மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர்! - 13

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

``இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...’’ என்று, சாலையின் ஒரு முக்கில் நின்றிருந்த டெம்போ வேனுக்குள் இருந்து டி.எம்.எஸ். பாடிக்கொண்டிருந்தார். சிலர், தேநீர் சுவைத்தபடி இருந்தனர்; வந்து விழுந்த பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வேனுக்குப் பக்கத்தில், கறுப்பு நிறத்தில் தொந்தி சரிந்த ஒருவர் வியர்வை வழிந்த தேகத்தோடு பரோட்டாவுக்கு மாவு பிசைந்துகொண்டிருந்தார்; அவ்வப்போது பாடலுக்கேற்றாற்போலத் தலையசைத்துக் கொண்டார். இடுப்பில் கைக்குழந்தையோடு பேருந்துக்காகக் காத்திருக்கும் மாநிறப் பெண் ஒருத்தியின் காதில் முத்தங்களால் பிள்ளை கடித்துக்கொண்டிருந்தது. `பாசமுள்ள  பார்வையிலே கடவுள் வாழ்கிறான்... அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில்கொள்கிறான்...’ இந்த வரிகளினூடாக வெகுநேரம் ஒரே இடத்தில் சிவனேயென்றிருந்த ஒருவன், பாடல் வரிகளை இசையோடு பாடிக்கொள்கிறான். அவசரகதியின் வாசலில் இந்தப் பாடல் ஒவ்வொருவரையும் நெருங்குகிறது. நின்று நிதானித்து, பாடலை ஏந்திக்கொள்கின்றனர் சிலர். `அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்...’ என்ற வரிகளை மிதித்துவிட்டு ஒருவன் பேருந்தில் ஏறினான்.

நான்காம் சுவர்! - 13

டி.எம்.எஸ் என்கிற திருச்சி லோகநாதன் கொஞ்சம் செருமிக்கொண்டார். வலதுபக்கம் வைத்திருந்த தனது தோள்பையிலிருந்து தண்ணீர்பாட்டிலை எடுத்துக் குரல்வளையை நனைத்துக் கொண்டார். தபேலா கணேசன், கீபோர்டு மணியிடம் அடுத்த பாடல் என்னவென்று கேட்டுக்கொண்டார். வேனுக்குள், தார்ப்பாய் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. ஒரு கீபோர்டு, ஒரு தபேலா, ஒரு பேட் மற்றும் இரண்டு நாற்காலிகள். திருச்சி லோகநாதனுக்குப் பக்கத்தில் எஸ்.ஜானகி உட்கார்ந்திருந்தார். மென்புன்னகை, அவரது முகத்தில் நிரந்தரமாக இருந்தது. திருச்சி, வெள்ளை பேன்ட் வெள்ளை சட்டையுடன் டையும் கட்டியிருந்தார். எல்லோரும் கறுப்பு நிறக் கண்ணாடி அணிந்து, அவரவருக்கான குச்சியைப் பக்கத்திலேயே வைத்திருந்தனர்.

``யோவ் லோகநாதா... காலைல இருந்து ஒண்ணுக்குப் போவாம உக்காந்துட்டிருக்கேன். மேஸ்திரிய ஊருக்கு ஒதுக்குப்புறமா வண்டிய உடச்சொல்லுய்யா” தபேலா கணேசன், திருச்சியிடம் சொன்னார். கீபோர்டு மணி உட்கார்ந்திருப்பதற்குப் பின்னால்தான் ஒரு சின்னப் பலகை இருக்கிறது. அதை இடதுபக்கம் தள்ளினால் வேனின் முன்பக்கம் தெரியும். அந்த வட்டத்து வழியில் மேஸ்திரி `என்ன?’ என்பதுபோல் பார்த்தார்.

``தபேலா ஒண்ணுக்குப் போகணுமாம்... வண்டிய உடுங்க மேஸ்திரி” கீபோர்டு சொன்னபோது, ``யோவ் கீபோர்டே... கூட்டம் இப்பத்தான்யா சேருது. நாலு சாங் போவட்டும். அப்புறம் ஒண்ணுக்குப் போலாம். டப்பு பார்க்கவேணாமா... அடக்கிட்டுப் பாடுய்யா. யம்மா ஜானகி... ஆரம்பி” என்று மேஸ்திரி பலகையை மூடிக்கொண்டார்.

தபேலாவின் முகம் அடிவயிற்றின் கனத்தைப்போலவே பும் பும் என்றிருந்தது. டகாவை வார்பிடித்து கர்னயில் தாளம் தட்ட, ஸ்ருதி செத்துப்போயிருந்தது. ``கணேசா கொஞ்சம் அடக்கிக்கடா. நாலு சாங்தான, ஒன்... ஒன்... டூ... த்ரி... போர்... ம்... ஜானகி” என்று டைமிங் கொடுத்தார் திருச்சி.

``புத்தம்புதுக் காலை... பொன்னிற வேளை... என் வாழ்விலே... தினம்தோறும் தோன்றும்... சுகராகம் கேட்கும்... எந்நாளும் ஆனந்தம்” என்று ஜானகி வெக்கை உமிழும் அந்த வேனுக்குள்ளிருந்து பாடினார்.

கடனை முடித்துவந்த தபேலாவுக்கு, முகம் தெளிவானது. கண்ணாடியைக் கழற்றி, கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டார். 

நான்காம் சுவர்! - 13

``யோவ் லோகநாதா, ஒரு டீ சொல்லச் சொல்லுய்யா” டகாவின் வாரை இழுத்து ஸ்ருதி சேர்த்தார். கீபோர்டு மீண்டும் வேனின் பலகையை இடதுபக்கம் இழுத்தார். திருச்சி, ஜானகியின் காதோரமாய்ச் சென்று ``பாத்ரூம் போகணுமா?” என்று கேட்டார்.

``வீட்டுக்குப் போய்ப் போயிக்கிறேன்” என்ற ஜானகி, திருச்சியைப் பாடச் சொன்னார்.

``இன்பமே... உந்தன் பேர் பெண்மையோ... என் இதயக்கனி, நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி...” என்று எம்.ஜி.ஆர் பாணியில் உற்சாகமாய்ப் பாடினார்.

சில பாடல்களை, திருச்சி ஒன் மேன் ஷோவாகவே பாடிவிடுவார். `இரண்டு குரல் மன்னன்’ என்பதால்தானே, ஜானகி என்கிற தேன்மொழி, திருச்சியிடம் காதலாகிக் கைப்பிடித்தாள். இசை என்னும் நதியில் நீராடி வளர்ந்தவள் ஜானகி. எல்லாக் குரல்களையும் தாண்டி ஜானகியின் குரல் வாய்த்ததால் ஜானகி ஆனாள். திருச்சியின் முகத்தை இதுவரை பார்த்ததில்லை என்கிற குறையைத் தவிர, வேறெந்தத் துன்பத்தையும் அறியாதவள். ``மல்லிகைத் தோட்டமோ... வெண்பனிக் கூட்டமோ...” என்று திருச்சி, சுசீலாவின் குரலில் மாற்றிப் பாடி, பிறகு டி.எம்.எஸ்ஸுக்கு வந்தார். ஜானகியின் முகம் மென்புன்னகையில் ரசித்தபடி இருந்தது.

மேஸ்திரி பூங்காவனத்துக்கு, மூன்று குரூப்புகள் உண்டு. அனைவருக்கும், வில்லங்கத்தில் இருக்கும் ஒரு பேய் பங்களாவில் உள்வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்திருந்தார். திருச்சியும் ஜானகியும் சமேதராகி, விலைபோகாத இந்த பங்களாவின் ஓர் அறையில் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து அறையில் தபேலாவும் கீபோர்டும் மலேசியாவும் பிரம்மச்சாரிகளாக அறுபதைக் கடந்து அறைக்குள் தனிமையைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு பெரிய நகரத்துக்குள் தனித்து மர்மம் பொங்கும் இந்த பங்களாவின் வெறுமை, கொஞ்சம் பீதியாகத்தான் இருக்கும். இருந்தாலும், வேலை பார்த்துக்கொண்டிருந்த பத்திரிகை ஆசிரியர் வித்தியாசமான ஸ்டோரி கொண்டு வந்தால்தான் சம்பளம் என்று ஒரு குண்டைப் போட்டார். 

நான்காம் சுவர்! - 13

அப்படித்தான் திருச்சி லோகநாதனை நான் சந்தித்தேன். இரவு 7 மணிக்கு வரச்சொன்னார். பங்களாவின் வெளியே ஒரு மெக்கானிக் ஷாப் இருந்தது. பழைய கார் ஒன்றைக் கழுவிக்கொண்டிருந்த மெக்கானிக்கிடம், `` `இளைய ராகங்கள்’ மெல்லிசைக் குழுவைப் பார்க்கணும் சார். எப்படிப் போகணும்?” என்று கேட்டேன்.

அவர் எதுவும் பேசாமல் கையை நீட்டி வலதில் கையை அசைத்து, போகுமாறு சொன்னார். இப்படியான பங்களாக்களில் வேலைபார்ப்பவர்கள் பேயைவிட மர்மமாகக் காட்சியளிப்பார்கள் என்பதைப் பல திரைப்படங்களில் பார்த்திருப்பதால், `ஜெய் ஆஞ்சநேயா..!’ என வீறுநடைகொண்டு முன்னேறினேன்.

மரக்கட்டையால் ஆன படிக்கட்டில் ஏறிப் போனால், இரண்டாவது மாடியில் நண்பர்களைக் கண்டடையலாம். படிக்கட்டுகளில் கால் வைத்ததும் `தொம்மென்று’ சத்தம் கேட்டது. `ஜெய் ஆஞ்சநேயா..!’ என்று ஏற, பின்னால் யாரோ வருவதுபோலவே இருந்தது. முதல்தளத்தில் யாரும் இல்லை. இரண்டு அறைகள் பூட்டியிருந்தன. மார்கழியிலும் வியர்த்துப்போனது. இப்போது ஒரு சிறு இலை என்மீது விழுந்தாலும், என்ன வேண்டுமானாலும் நடந்துவிடலாம் என்பதுபோல இதயம் படபடத்துக்கொண்டிருந்தது.

``லோகநாதன் சார்...” என்று கத்தியபடியே விறுவிறுவெனப் படிகள் ஏறி, இரண்டாவது தளத்துக்கு வந்தேன். மொட்டைமாடியோடு சேர்ந்த அறைகள். மனிதர்களைப் பார்த்ததும் இதயம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சமனாகிக்கொண்டிருந்தது. திருச்சி, கைலியில் உட்கார்ந்திருந்தார். தபேலா, தன் துணிகளைக் கொடியில் உலர்த்திக்கொண்டிருந்தார். துவைக்கும் இடத்திலிருந்து சரியாகத் திரும்பி, கொடி இருக்கும் இடத்துக்கு சரியாக வருகிறார். எல்லாம் பழக்கம்தான்.

``வணக்கம் சார்.”

``வாங்க சார்... உட்காருங்க” என்றவர், தன் மனைவியைக் கூப்பிட்டார். ஜானகி உள்ளிருந்து வெளிப்பட்டார். எல்லாமே கணக்குதான். சரியாக வந்து பெட்ஷீட்டில் அமர்ந்தார்.

``சார், எங்கள பேட்டி எடுத்து என்ன சார் ஆவப்போது?” என்று அலுத்துக்கொண்டார் திருச்சி.

``இதப் படிக்கிற யாராவது... உங்களுக்கு உதவி செய்யலாம்ல... அதுக்குதான் சார்” என்றதும், இருவரும் சிரித்தார்கள். தபேலாவும் சிரித்தார். அப்போதுதான் இரண்டாவது குரூப்பான `ஏழு ஸ்வரங்கள்’ மெல்லிசைக் குழுவினர் மேலே வந்தனர்.

``என்ன சித்ரா, இன்னிக்கு பீச் டு தாம்பரம் போல... கூட மலேசியா வந்தானா?” திருச்சி, சித்ராவிடம் கேட்க, குச்சியை மடக்கியவாறே ``அத ஏன் கேட்கிறண்ணே... லவ் பண்றன்னு டார்ச்சர் கொடுக்கிறாண்ணே இந்த மலேசியா வாசுதேவன். `ஸ்வர்ணலதா உன்னை சின்சியரா லவ்பண்ணுது’னு சொன்னாலும், சித்ராதான்னு அடம்புடிக்குறாண்ணே” என்று சொல்லி, சித்ரா என்கிற செல்வி அவர் தங்கும் அறையைத் திறந்தார். உடன், அவரது குரூப் பெண்கள் இருவர் உள்ளே நுழைந்தனர். இப்போது மலேசியாவும் ஸ்வர்ணலதாவும் வந்தார்கள். 

நான்காம் சுவர்! - 13

``என்னடா மலேசியா... சித்ராவப் பார்த்தியா?” என்று வம்புக்கிழுத்தார். குச்சியை மடக்கிய மலேசியா, சரியாக வந்து திருச்சி அருகில் உட்கார்ந்துகொண்டார்.

``எங்கண்ணே மடங்கவே மாட்றாண்ணே... ஜாடையா எவ்ளோதான் பாடிக்காட்டுறது. ஒத்துழைக்க மாட்றாண்ணே!’’ என்று சிரித்தார்.

எனக்கு இவர்களின் உலகம் அவ்வளவு வெளிச்சத்துடன் இருந்தது. எப்போதும் இவர்கள் முகத்தில் இருக்கும் சிரிப்பு, பெரும்கருணையைக் கொண்டதாக இருக்கிறது. இவர்களின் சோகம்கூட இப்படியான சிரிப்பின் வெளிப் பாடாகத்தான் இருக்கும்போல. மேகம் கருமையாக இருந்தாலும், அது நம் கண்களுக்குப் பிரகாசமாகத் தெரிவதைப்போலத்தான் திருச்சியும் எனக்குத் தெரிந்தார்.

தேநீர் போடுவதற்காக, ஜானகி அறைக்குள்ளே சென்றார். மலேசியா, வணக்கம் வைத்துவிட்டு எழுந்து தபேலா அறைக்குள் சென்றார். ``ரோட்ல படுத்துட்டு இருக்கிறவங்களைக் கூட்டிட்டுவந்து டெம்போல கௌரவமா பாடவெச்சாரு பூங்காவனம் மேஸ்திரி. அப்பல்லாம் ரயில்லதான் பாடுவோம். அங்கதான் ஜானகியைப் பார்த்தேன். அவ பேசின எல்லாப்  பேச்சும்... அவ யார்னு சொல்லுச்சு. ஒருநாள் கேட்டேன், எதுவுமே பேசாம என் பின்னாடி வந்துட்டா.

அவளோட நம்பிக்கை நான்தான். ஜானகிக்குக் கண்ணு ஆபரேஷன் பண்ணி அவள மேடையிலயும் சினிமாவுலயும் பாடவெச்சு பெரிய ஆளா ஆக்கணும்னு ஆசை. ஆபரேஷனுக்கு மூணு லட்சம் ரூபா ஆவுமாம். கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துட்டுவர்றேன். இன்னும் அஞ்சு வருஷத்துல எப்படியாவது முழுத்தொகையையும் சேர்த்திருவேன். எல்லாத்தவிடவும் என் மொகத்தப் பார்க்கணும்னு அவளுக்குக் கொள்ளை ஆசை. நான் என் மொகத்த பார்க்கலைன்னாலும், அவ பார்த்தா போதும்ல...” கறுப்பு நிறக் கண்ணாடியைக் கழற்றினார். பீழை வடிந்த குழியை, துண்டால் துடைத்துக்கொண்டார்.

``கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இதுவரைக்கும் எவ்ளோ ரூபா சேர்த்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார்?” தயங்கித்தான் கேட்டேன்.

``35,000 ரூபா சேர்த்துட்டேன். மீதிய எப்படியாவது தேத்திருவேன். இந்தக் காச சேர்க்கிறதுக்கே மூணு வருஷமாச்சு” தேநீர் நிறைந்த டம்ளரை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்தார் ஜானகி. எடுத்து சுவைத்தேன். அத்தனை பதங்களும் ஒன்றுகூடிய தேநீரைத் தயாரித்த ஜானகியை, ஆச்சர்யத்தோடு பார்த்தேன். அவர் தலையைத் தாழ்த்தி கைவிரலால் ஏதோ ஒன்றை வரைந்து கொண்டிருந்தார்.

``ஜானகிம்மா, உங்க கணவர் பாடும் பாட்ல உங்களுக்குப் பிடிச்ச பாட்டுனு ஏதாவது சொல்ல முடியுமா?” என்று கேட்டதுதான், உடனே கன்னங்கள் சிவக்கும் அளவுக்கு ஜானகி வெட்கப்பட்டார். திருச்சியும் ஜானகியின் வார்த்தைக்காகக் காத்திருந்தார். `` `இன்பமே உந்தன் பேர் பெண்மையோ...’னு டபுள் வாய்ஸ்ல பாடுவார். ரொம்பப் புடிக்கும். ஆனாலும், அவருக்குப் புடிச்ச பாடல்  `புத்தம்புதுக் காலை...’ பாடல்தான்’’ என்றார்.

திருச்சி ஆமோதித்து ``ஜானகியோட `புத்தம்புதுக் காலை’ய, ரெண்டு வரி அவ மடியில படுத்துக்கிட்டுக் கேட்காம நைட் தூங்க மாட்டேன் சார்” இருவரும் காதலாக மிதந்துகொண்டிருந்தார்கள். இருவரின் மனச்சித்திரத்தில் ஜானகியின் முகம் திருச்சிக்கு என்னவாக இருக்கும்... திருச்சியின் முகம் ஜானகிக்கு என்னவாக இருக்கும் என யோசித்தால், இருவரும் ஒரு முகத்தை வரைந்திருப்பார்கள். அவர்களைத் தவிர, வேறு யாரும் கண்டிராத அந்த முகத்தை நாம் பார்க்க முடியாதுதான். என்ன செய்ய..?

தேநீரைக் குடித்து முடித்து லோட்டாவை வைத்தேன். ஜானகி, எடுத்துக்கொண்டு போனார். ``சார், `கண் ஆபரேஷன் பண்றதுக்கு, விரும்புறவங்க டொனேஷன் தரலாம்’னு பேட்டியில சேர்த்துக்கவா சார்?” என்று கேட்டேன்.

``வேணாம் சார். பாடி, மக்களை சந்தோஷப்படுத்திச் சம்பாதிச்சாக்கூட, ரயில்ல பாடி பிச்ச எடுக்கிறவன்... ரோட்ல பாடி பிச்ச எடுக்கிறவன்னுதான் சார் எங்கள எல்லாரும் பார்க்கிறாங்க. நாங்க பிச்சைக்காரங்க இல்ல; பாடகர்கள்னு தலைப்பு போடுங்க சார். ஒருநாள் முழுக்க தொண்டத்தண்ணி வத்தப் பாடினாத் தான் சார், 300 ரூபா கிடைக்கும். லேடீஸ் பேமென்ட் 200 ரூபா சார். இதுல எங்க வயித்தக் கழுவி, சேர்த்துவைக்கிறேன் சார். என்மேல இருக்கிற இரக்கத்துல காசு வந்து... அதுல ஜானகிக்குக் கண்ணு தெரியவேணாம் சார். பாடி, சம்பாதிச்சு கண்ணு வரட்டும் சார்” என்றார் தீர்க்கமாக.

அவரைப்  பார்த்தேன். அதே மென்புன்னகையில் சிரித்துக்கொண்டிருந்தார். இப்போதுதான் அந்தச் சிரிப்பு எனக்குப் புரிந்தது. அதைச் சிரிப்பென்றும் வைத்துக்கொள்ளலாமென்று. 

நான்காம் சுவர்! - 13

குளித்து முடித்து வந்த மலேசியா, திருச்சியிடம் வந்து உட்கார்ந்துகொண்டார். நான் விடை பெற்றேன். அப்போது என்னிடம் குழந்தையாக திருச்சி கேட்டார், ``சார், எல்லாரோட பாடலையும் பாடித்தான் சம்பாதிக்கிறேன். ஏதோ ரைட்ஸ் அது இதுன்னு சொல்றாங்க சார். திடீர்னு வந்து `என் பாடலைப் பாடினதுக்கு கமிஷன் குட்றா!’ன்னா... நான் எங்க சார் போவேன்?” என்றதும், மலேசியா சிரித்துவிட்டு ``பத்து அஞ்சுக்குப் பாடுற நமக்கெல்லாம்... அந்தப் பிரச்னை இல்லண்ணே. அது வேற ஏரியா” என்றார். அப்போது சித்ரா நைட்டியுடன் வெளிப்பட்டார். ``அண்ணே, சித்ராதான பின்னாடி நிக்கிறா?” என்றார் மலேசியா. நமக்கெல்லாம் இரண்டே இரண்டு கண்கள்தான் என்று அங்கிருந்து கிளம்பினேன்.

`நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்லர்; பாடகர்கள்!’ என்ற தலைப்பின்கீழ் திருச்சி லோகநாதன் கறுப்பு நிறக் கண்ணாடி அணிந்து ஜானகியோடு டெம்போவில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் நேர்காணல் பிரசுரமாகியிருந்தது. இதழை எடுத்துக்கொண்டு, பேய் பங்களாவுக்குச் சென்றேன். காலை நேரம் என்பதால் பயமெல்லாம் இல்லை. அவரவர் ஏரியாவுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். திருச்சிக்கு டை கட்டிக்கொண்டிருந்தார் ஜானகி.

``வணக்கம் சார்” என்றேன்.

``வாங்க சார்... உட்காருங்க” என்றார்.

``சார், இஷ்யூ வந்துடுச்சு. அதான் குடுத்துட்டுப் போக வந்தேன்.”

``நாங்க பார்க்கவாபோறோம்!” என்றார்.

``சார், உங்கள எல்லாரும் பார்ப்பாங்க சார்” என்றேன்.

அதே மென்புன்னகை உதிர்த்தார். ஜானகியை சாப்பாடு கட்டச் சொல்லிவிட்டு, என் அருகில் வந்தார். அப்போதுதான் கவனித்தேன், முகம் கொஞ்சம் வாட்டமாக இருந்தது.

``என்ன சார்... நைட்டெல்லாம் தூங்கலியா... முகம் டல்லா இருக்கு” என்றேன்.

``ஒரு வாரமா தூங்கல சார்.”

``என்னாச்சு சார்?”

``போன வாரம் நைட், பங்களாவுக்குள்ள திருடனுங்க பூந்துட்டானுங்க சார். ஜானகிக்குத் தெரியாம அவ ஆபரேஷனுக்காக, குருவி மாதிரி மூணு வருஷமா சேர்த்துவெச்ச என் காசைத் திருடிட்டானுங்க. நான் வைக்கிற இடத்தை எவனோ நோட்டம் வுட்டு... அடிச்சிட்டானுங்க. நைட் அரவம் கேட்டு முழிச்சேன். குச்சிய எடுத்துச் சுழட்டிக்கிட்டே இருந்தேன். எவனோ ஒருத்தன்மேல செம அடி விழுந்தது. ஆனாலும் ஓடிட்டானுங்க. அவுனுங்க ஓடினதுகூட தெரியாம குச்சிய சுழட்டிக்கிட்டே இருந்திருக்கேன் சார்.

ஜானகி கேட்டதுக்குக்கூட, ``திருடன்களைத் துரத்திட்டேன்’னு சொல்லிச் சமாளிச்சுட்டேன் சார். எங்களைப் பிச்சைக்காரன்னு சொல்லிட்டு, எங்ககிட்டயே ஒருத்தன் எடுத்துட்டுப் போயிட்டான். இனி இந்தக் காச சேர்க்கிறதுக் குள்ள என் குரலு போவாம இருக்கணும் சார். ஜானகி என் மொகத்த பார்த்துரணும் சார். அதுக்காக ஜானகிக்குத் தெரியாம  மறுபடியும் மலேசியாவோடு ரயில்ல பாடி கையேந்துறேன். ஆனா, எப்டியாவது பாடி சம்பாதிச்சிருவேன் சார்” என்றவரின் முகம் சிரித்துக்கொண்டிருந்தது.

ஜானகி, சாப்பாட்டுப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டினார்; இதழை வாங்கிக்கொண்டார்; திருச்சியைப் பின்தொடர்ந்தார். வாதைகளின் சகலப்பாடுகளின் வலியை ஏந்திக்கொண்டு, நம்பிக்கை எனும் ஒளியை என் அகவிழியில் ஏற்றிய திருச்சியுடன் நானும் நடந்தேன்.

- மனிதர்கள் வருவார்கள்...