
குறுந்தொடர்
வனிதா பஸ்ஸைவிட்டு இறங்கி, சாலையைக் கடப்பதற்கு முன் தலையைத் திருப்பி இரண்டு பக்கமும் பார்த்தாள். எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றால் இந்த ஜாக்கிரதைக்கு ஓர் அர்த்தமும் இல்லை. ஆனாலும், அப்படிப் பார்த்ததால் அவளுக்கு விதியின்மீது நம்பிக்கையில்லை என்று சொல்ல முடியாது. விதியை நொந்துகொண்டுதான் பார்த்தாள்.
சாலையைக் கடந்ததும் எதிர்ப்புறம் இருந்தது ஒரு சிறிய சந்து. அவள் வேலை செய்யும் கார்மென்ட் அங்கிருந்து சில நூறடி தூரத்தில் அந்தச் சந்துக்குள்தான் இருந்தது.
இன்று ரமேஷிடம் தெளிவாகப் பேசிவிட வேண்டும் என ராத்திரி முதலே முடிவெடுத்திருந் தாள். ஆனாலும், விடியலில் வெளிச்சத்தைப் பார்த்தபின் அந்தத் திட்டம் உள்ளே போய் ஒளிந்துகொள்வது அவளுக்கே தெரிந்தது. வெளிச்சம்கண்டு அஞ்சுவதா உறுதி? வைராக்கியத்தையும் மனோதிடத்தையும் அடிக்கடி சேர்த்துவைத்து இறுக்கி கயிறாக்கி நெஞ்சில் நிலைநிறுத்த வேண்டியிருந்தது.
சந்துக்குள் நடந்தபோது அவருடைய உடன் பணித் தோழிகள் சிலரும் சேர்ந்துகொண்டனர்.
ரமா கேட்டாள்... ‘‘வனிதா இன்னிக்கு அவன்கிட்ட தெளிவா பேசுடுடீ’’ என்று கிசுகிசுத்தாள்.
‘‘உம்’’ என்ற வனிதாவின் குரல், அவள் காதுக்கே கேட்கவில்லை.
‘‘சொல்றது புரியுதா?’’ என்றாள் ரமா.
வனிதா, இந்த முறை தலையசைத்தாள்.

வாயிலை நெருங்கியதும் அமைதிக்கான எல்லைபோல எல்லோருமே பேசுவதை நிறுத்தி டைம் ஆபீஸில் அட்டையைப் பதிந்துவிட்டு, கார்மென்ட் செக்ஷனுக்குள் இயந்திரம்போல நுழைந்தனர். ஒரே சீரான ஓய்வில்லாத நெருக்கடியான டைலரிங் வேலை. ஒவ்வொரு நாளும் யாருக்கு இவ்வளவு டீஸர் என்பதை ரமேஷ்தான் முடிவுசெய்வான். சூப்பர்வைசர், மேனேஜர் என எப்படி வேண்டுமானாலும் அவனை மதித்துக்கொள்ளலாம். அது அவனை மதிக்கிறவர்களின் பாடு. சிலருக்கு அவன் எம்.டி மாதிரியும்தான். அஞ்சுவதுபோல மதித்தால் அவனுக்கு இன்னும் பிடிக்கும். அதற்கேற்ப அவனுடைய கிரீடத்தில் இறகுகள் ஏறிக்கொள்ளும். வனிதா, அவனைக் காதலன் அந்தஸ்து கொடுத்ததுதான் இப்போது பிரச்னை.
ஒரே சீரான உடம்பு. உடை நேர்த்தி. ரோல்ட்கோல்டு வாட்ச். முனை மின்னும் ஷூ. நடைக்கேற்ப அதிர்ந்து அடங்கும் சீராக வெட்டப்பட்ட தலைமுடி என ஒட்டு மொத்தமான ஒரு கட்டுக்கோப்பு அவனிடம் இருந்தது. அது அவளுக்குப் பிடித்தது. அந்த கார்மென்ட் வேலையில் தலையைக் கவிழ்ந்து மெஷினில் கவனம்செலுத்தும் நூறு பெண்களில் தலைநிமிர்ந்து பார்க்க வைத்தவள் அவள்தான். ஆரம்பத்தில் அவள் ரமேஷிடம் எந்த ஈடுபாடும் காட்டவில்லை. ஓர் அதிகாரி என்ற இடைவெளி மட்டும்தான் அவளிடம் இருந்தது. அந்த இடைவெளியைப் போக்குவது ரமேஷுக்குக் கடினமாக இருந்தது. எதேச்சையாக அவள் நிமிர்ந்தபோது அவசரமாகச் சிரித்தான். ரமேஷ் ஆளுடைய பார்வைக்காக ஏங்குவது தெரிந்தது.
அவனாகவே வந்து, ‘‘என்ன மேடம் இன்னிக்கு செம ஜாலியா இருக்கீங்க...?’’, ‘‘என்ன வனி கண்டுக்கவே மாட்றீங்க?’’ என்றெல்லாம் தூண்டிலாகப் பேசிக்கொண்டிருப்பான். அவள் எளிதில் சிக்கவில்லை.
வனிதாவுக்கு ஒரே ஓர் எச்சரிக்கை உணர்வு இருந்தது. ‘நம்ம தகுதிக்கு அப்பாற்பட்டவன்’ என்பதுதான். அவன் அதிகபட்ச கனவாக இருந்தான். அவன் இறங்கிவந்தான். ஓவர் டைம், அதிக ஆர்டர் என்று அவளுக்குச் செல்ல சிக்னல்கள் கொடுப்பதற்கு அவனுக்கு வாய்ப்பு இருந்தன.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஐஸ்க்ரீம் சாப்பிட, சினிமாவுக்குப்போக, கடற்கரையில் காற்று வாங்க, மால்களில் உலவி மகிழ... காதலுக்கு போதுமான இடங்கள் இருந்தன.
ஒருமுறை புதுச்சேரியில் அன்னை ஆசிரமம் போய் வரலாமா என்று அக்கறையாக அழைத்தான். குளோபல் கோயிலுக்குப் போக வேண்டுமானால் ஒருநாள் முன்னரே விண்ணப்பிக்க வேண்டும் என்று சில விதிமுறைகள். ஒருநாள் தங்கியிருந்து பார்த்து விட்டுப் போகலாமா என்ற அவனுடைய கேள்வியில் ஆன்மிகம் மட்டும்தான் தெரிந்தது. வீட்டுக்குப் போன் செய்து கம்பெனியில் டூர் அழைத்து வந்திருப்பதாகச் சொல்லி சமாளித்தாள். ஹோட்டலில் தங்கினர்.
சென்னை வந்த பிறகு ரமேஷின் போக்கில் மாறுதல். கொஞ்சம் விலகி இருப்பது போலவே இருந்தது. திரும்பத் திரும்ப வலிந்து போன் செய்து பேச வேண்டியிருந்தது. புதுச்சேரி தங்கலுக்குப் பிறகு வனிதாவுக்கு ரமேஷ் வேறுமாதிரி இருந்தான். அவளோ அதற்குப் பிறகுதான் ரமேஷ்மீது தீவிர காதலாக இருந்தாள்.
இந்த முறை போன் செய்தால் ஒரு தடவை ``ஹலோ என்ன விஷயம்?'' என்றான். ஒருமுறை, ‘‘சும்மா டிஸ்டர்ப் பண்ணாதே. எம்.டி கூட இருக்கேன்'' என்று அலுத்துக்கொண்டான்.
இந்த நேரத்தில்தான் ரமா, அமில ரகசியத்தை காதில் ஊற்றினாள்.
‘‘ரமேஷுக்கு அடுத்த மாசம் கல்யாணமாம்டீ.’’
வனிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இதை எப்படி நேராகக் கேட்பது என்றுதான் நினைத்தாள். கேன்டீன் பக்கம் காத்திருந்து அவனைப் பிடித்தாள். ‘‘கேள்விப்பட்டேன்... உண்மையா?’’ என்றாள்.
‘‘என்னத்தைக் கேள்விப்பட்டே... வேலை நேரத்தில இங்கே என்ன பண்றே?’’ என்ற தொனியில் சூப்பரவைசர்தான் இருந்தான்; ரமேஷ் இல்லை.
‘‘ரமேஷ்... உங்களுக்குக் கல்யாணம்னு சொன்னாங்க’’ என்றாள்.
‘‘ஆமா’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி கடந்தான். வேகமாகச் சென்றவன், நின்று திரும்பி, ‘‘பேர் சொல்லி கூப்பிடற வேலையெல் லாம் வெச்சுக்காதே’’ என்றான் கட்டளைக்குரலில்.
- அதிர்ச்சி தொடரும்
தமிழ்மகன் ஓவியம் : ஸ்யாம்