
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள் ஹாசிப்கான்
துப்புரவுப் பணியாளர் குடியிருப்பில், மேஸ்திரி தம்புரொட்டியின் சைக்கிள் நுழைந்தது. அனைத்துவித வாசங்களையும் பழகிய அவரது நாசி, கொஞ்சம் ஆடித்தான்போனது. மன்னாரு, மண்சட்டியில் சங்கரா மீனை கல்லு உப்பில் போட்டு ஆய்ந்துகொண்டிருந்தார். நன்றாக கால் நீட்டிப் படுக்கக்கூட முடியாத சீமை வேய்ந்த ஓட்டு வீடுகள், காரை பெயர்ந்த சுவர்களோடு சிரித்துக்கொண்டிருந்தன. குடியிருப்பின் பின்பகுதியில் குப்பைமேடு என்பதால், கைப்பம்பில் வரும் நீர்கூட காவா நீரைப்போல கருமை நிறம்கொண்டதாகவே இருக்கும். தெருத்தெருவாக மன்னாரு அண்டு கோ வாரி போட்ட குப்பை, அவர் பார்க்க மலையெனத் தோற்றம்கொண்டது. தூரத்திலிருந்து பார்த்தால் குப்பைமேடுகள் மலையாக மாறி, மலையடி வாரத்தில் குடில் அமைந்திருப்பதைப்போல இவர்களின் குடியிருப்பு வண்ண மாயாஜாலத்தைக்கொண்டிருக்கும்.

சில வேளைகளில், குப்பை மலையில் எங்கோ காஸ் உருவாகி குடலைப் புரட்டும் நாற்றம் காற்றில் ஊடாடிக்கொண்டிருக்கும். தம்புரொட்டிக்கு இங்கே வீடு இல்லை என்பதால், இந்த நாற்றம் அவருக்குப் பழகவில்லை. சங்கரா மீனின் செதில்களை அரிவாள்மனையால் செதுக்கிக்கொண்டிருந்தார் மன்னாரு. குப்பை மலையிலிருந்து பொறுக்கி வந்த, நைந்த வண்ணமிழந்த ஒரு பஞ்சு பொம்மைக்கு, மன்னாரின் பிள்ளை பொட்டு வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது தகப்பனைப் பார்த்துச் சிரித்துக்கொள்ளும் மழலையில்தான் மன்னாரு வாழ்கிறார்.
மேஸ்திரி தம்புரொட்டி, சைக்கிளை ஸ்டாண்டு போட்டார்; வீட்டு முற்றத்தில் அமர்ந்தார். காற்றில் கலந்துவந்த நாற்றத்தில் முகத்தைச் சுளித்துக்கொண்டார். ``ஒய்யாரம்... மேஸ்திரி வந்திருக்காரு பாரு... தண்ணி கொண்டா” என்று மீனின் செதில்களை முற்றிலும் களைந்தெடுத்தார். வீட்டுக்குள் இருந்து செம்போடு வெளிவந்த ஒய்யாரம், மேஸ்திரியிடம் நீட்டினாள். ஒருதடவை நீரைப் பார்த்துக்கொண்டார். மஞ்சளும் வெள்ளையுமாகப் பழுப்பு நிறத்தில் இருந்தது. கொஞ்சம் குடித்துக்கொண்டார்.
``ஏண்டா பையா, ஒருதடவ தோல் டாக்டராண்டதான் போயி காட்டலாம்ல... மீனு மாதிரி செதில் செதிலா... ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆவப்போதுடா” செம்பை கீழே வைத்தார்.

``நல்லா சொல்லுண்ணே... நானு எவ்ளோ தடவதான் சொல்றது... கேட்டா `குப்பக்காரன் ஒடம்பு, வேற எப்புட்றி இருக்கும்?’னு குடிச்சிட்டு வந்து சண்டபோடுதுண்ணா. நானும்தான் மலாரமா இருக்கேன். உடம்பைப் பாத்துக்கல்ல.”
மஞ்சள் பொடியை மீனுக்குத் தூவினார் மன்னாரு. ``ரோட்டோரமா ஒரு கிலோமீட்டருக்குப் பெருக்கிற உன் மலாரம் வேலைக்கு, ஒரு நோயும் அண்டாது. எறங்கி குப்பய வாரிப் போடு அப்ப தெரியும்.”
ஒய்யாரம் வாயை மூடிக்கொண்டாள்.
``மன்னாரு, வூட்டுக்காரி நல்லதுக்குதான்டா சொல்றா.”
ஒய்யாரம், செம்பை எடுத்து மீதம் இருந்த நீரை கோபமாகக் கீழே ஊற்றிவிட்டு உள்ளே சென்றாள்.
மீன்சட்டியை மூடி வைத்துவிட்டு, டவுசரிலிருந்து ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார் மன்னாரு. ``ஒய்யாரம் பயப்புடுதுண்ணா... எங்க அப்பன மாறியே யானைக்கால் நோயி வந்து... நானும் சீக்கிரம் போய்ச் சேர்ந்துடுவனோன்னு... டாக்டர்கிட்ட போனா... `உன் உடம்புக்கு குப்ப வார்றது செட்டாவாது... வேலைய உட்று’ன்றான்... `இல்ல சேஃப்டியா வாரு’ன்றான்... குப்ப வார்லன்னா பூவாக்குப் பிச்சதான் எடுக்கணும். எழுத, படிச்சிருந்தாலும் பரவால்ல. கால் வயத்துக் கஞ்சின்னாலும் கவர்மென்ட் கஞ்சிண்ணா. எப்டி உட்றது?” பீடியை இழுத்து புகையை நன்றாக விட்ட மன்னாரு ``புள்ளைய மட்டும்... படிக்கவெச்சுட்டு, நல்லா வாசனையான வேலைக்கு அனுப்புனா போதும்ணா” என்று பீடியை நசுக்கிச் சுண்டினார்.
மன்னாரின் பிள்ளை, பொம்மைக்குத் தலை வாரிக்கொண்டிருந்தது.
``மன்னாரு, வந்த விஷயத்த மறந்துட்டேன் பாத்தியா... டிபார்ட்மென்டல வருஷத்துக்குக் கல்விக்குன்னு குடுத்துட்டு இருந்தானுங்கல்ல 2,500 ரூபா... அது இந்த வருஷத்துலயிருந்து வராதுபோலக்குதுடா... ஜி.ஓ பாஸாவுலயாம்” என்றார்.
மன்னாரு இந்தக் காசை நம்பித்தான் இருந்தார். ஏற்கெனவே சொற்பமாய்ச் சேர்த்துவைத்திருந்த காசை வைத்தும் வருகிற 2,500 ரூபாயைச் சேர்த்தும் முதலில் ஒரு தொகையைக் கட்டிச் சேர்த்துவிட்டு... பிறகு எப்படியாவது ஸ்கூல் ஃபீஸைக் கட்டிவிடலாம் என நினைத்திருந்தார்.
திடீரென 2,500 ரூபாயை ரெண்டு நாளில் புரட்டுவது என்பது சிரமமான காரியம் எனச் சோர்ந்துவிட்டது மன்னாரின் முகம். ``மன்னாரு, இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல... அதுக்குள்ள பொரட்டிரலாம். இன்னிக்கு இருசப்ப மேஸ்திரி தெருவுல உனுக்கு கலெக்ஷன் போட்டிருக்கேன். ஒய்யாரம் மலாரத்துக்குப் போனா மாதிரி கணக்கு எழுதிடுறேன். காத்தால டிவிஷனுக்கு வந்துட்றா...” என்று மேஸ்திரி கிளம்பினார்.
திடீரெனத் திரும்பியவர் ``மீன்குழம்பு எனுக்கும் சேத்துக் கட்டிக்கினு வா... ஒய்யாரத்த சமாதானப்படுத்துடா பையா” மிதிவண்டியை மிதித்தபடி கிளம்பினார் மேஸ்திரி.
அந்திக் கருக்கலில் குப்பை மலையில் சூரியன் அமிழ்ந்துகொண்டிருந்தான். சாணம் மெழுகிய அடுப்பில் குழம்பு கொதித்துக்கொண்டிருந்தது. வீடு என்ற பெயரில் ஒரே அறை என்பதால், அடுப்பின் பக்கத்தில் உட்கார்ந்து மன்னாருக்குப் பிடிக்குமே என்று இரண்டு மீன் துண்டுகளின் மீது அரைத்துவைத்த மசாலாவைத் தடவிக்கொண்டிருந்தாள் ஒய்யாரம். சூரியன் முழுவதும் குப்பை மலையில் அடங்கிப்போயி ருந்தான். எரிந்துகொண்டிருக்கிற சுள்ளியின் வெம்மையால் விளைந்த வியர்வைத்துளிகள் இடுப்பில் முத்து முத்தாய் ஒய்யாரமாய்ப் பூத்திருந்தன. தகதகத்துக்கொண்டி ருக்கிற நெருப்பின் ஜுவாலையில் ஒய்யாரமாய் இருந்தாள் ஒய்யாரம்.

மன்னாரு, அவள் அருகே சென்று உட்கார்ந்துகொண்டார். அவனது சுட்டெரிக்கிற மூச்சின் சுவாசம் அறியாதவள் அல்ல ஒய்யாரம். ஆனாலும், கண்டுகொள்ளாமல் மீனுக்கு மசாலாவின் சேர்க்கையைக் கூட்டிக்கொண்டி ருந்தாள். ஒய்யாரம் கூட்டிவைத்த மசாலாவைக் கொஞ்சமாய் எடுத்து நாக்கில் வைத்தாலே தேவாமிர்தமாக இருக்கும் மன்னாருக்கு. ஆள்காட்டி விரலால் சல்லிசாக வழித்து எடுத்தவர் உள்நாக்கில் வைத்து உறிஞ்சினார். `ஸ்ப்பா’ என்று சப்புக் கொட்டியவர், ஒய்யாரத்தை அணைத்தார். அவள் விலக முயன்றாள். அவரது பிடியிலிருந்து விலகிவிடலாம்தான். ஆனாலும், விலக முடியாதவள்போல பாவனைகொண்டாள். ஒய்யாரத்தின் முகத்தைத் திருப்பினார். முகம் மட்டும்தான் கோபமாக நடித்துக்கொண்டிருந்தது. அவளது கண்கள் அத்தனை காதலாகக் கனிந்து இருந்தன. ஒய்யாரத்தின் உதட்டைக் கவ்வி ``கோவமா ஒய்யா?” என்றார்.
`` `டாக்டருகிட்ட காட்டுவன்’னு சொல்லு, அப்பத்தான்...” விலகாமல் சொன்னாள்.
``நாளிக்குப் போயி காட்றன்... செத்திருவன்னு பயப்படுறியா?” கீழ் உதட்டைச் சுவைத்துக்கொண்டார் மன்னாரு.
``உன்ன அப்டியெல்லாம் சாக உட்ற மாட்டன்” என்று ஒய்யாரம், மன்னாருவைத் தாண்டி முன்னேறினாள். குப்பை மலையிலிருந்து வந்துகொண்டிருந்த நாற்றமெல்லாம் நறுமணமாய் மாறி வீசத் தொடங்கியது.
டிவிஷனில் மேஸ்திரி தம்புரொட்டி, கலெக்ஷன் பாய்களுக்குத் தெருக்களைப் பிரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். மலாரம் பெண்கள் அனைவரையும் சூரியநாராயணா தெருவுக்கே போகச் சொன்னார். ``மினிஸ்ட்டரு, தொகுதி மக்களைப் பார்க்க வராரு. நீட்டா பெருக்கி பிளீச்சிங் பவுடரு போட்டிருக்கணும் புரியுதா...” என்று பெண்களைக் கிளப்பினார்.
அதில் ஒரு பெண் ``போனவாரம் இப்படித்தான் ஒரு மினிஸ்ட்ரு திடீர்னு ஒரு போட்டோக்காரரைக் கூப்புட்டு, என்னாண்ட இருந்த தொடப்பத்த வாங்கி... பெருக்குறா மாதிரி போஸ் குடுத்தான் மேஸ்திரி. இன்னான்னு கேட்டா, சுச்சு பாரத்துன்னு சொன்னான். இன்னா எழவுன்னே புரியல மேஸ்திரி” என்று மலாரம் பெண்கள் சிரித்தபடியே டிவிஷனிலிருந்து வெளியேறி னார்கள். மேஸ்திரி சிரித்துக்கொண்டார்.
மன்னாரு உள்ளே நுழைந்ததைப் பார்த்தார். ``ஏண்டா பையா, மீன்குழம்பு எடுத்துக்கினு வந்தியா?” என்று கேட்டார். எடுத்து வந்ததாகத் தலையசைத்து ஆபீஸுக்குள்ளே சென்றார். சோற்றுப்பையை வைத்துவிட்டு அலுவலக உடைக்கு மாறினார். வெளியே `07’ என்ற மன்னாரின் குப்பைவண்டி நின்றுகொண்டிருந்தது. மீன்பாடியைப் போன்ற வண்டிதான். இரண்டு நாள் முன்னர், பின் டயர் பஞ்சராகிப்போனதைச் சொல்லியும் பஞ்சர் போடாமல் அப்படியே வைத்திருந்ததைப் பார்த்து எரிச்சலடைந்தார். ஒரு தெருவின் குப்பைக்கூளங்கள் சுமார் 150 கிலோவிலிருந்து 200 கிலோ வரை சேர்ந்துவிடும். நல்ல டயர் இருக்கும் வண்டியிலேயே தள்ள முடியாது. இதில் பஞ்சர் என்றால் முழங்கை ஜாயின்ட், ஜோலி முடிந்துவிடும். ``மேஸ்திரி... பஞ்சர் போட சொன்னன்ல! நல்ல வண்டிய தள்ளினாலே ஜாயின்ட்லாம் உட்டுப்போது, இன்னா மேஸ்திரி” என்று அலுத்துக்கொண்டார்.
``டேய் நா இன்னாடா பண்றது... ஏ.இ-கிட்ட சொன்னா, `இதெல்லாம் ஒரு கம்ப்ளெயின்ட்டா?’ன்னு போறான்டா. நீயே போயி பஞ்சர் போட்டுக்கோ... இந்தா காசு” என்று 20 ரூபாயை எடுத்து நீட்டினார்.
தெருவுக்குள் குப்பைவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தார் மன்னாரு. ஒவ்வொரு வீட்டுக்கும் முன்னால் கழுத்தில் மாட்டியிருந்த விசிலைக்கொண்டு `குரூர்ரூலிங்க்’ என்று ஒலியெழுப்பினார். முதல் மாடியில் இருந்த ஒரு பெண், மேலிருந்தே வண்டியைப் பார்த்து பௌலிங் முறையில் குப்பையைப் போட்டாள். அவள் கட்டிய பேக்கிங் பிரிந்ததால் கருகிய ஒரு வாழைப்பழத் தோல் மன்னாரின் தலையில் விழுந்தது. ``ஸாரி குப்பை மேன்...” என்று மாடிப்பெண் வருத்தம் தெரிவித்தாள். `போனதடவை அவள் போட்ட குப்பையைவிட இது பரவாயில்லைதான்’ என்று, மன்னாரு அடுத்த வீட்டுக்குச் சென்று விசில் கொடுத்தார்.
இப்போது என் வீட்டில் வந்து நின்றது மன்னாரின் வாகனம். குப்பையைக் கொட்டிவிட்டுத் திரும்பியபோது ``கொஞ்சம் தண்ணி குடு நைனா” என்றார்.

``டீ சாப்புட்றீயா மன்னாரு?” கேட்டேன்.
மன்னாரு சரி என்பதுபோல தலையசைத்தார். தண்ணீரைக் குடித்து முடித்து தேநீரைக் குடிக்க ஆரம்பித்தார் மன்னாரு. ``இன்னா நைனா... தீபாளிலாம் வருது... ஏதும் கவனிப்பு இல்லியா?” தேநீரைக் குடித்து முடித்து லோட்டாவைக் கொடுத்தார்.
``குவார்ட்ரு வேணுமா... ஹாஃப் வேணுமா?” என்று கேட்டேன்.
``ஒரு 2,500 ரூபா எங்கியாவது வாங்கித் தர முடியுமா நைனா... குழந்தைய ஸ்கூல்ல சேக்கணும்...” என்றார். `நானே, சினிமாவில் ஏதோ பண்றேன் என்று சல்லிக்காசுகூட வீட்டுக்குத் தராமல் வாழ்ந்துகொண்டிருப்பவன். இவர் என்னையும் நம்பி இப்படிக் கேட்டுவிட்டாரே!’ என்று ஆச்சர்யமாக இருந்தது. ``அண்ணே கஷ்டண்ணே...” என்று இழுத்தேன்.
``பரவால்ல வுடு நைனா... தீபாளிக்கு குவார்ட்ரு மறந்துடாத... சரியா!” என்று வண்டியைத் தள்ள முடியாமல் தள்ளினார்.
மன்னாரை சிறுவயதிலிருந்தே நான் அறிவேன். எங்கள் தெருவைச் சுத்தம்செய்து, எங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள அவர் அசுத்தங்களைத் தாங்குபவர். நினைவுதெரிந்த நாளில் `வணக்கண்ணே’ என்று நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக என்னை தேவனைப்போல் தாங்குபவர். அவ்வப்போது ஒரு போத்தலை எனக்கு வாங்கிவந்து தந்துவிட்டு, தள்ளாட்டத்துடன் போகும் மன்னர், மன்னாரு. இன்று நான் காசு இல்லை என்றாலும் `குவார்ட்டர மறந்துடாத!’ என்று சொல்கிற பண்பாளர்.
வெகுநாள் கழித்து, காலரா ஆஸ்பத்தியில் மன்னாரை ஒய்யாரத்துடன் பார்த்தேன். முகத்தில் உள்ள தோலெல்லாம் செதில் செதிலாக உரிந்திருந்தது. என்னைப் பார்த்ததும் உற்சாகமாகிப்போனார், ``இன்னா நைனா இங்க... உடம்புக்கு ஏதும் நோவா?”
ஒய்யாரம், மருந்துச்சீட்டை எடுத்துக்கொண்டு பிள்ளையைத் தூக்கிக்கொண்டு மருந்தகத்துக்குச் சென்றார். ``இல்லண்ணா... அம்மாவுக்கு மாத்திர வாங்க வந்தேன். ஆமா, இன்னா ஏரியா பக்கமே ஆளக் காணோம்?” மன்னாரு சிரித்தபடியே லுங்கியைத் தூக்கி காலைக் காண்பித்தார். வலதுகால் தடித்து யானைக்கால் நோய் வந்திருந்தது. ஒரு மாதிரி அசூயையாய் இருந்தது எனக்கு.
``உங்க தெருவ சுத்தம் பண்ணதுல கெடச்ச பரிசு நைனா” என்று மறுபடியும் சிரித்தார். அவரின் சிரிப்பு எனது குற்றவுணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது.
``எவ்ளவோ சொன்னா ஒய்யாரம்... ஆரம்பத்துலேயே டாக்டரப் பாருன்னு... நான்தான் கேக்கல... இதே தெருவுல எங்க அப்பன் குப்ப வாருனா... இன்ஃபெக்ஷன் எடுத்து அவுனுக்கு காசமும் யானக்காலும் சேந்து வந்துச்சு. எனக்காவது பரவால்ல, யானக்கால் மட்டும்தான்” என்று மன்னாரு சிரித்தார்.
நமது கழிவுகளை வாரிக் கொட்டுகிற ஒரு சமூகத்தை இப்படி நோயும் சகதியிலும் வாழப் பழக்கிவிட்ட நாம், எவ்வளவு கீழ்மையானவர்கள்! எந்தப் பாதுகாப்புமற்ற ஒரு வாழ்வை அவர்களுக்கு லாகவமாகத் தந்துவிட்டு, பெருமையோடு `குலத்தொழில்’ என்று அவர்களையே நம்பவைக்கும் மோசடிக்காரர்கள் நாம்.
``அண்ணா, கொழந்தய ஸ்கூல்ல சேத்து உட்டியாண்ணா?” என்று கேட்டபோது, ஒய்யாரம் பிள்ளையோடு மருந்தை வாங்கிக்கொண்டு வந்தார்.
``சேத்துட்டேன் நைனா... எங்க உசுரக் கொடுத்தாவது என் புள்ளய படிக்கவெச்சுருவேன். எங்க அப்பன், தலையில மலத்த சுமந்தான். நான், குப்பய சுமந்தேன். என் புள்ளையும் மலாரமா ரோட்லபெருக்கக் கூடாது நைனா. அது வாசனையா ஒரு வேலைக்குப் போணும். ஒரு காலம் வரும், அவனவன் கழிவ அவனவனே எடுத்துப் போடணும்னு. அப்போ தெரியும் இத்தன வருஷமா நாங்க பட்ட கஷ்டம்” என்று எழுந்தார் மன்னாரு.
``சரி நைனா, கெளம்புறேன். அம்மாவ கேட்டேன்னு சொல்லு” என்று மூவரும் நடந்தார்கள். திரும்பிய மன்னாரு ``நைனா, தீபாளி குவாட்ரு... வாங்கியே தரல பாத்தியா” என்று சிரித்தபடியே நடந்து போனார். உண்மைதான். மன்னாருக்கு எதுவும் செய்ய லாயக்கற்றவனாய் அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒய்யாரத்தின் மெலிந்த இடுப்பில் உட்கார்ந்திருந்த பிள்ளை, என்னைப் பார்த்துச் சிரித்தது. நம்பிக்கையின் ஒளிக்கீற்றை அந்தச் சிரிப்பில் நான் பார்த்தேன்.
- மனிதர்கள் வருவார்கள்...