மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - சோனமுத்து - 19

தெய்வ மனுஷிகள் - சோனமுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வ மனுஷிகள் - சோனமுத்து

கஷ்டம்னு வர்றவங்களுக்கு பார்வையாலேயே ஆறுதல் சொல்லி குளிரவெப்பாங்க இந்த ரெண்டு பேரும்...

நீலன் இருக்கானே... அவன்தான் அந்த ஊருக்கு வெளுப்புத் தொழிலாளி. அவனும் மனைவி மாடத்தியும் அதிகாலையில வீட்டைவிட்டுக் கிளம்புனா சூரியன் சாயுற வரைக்கும் வீடு வீடாப் போயி அழுக்குத்துணி எடுப்பாக. வாரத்துல ஒருநாளு, உப்பு மண்ணை ஊறப்போட்டு, ஆத்தங்கரையில வெள்ளாவி வெச்சு வண்ணாந்துறையில துவைச்சு, காயப்போட்டு நெருப்புப்பொட்டி வெச்சு தேச்சு துப்புரவாக் கொண்டுபோய் கொடுப்பாக. கஞ்சியோ, கூழோ, நெல்லோ, ராகியோ கையில கிடைக்கிறதை ஊராளுக கொடுப்பாக. அதை வெச்சுத்தான் சீவனம். 

தெய்வ மனுஷிகள் - சோனமுத்து
தெய்வ மனுஷிகள் - சோனமுத்து

ரெண்டு பேருக்கும் தீராத ஒரேயொரு மனக்குறை இருந்துச்சு, ஆசையா சீராட்டிப் பாராட்டி வளர்க்க ஒரு வாரிசு இல்லை. போகாத கோயிலில்லை. இருக்காத விரதமில்லை. ஒருகட்டத்துக்கு மேல ரொம்பவே ஒடைஞ்சுபோனா மாடத்தி. ஒருநா, புருஷன் இல்லாத நேரத்துல அரளிக்காய அரைச்சுக்குடிச்சுட்டா. குத்துயிரும் குலையுயருமா கெடந்த அவளைக் தூக்கிட்டு வைத்தியச்சிக்கிட்ட ஓடுனான் நீலன். உப்பைக் கரைத்து ஊத்தி வெஷத்தை வெளியில எடுத்துக் காப்பாத்துனா வைத்தியச்சி. ‘இந்தளவுக்குப் போயிட்டாளே’னு நீலன் மனசுடைஞ்சு போயிட்டான். 

பழந்துணி எடுக்கப்போகும்போது ஊருல ஒரு பெரிய மனுஷி, “ஏண்டா நீலா...  சங்கரன்கோயிலு போயி ஒரு நாப்பத்தெட்டு நாளு கோயில்ல உக்காந்து மடிப்பிச்சை வாங்கிச் சாப்பிடச் சொல்லுடா ஒம் பொம்மனாட்டிய...”னு சொன்னா.

‘இதையும் பாத்துருவோம்’னு மாடத்தியும் நீலனும் சங்கரன்கோயிலுக்குக் கௌம்புனாக. நாப்பத்தெட்டு நாளு கோயில்லயே உக்காந்து வர்ற போற ஆளுங்ககிட்டயெல்லாம் மடிப்பிச்சை வாங்கிச் சாப்பிட்டாக. சாமி கருணையில அடுத்த ரெண்டாம் மாசம் முழுகாம இருந்தா மாடத்தி.

பத்தாம் மாசம் அழகான ஆம்புளைப் புள்ளையப் பெத்தெடுத்தா மகராசி. புள்ளைக்கு ‘மூர்த்தி’னு  பேரு வெச்சாக. சின்ன வயசுலேயே மந்திரம், தந்திரமெல்லாம் கத்துக்கிட்டு திறமையா வளர்ந்தான் மூர்த்தி.  ஊர்ல எல்லாரும் அவனை `மந்திரமூர்த்தி'ன்னு கூப்பிட ஆரம்பிச்சாக.

தெய்வ மனுஷிகள் - சோனமுத்து
தெய்வ மனுஷிகள் - சோனமுத்து



மந்திர மூர்த்திக்கு வயசு பதினாறாச்சு. அண்டையூர்ல இருந்தெல்லாம் ஆளுக தேடி வர ஆரம்பிச்சாக. ஆளு கம்பீரமா ஆறடிக்கு இருப்பான். அதனால ‘தடிவீரன்’, ‘தடிவீரன்’னு அவனுக்கு இன்னொரு பட்டப்பேரு வந்திருச்சு.

ஒருநாள் காலையில அழுக்குத்துணிகளை வண்டியில ஏத்திக்கிட்டு துறைக்குப் போய்க்கிட்டிருந்தான் மூர்த்தி. வழியில பனியில குளிச்ச பூ மாதிரி ஆத்துல குளிச்சுட்டு தோழிகளோடு வந்துக்கிட்டிருந்தா சோனமுத்து. அவளைப் பார்த்தவுடனே மூர்த்தி வண்டி தானா நின்னுருச்சு.

சோனமுத்துவுக்கும் தடுமாற்றமாப்போச்சு. ‘யாரு இவன்... இவ்வளவு தைரியமா வண்டியை நிறுத்திட்டு நம்மளப் பார்த்துக்கிட் டிருக்கானே'ன்னு ஆச்சர்யம் ஒருபக்கம். வெட்கம் மறுபக்கம். ஆனாலும், மூர்த்தியோட வெள்ளந்தியான பார்வை புடிச்சிருந்துச்சு. அவளையறியாம லேசா சிரிச்சா சோனமுத்து.

மூர்த்தி வண்டியில இருந்து இறங்குனான். சோனமுத்துகிட்டப் போய், “உன் பேரென்ன ஆத்தா”னு கேட்டான். “எம்பேரு சோனமுத்து”னு சொல்லிட்டு விறுவிறுன்னு நடந்தா சோனமுத்து. மூர்த்திக்கு வானத்துல பறக்குறமாதிரி இருந்துச்சு. என்ன ஒரு குரல்... என்ன ஓர் அழகு... என்ன ஒரு வசீகரம்... சோனமுத்துக்கும் நிலைகொள்ளலே. திரும்பித்திரும்பி பாத்துக்கிட்டு நடந்தா. துறைக்குப் போய் விறுவிறுன்னு வெளுக்க ஆரம்பிச்சான் மூர்த்தி. என்னிக்கும் இல்லாத மாதிரி இன்னிக்கு வேலை பலமடங்கு வேகமா நடந்துச்சு. 

தெய்வ மனுஷிகள் - சோனமுத்து
தெய்வ மனுஷிகள் - சோனமுத்து

சோனமுத்து சாதாரணக் குடும்பத்துப் புள்ளையில்லை. ராஜாக்கிட்ட அதிகாரியா வேலை பார்க்குறவனோட மவ.  உடன் பிறந்தவங்க ஏழு அண்ணனுங்க. ‘ம்’னா அருவா தூக்குற கூட்டம். ஆனா, காதலுக்கு முன்னாடி அதிகாரி என்ன, அம்பலம் என்ன...
 
தினமும் காலையில மூர்த்தியைப் பாக்கவே குளிக்கப்போக ஆரம்பிச்சா சோனமுத்து. சோனமுத்தைப் பார்க்கவே வெளுக்க வர ஆரம்பிச்சான் மூர்த்தி. ரெண்டு பேரும் பார்வையாலயே பேசிக்கிட்டாக. காதல் அதுபாட்டுக்கு காட்டுக்கொடி கணக்கா விறுவிறுன்னு வளர ஆரம்பிச்சுச்சு.

ஒருநாள் சாயங்காலம் ஆத்தங்கரையோரமா ரெண்டு பேரும் உக்காந்து பேசிக்கிட்டிருந்தாக. மூர்த்தி கலக்கமா பேசுனான்... “நாம ரெண்டு பேரும் சேர முடியுமா? உங்க அப்பனுக்கும் அண்ணனுங்களுக்கும் தெரிஞ்சா என்னைய கொன்னுல்ல போட்டுருவாங்கே...”னான். அவன் தலையைக் கோதிவிட்ட சோனமுத்து, “எங்க அப்பனும் சரி, அண்ணனுங்களும் சரி, நான் நல்லா வாழணும்னுதான் நினைப்பாங்க. நான் உசுரோட இருக்கிற வரைக்கும் உனக்கு ஒண்ணும் ஆகாது... எங்க குடும்ப சம்மதத்தோடு நமக்குக் கல்யாணம் நடக்கும்”னு ஆறுதல் சொன்னா சோனமுத்து. மூர்த்தியை மடியில சாச்சு ஆறுதலா தலைகோதி விட்டா.

சோனமுத்துவுக்கு ஒரு மாமங்காரன் உண்டு. கட்டுனா சோனமுத்துவத்தான் கட்டுவேன்னு கல்யாணமே கட்டாம நிக்குறான். சோனமுத்து வுக்கு அந்தப் பயலைக் கண்டாலே பிடிக்காது. அந்தப் படுபாவி, மூர்த்தியும் சோனமுத்துவும் ஒண்ணாயிருக்கிறதைப் பார்த்துப்புட்டான். கண்ணெல்லாம் செவந்துபோச்சு. உடம்பு நடுங்குது. `அடிப்பாவி மவளே. உனக்காக ஒருத்தன் காத்துக்கிட்டிருக்கேன். நீ ஊர்த்தொழிலாளி கூட உக்காந்து பேசிக்கிட்டிருக்கியா'னு மனசுக்குள்ள பேசிக்கிட்டு நேரா சோனமுத்து வீட்டுக்கு ஓடுனான். அண்ணங்காரனுங்களைப் பார்த்து, “என்னய்யா புள்ளை வளக்குறீக... ஊருக்கு ஒதுக்குப்புறமா வெளுக்குற பயலோட உரசிக்கிட்டு உக்காந்து பேசிக்கிட்டிருக்கா உங்க தங்கச்சி...  வீட்டுக்குள்ள கெடக்குறீகளேய்யா...”னு  போட்டுக் குடுத்துட்டான். 
 
இந்தச்சூது அறியாம சோனமுத்துவும் மூர்த்தியும் வெள்ளந்தியா உக்காந்து பேசிக்கிட்டிருந்தாக. கொலவெறியோடு ஏழு அண்ணங்காரங்களும் அவுகளைச்சுத்தி வளைச்சுட்டானுக. சோனமுத்து பார்த்துட்டா. மூர்த்தியைக் கொலை செய்யாம விடமாட்டானுவனு தெரிஞ்சுபோச்சு. மெதுவா மூர்த்திக்கிட்டச் சொன்னா. “மூர்த்தி எப்படியாவது தப்பிச்சு ஓடிரு. என் அண்ணனுங்க உன்னை கொலை செய்ய கூடிட்டானுக.”

மூர்த்தி தாவிக்குதித்து ஆத்துக்குள்ள விழுந்தான். ஏழு பயலுகளும் அவனைத் துரத்துனானுக. வேகவேகமா நீந்தி அக்கரைக்குப் போன மூர்த்தி காட்டுக்குள்ள ஓடி ஒளிஞ்சுட்டான். `எங்க கையாலதாண்டா உனக்குச் சாவு'னு கர்வம் கட்டிக்கிட்டு சோனமுத்துவை இழுத்துக்கிட்டு ஏழு பேரும் வீட்டுக்குப் போயிட்டானுவ.

சோனமுத்தோட அப்பன், ராஜாவுக்குச் சேதி சொல்லி ‘எப்பிடியாவது அந்தப்பயலைப் புடிச்சு கழுவுல ஏத்தணும்’னு வேண்டிக்கிட்டாரு. ராஜாவும் மூர்த்தியைப் பிடிக்க பெரிய படையைக் காட்டுக்குள்ள அனுப்பி வெச்சாரு. மூர்த்தி காட்டு விலங்குகளை அடிச்சுத் தின்னுக்கிட்டு அந்தப் பக்கமே சுத்திக்கிட்டுத் திரிஞ்சான். படை இண்டு இடுக்குள்ளாம ஆறேழு மாசம் தேடியலைஞ்சு மூர்த்தியை ஒரு குகைக்குள்ள வெச்சுப் புடிச்சுக் கொண்டாந்துச்சு.

ராஜா என்ன ஏதுனு விசாரிச்சாரு. மூர்த்தி செஞ்சது தப்புனு தீர்ப்புச் சொல்லி மரணதண்டனை விதிச்சாரு. ரெண்டு துண்டா வெட்டி தண்டனையை நிறைவேத்தணும்னு ஆளுகளுக்கு ஆணையிட்டாக. அந்த ஆளுக மூர்த்தியைக் கூட்டிக்கிட்டுப் போயி ரெண்டு துண்டா வெட்டி, தலையொரு பக்கம் உடம்பொரு பக்கமா வீசுனாக.  

சேதி சோனமுத்துவுக்குப் போச்சு. மகராசி கதறித் துடிச்சா. ‘அய்யோ... எம்மேல ஆசைப்பட்ட பாவத்துக்கு இப்படி அநியாயமா உசுர விட்டுட்டானே’னு அழுது கத்துனா. அண்ணனுங்களும் அப்பனும் எவ்வளவோ ஆறுதல் சொன்னாக. அவளுக்கு மனசு ஆறலே. அப்பங்காரனோட இடைவாளை எடுத்துத் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கிட்டா.  

இதுநடந்து கொஞ்சநாள்ல சோனமுத்துவோட அப்பன் வலிப்பு வந்து செத்தான். அண்ணங்காரனுகளுக்கும் பல தொல்லைகள். எல்லாத்துக்கும் காரணம், அகாலமா செத்துப்போன மூர்த்தியும் சோனமுத்துதான்னு புரிஞ்சுக்கிட்டு நம்பூதிரிமாரை அழைச்சுவந்து சாங்கியம் பார்த்தானுக. ‘ரெண்டு பேரும் தெய்வப்பிறவிக. அவுகளுக்கு கோயில்கட்டி சிலையெடுத்துக் கும்புடுங்க. உங்க கஷ்டமெல்லாம் தீரும்’னு சொன்னாரு நம்பூதிரி. ஏழு அண்ணங்காரனுகளும் ஆளுக் கொரு திசையில கோயிலெடுத்துக் கும்புட சோனமுத்து, மூர்த்தியோட ஆன்மா அமைதியடைஞ்சுச்சு.

இப்போ, சோனமுத்துவும் தடிவீரனும் திருநெல்வேலி - திருச்செந்தூர் பாதையில இருக்கிற வி.என்.சத்திரம் என்கிற ஊர்ல குடியிருக்காக. இப்போ அவுகளுக்கு ஏகப்பட்ட பரிவாரக்காரக இருக்கா. அவுகளை மீறி யாரும் கிட்ட நெருங்க முடியாது. கஷ்டம்னு வர்றவங்களுக்கு பார்வையாலேயே ஆறுதல் சொல்லி குளிரவெச்சு அனுப்புறாக ரெண்டு பேரும்! 

வெ.நீலகண்டன் - படம் : எல்.ராஜேந்திரன் - ஓவியம் : ஸ்யாம்