக்குதலே மிக முக்கியமானது. அவர்களைக் கீழ்நிலையில் நிறுத்தி நாம் மேல்நிலையில் நின்று தாக்குதல் தொடுக்க ஏதுவான இடம். மிகப் பொருத்தமான ஆலோசனை” என்று சொன்னவன், சற்று சிந்தித்தபடி தொடர்ந்தான், ``காட்டெருமை களின் தாக்குதலின்போது நமது யானைப்படையின் பின்புறத்தில் நின்றிருந்த ஒரு பகுதி யானைகள், பாதுகாப்பாய்த் திரும்பியுள்ளன. அந்த யானைகள் அனைத்தையும் நீலனைச் சிறைவைக்கும் கோட்டையைச் சுற்றி நிறுத்தலாம்” என்றான்.
குலசேகரபாண்டியன் அதை ஏற்றுக்கொண்டார். அப்போது சோழவேழன் சொன்னார், ``படைவீரர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் இப்போது அதிகம் இருப்பது சோழப்படையில்தான். ஏழு சேனைவரையன்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட சேனைமுதலிகளும், சுமார் பத்தாயிரம் வீரர்களுக்குமேல் எமது பாசறையில் இரவுணவு அருந்தியுள்ளனர்.”
இதைச் சொல்லும்போது செருக்கின் ஒலி இயல்பாய் மேலெழுந்தது. இந்த எண்ணிக்கையைச் சொல்வதற்குக் காரணமில்லாமலில்லை. ஆனால், காரணத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சோழவேழன் தொடர்ந்தார், ``நீங்கள் சொன்னபடி உறுமன்கொடியின் தலைமையில் பாண்டியப்படையின் ஒரு பகுதி மூஞ்சலில் நிற்கட்டும். துடும்பனின் தலைமையில் சேரர்படையின் ஒரு பகுதி இரண்டாம் நிலையில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். எமது முழுப்படையையும் செவ்வரிமேட்டின் மேற்பகுதியில் ஏற்றி நிறுத்துகிறேன். இதுபோக, மற்ற இரு படைகளின் பகுதிகளும் செவ்வரிமேட்டில் நிற்கட்டும்” என்றார்.

``இதுவரை விற்படை, வாட்படை, தேர்ப்படை என்று படைத் தொகுப்புகளுக்குள் மூவேந்தர்களின் வீரர்களும் இணைந்திருந்து தாக்குதல் நடத்தினர். ஆனால், முதன்முறையாக மூவேந்தர்களின் படைகளும் தனித்தனியாக அணிவகுத்து நிற்போம்” என வலிமையான குரலில் சொன்னார் சோழவேழன். அதற்குக் காரணம், இன்று மூஞ்சலின் மீது நடந்த தாக்குதலில் ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்பட்ட பேரிழப்புதான். குறிப்பாக, பொதியவெற்பனின் உத்தரவுகள் மற்ற படையணிகளுக்குக் குழப்பத்தையே உருவாக்கின. எனவே, அதிக எண்ணிக்கையைக்கொண்ட வீரர்களின் படையணியான தனது அணியை, தேவையில்லாமல் இழப்புக்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்ற சிந்தனையோடு சோழவேழன் இதைச் சொன்னார்.
இதை வெளிப்படையாக விவாதிக்க முடியாது. இதே காரணம் ஏற்கெனவே குலசேகர பாண்டியனுக்கும் சொல்லப்பட்டுவிட்டது. மூஞ்சலுக்குள் மூன்று சிறப்புப் படைகளையும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய ஆணையிட்டதால், தாக்குதலில் ஒருங்கிணைப்பு துளியும் இல்லாமற்போனதை அவர் அறிவார். எனவே, இதை மறுத்து உரையாட அவரோ, மற்ற யாருமோ ஆயத்தமாக இல்லை.
எல்லோரும் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். மழை சடசடவென இறங்கத் தொடங்கியது. இடியோசை காரமலையெங்கும் எதிரொலித்தது. வேந்தர்களின் தேர்கள் விரைந்து மூஞ்சலை நோக்கிச் சென்றன. இறந்த வீரர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் வேலை முடிந்தபாடில்லை. ஆனால், மழை பெய்யத் தொடங்கிவிட்டதால் தங்குவதற்கு அருகில் வேறு இடம் எதுவும் இல்லை. எனவே, பாதிப்படையாமல் இருக்கும் குலசேகரபாண்டியனின் கூடாரத்தில் ஐவரும் நுழைந்தனர். தளபதிகளோ பேசப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உடனடியாக வேலையைத் தொடங்கினர்.
இரும்புச் சட்டகத்தால் ஆன கூட்டுவண்டியில் நீலனை ஏற்றினர். வாள்படைத் தளபதி மாகனகனின் தலைமையிலான படை அவனை செவ்வரிமேட்டுக்கு அப்பால் இருக்கும் பழைய கோட்டைக்குக் கொண்டுசென்றது. தொடங்கும்போதே மழையின் வேகம் யாவரையும் மிரட்டியது. காரமலையில் மின்னலும் இடியும் விடாது இறங்கின. நீலனை வெளியேற்றிய பிறகு அவன் இருந்த கூடாரத்துக்குள் தளபதிகள் அனைவரும் வந்து நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களும் உள்ளே நுழைந்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூடாரங்களின் ஆட்டமும் அதிகமாக இருந்தது. உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் கருங்கைவாணன் கேட்டான். ``நீலன் இந்தக் கூடாரத்தில்தான் இருந்தான் என்பதை இரவாதனின் படையினர் எப்படிக் கண்டறிந்தனர்?”
யாரிடமும் பதில் இல்லை. மையூர்கிழார், கூடாரத்தின் வாசல்வழியே வெளியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். தான் கேட்பது, மழையின் ஓசையால் அவரின் காதில் விழவில்லையோ என எண்ணிய கருங்கைவாணன், அவரின் தோள் தொட்டு மீண்டும் கேட்க முற்பட்டபோது மையூர்கிழார் கையை வெளியில் நீட்டி எதையோ காட்டினார்.
எதைக் காட்டுகிறார் என, தலையை நீட்டி எட்டிப்பார்த்தான் கருங்கைவாணன். அவனுக்கு எதுவும் தெரியவில்லை. ``எதைக் காட்டுகிறீர்கள்?” எனக் கேட்டான்.
``அங்கே பாருங்கள். தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு சிலர் மலையை விட்டுக் கீழிறங்கி வந்துகொண்டிருக்கின்றனர்.”
``கொட்டும் மழையில் தீப்பந்தங்களை எப்படி ஏந்தி வர முடியும்?” எனக் கேட்டான்.
``எனக்கும் விளங்கவில்லை. ஆனால், பந்தங்கள் முன்னோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கின்றன” என்று சொன்னவர், ``வாருங்கள், பரண்மீது ஏறி நின்று பார்ப்போம்” என்று கூறி உடனடியாக கூடாரத்தை விட்டு வெளியில் வந்தார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணனும் வெளியேறினான். இருவரும் குதிரைகளில் ஏறிப் பாய்ந்து சென்றனர். மற்ற தளபதிகளுக்குத் தலைமைத் தளபதிகளைத் தொடர்வதா அல்லது கூடாரத்துக்குள்ளே இருப்பதா எனத் தெரியவில்லை. `சரி, நாமும் போவோம்’ என உறுமன்கொடியும் துடும்பனும் அவர்களைத் தொடர்ந்தனர். அமைச்சர்கள் மட்டும் கூடாரத்திலேயே இருந்தனர்.
பாண்டிய அமைச்சன் ஆதிநந்திக்கு, கருங்கைவாணன் எழுப்பியது மிக முக்கியமான கேள்வி என்றும், அதைக் கண்டறியவில்லை என்றால் நீலன் இருக்கப்போகும் செவ்வரிமேட்டின் பழைய கோட்டையையும் பறம்பினர் கண்டறிந்துவிடுவர் என்றும் தோன்றியது. ஆனால், இதைப் பற்றி உரையாடத் தளபதிகள் யாரும் இல்லை. எல்லோரும் வெளியில் போய்விட்டனர்.
தளபதிகள், பரண் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். காற்றோடு மழை பெய்வதால் பரண் ஆடியபடி இருந்தது. மேலே ஏறுவது பாதுகாப்பானதா என ஒரு கணம் சிந்தித்தார். மூன்று நாள்களுக்கு முன்பு வீசிய பேய்க்காற்றையே தாங்கிய பரண், இந்தக் காற்றுக்கு ஒன்றுமாகிவிடாது எனச் சிந்தித்தபடியே வேகவேகமாக மேலேறினார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணன் மேலேறினான். மற்ற இரு தளபதிகளையும் கீழேயே நிற்கச் சொன்னார் மையூர்கிழார்.
பரண்மேல் நாழிகைவட்டில் கவிழ்ந்து கிடந்தது. திசைவேழரின் குருதி முழுவதையும் மாமழை கழுவித் தீர்த்தது. தளபதிகள் மேலேறியபோது அவர்களின் கால்களில் மிதிபட குருதியின் உலர்ந்த தடம்கூட பரண்கட்டைகளில் இல்லை. மேலேறிய இருவரும் மேற்குப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தபடி நின்றனர்.
கருங்கைவாணனின் கண்களுக்கு முதலில் எதுவும் தெரியவில்லை. மழை உரத்துப் பெய்தது. மையூர்கிழார் கை நீட்டிக் கத்திச் சொன்னார். ஆனாலும் அவனுக்குப் புலப்படவில்லை. இடதுபுறமிருந்து வாள் வீசுவதுபோல மின்னல் ஒன்று நாகக்கரட்டை வெட்டி இறங்கியது. வெளிச்சத்தில் தட்டியங்காடு முழுக்க ஒளியால் பளிச்சிட்டு மறைந்தது. அந்தக் கணத்தில்தான் கருங்கைவாணன் பார்த்தான், நாகக்கரட்டின் மேலிருந்து குதிரைப்படை ஒன்று தட்டியங்காட்டின் வலதுபுறம் நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தது.
பரண், இதுவரை இல்லாத அளவுக்கு ஆடியது. கீழே நின்றிருந்த உறுமன்கொடியும் துடும்பனும் வீரர்களை அழைத்து பரணின் கால்களை இறுகப் பற்றிக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால், மேலே நின்றிருந்த இருவரும் பரண் ஆடுவதையோ, இடியோசையோடு மழை முன்னிலும் அதிகமாகப் பொழிவதையோ கவனம்கொள்ளவில்லை. அவர்களின் கவனமெல்லாம் கொட்டும் பேய்மழையில் தீப்பந்தம் எப்படி எரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான். `வருவது மிகச்சிறிய படைதான். அதனால் பெரிய தாக்குதலை நடத்திவிட முடியாது. ஆனால், ஏன் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்? எல்லோர் கைகளிலும் பந்தம் இருக்கிறது. எதை எரியூட்ட வருகிறார்கள்?’ எனச் சிந்தித்தபடி நின்றனர்.

நள்ளிரவு பதினைந்தாம் நாழிகை முடிவுறும் நேரம். எதிரிகளின் செயல்களை உற்றுப்பார்த்தபடி நீண்டநேரம் நின்றுகொண்டிருந்தனர். மனத்துக்குள் பெருங்குழப்பம் நிலவிக்கொண்டிருந்தது. சோழப்படையின் பாசறைதான் அந்தத் திசையில் முதலாவதாக இருக்கிறது. நாகக்கரட்டிலிருந்து கீழிறங்கிய வீரர்கள் நேராக அந்தப் பாசறைகளை நோக்கிப் போகின்றனர். இவ்வளவு சிறிய படையினர், பத்தாயிரம் வீரர்கள் இருக்கும் சோழர்களின் பாசறையைத் தாக்கப்போகிறார்களா? கேள்வியை எழுப்பியபடி நிலைமையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
கருங்கைவாணனோ மலைமேலிருந்து கீழிறங்கியுள்ள அந்தச் சிறிய படையைத் தாக்கி அழிக்க உத்தரவிடவேண்டும் எனத் துடித்தான். ``சற்றுப் பொறுப்போம். என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்வோம்” என்றார் மையூர்கிழார்.
அவருக்குச் சுலுந்துக்கம்பின் நினைவு வந்தது. கருங்கைவாணனிடம் சொன்னார், ``காட்டுக்குள் அரியவகையான சுலுந்துக்கம்பு இருக்கிறது. அதைக் கூராக வெட்டித் தீப்பற்றவைத்தால், அது கொழுந்துவிட்டு எரியும். காற்றாலும் மழையாலும் அதை அணைக்க முடியாது. குச்சியைக் கீழே போட்டு மண் அள்ளி அதன் மேல் கொட்டினால் மட்டுமே அணைக்க முடியும்” என்றார்.
கீழிறங்கிய பறம்புநாட்டுக் குதிரைவீரர்கள், பாசறையை நெருங்கிவிட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து பாசறையின் இரு பக்கங்களிலும் சுற்றுவதை பந்தச்சுடர்கள் நகரும் வழிகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
சோழப்படையின் பெரும்பாசறை அதுதான். அங்கு காவல்வீரர்கள் இருப்பர். ஆனாலும் மழை கொட்டும் இந்த நள்ளிரவில் விழிப்போடு இருப்பார்களா என்பது ஐயமே, ``நாம் முரசொலி எழுப்பிக் கவனப்படுத்துவோமா?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.
``இந்த மழையில் முரசினோசையோ கொம்போசையோ அவ்வளவு தொலைவுக்குக் கேட்காது” என்றார் மையூர்கிழார்.
காற்றின் வேகத்தால் பரண் கடுமையாக ஆடியது. ``கவனமாக இறுகப்பிடித்து நில்லுங்கள்” என்று சொன்ன கருங்கைவாணன், இடதுபுறமாக இருக்கும் கம்பத்தை நன்றாகப் பிடித்து நின்றான். அப்போது வடகோடியில் மின்னல் வெட்டி இறங்கியது. அதை உற்றுப்பார்த்தபடி அப்படியே நின்றான். சிறிது நேரம் இருவரிடமும் பேச்சு ஏதும் இல்லை. பிறகு மையூர்கிழார் கேட்டார், ``அந்தத் தீப்பந்தங்கள் அசையாமல் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. கவனித்தீர்களா?”
கருங்கைவாணன் இடதுபுறம் இருக்கும் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு அந்தப் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்ததால் அவர் கேட்பது காதில் விழவில்லை. மையூர்கிழார் மீண்டும் உரத்துக் குரல்கொடுத்தபோதுதான் கருங்கைவாணன் திரும்பினான்.
``என்ன?”
``அவர்கள் ஈட்டியின் மேல்முனையில் பந்தங்களைக் கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவற்றை வீசியெறிந்துள்ளனர். ஈட்டி குத்தி நிற்கும் இடமெல்லாம் பந்தங்கள் நின்று எரிகின்றன” என்றார்.
``வந்தவர்கள் எங்கே?”
``அவர்கள் நாகக்கரட்டுக்குத் திரும்புகின்றனர். மின்னல் ஒளியில் பார்த்தேன்.”
``நானும் பார்த்தேன், நாகக்கரட்டிலிருந்து பலர் கீழிறங்குகின்றனர்” என்றான் கருங்கைவாணன்.
``எந்தப் பக்கம்?” எனக் கேட்டார் மையூர்கிழார்.
இடதுபுறமாகக் கை நீட்டிக் காட்டினான் கருங்கைவாணன்.
இருவருக்கும் எதுவும் புரிபடவில்லை. வலதுபுறக் கடைசியில் தீப்பந்தங்களை எறிந்து நட்டுவைத்துவிட்டு ஏன் மலையேற வேண்டும்? இடதுபுறம் தட்டியங்காட்டுப் பக்கமாக மலையை விட்டு ஏன் கீழிறங்கி வரவேண்டும் என்று சிந்தித்தபடி நின்றுகொண்டிருந்தனர். மழையின் சீற்றம் மேலும் கூடியது.
மையூர்கிழார் ஏதேதோ எண்ணியபடி இருந்தார். முதன்முதலில் காரமலையின் உச்சியில் தீப்பந்தம் எந்த இடத்தில் தெரியத் தொடங்கியது என நினைவுகூர்ந்தார். மனதில் ஐயம் ஒன்று மேலெழும்பியது. அதன் பிறகு அவரிடமிருந்து பேச்சேதும் வெளிவரவில்லை.
`ஏன் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்?’ எனக் கருங்கைவாணனுக்குப் புரியவில்லை.
உள்ளுக்குள் பரவிய நடுக்கம் அவரை எளிதில் பேச அனுமதிக்கவில்லை. சற்று நேரம் கழித்துச் சொன்னார், ``அவர்கள் அணலி இருக்கும் குகைகளில் இருந்து நெருப்பை ஏந்தி வந்திருப்பார்களோ என அஞ்சுகிறேன்.”
``அணலி என்றால்?” கேட்டான் கருங்கைவாணன்.
``நெருப்புப்பூச்சி. உச்சிமலையின் அடர்குகைக்குள் இருக்கும். நெருப்பைப் பார்த்தால் அதைத் தொடர்ந்து அப்படியே வந்துவிடும். அதன் ரீங்கார ஓசை, பல்வேறு நச்சுப்பூச்சிகளைக் கவர்ந்திழுக்கக்கூடியது. அந்த அணலிகள் இருக்கும் குகையில் இருந்து எடுத்துவரப்பட்ட தீப்பந்தங்கள் அவை. அந்தப் பந்தங்களின் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் பூச்சிகள் இந்நேரம் அங்கே வந்திருக்கக்கூடும். எல்லாம் பந்தத்தைச் சுற்றி இருளுக்குள் பறந்துகொண்டிருக்கும். அந்த இடத்தில் உயிரினங்களின் நடமாட்டம் இருப்பதை அவை அறிந்தால், கொடுந்தாக்குதலை நடத்தும். நம் வீரர்கள் பாசறையிலிருந்து வெளிவரத் தொடங்கியதும் அங்கு நடக்கப்போவதை என்னால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை.”
``ஏன்... அவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுகிறீர்களா?”
``அநேகமாக சோழர் பாசறையிலிருந்து பத்தில் ஒரு வீரன்கூடத் தப்ப முடியாது. அணலிப் பூச்சி கடிக்கவேண்டாம்; மேலே பட்டாலே போதும். மொத்த உடலும் தீப்பிடித்து எரிவதைப்போலத் துடிக்கத் தொடங்கும்” இதை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெங்கல்நாட்டு திசையிலிருந்து குதிரையில் இருவர் வேகமாக வந்து சேர்ந்தனர். கொட்டும் மழையின் வேகத்தால் வந்திருப்பது யாரெனத் தெரியவில்லை.

பரணின் கீழே இருந்த தளபதி உறுமன்கொடி பரண் மேலே பார்த்தபடி ``மையூர்கிழாரைத் தேடி வந்துள்ளனர்” என்று உரத்தகுரலில் கத்தினான்.
``அவர்களில் ஒருவனை மேலே அனுப்பு” என்றார் மையூர்கிழார்.
ஒருவன் மட்டும் மேலேறி வந்தான். அவன் போரில் ஈடுபடாத ஆறு ஊர் ஒற்றர்களில் முக்கியமானவன். மையூர்கிழாரால் அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டவன். மேலேறிய வேகத்தில் சொன்னான், ``அவர்கள் அணலியை இறக்கிவிட்டார்கள்.”
``அப்படித்தான் இருக்குமெனக் கணித்தேன்.”
``அனைவரும் உடனடியாக இந்த நிலத்தை விட்டு வெளியேறுவது நல்லது” என்று சொன்னவன், ``அதுமட்டுமல்ல, பாண்டியர் படையின் பாசறையைச் சுற்றி எண்ணற்ற ஈட்டிகளை எறிந்துள்ளனர்.”
பாண்டிய வீரர்களின் பாசறை சோழப்படைக்குக் கீழ்ப்புறமாக இருப்பதால், இங்கிருந்து பார்ப்பது கடினம். எனவே, பரண் மேல் இருந்தவர்களுக்கு அது பற்றித் தெரியவில்லை.
``பந்தத்துடனா?” எனப் பதற்றத்துடன் கேட்டார் மையூர்கிழார்.
``இல்லை. பந்தம் இல்லாமல்தான் ஈட்டிகள் மண்ணில் குத்தி நிற்கின்றன.”
``வெறும் ஈட்டியை ஏன் எறிந்துள்ளனர்?”
``அதை அருகில் சென்று பார்த்தால்தான் தெரியும். ஆனால், அருகில் சென்று பார்க்க நம் வீரர்கள் மிகவும் அஞ்சுகின்றனர். ஆனால், என்னவாக இருக்குமென்று வீரன் ஒருவன் சொன்னான்.”
``என்ன சொன்னான்?”
``இருள்வேல மரத்தின் அடியிலிருந்து உருவாகும் சிவப்புநிறப் பிசின் ஈட்டி முழுவதும் தடவப்பட்டிருக்கலாம். அது மழைக்குக் கரையாது” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான்.
மையூர்கிழார் உறைந்தார்.
``அந்தப் பிசினால் என்ன ஆபத்து?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.
இரவில் ஆபத்தேதுமில்லை. ஆனால், பொழுது விடியத் தொடங்கியதும் காரமலை முழுவதிலும் இருக்கும் பறக்கும் அட்டைகளும் கொம்புதூக்கி வண்டுகளும் பிசின் வாடைக்கு அங்கு வந்துவிடும். எதிர்ப்படும் மனிதர்கள் யாரும் தப்புவது எளிதல்ல. கொம்புதூக்கி வண்டின் உடலெல்லாம் முள்ளம்பன்றிபோல சின்னஞ்சிறிய கொம்புகள் பல்லாயிரம் உண்டு. ஒரு கொம்பு மனிதனின் மீது பட்டால்போதும் விரல்கள் ஒவ்வொன்றும் கையளவு பருத்துவிடும். ஒரு மாதமானாலும் அவனால் எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பரணின் கீழே ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று எட்டிப்பார்த்தான் மையூர்கிழார். வெங்கல்நாட்டு அரண்மனையின் தலைமை ஒற்றன் மேலே அனுமதிக்கச் சொல்லி சத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.
``அவனை மேலே அனுப்பு” எனக் கத்தினார் மையூர்கிழார். அவரின் ஓசை எதுவும் கீழே கேட்கவில்லை. கை அசைவை வைத்துப் புரிந்துகொண்ட உறுமன்கொடி, அவனை மேலே அனுப்பினான். `காற்றும் மழையும் இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, ஏன் இவரையும் மேலே அனுப்பச் சொல்கிறார்?’ எனக் கோபப்பட்டான் உறுமன்கொடி.
அவன் ஏறும் வேகமே பரணை எதிர் திசையில் ஆட்டுவதைப்போல் இருந்தது. பதற்றத்தின் உச்சத்தை அவனது உடலின் வேகம் சொல்லியது. படியில் ஏறும்போதே சத்தமாகச் சொன்னான், ``பறம்பின் பன்னிரு குடிகளும் கீழிறங்கிவிட்டன.”
``என்ன சொல்கிறாய்?” எனக் கேட்டார் மையூர்கிழார்
``ஆம், நான்கு குடிகளைத் தவிர பறம்பில் அடைக்கலமான பன்னிரு குடிகளும் இறங்கித் தாக்க பாரி அனுமதியளித்துவிட்டான். தலைமுறை தலைமுறையாக மூவேந்தர்களின் மீதிருக்கும் பகைதீர்க்க எல்லோரும் மலையை விட்டுக் கீழிறங்கிவிட்டனர்.”
அப்போது பேரோசையோடு வெட்டி இறங்கிய மின்னல் ஒளியில் மையூர்கிழாரின் முகத்தைப் பார்த்தான் கருங்கைவாணன். அதன் பிறகு அவன் வாய் திறக்கவே இல்லை.
வந்தவன் சொன்னான், `` `வெங்கல் நாட்டினர் எல்லோரும் வெளியேறிவிடுங்கள்’ என ஆறு ஊர்க்காரர்களிடமிருந்து செய்தி வந்துள்ளது. `இனி இந்த மண்ணில் மிஞ்சப்போவது யாரும் இல்லை. உயிர்பிழைத்துக்கொள்ளுங்கள்’ என்று பறம்பின் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.”
காற்றின் வேகத்தால்தான் நாம் ஆடுகிறோமா அல்லது உடலின் நடுக்கமா என்ற ஐயம் எழத் தொடங்கியது. ``முடிவை, காலம் தாழ்த்தாமல் எடுங்கள்” என்று கத்தினான் இரண்டாவதாக வந்தவன்.
காற்றின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பின்புறமாகத் திரும்பி, அந்தப் பக்கம் இருக்கும் கம்பத்தை இறுகப் பற்றினார். எதிரில் வெகுதொலைவில் மூஞ்சல் தெரிந்தது. குலசேகரபாண்டியனின் கூடாரத்தின் முன் கண்ணாடிக்கூடு களால் ஆன பெருவிளக்குகள் ஒளி சிந்திக்கொண்டிருந்தன.
பார்த்த கணத்தில் ஆபத்து புரியத் தொடங்கியது. பெருங்குரலில், ``விளக்கை அணையுங்கள்” என்று கத்தினார். மழையின் ஓசையில் பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட அது கேட்கவில்லை. கடைசியாக மேலேறியவனைவிட இரு மடங்கு வேகத்தில் கீழே இறங்கினார் மையூர்கிழார். அவரைத் தொடர்ந்து அனைவரும் இறங்கினர்.

இறங்கிய வேகத்தில் குதிரையின் மேலேறி மூஞ்சலை நோக்கி விரைந்தார். மற்றவர்களும் அவரின் பின்னால் குதிரையை விரட்டிக்கொண்டு வந்தனர். விளக்கொளியின் அபாயத்தால் துடித்தது மையூர்கிழாரின் உடல். குதிரையை விடாது அடித்து விரட்டினார்.
மூஞ்சலை நெருங்கியபோதே பெருங்குரலில் கத்தினார், ``விளக்கை அணையுங்கள்... விளக்கை அணையுங்கள்!”
மூஞ்சலில் குலசேகரபாண்டியனின் கூடாரத்தைச் சுற்றி மூவேந்தர்களின் மெய்க்காவல்படை வீரர்கள் நின்றிருந்தனர். மையூர்கிழாரின் ஓசை கேட்டதும் ஏதோ ஆபத்தென்று புரிந்துகொண்டு விளக்கின் ஒளியைக் குறைத்தனர்.
``முழுமையாக அணையுங்கள்!” என்று கத்தியபடி குதிரையை விட்டுத் தவ்வி இறங்கினார்.
மெய்க்காவல் வீரன் ஏதோ சொல்லவந்தான். ஆனால், அதைக் கேட்கும் நிலையில் மையூர்கிழார் இல்லை. இறங்கிய வேகத்தில் அருகில் இருந்த ஈட்டியை எடுத்து விளக்குகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். விளக்கொளி முழுமுற்றாக விழுந்து அணைந்தது. கணநேரத்தில் என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்வதற்குள் எங்கும் இருள் சூழ்ந்தது. மெய்க்காவல் தளபதி ஏதோ தவறு நடக்கப்போகிறது என மையூர்கிழாரை நோக்கிக் குரல் உயர்த்தி நெருங்கிவரும்போது கருங்கைவாணன் கத்திக்கொண்டே வந்து சேர்ந்தான். அவனது குரல் கேட்டுத்தான் வீரர்கள் அமைதியாயினர்.
கூடாரத்துக்குள் நுழைய அனுமதி கேட்பதற்கெல்லாம் நேரமில்லை. திரையை விலக்கி, சட்டென உள்ளே நுழைந்தார் மையூர்கிழார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணனும் உள்ளே நுழைந்தான். அனுமதி ஏதுமின்றி மேலெல்லாம் கொட்டும் மழைநீரோடு அப்படியே உள்ளே நுழைந்துள்ள இருவரையும் பார்த்த கணத்தில் வேந்தர்களின் முகங்கள் இறுகின.
``பேரரசே, உடனடியாக விளக்கை அணைக்க உத்தரவிடுங்கள்” என்றார் மையூர்கிழார்.
``கூடாரத்துக்குள் இருக்கும் விளக்கை ஏன் அணைக்க வேண்டும்?” எனக் கேட்டார் சோழவேழன்.
``விளக்கத்தைப் பிறகு சொல்கிறேன். ஒரு கணம் காலம் தாழ்த்தினால்கூட நாம் பேராபத்தில் சிக்கிக்கொள்வோம்” என்று கத்தினார்.
ஆபத்தை உணர்ந்த குலசேகரபாண்டியன், ``விளக்கை அணையுங்கள்” என்றார்.
உள்ளே வேந்தர் குடும்பத்தைச் சார்ந்த ஐவர் மட்டுமே இருந்தனர். மையூர்கிழாரும் கருங்கைவாணனும் உள்ளே நுழைந்துள்ளனர். இருவரும் பாண்டியநாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் விளக்கை முற்றிலுமாக அணைக்கச் சொல்வதில் பாண்டியனின் சதியேதும் இருக்குமோ என்ற ஐயத்தில், ``தளபதி உசந்தனை உள்ளே வரச்சொல்” எனக் கத்தினார் சோழவேழன்.
தேர்ப்படைக்குத் தலைமைதாங்கிய சோழர் தளபதி வெறுகாளன் கொல்லப்பட்ட பிறகு, உசந்தனிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சோழவேழனின் உரத்த குரல் வெளியில் நிற்கும் உசந்தனுக்கும் கேட்டது. விளக்கை அணைக்கும் கணத்தில் அவன் உள்ளே நுழைந்தான்.
``துடும்பன் எங்கே?” எனக் கத்தினான் உதியஞ்சேரல்.
``உள்ளே வந்துவிட்டேன் பேரரசே” எனக் கூறியபடி உள்ளே நுழைந்தான். ஆனால், யார் எங்கு இருக்கிறார் என்று எதுவும் தெரியவில்லை. மழையின் பேரோசையும், நம்பிக்கையின்மை உருவாக்கிய அச்சமும் கூடாரம் முழுக்க நிரம்பியிருந்தன.
போரின் நெருக்கடி உருவாக்கியுள்ள நம்பகமின்மையைச் சேரனும் சோழனும் கணநேரத்தில் வெளிப்படுத்தினர். குலசேகர பாண்டியனின் அதிர்ந்த முகத்தைப் பார்க்க, துளியளவும் வெளிச்சமுமில்லை. மூவேந்தர்களும் முழுமையான இருளுக்குள் முகமற்று இருந்தனர்.
எதை நோக்கிக் கேள்வி எழுப்புவது எனத் தயங்கியபடியே கேட்டார் குலசேகரபாண்டியன், ``விளக்கை அணைத்துவிட்டுப் பேசுமளவுக்கு அப்படி என்ன ஆபத்து வந்துவிட்டது?”
``எதிரிகள், அணலிப்பூச்சிகளை மலை உச்சிக் குகைக்குள்ளிருந்து தரைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள் பேரரசே.”
சொல்லி முடிக்கும் முன் உதியஞ்சேரலின் குரல் வெடித்து வந்தது. பதற்றத்தின் உச்சத்தில் அவன் கேட்ட கேள்வியும் அதற்கு மையூர்கிழார் சொன்ன பதிலும் அவையை நடுங்கச்செய்தன. அணலியைப் பற்றி நன்கு அறிந்தவன் சேரன். எனவே, அந்தப் பெயர் கேட்டவுடன் துடித்துப்போனான். இறுதியாகக் கேட்டான், ``எந்தத் திசையில் கீழிறக்கியிருக்கிறார்கள்?”
``சோழர் படையின் பாசறையைச் சுற்றி” சொல்லும் வரை இந்த அவையில் அது உருவாக்கப்போகும் விபரீதத்தை மையூர்கிழார் சிந்திக்கவில்லை.
உதியஞ்சேரலும் மையூர்கிழாரும் வெளிப்படுத்திய பதற்றம் இப்போது செங்கனச்சோழனுக்கும் சோழவேழனுக்கும் பரவியது. ``எம் போர்வீரர்களின் பாசறை, ஆபத்தில் மாட்டிக்கொண்டதா?”
செங்கனச்சோழனின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.
``எங்கு நிற்கிறீர்கள் மையூர்கிழாரே, பதில் சொல்லுங்கள்?” என இருட்டுக்குள் கத்தினான் செங்கனச்சோழன்.
``பதற்றமடைய வேண்டாம் பேரரசே! இரவில் வீரர்கள் யாரும் வெளிவராமல் கூடாரத்துக்குள்ளே இருக்க வேண்டும். பொழுது நன்றாக விடிந்து கதிரவன் ஒளி காய்ந்து இறங்கும் வரை அணலி ஆற்றலோடு இருக்கும். உச்சிவெயில் ஏறிய பிறகு அதன் வேகம் குறையும். ஆனால், அதுவரை வீரர்கள் யாரும் கூடாரத்தை விட்டு வெளிவரக் கூடாது” என்றான்.
``இரவின் இறுதி ஐந்து நாழிகையிலே பாசறையில் வேலைகள் முழுமையாகத் தொடங்கிவிடுமே, பொழுது விடியத் தொடங்கும்போதே எல்லா வீரர்களும் கூடாரம் விட்டு வெளியில் வந்துவிடுவார்களே!”
``ஆம். அதைத் தடுப்பது எப்படி என்று உடனடியாகச் சிந்திக்க வேண்டும்” என்று சொல்லிய வேகத்தில் மையூர்கிழார் சொன்னார், ``பேரரசே! இதே போன்றதோர் ஆபத்து, பாண்டிப்படையின் பாசறைக்கும் நிகழ்ந்துள்ளது.”
``என்ன சொல்கிறாய் நீ?” என்று அடிக்குரலில் இருந்து வெளிவந்தன குலசேகரபாண்டியனின் சொற்கள்.
``ஆம் பேரரசே! இருள்வேல மரத்தின் சிவப்புநிறப் பிசின் தடவிய ஈட்டியை நம் வீரர்கள் தங்கியுள்ள பாசறையைச் சுற்றி எறிந்துள்ளனர். பொழுது விடிந்தால் காரமலை முழுவதிலும் இருக்கும் பறக்கும் அட்டைகளும் கொம்புதூக்கி வண்டுகளும் பிசின் வாடைக்குக் கீழிறங்கிவிடும். அதன் பிறகு எதிர்ப்படும் மனிதர்கள் கடுந்தாக்குதலில் மாட்டிக்கொள்வார்கள்.”
பதற்றத்தின் உச்சிக்குப்போனான் பொதியவெற்பன். ``என்ன சொல்கிறீர் மையூர்கிழாரே... நம் வீரர்களைக் காக்க என்ன வழி?”
``விடிவதற்குள் வீரர்கள் அனைவரையும் பாசறைக்குள்ளிருந்து வெளியேற்ற வேண்டும்” சொல்லிக்கொண்டே இருக்கும்போதுதான் பேசப்படும் சொற்கள் எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கப்போகின்றன என்பதை மையூர்கிழாரால் சிந்திக்க முடிந்தது.
சோழர்களின் பாசறையும் பாண்டியர்களின் பாசறையும் ஒருகாத இடைவெளியில்தான் இருக்கின்றன. இங்கு இரவோடு இரவாக வீரர்கள் வெளியேறினால் அது ஏற்படுத்தும் ஓசை சோழர்களின் பாசறைக்கு நன்கு கேட்கும். அரவங்கேட்டு ஒரு வீரன் பார்த்தால் போதும், `ஏதோ ஆபத்து. அதனால்தான் பாண்டிய வீரர்கள் பாசறையை விட்டு வெளியேறுகிறார்கள்’ என நினைத்து, கணநேரத்தில் மொத்த வீரர்களும் வெளியேறுவார்கள். அந்நிலை ஏற்பட்டால் அணலிப் பூச்சிகளுக்கு மிஞ்சப்போவது யாரும் இல்லை.
பேரரசரின் கூடாரத்தை விட்டு வெளியில் நின்றிருந்தான் உறுமன்கொடி. அவன் அருகில் அடுத்தநிலை தளபதிகளும் மெய்க்காப்பாளர்களும் நின்றிருந்தனர். கொட்டும் மழையின் ஓசையை விஞ்சி வெளியில் கேட்டது கூடாரத்துக்குள் வேந்தர்கள் பேசிக்கொள்ளும் ஓசை.
வெளியில் நிற்கும் மெய்க்காவல்படைத் தளபதிகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. விளக்குகள் முற்றிலும் அணைக்கப்பட்ட இருளுக்குள் வேந்தர்கள் மிகுந்த சினத்தோடு உரையாடிக்கொண்டிருக்கின்றனர். அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என அஞ்சினர். ஆனால், அரச உத்தரவின்றி உள்ளே போக முடியாது, குழப்பத்தில் செய்வதறியாது நின்றனர்.
அப்போது பாண்டியநாட்டு ஆபத்துதவிகளின் தலைவன் சொன்னான், ``மூன்று பேரரசுகளின் தலைமை மெய்க்காவலர்களும் ஒன்றாக உள்ளே செல்வோமா?”
சோழப் பேரரசின் மெய்க்காவல்படையான வேளக்காரப்படையின் தலைவன் ``சரி’’யென்று சொன்னான். ஆனால், சேரமன்னனின் மெய்க்காவல்படையான காக்குவீரர்களின் படைத்தலைவனிடமிருந்து மட்டும் பதில் வரவில்லை.
காலம் கடந்துகொண்டிருந்தது.
அப்போது பாண்டியநாட்டு ஆபத்துதவிகளின் தலைவன் மீண்டும் கேட்டான் ``ஏன் நீங்கள் மட்டும் பேசாமல் இருக்கிறீர்கள்?”
தட்டியங்காட்டைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்த காக்குவீரர்களின் படைத்தலைவன் சொன்னான், ``தட்டியங்காட்டை நோக்கி உற்றுப்பாருங்கள்.”
அவன் சொன்னதும் அந்தத் திசை நோக்கி அனைவரும் உற்றுப்பார்த்தனர். கொட்டும் மழையில் இரவின் இருளுக்குள் இருந்து எதுவும் புலப்படவில்லை.
``ஒன்றுமில்லையே” என்று சொல்லியபடி இடதுபுறமாகத் திரும்பும்போது நீளமாய்ப் பிளந்து இறங்கிய அடர்மஞ்சள் மின்னல் ஒளியில் தட்டியங்காடு முழுவதும் ஒளிர்ந்தது. அவ்வளவு நேரமும் தங்கள் தளபதிகள் நின்றிருந்த பரணின்மேல் வீரர்கள் சிலர் ஈட்டி ஏந்தி நின்றிருந்தனர். அதன் அடிவாரத்திலிருந்து ஆவேசமிக்க பறம்புவீரர்கள் பாய்ந்து வந்துகொண்டிருந்தனர்.
``எதிரிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று மெய்க்காப்பாளர்கள் பேரோசை எழுப்பிய போதுதான் கூடாரத்துக்குள் இருந்தவர்களுக்கு ஆபத்து புரியத் தொடங்கியது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன்