மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - நாகு - 20

தெய்வ மனுஷிகள் - நாகு
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வ மனுஷிகள் - நாகு

கையில தன் குழந்தையை ஏந்தியபடி எல்லையில உக்காந்திருக்கா இந்த நாகு...

நாகு, கடுமையான உழைப்பாளி. கூலிக்கேத்த வேலைனு இல்லாம மனப்பூர்வமா உழைப்பா. இப்படி நாயாப் பேயா கெடந்து உழைச்சுக் கஷ்டப்பட்டதாலதான் இன்னிக்கு குந்த ஒரு சொந்தக் குடிசைகட்டி, பசியில்லாம சாப்பிட்டு, தூங்கி எழும்புறா. புள்ளைக்கும் நல்லது கெட்டது பண்ண முடியுது.

நாகு குடும்பத்தை இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கிராமத்துக்கு ஆண்டைக தான் அழைச்சுக்கிட்டு வந்தாக. ஊரு மழை தண்ணியில்லாம, தொழிலுக்கும் வாய்ப்பில்லாம பஞ்சத்துல சிக்கிக்கிடந்துச்சு. ‘மூணு வேளை சோறு, வேலைக்கேத்த கூலி’னு ஆண்டைக கூப்பிட்டதும் குடும்பத்தோடு கெளம்பி வந்துட்டாக.

பேராண்டை தோட்டத்துல தான் வேலை. அங்கே தொழிலாளியா இருந்த முனியன், நாகுவைப் பார்த்த நாள்லயே மயங்கிப்போனான். நாகுவுக்கும் அவன்மேல பிரியம் இருந்துச்சு. ஆனா, முனியன் குடும்பத்துல ஏத்துக்கலே. ஒருநா, எல்லாரும் அசந்துருந்த நேரத்துல நாகுவை பெருமா கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி மாலை மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டான் பய. ஆயி, அப்பன் அவனை வீட்டுக்குள்ள சேக்கலே. கருவிக்கிட்டே துரத்திவிட்டுட்டானுக. ஆண்டைதான் குடிலுக்கு எடம் குடுத்துப் பாத்துக்கிட்டாரு.

முனியனும் கடுமையான உழைப்பாளிதான். பொண்டாட்டி மேல அன்பா இருப்பான். அந்த அன்புக்குச் சாட்சியா நாகு முழுகாம இருந்தா. என்னமோ ஊருக்காட்டுல எந்தப் பொம்பளையும் புள்ள பெக்காத மாதிரி, பொண்டாட்டியை ‘தாங்கு தாங்கு’னு தாங்குனான் முனியன். 

தெய்வ மனுஷிகள் - நாகு
தெய்வ மனுஷிகள் - நாகு

ஒருமுறை விடாம மழை பேஞ்சுச்சு. காலம் கடந்து நின்ன மரங்கள்லாம்கூட சாய்ஞ்சு போச்சு.  வயக்காடெல்லாம் உடைப்பெடுத்து தண்ணியில மூழ்கிக்கிடந்துச்சு. குளிரான குளிரு. ‘முனியன் வேலைக்கு வரணும்’னு ஆளு விட்டுட்டாரு ஆண்டை. நாகுவுக்கு நிறைமாசம். பிரசவம் இப்பவோ, அப்பவோன்னு இருக்கு. பொண்டாட்டியை விட்டுட்டுப் போக முனியனுக்கு மனசேயில்லை. நாகுதான், ‘என்னைப் பத்தி கவலைப்படாதய்யா. போயி வேலையைப் பாரு. ஏதாச்சும் ஒண்ணுன்னா ஆளுவிட்டுக் கூப்பிடுறே’னு சொல்லி அனுப்பி வெச்சா.

அரைமனசோடு கெளம்பிப்போனான் முனியன். இடுப்பளவு தண்ணிக்குள்ள பயிரெல்லாம் முழுகிக் கெடக்கு. அங்கங்கே வரப்பை வெட்டிவிட்டு தண்ணியை வெளியேத்தி செப்பனிட்டுக்கிட்டிருந்தான். அப்போன்னு பாத்து எங்கிருந்தோ மெதந்து வந்த ஒரு பாம்பு, அவன் மம்பட்டியில சிக்கிக்குச்சு. லேசா அதுமேல வெட்டுப்பட்டு ரத்தம் தெறிச்சுச்சு. அந்தக் கோபத்துல சீறிப்பாஞ்சு முனியன் கையில கொத்திருச்சு. பதறிப்போனான் முனியன். ஆண்டையோட ஆட்கள், கட்டை வண்டியில போட்டுக்கிட்டு வைத்தியன் வீட்டுக்கு ஓடுனாக. போறதுக்குள்ள உடம்புக்குள்ள வெஷம் இறங்கி முனியன் போய்ச் சேந்துட்டான். 

நாகு துடிச்சுப்போனா.. ‘போகமாட்டேன்’னு சொன்ன புருஷனைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வெச்சமே.  மலைமாதிரி நம்பிக்கையா இருந்த மகராசன். இப்படி தனியா விட்டுட்டுப் போயிட்டானே. கூடவே நாமும் போய் சேந்திரலாம்னா வவுத்துல  பூவாட்டம் ஒரு குழந்தை இருக்கே...’ - துயரம் தாங்காம மயங்கிச்சரிஞ்சுட்டா. அந்த வேகத்துலயே பிரசவமும் ஆகிப்போச்சு... பொம்பளப் புள்ள.

பிரசவம் பாத்த வைத்தியச்சி, குழந்தை வித்தியாசமா இருக்கிறதைக் கவனிச்சுட்டா...  வெளிக்காத்த சுவாசிச்சதும் ‘வீல்’னு கத்தவேண்டிய புள்ள கத்தலே. காலு ரெண்டும் சூம்பியிருக்கு. ஏதோ குறைபாடு இருக்குன்னு தெரிஞ்சுபோச்சு. புள்ளையை நாகு கையில ஒப்படைச்ச வைத்தியச்சி, ‘பத்துரமா பாத்துக்க தாயி’னு சொல்லிட்டு சில கசாயங்களைக் குடுத்துட்டுக் கிளம்பிட்டா.

அதுக்கப்பறம் நாகுக்கு அந்தப் புள்ளதான் உலகமாப் போச்சு. அப்பப்போ முனியனோட சொந்தக்காரனுவ நாகுகிட்ட ஒரண்டை இழுப்பானுக. நீயும் பிள்ளையும் ஊரைவிட்டுக் கிளம்பிடணும்னு மிரட்டுவானுங்க. இப்படியே நாள் போய்க் கிட்டிருந்துச்சு. வேலைக்குப் போகும்போது புள்ளையையும் தூக்கிட்டுப் போயிருவா நாகு. தொட்டில் கட்டித் தூங்கப் போட்டுட்டு வேலை செய்வா. கருத்து வேலையிலயும் கண்ணு தொட்டியிலயும்தான் இருக்கும்.

குழந்தை வளந்துச்சு. ஆனா, வயசுக்கேத்த மாதிரி செயல்பாடும் வளர்ச்சியும் இல்லை. எப்படிப் போட்டமோ அப்படியே கெடக்கும். சரியா பேச்சு வரலே. தவழவேண்டிய வயசுல தவழலே. நடக்க வேண்டிய வயசுல நடக்கலே.

‘புருஷனைப் பறிச்சுக்கிட்ட சாமி, இப்படியொரு புள்ளையைக் கொடுத்து நாகுவை வஞ்சனை பண்ணிருச்சே’னு ஊராளுங்கெல்லாம் ரொம்ப வருத்தப்பட்டாங்க. ஆனா, நாகு வருத்தப்படலே. ‘இது தெய்வக்குழந்தை... நான் நல்லாப் பாத்துக்குவேனு நம்பிதான் சாமி எனக்கு இந்தக் குழந்தையைக் குடுத்திருக்கு’னு நினைச்சு புள்ளையைப் பாத்துக்கிட்டா.

தெய்வ மனுஷிகள் - நாகு
தெய்வ மனுஷிகள் - நாகு

புள்ளை பெரிசாயிருச்சு. காலு குச்சுமாதிரி சூம்பிப்போச்சு. நாகு எங்கெல்லாம் போறாளோ, அங்கெல்லாம் காலை இழுத்து இழுத்துக்கிட்டு தவழ்ந்தபடியே அந்தப் புள்ளையும் போவும். ஊராளுங்களும் பரிதாபப்பட்டு தானியம், காய்கறின்னு கை நிறைய நாகுவுக்கு அள்ளிக்குடுப்பாக.

இதெல்லாம் முனியனோட சொந்தக் காரனுங்களுக்குப்  புடிக்கலே. ‘முனியன் போய்ச் சேர்ந்ததோடு இவளும் நாண்டுக்கிட்டுச் செத்துருவா’னு பாத்தா இப்படி தலையெடுத்துட்டாளேனு பொறாமை. இதுக்கெல்லாம் முடிவு கட்டணும்னு திட்டம் போட்டானுவ.

ஒருநாள் சாயங்காலம், ராகி வயல்ல களையெடுத்துக்கிட்டிருந்தா நாகு. எதிர்ல காவக்காரனுக்குப் போட்ட கொட்டகையில உக்காந்து விளையாண்டுக்கிட்டிருந்துச்சு புள்ள. முனியனோட சொந்தக்காரப் பயலுவ மூணு பேரு மறைஞ்சு மறைஞ்சு அந்தக் காவக்குடிலுக்கு வந்தானுவ. நாகு கொஞ்சம் அசந்த நேரத்துல புள்ளையத் தூக்கிட்டு ஓடிட்டானுவ.

தூக்கிட்டுப்போன புள்ளைய கருவேலங் காட்டுக்குள்ள வெச்சு கழுத்தறுத்துப் போட்டானுவ. நாகு புள்ளையைக் காணாம துடிச்சுப்போனா. அவ கத்துன கத்துல ஊரே கூடிப்போச்சு. ஆளுக்கொரு பக்கம் ஓடியாடி புள்ளையத் தேடுறாக. கிடைக்கலே.

கருவேலங்காட்டுப் பக்கம் தேடிப்போன ஆளுக, புள்ள கழுத்தறுத்துக் கிடக்குறதைப் பாத்தாக. தகவல் கேள்விப்பட்டு  நாகு அலறி அடிச்சுக்கிட்டு ஓடுனா. உசுருக்கு உசுரா வளத்த மக, தலைவேற உடல்வேறயாக் கிடக்கிறதைப் பாத்து கதறி அழுதா. புள்ளை உடலை கையில ஏந்திக்கிட்டு நேரா பஞ்சாயத்துத் திடலுக்கு வந்தா.

எல்லாப் பெரிய மனுஷங்களும் அங்கே கூடியிருந்தாக. புள்ளை உடலை அவுக முன்னால போட்டு, `அய்யா சாமிகளே... உங்கூருக்குப் பிழைக்க வந்தவ நான். இதுநா வரைக்கும் உங்களுக்கோ, உங்க சந்ததிக்கோ ஒரு துரோகமும் செஞ்சதில்லை. உங்க வயக்காட்டுல கஷ்டப்பட்டு எம்புருஷனும் பாம்பு தீண்டிச் செத்துப்போனான். துணைக்குத் துணையா, உசுருக்கு உசுரா தெய்வமாப் பாத்துக்கொடுத்த இந்தப் புள்ளைதான் உலகம்னு நினைச்சு வாழ்ந்துக்கிட்டிருந்தேன். அதையும் இப்போ கொன்னு போட்டானுவ. இந்த ஊரும் ஆண்டைகளும்தான் எனக்கு ஞாயம் சொல்லணும்'னு சொல்லி ஒப்பாரி வச்சா நாகு.

பெரியாளுகள்லாம் கூடிப் பேசினாக. ‘ஆனது ஆகிப்போச்சு. போனாப்போவுதுனு விட்டுட்டு வேலையைப் பாரு. இந்தக் காரியம் செஞ்சவனை அந்த சாமி தண்டிச்சுக்கும்’னு தீர்ப்புச் சொல்லி அனுப்பிவிட்டாக.

‘எனக்கு நல்ல நீதி சொல்லாத உங்க குடும்பம் அழியும்’னு சாபம் விட்டுட்டு தன் புள்ளை உடலைத் தூக்கிட்டுப் போய் அடக்கம் செஞ்சா நாகு. எல்லையில இருக்கிற பெருமா கோயிலுக்குப் போனா. ‘ஊரைச்சுத்தி இத்தனை சாமிக இருந்தும் எம்புள்ளையக் காப்பாத்தாம விட்டுட்டியளே. இது ஞாயமா’னு கதறி அழுதா. ‘புருஷனும் போய் சேந்துட்டான். எம்புள்ளையையும் பறிச்சுக்கிட்டியே.  இனி நான் ஏன் வாழணும்’னு கோயிலுக்கு வெளியால இருந்த மரத்துல சுருக்கு வெச்சுக்கிட்டுத் தொங்கிட்டா நாகு.

மறுநா ஊராளுங்க நாகு தொங்குறதைப் பாத்தாக. எல்லாரும் சேந்து உடலை அடக்கம் பண்ணுனாக. ஆனா, அவ்வளவு எளிதா அடங்கலே நாகுவோட ஆன்மா.  ஊரைச் சுத்தி சுத்தி அடிச்சுச்சு. யாரும் நிம்மதியா தூங்க முடியலே. ராவானா ஒரே அழுகைச் சத்தம். திடீர் திடீர்னு கொலுசு ஒலி. சிண்டு சிறுசுகளுக்கெல்லாம் உடம்புக்கு முடியாமப் போயிருச்சு. பெரியாளுக எல்லையைக் கடந்து வெளியில போக முடியலே.

`எல்லாத்துக்கும் காரணம் நாகுவோட கோபம்தான்’னு புரிஞ்சுபோச்சு. ‘அம்மா தாயே... எங்களைப் பழி வாங்கிறாதே... எங்க புள்ள குட்டிகளைக் காவு வாங்கிறாதே... நீயே எங்களுக்குக் காவல் தெய்வமா இருந்து வழி நடத்தாத்தா’னு சொல்லி, சிலையெடுத்து படைப்புப் போட்டு வழிபட ஆரம்பிச்சாக.

காலப்போக்குல நாகுவோட ஆங்காரம் குறைஞ்சுச்சு. தன்னைத் தேடி வர்ற குஞ்சுகளை ஆதரிச்சு வரங்குடுக்க ஆரம்பிச்சா. விருதுநகர் பக்கத்துல சூலக்கரைன்னு ஓர் ஊரு இருக்கு. அங்கேதான் குடியிருக்கா நாகு. கையில தன் குழந்தையை ஏந்தியபடி எல்லையில உக்காந்திருக்கா... அந்தூர்ல அவ இல்லாம ஒரு காரியமும் நடக்காது. ஊர்ல யாருக்கு குழந்தை பெறந்தாலும் அவ காலடியில கொண்டாந்துபோட்டு, ஆசி வாங்கிட்டுப் போறாக. குடும்பத்தில ஒருத்தியா, ‘நாகம்மா...’ ‘நாகம்மா...’னு  எல்லாரும் அவளைக் கொண்டாடுறாக.

- வெ.நீலகண்டன்,  படம் : ஆர்.எம்.முத்துராஜ்  ஓவியம் :  ஸ்யாம்