மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான்காம் சுவர்! - 15

நான்காம் சுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் சுவர் ( பாக்கியம் சங்கர் )

பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்

சிரியர் மகேந்திரன் தொடர்பில் வந்து அவரது பள்ளி விழாவிற்கு வரவேண்டுமென அழைத்தார். சென்னைக்கு மிக அருகில் ஒரு கிராமம். காளஞ்சி எனும் நிலத்தில் நானும் திருக்குறள் ராம்ராஜும் வந்திறங்கினோம். திருக்குறளை எப்படிக் கேட்டாலும் ஒப்பித்துவிடுகிறார் மனிதர். அதுவொரு அரசுப்பள்ளியெனச் சொல்ல முடியாதபடிக்கு மகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பராமரித்துவருகிறார்கள். எப்போதும்போல சில அறிவுரை நிகழ்த்தி பிள்ளைகளின் கைத்தட்டல்களோடு விழா முடிந்தது. இரண்டு மெடல்களைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு நாகேந்திரன் என்ற சிறுவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களிடம் வந்தான். “ஏமிரா” என்று மகேந்திரன் கேட்க “மெடல் வாங்கும்போது நைனா ராலேது சார்... அதான் சார்” என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டான். “டேய் நாகா... நீ நைனா வெட்டுக்குப் போய்ட்டாரு... இன்டிக்கு போயி மெடலு ச்சுபி... போ சாப்புடு” என்றதும் அவன் பையில் வைத்திருந்த அலுமினியத் தட்டை எடுத்துக்கொண்டு சத்துணவுக்கூடத்தின் வரிசையில் நின்றான். மங்கோலிய சாயல் கொண்ட அவனது முகம் அங்கிருந்த சில பிள்ளைகளுக்கும் இருந்தது. காய்ந்த பனங்கொட்டையைப்போல தலைமயிர் எல்லாம் சிலுப்பிக்கொண்டிருந்தது. “இவுங்களும் இந்த கிராமந்தானா” சத்துணவுக்கூடத்தின் முருங்கை இலை போட்ட சாம்பாரைப் பிசைந்து ஒரு வாய் போட்டுக்கொண்டேன். “சார் இவுங்க வெட்டுக்காரங்க... அவுங்க தலைமுறைல இந்தப் பசங்கதான் சார் மொத மொதலா ஸ்கூலுக்கு வராங்க...” என்றார் மகேந்திரன். தலைமுறை தலைமுறையாக பள்ளியின் வாசனை இல்லாமல் ஒரு ஜனத்திரள் இருந்திருப்பதுதான் நவ இந்தியாவின் சாதனைபோல.

நான்காம் சுவர்! - 15

 “இங்க இருந்து நாலு கிலோ மீட்டர்தான் பழவேற்காடு சார்... ஒரு வேலையா ஸ்கூல் முடிச்சுட்டு போயிட்டிருந்தேன்... ரோட்டுக்கு இடது பக்கம் கொசஸ்தலை ஆறு சார்... வலது பக்கம் கடல் சார்... ரெண்டும் இணையுற மொகத்துவாரத்தத் தாண்டுனா கடல் பக்கமா பாத்தா இரண்டு மூணு பசங்க சட்ட இல்லாம மணல் மேட்டுல வெளையாடிட்டிருந்தாங்க சார்... அதுல ஒருத்தன்தான் இப்ப மெடல் காட்டிட்டுப் போன நாகா.”

அலுமினியத் தட்டில் சோறும் முருங்கை இலை சாம்பாரையும் வாங்கிக்கொண்டு நாகாவும் அவன் சகாக்களும் ஓரிடத்தைத் தேர்வுசெய்து உட்கார்ந்துகொண்டார்கள். “வண்டியை நிறுத்திட்டு அவனுங்க கிட்டக்க போனா... என்னப் பாத்து பயந்து ஓட ஆரம்பிச்சானுங்க சார்... எங்கதான் போறானுங்கன்னு நானும் பின்னாடியே ஓடுனன்... அவுனுங்க அளவுக்கு ஓட முடியல... கடல் மண்ணுல ஒரப்பு ஜாஸ்தி... இப்படின்றதுக்குள்ள மின்னல் மாதிரி மறைஞ்சுட்டானுங்க சார்... இங்கிருந்து பாத்தா ரோடு தெரியல... கிட்டத்தட்ட கடல் வந்துடுச்சு... அப்படியே நடந்தேன்... பனை ஓலைல முடைஞ்ச மூணு வூடுங்க கவுந்தாப்புல கெடந்துச்சு சார்... ஒரு கிழவி என்னப் பாத்ததும் பயந்துகிட்டு கூடாரத்துக்குள்ள தவழ்ந்து ஓடிருச்சு... ஒரு கிழவரு கிட்ட வந்தாரு... ஏமி சார்... ஏமி காவாலின்னு.... தெலுங்குல கேட்டாரு... எனக்கும் தெலுங்கு தெரியுன்றதால... என்னப் பத்திச் சொன்னன்... மொதல்ல பேச பயந்தவரு... அப்புறம் சகஜமானாரு சார்...  கிழவரு ஒரு விசில் அடிச்சாரு... நம்பமாட்டிங்க சார்... புத்துக்குள்ள இருந்து கெளம்புன பாம்புங்க மாதிரி சார சாரயா பத்துப் புள்ளைங்க அந்த ஓட்ட வழியா வந்துதுங்க... அவுங்ககிட்ட பேசப் பேசத்தான் சார் தெரிஞ்சுது... அவுங்க மழைக்கு மட்டும்தான் ஸ்கூல் பக்கம் ஒதுங்குவாங்க... ஏன்னா அங்கு ஒழுவாதுன்றதுக்காக...” என்று மகேந்திரன் சிரித்தார். 

நான்காம் சுவர்! - 15

நாகா சாப்பிட்டு முடித்த தட்டைக் கழுவி பைக்குள் வைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நடந்தான். “மொதல்ல ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டன்னுதான் சொன்னாங்க... மரத்த வளத்தமா... வெட்டுனமான்னு இருக்கோம்... எங்களுக்கு எதுக்கு படிப்புன்னாங்க... உன் பிள்ளையைப் படிக்க அனுப்பாம இருக்குறதுக்கு உனக்கு உரிம இல்ல... இப்ப அனுப்புலனா போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துருவேன்னு சும்மா மிரட்டுனன்... அதுக்கப்புறந்தான் சார் ஸ்கூலுக்கு அனுப்புனாங்க...” என்றார் மகேந்திரன்.

“மகேந்திரன் இவுங்க இல்லுக்கு... அதாவது வீட்டுக்கு... என்னக் கூட்டிட்டுப் போறிங்களா” என்று கேட்டேன். “என்ன சார்... இப்படிக் கேட்டுட்டீங்க... கிளாஸ் இப்ப முடிஞ்சுடும்... பசங்களோடவே போலாம்...” என்றார். பள்ளியிலிருந்து ஒரு பர்லாங்கு போக வேண்டும். நாகா மற்றும் பிள்ளைகள் இரு வண்டியில் மூன்று மூன்று பேராக லாகவமாக உட்கார்ந்து கொண்டார்கள். திருக்குறள் வண்டியில் நானும் நாகாவும் வந்தோம். சாலையின் இரண்டு பக்கமும் மணல்மேடுகளைத் தவிர வேறெந்த உயிரினங்களையும் பார்க்க முடியவில்லை. ஒரு பர்லாங்கில் இரு வண்டிகளும் நிறுத்தப்பட்டது. “சார் இங்க இருந்து கொஞ்ச தூரம் நடந்து போகணும் சார்” என்று மகேந்திரன் மணலில் நடந்தார். நாங்கள் அவர்கள் இல்லுக்கு வருவதை அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள். திருக்குறள் அவர்களோடு இணைந்துவிட்டார். ஆங்காங்கே முட்புதர்கள் கொண்ட கடற்கரை மணலில் நடந்தோம். சவுக்கு மரத்தின் சருகுகள் கொத்துக்கொத்தாக மணலில் விழுந்துகிடந்தது. சிறிது தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். நாங்கள் வந்த பாதை தெரியவில்லை. மணற்குவியலின் நடுவில் நின்றுகொண்டிருப்பதாகவே இருந்தது. சில இடத்தில் குளம்போல குழி வெட்டியிருந்தது. அதிலிருக்கும் தண்ணீர் சவுக்கின் சருகில் கறுத்துப்போயிருந்தது. நான் நாகாவைப் பார்த்தேன்.  

நான்காம் சுவர்! - 15

“சார் இது குண்ட்டா சார்... வாங்க சார் நல்ல குண்ட்டாவ காட்றன்” என்று உற்சாகமாக அழைத்துப்போனான். “சார், இந்த மாதிரி பள்ளம் தோண்டி குண்ட்டா அதான் குளத்தத் தோண்டி வச்சிப்பாங்க... இதுதான் சார் இவங்க நீராதாரம்” என்று திருக்குறள் விளக்கினார். அப்போது சுத்தமான இன்னொரு குண்ட்டா வந்தது. “சார் இதுதான் நாங்க குடிக்கிற தண்ணி” என்றவன் அந்தக் குழிக்குள் பதுவிசாக இறங்கினான். அக்குண்ட்டாவில் மணல் சரிந்து விடாதபடிக்கு நுட்பமாக குண்ட்டாவைத் தோண்டியிருக்கிறார்கள். வட்ட வடிவில் தெளிந்த நீரில் நாகா முகத்தைப் பார்த்துக்கொண்டான். மண்ணில் சுள்ளியை நட்டுவைத்து அதன்மேல் பழைய நைந்துபோன ஒரு துணியும் பக்கத்தில் பிளாஸ்டிக் டப்பாவும் இருந்தது. அதைக் கொண்டு குண்ட்டாவில் டப்பாவால் தண்ணீரை மொண்டு, சுள்ளியில் தொங்கிக்கொண்டிருந்த துணியை எடுத்து டப்பாவை முழுவதும் மூடி அப்படியே குடித்தான். இயற்கையைத் தன் வசமாக்குகிற இந்தப் பிள்ளையின் முன்னால் நாமெல்லாம் ஒன்றுமில்லை.

கடலின் அலைச் சத்தம் இப்போது அதிகமாகக் கேட்டது. சவுக்கு மரங்கள் அசைவின் சர சரப்பும் சேர்ந்து ஒரு ரம்மியத்தை அந்தச் சூழலில் மீட்டிக்கொண்டிருந்தது. மூன்று குடில்கள் பனை ஓலையால் முடிந்து கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. இரண்டு மூங்கில் கம்புகளை நட்டு ஒரு மூங்கிலை இதற்கும் அதற்குமாகக் கட்டிவைத்து பனையோலை பரியை மாட்டி வைத்திருந்தார்கள். ‘ப’ வடிவில் துணி மறைப்பில் குளித்துக்கொள்ளக் கட்டியிருந்தது. அவ்வம்சத்தின் ‘மூப்பன்’ மரம் அறுக்கும் வாளை அரம் கொண்டு கூர்தீட்டிக் கொண்டிருந்தார். மூதாட்டி யொருவர் நொய்யரிசியைக் களைந்துகொண்டிருந்தார். பிள்ளைகள் அரவத்தைக் கேட்டு, கூர்தீட்டிக் கொண்டிருந்த மூப்பன் ஏறிட்டுப் பார்த்தார். மகேந்திரனைப் பார்த்ததும் எழுந்து வணக்கம் வைத்தார். “அண்ணையா... போஜனம் ஆயிந்தா..?” மகேந்திரன் விசாரித்தார். “லேதுய்யா... இங்கமிட்டதான் செய்யணும்...” என்று எங்களைப் பார்த்தார். “அண்ணையா... வீலந்தா உங்கள பாக்க வந்திருக்காங்க” என்று அறிமுகப் படுத்தினார் மகேந்திரன். “உங்க பேரு என்ன” என்று கேட்டபோது “முனுசாமி சார்... நா சம்சாரம் சென்செம்மா சார்...” என்றார். சென்செம்மா என்பது அவர்களின் குலச்சாமி என்று மகேந்திரன் புரியவைத்தார். சென்செம்மா தண்ணீர் சொம்போடு வந்தார். “சார்... நீலு தாகண்டி சார்” திருக்குறள் சொம்பை வாங்கி கடகடவெனக் குடித்தார்.

இல்லுவில் பையை வைத்துவிட்டு வந்த நாகா தகப்பனிடம் கோபமாக இருந்தான். கழுத்தில் போட்டியில் வென்ற மெடலை மாட்டியபடியேயிருந்தான். “அண்ணையா... கொடுக்கு மெடல் வாங்கறத... பாக்கலன்னு நீ பைக கோபங்கா உண்ணாடு நாகா” என்றார் மகேந்திரன். “ஏமி சார் பண்றது... மொதலாளி ரேப்புக்குள்ள ரெண்டு டன் மரத்த வெட்டணும்னு சொல்லிட்டாரு. என் கிட்டயிருக்குறது பழைய வாளு... என்னதான் கூர் செசினாலும் ஒரு டன் வெட்டறதே பெத்த விஷயம்... அதான் இன்னிக்கு நானும் தம்புடுவும் போயி அர தான்னு வெட்டிட்டு வந்தோம் சார்... டேய் நாகா, மெடல காட்டு” என்று பிள்ளையிடம் வந்தார் முனுசாமி. அவன் ரேங்கிக் கொண்டுதானிருந்தான். அப்போது அடுப்பில் வைத்திருந்த சுடுதண்ணியை எதிர்க்குடிலுக்குள் கொண்டு சென்றார் சென்செம்மா. நான் பார்த்ததை முனுசாமி கவனித்துவிட்டார். “சார் என் தம்பி பொஞ்சாதிக்கு இன்னிக்குள்ள புள்ள பொறக்கப்போவுது... சென்செம்மா அருளால பையனாவே பொறக்குன்னு நெனைக்குறேன்” கடல் காற்றில் அலைச் சத்தம் பெரிதாகக் கேட்டது.

கடலின் திசையிலிருந்து வெற்றுடம்பில் இடது தோலில் பரியை மாட்டிக்கொண்டு முனுசாமியின் தம்பி சென்னா வந்து கொண்டிருந்ததை பிள்ளைகள் பார்த்துவிட்டார்கள். எப்படியும் மீன்களும் இறால்களும் நிச்சயம் இருக்கும் எனத் துள்ளிக்குதித்து அவனை மொய்ந்தார்கள். பையை சென்னா திறந்து காண்பித்தார். கெளுத்தி மீன்களும் துடி இறால்களும் துள்ளிக் கொண்டிருந்தன “எலிப்பூச்சி எக்கட நைனா” நாகா கேட்டதும் மூடிவைத்திருந்த டப்பாவைத் திறந்து காண்பித்தார் சென்னா. எலிப்பூச்சிகள் ஜொலித்துக்கொண்டிருந்தன. அந்த டப்பாவை வாங்கிக்கொண்டு அவ்வளவு சந்தோஷமாய் நாகாவும் பிள்ளைகளும் ஓடி வந்தார்கள். “என்னடா செய்யப்போறீங்க...” கேட்டதற்கு “சுட்டு சாப்புடுவோம் சார்... சூப்பரா இருக்கும்...” என்று கல்லைக் கூட்டி ஒருவன் காய்ந்த சவுக்கு சருகுகளை அடுப்பில் போட்டான். தீ மூட்டி எலிப்பூச்சியை நெருப்பில் காட்டி காட்டி ஒவ்வொருவனும் அப்படிச் சாப்பிட்டான்கள். பிடித்துக்கொண்டு வந்த மீன்களை சென்செம்மாவிடம் கொடுத்தான் சென்னா “இப்போ பொறந்துடும்மா” என்றவன் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். 

நான்காம் சுவர்! - 15

இவர்களுக்கு இவர்கள்தான் உலகம், வேறெதுவும் தெரியாத ஜீவன்கள். எங்கெல்லாம் கவுத்துப் போடுகிறார்களோ அங்கெல்லாம் இவர்களது வீடுதான். காடு, கரை, மேடு மலையென எதற்கும் அஞ்சாதவர்கள். பிற மனிதர்களைப் பார்த்தால் அஞ்சுகிறார்கள். ஒரு டன் மரத்தை வெட்டினால் ஆயிரம் ரூபாய் கூலி. மூணு, நாலு மாதம் ஒரு முதலாளிக்கு வெட்டுவார்கள். அல்லது நிலத்தில் சவுக்கு, தைலம் போன்ற விதைகளை ஊன்றி வளர்த்து பிறகு வெட்டிக் கொடுப்பார்கள். அப்போதுதான் ஒரு நிலத்தில் ஒட்டுமொத்தமாக நான்கு அல்லது ஐந்து வருடங்கள் அங்கேயே இருப்பார்கள். தன் மூதாதையர்கள் பிடித்த வாளை மழுங்காமல் தங்களது அரத்தைக் கொண்டு கூர்தீட்டி வைத்திருப்பவர்கள். தலைமுறையாக வெட்டுக்காரனாகவே இருந்த பரம்பரையில் முதல்முறையாக வகுப்பில் காலெடுத்து வைத்திருக்கிறது தன் பிள்ளை என்கிற எந்த ஓர்மையும் இல்லாதவர்கள். இந்நிலத்தில் வேலை முடிந்தால், வேறு நிலத்தை நோக்கித் தலையில் வீட்டைச் சுமப்பவர்கள்.

வானம் கொஞ்சமாகக் கறுத்திருந்தது. முனுசாமி போத்தலை உடைத்து சிரட்டையில் ஊற்றிக்கொண்டார். நாகா எலிப்பூச்சியை வாட்டி தன் தகப்பனுக்கு சைடிஷ்ஷாக எடுத்து வந்தான். “நாகா அந்த மெடலு... எக்கடரா” சிரட்டையைக் குடித்துக்கொண்டார். மெடலைப் பார்த்ததும் ஒன்றும் புரியாமல் “இத வச்சு ஏமி நைனா பண்றது” என்று கேட்டார். உட்கார்ந்திருந்த யாருக்கும் இதற்கான பதிலில்லை. மகேந்திரன் சமாளித்தார். “இந்த மெடல்... நீ பிள்ளவாடு படிச்சி வாங்கினது... நீ பரம்பர கௌரவம் அண்ணையா.” எலிப்பூச்சியை வாயில் போட்டவர் எங்களை ஏறிட்டார். “எங்களுக்கு எந்த கவுரவமும் ஒத்து சார்... வெட்டுன கூலிய கரெக்டா கொடுத்தாலே ச்சாலு சார்... மனுசனா நடத்த வேணாம்... டப்பு தீஸ்கோனா ச்சாலு சார்...” சென்செம்மா நைந்த துணிகளை எடுத்துக்கொண்டு குடிலுக்குள் தவழ்ந்து உள்ளே போனார்.

“பேசாம ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போலாம்ல... இங்க ஏதாவது பிரச்சன ஆயிடுச்சுன்னா” என்றேன். முனுசாமி சிரித்தார். சிரட்டையில் கொஞ்சம் ஊற்றிக்கொண்டார். “மண்ண நம்பி வாழ்ற எங்களுக்கு... எந்த நோவும் ராது சார்... உட்கார்ற இடத்துல பொறந்து... போற ஊர்ல செத்து... பொதச்சுட்டு போய்ட்டே இருப்போம் சார்...” என்று சிரட்டையைக் குடித்துக்கொண்டார். இப்போது தவழ்ந்து வெளியே வந்த சென்செம்மா ஒரு துருப்பிடித்த கத்தியை ஓலையிலிருந்து எடுத்து மீண்டும் தவழ்ந்து உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் குடிலில் இருந்து அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டது. நாங்கள் எல்லோரும் குடிலையே பார்த்துக்கொண்டிருந்தோம். சத்தம் அடங்கிய முனகல் ஒலி மட்டுமே இப்போது கேட்டது. தவழ்ந்து வந்த சென்செம்மா கையில் ரத்தத் துளிகளோடு அந்தத் துருவேறிய கத்தியைப் பனையோலையில் செருகினாள்.

வானத்தை நோக்கி இரு கரத்தைத் தூக்கி முனுசாமி “சென்செம்மா தேவுடு...” என்று வணங்கிக்கொண்டார். சென்செம்மா ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னார். மகிழ்ந்து “சார்... ரண்டி சார்... கொடுக்குனி ச்சுஸ்தாம்” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரு மரத்துக்கும் நடுவே துணியால் ஊஞ்சல் கட்டி பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. பிறந்த பிள்ளையின் தகப்பன் கத்தியால் மீனை ஆய்ந்துகொண்டிருக்கிறான். சென்செம்மா மட்டும் எந்தப் பரபரப்புமின்றி ஒரு பிரசவத்தைப் பார்த்துவிட்டார்.

குடிலில் தவழ்ந்து முனுசாமி உள்ளே சென்றார். பிறகு திருக்குறள் குழந்தையில் தவழ்ந்ததுபோலத் தட்டுத்தடுமாறி உள்ளே சென்றார். நாங்களும் தவழ்ந்தோம், ரத்தமும் சதையுமாக பிள்ளை கண்களை மூடியும் திறந்தும் அழுது கொண்டிருந்தது. சென்செம்மா துடைத்துக் கொண்டிருந்தார். குடில் மொத்தமே அஞ்சடிதான் இருக்கும். பிள்ளை ஈன்றவள் மயங்கிக் கிடக்கிறாள். நாங்கள் முட்டிபோட்டுத்தான் அங்கே நிற்க முடியும். “சென்செம்மா” என்று நெகிழ்ந்தார் முனுசாமி. அந்தப் பிள்ளையைப் பார்த்தேன். கண்களை இடுக்கிக்கொண்டு அழுது கொண்டிருந்தது. தவழ்ந்து வெளியே வந்தோம். எங்களைத் தொடர்ந்து சென்னா தவழ்ந்து உள்ளே போனார்.

“அண்ணையா, நாகா நல்லா படிக்கிறான்... ஒழுங்கா ஸ்கூலுக்கு அனுப்புங்க...” மகேந்திரன் சொன்னபோது ஒரு குச்சியின் அடிப்பகுதியில் இரண்டு தக்கையை சக்கரங்களாக வைத்து மண்ணில் உருட்டிக்கொண்டு வந்தான். “என்னடா இது” திருக்குறள் கேட்டார் “தோலா பண்டி சார்... நா எங்க ஊருக்குப் போறேன்... டாட்டா சார்” என்று தோலா பண்டியை உருட்டிக்கொண்டு போனான் நாகா.

“மொதலாளி வேற... அந்ராவுலு வேலைக்குப் போகச்சொல்றாரு சார்... அலாண்டி வேல்தே என்ன சார் பண்றது... உங்கள மாறி யாரும் அங்க இருப்பாங்களா சார்... எங்கியாவது நாங்க நின்னாக்கோடா எங்கள தொரத்தி உட்ருவாங்க சார்... ஸ்கூலுலெலாம் எங்க பிள்ளவாடுங்கள சேக்க மாட்டாங்க சார்... ஆனா நைட்டெலாம் விளக்கு வச்சி சிலேட்டுலோ நாகா ஏதோ எழுதுறான் சார்... எனுக்கும் இப்ப ஆசையாத்தான் இருக்கு சார்... ஆனா இந்த வெட்டுக்காரனுக்குப் பொறந்துட்டானே சார்... எடமும் இல்ல... அட்ரசும் இல்ல...” என்று பீடியைப் பற்றவைத்துக் கொண்டார் முனுசாமி. அப்போது சென்னாவின் குடிலில் இருந்து பொரித்த மீனை ஒரு தட்டில் வைத்து நாகா எடுத்து வந்தான். அந்த மீனைப் பிய்த்து வாயில் போட்டேன். நாகா சந்தோசத்தில் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

“மகேந்திரன், முனுசாமி வீட்டத் தூக்கிட்டு எங்கியாவது போயிட்டா... நாகா படிப்பு அவ்ளதானா...” மணலில் என் கால்கள் புதைந்து பின் எழுந்தது. “இல்ல சார்... பக்கத்து ஊர்ல ஒரு மொதலாளி சவுக்கு தைலமும் விதைக்கப் போறாரு... அங்க முனுசாமி குடும்பத்த சேத்து விட்டுட்டோம்னா... மரத்த வெச்சா... வளந்து அறுத்துக் கொடுக்கறதுக்கே ஒரு அஞ்சு வருஷம் ஆய்டும்... அதுக்குள்ளே நாகாவ அஞ்சாவது வரைக்கும் படிக்க வச்சிடலாம்... நாளைக்கு அந்த மொதலாளிகிட்ட பேசணும்... நாகாவ விட மாட்டேன் சார்” என்ற மகேந்திரனை என்னவென்று சொல்வது.

பிறகொரு நாள் மகேந்திரன் அழைத்தார். “சார் அந்த மொதலாளி ஓ.கே சொல்லிட்டாரு... இனி அஞ்சு வருஷம் அவங்க எங்கேயும் போகத்தேவையில்ல சார்... நாகா படிச்சுடுவான் சார்” என்றார் மகேந்திரன். வெள்ளந்தியாய்ச் சிரித்த நாகாவின் முகம் வந்துபோனது.

- மனிதர்கள் வருவார்கள்...