மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர் - 11

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

நான்காம் சுவர் - 11

மாலகொண்டையாவுக்குப் பிறந்த நாள் என்பதால், அவரின் மனைவி சித்திர லேகாவின் பக்குவத்தில் ரவாகேசரியோடு அலுவலகத்துக்குள் நுழைந்தார். ``பாவா... இன்னிக்கு லீவு போட்லாம்ல... பாலகிருஷ்ணகாரு `நரசிம்ம நாயுடு’ படம் ரிலீஸாயிருக்கு... போய்ட்டு ஒஸ்தாமா?” சித்திரலேகா, பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகை என்பதால் முதல் நாளே படத்தைப் பார்த்துவிடத் துடிப்பார். ``லேக்கு... நாளிக்கு படத்துக்குப் போலாம். இன்னிக்கு நாலு பாயின்ட்டுல அடைப்புன்னு ராமுலு போன் சேசினாடு... முடிச்சுட்டு வந்துர்றேன். சரியா லேக்கு...” என்று கண்ணடித்ததும் சித்திரலேகாவின் பொக்கை விழுந்த சிரிப்பு நினைவுக்கு வந்து மாலகொண்டையா சிரித்துக்கொண்டார். ஜெட்ராடு வண்டியைத் துடைத்துக்கொண்டிருந்தார் டிரைவர் நாகையா. ஸ்ரீராமுலு கால்வாய்க் கரண்டியையும் கம்பியையும் ஜெட்ராடில் எடுத்து வைத்துக்கொண்டான். நாகையா ஜெட்ராடு ஓஸை சரிபார்த்துக்கொண்டார். ஃபீல்ட் ஒர்க்கர் பென்சிலையா, மாலகொண்டையாவைக் கூப்பிட்டார். நம்மவர், பிறந்த நாள் என்பதால் புதுக் கைலியோடு மின்னிக்கொண்டிருந்தார். ``ஏமிரா... புது லுங்கி சட்டன்னு ஜொலிக்கிற?” பென்சிலையா வம்புக்கிழுத்தார். டிபன்பாக்ஸில் சித்திரலேகா கொடுத்த கேசரியை எல்லோருக்கும் மாலகொண்டையா கொடுத்தார். ஏழைகளின் இனிப்பான கேசரியை எல்லோரும் சாப்பிட்டார்கள்.

காக்கி டவுசரில் மாலகொண்டையா மாறினார். ஸ்ரீராமுலு இப்போதுதான் டிரைனேஜ் மேனாகச் சேர்ந்தவன். ஆரம்பத்தில் கால்வாயில் இறங்க முற்படும்போதே வாந்தி வாந்தியாக எடுத்துச் சோர்ந்துபோனவன். மாலகொதான் ஸ்ரீராமுலுவை இந்த நாற்றத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கினார். எதுவொன்றும் கொஞ்ச நாள் பழகினாலே அதை மனது ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிடுகிறது. ஸ்ரீராமுலு, இப்போதுதான் கல்யாணமானவன். பரம்பரையாகச் செய்துவந்த வேலை. தாத்தனும் அப்பனும் மூக்கைப் பிடித்து இறங்கி, பெற்று வளர்த்த பிள்ளை ஸ்ரீராமுலு. குலத்தொழில் இருப்பதனால் கல்வி என்பது அவசியமற்றது என நினைத்ததன் பலன், ஸ்ரீராமுலு கால்வாய்க்குள் இறங்கி, சுத்தப்படுத்திக்கொண்டி ருக்கிறான். 

நான்காம் சுவர் - 11

மாலகொவுக்கு ஸ்ரீராமுலு சிஷ்யன் என்பதில் கொஞ்சம் பெருமைதான். நாற்பத்தைந்து வயதிலும் தனக்குப் பிள்ளை இல்லை என்பதை லேகாவின் பொக்கை விழுந்த புன்னகையால் மறந்துகொண்டிருப்பவர். திருமாலின் தீவிர பக்தர். மெல்லிய நாமம் நெற்றியில் வீற்றிருக்க, புரட்டாசியில் சைவப்பிள்ளையாக மாறுபவர். கால்வாயில் இறங்கி முடித்து வந்தாலும் முகத்தை அலம்பிவிட்டு நாமத்தை வைத்துக்கொள்ளத் தவற மாட்டார். ``ஏடுகுண்டலவாடா... வெங்கட் ரமணா...” என்று சொல்லி கால்வாய்க்குள் இவர் இறங்குவதைப் பார்ப்பவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது. முன்பைப்போல கோமணம் கட்டி இப்போதெல்லாம் இறங்குவதில்லை. காசம் வந்ததால் நெஞ்சாங்கூட்டு எலும்புகள் புடைத்துத் துருத்திக்கொண்டிருப்பதால் டவுசரும் கட்பனியனும் போட்டுக்கொண்டே இறங்குகிறார்.
 
ஜெட்ராடு, பூண்டிதங்கம்மாள் தெருவில் நுழைந்தது. தெருவெங்கும் அடைத்து வெளியான சாக்கடை நீரில் கால் பட்டுவிடாதபடிக்கு தெருவாசிகள் நொண்டி ஆடிக்கொண்டிருந்ததை மாலகொ பார்த்தார். ``ராமுலு... இவுனுங்கமேல ஒரு துளி சாக்கடகூடப் படாம இருக்கணும்னா எப்புட்றா... எப்புடி நொண்டி ஆடுறானுங்க ச்சூடு...” மாலகொ சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ஒருவன் சாக்கடையில் கால் பட்டுவிடக் கூடாதென்று தாண்டினான். அவன் போதாத நேரம் கால் இடறி, சாக்கடையில் விழுந்தான். ஒருவனும் தூக்க வராதது அவனுக்கு மேலும் அவஸ்தைக்குள்ளாகி, எழுந்தான். ``மாலகொண்டையா... அவனையும் வேலைக்கு இட்டாந்துர்றா... ரெண்டு படி மேல போட்டுக் குத்துல்லாம்...” பென்சிலையா சொல்ல ஸ்ரீராமுலு சிரித்தான்.

ஜெட்ராடை நிறுத்தினார் நாகையா. பென்சிலையா வண்டியில் வைத்திருந்த குவார்ட்டரை எடுத்தார் ``பொறந்தநாளு கொடுக்கா... ஒக பெக்கு போடறியா?” பென்சிலையா ரெண்டு லோட்டாவில் சரக்கை ஊற்றினார். கீழே இறங்கிய ஸ்ரீராமுலு, கம்பியை எடுத்துக் கீழே வைத்தான். போகிற வருகிறவர்கள் மூக்கைப் பிடித்தபடியும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும் சாக்கடை நீரைக் கடந்தனர். மாலகொண்டையா சரக்கை கல்ப்பாக அடித்துக்கொண்டார். மாலகொண்டையா சட்டையைக் கழற்றிக்கொண்டார். இருமி இருமி நெஞ்சுக்கூடு துருத்திக்கொண்டிருந்தது.  முழுக்க இறங்கி அடைப்பை எடுப்பவருக்கு முழுக்காலி என்று பெயர். மாலகொண்டையாவும் ஸ்ரீராமுலுவும் முழுக்காலியாக மாறினார்கள்.

எங்கள் குடித்தன வாசலின் முன்புதான் கால்வாய் ஜங்ஷன் இருந்தது. கால்வாய் பொங்கி நுரைத்துத் ததும்பிக்கொண்டிருந்தது. புலுக் புலுக்கென மஞ்சள்நீர் வெளியே வந்து சாலையில் கரைந்தோடியது. ஸ்ரீராமுலு, ஜட்டியுடன் நின்றிருந்தார். பென்சிலையா ஒரு கயிற்றில் மாவிலை ஒன்றைக் கட்டி காவாவின் சிறு துளையில் உள்ளே விட்டார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு, ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் கயிற்றை இப்படியும் அப்படியுமாக ஆட்டினார். பிறகு, மேலே இழுத்தார். மாவிலையைப் பார்த்ததும் ``மாலகொண்டையா, கடப்பாரய எடுத்துட்டு வா” என்றார். கடப்பாரையால் காவாவின் மூடியை நெம்பி நெம்பித் திறந்தார். கரப்பான்பூச்சிகளும் பெயர் தெரியாப் பூச்சிகளும் நின்றுகொண்டிருந்த மாலகொண்டை யாவின்மேல் நின்று நிதானித்து பிறகு ஓடியது. கால்வாய் நீரின் கொள்ளளவைத் தாண்டி நிரம்பியிருந்தது. ``பென்சிலு... மொதல்ல ஒரு முங்கல போடறன்... என்னான்னு பாப்பம்” என்றவர். ``ஏடுகுண்டலவாடா... வெங்கட் ரமணா... கோய்ந்தா கோய்ந்தா...” என்று மகாமகக் குளத்தில் புனித நீராடுபவர்போல ஒரு முங்கு முங்கினார். அவர் மேலே வருவாரா என நான் பார்த்துக்கொண்டிருந்தேன். புலுக் புலுக்கென்று ரெண்டு மூன்று முட்டைகள் சாக்கடைமேல் வந்து போயின. 

நான்காம் சுவர் - 11

மாலகொண்டையா மேலே வந்தார். கொஞ்சம் இருமினார். அப்போது வேலுதான் சொன்னான். ``மச்சி அந்தாளு தலையில பார்றா நெருப்பு” என்றான். மாலகொண்டையாவின் தலையில் காய்ந்துருகிய நமது யாரோ ஒருவரின் மலத்திட்டைச் சுமந்திருந்தார். ஸ்ரீராமுலு அதைத் தட்டிவிட்டு ``அண்ணையா... கம்பி போட்டுல்லாமா?” என்றான். ``லேதுடா... காவா கரண்டிய எடுத்துக்கினு வா... சில்ட்டு கட்டிக்கினு இருக்கு...” என்றார். திரும்பவும் இருமல் அவரை இம்சித்தது. என்னிடம் திரும்பி ``நைனா... குடிக்க கொஞ்சம் தண்ணி குடு நைனா” என்று ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டார். வீட்டுக்குச் சென்று சொம்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு சென்றபோது அண்ணி என்னிடமிருந்து சொம்பைப் பிடுங்கி சுற்று முற்றும் பார்த்தாள். கீழே பழைய பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று இருந்தது. அதில் தண்ணீரை ஊற்றி என்னிடம் கொடுத்து ``இப்ப குடு... இந்த பாட்டில அவங்ககிட்டயே கொடுத்துடு... புரியுதா” என்று சொம்பை வாங்கிக்கொண்டு போய்விட்டார் அண்ணி.

மாலகொண்டையாவிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினேன். வாங்கியவர் மடமடவெனக் குடித்தார். திடீரென நிறுத்தியவர் ``நைனா பெட்ரோல் வாங்குற டப்பாவா நைனா இது?” என்றார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிப்போனது. என்னைப் புரிந்துகொண்ட மாலகொண்டையா ``நீ இன்னா ராஜா பண்ணுவ... இதாவது பரவால்ல... சில வூட்லலாம் கக்கூஸக் கழுவுற டப்பாவுலதான் எங்களுக்குக் குடிக்க தண்ணி தருவானுங்க. இதெல்லாம்  பழகிடுச்சு” என்று ஸ்ரீராமுலுவைப் பார்த்து ``முங்கல போட்டு கரண்டில சில்ட்ட வழிச்சுப்போடுறா... அப்புறமா கம்பிய வுட்டு ஆட்டலாம்” என்றார். ``சில்ட்டுனா இன்னானா...” என்று ஆர்வமானேன். ஸ்ரீராமுலு கால்வாய்க் கரண்டியுடன் ஒரு முங்கலில் உள்ளே போனான்.

``காவா அடச்சுக்கிட்டு சரியானாலும்... சில நேரம் எங்கியாவது மலம் குவிஞ்சு நின்னுடும்... அது கட்டியாகி அப்புறம் மண்ணா மாறிடும். அது அப்படியே இறுகிடும் நைனா... அதுக்குப் பேர்தான் சில்ட்டு. அத கரண்டிய வெச்சுக் குத்தி எடுக்கணும். அப்பத்தான் பாத க்ளியராகி அடப்பு சரியாவும்” என்று மறுபடியும் பீடியைப் பற்றவைத்துக்கொண்டு இருமினார். ஸ்ரீராமுலு கரண்டியோடு வெளியே வந்தான். கரண்டியில் சில்ட்டு ஒட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். ``அண்ணையா சில்ட்ட க்ளீன் பண்ணியாச்சு... கம்பிய போட்டுல்லாம்” என்று மூச்சிரைத்தான் ஸ்ரீராமுலு.

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. கால்வாயின் புலுக் புலுக் நீங்கி, தடையில்லா நீரோட்டமாய் ஓடியதைப் பார்த்தேன். மாலகொவின் மேனியில் ஒட்டியிருந்த நமது கழிவுகளை நீரால் அலசிக்கொண்டிருந்தார். கால்வாய்க் கரண்டியைக் கழுவி எடுத்துவைத்தான் ஸ்ரீராமுலு. பேட்டை மன்றம் சார்பாகத் தேநீர் வந்தது. மாலகொ வாங்கிக்கொண்டார். ஊதி ஊதிக் குடித்துக்கொண்டார். நினைவில் வைத்திருந்ததால் கேட்டேன். ``அண்ணே அது என்னண்ணே... மாவிலைய சஸ்பூனுக்குள்ள உட்டாரு உங்க மேஸ்திரி?” மாலகொ சிரித்துக்கொண்டார். ``நைனா வூடா அது... தொறந்து அப்டியே உள்ள போறதுக்கு... அடைப்பு... உள்ள போறதுக்கு முன்னாடி மா இலய உள்ள உட்டாக்காத்தான் உள்ள விஷவாயு இருக்கா... இல்லியான்னு தெரியும். விஷவாயு இருந்துதுன்னா மா இல கருகிடும்... விவரம் தெரியாதவன்... ரொம்ப போதையில இருக்கிறவன்தான் தெரியாம, இல்ல போதையில உள்ள போய்டுவான் நைனா. 30 செகண்டுதான், அதுக்குமேல காப்பாத்தவே முடியாது. அப்பிடி 30 செகண்டுக்குள்ள காப்பாத்தினாலும் ரெண்டு கண்ணும் போய்டும் நைனா...” என்று தேநீரைக் குடித்து முடித்தார். எனக்கு பகீரென்றது ``இவ்ளோ ரிஸ்க்குனா உங்களுக்கு சேப்டி எதுவும் டிப்பார்ட்மென்ட் தராதாண்ணே?” கேள்விகளால் துளைத்தேன். திரும்பவும் பீடியைப் பற்றவைத்துக்கொண்டு இருமினார். ``ஏன் இல்ல... தலைக்கவசம்... நோஸ் மாஸ்க்கு... ரப்பர் கிளவுஸ்... கம்பூட் ஷூவு... ரிஃப்ளெக்டர் ஜாக்கெட்... இதுபோவ ரோப்பு கட்டிக்கிட்டுதான் ஒரு முழுக்காலி சஸ்பூனுக்குள்ள எறங்கணும்கிறது சட்டம். ஆனா, எல்லாம் பேப்பர்லதான் இருக்கு. முழுக்காலி முழுசும் காலியாத்தான் எறங்குறான்” என்று சிரித்தார். பீடியை இழுத்தவர் தொடர்ந்தார். ``சோப்புப் படின்னு மாசம் சம்பளத்தோட 25 ரூவா கொடுக்குறானுங்க. அது ஒரு முங்கலுக்கு வருமா நைனா... காவாத்தண்ணியக் குடிச்சிக் குடிச்சி... நொரயீரலு அழுகி, காசம் வந்ததுதான் மிச்சம். ஊரையே சுத்தம் பண்றவனுக்கு ஒரு லோட்டா தண்ணி தர மாட்டானுங்க, காவாக்காரன்னு வூடு தர மாட்டானுங்க, நின்னு ஒரு வார்த்தகூடப் பேச மாட்டானுங்க நைனா. இன்ஃபெக்‌ஷன் எடுத்தே அம்பது தொட்ரதுக்குள்ள காசம் வந்து செத்துப்பூடுவானுங்க” என்று பொரிந்து தள்ளினார் மாலகொ. எதை இவரிடம் நான் கிளறிவிட்டேன் எனத் தெரியவில்லை. ஒரு சக மனிதனின் புறக்கணிப்பு என்பது எவ்வளவு பெரிய சாபம். ஒரு மனிதனுக்கான மரியாதை என்பது, எதன் பொருட்டு நம் மனது சிந்திக்கிறது. காவாக்காரன் என்றால், நின்றுகூடப் பேசாமல் போகிற நம் மனதைத்தான் தூர் வாரவேண்டியிருக்கிறது.

அப்போது ஜெட்ராடு வண்டியில் பென்சிலை யாவுக்கும் ஒருவனுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்ததை மாலகொ பார்த்துவிட்டார். அங்கே சென்றார். ``காவால முங்கிப் பீத்தண்ணி குடிக்கிற பசங்க நீங்க... நீ வந்து கைய நீட்டிப் பேசுறியா... 100 ரூபாதான் தர முடியும். வாங்கிட்டுக் கெளம்பு. இல்ல...” என்று அவன் அடிக்க வந்தான். பொதுமக்களிடம் வசூல் செய்து அதில் பெரும்பகுதியை ஜோபியில் போட்டுக்கொண்டு பேர்பாதியைத் தரும் அவனது முகம் முழுவதும் எனக்கு சில்ட்டைப்போலவே தோன்றியது.

100 ரூபாயை வாங்கிய பென்சிலையா கனத்த மௌனத்துடன் திரும்பினார். ``ரெண்டு நாள் நாங்க வராம இருந்தா... சாக்கடத் தண்ணியிலதான் அந்த நாயி நீந்தியிருக்கும். நா முங்கிப் பீத்தண்ணி குடிச்ச காசுல ஆட்டைய போட்டுட்டு என்னா ஜபர்தஸ்தா பேசுது பாத்தியா நைனா...” என்று மாலகொ மிகுந்த கோபமானார். ஸ்ரீராமுலுவைப் பார்த்து ``ராமுலு ஒரு பாட்லு தீசிரா... இவுனுங்களாண்ட பொழப்பு நடத்துறதுக்கு அந்தக் கருமத்த குடிச்சாத்தான் முடியும்” என்று ஜெட்ராடில் ஏறிக்கொண்டார் மாலகொ. எந்தப் பிரகடனமும் இல்லாமல் உண்மையில் தூய்மை இந்தியாவாக வைத்திருக்கும் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மறுநாள் தேநீர் வாங்குவதற்கு, கடைக்குச் சென்றேன். பிஸ்கோத்துகளை வாங்கிக்கொண்டு தேநீருக்காகக் காத்திருந்த சமயத்தில்தான் செய்தித்தாளைப் பார்த்தேன். `விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் மரணம்’ என்று மாலகொண்டையாவின் புகைப்படமும், ஸ்ரீராமுலுவின் புகைப்படமும் தென்பட்டன. மாலகொண்டையா புகைப்படத்தில் உர்ரென்று இருந்தார்.

`விவரம் தெரியாதவனும்... நல்ல போதையில இருக்கிறவனும்தான் விஷவாயுவுல மாட்டிப்பான் நைனா’ என்று மாலகொண்டையாவின் குரல் எனக்கு ஒலித்தது. தேநீர் சொம்போடு நடந்து வந்துகொண்டிருந்தேன். தெரு சுத்தமாகியிருந்தது. எனக்கு மட்டும்தான் கால்வாயின் `புலுக் புலுக்’ சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

- மனிதர்கள் வருவார்கள்...