
ஓவியங்கள்: ம.செ.,
முழுப்படையுடன் ஆற்றைக் கடந்து செவ்வரிமேட்டின் உச்சியில் ஏறி நின்றான் பாரி. எதிர்ப்புறம் பறந்து விரிந்துகிடந்தது நிலப்பரப்பு. எங்கும் எருக்கும் நெருஞ்சியும் விளைந்துகிடந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மேடுபள்ளம் எதுவும் இல்லாமல் வானின் விளிம்பு வரை சமமாய்க் கிடக்கும் மண்ணை வாழ்வில் முதன்முறையாகப் பார்த்தான் பாரி.

அந்த நிலத்தின் வடதிசை ஓரத்தில் இருக்கும் கோட்டையைச் சுற்றி எண்ணற்ற யானைகள் நின்றிருந்தன. அங்கிருந்து தென்திசையில் மிகத் தொலைவில் வேந்தர்படை நின்றுகொண்டிருந்தது. கோட்டையிலிருந்து மிக விலகி ஏன் நிற்கிறார்கள் எனப் புரியவில்லை. யானைப்படையால் சூழப்பட்ட கோட்டைக்குள் நீலன் இருக்கிறான் என்பது உறுதிப்பட்டது. ஆனால், அந்த இடத்தைவிட்டு காதத்தொலைவு தள்ளி பெரும்படை நிற்கிறது. `ஏன் இந்த உத்தி?’ என்று சிந்தித்தபடி நின்றான் பாரி.
காற்றில் வந்த சுருளம்புகளின் தாக்குதலால் செவ்வரிமேட்டில் முன்நிலையில் நின்ற வேந்தர்படை வீரர்கள் முற்றிலுமாக அழிந்தனர். இரண்டாம், மூன்றாம் நிலையில் இருந்தவர்கள் அப்படியே உள்வாங்கி நெடுந்தொலைவைக் கடந்து உள்நிலத்துக்கு வந்துசேர்ந்தனர். அவர்கள் வந்து நிலைகொள்ளும்வரை பறம்புப்படை செவ்வரிமேட்டுக்கு மேலே வந்துசேரவில்லை. ஆற்றைக் கடப்பதற்கு, நினைத்ததைவிட அதிக நேரமாகியிருக்கிறது. அது வேந்தர்படைக்கான வாய்ப்பாக அமைந்தது.
மிக நீண்டநேரம் கழித்து செவ்வரிமேட்டுக்கு மேலேயேறிய பறம்புப்படை பாய்ந்து முன்னேறி வராமல் அப்படியே நின்றது. தொலைவிலிருந்து அதை மையூர்கிழாரும் வேந்தர்களும் உற்றுக்கவனித்தபடி இருந்தனர்.
`நாம் வெகுதொலைவு உள்ளே வந்துள்ளோம். ஆனால், நாம் வந்த இந்தத் தொலைவுதான் அவர்களுக்கு அச்சத்தை ஊட்டுகிறது. உள்நிலப்பரப்புக்குள் வர அவர்களுக்குத் தயக்கமும் மிரட்சியும் இருப்பதை அவர்களின் செயல் வெளிப்படுத்துகிறது’ என்று கருதினர்.
மையூர்கிழார் சொன்னார், ``இதுதான் நாம் முதன்முதலில் போர்க்களத்துக்காகத் தேர்வுசெய்த இடம். முடத்திருக்கண் இங்கேதான் திசைவேழரை அழைத்துவந்தான். ஆனால், நமது திட்டத்துக்கு எதிராகச் செயல்பட்ட திசைவேழர், அவர் தேர்வுசெய்த தட்டியங்காட்டிலேயே செத்தொழிந்தார். வெங்கல்நாட்டின் பெருந்தெய்வம் வெண்ணிறை மாடச்சி குடிகொண்டுள்ள நிலம் இது. மலைக்காட்டில் உள்ள தீயசக்திகளை நிலத்தில் அண்டவிடாமல் மனிதர்களையும் மாட்டினங்களையும் காக்கும் மாடச்சியின் நிலத்துக்கே நாம் வந்து சேர்ந்துள்ளோம். இங்குதான் பாரியின் அழிவு நிகழப்போகிறது. காட்டுப்புலிகள் நாட்டுமாடுகளை வேட்டையாடிய காலம் முடிந்துவிட்டது. நாம் திருப்பித் தாக்கி அவர்களை முழுமுற்றாக அழித்தொழிக்க தெய்வம் ஏற்படுத்திக் கொடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினால், வேந்தர்கள் மூவருக்கும் வெற்றி உறுதி’’ என்றார்.
இதுவரை பேசியதுபோல் அல்லாமல், இப்போது தெய்வத்தை துணைக்கு அழைத்துப் பேசினார். மனிதனின் எந்த முயற்சியின் வழியேயும் கிடைக்காத நம்பிக்கை, தெய்வத்தின் பெயரால் ஏற்படுகிறது. வேந்தர்கள் மறுப்புச்சொல் ஏதும் சொல்லவில்லை. அடுத்த கணமே தனது திட்டத்தைக் கூறலானார் மையூர்கிழார். அவரது வேகமும் வெறியும் முன்னிலும் கூடுதலாக இருந்தன. காரணம், வேந்தர்கள் மூவரும் மனதளவில் போரை கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர் என்பதை அவர் அறிவார். மூவேந்தர்களும் இந்த நிலம்விட்டு அகன்று தங்களின் தலைநகரங்களுக்குப் போய்விடுவார்கள். ஆனால், இனி தானோ, தனது நாடோ இங்கு இருக்க இயலாது. அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டன. மீதம் இருப்பதும் இன்றைய பகலுக்குள் முடிந்துவிடும். எனவே, கிடைக்கும் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி, பாரியை அழிக்க வேண்டும் என நினைத்தார்.
``கண்ணுக்கு முன்னால் இருப்பது பறம்பின் சின்னஞ்சிறிய படை. நமது திட்டத்தால் அவர்களை மூன்றாகப் பிரிப்போம். வடதிசையில் யானைகளால் பாதுக்காக்கப்படும் கோட்டையைச் சுற்றி மாகனகன் தலைமையிலான படை நின்றுகொண்டிருக்கிறது. நானும் அரசகுல மாவீரர்களான சோழவேழனும் பொதியவெற்பனும் வலிமையான படையோடு நடுவில் இந்த இடத்திலேயே அணிவகுத்து நிற்கிறோம். சிறப்புக் கவசப்படை வீரர்களோடு மூவேந்தர்களும் தென்கோடியில் பாதுகாப்புடன் நில்லுங்கள். எதிரிகள் மூன்று கூறுகளாகப் பிரிந்தே ஆவார்கள். மூன்றாகப் பிரிந்தால் ஒரு கூட்டத்தில் முந்நூறு பேருக்குமேல் இருக்க மாட்டார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய மாவீரர்களாக இருந்தாலும் நமது வலிமையால் அவர்களை எளிதில் வீழ்த்த முடியும். அவர்களில் முக்கியமானவர்கள், யானைப்படையைத் தாக்க வடக்குக் கோட்டையை நோக்கிப் போவார்கள். அப்போது நாங்கள் அவர்களைச் சுற்றிவளைத்துத் தாக்கி அழிப்போம்’’ என்றான்.

மையூர்கிழாரின் திட்டம் குறித்து ஆழ்ந்து சிந்தித்தார் குலசேகர பாண்டியன். `ஆற்றில் இறங்கியவர்களை அழிக்கப் போன கருங்கைவாணன், இன்னும் வந்துசேரவில்லை. நாம் மிகவும் உள்ளே தள்ளிவந்துவிட்டோம். எஞ்சியிருக்கும் படைவீரர்களில் பெரும்பாலானோர் சேர வீரர்களே. இப்போது தாக்குதல் வேண்டாம் என முடிவெடுத்தால் உதியஞ்சேரல் உடனடியாகப் பிரிந்துவிடுவான். நமது நிலைமை மிகவும் வலிமை குன்றியதாக மாறிவிடும். நாம் தப்பிப்பதே கடினமாகிவிடும். எனவே, மையூர்கிழாரின் ஆலோசனையை ஏற்று நம்பிக்கையோடு போரிடுவதாக முடிவெடுப்போம். அப்போதுதான் படையை ஒன்றுபடுத்தி நிறுத்த முடியும். போரின் போக்கிற்கேற்ப அடுத்தகட்டத்தை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். ஏனென்றால், இது வெங்கல்நாட்டின் எல்லைப்பகுதி. இதற்கு கீழ்ப்பகுதியில் இருப்பது ஊறல்காடு. அதுபற்றி மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது. யாராலும் அதற்குள் நுழைந்து வெளியேற முடியாது. நாம் எளிதில் தப்பிக்கலாம்’ என மனதில் எண்ணியபடி மையூர்கிழாரின் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி கொடுத்தான் குலசேகரபாண்டியன்.
செங்கனச்சோழனுக்கு பெருங்குழப்பமாக இருந்தது. இவ்வளவு பேரழிவுக்குப் பிறகும் எப்படி எதிர் நின்று தாக்கும் முடிவை எடுக்கிறார் குலசேகரபாண்டியன் என்பது விளங்கவில்லை. `கோட்டைக்குள் இருக்கும் நீலனை வெட்டி வீசச் சொல்லிவிட்டு, நாம் பாதுகாப்பாக இந்த இடம்விட்டு நீங்கலாம்’ என்று நினைத்தான். ஆனால், அதைச் சொல்லும் நிலையில் சூழல் இல்லை. அவன் தந்தை சோழவேழன், மையூர்கிழாரைவிட பெருஞ்சினத்தோடு பிரிக்கப்பட்ட படைக்குத் தலைமையேற்றுப் போய்க்கொண்டிருந்தார்.
இதே குழப்பம் உதியஞ்சேரலுக்கும் இருந்தது. ஆனால், `சமவெளியில் நன்றாக உள்ளே வந்துவிட்டதால் பாரி இவ்வளவு தொலைவு மலையைவிட்டு விலகிவர மாட்டான். எனவே, படையை மூன்றாகப் பிரிப்பது சிறந்த உத்தி’ என நினைத்தான். அதேபோல `முந்நூறு யானைகளால் காக்கப்படும் கோட்டையைத் தாக்க, அவர்களால் கொண்டுவர முடிந்தது நான்கு யானைகள் மட்டுமே. மீதி யானைகள் வந்துசேர்வதற்குள் போர் முடிந்துவிடும்’ எனச் சிந்தித்தான் உதியஞ்சேரல். முக்கியமாக, குலசேகரபாண்டியன் வேறு பக்கம் போகாமல் தங்களோடு இங்கே இருப்பதற்கு ஒப்புக்கொண்டதால், இந்தத் திட்டத்தின் மீது வேறு ஐயம் எதுவும் தோன்றவில்லை.
கருங்கைவாணன் வந்துசேரும் வரை மூவேந்தர்களின் கவசப்படையின் முன் தளபதியாக உசந்தன் நிற்பது என முடிவானது. ஏறக்குறைய தன் வீரர்களை முழுமுற்றாக இழந்து நிற்கும் செங்கனச்சோழன், சோழப்படைத் தளபதி உசந்தன் தனது அருகில் இருப்பதை ஆறுதலாக உணர்ந்தான்.
மையூர்கிழார் திட்டப்படி, போதுமான இடைவெளியோடு வேந்தர்படை மூன்றாகப் பிரிந்தது. பெரும் எண்ணிக்கையிலான வீரர்களோடு பொதியவெற்பன், சோழவேழன் ஆகியோரோடு நடுவில் இருக்கும் படையில் வீறுகொண்டு நின்றார் மையூர்கிழார்.
செவ்வரிமேட்டில் ஏறிய பறம்புப்படை, ஏதும் செய்யாமல் அப்படியே அங்கு நின்றது. முன்னேறுவதா அல்லது திரும்புவதா என்ற குழப்பத்தில் அவர்கள் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதேநேரம் அவர்கள் வராமல் நாம் முன்சென்று தாக்க வேண்டாம் என்ற முடிவோடு இருந்தார் மையூர்கிழார்.
மேட்டுநிலம் ஏறியவுடன் எதிரிகளை நோக்கி முன்னேறாமல் படையை அப்படியே நிறுத்தியிருந்தான் பாரி. எதிர்களின் படை மீண்டும் பிரிந்து விலகுவதைப் பார்த்தான்.

வடகோடியில் யானைப்படையால் சூழப்பட்ட கோட்டை இருந்தது. தென்கோடியில் கவசம் அணிந்த குதிரைவீரர்கள் நிறைந்த சிறுபடை இருந்தது. இவை இரண்டுக்கும் இடையே தனக்கு நேரெதிராக வெகுதொலைவில் பெரும்படை ஒன்று அணிவகுத்து நின்றது. காலாட்படை வீரர்களால் நிறைந்துள்ள அந்தப் படையில் ஆங்காங்கே குதிரையில் சில வீரர்கள் நின்றனர். அவர்கள் அணிந்துள்ள கவசங்களின் தன்மையைவைத்து அவர்கள் தளபதிகளாகவோ, வேந்தர்களாகவோ இருக்க வாய்ப்புண்டு எனக் கருதினான் பாரி. இடதுபக்கம் ஆற்றைக் கடந்து நான்கு யானைகளோடு மேலேறிய தந்தமுத்தத்துக்காரர்களுக்கு, சிறிது கால இடைவெளி தேவைப்பட்டது. அதற்கான நேரத்தைக் கணித்த
படி திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்தான் பாரி.
`பறம்புநிலம்விட்டு வெகுதொலைவு வந்துள்ளோம். நாகக்கரட்டின் மேல் நின்று குறிப்புணர்த்தியதுபோல இப்போது எதையும் செய்ய முடியாது. நீலனை மீட்க இதுவே இறுதித் தாக்குதல். பறம்பின் மிக வலிமையான வில்வீரர்களிடம் மிகக் குறைவான அம்புகளே உள்ளன. எதிரிகள் நம்மை மூன்றாகப் பிரித்து எளிதாகத் தாக்கி அழிக்க நினைக்கிறார்கள்’ என எண்ணியபடி பாரி சொன்னான், ``கோட்டைக்குள் இருக்கும் நீலனை மீட்பதே முதற்பெரும் வேலை. தந்தமுத்தத்துக்காரர்களின் தாக்குதல் தொடங்கியவுடன் மின்னல் வேகத்தில் செயல்படவேண்டும். எல்லா வகைகளிலும் நமது வலிமையான தாக்குதல் அங்கு நிகழவேண்டும். எனவே, முடியனும் உதிரனும் திறன்மிக்க வீரர்களோடு வடதிசைக்குப் போங்கள். விண்டன் சிறிய அளவிலான குதிரைவீரர்களை அழைத்துக்கொண்டு தென்கோடியில் இருக்கும் கவசப்படையைத் தாக்கட்டும். காதத்தொலைவுக்கு அப்பால் ஆற்றின் கரையிலிருந்து வந்துகொண்டிருக்கும் காலம்பன், அவனோடு இணைந்துகொள்ளட்டும். அதுவரை விண்டன் நிதானமான தாக்குதலை நடத்தட்டும். நடுவில் இருக்கும் இந்தப் பெரும்படையை நான் எதிர்கொள்கிறேன்’’ என்றான் பாரி.

அதிர்ந்தான் முடியன். ``நடுவில்தான் எதிரிகளின் வலிமைமிகுந்த படை அணிவகுத்து நிற்கிறது. அப்படியிருக்க, எண்ணிக்கையில் மிகமிகக் குறைந்த வீரர்களோடு பறம்புத்தலைவன் தனித்துப்போவது சரியல்ல’’ என்றான்.
``இப்போது முக்கியம், நீலனை மீட்பது. நீயும் உதிரனும் அந்தக் கோட்டையை நோக்கி முழு வேகத்தோடு முன்னேறுங்கள். நடுவில் நிற்கும் இந்தப் பெரும்படை உங்களை நோக்கி வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றான். முடியன், உதிரன், விண்டன் மூவரும் இதை ஏற்றுகொள்ளவில்லை. ஆனால் உதிரனோ, விண்டனோ பாரியை மறுத்துப் பேச முடியாது. முடியன் மீண்டும் சொல்ல வாயெடுத்தபோது ``அங்கே பார்’’ என்றான் பாரி. அவன் கை நீட்டிய வடதிசையை அனைவரும் பார்த்தனர்.
கொண்டுவந்த நான்கு யானைகளில் மூன்று யானைகளை முன்னங்கால்களை மண்டியிடவைத்து நிறுத்தினர் தந்தமுத்தத்துக்காரர்கள். ஒரு யானை மிகவும் பின்னால் நின்றுகொண்டிருந்தது. ``வேலை தொடங்கிவிட்டது. உடனே அவ்விடம் போ’’ என்றான் பாரி. அதன்பிறகு பேச இடம் ஏதுமில்லை. தங்களுக்கான வீரர்களோடு முடியனும் உதிரனும் அந்த இடம் விரைந்தனர்.

கோட்டையைச் சுற்றி முந்நூறு யானைகளை அணிவகுத்து நிறுத்தியிருக்கும் அல்லங்கீரன், தன் எதிரிகள் மூன்று யானைகளை மண்டியிடவைத்துக்கொண்டிருப்பதை உற்றுப்பார்த்தான். அவனது யானைப்படைக்குப் பின், பெருந்தளபதி மாகனகன் தனது சிறப்பு வீரர்களோடு நின்றிருந்தான். சிறுவயது முதல் யானைப்போரில் பயிற்சிகொண்டு இணையற்ற பெருவீரனாக வளர்ந்தவன் அல்லங்கீரன். யானைப்படையின் தளபதியாக நீண்டகாலம் இருந்த அவன், வயதானதால் அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட்டான். ஆனாலும் யானைகளின் மீதிருந்த காதலால் கட்டுத்தறியின் காவலனாகப் பொறுப்பேற்று அந்தப் பணியைச் செய்துவந்தான். எதிர்பாராமல் தட்டியங்காட்டுப் போரின் கடைசி நிலையில் மூவேந்தர்களின் யானைப்
படைக்கு அவன் தலைமை தாங்கும் நிலை உருவானது. வாழ்வு முழுவதும் யானைப்போரிலே கழித்த அல்லங்கீரன், எதிர்பாராமல் தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தான். ஆனால், ``போரிடவேண்டிய எதிரிகளோ மூன்று யானைகளை மட்டுமே கொண்டுவந்து மண்டியிடவைத்து ஏதோ சடங்கு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். என்ன இதுவென்று புரிவில்லை’’ என அலுத்துக்கொண்டான்.
தந்தமுத்தத்துக்காரர்கள், மூன்று யானைகளையும் முன்புறக் கால்களை மடித்து மண்டியிடவைத்தபடி, அவை ஒவ்வொன்றின் பின்புறக் குதத்திலும் வட்டவடிவ நீள்மூங்கிலைச் செருகினர். தாங்கள் குடுவையில் கொண்டுவந்த மூலிகைச் சேர்மானத்தை அதில் ஊற்றினர். அப்போது முன்புறம் நின்றிருந்தவர்கள் நெல்லிக்காய் அளவு உருண்டைகளை யானைகளின் அடிநாக்கில் வைத்தனர்.
தொலைவிலிருந்து அதைப் பார்த்த பாரி, தாக்குதலைத் தொடங்கும் நேரத்தைக் கணித்து உத்தரவிட்டான். குரல் கேட்ட கணம் விண்டன் குதிரைவீரர்களோடு தென்கோடியில் இருக்கும் கவசவீரர்களைத் தாக்க விரைந்தான். இருபுறமும் வீரர்கள் பிரிந்தவுடன், இருக்கும் சின்னஞ்சிறு படையைக்கொண்டு முன்னே நிற்கும் வேந்தர்படையை நோக்கி முன்னேறத் தொடங்கினான் பாரி.
தனது திட்டப்படி எதிரிகள் மூன்றாய்ப் பிரிந்துவிட்டனர் என்பதைப் பார்த்த கணம், வெற்றிக் கூச்சலிட்டார் மையூர்கிழார். அது வீரர்களுக்கும் பெருந்தினவைக் கொடுத்தது. வெகுதொலைவிலிருந்து சின்னஞ்சிறு கூட்டம் முன்நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தது. வருகிறவர்களை உருத்தெரியாமல் அழிக்கவேண்டும் எனக் காத்திருந்தனர் பொதிய வெற்பனும் சோழவேழனும்.

விண்டன், தென்கோடியை நோக்கி குதிரையை விரட்டிக்கொண்டிருந்தான். முடியனும் உதிரனும் தந்தமுத்தத்துக்காரர்களை வந்தடைந்தனர். கணநேரம்கூட காலம் தாழ்த்தாமல் உள்நுழையவேண்டிய மிகப்பெரிய பொறுப்பை, தங்களிடம் பாரி கொடுத்துள்ளான் என்னும் எண்ணமே சற்றே பதற்றத்தைக் கொடுத்தது. மிகமிகக் குறைந்த வீரர்களுடன் எதிரிகளின் பெரும்படையைத் தாக்க பாரி முன்னேறிக்கொண்டி ருப்பது பதற்றத்தை மேலும் அதிகமாக்கியது. நீலனை மீட்டவுடன் விரைந்துபோய் பாரியோடு இணைய வேண்டும் எனத் துடிப்பேறி இருந்தான் முடியன்.
மூலிகைச்சாறு முழுவதும் ஊற்றப்பட்டவுடன் மூங்கிலை உருவி எடுத்தனர். மண்டியிட்ட முன்னங்கால்கள் மேலெழுந்தன. ஒவ்வொரு யானைக்கு அருகிலும் அவை ஒவ்வொன்றின் காலின் பெருநகக்கணுவை மிதித்தபடி வாய்க்குள் கையை விட்டு நாக்கைப் பிடித்துக்கொண்டு சரியான பொழுதுக்காகக் காத்திருந்தனர், அந்தந்த யானையின் பாகன்கள். அச்சமென்பது துளிகூட இல்லாதவன் மட்டுமே செய்யக்கூடிய வேலை இது.
யானைக்கு மதம் உண்டானால் காடு தாங்காது என்பது, பொதுவழக்கு. ஆனால், குட்டமதம், சரளமதம், உள்மதம் என்று மூன்று வகை மதங்கள் உண்டு. இந்த மூன்று வகை மதங்களையும் பிற யானையைக்கொண்டும் பாகன்களைக்
கொண்டும் மாற்று நஞ்சைச் செலுத்தியும் அடக்கலாம். ஆனால், இந்த மூன்றுக்கும் அப்பால் நான்காம் வகை மதம் ஒன்று உண்டு. அதன் பெயர், எரிமதம். அந்த வகை மதம் கண்டால், அந்த யானையை எதிர்கொள்ள எந்த உயிராலும் முடியாது. தனது நிழலையே கொல்ல விரும்பும் மதம் அதுதான். மதம்பிடித்த மற்ற யானைகள் பிளிறினால், அந்தக் காட்டில் மனிதன் எங்கு இருந்தாலும் பிளிறல் கேட்ட கணத்தில் கைகால்கள் தானே பின்னிக்கொள்ள கீழே விழுவான். பிளிறலின் அதிர்வு மனிதனின் உள்ளியக்கத்தை நிலைகுலையச்செய்துவிடும். ஆனால், எரிமதம் கண்ட யானையின் பிளிறலைக் கேட்டால் யானையே கால்கள் பின்னி கீழே விழும்.
தந்தமுத்தத்துக்காரர்களால் யானைக்கு நான்கு வகையான மதத்தையும் உருவாக்க முடியும். மதமே யானையின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும். மதமே யானையின் மிகச்சிறந்த குணம். அந்தக் குணத்தை யானைக்கு வரவழைப்பது தந்தமுத்தத்துக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த செயல்.
யானைகளின் நாக்கைப் இறுகப் பிடித்திருந்த ஒவ்வொருவனும், அது பெருகும் வேகத்தைக் கண்டு உள்ளுக்குள் நடுங்கத் தொடங்கினர். முதலில் எரிமதம்கொண்ட யானையின் நாக்கு பெருகும். பிறகு அதன் முகம், கன்னம், துதிக்கை ஆகிய மூன்றும் பெருகும். நாக்கு பெருகி முடித்து முகம் பெருகத் தொடங்கும் முன், அதன் தன்மை உணர்ந்து அனைவரும் விலக வேண்டும்.
நாக்கு பெருக்கத் தொடங்கியவுடன் அதிலிருந்து கையையும் காலின் பெருநகக் கணுவிலிருந்து தமது காலையும் ஒரே நேரத்தில் விலக்கிக்கொண்டு ஓசை எழுப்பியபடி அந்த இடம்விட்டு மூன்று பாகன்களும் ஓடத் தொடங்கினர்.
பாகன்கள் விட்டுவிலகிய கணம், மூன்று யானைகளும் தங்களுக்கு எதிரில் திரண்டிருக்கும் யானைக்கூட்டத்தை நோக்கி ஓடத் தொடங்கின. எரிமதத்துக்கான சேர்மானம், உடல் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது.
மிகச்சில வீரர்களை மட்டுமே கொண்டிருந்த பாரி, எதிரே நிற்கும் வேந்தர்படையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். எவ்வளவு முயன்றும் போரைத் தவிர்க்க முடியவில்லை. கடந்த ஆறு நாளாக எவ்வளவு முயன்றும் போரை முடிக்க முடியவில்லை. இன்றோடு எல்லாம் முடிவுக்கு வரவேண்டும். இனி பச்சைமலைத் தொடரை நோக்கி வேந்தர்களின் வேற்கம்புகள் ஒருபோதும் நீளக் கூடாது என்ற முடிவோடு முன்னோக்கிச் சீறிக்கொண்டிருந்தான் பாரி.

எரிமதம் கண்ட யானைகள், தமது காதுகள், முகம், வால் ஆகிய நான்கையும் நிலைகொள்ளாமல் ஆட்டின. பிளிறல் தொடங்கும் முன்பு நடக்கும் செயல் இது. தங்களை நோக்கி ஓடிவந்துகொண்டிருக்கும் மூன்று யானைகளின் மீதும் பாகன்கள் இல்லை. ஆயுதங்கள் ஏந்திய வீரர்களோ, முகப்படாமோ கவசமோ இல்லாமல் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், `தன்மையும் வேகமும் மிகவும் மாறுபட்டதாக இருக்கின்றனவே!’ என அல்லங்கீரனுக்குத் தோன்றியது. எனினும், வெறும் மூன்று யானைகளால் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்துடன் அவற்றின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருந்தான்.
அதே மனநிலையோடுதான் மையூர்கிழார் நின்றுகொண்டிருந்தார். மூன்றாகப் பிரிந்த பறம்புப்படையின் மிகச்சிறிய பகுதி மட்டுமே தங்களை நோக்கி வருகிறது. `வரும் படையில் குதிரைகளும் இல்லை; வில்வீரர்களும் இருப்பதுபோல் தெரியவில்லை. பிறகு, எந்த நம்பிக்கையில் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்ற சிந்தனையில் நின்றுகொண்டிருந்தார்.
அதுவரை தந்தத்தின் மேலே துதிக்கையை முறுக்கியபடி ஓடிவந்துகொண்டிருந்த யானைகள், இப்போது துதிக்கையை இருபக்கமும் முழுமையாக வீசத் தொடங்கின. தலையை மறுத்து ஆட்டி, அதைவிட வேகமாக காதுகளை ஆட்டத் தொடங்கின. யானையை, மனிதனால் விரைவாக நடக்கவைக்க மட்டுமே முடியும்; ஒருபோதும் ஓடவைக்க முடியாது. ஏனென்றால், ஓடும் யானையின் மீது தூசுகூட நிற்காது; அப்புறம் மனிதனால் எப்படி அமர முடியும்? யானை ஓடும் நிலத்தில் புற்கள் மீது புள்ளினம் அமராது. யானை ஓடி மனிதன் பார்ப்பது மிகமிக அரிது. மனிதன் பார்த்ததெல்லாம் பாகன்கள் யானையை விரைவாக நடத்திச்செல்வதை மட்டும்தான். போர்க்களத்திலும் அந்தக் காட்சிதான் தென்படும்.
ஆனால், இப்போது அவர்களின் கண்களுக்கு எதிரில் வந்துகொண்டிருக்கும் யானைகள் விரைவாக நடந்துவரவில்லை. நிலம் அதிர வந்துகொண்டிருக்கின்றன. பெரும்பரப்பில் யானைகளின் ஓட்டத்தை முதன்முறையாகப் பார்க்கின்றனர். அவற்றின் முதுகெலும்பு வளைவுகள் எம்பி இறங்கின. பார்த்துக்கொண்டிருந்த அல்லங்கீரனுக்கும் அவர்களின் யானைகளின் மீது இருக்கும் பாகன்களுக்கும் கண்களில் நடுக்கம் துளிர்க்கத் தொடங்கியது.
பாரியைத் தொடர்ந்து சிறுபடை வந்துகொண்டிருந்தாலும் அவனைச் சுற்றி ஓடிவந்த ஐவர், பாரிக்கான ஆயுதங்களோடு ஓடிவந்தனர். பாரியால் எதிரில் நிற்கும் மொத்தப் படையையும் அழித்தொழிக்க முடியும் என பறம்புவீரன் ஒவ்வொருவனுக்கும் தெரியும். ஆனால், எந்த ஆயுதத்தால் எப்படிப்பட்ட தாக்குதலை நடத்தப்போகிறான் என்பதைக் காண, உடன் ஓடிவரும் வீரர்கள் ஆர்வத்தோடு இருந்தனர்.
ஒருவன், மூவிலைவேலினைப் பெருங்கட்டாகத் தூக்கி வந்துகொண்டிருந்தான். இன்னொருவன், கண்டரக்கோடரிகளை ஏந்திக்கொண்டு வந்தான். வாள் வகைகளையும் வில்அம்பு வகைகளையும் இருவர் எடுத்து வந்தனர். இவர்கள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுதங்களை எடுத்துவந்தனர். ஆனால், இவர்கள் நால்வரைவிட பின்தங்கி ஐந்தாவதாக ஒருவன் வந்துகொண்டி ருந்தான். காரணம், அவன் தூக்கிவந்த ஆயுதம். அதன் பெயர் எறுழ்தடி.
அது தடிவகையைச் சேர்ந்த ஆயுதம். அதன் தலையில் இரும்புக் களிமண்ணை உருக்கி உருளையாய் வார்த்திருப்பர். அந்த உருளையின் நடுப்பகுதியில் முளைவிடும் விதையளவு இரும்பினால் ஆன மழு எம்பி இருக்கும். தடிவகை ஆயுதமெல்லாம் தாக்கி அழிக்கும் தன்மையைக்கொண்டவை. ஆனால் எறுழ்தடி, தாக்கும் ஆயுதமன்று; சிதைக்கும் ஆயுதம். பாறையோ, பெருமரமோ, எதுவாக இருந்தாலும் எறுழ்தடியால் ஓரடி அடித்தால் சிதைந்து நொறுங்கும். இணையற்ற வலிமைகொண்ட மாவீரர்களால் மட்டுமே கைக்கொள்ள முடிகிற ஆயுதம் அது.
வேந்தரின் படையை நெருங்கின யானைகள். எரிமதம் கண்ணைக்கட்டியது. கருவிழியைச் சுற்றியுள்ள வெண்மை மறைந்து தேன்நிறம் எய்தியது. தேன்நிறம் எரியத் தொடங்கியது. உடலுக்குள் ஏதேதோ நிகழ்ந்தன. கும்பத்தின் உச்சியில் இருக்கும் மயிர்க்கற்றைகள் தீக்கொழுந்துபோல் மேலெழுந்தன. பருத்து வீங்கிய துதிக்கையைச் சுழற்றியபடி தலை உயர்த்திப் பிளிறத் தொடங்கின. பத்து யானையின் பிளிறல் ஒரு மத யானையின் பிளிறலுக்குச் சமமல்ல. பத்து மதயானையின் பிளிறல் ஒரு எரிமத யானையின் பிளிறலுக்குச் சமமல்ல. காற்றெங்கும் பறக்கும் பறவைகள் கிடுகிடுத்தபோது ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக மூன்று யானைகள் விடாது பிளிறின. நேற்றிரவு இறங்கிய இடிகளின் மொத்த ஓசையும் ஒன்றாய் இறங்கிக்
கொண்டிருந்தது. எரிமதப் பிளிறலின் பேரோசை, வேந்தர்படை யானைகளின் உள்நரம்புகளை அதிரச்செய்தது.
படைக்கு அருகில் வந்ததும், ஆயுதத்தை வாங்க பின்னால் வந்துகொண்டிருப்பவனை நோக்கி கையை நீட்டினான் பாரி. ஒருவன் மூவிலை வேலையும் இன்னொருவன் கண்டரக்கோடரியையும் தர முன்வந்தனர். அவற்றை மறுத்து, இறுதியாக வந்துகொண்டிருந்தவனிடம் இருந்து எறுழ்தடியை வாங்கினான் பாரி.
வேந்தர்படையின் நடுவில் நின்றிருந்த மையூர்கிழார், `காததூரத்துக்கு அப்பால் இருக்கும் யானைப்படையின் பிளிறல் ஓசை, இதற்கு முன் கேட்டிராத அளவு இருக்கிறதே!’ என்ற நடுக்கத்தோடு பார்த்துவிட்டுத் திரும்பினான். திரும்பிய கனம் யானையின் தும்பிக்கையால் அடித்து வீசப்படும் மனிதர்களைப்போல, தனது படையின் முன்கள வீரர்கள் நாலா புறமும் வீசப்பட்டனர்.
எரிமத யானைகள் அருகே வரும்போது, வேந்தர்படை யானைகள்மேல் இருந்த பாகன்களையும் வீரர்களையும் வீசி அடித்துவிட்டு வெறிகொண்டு ஓடின. எந்த ஓர் உயிரினமும் தன் உயிர்காக்கும் செயலை உச்ச ஆற்றலோடுதான் நடத்தும். சிதறிய படையில் ஒன்றையொன்று சரித்துக்கொண்டு மேலேறியபடி ஓடின யானைகள்.
யானைகளே சரிந்து விழும்போது மனிதர்களால் என்ன செய்ய முடியும்? அல்லங்கீரன் எக்கணம் தூக்கிவீசப்பட்டான் என்பது தெரியவில்லை. மிதி பட்டு நசுங்கியபோது அவனது விழியொன்று உருண்டோடியது.
கட்டுத்தறிக்குப் பழகிய யானைகள் காட்டுயானைகளின் முன் நிற்காது. இவை, காட்டுயானைகள் மட்டுமல்ல; எரிமதம்கொண்ட யானைகள். இவற்றின் பிளிறல்கள் மற்ற யானைகளின் நினைவுப்புலனில் இருக்கும் ஆதி அச்சத்தை விடாது கிளறுபவை. அந்த ஓசையை கணநேரம்கூட அவற்றால் கேட்க முடியாது. ஆனால், எரிமத யானைகளோ விடாது பிளிறக்கூடியவை. ஆயிரம் வீரமுண்டா வாத்தியங்களை ஒன்றாய் இசைத்தாலும் இவற்றின் பிளிறல் ஓசைக்கு முன்னால் அவற்றின் ஓசை சிறுத்து ஒடுங்கும்.
வேந்தர்படையைத் தாக்கி முன்னேறினான் பாரி. உன்மத்தம் ஏறிய யானையின் தாக்குதலைவிட வலிமையானதாக இருந்தது அது. எறுழ்தடியால் தாக்கப்பட்டவர்கள் யானை மிதித்தால் எப்படி உருத்தெரியாமல் ஆவார்களோ, அப்படி ஆனார்கள். அடிவாங்கிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டவனைத் தாண்டி அவனது தசைகள் போய் விழுந்தன. அதைப் பார்த்த மற்ற வீரர்கள் மிரண்டு ஓடத் தொடங்கினர்.
பிளிறலோடு முன்னேறி வந்த எரிமத யானைகளின் வேகம் கண்டு மற்ற யானைகளால் ஓட முடியாது. விரட்டிவந்த வேகத்தில் முன்னால் சென்ற யானை ஒன்றின் பின்கால் சப்பையில் அடித்தது. அடிவாங்கிய கணமே கமுக்கட்டை உடைந்து கீழே விழுந்தது அந்த யானை. விழுந்த யானையின் காலைப் பிடித்து தூக்கிச் சுழற்றியது எரிமத யானை ஒன்று.
கண்ணுக்கு அப்பால் தூக்கிவீசப்படும் வீரர்களைப் பார்த்து பொதியவெற்பனும் சோழவேழனும் நடுங்கிப்போயினர். என்ன நடக்கிறது என்பதை அறிய, மையூர்கிழார் சற்றே முன்னேறி வந்தார். சிதையும் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் சொற்களை உச்சரித்தபடி வேகமாக முன்னேறி வந்தவர், அருகில் நெருங்கியதும் எதிர்ப்பட்ட காட்சியைக் கண்டு உறைந்து நின்றார். எறுழ்தடியைச் சுழற்றிக்கொண்டு முன்னேறியவன் பறம்பின் தலைவன் பாரி.
அவனைப் பார்த்த கணம், நினைவின் புலனுக்குள் மூழ்கிக்கிடந்த ஆதி அச்சம் பீறிட்டு மேலே வந்தது. உள்நரம்புகள் அதிரத் தொடங்கின. அவனது கைகளால், நடுக்கத்தை மீறி ஆயுதத்தை இறுகப்பற்ற முடியவில்லை. அவனது உள்ளியக்கம் நிலைகுலைந்துகொண்டிருந்தது.
தட்டியங்காட்டில் எத்தனையோ முறை பறம்புத்தளபதிகளிடம் தப்பிப்பிழைத்தவன், பாரியின் எதிரே நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த வேகத்தில் நான்கு எட்டு முன்னோக்கிப் பாய்ந்தான் பாரி. பாயும் வேகத்தில் எறுழ்தடி காற்றைக் கிழித்து முன்னகர்ந்துகொண்டிருந்தது.
ஆட்டுக்குட்டியைப்போல யானை ஒன்று தூக்கி வீசப்படுவதை, தென்கோடியில் நின்றிருந்த வேந்தர்கள் மூவரும் பார்த்தனர். அந்த ஒரு காட்சி, அவர்களுக்குச் சொல்லவேண்டிய எல்லாவற்றையும் சொல்லியது. கோட்டையைச் சுற்றி நிறுத்தப்பட்ட முந்நூறு யானைகளும் சிதைக்கப்பட்ட புற்றிலிருந்து வெளியேறும் கறையான்களைப்போல ஓடிக்கொண்டிருந்தன. குலசேகரபாண்டியன், தனது இரண்டாம் திட்டத்துக்கு ஆயத்தமாகத் தொடங்கினான். `ஊறல்காட்டை நோக்கி வந்துவிடு’ என தன் மகனுக்குச் செய்தியைக் கூற மூன்று வீரர்களை மையப்படையை நோக்கி அனுப்பினான்.
வடகோடியில் நின்றிருந்த வேந்தர்படையைத் தாக்க அனுப்பப்பட்ட விண்டன், கடும்தாக்குதலை நடத்தினான். ஆனால், முன்னின்ற கவசப்படை வீரர்கள் மீது தனது சிறுபடையால் பெரும்பாதிப்பை உருவாக்க முடியவில்லை. ஆனாலும் காலம்பனின் வருகையைக் கணித்து அதற்கேற்ப தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தான்.
எரிமத யானையின் தந்தத்துக்கு வேந்தர்படை யானை எதுவும் சிக்கவில்லை. ஆனால், பாரியின் எறுழ்தடிக்குச் சிக்கினார் மையூர்கிழார். நடுங்கும் கைகளோடு பாரியின் மீது வாள்கொண்டு தாக்குதல் தொடுக்க அவன் முற்பட்டபோது, எரிமத யானையின் காலில் கட்டெறும்பின் தலை நசுங்குவதைப்போல் எறுழ்தடியால் நசுங்கியது மையூர்கிழாரின் தலை.
குலசேகரபாண்டியன் பின்புறமாக நகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தான் செங்கனச்சோழன். உசந்தன் தலைமையிலான நமது கவசப்படை வலிமையாக நின்று போரிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், கருங்கைவாணன் இன்னும் வந்துசேரவில்லை. சூழலின் மொத்தமும் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. யானைப்படை சிதைந்த கணமே நமது திட்டம் முழுமையும் தோல்வியடைந்துவிட்டது. தான் தப்பிப்பது மட்டுமே இப்போதைய தேவை என உணர்ந்தான் செங்கனச்சோழன். ஆனால், அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்த சோழவீரர்களோ மிகமிகக் குறைவானவர்களே. அவர்களின் உதவியால் பாதுகாப்பாக அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியாது. அதுவும் அவனால் குதிரையில் உட்கார்ந்த நிலையில் விரைந்து செல்ல முடியாது. எழுவனாற்றில் ஏற்பட்ட தாக்குதலால் அந்நிலையை அடைந்தான். போதிய வீரர்கள் சூழவிருந்து தப்பித்தால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும் என்ற நிலையில் தனது குதிரையை உதியஞ்சேரலை நோக்கிச் செலுத்தினான்.
யானைப்படை சிதைந்ததைப்போல நடுவில் நின்றிருந்த பெரும்படையும் சிதையத் தொடங்கியது. மையூர்கிழாரின் தலையை நசுக்கித் தூக்கி வீசினான் பாரி. அத்துடன் அந்தப் பெரும்படை, ஈரக்குலை நடுங்க உயிர்பிழைக்கும் ஓட்டத்தைத் தொடங்கியது. பாரியைச் சுற்றி நின்றவர்கள் தொலைவில் நிற்கும் சோழவேழனையும் பொதியவெற்பனையும் அடையாளம்காட்டினர்.
யானைப்படை சிதறிய வேகத்தில் கோட்டை அருகில் இருந்த வீரர்களை நோக்கி முடியனும் உதிரனும் பாய்ந்து முன்னேறினர். இந்தப் போரின் மிக முக்கியமான பணியே இனிதான் இருக்கிறது. சிறு கவனப்பிசகோ, வேகக்குறைவோ இருந்துவிடக் கூடாது. துல்லியமான தாக்குதலுக்கு ஆயத்தநிலையில் குதிரையில் விரைந்து கொண்டிருந்தனர் முடியனும் உதிரனும்.
உதியஞ்சேரலிடம் கைகள் குவித்துக் கேட்டான் செங்கனச்சோழன், ``என்னை, இந்த இடம்விட்டு பாதுகாப்பாய் வெளியேற்று.’’
மூன்றாம் நிலையில் நின்ற வேந்தர்படையில் அதிகம் இருப்பவர்கள் சேரவீரர்களே. அதனால்தான் உதியஞ்சேரலிடம் உதவி கேட்டான். ஆனால், உதவியாகக் கேட்காமல், ``இதை நீ செய்வதற்கு கைம்மாறாய் நான் உனக்கு ஒன்று தருகிறேன்’’ என்றான்.
``போர்க்களத்தின் கடைசிக் கணத்தில் உயிர்பிழைக்கத் தப்பிச்செல்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் எனக்கு என்ன தந்துவிட முடியும்?’’ எனக் கேட்டான் உதியஞ்சேரல்.
தனக்கு அருகில் நின்ற வேளக்காரப்படையைச் சேர்ந்த வீரனை நோக்கி செங்கனச்சோழன் கையை நீட்ட, அவனோ பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஓலைச்சுவடியின் கட்டொன்றை எடுத்துக் கொடுத்தான். அதை, உதியஞ்சேரலை நோக்கி நீட்டினான் செங்கனச்சோழன்.
`என்ன இது?’ என்று உதியஞ்சேரல் கேட்கும்முன் செங்கனச்சோழன் சொன்னான், ``பச்சைமலையில் உள்ள பதினான்கு வேளிர்குலங்களும், தங்களின் விலைமதிப்புமிக்கச் செல்வங்களை காலம்காலமாக பாழி நகரில்தான் சேமித்துவைக்கின்றன. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்த இடமும் அதற்கான குறிப்புகளும் மாறப்போவதில்லை. அந்த இடம் எங்கு இருக்கிறது என்ற குறிப்பை, காடர்களைக்கொண்டு அறிந்தேன். மிகத் துல்லியமான இந்தக் குறிப்பின் அடிப்படையில் தான் நான் எழுவனாற்றின் மேல்முனை வரை சென்றுவிட்டேன். ஆனால், அதன் பிறகு பாரியால் தாக்கப்பட்டு எனது படை அழிந்தது. காடர்கள் உருவாக்கிய அந்தக் குறிப்பு இந்த ஏட்டில் இருக்கிறது. இந்தப் போரில் வெற்றிபெற்றால், இதை பாண்டியனுக்கு வழங்கலாம் என்றிருந்தேன். ஆனால், போருக்குத் தலைமைதாங்கிய குலசேகரபாண்டியனோ நம்மிடம் சொல்லாமலேயே இந்தக் களம்விட்டு அகன்றுகொண்டிருக்கிறார். இனி, இது சேரர்களுக்குச் சொந்தம். என்னிடம் இன்னொரு படி இருக்கிறது. என்றைக்கானாலும் அந்தச் செல்வத்தை சேரனோ, சோழனோதான் கைப்பற்ற வேண்டும்’’ என்று சொல்லி அதைக் கொடுத்தான்.

உதியஞ்சேரலுக்கு மெய் சிலிர்த்தது. ``இது முன்னமே கிடைத்திருந்தால் இந்தப் போர்க்களத்துக்கே நான் வந்திருக்க மாட்டேனே!’’ என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போது காலம்பனின் பெருங்குரல் கேட்டது. கருங்கைவாணன் மாண்டுவிட்டான் எனத் தெரிந்த கணமே வேந்தர்களின் கவசப்படை நிலைகுலையத் தொடங்கியது. அந்தக் கணத்தில் விண்டன் எறிந்த ஈட்டி உசந்தனைக் குத்தித்தூக்கியது.
படை சிதறத் தொடங்கினாலும் சோழவேழன் தப்பி வெளியேற முயலவில்லை. அவன் பாரியை எதிர்கொள்ளவே முனைந்தான். பொதியவெற்பனும் அதே மனநிலையோடு பாய்ந்து முன்னேறினான். நாக்கைத் துருத்தி பல்லைக் கடித்தபடி விரைந்து வந்தான் சோழவேழன். ஓங்கிய எறுழ்தடியை நிறுத்திவிட்டு கண்டராக்கோடரியை வாங்கினான் பாரி.
யானைப்படையை பறம்பினர் முழுமையாகச் சிதறச்செய்துவிட்டனர் எனத் தெரிந்ததும், தளபதி மாகனகன் தனக்கு வழங்கப்பட்ட இரண்டாம் திட்டத்தை நிறைவேற்றும் முடிவுக்கு வந்தான். கோட்டைக்குள் இருக்கும் நீலனின் தலையை வெட்டி வீசிவிட்டுத் தப்பி வெளியேறுவதுதான் அந்தத் திட்டம். மாகனகன் தனது குதிரையைத் திருப்பி உட்கோட்டைக்குள் நுழைய நினைக்கும்போது உதிரனின் விற்படையினரின் அம்புகள் சீறிப்பாய்ந்தன. கணநேரத்துக்குள் கணக்கில்லாத அம்புகள் முழுவிசையோடு இறங்கின. மாகனகன் உள்ளே நுழைந்து நீலனை வெட்டிவிட்டுச் செல்வோமா அல்லது இப்போதே தப்பிச் செல்வோமா என ஒரு கணம் சிந்தித்தான். அப்போது முடியன் மின்னல் வேகத்தில் கோட்டையை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தான்.
தமக்கு முன்னால் மொத்தப் படையையும் அழித்துக்கொண்டிருக்கும் பாரியை வீழ்த்தும் வெறியோடு சோழவேழனும் பொதியவெற்பனும் சூழந்து தாக்க முற்பட்டபோது, அவர்களின் தாக்குதலைத் தடுக்க எந்தவித முயற்சியும் பாரி செய்யவில்லை. அந்தத் தாக்குதல் சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றியது. சோழவேழன் வீசிவந்த வாளை கண்டராக்கோடரியால் தட்டிவிட்ட வேகத்தில் அவன் கழுத்தில் கொடுத்து வாங்கினான் கோடரியை. கண்டராக்கோடரியின் கூர்மை, மலைவேம்பின் முண்டையே வெட்டி இறங்கக்கூடியது.
அறுத்து இழுக்கப்பட்ட கோடரியின் வேகத்தில் சோழவேழனின் தலை கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்தது. தனது குதிரைக்கு முன்னால் உருண்டு வந்த சோழவேழனின் தலையைப் பார்த்து மிரண்ட பொதியவெற்பன், தான் என்ன செய்யலாம் எனச் சிந்தித்தக் கணத்தில் அவனது நெஞ்சுக்குழிக்குள் இறங்கியது கண்டராக்கோடரியின் கைப்பிடி முனை.
வெளியில் நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் ஒரு வீரன்கூட கோட்டைக்குள் நுழையக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தான் உதிரன். அவன் வீசிய அம்புகள் கோட்டைவாயிலின் அருகே ஒருவரையும் நிலைகொள்ளச் செய்யவில்லை. அதையும் மீறி மாகனகன் உள்ளே நுழைய முயன்றான்.
குதிரையில் பாய்ந்து வந்துகொண்டிருந்த முடியனின் கண்கள், கோட்டை வாசலில்தான் நிலைகுத்தி இருந்தன. மாகனகன் கோட்டைக்குள் நுழையும் கணத்தில் அவனது கவசத்தைத் துளைத்துக்கொண்டு உள்நுழைந்தது முடியனின் ஈட்டி. வேந்தர்களின் கடைசி முயற்சியை பறம்பின் குடிமுடியன் குத்திச்சாய்த்தான்.
காலம்பன் பெரும் உறுமலோடு வந்து கவசப்படையைத் தாக்க முயலும்போது வேந்தர்கள் மூவரும் வெளியேறி இருந்தனர்.
முடியன் முழுவேகத்தோடு உள்ளே நுழையும் வரை அவனுக்குப் பின்னால் இருந்த உதிரனின் படை, இடைவிடாது அம்புகளைப் பாய்ச்சியபடி இருந்தது. நடுவில் நின்ற படை முற்றிலுமாகச் சிதறி ஓடிக்கொண்டிருந்தபோது, முடியன் கோட்டைக்குள் நுழைந்தான்.
நுழைந்த கணம் அவன் எழுப்பிய சீழ்க்கை ஓசை, எங்கும் எதிரொலித்தது.
பாரியும் காலம்பனும் விண்டனும் தங்களை எதிர்த்து நிற்கும் வீரர்கள் யாரும் இல்லாத களத்திலிருந்து சீழ்க்கை ஓசை கேட்ட கோட்டையை நோக்கி ஓடிவரத் தொடங்கினர்.
இந்த ஓசைக்காகக் காத்திருந்த தந்தமுத்தத்துக் காரர்கள் தனியே நிறுத்தியிருந்த நான்காம் யானையை, கோட்டை நோக்கி அழைத்துச் சென்றனர்.
பகலின் பதினைந்தாம் நாழிகை. கதிரவனின் வெப்பக்கதிர் நிலமெங்கும் ஒளிவீசிக் கொண்டிருந்தது. காணும் இடமெல்லாம் எருக்களை இலைகளும் நெருஞ்சி இலைகளும் குருதியை ஏந்தியிருந்தன.
எங்கும் மனிதக்கதறல் எதிரொலித்தது. குத்திச் சாய்க்கப்பட்ட குதிரைகளும் யானைகளும் ஈனக்குரலில் ஒலியெழுப்பின.
எரிமதம்கொண்ட யானையாலும் எறுழ்தடி கொண்ட பாரியாலும் நடுங்கிய நிலம், உச்சிப்பொழுதில் நிலைகொள்ளத் தொடங்கியது.
நான்காம் யானை, கோட்டையைவிட்டு வெளியேறத் தொடங்கியது. அதன் கழுத்தில் தந்தமுத்தத்துக்காரன் உட்கார்ந்திருந்தான். முதுகில் இலவம்பஞ்சால் சிறு நார்கொண்டு பின்னப்பட்ட விரிமெத்தையின்மேல் நீலன் அமர்ந்திருந்தான். அவன் பின்னே, முதுகின் மேல்நிலையில் பாரி அமர்ந்திருந்தான்.
நீலனின் இடதுகாலின் காயம் மிக வலிமையானதால், முழுப்பிடிமானமும் கிடைக்கவில்லை. யானையின் அசைவுக்கு ஏற்ப பின்னால் அமர்ந்திருந்த பாரியின் இடதுதோளில் சாய்ந்தபடி இருந்தான் நீலன்.
யானையைத் தொடர்ந்து முடியன், காலம்பன், உதிரன், விண்டன் ஆகியோரும் பறம்புவீரர்களும் ஏந்திய ஆயுதங்களோடு வந்துகொண்டிருந்தனர்.
தகிப்பேறிய கண்களும் சீற்றம் குறையாத முகமுமாக இருந்த பாரிக்கு, நீலன் தோளில் சாய்ந்த கணத்திலிருந்து வெப்பம் குறையத் தொடங்கியது. செந்தேன் நிறத்தில் எரிந்துகொண்டிருந்த அவனது கண்கள் வெண்மைகொள்ளத் தொடங்கின. எரிமதம் இறங்கத் தொடங்கியது.
அவர்களுக்கு முன்னே கிழக்கும் மேற்குமாக நீண்டுகிடந்த பச்சைமலைத் தொடர், தன் பிள்ளைகளுக்காகக் கைவிரித்துக் காத்திருந்தது. நடந்துகொண்டிருந்த யானையின் தந்தத்தின் மீது தும்பி ஒன்று வந்து அமர முயன்றது.
குனிந்து அதைப் பார்க்க முயன்ற பாரி, பறவை ஒன்றின் மாறுபட்ட ஓசையைக் கேட்டு தலைநிமிர்ந்து பார்த்தான்.
அவனது தலைக்கு மேலே காரமலையை நோக்கி ஓசையெழுப்பியபடி பறந்து கொண்டிருந்தது கருங்கிளி.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன்

வேள்பாரி வாசகர்களை ஒன்றிணைக்கவும், இத்தொடர் பற்றி உரையாடவும் சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளோம். புத்தகம் தாண்டி வேள்பாரியின் சுவாரஸ்யங்களை அதன் மூலம் நீட்டிக்க வேண்டுமென்பதே நம் எண்ணம். வாசகர்கள் கீழ்க்காணும் ஃபேஸ்புக் குழுமத்தில் இணைவதன் மூலமும் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்வதன் மூலமும் வேள்பாரியுடன் இணைந்துகொள்ள வரவேற்கிறோம்.
www.facebook.com/groups/500337410392609/
www.twitter.com/Vikatanvelpari

அன்பு வாசகர்களே!
‘வீரயுக நாயகன் வேள்பாரி’ தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ‘வேள்பாரி’ தொடர் குறித்த உங்கள் கேள்விகளை velpari@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பெயர் மற்றும் ஊர் குறிப்பிட்டு அனுப்பவும். தேர்வாகும் கேள்விகளுக்கு எழுத்தாளர் சு.வெங்கடேசன் பதிலளிப்பார்.