மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

ஓவியங்கள்: ம.செ.,

ன்று முழுநிலவு நாள். கொற்றவையின் கூத்துக்களம் நோக்கிப் பறம்புமக்கள் குவியத்தொடங்கினர். குருதியாட்டுவிழா தொடங்கவிருந்தது. போரின் இழப்புகளை வெற்றியின் மகிழ்வுகொண்டு மேவும் விழா இது. போர்த்தெய்வமான கொற்றவை தனது பசியாறி மகிழ்ந்திருப்பாள். அவளின் மகிழ்வை பறம்புநாட்டுப் பெண்களின் மகிழ்வாக மாற்றுவதே இத்திருவிழா. 

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

மூவேந்தர்களுக்கு எதிராகப் போர் தொடங்கும்முன் கொற்றவைக்கு நீராட்டுவிழா நடந்தது. அவ்விழாவின்பொழுது நிறைசூல்காரியின் வயிற்றில் உள்ள கருவுக்கு வாக்களித்தாள் கொற்றவை. இம்மண்ணை அடுத்த தலைமுறைக்குக் காத்தளிப்பேன் என்று அவள் சொல்லிய சொல் இன்று மலர்ந்துள்ளது. வாக்கினைக் காத்தளித்த கொற்றவைக்கு நன்றிகூறும் பெருவிழா இது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 111இழப்பையும் வலியையும் கண்ணீரையும் கடந்தால் மட்டுமே மேடேறி வந்து நன்றி சொல்ல முடியும். இக்காடு காக்கப்பட்டது; இப்பறம்பு காக்கப்பட்டது. நிலமெல்லாம் காக்கப்பட்டதன் அடையாளமாய்ச் சிலிர்த்து நிற்கின்றன. இவ்வளவும் காக்கப்பட்ட நிலையில் எனது இழப்பை நினைத்து மட்டுமே வருத்தப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. இக்காப்பிற்கானதே அவ்விழப்பு. எனவே, இழப்பினைத் தன்னுள்ளிருந்து பிய்த்து எடுப்பதும் எடுத்த இடத்தில் பக்கு மேவப் புதுத்தோல் பரவி விரிவதுமே தேவை.

வீரர்களின் குருதியில் தோய்ந்த துணிகள் தீபங்களில் திரியாய் எரிந்துகொண்டிருந்தன. பந்தங்களில் ஒளிவீசிக்கொண்டிருந்தது. எரிந்து மறைதலும். ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு. இருளை விலக்கத்தான் முடியும்; அழிக்க முடியாது. ஒளிகொண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்.

கொற்றவையின் கூத்துக்களம் நோக்கி வழியெங்கும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. எல்லாம் ஒளிவீசும் வீர நினைவுகள். சுடரைத் தொட்டுவணங்கியபடி கூட்டங்கூட்டமாய் மக்கள் கூத்துக்களம் நோக்கி வந்தவண்ணமே இருந்தனர். பறம்பின் அத்தனை ஊர்களிலிருந்தும் சாரிசாரியாய் வந்துகொண்டிருந்தனர். குருதியாட்டு விழா தொடங்குவதுதான் இன்று; முடிவது என்றென யாராலும் கணிக்கமுடியாது. காட்டில் எத்தனை வகைக் கள்ளுண்டோ அத்தனையையும் குடித்து, கறிவகைகளை விடாது கடித்துண்டு, ஆட்டமும் பாட்டுமாய் இவ்விழா பலநாள்கள் நீடிக்கும். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

பறம்பின் தென்னெல்லையிலிருந்து வடவெல்லைவரை உள்ள ஊர்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வந்து திரும்ப முடியாது. எனவே, மக்கள் இரவும் பகலுமாக நாட்கணக்கில் வந்துகொண்டே இருப்பர். உள்ளங்கையில் பிடித்து வைத்திருக்கும் மணல் ஆற்றுநீருக்குள் கரைந்து மறைவதைப் போல விழா மகிழ்வில் கண்ணீர்த்துளி தனது போக்கில் மறையும். அதுவரை குருதியாட்டு விழா தொடரும். 

கொற்றவையின் கூத்துக்களத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ள வட்டப்பானையில் நிறைநீர் தளும்பியிருக்கும். ஈன்றெடுத்த குழந்தையை அப்பானை நீரில் மிதக்கவிட்டபடி எள்முனையால் அதன் மார்பினைக் கீறுவர். துளிர்த்து மேலெழும் செங்குருதி நீரில் பரவியபடியிருக்க குழந்தையை வெளியில் எடுத்துவிடுவர். பின்னர், செந்தினையைக் குருதியோடு கலந்துவைப்பர். பிள்ளையை ஈன்றெடுத்த தாய் அக்குருதிச்சோற்றினைப் பிசைந்து கொற்றவைக்குப் படையலிடுவாள். மறுதலைமுறைக்கு மண்ணையும் மக்களையும் காத்தளித்தவளுக்குப் புதிய மனிதர்களின் குருதிகொண்டு செய்யும் நன்றிக்கடன் இது. குருதிச்சோறு ஊட்டப்பட்டவுடன் துணங்கை ஆட்டம் தொடங்கும்.

போர்த்துணங்கை கொற்றவைக்கு உரியது. குரவை ஆட்டம்போல ஆணும் பெண்ணும் தழுவியாடும் ஆட்டமல்ல இது. வெறிகொள் மாந்தர் சினந்தாடும் வெற்றிக்கூத்திது. முழவுதான் துணங்கைக்குரிய இசைக்கருவி. அதனுடன் ஆனைப்பறையை மட்டும் இணைத்துக்கொள்ளலாம். இருளேறிய கணத்தில் எவ்வியூரின் மேற்பாறையிலிருந்து மொந்தைக் குடமுழவம் இசைக்கப்படத் தொடங்கியது. குலநாகினிகள் கூத்துக்களம் நோக்கிப் புறப்பட்டதன் அடையாளம் அது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

நாகினிகளின் முன்னே வெறிகொள் பாவையர் சுழன்றாடுவர். அவர்கள் அணிந்துள்ள மாலைகளில் உள்ள மலர்கள் முற்றிலுமாக உதிர்ந்துவிழும் வரை சுழன்றாடுவர். எதிரிகளின் கபாலமேந்தி சிலர் ஆடிவருவர். கபாலக்கூத்துக்கு மணிமுரசம் முன்செல்லவேண்டும். வெற்றியின் உச்ச ஆட்டம் அது. ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு வகையான ஆட்டத்தோடு கூத்துக்களம் நோக்கி வந்துகொண்டிருந்தனர் பெண்கள். காடெங்கும் ஒளிசிந்திக்கொண்டிருந்த முழுநிலவுக்குக் கேட்டுத்திரும்பியது துணங்கைக்கான முழவொலி. நள்ளிரவு வரை வெறியாட்டம் ஆடி வந்துகொண்டே இருந்தனர் மக்கள். மூவேந்தர்களை வென்று முடித்த வெற்றிவிழாவை ஆடித்தீர்க்க இருகால்கள் போதவில்லை.

நாகக்கரட்டின் மேலே பறம்புப்படைகள் தங்கியிருந்தன. ஆனால், அவற்றுக்குப் பின்னால் இரலிமேட்டின் குகைகளில் முதுவேலன் இருந்தான். அதற்கு மேல் காரமலையின் உச்சிமுகட்டுக்குச் சற்றே கீழ்நிலையில் இருந்தபடி போரினை முழுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் பெண்கள். கீழே, தட்டியங்காட்டில் போரிடும் பறம்பு வீரர்கள் பொதுப்படையாகத் தெரிவர். தனித்த உருவம் தெரியாது, எந்த ஒருவனையும் அடையாளங்கண்டுவிட முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தனர். தட்டியங்காட்டுத் தாக்குதலின் தன்மையையும், குளவந்திட்டிலிருந்து பாரி உத்தரவு எழுப்புவதையும் நாகக்கரட்டிலிருந்து வாரிக்கையன் ஒலிக்குறிப்புகளை அனுப்புவதையும் அவர்கள் உச்சியிலிருந்து பகலெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இரவானதும் யாராவது ஒருத்தி ஒப்பாரிப் பாடலைப் பாடுவாள். அந்தப்பாடல் பெயர் அடையாளமற்று, உருவ அடையாளமற்று வீரத்தை மட்டுமே உருவகப்படுத்தி இருந்தது. எதிரிகளை கணக்கேயில்லாமல் கொன்றழித்த பறம்புவீரன் குருதிபெருக மண்ணில் மாண்டுவிழுவதைப் பற்றிய பாடலது.  அப்பாடலில் பாடப்படும் வீரன் தன் கணவனாகவோ, மகனாகவோ, காதலனாகவோ, தந்தையாகவோ, உடன்பிறந்தவனாகவோ இருப்பானோ என்ற எண்ணம்வராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும் எல்லோரின் மரணத்தையும் மன அளவில் ஒவ்வோர் இரவிலும் சுமந்து கடந்து வெளிவந்து கொண்டிருந்தனர். வீரர்களின் குருதி பெண்களின் கைகளில் இரவெல்லாம் படிந்திருந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

எவ்வளவு கொடிய தாக்குதல் நடந்தாலும் யார் இறந்தாலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிக் கீழே போகக்கூடாது. கரியனூர் பெரியாத்தாதான் எல்லைக்காவலாக நின்றிருந்தாள். இளவயதுக்காரிகள் சில நேரங்களில் துக்கம் தாங்காமல் நான் போய்ப் பார்க்கவேண்டும் என்று துடித்துப் புறப்படுவார்கள். அவர்களையெல்லாம் தடுத்தாட்கொள்ள வேண்டும். காரமலையின் மேல்விளிம்பில் பெண்களின் கண்ணீர், உருளமுடியாத பெரும்பாறையாக உருத்திரண்டு நின்றிருந்தது. பால்கட்டிய மார்பென நீர்கட்டி நின்றன விழிகள்.

ஆறாம் நாள் நள்ளிரவு கூவல்குடியினர் எழுப்பிய ஓசை மலையெங்கும் எதிரொலித்தது. ஆறுநாட்களும் இறந்த யாருடைய பெயரும் அறிந்திராத பெண்கள் தேக்கனின் மறைவைக் கூவல்குடியினர் சொல்லக்கேட்டு நடுங்கிப்போயினர். அதுநாள் வரை யாரையும் எல்லைதாண்ட விடாமல் காத்து நின்ற கரியனூர் பெரியாத்தா தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, எல்லைதாண்டி இரலிமேட்டினை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

அவளைப் பிடித்து நிறுத்துதல் எளிய செயலன்று. எல்லோரும் எவ்வளவோ முயன்றும் அவளை நிறுத்த முடியவில்லை. நாகினிகள் யாரும் இங்கில்லை. அவர்கள் எல்லோரும் எவ்வியூரில் இருந்தனர். பெரியாத்தாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தேக்கனின் மரணத்தைத் தாங்கிக்கொள்ளும் திடம் பறம்பில் யாரிடமும் இல்லை. இம்மலையின் பேராசான் போர்க்களத்தில் மாண்டான் என்பதை எப்படி நம்புவது? பெண்கள் ஏது செய்வதென்று தெரியாமல் திணறி நின்றனர். 

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

“இங்குள்ள பெண்கள் எல்லோருக்கும் தாய் நீ. மார்பில் அடித்து நீ கதறுவதை இளம்பிள்ளைகள் எப்படித் தாங்குவார்கள்? தேக்கன் தெய்வத்துக்கு நிகரானவன். அவனது மரணத்தை மனிதர்களான எங்களால் எப்படித் தாங்கமுடியும்? எங்களை ஆற்றுப்படுத்தவேண்டிய நீயே எல்லையைத் தாண்டினால் மற்றவர்களால் என்ன செய்யமுடியும்? துக்கத்தை வாயால் சொல்லித் துடித்தழு. அதை விடுத்து எல்லைதாண்டி முன்னகராதே” என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தனர். ஆனால், அவளை யாராலும் தடுக்கமுடியவில்லை. 

இறங்கிக்கொண்டிருந்த அவளை நோக்கி இறுதியாக இறங்கிவந்தாள் ஆதினி. என்ன சொல்லிப் பெரியாத்தாளை நிறுத்தப்போகிறாள் என்பதறியாது மற்ற பெண்கள் பார்த்துக்கொண்டி ருந்தபொழுது, அவளருகில் சென்று ஆதினி சொன்னாள். “மயிலாவுக்கு வலி கூடியிருக்கிறது. குழந்தை பிரண்டிருக்கும் என்று நினைக்கிறேன். வந்து எடுத்துக்கொடு.”

அதிர்ந்து நின்றவள் கண்ணீரைத் துடைத்தபடி, எல்லோரையும் விலக்கிக்கொண்டு “ஏம்மகளே…!” எனக் கத்தியபடி மயிலாவை நோக்கி ஓடினாள் பெரியாத்தா.

நிலவின் மஞ்சள் ஒளியில் காடே ஒளிர்ந்துகொண்டிருந்தது. கூத்துக்களம் நோக்கித் தன் பிஞ்சுமகவைத் தூக்கிவந்தாள் மயிலா. அவளைச்சுற்றி எண்ணற்ற தோழிகள் இருந்தனர். ஆனாலும் அங்கவைதான் அவளை முன்னடத்தி வந்தாள். ஆதினியும் மற்ற பெண்களும் அவளின் வருகையை எதிர்பார்த்துக் கூத்துக்களத்தில் காத்திருந்தனர்.

ஆண்கள், பெண்களுக்கு அப்பால் நின்றிருந்தனர். விரிபலகையில் நீலன் அமர்ந்தி ருந்தான். காயங்கள் இன்னும் முழுமையாக ஆறவில்லை. அவனது வலப்புறம் கபிலர் அமர்ந்திருந்தார். இடப்புறம் முடியன் அமர்ந்திருந்தான். அவர்களுக்குப் பின்னால் உதிரனும் விண்டனும் நின்றிருந்தனர். காலம்பன் மற்ற பெரியவர்களுடன் எதிர்த்திசையில் அமர்ந்திருந்தான். முன்னும் பின்னுமாக, பறம்பெங்குமிருந்து வந்த கூட்டம் மொய்த்துக்கிடந்தது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

கூத்துக்களத்தின் நடுவிலிருந்த வட்டப்பானையில் நிறைநீர் தளும்பிக்கொண்டிருந்தது. அருகில் வந்த மயிலா நீருக்குள் தன் மகவை மெள்ள உள்ளிறக்கினாள். பெண்கள் குலவையிடத் தொடங்கினர். பறம்புக்கு ஆசானான தேக்கன் இல்லாததால் முடியன் எழுந்துவந்தான். விரல் இடுக்கிலிருந்த எள்முனைகொண்டு மகவின் மார்பில் சிறுகீறலை உருவாக்கினான். குழந்தை அவனைப்பார்த்து வீறிட்டபொழுது குருதி நீருக்குள் கலந்திருந்தது. குலவையொலி எங்கும் பெருக மகவை பானையிலிருந்து மேலெடுத்தாள் மயிலா. தோழிகள் செந்தினையைக் கூடையில் கொண்டுவந்தனர். அதனை இருகைகளிலும் அள்ளி, குருதிநீரில் கலந்தாள். குலவையொலி மேலும் கூடியது. போர்க்களத்தில் மாண்டோரின் குருதிகொண்டு பிசையப்படும் பலிச்சோறது. நான்கு முறை கைகளால் அள்ளிப் போட்டவள். ஐந்தாம்முறை தினையை அள்ளும்பொழுது, “வேண்டா. அவ்வளவுதான் இருக்கும்” என்று சொல்லிவிட்டு, தனது இடம் நோக்கி நகர்ந்தான் முடியன்.

வீரன் ஒவ்வொருவனின் குருதியாலும் ஒவ்வொரு தினையைப் பிசைந்து கொற்றவைக்குப் பலிச்சோறிடும் நிகழ்விது. இறந்த வீரர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு நான்கு பிடியோடு நிறுத்தினான் முடியன். பிசைந்து முடித்து பலிச்சோற்றினைக் கொற்றவைக்குக் கொடுக்கும் சடங்கு தொடங்கியது. குருதியாட்டு விழா அதன் உச்சத்தை நெருங்கியது. குலவையொலி மேலும் மேலும் கூடியபடியிருக்க மயிலா பலிச்சோற்றினை எடுத்து கொற்றவையின் அடிவாரத்தில் வீசத் தொடங்கினாள்.

வீசிய கணம் போர்த்துணங்கைக்கான முழவின் ஒலி பீறிட்டு எழுந்தது. குலவை ஒலியும் முழவின் ஒலியும் இணைந்து இருட்டையும் காட்டையும் மிரட்டிய வேளையில் பெண்களின் துணங்கை ஆட்டம் தொடங்கியது. போர்த்துணங்கைக்கான ஆட்டத்தில் ஒவ்வொரு பெண்ணாக ஆடத் தொடங்கினர். ஆட்டத்தினூடே பலிச்சோற்றினை அள்ளி, கொற்றவையை நோக்கி வீசினர் பெண்கள். புதுமகவின் குருதியால் கொற்றவைக்கு நன்றிசொல்லல் இது. 

மனதின் ஆழத்தில் உறைந்துகிடக்கும் துயரத்தின் வலியைப் பிடுங்கியெறிய வலிமைகொண்டு ஆடினர். நேரமாக ஆக முழவின் ஓசையில் காடு நடுங்கியது. அப்போது ஆனைப்பறை முழங்கத் தொடங்கியது. அணங்குகள் இறங்கத் தொடங்கினர். வெறிகொள் பாவையர் சுழன்றாடினர். துணங்கையாடும் பெண்களிடமிருந்து விலகி நின்று வணங்குதலே மரபு. கூட்டம் முழுமையாக விலகி நிற்கமுடியாமல் திணறிக்கிடந்தது. வந்திருந்த பெண்கள் எல்லோரும் ஆடத் தொடங்கினர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அணங்கு இறங்கி ஆடத் தொடங்கியது. ஆட்டத்தினூடே குலநாகினிகள் தனித்து எழுப்பும் குலவையொலி மேலெழ, கூட்டம் இடங்கொடுத்து விலகியது. அவ்வொலி கேட்டதிலிருந்து முழவுகளின் ஓசை சிறிதுசிறிதாகக் குறையத் தொடங்கியது. அணங்கிறங்கியவர்களும் தங்களது ஆட்டத்தைக் குறைத்தனர்.

பலகையில் உட்கார்ந்திருந்த கபிலர் என்ன நடக்கிறது என்பதை அறிய எட்டிப்பார்த்தார். குலநாகினிகளின் நடுவே நீராடி மேலெல்லாம் குருதி பூசியபடி வந்துகொண்டிருந்தான் வேள்பாரி. கூட்டத்தின் ஓசை நன்றாகக் குறைந்தது. அவன் வந்து கூத்துக்களத்தின் நடுவே நின்றான். முழவுகளின் ஓசை முழுவதுமாக நின்றது.

உட்கார்ந்திருந்த கபிலருக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை. எழுந்து நின்றார். பாரியின் கைகளில் வில் இருந்தது. குருதியாட்டு விழாவுக்கு ஏன் வில்லேந்தி வந்துள்ளான் பாரி என்பது கபிலருக்குப் புரியவில்லை. குலநாகினிகள் அம்பொன்றை அவன் கைகளில் கொடுத்தனர். அதன் முனையில் பூச்சூடி இருந்தது. அதனை வாங்கினான் பாரி. வாங்கிய கணம் அவனது உடல் சிலிர்த்து அடங்கியது. கண்களை ஒரு கணம் மூடினான். அந்த அம்பு தேக்கன் தனக்குள் செலுத்திக்கொண்ட அம்பு.

தேக்கனின் நினைவோடு கண்களைத் திறந்தபொழுது குருதியின் நிறங்கொண்டிருந்தன கண்கள். அவன் அம்பினை நாணில் பூட்டி இழுத்தான். குலநாகினிகள் குலவையொலி எழுப்பினர். பெண்கள் பேராசானை நினைத்து, கைகளை உயர்த்திக் கதறினர். பாரி அம்பினை விடுவித்தான். கொற்றவை குடிகொண்டுள்ள மரக்கூட்டத்துக்குள் அம்பு பாய்ந்து மறைந்தது. ஆசான் தனக்குள் செலுத்திக்கொண்ட அம்பினை மீண்டும் தனக்குள் செலுத்திக்கொண்டது பறம்பு.

எழுந்த குலவையொலியோடு முழவின் ஓசை இணைந்துகொண்டது. குலநாகினிகள் அடுத்து மூவிலைவேலினைப் பாரியிடம் கொடுத்தனர். வேலினை வாங்கினான் பாரி. எழுந்த ஓசை முன்னிலும் பலமடங்கு அதிகரித்தது. பாரியின் உடலில் ஒவ்வொரு நரம்பும் விசையைக்கூட்டியது. கண்கள் கலங்கின. ஒரு மாவீரனைப் போற்றும் கணமிது. அவனது நினைவை நெஞ்சில்  ஏந்தியபடி மூவிலை வேலினைத் திருப்பிப்பிடித்து கூத்துக்களத்தின் முன்னிலத்தில் ஓங்கிக்குத்தி மண்ணுள் இறக்கினான். நிலமிறங்கிய வேலின் கைப்பிடி அதிர்ந்து ஆடிக்கொண்டிருக்க, அதற்குப் பூமாலை சூட்டினர் நாகினிகள். இனி காலம் உள்ளவரை நடப்பட்ட மூவிலைவேலின் வழி வணங்கப்படுவான் இரவாதன்.

வேலினை ஊன்றிய கணத்தோடு அவ்விடம் நிற்கமுடியாமல் வெளியேறி கபிலரின் அருகில் வந்தமர்ந்தான் பாரி. துணங்கை ஆட்டம் முன்னிலும் வேகங்கொண்டது. முழவுகள் பேரோசையை எழுப்பின. கூட்டம் கூடிக்கொண்டேயிருந்தது. துணங்காடிய பெண்களைத் தங்களின் இரு கைகளைக்கொண்டு விலக்கித் தள்ளினர் குலநாகினிகள். ஆனால், ஆடும்பெண்கள் எளிதில் நகர்வதாக இல்லை. பேரொலி எழுப்பிய குலநாகினிகள் அவர்களைப் பிடித்துத் தள்ளி இடம் அமைத்துக் கொடுத்தனர்.

அங்கு நடப்பதைப் பார்க்கக் கூட்டம் முண்டியடித்து முன்னேறியது. பாரி வந்ததும் அமர்ந்த கபிலர் மீண்டும் எழுந்து நின்று பார்த்தார். இளம்பெண் ஒருத்தி தனியே ஆடிக்கொண்டிருந்தாள். ஆனால் துணங்கை ஆடும் மற்ற பெண்களைப்போல அவள் ஆவேசங்கொண்டு ஆடவில்லை. தலையை மட்டும் ஆட்டி ஆட்டி மெள்ள ஆடிக்கொண்டி ருந்தாள். அவளுக்கு முன்னால் குலநாகினிகள் கைகுவித்து வேண்டியபடி நின்று கொண்டிருந்தனர்.

பார்த்துக்கொண்டிருந்த கபிலருக்கு எதுவும் புரியவில்லை. சூழ்ந்திருந்த பெண்கள் பேரோசை எழுப்பினர். கூட்டத்தினரின் குலவையொலி மேலும் மேலும் பன்மடங்காகியது. ஆடியவளின் முன்னால் பச்சைமண் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுதுதான் அது வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதைப் பார்த்தபடி நின்று அந்தப்பெண் ஆடிக்கொண்டிருந்தாள். குலவையொலி மேலும் கூடியது. எந்நிலையிலும் கண்ணீர் சிந்தாத குலநாகினிகள் கைகுவித்துக் கண்ணீர் மல்க வேண்டி நின்றனர்.

கூட்டதினூடே அங்கு நடப்பது கபிலருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. சற்றே தலையை நிமிர்த்தி எட்டிப்பார்த்தார். குலநாகினிகளின் வேண்டுதலை ஏற்று அப்பெண் மண்சிலைக்கு அருகிலிருந்த எதையோ எடுக்கத் தொடங்கினாள். நாகினிகள் குலவையிடத் தொடங்கினர்.  இதுவரை இல்லாத அளவு வெளிவந்துகொண்டிருந்தது பேரோசை. எடுத்தவள் தன் காதுகளில் அதை அணிந்துகொண்டாள். கூட்டத்திலிருந்த ஒவ்வொருவரும் குலவையொலியைப் பன்மடங்காக்கினர்.

அவள் மீண்டும் தலையை மெள்ள ஆட்டத் தொடங்கினாள். பின்புறமிருந்து பார்த்துக்கொண்டிருந்த கபிலருக்கு நீண்டநேரங் கழித்துதான் புரியத் தொடங்கியது. அவள் காதில் அணிந்தது மகரக்குழைக் காதணி. புதிய மண்சிலையில் நினைவினை இறக்கி நடத்தப்பட்ட வழிபாட்டுச்சடங்கு பொற்சுவைக்கானது. அதை உணர்ந்த கணத்தில் கபிலரின் மேலெல்லாம் வியர்த்துப் பொங்கியது. கண்களில் நீர்பெருக, கூட்டத்தை விலக்கிச் சடசடவென உள்ளே நுழைந்தார். பெண்கள் மட்டுமே ஆடும் களத்தில் கபிலர் ஏன் உள்ளே நுழைகிறார் என்று மற்றவர்கள் சிந்தித்து முடிக்கும் முன் கூத்துக்களத்தின் முன்னிலையை அடைந்தார்.

மகரக்குழை இருகாதுமடல்களிலும் தொங்க ஆடிக்கொண்டிருந்தவளின் முகத்தைப் பார்த்தார். குலவையொலியினூடே அவள் கண்களை இறுக மூடியிருந்தாள். தானும் கண்மூடினார் கபிலர். அவரின் கண்களிலிருந்து நீர் பொங்கிவந்தது. மண்டியிட்டு அவளின் காலினைத் தொட்டு வணங்கினார் கபிலர்.

அமர்ந்திருந்த பாரி எழுந்து வேகமாகக் கூட்டத்துக்குள் நுழைந்தான். உயிர்துறக்கும் பொழுது தனது மடியில் கிடந்த பொற்சுவையின் காலடியைத் தொட்டு வணங்கிய கபிலர் அவ்விடம் விட்டு எழமுடியாமல் அப்படியே கிடந்தார். பாரி அவரைக் கைபிடித்துத் தூக்கினான்.

துணங்கை ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முழவுகள் ஒலியெழுப்பத் தொடங்கின. பெண்கள் சுழன்றாடினர். கபிலரை அழைத்துவந்து நீலனின் அருகில் அமரவைத்தான் பாரி. உணர்ச்சியின் கொந்தளிப்பில் இருந்தார் கபிலர். துணங்கை ஆட்டம் உணர்வுநிலையைக் கூட்டிக்கொண்டேயிருந்தது. கூட்டத்திலிருந்த சங்கவை, தந்தையைத்தேடி அருகில் வந்தாள். பாரி அவளைத் தூக்கி, தனக்கும் கபிலருக்கும் நடுவில் உட்காரவைத்துக்கொண்டான். கபிலரின் கைகள் சங்கவையின் தலையைக் கோதிவிட்டன. அவள் இடப்புறமாகத் திரும்பி கபிலரைப் பார்த்துப் புன்முறுவலோடு அவரின் தாடியைச் சட்டென வருடிவிட்டபடி கூத்துக்களத்தைப் பார்த்துத் திரும்பிவிட்டாள்.

நீண்டநேரமாக உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்த கபிலரின் முகம் சற்றே மாறத் தொடங்கியது. சங்கவையின் சிறுகுறும்பு அவரின் மனநிலையை மாற்றத் தலைப்பட்டது. சினமாந்தர்கள் ஆடும் போர்த்துணங்கை இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. கபிலருக்கு வாரிக்கையனின் நினைவு வந்தது. அவரை கூத்து தொடங்கியதிலிருந்து பார்க்க வில்லையே என்று சிந்தித்தபடி பாரியிடம் கேட்டார், “வாரிக்கையன் எங்கே?”

“இன்னும் சிறிதுநேரத்தில் வந்துவிடுவார்.”

“பொழுது நள்ளிரவை நெருங்கப்போகிறது. பறம்புநாடே இங்கிருக்கையில் அவர் மட்டும் எங்கே போயுள்ளார்?”

“அவருடன் முதுவேலனும் சேர்ந்து போயுள்ளார்” என்றான் பாரி.

எங்கு என்று மட்டும் சொல்லாமல் வெளிவந்துகொண்டிருந்தன பாரியின் சொற்கள். வழக்கமாக அதைப் புரிந்துகொள்பவர்தான் கபிலர். ஆனால் இன்றைய உணர்வுநிலையில் சொற்களின் துல்லியத்தின் மீது பயணிக்கும் நிலையில் அவர் இல்லை. “வாரிக்கையன் எங்குதான் போயுள்ளார் பாரி?” எனக் கேட்டார்.

பாரி சொன்னான், “நான்காண்டுக்கு ஒருமுறை ஒளிவாள் இறங்குமல்லவா, ஆதிமலையின் பெருங்கடவு. அங்கே போயுள்ளார்.”

‘அங்கு எதற்கு?’ எனச் சிந்தித்தபடியே கேட்டார், “இதுபோல அங்கேதும் கூத்து நடக்கிறதா?”

“தேக்கனும் இரவாதனும் பொற்சுவையும் நிலைகொள்ளவேண்டிய இடம் இதுதான். ஆனால் திசைவேழர் நிலைகொள்ள வேண்டிய இடம் அதுதானே. அதனால்தான் திசைவேழர் பயன்படுத்திய நாழிகைக்கோலினை எடுத்துக்கொண்டு அங்கு போயுள்ளனர் வாரிக்கையனும் முதுவேலனும்.”

உறைந்த உணர்வு மீண்டும் வெடித்து மேலெழுவது போல இருந்தது. சங்கவையைக் கடந்து பாரியின் தோள்நோக்கிப் போனது கபிலரின் கை.

அக்கையை இறுகப்பிடித்த பாரி சொன்னான், “அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும். எம் மக்களை ஆளட்டும். எம்மை ஆளட்டும்.”

சொல்லிமுடிக்கும் பொழுது முழவின் ஒலியோடு மீண்டும் குலவையொலி இணைந்தது. அனைத்துப் பெண்களும் பெருங்குலவையை வெளிப்படுத்தியபடி துணங்கை ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

கள்ளும் ஊனும் சேர பாணர்கூத்து தொடங்கும் நேரம் நெருங்கியது. உணர்வால் இறுக்கப்பட்டிருந்த கபிலர் மீண்டுவர முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். கூத்தர்களும் பாணர்களும் களம்புக ஆயத்தமாயினர்.

முழவினை வெளியேற்றிவிட்டு மற்ற இசைக்கருவிகளை உள்ளெடுத்து வரத் தொடங்கினர். கஞ்சத்தாலான குமுழுவம், கருங்காலியாலான இடக்கை, செங்காலியாலான சல்லியம், வேம்பாலான மத்தளம் ஆகியவற்றைக்கொண்டு இசைவாணர்கள் கூத்துக்களத்தைச் சுற்றி வட்டமிட்டு நின்றனர்.

எண்ணற்ற பாணர் குழுக்கள் வந்து சேர்ந்துள்ளன. துணங்கைக்கூத்து முடிவதற்காகத்தான் அனைவரும் காத்திருந்தனர். இப்பொழுது களம்புகுந்தனர். செம்மேழிப் பாணர் கூட்டத்தின் பெயர் சொல்லி உரக்கக் கத்தினான் நீலன். நீலனின் குரல் கேட்ட கணம் கூத்துக்களம் மொத்தமும் அமைதியடைந்தது. என்ன சொல்லப்போகிறான் நீலன் என்பதை அறிய அனைவரும் ஆவலோடு அவனைப் பார்த்தனர். கூட்டத்துக்குள் இருந்த மயிலா குழந்தையோடு மீண்டும் முன்னால் வந்து எட்டிப்பார்த்தாள். அனைவரின் பார்வையும் நீலனின் மீது இருந்தது. அவன் திரும்பி கபிலரைப் பார்த்தான். கலங்கி உறைந்த முகம் அப்படியே இருந்தது.

ஒரு கணத்தில் இம்முகத்தை மலரச்செய்ய என்னால் முடியும் என்பது போல் இருந்தது அவனது பார்வை. கபிலரிடமிருந்து பார்வையை விலக்கி பாணனைப் பார்த்துச் சொன்னான், “பனையன் மகனே பாடலைப் பாடுங்கள்” 

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

சொல்லிய கணம் கூட்டத்தின் பேரொலி விண்ணை முட்டியது. கபிலரின் முகம் மறுகணமே மாறத் தொடங்கியது. தான் பறம்புக்குள் நுழைய வேட்டுவன் பாறையில் கால்வைத்த முதல்நாள் நீலன் சொன்னான், “முழுநிலவு நாளில் பனையன் மகனே பாடலைப் பாடினால் பறம்பு நாடே எழுந்து ஆடும்.”

நீலன் அன்று சொன்ன சொற்கள் நினைவுக்குள்ளிருந்து மேலெழுந்து வந்தது. குறிஞ்சி நிலத்துக்குரிய தொண்டகச் சிறுபறையைத் தனது இடுப்பில் கட்டியிருந்த முதுபாணன். கூத்துக்களத்தை வட்டமடித்தபடி உள்ளே நுழைந்தான். முழுநிலவு பொழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் ஆரவாரம் பெருகத் தொடங்கியது. பாணர்கள் எல்லோரும் இசையாலும் குரலாலும் இணையத் தொடங்கினர். பாடல் தொடங்கிய கணத்தில் பறம்பே எழுந்து ஆடத் தொடங்கியது.

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நின்

பறம்பு நிலமும் படர்ந்த காடும்
தவழும் காற்றும் தழலும் வானும்
அண்டுவார் தம்மை அணைக்கும் தாய்மடி
அளவிலா அன்பைப் பொழியும் தொல்குடி

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – உனக்கு

கோலு மில்லை குடையு மில்லை
கொடியு மில்லை முரசு மில்லை
நிகர்பகை யில்லை பழியு மில்லை
நின்னை வெல்வோர் யாருமில்லை

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நீ

அழிக்கும் செந்நாய்க்கு ஆளி யாவாய்
அழியாப் பகையை ஏற்ற எதிரிகள்
சூது செய்யினும் சூழ்ந்து தாக்கினும்
ஏது மற்றவராய் இழந்தே செல்வர்

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நீ

வையைக் கழிமுக வைப்பூர் எரித்தாய்
திரையர் குலத்தைத் தீதின்றி மீட்டாய்
எழுவனாற்றில் இறங்கிய படையை
எளிய பூச்சியால் அழித்தே ஒழித்தாய்

சிறுகாது முயலின் குருதி தோய்த்து
பெருவேந்தர்களை நடுக்குறச் செய்தாய்.
வேளிர் குலத்தின் பாழியைக் காத்தாய்
சேரனை வென்று குதிரைகள் சேர்த்தாய்

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நீ

நீயாய்ப் பிறர்மேல் நெல்முனையும் வீசாய்
எல்லை கடந்தவர் ஏறி வந்திடின்
கொற்றவைக் களத்தில் வஞ்சினம் உரைப்பாய்
செருக்களம் வென்று செங்குருதி குளிப்பாய்

வேந்தர் படையை வெல்வா யென்றே
கருங்கிளி நிமித்தம் கழறிய பின்னரும்
போரினை வெறுத்தாய்; பொறுமை காத்தாய்
நீலனை மீட்கவே நெடும்படை ஒறுத்தாய்

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே – நீ

முருகன் வள்ளி முடிச்சிலொரு கண்ணிநீ
எவ்வி சோமா இணைப்பிலொரு பின்னல்நீ
சூலிவேள் தூதுவை பின்னலின் தொடர்ச்சிநீ
தேக்கனும் பழையனும் விட்டுச்சென்ற வீரம்நீ

பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - எம்

பாணர் வந்தால் பாடல் கேட்டும்
கூத்தர் ஆடினால் குளிர்மனம் கொண்டும்
இல்லை எனாது எல்லாம் வழங்கி
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே – நீ
பனைபோல் வாழ்க பனைபோல் வாழ்க.

முற்றும்

சு.வெங்கடேசன் 

வீரயுக நாயகன் வேள்பாரி - 111

வேள்பாரி வாசகர்களை ஒன்றிணைக்கவும், இத்தொடர் பற்றி உரையாடவும் சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்கியுள்ளோம். புத்தகம் தாண்டி வேள்பாரியின் சுவாரஸ்யங்களை அதன் மூலம் நீட்டிக்க வேண்டுமென்பதே நம் எண்ணம். வாசகர்கள் கீழ்க்காணும் ஃபேஸ்புக் குழுமத்தில் இணைவதன் மூலமும் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்வதன் மூலமும் வேள்பாரியுடன் இணைந்துகொள்ள வரவேற்கிறோம்.

www.facebook.com/groups/500337410392609/

www.twitter.com/Vikatanvelpari

அன்பு வாசகர்களே!

‘வீ
ரயுக நாயகன் வேள்பாரி’ தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ‘வேள்பாரி’ தொடர் குறித்த உங்கள் கேள்விகளை velpari@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பெயர் மற்றும் ஊர் குறிப்பிட்டு அனுப்பவும். தேர்வாகும் கேள்விகளுக்கு எழுத்தாளர் சு.வெங்கடேசன் பதிலளிப்பார்.