மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர்! - 14

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

தோசைக்கல்லில் கடலை எண்ணெயை ஊற்றினாள் வள்ளி. இரண்டு பச்சைமிளகாய்களை நடுவாக்கில் கீறி, கொதித்துக்கொண்டிருந்த எண்ணெயில் போட்டதும் பொரி பொரியெனப் பொரிந்து, மிளகாய் நெடி தருமனை எட்டியது. இப்போது மீன் துண்டுகளை, பொத்தினாற்போல கல்லில் வைத்தாள். வெளியே சிறுமழை பெய்துகொண்டிருந்தது. ஓட்டு வீடென்பதால் சில இடங்களில் டொப்பு டொப்புவென விழும் மழைத்துளியைப் பிடித்துக்கொள்ள, சின்னவள் ஓர் அன்னக்கூடையை வைத்தாள். தொலைக்காட்சியில் ஒரு பாடலில் கூட்டமாக நடந்து வந்த நடிகர், நாட்டையே திருத்தி உள்ளங்கையில் வைத்துவிடும் அளவுக்குப் பாடி, நடந்து வந்தார். கூதலின் மென்காற்று மேனியில் பட்டுத் தெறித்தபோது, வள்ளியின் வளைவுகளில் நடுசாமத்தின் அணைப்பை நினைத்துக்கொண்டார் தருமன். அடுப்பங்கரையிலிருந்து மீன் துண்டுகளோடு சுடுசோற்றைக் கொண்டுவந்தாள். பெரியவளும் சின்னவளும் பந்தியில் வந்து உட்கார்ந்துகொண்டார்கள். தட்டில் சோற்றைப் போட்டதும் சூட்டில் வந்த ஆவியில் குளிர்காய்ந்துகொண்டார். மீனை முள் இல்லாமல் பிய்த்து, பெரியவளுக்கும் சின்னவளுக்கும் ஊதி ஊதி வைத்தார். 

நான்காம் சுவர்! - 14

``எல்லாத்தையும் அவுங்களுக்கு வெச்சிட்டா... நீ இன்னா துன்னுவே?’’ என்று மீனின் தலையைத் தருமன் தட்டில் வைத்தாள் வள்ளி. சாமத்தின் அணைப்பு, கிட்டத்தட்ட உறுதியானதாய் வள்ளியைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தார்.

``யம்மா, அப்பாவுக்கு மட்டும்தான் தலையா... ஏன், எங்களுக்கெல்லாம் இல்லியா?’’ பெரியவள், வள்ளியைச் சீண்டினாள்.

``பின்ன இன்னாடி... தலையில சுமந்து சுமந்து நம்மள காப்பாத்துது. அது நல்லாருக்கவேணாமா?’’ இப்போது கிட்டத்தட்ட அணைப்பு நிச்சயம் என்று சோற்றை ஒரு பிடிபிடித்தார்.

வெளியே மழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தது. அணைப்பின் இதத்தில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த தருமனுக்கு போன் வந்தது. தருமனிடமிருந்து விலகிய வள்ளிதான் போனை எடுத்துப் பார்த்தாள். `சின்னசாமி சார்’ என்று இருந்தது.

``மாமா... எந்திரி மாமா, வேல வந்துகுது போல... சின்னசாமிதான் போன்ல...’’ என்றதும் தருமன் கைலியை இறுக்கிக் கட்டிக்கொண்டு, சொல்லச் சொல்ல ``எந்த டிராக் சார்?’’

வள்ளி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்.

``பெரம்பூர் ஸ்டேஷனுக்கு முன்னாடி ஒரு பர்லாங்கு தர்மா’’ என்று மறுமுனையில் சின்னசாமி சொன்னார்.

``இப்பவே க்ளியர் பண்ணணுமா சார்?’’ வள்ளியின் கூந்தலைத் தடவிக்கொண்டார்.

``யோவ், பார்ட்டிக்காரங்க என் லிம்ட்லதான் இருக்காங்க. சீக்கிரம் வா... டப்பு தேறும்’’ என்று போனை அணைத்துவிட்டார் சின்னசாமி.

 சோமாவும் ஏழுமலையும் ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். மழை தூறிக்கொண்டேதான் இருந்தது. டார்ச்சின் மங்கலான ஒளியில் தண்டவாளம் தெரிந்தது. அந்தத் தண்டவாளத்தை நூல் பிடித்தாற்போல மூவரும் நடந்துகொண்டிருந்தார்கள். தருமன், தலையில் கவரைக்கொண்டு மழைக்கு மறைத்துக்கொண்டான். கறுத்து இறந்து கிடந்த நாய் ஒன்று, வாயைப் பிளந்துகொண்டிருந்தது.

அதைத் தாண்டிய சோமா ``மாமே, மூணு நாளு முன்னாடி அடிபட்டதுதான... மனுஷனாயிருந்தா க்ளியர் பண்ணலாம்... டப்பாவது தேறும். இதுங்கள க்ளியர் பண்ணா கப்புதான் வரும்.’’

ஏழுமலை ``கரெக்டா சொன்ன மாமே...’’ என்று சிரித்துக்கொண்டார்.

``டேய் சோமா, போன க்ளியரன்ஸ்ல டிராக்ல பர்ஸ் கெடச்சுதாம். ஏழுமலை சொன்னான்’’ ஸ்ட்ரெச்சரை தலையில் வைத்துக்கொண்டு நடந்த சோமா, பின்னால் தலையில் சுமந்துகொண்டிருக்கும் ஏழுமலையை முறைத்துக்கொண்டான். அந்த மழையிலும் ஏழுமலை கமுக்கமாய்ச் சிரித்தது, சோமாவுக்குக் கடுப்பானது.

``அத ஏன் கேக்குற மாமே... போனவாரம் டிரெயின் டிக்கெட்டு.... அடமான சீட்டுன்னு துட்ட தவிர எல்லாத்தையும் வெச்சிக்கினு இருந்தான் பேபர்ஸ் பையன்... ஒரே காண்டாயிட்ச்சு’’ என்று சோமா சொல்ல, ஏழுமலை செருமிக்கொண்டான்.

``சோமா, ரெண்டு பேரும் லட்சுமி ஒயின் ஷாப்புல ஃபுல்லு அட்ச்சிக் கவுந்த கதலாம் எங்களுக்குத் தெரியும். மூடிக்குனு வா’’ என்று தருமன் சொன்னபோது, ``மாமே இதெல்லாம் கரெக்டா கேளு... இந்தத் தொப்பிக்காரனுங்க ஒரு பாடிய க்ளியர் பண்ணா 500 ரூபாயத் தாண்ட மாட்றானுங்க. அத்த என்னிக்காவது கேட்றிக்கியா?’’ சோமா கேட்ட கேள்விக்கு, தருமனிடம் பதில் இல்லைதான். தவறி விழுந்து தண்டவாளத்தில் அடிபட்ட,  தற்கொலை செய்து கொண்ட ஜீவன்களையெல்லாம் ஸ்ட்ரெச்சரில் வைத்து நான்கைந்து கிலோமீட்டர் தலையில் சுமந்துச் செல்லும் இவர்களின் சம்பளம் இவ்வளவுதான் என்று, தருமன் என்னிடம் சொன்னார்.

நான்காம் சுவர்! - 14

தருமனின் முன்கதை. எழுதப் படிக்கத் தெரியாதவர். பிராயத்தில் ரிக்‌ஷா வண்டியை ஓட்டிக்கொண்டி ருந்தவர். ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், வழக்கமாக எம்.ஜி.ஆர் ரசிகராகத்தான் இருப்பார்கள். ஆனால் தருமன் விதிவிலக்கு. தீவிர ஜெய்சங்கர் ரசிகர். குதிரையில் துப்பாக்கி கொண்டு ஒரு தீயவனைச் சுட்டு, துப்பாக்கியின் சூட்டை ஊதித் தணிப்பவர். `எதிரிகளை, சல்லடையில் சலித்துவிடும் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்றெல்லாம் ரிக்‌ஷாவில் எழுதிவைத்திருப்பார். காலப்போக்கில் ஆட்டோக்களின் வரவுகள் அதிகமானதால், ரிக்‌ஷா கண்காட்சிப் பொருளாக மாறிக்கொண்டிருந்தது. அப்போதுதான் ஏற்கெனவே பாடிமேனாக இருந்த ஸ்டாலின் நட்பு கிடைக்க, தருமனும்  தற்போது பாடிமேனாக தண்டவாளங்களை க்ளியர் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

சரக்கு மட்டுமல்ல டீ, காபி பழக்கம்கூட இல்லாதவர். ஸ்ட்ரெச்சரைத் தலையில் சுமந்தே, இரண்டு பிள்ளைகளையும் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்திருப்பதில் சந்தோஷம்கொள்கிறார் தருமன். அவரிடம் ஒருதடவை கேட்டபோது ``எனுக்கு பையன் பொறந்தாலும் அவன இந்தத் தொழிலுக்கு இட்டார மாட்டன் சார். இந்தப் புழு பூத்த வேல என்னோட போவட்டும்னு ஒட்டாரமா சொல்லிடுவன் சார்’’ என்று சொன்ன தருமன்தான், டார்ச்லைட்டில் சின்னசாமி சார் சொன்ன பிணத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

``இந்த பாயின்ட்டுதான்டா சாமி சார் சொன்னாரு’’ டார்ச்சை சுற்றும் முற்றும் அடித்தார் தருமன். எதுவும் தென்படவில்லை. மேலும் முன்னேறியபோது சட்டெனத் தென்பட்டது ஓர் இளம் வயது பெண்ணின் உடல்; கோரமான நிலையில் சிதிலமடைந்து இருந்தது.

``டேய் சோமா, ஸ்ட்ரெச்சர எறக்கு... பீஸு இங்கதான் இருக்கு’’ என்று கவரைக் கீழே போட்டுவிட்டு டார்ச்சை மற்ற பகுதிகளுக்கு அடித்தார் தருமன். ஸ்ட்ரெச்சரைக் கீழே வைத்த சோமாவும் ஏழுமலையும் கைகளை நெட்டி முறித்துக்கொண்டனர். மழை விட்டிருந்தது. சோமா ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டார். தூரத்தில் டார்ச்லைட் அடித்தபடி கம்பூட் அணிந்துகொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள். ஒருவர், கையில் நோட்டு ஒன்றை வைத்திருந்தார்.
``தோ வண்ட்டாங்கடா டெய்லர்ங்க பாடிய அளவெடுக்க...’’ சோமா, தருமனிடம் சொல்ல, ஏழுமலை சிரித்துக்கொண்டார்.

``ஒரு கை மிஸ்ஸிங் லெப்ஃட் ஹேண்டு... காதுல கம்மல்... வேறெந்த ஜுவல்ஸ்ஸும் இல்ல... ஃபேஸ் டேமேஜ்... ஸ்பாட் டெட்டுன்னு எழுதிக்கோ. தருமா, ஸ்ட்ரெச்சர்ல ஏத்திக்கோ. இப்ப, மணி 2. காத்தால 4 மணிக்கு ஃபர்ஸ்ட் டிரெயின் கொரட்டூர்ல ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு ஸ்டேஷனுக்கு வந்துடுங்க சரியா’’ என்று சொன்னதும் அந்த இளம்பெண்ணை ஏழுமலையும் சோமாவும் தூக்கினார்கள்.

தருமன் கவரை உதறி பாடியை கவருக்குள் நுழைத்தபோதுதான் சோமா சொன்னார் ``சார், பீச்சாங்கை காணும் சார்.’’

எழுதிக்கொண்டிருந்த போலீஸ்காரர் ``யோவ் எழுதியாச்சிய்யா!’’ என்றார்.

``கட்டான கையி... காணாமப்போச்சு சார்...’’ என்றபோதுதான் அந்த போலீஸ் ஓர்மைக்கு வந்தார்.

``யோவ்... என்னய்யா சொல்ற?! ரிஜிஸ்டர்ல எழுதிட்டன்யா... போயி கைய தேடுங்கய்யா... பாடிய நான் பார்த்துக்கிறேன். அடிச்சதுல எங்கியாவது செதறி உதுந்திருக்கும்’’ என்ற போலீஸ், தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டார். தருமன், ரயில் வந்த திசையைக் கணக்கெடுத்துக்கொண்டு டார்ச்லைட்டை எதிர்த்திசையில் அடித்தார்.

நான்காம் சுவர்! - 14

``யோவ் மாமே, இந்தப் பக்கமாத்தான் விழுந்திருக்கும்’’ என்று ஏழுமலை உறுதியாகச் சொன்னார். ஆனாலும் தருமன் எதிர்த்திசையை நோக்கி பெண்ணின் கையைத் தேடி நடந்தார். கருங்கற்களின் குவியலில் ஒரு பாம்பு அசைந்துகொண்டிருப்பதை தருமன் பார்த்தார். இருவரும் பரஸ்பரம் கண்டுகொள்ளாததால் அது, அதுபாட்டுக்கு இருந்தது. தருமனோடு சோமாவும் அந்த ஒற்றை வெளிச்சத்தை நோக்கி அந்தப் பெண்ணின் கையைப் பற்றிக்கொள்ள எத்தனித்தான். டார்ச்சை சுற்றிலும் அடித்தபோது ஒரு நாய் அந்தக் கையை வைத்து மோந்து கொண்டிருந்தது. டார்ச் வெளிச்சத்தைக் கண்டதும் மிரண்டுபோன நாய், அந்தக் கையை தனது வாயில் கவ்விக்கொண்டது. உர்ரென உறுமிய நாய், இங்குமங்கும் பார்த்தது.

``மாமே கையில மோதிரத்த பார்த்தியா... உசார் பத்ரி ரெய்டுதான்... இன்னா சொல்ற!’’ குஷியானான்.

தருமன் டார்ச்லைட்டை திடீரென அணைத்து, பிறகு இயக்கினார். நாய், விட்டால்போதுமென ஓடிக்கொண்டிருந்தது. தருமன், நாய் இருந்த இடத்துக்குப் போனார். நாயின் பற்கள் பட்டு ரணமாகி இருந்தது. சோமா, மோதிரத்தை கஷ்டப்பட்டுக் கழட்டி ஜோபியில் போட்டுக்கொண்டான்.

கையை சோதனைசெய்த போலீஸ்காரர் சந்தேகத்துடன் ``டேய், மோதிரம், வளையலு ஏதாவது போட்டுக்கிட்டு இருந்துச்சா?’’

சோமா உடனடியாக மறுத்தார். இருந்தாலும் அந்த போலீஸ்காரர் சந்தேகத்துடனே ``சரி, தூக்கு’’ என்றார். ஸ்ட்ரெச்சரைத் தலையில் தூக்கி வைத்தார் தருமன். பின்னால் ஏழுமலை தாங்கினார். டார்ச்சை சோமா அடித்து வழிகாட்டினான்.

``சார், இந்தக் கைக்காக... ஏன் சார் இப்டி அலையவிடுறீங்க?’’ சோமா கேட்டான்.

``டேய் சோமா, திடீர்னு கேப்பானுங்க `ஜுவல்ஸுக்காக, கைய நீங்களே வெட்டிட்டீங்களா?’ன்னு... நீயா பதில் சொல்லுவ? சோமா உண்மைய சொல்லு, கைல ஏதாவது இருந்துச்சாடா?’’ போலீஸ்காரர் விடவில்லை.

``சார், சோமா பொய் சொல்வானா சார்?’’ டார்ச் வெளிச்சத்தில் பூனை ஒன்று தாவி ஓடியது.

பெரம்பூர் பிளாட்பாரத்தின்மேல் ஸ்ட்ரெச்சரை வைத்தார் தருமன். மணி சரியாக 2 எனக் காட்டியது.

``தர்மா, ஃபர்ஸ்ட் டிரெயின்ல பாடிய கொண்டாந்துடு. கொரட்டூர் சப்வேக்குமேல ஆம்புலன்ஸ் வந்துடும். நாங்க கெளம்புறோம்’’ இரு போலீஸ்காரர்களும் கிளம்பினார்கள். ஸ்ட்ரெச்சரை நடுவில் வைத்துவிட்டு, பக்கத்திலேயே சோமா ஒரு துண்டை விரித்ததுப் படுத்துக்கொண்டார். ஏழுமலை, பீடியைப் பற்றவைத்துக்கொண்டார்.

பிளாட்பாரவாசிகள், அரவம் கேட்டு எழுந்து ஸ்ட்ரெச்சரைப் பார்த்துவிட்டு எந்தச் சலனமுமில்லாமல் மறுபடியும் உறக்கத்துக்குள் போனார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் சொற்ப நேரம் கிடைக்கும் இந்தத் தூக்கம் மட்டும்தான் நிம்மதி. ஆகவே, எதன்பொருட்டும் சஞ்சலம்கொள்ளாமல் தூங்கப் பழகிக்கொண்டார்கள். நாய் ஒன்று சுருண்டுப் படுத்துக்கொண்டிருந்தது. மழைவிட்ட வானம், தெளிவாக இருந்தது. தருமனுக்கும் தூக்கம் வந்தது. ஆனால்,  பார்ட்டிக்காரர்களிடம் பாடியைப் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும்.

``ஏழுமல தூக்கம் வருதா?’’ சோமா, பக்கத்தில் இருக்கும் பிணத்தின்மேல் கால்தான் போட்டுப் படுக்கவில்லை, அப்படியொரு தூக்கத்தை அவன் தூங்கிக்கொண்டிருந்தான்.

``இல்ல மாமே, நீ தூங்கு’’ என்று பீடியை இழுத்துக்கொண்டார். தருமனும் ஸ்ட்ரெச்சரின் இந்தப் பக்கம் படுத்துக்கொண்டார்.

மெள்ள விடிந்தது. பிளாட்பாரத்தைப் பெருக்கும் அஞ்சலை அம்மாள் தருமனைப் பார்த்துவிட்டார். ``தர்மா டீ சொல்லவா... இன்னா கேஸு?’’ துடைப்பத்தை சிமென்ட் நாற்காலியில் வைத்துவிட்டு தருமனோடு உட்கார்ந்தார்.

``சூஸைட் கேஸு’’ சோமாவும் எழுந்து உட்கார்ந்துகொண்டான்.

``நீ எப்டிமா இருக்க... பசங்க ஸ்கூலுக்குப் போவுதா?’’ முதல் ரயில், தூரத்தில் வந்துகொண்டிருந்தது.

``போவுது தர்மா... உன் பொண்ணுக்கு மாப்ள பார்த்துட்டியா?’’

சோமா நெட்டி முறித்துக்கொண்டு ``மாமு, பொண்ண நல்லா படிக்கவெச்சுட்டுத்தான் கல்யாணம்கிறதுல முடிவா இருக்குது...’’ வழக்கமான அதிகாலைப் பயணிகள் ஸ்ட்ரெச்சரைக் கண்டு ஒதுங்கி நின்றனர்.

``அதுவும் சரிதான்... நாமதான் படிக்காமக்கொள்ளாம பீய வாரிக்கினு, பொணத்தத் தூக்கிக்கினு கீறோம். அதுங்களாவது படிச்சி நல்ல பொழப்புக்குப் போவட்டும்’’ துடைப்பத்தை எடுத்துக்கொண்டு ``வரன் தர்மா... நின்னுகினு இருக்கிற ரயில்லதான் பேண்டுவெப்பானுங்க. அத வாரிப் போடணும். கேஸை முடிச்சுட்டு வூட்டப் பாத்து போடா’’ என்று அஞ்சலை அம்மாள் நடந்தார்.

ரயில் வந்து நின்றது. ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக்கொண்டு உள்ளே போனார்கள். கொரட்டூர் வந்ததும் இறங்கி ஸ்ட்ரெச்சரை தலையில் வைத்து சப்வேயில் இறங்கினார்கள். போகிற வருகிறவன் எல்லாம் பிணத்தைக் காட்டிலும் தலையில் சுமக்கிற இவர்களைத்தான் பிணத்தைப்போலவே பார்க்கிறார்கள் என்று தருமன் வருத்தப்பட்டுக்கொண்டார்.

ஆம்புலன்ஸ் பக்கத்தில், பார்ட்டிக்காரர்களும் போலீஸ்காரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். ஸ்ட்ரெச்சரைப் பார்த்ததுமே பார்ட்டிக்காரர்கள் அழுது மாண்டார்கள். தருமன் தலையில் சுமந்தபடியே அவர்களைப் பார்த்தார். ஏழைகளின் அமைதி நிரந்தரமாய்க் குடிகொண்டிருந்தது அவர்களின் முகத்தில். வெலவெலத்துப்போயிருந்த தகப்பனிடம் கவரின் ஜிப்பைக் கழட்டி முகத்தைக் காண்பித்தார் தருமன்.

``என் உசுர கொடுத்துப் படிக்கவெச்சனே...’’ என்று தாளமாட்டாமல் கதறிய தகப்பனைப் பார்த்த தருமன், சோமாவின் ஜோபியில் கையை விட்டார். மோதிரத்தை எடுத்து போலீஸ்காரர்களுக்குத் தெரியாமல் தேம்பிக்கொண்டிருந்த பார்ட்டிக்காரரான தாயிடம் ரகசியமாகக் கொடுத்தார். அந்த மோதிரத்தைப் பார்த்ததும் கண்ணில் வைத்து மீண்டும் அழத் தொடங்கினார் பார்ட்டிக்காரர். சோமா மிகவும் கடுப்பானார்.

``தூக்கிட்டு வந்தவங்களுக்கு சுமக்கூலி 1,000 ரூபா கொடுக்கணும்’’ என்றார் போலீஸ்காரர்.

பார்ட்டிக்காரரான தகப்பன், 1,000 ரூபாயை கைகள் நடுங்க தருமனிடம் கொடுத்தார். உழைத்த கூலியை சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார் தருமன்.

இந்த தருமன்தான் 30 வருடமாக தலையில் பிணத்தைச் சுமந்துச் சுமந்து பிள்ளைகளை இன்ஜினீயர் வரை படிக்கவைத்திருக்கிறார். பாடி விழுந்தால்தான் இவருக்குக் காசு. இவர்கள், ஊழியர்கள் அல்லர்; பிணத்தை வாரிப் போடும் கூலிகள்.

``ஏன் சார் கேக்குற... இருக்கும்போது சாதி, மதம், மயிருன்னு பேசுவான். அடிபட்டு கொழகொழன்னு கெடக்கும்... `எவ்ளோன்னாலும் பரவால்ல, பாடிய தூக்குங்க’ன்னுவான் பார்ட்டிக்காரன். நமக்கு அதுல்லாம் இல்ல சார்... தலையில சுமந்தா கூலி... வேலன்னு வந்தாக்கா, சந்தோஷமும் கெடயாது... வருத்தமும் கெடயாது...’’ என்று வெறும் ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக்கொண்டு நடந்த தருமனின் ஒருநாள் இதுதான்; ஒவ்வொரு நாளும் இதுதான்.

- மனிதர்கள் வருவார்கள்...