மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 109

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

ஓவியங்கள்: ம.செ.,

பொழுது விடிந்தது. கதிரவனின் ஒளிக்கீற்று எங்கும் பரவியது. இரலிமேட்டின் பெரும்பாறையின் மீது அடுக்கிவைக்கப்பட்டிருந்த வீரர்களின் உடல்கள் மீது மழைநீர் படாமலிருக்க, கிடுகுகளால் ஆன படல்களைக்கொண்டு மேல்மறைப்புகளை உருவாக்கியிருந்தனர். உடல்களின் தலைமாட்டில் வாரிகையன் உட்கார்ந்திருந்தார். வலதுபக்கக் கீழ்த்திசையில் முறியன் ஆசான் இருந்தார். இடதுகோடியில் ஆயுதப் பொறுப்பாளனான முதுவேலன் இருந்தான். இவர்கள் மூவரைத் தவிர மற்ற எல்லோரும் மலையை விட்டுக் கீழிறங்கிவிட்டார்கள். வயதானவர்கள், இதுநாள் வரை போருக்குத் தேவையான பணிகளை மட்டுமே செய்துகொண்டு இரலிமேட்டிலும் நாகக்கரட்டிலும் இருந்தனர். நேற்று மாலையோடு போர் முடிந்துவிட்டது. அதன் பிறகு நடக்கத் தொடங்கியது அழித்தொழிப்புதான். அறம்பிறழ்ந்தவர்களை அழித்தொழிக்கும் அறச்சீற்றம்தான். அதில் யாவரும் பங்கெடுக்கலாம் என்பதால் வயதானவர்களும் கீழிறங்கினர். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 109

நேற்று தாக்குதலுக்கான சொற்களைப் பாரி அறிவித்த கணத்திலிருந்து பன்மடங்கு பணியாற்றினர் முதுவேலனும் முறியன் ஆசானும். பறம்பில் உள்ள அத்தனை பேரும் ஒரே நேரத்தில் கீழிறங்கித் தாக்கவேண்டுமென்றால், அனைவரிடமும் போதுமான அளவுக்கு ஆயுதங்கள் இருக்க வேண்டும். யார் யார் எந்தப் பக்கம் போகப்போகிறார்கள்; அவர்கள் தாக்கவேண்டிய எதிரிகளின் படை அமைப்பு எப்படி என்று பேசி முடிவெடுத்து ஆயுதங்களைக் கொடுத்தனுப்பவெல்லாம் நேரமும் சூழலுமில்லை. பரப்பப்பட்டுக் கிடந்த சூளூர் வீரர்களின் குருதியை உடலில் பூசியபடி எழுந்து வந்த பறம்பு வீரர்கள், கைகளில் சிக்கியவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். முதுவேலனால் ஒருகட்டத்துக்குமேல் வழிமுறை செய்ய முடியவில்லை. குகைகளின் கடைசி எல்லை வரை அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் ஒன்றுவிடாமல் கொடுக்கப்பட்டுவிட்டன. ஒற்றை அம்புகூட மிச்சம் இல்லாமல் அனைத்தும் பயன்பாட்டுக்குப் போய்விட்டன. ஆனாலும் அவன் மனதில் கவலை இருக்கத்தான் செய்தது.

இறங்கித் தாக்கி எதிரிகளைக் கூண்டோடு அழிக்கும் முடிவைப் பாரி சொன்னவுடன் தயங்கி நின்றவன் முதுவேலன்தான். அழித்தொழிப்புப் போருக்காக மலையை விட்டுக் கீழே இறங்கிவிட்டால் வேலை முடிந்த பிறகுதான் திரும்பி வர முடியும். வேந்தர்களின் படையில் இப்போதைய நிலைமையில் நாற்பதாயிரம் பேர் இருக்கக்கூடும். அவர்களை முழுமையாக அழித்தொழிக்கும் அளவுக்கு நம் வீரர்களின் கையில் போதுமான ஆயுதங்கள் இருக்க வேண்டும். ஆனால், நம்மிடம் வில் - அம்பு மட்டுமே தேவையான அளவு இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதலில் அதிகம் பயன்படுபவை அருகில் இருந்து தாக்கும் ஆயுதங்கள்தான். குறிப்பாக வாள் வகைகள்.

அனைத்து வீரர்களும் ஒன்றுக்கும்மேற்பட்ட வகை ஆயுதங்களை வைத்துக்கொண்டு இறங்குவதுதான் சரியான நடவடிக்கையாகும். ஆனால், ``அவ்வளவு ஆயுதங்கள் கைவசம் இல்லை’’ என்று முதுவேலன் சொன்னான். ஆயுதங்கள் போதுமான அளவு இல்லை என்பதால் எதிரிகளை அழிக்காமல் விடமுடியாது. `மாற்று என்ன?’ எனச் சிந்தித்தபோதுதான் வாரிக்கையன் அணலியை இறக்கும் ஆலோசனையைச் சொன்னார். அவர் அதைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே முறியன் ஆசான் இருள்வேலமரத்தின் சிவப்புப் பிசினை எடுத்துவர தன் மாணவர்களை அனுப்பிவிட்டார். எதிரிகளின் இரண்டு பாசறைகளில் இருக்கும் எண்ணற்ற வீரர்களின் மீது முதல்கட்டத் தாக்குதலை இந்தப் பூச்சி இனங்கள் நடத்தட்டும். அதிலிருந்து தப்பி வருகிறவர்களை மட்டும் ஆயுதங்களால் தாக்கினால் போதும் என்று முடிவெடுக்கப்பட்டது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 109

அதன்படி பாண்டிய, சோழப் பாசறைகளிலிருந்து தப்பி வருகிறவர்களைத் தாக்கப்போகும் விண்டன் தலைமையிலான வீரர்களுக்கு மிகக் குறைவான ஆயுதங்களே கொடுக்கப்பட்டன. இரண்டு பாசறைகளிலும் சுமார் இருபதாயிரம் வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் பூச்சியினங்களின் தாக்குதலுக்குத் தப்பிப்பிழைத்து இருளுக்குள் ஓடிவருகிறபோது வாளையும் ஈட்டியையும் அவர்களை நோக்கி மடக்கிப் பிடிப்பதே போதுமானது. அதற்கு ஏற்பவே ஆயுதங்கள் கொடுத்தனுப்பப்பட்டன.

அதேபோல சேரனின் படையை நோக்கி உதிரன் தலைமையிலான வீரர்கள் அனுப்பப்பட்டனர். பின்னிரவில் மேற்குத் திசையிலிருந்து தாக்குதல் தொடுத்து அவர்களை வெளியேற்றும் நிலையை உருவாக்கினால் கிழக்குத்திசையில் அழித்தொழிப்பு வேலையைச் செய்ய முடியும் எனக் கணித்து அதற்கு ஏற்ப ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன.

நடுவில் மூஞ்சல் நோக்கிச் சென்ற முடியன் தலைமையிலான குழுவுக்குத்தான் அனைத்து வகையான ஆயுதங்களும் தேவைப்பட்டன. மூவேந்தர்களைச் சுற்றி நிற்கும் சிறப்புப் படைகளையும் நீலனைச் சிறைப்பிடித்து நிற்கும் கவசப்படையையும் எதிர்கொள்வதற்கான முழுமையான அளவு ஆயுதங்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. ஆனாலும் அவ்வளவு ஆயுதங்கள் இல்லை. இரவாதனின் வீரமரணம், அந்த இரவில் ஆயுதங்களே இல்லாமல்கூட போரிடும் வலிமையை ஒவ்வொரு பறம்புவீரனுக்கும் வழங்கியிருந்தது. எனவே, முதுவேலன் என்ன கொடுக்கிறானோ அதை வாங்கிக்கொண்டு வீரர்கள் புறப்பட்டனர்.

எதிரிகள் மூஞ்சலில் சேகரித்துவைத்திருந்த நஞ்சின் வகைகளைப் பற்றி அலவன் மூலம் அறிந்திருந்த முறியன் ஆசான், அதற்கான மாற்றை உருவாக்கியிருந்தார். இறுதிக்கட்டத் தாக்குதலில் எதிரிகள் அதைப் பயன்படுத்தக்கூடும் எனக் கருதிய அவர், மூஞ்சலைத் தாக்கப்போகும் முடியனின் படைக்கு மட்டும் அவற்றைக் கொடுத்தார். ஒரு கடலைச்செடியில் எண்ணற்ற கடலைகள் இருப்பதுபோல் கொத்துக்கொத்தாக அந்தக் கிழங்குகள் இருந்தன. ``போகும்போதே அந்தச் சிறுகிழங்கை ஆளுக்கு ஒன்றெடுத்து வாயில் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்றார்.

இதில் முதுவேலனையே வியக்கவைத்தவர்கள் திரையர்கள்தாம். ``இறங்கித் தாக்க பாரி அனுமதி அளித்ததே போதும்; எங்களுக்கு எந்த ஆயுதமும் தேவையில்லை’’ என்று சொல்லிப் புறப்பட்டான் காலம்பன். ஆனால், முதுவேலன், அவர்களை மறித்து ஒவ்வொரு வீரனுக்கும் கேடயம் ஒன்றும் நடுவகை வாள் ஒன்றும் கொடுத்தனுப்பினான்.

இவை தவிர ஆறுகுடியினர் தட்டியங்காட்டுப் பக்கமும் வெங்கல்நாட்டின் பக்கமும் மலையை விட்டுக் கீழிறங்கினர். வேந்தர்படையின் வீரர்கள் நிலப்பகுதியில் எங்கு குறுக்கிட்டாலும் வெட்டி வீழ்த்தப் புறப்பட்ட படை இது. அவர்கள், காட்டில் கிடைக்கும் அனைத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடியவர்கள்.

இவை நடந்துகொண்டிருக்கும்போதே செய்தி கேள்விப்பட்டு காரமலையின் உச்சியில் இருந்த அரிமான்கள் இரலிமேட்டுக்கு வந்தனர். இதுவரை அவர்களை இரலிமேட்டுக்கே வரக் கூடாது என்று சொல்லியிருந்தான் பாரி. ஆனால், அவசரம் கருதி கூவல்குடியினர் மூலம் உச்சிமலையில் இருந்த அணலிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டான் முடியன். அவர்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு விரைவாக அடர்குகைக்குள் இருக்கும் அணலிகளைப் பிடித்துக் கீழிறங்க முடியாது.
 
அந்த உத்தரவு மூலமே பேராபத்து உருவாகியுள்ளதை அரிமான்கள் உணர்ந்தனர். உடனடியாக அந்தக் குலத்தலைவனுக்குச் செய்தி சொல்லப்பட்டு, அவன் இரலிமேட்டுக்கு வந்துசேர்ந்தான்.

பறம்புவீரர்கள் எல்லோரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கீழிறங்கிய பிறகு அரிமான்குலத் தலைவன் வந்தான். கிடத்தப்பட்ட வீரர்களின் உடல்களைப் பார்த்துக் கொதிப்பேறிய நிலையில் ``எங்களைப் போர்க்களத்துக்கு அனுமதி’’ என்று பாரியின் கைகளைப் பிடித்து மன்றாடினான்.

``எந்நிலையிலும் நீங்கள் போர்க்களம் புகுவதை ஏற்க முடியாது’’ என்று உறுதியாக மறுத்தான் பாரி.

அரிமான்களோடு சேர்த்து பறம்பில் தஞ்சமடைந்த நான்கு குடிகளுக்கு, பாரி இறுதிவரை அனுமதியளிக்கவில்லை. மிகக் குறைந்த மனிதர்கள் மட்டுமே வாழும் அந்த அரிய குடிகள் இயற்கையின் ஆதிரகசியங்களைக் காத்துவருகிறார்கள். இந்தப் போர், மனிதர்களுக்கு இடையே நடக்கிறது. இதில் நிகழும் எந்தவொரு மரணமும் இயற்கைக்கு பாதிப்பை உருவாக்கிடாது. ஆனால், இந்த நான்கு குடிகளில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் பச்சைமலைத் தொடருக்கும் அதில் உள்ள உயிரினங்களுக்கும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்கிறவர்கள். எனவே, பாரி இறுதி வரை அனுமதி கொடுக்கவில்லை.

``அப்படியென்றால், இந்தப் போரில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா?’’ எனக் கேட்டான் அரிமான்குலத் தலைவன். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 109

``நீங்கள் எடுத்துவந்த அணலிகள்தான் இந்தப் போரில் முக்கியப் பங்காற்றப்போகின்றன. அவற்றை நீங்களே எதிரிகளின் பாசறையைச் சுற்றிக் கீழிறக்கிவிட்டு வாருங்கள். அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கியமான பணியையும் உங்களுக்குக் கொடுக்கப்போகிறேன்’’ என்றான்.

``என்ன?’’ என்று கேட்டான் அரிமான்குலத் தலைவன்.

``நான் கீழிறங்கப்போகிறேன். நான் சென்ற பிறகு என் தோழன் கபிலனை அழைத்துச் சென்று பாதுகாத்துவைத்திருங்கள்’’ சொல்லி முடித்த வேகத்தில் அந்த இடம் விட்டு அகன்றான் பாரி. அரிமான்குலத் தலைவனோ, இந்த உரையாடலைச் சற்றுத் தொலைவிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த கபிலரோ, பதிலேதும் சொல்வதற்கு எந்த இடமும் தரவில்லை பாரி.

குகை விட்டுக் கீழிறங்கிய வேகத்தில் அவனோடு சிறுபடை இணைந்தது. பாரிக்கான ஆறு வகை ஆயுதங்களையும் அந்தப் படை வீரர்கள் கைகளில் வைத்திருந்தனர். மூவேந்தர்களின் பாசறைத் தாக்குதலையும் மூஞ்சலில் நடக்கும் தாக்குதலையும் ஒருங்கிணைத்துச் செய்தியைப் பரிமாற, கூவல்குடி வீரர்கள் உடன் இருந்தனர். பாரி மலையை விட்டுக் கீழிறங்கும்போது, மற்ற அனைவரும் தங்களுக்கான இடத்தை அடைந்துவிட்டனர். முடியனின் ஈட்டி, உறுமன் கொடியைக் குத்தித் தூக்கிக்கொண்டிருந்தபோது பாரி நாகக்கரட்டிலிருந்து சமவெளியை வந்தடைந்தான்.

பாரி முற்றிலும் எதிர்பாராதது, கொட்டித் தீர்க்கும் பெருமழையை. மழையின் வேகம், நிலத்தை நடுக்கமுறச் செய்தது. மழை பறம்புவீரர்களின் வேகத்தைச் சற்று மட்டுப்படுத்தும் அதேநேரம், தாக்குதலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும், எதிரிகளுக்கு அச்சமூட்டும் இன்னோர் ஆயுதமாக அது மாறும் எனக் கணித்தபடியே முன்னகர்ந்தான். மணல்வெளியில் செவ்வெறும்புகள் சாரைசாரையாக ஊடறுப்பதுபோல இருள்வெளியில் பறம்பு வீரர்கள் கூட்டம் கூட்டமாய் முன்னேறிக் கொண்டிருந்தனர். பாரி முன்னகர்ந்து உள்ளே வந்துகொண்டிருந்தபோது விண்டனின் தாக்குதல் தொடங்கிய செய்தி அவனுக்கு வந்து சேர்ந்தது. பாண்டியப்படையும் சோழப்படையும் நிலைகுலையத் தொடங்கிவிட்டதை உறுதிப் படுத்தினான். கூட்டைக் கலைத்தால் போதும் பாதி அழிவை அது தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும். வேந்தர்படை தன் அழிவைத் தானே நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அதற்கு உதவி செய்துகொண்டிருந்தான் விண்டன். உதிரன் சேரப்பாசறையைச் சுற்றி நிலைகொண்ட செய்தியும் வந்தது.

ஆனால் பாரி முற்றிலும் எதிர்பாராதது, மூஞ்சலை வேந்தர்கள் கைவிடுவதற்கு வெகுநேரம் முன்னரே நீலனை இடம் மாற்றிவிட்டார்கள் என்பது. முடியன் அனுப்பிய செய்தி பாரியை வந்தடைந்ததும் உடனடியாக மூஞ்சலை நோக்கி விரைந்தான். தப்பி வெளியேறிக்கொண்டிருக்கும் மூவேந்தர்களையும் தாக்கி அழிக்கப் பாய்ந்து சென்றுகொண்டிருந்தான் முடியன். அவன் அவ்வாறு செய்துவிடக் கூடாது என்பதற்குத்தான் விரைந்து வந்தான் பாரி. உறுமன்கொடியைக் கொன்றழித்த வேகத்தில் வேந்தர்களைக் கொன்றழிக்க விரைந்துகொண்டிருந்த முடியனைத் தடுத்து நிறுத்தினான் பாரி. ``நீலனை எந்த இடத்துக்குக் கொண்டுபோயுள்ளனர் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதன்பிறகு வேந்தர்களைத் தாக்கி அழிப்போம்’’ என்றான்.

பாரியின் சொல்லை ஏற்க முடியாமல் திணறியது முடியனின் மனம். ஆனாலும் நீலன் குறித்த சிந்தனை மனதை மாற்றியது. `மழை கொட்டும் இந்த இரவில் நீலனை எங்கு கொண்டுபோயிருப்பர்; எங்கே போய் அறிய முடியும்?’ எனச் சிந்தித்தபடி திகைத்து நின்றான் முடியன்.

சட்டென வேட்டூர்பழையனின் நினைவு வந்தது. அந்தக் கிழவன் இந்நேரம் இருந்திருந்தால் இந்த மண்ணின் ஒவ்வோர் அசைவையும் சொல்லிவிடுவார். மையூர்கிழாரைப் பற்றியும் வெங்கல்நாட்டைப் பற்றியும் அவரளவுக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை. அவருக்கு அடுத்து இந்த நிலத்தை நன்கு அறிந்தவன் நீலன். அவனும் இல்லை என நினைத்தபோது, ஆறு ஊர்க்காரர்களின் நினைவுவந்தது. உடனே வீரர்கள் சிலரை அழைத்துக்கொண்டு அவ்விடம் விரைந்தான்.

முடியனுடன் இருந்த பெரும்பகுதி வீரர்களோடு பாரி மூவேந்தர்களைப் பின்தொடர்ந்தான். ``பறம்பின் அனைத்து குடிகளும் கீழிறங்கிவிட்டன. பாதுகாப்புக்கு எங்கே போவது என்று எனக்குப் புரியவில்லை’’ என்று கருங்கைவாணனிடம் மையூர்கிழார் புலம்பிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குப் பின்னால்தான் பாரி வந்துகொண்டிருந்தான். வெட்டி இறங்கும் மின்னல் ஒளியில் முன்னால் போகிறவர்களைப் பார்த்தபடி தாக்குதல் எதுவும் தொடுக்காமல் நிதானமாக வந்துகொண்டிருந்தான் பாரி.

தன்னுடன் இருக்கும் படைவீரர்களுக்கு உத்தரவு கொடுத்தால் போதும், அடுத்த மின்னல் ஒளிபாய்ச்சும்போது முன்னால் போகிற எவனும் உயிரோடு மிஞ்ச மாட்டான். ஆனாலும் நீலனைப் பற்றிய உறுதியான செய்தியைத் தெரிந்து கொள்ளாமல், `இவர்களைத் தாக்கினால் விளைவு கைமீறிப் போய்விட வாய்ப்புள்ளது’ என நினைத்தான். அந்தக் கணத்தில் அவனது மனம் தேக்கனை நினைத்தது. தனது கைக்கெட்டும் தொலைவில் மூவேந்தர்களும் அஞ்சி ஒடுங்கியபடி சென்றுகொண்டிருக்கிறார்கள். தாக்க முடிவெடுத்தால் ஒருவன்கூட தப்ப முடியாது. ஆனால், நீலன் என்ன ஆவான்; வேந்தர்கள் கொல்லப்பட்ட பிறகு நீலனை உயிரோடு மீட்க முடியுமா என்ற குழப்பத்தில் தாக்கும் முடிவைத் தள்ளிப்போட்டபடி நகர்ந்தான் பாரி. தான் எடுக்கும் இந்த முடிவு சரியானதா என்ற ஐயம், போர்க்களத்தில் முதன்முறையாகப் பாரிக்கு ஏற்பட்டது. பறம்பு தோன்றியதிலிருந்து இதுவரை நடந்திராத ஒன்று, இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பாரி உட்பட பறம்புவீரர்கள் அனைவரும் பறம்பின் எல்லையை விட்டு வெளியேறியுள்ளனர். புதிய நிலத்தில் கைக்கெட்டிய எதிரியை விட்டுப்பிடித்துக் கொண்டிருந்தனர்.

பாரியின் மனம் தேக்கனைத் தேடியது. தேக்கனால் எதிரியின் வலிமையைத் துல்லியமாகக் கணிக்க முடியும். அப்படிக் கணிக்க முடியாத நிலையில் எதிரிகளின் வலிமையின்மையைக் கண்டறிந்துவிடுவான். வலைக்குச் சிக்காதது வாய்க்குச் சிக்கும் என்பதில் அவன் எப்போதும் தெளிவாக இருப்பான். எந்த நிலையிலும் தேக்கனின் ஒற்றைச்சொல் குழப்பத்தைப் போக்கித் தெளிவை உருவாக்கும். அந்தக் கணம் தேக்கனின் குரலுக்காகப் பாரியின் மனம் ஏங்கி அடங்கியது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 109

ஏக்கத்தினூடே தேக்கனின் சொல் என்னவாக இருந்திருக்கும் எனச் சிந்தித்தான். ``வேந்தர்களை அழிப்பதல்ல; நீலனை மீட்பதே முதற்பணி’’ என்றது ஆழ்மனதுக்குள் எதிரொலித்த தேக்கனின் சொல். எடுத்த முடிவில் துணிந்து நடந்தான் பாரி.

பாரி எந்தப் பக்கம் இறங்கியிருப்பான் என்பது தெரியாத குழப்பத்தில் மையூர்கிழார் திணறிக்கொண்டிருக்கும்போது, வேந்தர்களின் பிடரியில் மூச்சுக்காற்று படும் தொலைவில்தான் பின்தொடர்ந்துகொண்டிருந்தான் பாரி. மழையின் வேகம் சற்றே குறையத் தொடங்கியது. பாரி தனது பின்தொடர்தலில் இடைவெளியை அதிகப்படுத்திக்கொண்டான். நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் மேலும் குறைந்தது. இருள்நீங்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னால் செல்லும் வேந்தர்படையின் வேகமும் அதிகமானது. வேறு முடிவெடுக்க முடியாத நிலையில் பின்தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தான் பாரி.

மழை முழுமுற்றாக நின்றது. இருளின் அடர்த்தி மேலும் குறையத் தொடங்கியது. பின்னால், தொடர்ந்து வருவதை வேந்தர் படையினர் அறிய நேர்ந்தால் அச்சத்தில் உடனடியாகத் தாக்குதலில் ஈடுபடுவார்கள். தாக்குதல் தொடங்கிவிட்டால் எதிரிகளின் படை முற்றாக அழியும். ஆனால், நீலனை மீட்கும் முயற்சியில் ஆபத்து உருவாகும். எனவே, இடைவெளியை மேலும் அதிகப்படுத்தியபடி வந்தான் பாரி. முடியனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. மழை நின்று இருள் குறையத் தொடங்கியது.

இடைவெளியை நன்கு அதிகப்படுத்திய பாரி வேந்தர்படையினர் முன்னகர்ந்த திசையில் வந்து சேர்ந்தபோது, காட்டாறு ஒன்று குறிக்கிட்டு ஓடிக்கொண்டிருந்தது. எதிரிகள் காட்டாற்றைக் கடந்து அக்கரையில் ஏறிக்கொண்டிருந்தனர். அதிர்ந்தான் பாரி. இந்த இடத்தில் இப்படியோர் ஆறு ஓடுவது அவனுக்குத் தெரியாது. மலை விட்டு இறங்கும் ஆறுகள் சமவெளியில் இவ்வளவு உள்வாங்கிய நிலத்தில் எவ்விடம் ஓடுகின்றன என்பது பறம்புவீரர்கள் யாருக்கும் தெரியாது. எதிர்த்திசையைப் பார்த்தபடி அதிர்ச்சியுற்று நின்றான் பாரி. இடைவெளியை அதிகப்படுத்தியது, வேந்தர்படை முழுமுற்றாக ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வசதியாகிவிட்டது.

கைநழுவிவிட்டதோ என்று மனம் பதைத்தது. வானில் ஒளி கசிந்து பரவிக்கொண்டிருந்தது. அப்போதுதான் முடியன் வந்து சேர்ந்தான். ``நேற்றிரவு மழை தொடங்குவதற்குச் சற்று முன்பே கொட்டடியில் நின்றிருந்த யானைகளைக் காட்டாற்றுக்கு அப்பால் இருக்கும் கோட்டைக் காவலுக்கு அனுப்ப உத்தரவு வந்ததாம். எனவே, ஆற்றுக்கு அப்பால் இருக்கும் கோட்டையில்தான் நீலனை வைத்திருப்பார்கள் என்று காராளி சொன்னான்’’ என்றான் முடியன்.

அடுத்து என்ன செய்யலாம் என்று பாரி சிந்திக்கத் தொடங்கும்முன் முடியன் சொன்னான், ``தந்தமுத்தத்துக்காரர்களுக்குச் செய்தி அனுப்பிவிட்டேன். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள்.’’

``சரியான முடிவு’’ என்றான் பாரி.

எதிரிகள் ஆற்றைக் கடந்துவிட்டனர் என்பது முடியனுக்கும் அதிர்ச்சியை உருவாக்கியது. ஆனால், பாரியைவிட சரியான முடிவை யாரும் எடுக்க முடியாது என அவனுக்குத் தெரியும். எனவே, பாரியின் அடுத்த உத்தரவை எதிர்பார்த்தான்.

``கொஞ்சம் பொறு. பொழுது நன்கு விடியட்டும்’’ என்றான் பாரி.

பாசறைகளிலிருந்து அணலிகளின் தாக்குதலுக்குத் தப்பிப்பிழைத்தவர்கள், விண்டன், உதிரன் ஆகியோரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அவற்றிலிருந்தும் தப்பிப்பிழைத்தவர்கள் நிலமெங்கும் சுற்றித்திரியும் பறம்பின் இதர குடிகளிடம் சிக்கி மாண்டனர். அதிலும் தப்பியவர்கள் வெகுசிலரே. அவர்கள் கிழக்குப்புறமாக நகர்ந்து ஆற்றைக் கடந்து அக்கரை ஏறினர். வேந்தர்படையினர், தங்களின் மூன்று பாசறைகளிலிருந்தும் தப்பிவருகிறவர்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், மழை நின்றதும் நிலமெங்குமிருந்து மேலெழுந்தது கதறல்களின் பேரோசை.

பகலின் நான்காம் நாழிகை முடியும்போது ஒளியால் நிரம்பியிருந்தது நிலம். செவ்வரிமேட்டில் இருந்த வேந்தர்கள், எதிர்ப்புறத்தில் காட்டாற்றுக்கு அப்பால் ஆற்றைக் கடக்க முடியாமல் திணறியபடி நிற்கும் பறம்புப்படையை முழுமையாகப் பார்த்தனர். இரவு முழுவதும் நடந்த தாக்குதலால் அச்சம் உறைந்திருந்தது. ஆனால் பகலின் ஒளி, அச்சத்தை நீக்கத் தொடங்கியது.

மூன்று பாசறைகளில் இருந்த பல்லாயிரம் பேர், கொன்றழிகப்பட்டுவிட்டனர். மிஞ்சி இக்கரைக்கு வந்து சேர்ந்துள்ளவர்கள் சில ஆயிரம் பேர் மட்டும்தான். ஆனால், பறம்புவீரர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் நின்றது நம்பிக்கையை உருவாக்கியது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 109

மலைமக்கள் ஆற்றினுள் கால் வைக்க அஞ்சுவார்கள் என்பதைக் கண்ணுக்கு முன்னால் பார்த்தபடி இருந்த கருங்கைவாணன், மையூர் கிழாரைப் பாராட்டினான். பேரழிவிலிருந்து தளபதிகள் மீண்டுள்ளனர். செவ்வரிமேட்டில் இருக்கும் வேந்தர்படை வீரர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தைத் தாண்டாது. ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட படை, இறுதியில் இவ்வளவுதான் மிஞ்சியுள்ளது. ஆனாலும் மையூர்கிழாரும் கருங்கைவாணனும் நம்பிக்கையோடு போய் வேந்தர்களிடம் சொன்னார்கள்.

``எதிரிகள் ஆற்றைக் கடக்க வழியின்றி அக்கரையில் நிற்கிறார்கள். அது முக்கியமல்ல; அக்கரையில் நிற்பவர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். சில நூறு பேர்தான் இருப்பார்கள். எனவே, இதற்குமேல் நாம் பின்வாங்க வேண்டியதில்லை. நாம் நல்ல மேட்டுநிலத்தில் இருக்கிறோம். அவர்கள் ஆற்றைக் கடக்கும்போது இங்கிருந்து தாக்கினால் ஒருவனும் உயிர்தப்ப முடியாது’’ என்றனர்.

இரவெல்லாம் பிழைத்தோடிவந்த அச்சம் எளிதில் மனம் விட்டு அகலவில்லை. ஆனாலும் ஆற்றைத் தாண்ட முடியாமல் தேங்கி நிற்கும் சிறு கூட்டத்தைப் பார்த்ததும் இயல்பாக மனதுக்குள் நம்பிக்கை உருவானது. முதன்முறையாகப் பறம்புப்படை நிலப்பரப்பின் கீழ்நிலையிலும், வேந்தர்படை நிலப்பரப்பில் மேல்நிலையிலும் இருந்தனர்.

`எப்படியும் அவர்கள் நீலனைக் காப்பாற்ற ஆற்றைக் கடக்க முயல்வர். அது அவர்களை முழுமுற்றாக அழிக்கும் வாய்ப்பை நமக்கு வழங்கும். எனவே, இதைத் தவறவிடக் கூடாது’ என குலசேகரபாண்டியனுக்குத் தோன்றியது. ``நம் படையணிகளை ஒழுங்குபடுத்திக்கொள்’’ என்றார்.

முதல் நாள் இரவு நடந்த பேரழிவிலிருந்து மறுநாள் காலை மீண்டு மேலேறியது வேந்தர்படை. பறம்பின் படை இவ்வளவு சிறியது என்பதை வேந்தர்படையின் ஒவ்வொரு வீரனும் முழுமையாகப் பார்த்தான். பலிவாங்கும் உணர்வும், சிறுத்திருக்கும் எதிரிகளின் கூட்டமும் அவர்களின் நம்பிக்கையை மேலெழுப்பின. இரவெல்லாம் தாக்கி அழிக்கப்பட்டதனால் உருவான வெறி அவர்களை மூர்க்கம் கொள்ளவைத்தது. கருங்கைவாணன், உத்திகளை வகுத்தான்.

ஆற்றின் மேற்குத்திசையில் அப்படியே நின்றிருந்தான் பாரி. நிலமெங்கும் இருந்த பறம்புவீரர்கள் அனைவரும் ஆற்றங்கரைக்கு வந்துசேர்ந்தனர். இருள்வேட்டை முடிவுற்றது. பகலின் பாய்ச்சலுக்காகப் பாரியின் உத்தரவை எதிர்பார்த்து நின்றிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு, ``நெட்டீட்டிகளை வீசச் சொல்’’ என்றான் பாரி.

சொல்லி முடிக்கும்போது பறம்பின் ஈட்டிகள் ஆற்றுநீருக்குள் எதிர்க்கரை வரை சரசரவெனக் குத்தி இறங்கின. வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று வரிசைகளாக போதிய இடைவெளியோடு ஈட்டிகள் எறியப்பட்டன. ஈட்டிகள் குத்தி நிற்பதை வைத்து நீரின் ஆழத்தைக் கணித்தனர். எந்த இடத்தில் பள்ளம் அதிகம் என்பதை அறிந்து, அதற்கு முன்னும் பின்னுமாக சில ஈட்டிகளை எறிந்து ஆழமற்ற பகுதியையும் கண்டுகொண்டனர். ஈட்டிகள் இழுபடும் தன்மைகொண்டு நீரின் வேகம் அறிந்தனர்.

அடுத்து உள்ளிறங்குவதற்குப் பாரி உத்தரவிடுவான் என எதிர்பார்த்து ஆற்றின் அருகில் போய் நின்றான் உதிரன். ஆனால், பாரி அதற்கு ஆயத்தமாக இல்லை. நீரில் இறங்கி அக்கரையை அடைந்துவிடலாம். ஆனால், எதிரிகள் மேட்டின்மீது நிற்கிறார்கள். உயரத்திலிருந்து அவர்கள் தாக்குதல் தொடுத்தால் பறம்பின் பக்கம் இழப்புகள் அதிகமாகும். எனவே, மாற்றுவழியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய கணமே, `நேரம் அதிகமானால் நீலனை மீட்கும் வாய்ப்பு குறைந்துவிடுமோ!’ என்றும் தோன்றியது. வீரர்கள் அனைவரும், பாரி வந்துவிட்டதால் மீட்டே தீருவான் என்ற நம்பிக்கையோடு நின்றனர். அவர்களுக்கு எதிரில் ஓடும் ஆறோ, உயர்ந்து நிற்கும் மேடோ ஒரு பொருட்டாகவே இல்லை. ஆனால், பாரிக்கு எல்லாம் பொருட்டாக இருந்தன. எந்த வீரனையும் இழந்துவிடக் கூடாது என்ற கவனமும் நீலன் மீதான சிந்தனையுமாக மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டிருந்தான்.

அப்போது இடதுபுறம் வெகுதொலைவிலிருந்து கூவல்குடியின் ஓசை கேட்டது. என்னவென்று பார்த்தனர். தந்தமுத்தத்துக்காரர்கள் நான்கு யானைகளோடு ஆற்றங்கரைக்கு வந்து நின்றனர். உள்ளே இறங்குவதற்கான அனுமதியைக் கேட்டது அந்த ஓசை. ``ஆற்றுக்குள் இறங்கு. ஆனால், அக்கரையில் ஏறாதே’’ என்றது பாரியின் பதில். குறிப்போசையாக இங்கிருந்து எழுப்பப் பட்டது.

இது நடந்துகொண்டிருந்தபோது ஆற்றின் வலதுபுறத்தைக் கைகாட்டி ``அங்கே பாருங்கள்’’ என்றான் முடியன்.

ஒரு காதத் தொலைவில் ஒரு கூட்டம் ஆற்றுக்குள் இறங்கி அக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கியது. உற்றுப்பார்த்துவிட்டு முடியன் சொன்னான், ``திரையர்கள் இறங்கிவிட்டார்கள்.’’

முடியன், உதிரன், விண்டன் மூவரும் பாரியிடம் சொன்னார்கள், ``இனியும் நாம் காலம் தாழ்த்த வேண்டாம். ஆற்றைக் கடந்து மேலேறும்போது நம்மில் சிலர் சாகவேண்டியிருக்கும். ஆனால், எதிரிகளால் வலுவான தாக்குதலை நடத்திவிட முடியாது. நம்முடைய வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது. எனவே, ஆற்றைக் கடக்க உத்தரவு தாருங்கள்’’ என்றனர்.

பாரியிடமிருந்து பதிலேதுமில்லை. `மிகச்சில வீரர்களிடம் மட்டுமே குதிரை இருக்கிறது. மேட்டின் மீதிருந்து வீசப்படும் ஆயுதத்தின் வேகம் வலிமையானது. எதிரிகள், நாம் ஆற்றில் இறங்கியவுடன் தாக்குதலைத் தொடங்கிவிடுவர். சில இடங்களில் கழுத்து வரை ஆழம் இருக்கும் பகுதியை நாம் கடந்தாக வேண்டும். அப்போது நம்மீது நடக்கும் தாக்குதலால் இழப்பு மிக அதிகமாகும்’ என்று சிந்தித்தபடி வேறு வழி பற்றி எண்ணங்களைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

வேந்தர்படையில் செவ்வரிமேட்டின்மேல் நின்றிருந்த தளபதி உசந்தன் இடதுபுறமாக ஆற்றை நோக்கிக் கைகாட்டி ``சிலர் ஆற்றைக் கடக்கிறார்கள்’’ என்றான்.

எல்லோரின் பார்வையும் அங்கே போனது. ஐம்பது, அறுபது பேர்கொண்ட சிறு படை ஒன்று ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. ``ஒருவன்கூட நமது கரையில் கால் வைக்கக் கூடாது. வெட்டி வீசுங்கள்’’ என்றான் மையூர்கிழார்.

வீரர்களை அழைத்துக்கொண்டு உசந்தன் செல்ல ஆயத்தமானபோது, ``நானே போகிறேன்’’ எனச் சொல்லி, தனது படையோடு கருங்கைவாணன் விரைந்தான்.

எதிரிப்படைகளில் இருநூறு பேர்கொண்ட படைப்பிரிவு திரையர்களை நோக்கிப் போவதைப் பாரி உள்ளிட்ட அனைவரும் மேற்குக் கரையிலிருந்து பார்த்தபடி நின்றிருந்தனர். முடியன் மீண்டும் சொன்னான், ``காலம் தாழ்த்த வேண்டாம். உள்ளிறங்குவோம்.’’

பாரியின் கண்கள் ஆற்றுநீரையே பார்த்துக்கொண்டிருந்தன. கரையோரத்தில் நீரின் எதிர்த்திசையில் சிற்றலைகள் எழும்பி அமுங்கின. என்ன இது என்று கவனித்தபோது காற்று, நீரின் மேல்தளத்தை சீவியபடி வீசியது.

அதன் திசையையும் தன்மையையும் உணர்ந்த பாரி `இது காற்றல்ல; காற்றி. இந்நேரம் நம்மில் யாராவது குளவன்திட்டில் இருந்திருக்க வேண்டும்’ என்று எண்ணிய கணத்தில் தலைக்குமேல் எண்ணிலடங்காத சுருளம்புகள் பறந்துகொண்டிருந்தன. எதிர்த்திசையில் செவ்வரிமேட்டின் உச்சியில் நின்றிருந்த வேந்தர்படையின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான சுருளம்புகள் குத்தி இறங்கின.

அதிர்ந்து திரும்பினான் பாரி. வெகுதொலைவில் சின்னதாய்த் தெரிந்தது குளவன்திட்டு. இகுளிக்கிழவன் உச்சியில் நின்று சிரிப்பதுபோல அவன் மனக்கண்ணில் தோன்றியது.

``எப்படி இவ்வளவு தொலைவில்?’’ என்று உதிரன் கேட்டபோது முடியன் சொன்னான், ``அவர்கள் ஐந்து வயதிலேயே குறி தவறும் அம்புகளை எய்து முடித்துவிடுவர். இது காற்றி. குளவன்திட்டில் எவ்விடமிருந்து வீசினாலும் அக்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்’’ என்று சொல்லி முடிக்கும் முன் பாரியின் உறுமல் காற்றையும் உலுக்கியது.

இந்தச் சொல்லுக்காகக் காத்திருந்த பறம்புப் படை, காட்டாற்றுக்குள் பாய்ந்து இறங்கியது. வேந்தர்படையினர் சுருளம்புகளால் தாக்கப்பட்டு பின்னோக்கி ஓடத் தொடங்கியபோது, பறம்புப்படை ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. இடதுமுனையில் நான்கு யானைகளின் மீது அமர்ந்தபடி தந்தமுத்தத்துக்காரர்கள் அக்கரையில் ஏறியபோது வலதுகோடியில் மேலேறிய திரையர்களைக் கருங்கைவாணன் படை தாக்கத் தொடங்கியது.

பல்லாயிரம் சுருளம்புகள் இப்படி வந்து இறங்கும் என யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. தட்டியங்காட்டில் பறம்புவீரர்கள் யானைப்போர் நடத்தாததற்குக் கானவர் செய்த கைம்மாறு இது. சுருளம்புகள் காற்றியால் தூக்கிவரப்பட்டதால் அவற்றின் வேகம் பல மடங்கு இருந்தது. செவ்வரிமேட்டின் முன்பகுதிச் சரிவில் நிறுத்தப்பட்டிருந்த வேந்தர்படை வீரர்கள் சுருளம்புகளுக்காகவே அணிவகுத்து நிறுத்தப்பட்டதுபோல் நின்றிருந்தனர். நினைத்துப்பார்க்க முடியாத இந்தத் தாக்குதலால் வேந்தர்படை சிதறியது.

காற்றியின் தாக்குதலுக்குச் சற்று முன்னதாகக் கருங்கைவாணன், இடதுபுறம் ஆற்றில் இறங்கிய எதிரிகளைக் கொன்றழிக்கப் போய்ச்சேர்ந்தான். கரையேறும் மனிதர்களின் உருவ அமைப்பைப் பார்த்ததும் முன்னால் விரைந்து சென்ற வீரர்களின் குதிரைகள் தேங்கத் தொடங்கின. இந்நிலையில்தான் சுருளம்புகள் படையின் மீது இறங்கின. தாக்கப்பட்ட வீரர்களின் பெருங்கூச்சல் காதத்தொலைவுக்கு அப்பால் இருக்கும் கருங்கைவாணனைத் திகைக்கவைத்தது. காற்றில் பறந்துவந்த அம்புகளை அவன் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் கண்களின் முன்னால் அவனுடைய படைவீரர்கள் தூக்கி வீசப்பட்டுக்கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள் இருக்கும் வரை பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. மேலேறிய ஒவ்வொருவனும் மூன்று ஆள் உடலமைப்பைக் கொண்டவனாக இருந்தான். அவர்களின் அடியில் குதிரைகள் மடங்கி விழுந்தன. முட்டைகளின் மீது பாறை விழுவதைப்போல அவர்களின் மீது திரையர்களின் தாக்குதல் இருந்தது. இருநூறு பேர்கொண்ட வேந்தர்படை கண நேரத்துக்குள் உருக்குலைந்தது. என்ன நடக்கிறது என்று கருங்கைவாணன் நிதானிப்பதற்குள் அவனது குதிரையை அடித்து வீழ்த்தினான் ஒருவன். அவனது முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என எண்ணிக்கொண்டிருக்கும்போது மண்ணில் உருண்டுகொண்டிருந்தான் கருங்கைவாணன்.

விழுந்த வேகத்தில் விரைந்து எழுந்தவன், இடுப்பில் இருந்த வாளை எடுக்கப்போகும்போது ஓடிவந்தவன் இடது தோள்பட்டையோடு முட்டித் தூக்கி எறிந்தான். அவன் முட்டிய வேகத்தில் தோள்பட்டை எலும்பு நொறுங்கியது. முட்டியவன் திரையர் குலத்தலைவன் காலம்பன் என்று கருங்கைவாணனின் மனம் உணர்ந்தபோது, அவனை நெஞ்செலும்போடு அடித்து வீழ்த்தினான் காலம்பன். யானையின் தாக்குதலுக்கு இணையானதாக இருந்தது அந்த அடி. கீழே விழுந்தவனின் மூக்கிலிருந்து குருதி கொப்புளித்தது. காலம்பன், விழுந்து கிடந்தவனின் அருகில் வந்தான். தன் குலம் அழித்தவனைக் காணும்போது உருவாகும் வெறி கட்டுக் கடங்காததாக இருந்தது. அப்போது காலம்பன் எழுப்பிய உக்கிரமேறிய ஓசை செவ்வரிமேட்டில் இருந்த பாரிக்குக் கேட்டது.

ஆற்றிலிருந்து மேடேறிக்கொண்டிருந்த பாரி, என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்த்தான். வேந்தர்படையினரிடமிருந்து திரையர்கள் எதையோ பிடுங்கி எறிவது தெரிந்தது. எதிரிகளின் ஆயுதங்களைப் பிடுங்கி எறிகிறார்களோ என்று ஒரு கணம் தோன்றியது. அவை ஆயுதங்கள் அல்ல; பிய்த்து எறியப்படும் மனித உறுப்புகள்!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன்

வீரயுக நாயகன் வேள்பாரி - 109

வேள்பாரி வாசகர்களை ஒன்றிணைக்கவும், இத்தொடர் பற்றி உரையாடவும் சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளோம். புத்தகம் தாண்டி வேள்பாரியின் சுவாரஸ்யங்களை அதன் மூலம் நீட்டிக்க வேண்டுமென்பதே நம் எண்ணம். வாசகர்கள் கீழ்க்காணும் ஃபேஸ்புக் குழுமத்தில் இணைவதன் மூலமும் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்வதன் மூலமும் வேள்பாரியுடன் இணைந்துகொள்ள வரவேற்கிறோம்.

www.facebook.com/groups/500337410392609/

www.twitter.com/Vikatanvelpari