மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 108

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

ஓவியங்கள்: ம.செ.,

ரவின் இறுதிப் பத்து நாழிகையில் வெங்கல் நாடெங்கும் சிந்தப்பட்ட குருதியைக் கழுவ, மழைநீர் போதவில்லை. ஏற்றப்பட்ட தீப்பந்த வெளிச்சத்தில் மழைநீர் அடர்செந்நிறத்தில் ஓடியது. இருளுக்குள் ஓடும்போதும் அதே நிறத்தில் புரண்டோடியது. நீரின் வேகத்தில் மூழ்கி எழுவது கட்டைகளா... மனித உடல்களா என நின்று பார்க்க யாரும் இல்லை. மழையின் பேய்க்கூச்சலுக்கிடையே மனிதக்கதறல்கள் முழுமுற்றாக அமுங்கிப்போயின. பறம்பில் வாழும் பன்னிரு குடிகளும் மலைவிட்டு இறங்கி, காணும் இடமெல்லாம் கணக்கில்லாமல் வெட்டியெறிந்த வேகத்தில் மிஞ்சியது யாரென அறிந்தவர் யாரும் இல்லை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 108

மழையின் வேகத்தால் இரவு கூடுதலாக இருள்கொண்டது. பாசறைக் கூடாரத்தில் படுத்திருந்த வீரர்கள் மழையின் பேரோசையைக் கேட்டபடி ஒடுங்கிப் படுத்தனர்.  ``போர் நாளில் தூக்கம் வருமா?’’ என்று மற்றவர்கள் கேட்கும்போதெல்லாம் போர் வீரர்கள் சொல்லும் பதில் இதுதான்.  ``தூக்கம் வராது. ஆனால், மரணம் வரும்.’’ அன்றைய நாளில் களத்தில் எத்தனை முறை மரணத்தின் வாயிலின் அருகே தப்பித்திருப்போம் என்பதை நினைத்துகூடப் பார்க்க முடியாது. ஏனெனில், உடலும் மனமும் ஆற்றலை முற்றிலும் இழந்திருக்கும். போர்க்களத்தில் தேரையே தனித்துத் தூக்க முற்படும் வீரன்கூட, இரவினில் தன்னுடலைத் தூக்கி நகரும் வலுவை இழந்து கிடப்பான். போரற்ற நாளில் படுக்கும்போது வரும் உறக்கமன்று போர் நாளின் உறக்கம். துளிகூட நினைவின் தடமின்றி தன்னை மறந்தால் மட்டுமே உறங்க முடியும். ஏறக்குறைய மரணத்துக்கு மிக அருகில்தான் அது நிகழும். பகலில் மரணத்தோடு ஒட்டியே பயணம் செய்வதுபோல, இரவிலும் மரணத்தோடு ஒட்டிய பயணம்தான். உறக்கம், விழிப்பு, ஆயுதம் ஏந்தல், போரிடுதல் எல்லாமே போர்க்களத்தில் மரணத்தின் மறுசெயல்பாடுகள்தாம்.

பகலில் போர்க்களம்விட்டுத் திரும்பியவுடன் தங்களின் பாசறைக்கு வந்து ஆயுதங்களையும் கவசங்களையும் கழட்டிவிட்டு, உடலை நீர்கொண்டு கழுவி, நேராக உணவுச்சாலைக்குச் செல்வர். வேட்டை விலங்குகள் ஒன்றுகூடிக் கடித்து இழுப்பதைப்போலத்தான் அங்கு நடக்கும் செயல்பாடுகள். உணவை முடித்துவிட்டு ஆயுதப் பொறுப்பாளனிடம் சொல்லவேண்டிய குறிப்புகளைச் சொல்லி முடித்து, தேவைப்பட்டால் மருத்துவனைப் பார்த்துவிட்டு பாசறைக் கூடாரத்துக்கு வரும்போது, ஏறக்குறைய தலை அறுபட்டு விழும் உடல்போலத்தான் உணர்வேதுமின்றி விழுவர். நேற்றிரவும் அப்படித்தான் நடந்தது.

நள்ளிரவு கடக்கும்போது பெருமழை தொடங்கியது. மழையின் பேரோசையும் காற்றிலேறிய குளிரும் வீரர்களை ஒடுங்கிப் படுக்க வைத்தன. பாசறைக் காவலர்கள் கூட, போரின் தொடக்கக் காலத்தில் இருப்பதைப்போல தொடர்ந்து விழிப்போடு இருப்பதில்லை. போர் தொடங்கி ஆறாம் நாள் இரவுதான் இது. ஆனால், படைகள் இங்கு பாசறை அமைத்து ஒரு மாதம் கடந்துவிட்டது. தொடக்கத்தில் இரவிலும் பகலிலும் ஓரிரு நாள் மழை பெய்தது. ஆனால், போர் தொடங்கிய பிறகு நேற்றிரவு தான் முதன்முறையாக மழை பெய்துள்ளது. பாசறைக் காவலர்களும் மிகவும் அயர்வுற்று இருந்தனர். காற்றோடு சேர்ந்த பெருமழையாதலால், பறம்பு வீரர்கள் பந்தங்களோடு ஈட்டியைக் கொண்டுவந்து எறிந்துவிட்டுப் போனதைக்கூட யாரும் கவனிக்கவில்லை.

பேய்மழைக்குள் குறிப்பறிந்து செயல்படுதல் எளிதன்று. மூஞ்சலில் வேந்தர்களுக்குள் எழுந்த முரண் இருட்டு என்பதால் அடுத்த கட்டத்தை அடையவில்லை. அதுவே விளக்கொளியில் முகம் பார்த்து சினம்கொண்டு பேசியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். மட்டுமல்ல, இருளில் யார் ஆயுதத்தைக் கைக் கொள்வார்கள் என யாராலும் கணிக்க முடியாது. யாரேனும் ஒருவர் எல்லை மீறிய சொல்லைப் பயன்படுத்தினாலும் நிலைமை பேரிழப்பை ஏற்படுத்துவதாக மாறிவிடும்.

இருளுக்குள் உருவாகும் நம்பகமின்மை, கணநேரத்தில் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும். நேற்றிரவு குலசேகர பாண்டியனின் கூடாரம் எல்லாமுமாக மாற இருந்தது. மிகச்சிறந்த கூர்மதியாளராக குலசேகரபாண்டியன் இருந்ததால் அந்த இக்கட்டிலிருந்து வேந்தர் குலத்தினர் ஐவரும் தப்பினர்.

பாண்டியப் பாசறையில் முரசோசை எழுப்பி வீரர்களை இரவோடு இரவாக வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தை சோழவேழன் எதிர்த்தார். அவ்வாறு செய்தால் அந்த ஓசையைக் கேட்டு சோழப்படையினரும் எழுந்து வெளியேற நினைப்பார்கள். அப்போது அணலிப்பூச்சி தாக்கி பேரழிவு ஏற்படும் என வாதிட்டார். அவ்வாறு செய்யவில்லை என்றால், பாண்டியப்படை அழியும் என்று கருங்கைவாணன் வாதிட்டான். இந்த நிலையில்தான் கூடாரத்துக்கு வெளியில் இருந்த மெய்க்காவலர்கள்  ``எதிரிகள் தாக்குவதற்காக வருகின்றனர்’’ என்று கத்தினர்.

துடித்தெழுந்த கருங்கைவாணன், அவர்களை எதிர் கொள்வதற்கான உத்தியைச் சொல்லத் தொடங்கும் முன் அதற்கு வாய்ப்பே அளிக்காமல் குலசேகரபாண்டியன்,  ``இக்கணம் நாம் பாதுகாப்பாக இந்த இடம்விட்டு வெளியேறும் முடிவை எடுக்கவில்லை என்றால், அடுத்து எக்கணமும் ஒன்றாய் முடிவெடுக்கும் சூழல் வராது. எனவே, உடனே வெளியேறுவோம்’’ என்றார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 108

சோழவேழன் எழுப்பிய கேள்வி, எழுந்துள்ள புதிய ஆபத்தால் தானாகவே காணாமல்போனது. படையைக் காக்கும்முன் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டிய சூழல் எல்லோருக்கும் உருவானது. அந்த நிலையிலும் மதிநுட்பத்தோடு செயல்பட்டான் குலசேகரபாண்டியன். கூடாரம்விட்டு வெளியேறும்போது மையூர்கிழாரின் காதோடு காதாகச் சொன்னான்,  ``பாண்டியப் பாசறையில் அபாய ஒலி எழுப்பி, விடியும்முன் வீரர்கள் அனைவரையும் வெளியேற்று.’’

கொட்டும் மழையில் மூஞ்சலின் கூடாரம்விட்டு வெளியேறிய வேந்தர்கள், தங்களின் குதிரைகளை நோக்கி விரைந்து சென்றனர். நூற்றுக்கணக்கில் இருந்த கவசப்படை வீரர்களும் தனிப்படை வீரர்களும் வேந்தர்களைச் சுற்றி அணிவகுத்து நின்றனர். மூவேந்தர்களின் தனித்த முரசங்கள், வேந்தர்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் இசைக்கப்படவேண்டும். ஆனால், சிறிய ஓசைகூட வெளியில் கேட்காத அளவுக்குப் பதுங்கிய நிலையில் மூஞ்சலைவிட்டு இரவின் இருப்பத்தி இரண்டாம் நாழிகையில் வேந்தர்கள் வெளியேறினர்.

வெளியேறி, சிறிது தொலைவு போன பிறகுதான் கருங்கைவாணன் சொன்னான்,  ``நாம் புறப்படும் அவசரத்தில் செய்தி அனுப்ப மறந்துவிட்டோம். அமைச்சர்கள் மூவரும் நீலனின் கூடாரத்துக்குள் இருக்கிறார்கள்.’’

 ``அப்படியா!’’ என்று சற்று அதிர்ச்சியோடு குலசேகரபாண்டியன் கேட்டு முடிக்கும் முன் சோழவேழன் சொன்னார்,  ``உறுமன்கொடியை உடனே அனுப்பி மூன்று அமைச்சர்களையும் பாதுகாப்பாக அழைத்துவரச் சொல்லுங்கள்.’’

குதிரைகள் போய்க்கொண்டிருக்கும்போது சோழவேழன் முந்திக்கொண்டு சொன்னதற்குக் காரணமிருந்தது. ஒரு கணம் காலம் தாழ்த்தினால்கூட,  `தளபதி உசந்தனை அனுப்பி, அமைச்சர்களை அழைத்துவரச் சொல்’ என்று குலசேகரபாண்டியன் சொல்லிவிடுவார் என நினைத்தார் சோழவேழன். சோழப்படையின் வலிமை மிகுந்த தளபதி என்றால், இப்போது உசந்தனை மட்டும்தான் சொல்ல முடியும். அவனையும் ஆபத்துக்குள் எளிதாகச் சிக்கவைத்துவிடுவார் குலசேகரபாண்டியன். அவர் சொன்ன பிறகு மாற்றிச் சொல்வது கோழைத்தனமாகத் தெரியும். நீலனை பழைய கோட்டைக்குக் கொண்டுசெல்லும் பணிக்கு, பாண்டியத் தளபதி மாகனகனை அனுப்பவேண்டிய தேவையே இல்லை. பாதுகாப்பு வீரர்களே அதைச் சிறப்பாகச் செய்வர். ஆனால், தன் தளபதிகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குலசேகரபாண்டியன் முதலில் இருந்தே கவனத்தோடு இருப்பதாக சோழவேழன் கருதியதால்தான் உறுமன்கொடியின் பெயரை முந்திக்கொண்டு சொன்னார். அதன் பிறகு குலசேகரபாண்டியனால் மாற்றிச் சொல்ல முடியவில்லை. அவ்வாறே உத்தரவிட்டார்.

உறுமன்கொடி, பன்னிரு குதிரைவீரர்களோடு மூஞ்சலை நோக்கிப் பாய்ந்து போனான். குலசேகரபாண்டியனின் கூடாரத்திலிருந்து மிகத் தள்ளி நீலனின் கூடாரம் இருந்ததாலும், மழையின் பேரோசையினாலும் வேந்தர்கள் புறப்பட்டதை அமைச்சர்களால் அறிய முடியவில்லை. உறுமன்கொடி, குதிரையைத் தாற்றுக்கோலால் மாறி மாறி அடித்து வேகத்தைக் கூட்டினான். பறம்புவீரர்கள் அதற்குள் மூஞ்சலுக்கு வர வாய்ப்பில்லை என்பதை மனதுக்குள் உறுதிப்படுத்தியபடியும் நீலனின் கூடாரத்தை நோக்கி ஓசையெழுப்பியபடியும் விரைந்தான். ஆனால், எதிரோசை எதுவும் வரவில்லை. கூடாரத்தின் அருகே வந்ததும் அமைச்சர்களின் பெயரைச் சொல்லிக் கத்தினான். கொட்டும் மழையில் தனக்கே கேட்கவில்லை என்று நினைத்தபடி வீரன் ஒருவனை,  ``உள்ளே போய்ப் பார்’’ என்றான்.

அவன் சொல்லி முடிக்கும்போது, அவனுக்குப் பின்னால் எந்த வீரனும் உயிருடன் இல்லை. மழை ஓசையை மீறிக்கேட்டது ஒரு குரல்.

அது எதிரியின் குரல் என அறிந்த கணத்தில், வாளை உருவினான். அப்போது கூடாரத்துக்குள் இருந்து வெளிவந்த முடியனின் ஈட்டி உறுமன் கொடியின் கீழ்நாடியில் குத்தி பின்மண்டையில் வெளியேறியது.

குலசேகரபாண்டியன் காதோடு காதாக இட்ட உத்தரவுப்படி பாண்டியப் பாசறையில் நள்ளிரவு முரசின் ஓசை எழுப்பப்பட்டது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்த வீரர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.  ``உடனடியாக ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாசறையை விட்டு வெளியேறுங்கள்’’ என்று உத்தரவிட்டான் பாசறைத் தளபதி. மழை ஓசையால் அவனது குரல் பெரிதாகக் கேட்கவில்லை. எனவே, வீரர்கள் கூடாரம்தோறும் சென்று சொன்னார்கள். முதல் ஐந்தாறு கூடாரங்கள் கலையத் தொடங்கிய பிறகு செய்தி தனதுபோக்கில் பரவத் தொடங்கியது. பேராபத்து வருவதாகக் கருதிய வீரர்கள் பதறியடித்து ஓடத் தொடங்கினர். பெருங்கூச்சல் மேலேறிவந்தது.

மழையின் வேகம் சற்றே குறையத் தொடங்கியபோது, பாண்டியப் பாசறையிலிருந்து பேரோசை மேலேறி வருவது சோழர்களின் பாசறைக்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. அந்தக் கணம் முதலே பேரழிவு தொடங்கியது. சோழப்படை வீரர்கள் அஞ்சி வெளியேறிய கணத்தில் அணலிகளின் தாக்குதல்கள் தொடங்கின.

கண்ணுக்குத் தெரியாமல் இருளுக்குள்ளிருந்து பெரும்படை வருகிறது என எண்ணிய வீரர்கள், சிறு பூச்சிகளை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. கையில் சிக்கிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீரர்கள் ஓடத் தொடங்கினர். நாகக்கரடு இருக்கும் மேற்குத்திசைதான் எதிரிகள் இருக்கும் ஆபத்தான திசை என்பதால் கிழக்குத்திசை நோக்கி ஓடத் தொடங்கினர். பாண்டியப் பாசறை, ஒரு காதத்தொலைவில் வடகிழக்குத் திசையில் இருந்தது. அங்கிருந்து மேலேறிவந்த ஓசையும் இங்கிருந்து மேலேறிய ஓசையும் வெகுவிரைவாக இணைந்தன.

அணலிகள் தாக்கத் தொடங்கிய சிறுகணத்திலேயே வீரர்கள் எழுப்பும் ஓசையின் தன்மை மாறத் தொடங்கியது. சோழப்படையின் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதால், கதறலின் பேரோசை இருளை நடுங்கச் செய்தது. தப்பித்து ஓடத் தொடங்கிய சோழப்படை வீரர்கள், பாண்டிய வீரர்களோடு இணைவதற்கு ஆகும் நேரம்கூட அணலிகள் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு முன்பே பாண்டியப் படையின் பந்த வெளிச்சத்தை நோக்கி அணலிகள் வந்து சேர்ந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 108

அந்தத் திசையில் பறம்புவீரர்கள் யாரும் இல்லை. அணலிகள் பற்றியும் மற்ற நஞ்சுப்பூச்சிகள் பற்றியும் பறம்பினர் நன்கு அறிவர். அதுவும் இந்தப் பேய்மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. மழை முடிந்த கணத்தில் காட்டுக்குள்ளிருந்து கிளம்பப்போகும் பூச்சி வகைகளை யாராலும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. பள்ளம் நோக்கிப் பாயும் நீர்போல, அணலியின் வாசம் நோக்கிப் பறக்கும் நஞ்சுயிர்கள் அனைத்தும் வந்துசேரும். இரவின் பூச்சிகளை அணலியும், பகலின் பூச்சிகளை கொம்புதூக்கி வண்டின் ரீங்காரமும் கொண்டுவந்து சேர்த்துவிடும். இப்போது மழையும் இணைந்துகொண்டதால் நிலைமை பன்மடங்கு மோசமாய்விட்டது. எனவே,  `பறம்புவீரர்கள் யாரும் அந்தத் திசைப் பக்கமே போகவேண்டாம்’ என்று பாரி கூறியிருந்தான்.

அவனது திட்டம் முழுவதும், வெங்கல்நாட்டின் நடுப்பகுதியில் நிலைகொண்டு தாக்க வேண்டும் என்பதுதான். அங்குதான் சேரப்படையின் பாசறை இருக்கிறது. இந்தப் போரில் மிகக் கவனமாக இருப்பவன் சேரன்தான். அவன் பாசறை அமைக்கும்போதே பாதுகாப்புமிக்க இடத்தைத் தேர்வுசெய்திருந்தான். அவனுடைய வீரர்களைத் தாக்கி அழிப்பதும், மூஞ்சலில் இருந்து தப்பி வெளியேறுபவர்களைத் தாக்கி அழிப்பதும், வேந்தர்களின் சிறப்புப் படையைத் தாக்குவதும், நீலனை கவனத்துடன் மீட்பதுமாக... பல்வேறு முறையில் தாக்குதல் உத்தியை வகுத்திருந்தான் பாரி.

இரவின் பிடி உதிரும்போது வேந்தர்படையின் ஆற்றல் முற்றிலும் உதிர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் பாரியின் திட்டம். மூன்று பாசறைகளையும் தனித்தனியாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் போதே வேந்தர்களின் சிறப்புப் படைகளின் மீது இடியெனத் தாக்கும் போர் உத்தியை வகுத்திருந்தான் பாரி. குலங்கள்வாரியாகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டன. சோழர் பாசறையிலும் பாண்டியர் பாசறையிலும் இருந்து உயிர்பிழைத்து வருகிறவர்களை எதிர்கொள்ள, வெங்கல்நாட்டின் நடுப்பகுதியில் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தது விண்டனின் தலைமையிலான படை.

போர்க்களத்தில் வேந்தர்படை வீரர்கள் கவசப் பாதுகாப்போடு அனைத்துவிதமான ஆயுதங்களையும் கைக்கொண்டு போரிடும்போதே, பறம்பு வீரர்களையும் எதிர்கொள்வது மிகக்கடினம். ஆனால் இப்போதோ, இரவில் பேரச்சத்தோடு கைகளில் ஓரிரு ஆயுதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு ஓடிவருகிறவர்கள், விண்டன் தலைமையிலான பறம்புப்படையை எப்படி எதிர்கொள்ள முடியும்?

பின்னால் துரத்தும் பேராபத்திலிருந்து தப்பிப்பிழைக்கவே வீரர்களின் பெருங்கூட்டம் ஓடிவந்தது. அவர்களாக வந்து ஈட்டிகளில் பாய்ந்து மாய்வதைப் போலத்தான் கணக்கே இல்லாமல் மாய்ந்துகொண்டிருந்தனர். எதிர்நிலையில் நின்ற விண்டன் தாக்கவேயில்லை. ஆனால், அழிக்க மட்டும் செய்தான். அழிவு கணக்கேயில்லாமல் நடந்துகொண்டிருந்தது.

பல்லாயிரம் மணிகள் கோக்கப்பட்ட மாலை ஓர் இடத்தில் அறுந்தவுடன் மொத்தமும் மண்ணில் உருள்வதைப் போலத்தான் படையின் கட்டுக்கோப்பு அறுந்த கணத்தில் பல்லாயிரம் தலைகள் மண்ணில் உருண்டுகொண்டிருந்தன.

விண்டனின் தலைமையில் வந்தவர்கள், ஆறு இடங்களில் தனித்தனியாக நின்றிருந்தனர். வர வர வெட்டிச்சரிக்கும் வெறியோடு நின்றவர்களை நோக்கி அணலிகளால் விரட்டப்பட்டவர்கள் இடைவிடாது வந்துகொண்டிருந்தனர். அச்சத்தோடு பாய்ந்து வருபவர்களுக்கு முன்னால் தனது கூரிய ஆயுதங்களை ஏந்தி நின்றான். பட்டுப்போன இலையை கழுமர முனையால் குத்துவதுபோலத்தான் அந்தப் பேரழிவு நடந்தது. துளியளவு ஆற்றல்கூட இல்லாமல் அஞ்சி ஓடிவரும் கூட்டம் அவன் உருவாக்கியிருந்த பொறிக்குள் கணக்கேயில்லாமல் விடியும் வரை விழுந்துகொண்டேயிருந்தது.

இதே நேரத்தில் சேரனின் பாசறையைத் தாக்க உதிரனின் படைக்கு உத்தரவிட்டிருந்தான் பாரி. சுமார் எட்டாயிரம் வீரர்கள் இருந்த பாசறையை நள்ளிரவு உதிரனின் தலைமையிலான படை சுற்றிவளைத்தது. மழை கொட்டிக்கொண்டிருந்த போதும் கொம்பூதி முழக்கமிடச் சொன்னான் உதிரன். தூங்கிக்கொண்டிருப்பவர்களைத் தாக்கக் கூடாது. எனவே, தக்குதலுக்கு ஆயத்தமாகச்சொல்லி அழைத்தான்.

அந்த நேரத்தில் மூஞ்சலிலிருந்து கிழக்குத்திசை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்தனர் வேந்தர்கள். மெய்க்காவல் படையினர் மிகுந்த கவனத்தோடு முன்னும் பின்னுமாக அணிவகுத்துச் சென்றனர். பந்த ஒளி இல்லாததால் அடர் இருட்டில் பயணப்படவேண்டியிருந்தது. மழையும் விடாது பொழிந்துகொண்டிருந்தது. சரியான திசை வழியில் வேந்தர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்பதால், மையூர்கிழார் முன்னால் போய்க்கொண்டிருந்தார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 108

ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமும் ஒவ்வொருவிதமாக இருந்தது. குலசேகரபாண்டியன் தனது பாசறை வீரர்கள் பாதுகாப்போடு வெளியேறியி ருப்பார்காளா என்ற சிந்தனையிலே இருந்தான். செங்கனச்சோழன் தங்கள் படைவீரர்களைக் காப்பாற்ற வழி என்ன என்ற சிந்தனையில் இருந்தான். பறம்பின் தாக்குதல் எப்படி இருக்கும் என்பதை எழுவனாற்றில் அறிந்தவன் அவன். அவனது உடல் நடுக்கத்தை உள்ளுணரச்செய்துகொண்டிருந்தது. ஆனால், சோழவேழனும் பொதியவெற்பனும் எந்த நிலையிலும் பாரியைக் கொன்றழிக்காமல் இந்த நிலம்விட்டு அகன்றுவிடக் கூடாது என எண்ணியபடி இருந்தனர்.

கருங்கைவாணனின் சிந்தனை முழுவதும் உறுமன்கொடியைப் பற்றியதாக இருந்தது.  `இவ்வளவு நேரத்தில் அவன் அமைச்சர்களை அழைத்து வந்திருக்க வேண்டுமே. ஏன் இன்னும் வரவில்லை’ என்று நினைத்தபடியே குதிரையை விரைவுபடுத்தினான். யாரையாவது அனுப்பி நிலைமையை அறிந்துவரச் சொல்லலாமா எனத் தோன்றியது. குதிரையை விரைந்து செலுத்தி முன்னால் போய்க்கொண்டிருந்த மையூர்கிழாரிடம் வந்து கேட்டான்,  ``உறுமன்கொடி இன்னும் வந்துசேரவில்லை. அமைச்சர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லையே!’’

 ``இதில் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள்.’’

கருங்கைவாணன் சற்றே அதிர்ச்சிக்குள்ளானான்,  ``உறுமன்கொடி பெருவீரன். அவனை எளிதில் வீழ்த்திவிட முடியாது.’’

 ``தளபதிகள் வீரத்தோடு இருந்து என்ன பயன்? வேந்தர்கள் கூர்மதியோடு இருக்க வேண்டுமல்லவா!’’

 ``ஏன் அப்படிச் சொல்கிறாய்?’’

 ``நாம் மூஞ்சலைக் கடந்து ஒரு காதத்தொலைவு வந்த பிறகு அமைச்சர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடலாமா? இத்தனை நாள் போருக்குப் பிறகும் எதிரியின் வேகத்தையும் வலிமையையும் இவர்கள் என்னதான் புரிந்துகொண்டார்கள்?’’

 ``அதற்காக, அமைச்சர்கள் மூவரையும் அப்படியே விட்டுவிட முடியுமா?’’

 ``ஏன் முடியாது? மறதியும் கவனக்குறைவும் தவிர்க்க முடியாதவை. அதன் விலை அமைச்சர்களாக இருந்தாலும் கலங்காது முடிவெடுக்க வேண்டும். ஒருவரின் தளபதியை இன்னொருவர் சிக்கவைத்துவிடுவார் என்ற பதற்றத்தில் மூவரும் மாறி மாறி மற்றவர்களைச் சிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களோடு நின்றிருக்க வேண்டிய இழப்பில் உறுமன் கொடியையும் சேர்த்து விட்டார்கள். இதே நிலை நீடித்தால் நிலைமை படுமோசமாகி விடும்.’’

 ``ஏன் நம்பிக்கையிழந்து பேசுகிறாய்?’’ மழையையும் மீறி கேட்டது கருங்கைவாணனின் குரல்.

 ``போர்க்களத்தில் இரண்டே இரண்டு செயல்கள்தான் உண்டு. ஒன்று, தாக்கி அழிப்பது. இல்லையெனில், தப்பிப் பிழைப்பது. நாம் முதல்கட்டத்தின் இறுதிநிலைக்கு வந்துவிட்டோம். எனவே, இரண்டாம் கட்டம் பற்றிய சிந்தனை தானாகவே மேலெழுகிறது’’ என்று கூறிய மையூர்கிழார் தொடர்ந்து சொன்னார்,  ``உறுமன்கொடி கொல்லப்பட்டிருந்தால் அடுத்து ஒரு பொழுதுக்குள் நாம் தாக்கப்படுவோம்.’’

 ``அப்படியா சொல்கிறாய்? எந்தத் திசையிலிருந்து தாக்குதல் வர வாய்ப்பிருக்கிறது?’’

 ``அதுதான் தெரியவில்லை. எனது கணிப்புப்படி இந்நேரம் சோழப்படையும் பாண்டியப் படையும் பேரழிவைக் கண்டிருக்க வேண்டும். உதியஞ்சேரல் தன் தளபதி துடும்பனை அனுப்பி, அவனது பாசறையில் இருக்கும் வீரர்களை வெளியேற்றும்படி கூறியுள்ளான்.’’

 ``இல்லையே. துடும்பன் நம்முடன்தானே இருந்தான்.’’

``மூஞ்சலிலிருந்து புறப்படும் போது நம்முடன் இருந்தான். இடையில் அவனைப் பாசறைக்கு சேர வேந்தர் அனுப்பிவைத்து விட்டார்.’’

சொல்லும்போது இடியோசை யால் நிலம் நடுங்கியது. மிக அருகில் விழுந்திருக்க வேண்டும். குதிரைகள் மிரண்டு கனைத்தன.

 ``நாம் இப்போது எந்தத் திசையில் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்? எது பாதுகாப்பானது?’’ எனக் கேட்டான் கருங்கைவாணன்.

குதிரையை மழையின் தன்மைக்கு ஏற்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவு படுத்தியபடியே மையூர்கிழார் சொன்னார்,  ``உண்மையைச் சொல்வதாக இருந்தால் எனக்கு எதுவும் புரிபடவில்லை. பறம்பில் வாழும் பதினான்கு குடிகளும் கீழிறங்கிவிட்டன என்ற பிறகு, நாம் எந்தத் திசையில் பயணப்படுவது என்றே விளங்கவில்லை.’’

 ``பாரி எந்தப் பக்கம் இறங்கியிருப்பான் என்பதை சிறிதும் முன்னுணர முடியவில்லையா?’’

 ``முடியவில்லை. இருளின் எல்லாத் திசைகளிலும் பறம்புவீரர்கள் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல பறம்பின் படையணி எல்லாவற்றுக்குள்ளும் பாரி இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்றே கருதுகிறேன்’’ சொல்லும்போது உடல் உள்ளுக்குள் நடுங்கி மீண்டது. இருளெங்கும் பாரியால் நிரம்பியிருந்தது.

 ``அப்படியென்றால், நாம் இப்போது என்ன செய்யவேண்டும்?’’

 ``இப்போது இடியோடு இறங்கிய மின்னல் ஒளியில் எதிரிகள் நமது கூட்டத்தைத் தெளிவாகப் பார்த்திருப்பார்கள். எனவே, நம்மை நோக்கி அவர்கள் விரைந்து வர வாய்ப்புண்டு.’’

 ``நாம் ஏதாவது ஒரு மறைவிடத்தில் தங்க முடியாதா? இன்று இரவை மட்டும் கழித்து விட்டால் போதும், காலையில் நிலைமையை வேறுவிதத்தில் எதிர்கொண்டுவிடலாம்.’’

``நானும் அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். மறைவிடம் என்று ஏதுமில்லை. எனது அரண்மனைக்குப் போவதாக இருந்தால் நாமே ஆபத்தில் போய்ச் சிக்கிக்கொள்கிறோம் என்று பொருள். ஏனெனில், வடதிசையில் காரமலைக்கு மிக அருகில் உள்ளது எனது அரண்மனை. இந்நேரம் பறம்புவீரர்கள் அங்கு இறங்கியிருப்பார்கள்’’ என்று சொன்னவர், குதிரையை விரைவுபடுத்தியபடி,  ``எனக்குத் தெரிந்த ஒரே வாய்ப்பு மிக விரைவாகப் பயணப்பட்டு காட்டாற்றைக் கடப்பதுதான்’’ என்றார்.

 ``அங்கு என்ன வகையான பாதுகாப்பு ஏற்பாடு இருக்கிறது?’’

 ``இந்த மழைக்கு, காட்டாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும். மேடான பகுதியின் வழியே நான் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு அழைத்துச் சென்றுவிடுவேன். அக்கரையில் செவ்வரிமேட்டின் பக்கம் போய்விட்டால் போதும், நாம் இரவில் எந்தவித ஆபத்து குறித்தும் அச்சப்படத் தேவையில்லை.’’

 ``ஏன்... எதிரிகள் அங்கு வர மாட்டார்களா?’’

 ``மலைமக்கள் அச்சப்படுகிற ஒரே பொருள் நீர் மட்டும்தான். மலைமக்களின் பெரும்பான்மையோருக்கு நீச்சல் தெரியாது. அடர்கானகத்தின் இருள் கண்டு சமவெளி மக்கள் எப்படி பயம்கொள்கிறார்களோ, அதேபோல்தான் நீரைக் கண்டால் சற்று தள்ளியே நிற்பது மலைமக்களின் இயல்பு. எனவே, இரவில் காட்டாற்றுக்குள் இறங்க மாட்டார்கள்’’ என்றான்.

சொல்லி முடிக்கும்போது வேந்தர்படையின் குதிரைகள், இதுவரை இல்லாத வேகத்தில் ஆற்றின் திசைவழி நோக்கிப் பாயத் தொடங்கின.

தே காலத்தில் சேரனின் பாசறையின் மீது உதிரனின் தாக்குதல் தொடங்கியது. கொம்போசை ஊதி வீரர்களுக்கு தாங்கள் வந்துள்ளதைத் தெரியப்படுத்தியதும் பாசறைத் தளபதி உடனே எதிர் தாக்குதலுக்கு ஆயத்தமானான். அப்போதுதான் சேரர் படைத் தலைமைத் தளபதி துடும்பன் வந்து சேர்ந்தான். உதியஞ்சேரலின் கட்டளைபடி பாசறையைவிட்டு  உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டான்.

 ``எதிரிகள் கொம்போசை எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் பாசறையைவிட்டு வெளியேற உத்தரவிட்டால் நிலைமை விபரீதமாக மாறும். ஒரு பக்கம் எதிரிகளைத் தடுக்க எதிர் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்போம். இன்னொரு பக்கம் வெளியேறிக்கொண்டிருப்போம். மழை பெய்து கொண்டிருப்பதால் தெளிவான உத்தரவை எல்லோருக்கும் வழங்கிவிட முடியாது. நள்ளிரவில் கூடாரத்துக்குள் தூங்கிக் கொண்டிருக்கிற பலருக்கும் நிலைமையை விளக்குவது எளிதல்ல. எனவே, இரண்டு செயல்களால் பெரும்குழப்பம் உருவாகும். பறம்புவீரர்களை எதிர்த்து முழுக்கவனத்தோடு தாக்குதல் தொடுப்போம். பொழுது விடிந்த பிறகு நாம் பாசறையைவிட்டு வெளியேறுவோம்’’ என்றான் பாசறைத் தளபதி.

அதிக அளவு வீரர்கள் கூடாரங்களைவிட்டு வெளியேறத் தொடங்கியதும் பறம்புவீரர்கள் தாக்குதலைத் தொடங்கினர். பின்னிரவு நேரத்திலும் மழையின் வேகம் குறையவில்லை.

இரவு நேரத்தில் பாசறையின் மீதான எதிரிகளின் தாக்குதலைச் சரியாகக் கையாள வில்லை என்றால் பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை தளபதி நன்கு அறிவார். எனவே தனது நிலையை வலியுறுத்தினார்.

பாசறைத் தளபதிக்கு, இந்தப் பாசறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் மட்டுமே தெரியும். ஆனால், துடும்பனுக்கு மொத்தச் சிக்கலும் தெரியும். வேந்தர்கள், மூஞ்சலைவிட்டு வெளியேறிவி ட்டனர்; பாதுகாப்பான இடத்துக்கு விரைந்துகொண்டிருக்கின்றனர். பாண்டியப் படையும் சோழப்படையும் பேரழிவுக்குள்ளாகின. அந்த நிலையில் சேரர்படை மட்டும் பாசறையில் இருந்தால் அது பேராபத்தாகும். எனவே, ஒரு பகுதி வீரர்களை இழந்தாலும் நாம் இந்த இடத்தைவிட்டு அகல்வதே பாதுகாப்பானது. இதை பாசறைத் தளபதிக்கு விளக்கிக்கொண்டிருக்க முடியாது. எனவே, துடும்பன் வேந்தரின் கட்டளை என்று மறுசொல்லுக்கு வழியில்லாதபடி உத்தரவைப் பிறப்பித்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 108

பாசறைத் தளபதியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து வாதிட்டான். ஆனால், நிலைமை கைமீறிக்கொண்டிருந்தது. இறுதியில் பாசறைத் தளபதி சொன்னான்,  ``சரி, நான் மேற்குப் பகுதியில் நின்று எதிரிகளைத் தாக்கும் படைக்குத் தலைமை ஏற்கிறேன். நீங்கள் வெளியேறும் படையை கவனத்தோடு கொண்டுசெல்லுங்கள்’’ என்றான். தன் பாசறை வீரர்களைக் காக்க அவன் இறுதி வரை எடுத்துக்கொள்ளும் முயற்சியைக் கண்டு மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றான் துடும்பன்.

மேற்குத் திசையில் பறம்பின் தாக்குதல் வலிமையானதாக இருந்தது. பாசறைத் தளபதியின் தலைமையில் சேரப்படையினர் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் எதிரிகளை பின்னுக்கு நகர்த்த முடியவில்லை. அதற்குக் காரணம், பறம்புவீரர்கள் இருளுக்குள் எந்த இடத்தில் நின்று அம்பெய்துகின்றனர் என்பதை, சேர வீரர்களால் மதிப்பிட முடியாததே. இருளின் எல்லா திசைகளில் இருந்தும் அவர்களின் அம்புகள் பாய்ந்துவந்தன. வேந்தர்களின் படைவீரர்கள், பெரும்பாலும் தங்களின் வில்லுக்கு, பட்டுநூல் நாணினைத்தான் பயன்படுத்தினர். அது மழைநீரில் ஈரமானால் போதுமான இழுவை விசையை உருவாக்காது. ஆனால், பறம்பின் வீரர்கள் பயன்படுத்துவதெல்லாம் மான் முடியும் எருமை முடியும் கொண்டு திரிக்கப்பட்ட நாண். எனவே, அது மழைநீரால் எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாகாது. பறம்புவீரர்கள் பாசறையின் மீது அலையலையாய் அம்புகளை விடுத்துக் கொண்டிருந்தனர்.

மழைப் பொழிவுக்கு இடையிலும் அம்புகள் கூடாரத்தைத் தொடர்ந்து தாக்கின. பாசறைக்குள், உத்தரவில் ஏற்பட்ட குழப்பத்தால் பெரும் பாலானோர் தாக்குதலை எதிர்கொள்ளாமல் கிழக்குத்திசையில் வெளியேறத் தொடங்கினர்.

உதிரனின் தாக்குதல் திட்டத்தின் கூர்முனைப் பகுதி மேற்குத்திசை அன்று. அதாவது மேற்குத்திசையில் நள்ளிரவில் பேரோசையை எழுப்பியபடி தாக்குதல் தொடுத்தால் அச்சப் பட்டு வெளியேறும் படை கிழக்குத் திசையில்தான் பாய்ந்து செல்லும். எனவே, கிழக்குத் திசையில் பொருத்தமான மூன்று இடங்களில் தங்களின் மூன்று குடிகளை நிறுத்தியிருந்தான் உதிரன். காய்ந்த புளியமரங்கள், வாகைமரங்களின் கொப்புகள் முண்டுகள் எல்லாவற்றின் மீதும் பறம்புக் குடிகள் ஆயத்தநிலையில் காத்திருந்தனர்.

சேரர்படை வீரர்கள் வரத் தொடங்கிய பிறகு, கிழக்குத்திசை மரங்களிலும் மறைவுகளிலும் இருந்து தாக்குதல் தொடங்கியது. வாளும் ஈட்டியும் சவளக்குந்தமும் பெருங்குந்தமும் இடைவிடாது குத்தித் தீர்த்தன. சகதியில் மிதித்துகொண்டே இருப்பதுபோல குத்துவாள்கள் இறங்கிக்கொண்டே இருந்தன. வல்லயக் கம்புகளின் சிறு மணியோசை திரும்பும் திசையெல்லாம் கேட்டது. பேய்மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள், பீறிடும் மனிதக்கதறல் கேட்டு பொடவுக்குள் பதுங்கின.

சேரனால் அழித்தொழிக்கப்பட்ட மூன்று குடிகளின் தாக்குதலால் இப்போது சேரர்படை, பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருந்தது. பாண்டியப்படையும் சோழப்படையும் அணலி தாக்குதலுக்கு அஞ்சி ஓடிவந்ததைப்போல சேரர்படை ஓடிவரவில்லை. எதிரிகள் தாக்குகின்றனர். பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்ற உணர்வோடு ஆயுதங்களை கைக்கொண்டபடிதான் ஓடிவந்தனர். ஆனால், மழையும் இருட்டும் அவர்களை எதிர்த்து நிற்கும் பறம்புவீரர்களை சரியாகக் கண்டுணர முடியாமல் செய்துவிட்டன.

முன்புறம் தனது படை நினைத்துப்பார்க்க முடியாத அழிவை அடைந்துகொண்டிருக்கிற செய்தி துடும்பனுக்கு எட்டியது.  `எதிரிகளின் பொறியில் மாட்டிவிட்டோமோ!’ எனத் துடித்துப்போனான் துடும்பன்.  `பாசறைத் தளபதி சொன்ன எச்சரிக்கை சரியாகிவிட்டதே!’ எனக் கருதி, தாக்குதல் நடக்கும் கிழக்கு முனைக்கு விரைந்தான். அவன் வரும்போது அழிவுற்ற அவன் படைவீரர்கள் மலையெனக் குவிந்து கிடந்தனர். இருட்டில் அவனுக்குக் காட்சிகள் எவையும் புலப்படவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்டவர்களின் மூச்சிரைப்பு, பேய்க்காற்றுபோல மழையையும் விஞ்சி கேட்டது. என்ன இது என்று மிரண்டு நிற்கையில், வெட்டி இறங்கியது ஒரு மின்னல்.

அந்த ஒளியில் தொலைவில் நின்றிருந்த உதிரன், துடும்பனை அறிந்தான். தடியங்காட்டுப் போர் தொடங்கியதிலிருந்து வேந்தர்களின் விற்படைக்குத் தலைமை தாங்குபவன் துடும்பன். எனவே, அவனது முகம் மனதில் ஆழப் பதிந்திருந்தது. வந்து நிற்பது அவன்தான் என அறிந்ததும், உருவிய வாளோடு பாய்ந்தான் உதிரன்.

வீசிய வாளோடு உதிரன் வருவது அறிந்து வாளோடு அவன் மீது பாய்ந்தான் துடும்பன். இரண்டு வாள்களும் முழுத்திறனோடு குறுக்கிட்டு வெட்டின. வெட்டிய கணத்தில் மின்னல் ஒளி முற்றாக மறைந்து இருள் நிலைகொண்டது. வேந்தர்படையினர் பயன்படுத்தும் வாளின் பிடி யானைத் தந்தத்தால் ஆனது. காயத்துக்குள் கங்குபட்ட கணத்தில் உச்சந்தலைக்கு ஏறும் அதிர்சூடுபோல வாளின் கைப்பிடி அதிர்வை உள்ளுக்குள் கடத்தியது. பறம்பினர் பயன்படுத்தும் வாளின் பிடி எருமைக்கொம்பால் ஆனது. அது வாளின் அதிர்வைக் கடத்தாது. உதிரனின் வாள் மோதிய கணத்தில் ஏற்பட்ட அதிர்வை துடும்பனின் கை உச்சந்தலையில் உணர்ந்தது. அப்போது கை தளர்ந்து, பிறகு மீண்டும் இறுகியது. அப்படி இறுகும்போது அவனது தலையைச் சீவிக் கடந்துகொண்டிருந்தது உதிரனின் வாள்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்