
குட்டி ரேவதிசந்திப்பு: வெய்யில் படங்கள்: கே.ராஜசேகரன்
‘விடிவதற்காய் ஒளிநூற்கும் என்குரல்
விடிவுச் சேலையை வெளியெங்கும்
வீசி மகிழும்’
என்று வெளிப்படுகிற தீவிரமான மனவெழுச்சியும் இசைமைகூடிய மொழியும் கொண்டவர் கவிஞர் குட்டி ரேவதி. நவீன இலக்கியத்தில், பெண்ணிய உரையாடல்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் இவருடையது. கவிதை, புனைவு, அ-புனைவு என எழுத்திலும், ஆவணப்படங்கள், திரைப்பாடல்கள், இயக்குநர் முயற்சி எனக் காட்சிக்கலை ஊடக வெளியிலும் சமூக அரசியல் களத்திலும் தொடர்ச்சியான இயக்கம்கொண்டவர். சமீபத்தில், 2018-ம் ஆண்டின் இலக்கிய ஆளுமைக்கான ‘அவள் விகடன்’ விருது பெற்றிருக்கிறார். தனது திரைப்பட வேலைகளில் மூழ்கியிருந்தவரை ஒரு முற்பகல் வேளையில் சந்தித்தேன். நம்மையும் தொற்றிக்கொள்ளும்படியான உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடுமிருந்தார்.
அவருடன் உரையாடியதிலிருந்து...

“பரவசமடைந்து கனவின் அடுப்பை மூட்டுகிறாய்
புகைச்சலைப் பொருட்படுத்தாமல் ஊதி ஊதிக்
கனலும் கவிதையின்
முதல் வரியைக் கண்டுகொண்டாய்’
இந்தக் கவிதை வரிகளில், கவிதை உருவாகும் விதம் குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. உங்களின் கவிதை உருவாக்க முறை இப்படிப்பட்டதுதானா?”
“ஆமாம். முன்னிலைத் தன்மையில் சொல்லப்பட்டிருந்தாலும், இவை என்னைப் பற்றிய என் வரிகள்தாம். கவிஞர்கள் பெரும்பாலும் பிறரிடம் பேசுவதைக் காட்டிலும் தன்னுடன்தான் அதிகம் பேசுகிறார்கள். அப்படியான மன உரையாடல் ஒரு படைப்பாளிக்கு மிக முக்கியமானது. அப்படியான வரிகள்தாம் இவை. ஒரு கவிஞர் எந்தச் சூழலிலும் கவிதை மனநிலையைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம். அன்றாட அலுவலின் ஓட்டங்களில், பல கவிதைத் தருணங்களை விட்டுவிடுவோம். அது நம்மைப் பதற்றத்திற்குள்ளாக்கும். புகைச்சல்களைப் பொருட்படுத்தாமல் நாம் உள்ளே கனலை மூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். கவிதைகள் எழுதுவதும் பிரசுரமாவதும் இரண்டாம்பட்சம்தான். ஒரு கவிதையோடு அதிக நேரம் பயணிப்பதுதான் முக்கியம்.”
“சிறுகதை, நாவல் உருவான கதைகள் பற்றிய உரையாடல்களில், புனைவெழுத்தாளர்கள் அதற்கான மூலக் கரு ஒன்று கிடைத்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உங்களைப் பொறுத்தவரை ஒரு கவிதை எந்தப் புள்ளியிலிருந்து உருவாகிறது?”
“புனைவுக்குத் தேவைப்படுகிற அப்படியான ஒரு கரு, கவிதைக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன். மேலும் கவிதை, வெளியிலிருந்து கிடைக்கும் ஒரு கருவின் வழியாக உருவாவதில்லை. புற வெளியையும் சேர்த்த அனுபவத்தில் உள்ளிருந்து எழுவது. அது உருவாகிற புள்ளி என்பது, ஒரு புதிய தன்மை… புதிய உணர்வு… புதிய அனுபவம்தான். உடலும் மனமுமாக இதற்கு முன்பு கிட்டாத ஓர் உணர்வை உணருமிடத்தில் கவிதை உருவாகிறது. அதை மொழிப்படுத்துவது வடிவமாக்குவது பின்பான செயல்முறை.”
“முதலில் குறிப்பிட்ட கவிதை வரிகளில் உள்ளதைப்போல, கனவுகள் உங்களுக்கு உதவுகின்றனவா? அவற்றை நீங்கள் கவிதைகளில் கையாளுகிறீர்களா? அல்லது கவிதைகளின் வழியே கனவுகளை உருவாக்க முயல்கிறீர்களா?”
“அந்தக் குழப்பம் இப்போதுவரை எனக்கு இருக்கிறது. கனவு – நனவு – புனைவு என்ற இந்த மூன்று நிலைகளுக்கிடையிலான இடைவெளி குறித்து எனக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது. இதில் காலமும் வெளியும் சேர்ந்துகொள்ளும்போது, இன்னும் சிக்கலாகிறது. ஆயினும், தனிமையில் இந்த மூன்றையும் மிக லாகவமாக என்னால் கையாள முடிகிறது. மற்றமையுடனான உரையாடலில்தான் இவை துல்லியப்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஒருவகையில் படைப்பு மனநிலைக்கான மயக்கமான முடிச்சுகள் இவை. இந்தக் குழப்பமும் வெளிமயக்கமும்தான் படைப்பு மனநிலைக்கு இடையறாது உதவிக்கொண்டே இருக்கிறது.”
“ ‘முகம் தீய்ந்த ஓவியமாய்த் தவிக்கிறது அதன் உட்பொருள்’ என்பது உங்கள் கவிதை வரிகள். சில நேரம் நனவிலி மனதினுடைய கொந்தளிப்பின் மொழிவடிவமாகக் கவிதை ஆகிறது. தங்களுக்கே முழுமையாக விளங்காத விளங்கிக்கொள்ள இயலாத படிமங்களை எழுதியதுண்டா?”
“இல்லை. அவை என்னுடைய உலகத்திலிருந்துதானே வருகின்றன. எனது அனுபவத்தை உங்களுக்குக் கடத்துவதில் நமக்கிடையே மொழிரீதியான இடைவெளி இருக்கலாம். ஆனால், என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள இயலாத படிமங்களை நான் எழுதியதில்லை. என் வாழ்வில் - உலகில் - இல்லாத உணர்வை, பொருளை நான் எப்படி எழுத முடியும்? கொண்டு கூட்டிப் பொருள்கொள்வதில் சிக்கல்கள் இருக்கலாம். ஆனாலும், நமது மொழியின் விசாலத்தில் அப்படிப் பொருள்கொள்ள இயலாத இருண்மைகள் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.”
‘ஒரு மத யானையின் நிழல்
என்னைத் தொடர்ந்து கொண்டேயிருந்தது’
என்ற வரிகளை ‘முலைகள்’ தொகுப்பிலேயே எழுதியிருக்கிறீர்கள். ‘மதயானை’ என்ற படிமம் உங்களோடு தொடர்ந்து பயணித்து வருகிறதே?!”
“ஆமாம். கவனித்திருக்கிறேன். சில காலத்திற்கு முன்புகூட காலசுப்பிரமணியன் அவர்களிடம் இதுகுறித்து உரையாடினேன். ‘மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கிற இந்த மதயானைகளைத் தவிர்க்கலாமா?’ என்று கேட்டேன். ‘தவிர்க்க வேண்டாம், அதை அனுமதியுங்கள். அது உங்கள் கவிதைகளுக்கு இன்னும் வலுச்சேர்க்கும்’ என்றார். ஒரு கவிதையில் ஏற்கெனவே எழுதிய படிமத்தை மீண்டும் எழுதிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருப்பேன். ஆயினும் மதயானைகள் தொடர்கின்றன. அதேசமயம், ‘மதயானைகள்’ குறித்த படிமங்கள் எல்லாக் கவிதைகளிலும் ஒரே அர்த்தத்தில் வருவதில்லை. அதன் பொருள் கவிதைதோறும் மாறிக்கொண்டும் ஆழப்பட்டுக்கொண்டும் வருகின்றன என்பதையும் கவனித்தவண்ணமே எழுதிச் செல்கிறேன்.”

“உணர்வுத் தீவிரமும் இசைமைகூடியதுமான உங்களது மொழிநடையை எங்கிருந்து எப்படிப் பெற்றீர்கள்?
“திருக்குறளும் சித்த மருத்துவப் பாடல் களும்தான் அதற்குக் காரணம். என்னுடைய பள்ளிக்காலத்தில் 1330 குறளையும் மனனம் செய்தேன். எங்கிருந்து எப்படித் தலைகீழாகக் கேட்டாலும் அந்தக் குறளைச் சரியாகச் சொல்வேன். சித்த மருத்துவக் கல்லூரிப் படிப்பிலும் பாடத்திலுள்ள அனைத்துப் பாடல்களையும் மனனம் செய்தாக வேண்டும். பாடத்தில் சுமார் 500 மூலிகைகள் உண்டு. வெற்றிலை, மஞ்சள் என ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு குணபாடம் குறித்த பாடல் உண்டு. அனைத்தையும் மனனம் செய்தாக வேண்டும். எந்த ஒரு சித்த மருத்துவருக்கும் 1000 பாடல்களுக்குக் குறையாமல் நினைவிலிருக்கும். இதில், மனனம் என்கிற இடம்தாம் மிக முக்கியமானது. ஒரு பாடலை, அது மொழியால் கட்டப்பட்டுள்ள இசைமையோடு மீண்டும் மீண்டும் உச்சரிக்கவும் நினைவில் வைக்கவும் மீண்டும் அதை எழுதவும் சொல்லவுமான பயிற்சி யிலிருந்துதான் என் கவிதைமொழி திரண்டது என்று நம்புகிறேன்.”
“சித்த மருத்துவ ஆர்வம் எப்படி வந்தது?”
“அதற்கு முக்கியமான காரணம் என் அப்பா சுயம்புலிங்கம்தான். தமிழ்மீதும், மருத்துவம்மீதும் ஆர்வம்கொண்டவர். பழந்தமிழ் இலக்கிய வாசகர். தமிழ்மொழி குறித்தும் மருத்துவம் குறித்தும் தனக்குத் தெரிந்ததை எப்போதும் சொல்லிக்கொண்டேயிருப்பார். அவருக்குக் கிடைக்காத கல்வி எனக்குக் கிடைக்க வேண்டும் என விரும்பினார். இரண்டு ஆண்டுகள் கடுமையாகப் போராடித்தான் சித்த மருத்துவக் கல்லூரியில் இருக்கை கிடைத்தது. அப்படியாக, வேண்டியதைப் பெறும் போராட்ட குணமும் உறுதிமனப்பான்மையும்கூட அப்பாவிடமிருந்து வந்ததுதான்.”
“இப்போது சித்த மருத்துவப் பணியில் ஈடுபடுகிறீர்களா?”
“இல்லை. ஆனால், ஆங்கில மருத்துவம் போலத் தொடர்ந்து அப்டேட் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லாதது சித்த மருத்துவம். ஒருமுறை கற்றுக்கொண்டாலே வாழ்க்கை முழுவதும் நீங்கள் மருத்துவர்தான். மருத்துவர் கு.சிவராமனின் மருத்துவ நிறுவனத்தைச் சிலகாலம் நான் கவனித்துக்கொண்டிருந்தேன். மருத்துவராக இயங்குவதைவிடவும் மருந்து செய்வதில்தான் எனக்கு அதிக ஆர்வம். தைலம், பற்பம், செந்தூரம், சூரணம் எனக் கிலோ கணக்கில் செய்வதில் ஒரு பேருணர்வு கிட்டும். எனது ஆசிரியர்களை இங்கே குறிப்பிட வேண்டும், மருத்துவர் சொர்ண மாரியம்மாள், மருத்துவர் செல்லதுரை, மருத்துவர் ராமசாமி ஆகியோர் இதில் பெரும் நிபுணத்துவம்கொண்டவர்கள். வேறு எந்த உலகியல் ஆர்வமும் அற்று அதில் ஈடுபட்டு வருபவர்கள். எனக்குள்ளும் அந்த ஈடுபாடு தொற்றிக்கொண்டது. ஒரு பெருமருந்தின் காலம் என்பது, 100 ஆண்டுகளுக்கும் மேல். எனவே, மருந்து செய்வது ஓர் அரும்பொருளை உண்டாக்குவது போல.”
“சமையல் செய்யக் கற்றுக்கொண்டபோது, அதன் பக்குவத்துக்கான காத்திருப்பில், கவிதைக்கு மிக நெருக்கமான ஒன்றாகச் சமையலை உணர்ந்திருக் கிறேன். உயிர்காக்கும் மருந்து செய்வது என்பது இன்னும் கூடுதலான உணர்வெழுச்சி தரக்கூடியது. அங்கே நீங்கள் கவிதையை உணர்ந்திருக்கிறீர்களா?”
“நிச்சயமாக. பாதரசத்தின் தன்மை என்பது சிதறியோடுவது; ஒன்றுசேர்க்க இயலாதது. அதை மூலிகைச் சாறுகொண்டு இறுக்கிக் கட்டுவதைத்தான் ரசக்கட்டு, ரசவாதம் என்கிறோம். இப்படித்தான், கவிதையில் சொல்லையும் உணர்வையும் ஒரு குறிப்பிட்ட கலவையில் ரசவாதம் செய்து படிமமாக்குகிறோம். பொருள், அளவு, கலவை என்பதைத் தாண்டி, இங்கே கைப்பக்குவம் மிக முக்கியம். சமையல், மருத்துவம், கவிதை மூன்றிலும் ‘லயம்’ என்பது ஒரு பொதுவான அம்சம், இல்லையா?!”
“தொடக்க காலத்தில் உங்களை அதிகம் பாதித்த கவிஞர் யார்?”
“வால்ட் விட்மன்! பாரதியை பாதித்தவர் என்ற அறிதலோடு அவரைத் தேடிச்சென்றேன். அவரது ‘புல்லின் இதழ்கள்’ நூல் திருநெல்வேலி மாநகராட்சி நூலகத்தில் கிடைத்தது. இன்றைப்போல் அன்று நூலை ஸ்கேன் செய்யவோ, மெஷினில் பிரதியெடுக்கவோ முடியாது. ஒரு சனிக்கிழமை என்பதாக நினைவு… காலையிலிருந்து மாலை வரை நூலகத்திலேயே அமர்ந்து நூலை முழுமையாக எழுதி, பிரதியெடுத்துக் கொண்டுவந்தேன். யாருடைய மொழிபெயர்ப்பு என்று நினைவில்லை. விடுதிக்கு வந்ததும் மீண்டும் மீண்டும் அக்கவிதைகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டேயிருந்தேன். அந்தக் கவிதைகள் அவ்வளவு பரவசத்தைத் தந்தன. இப்போது இதைக் குறிப்பிடும்போதும் உடலெங்கும் வரிகளின் உணர்வுகள் ஓடுவதுபோல இருக்கிறது.”
“எந்தவோர் ஆளுமைக்கும் அவரது பால்யமும் அதன் நினைவுகளும் ஆதாரமானவை. உங்களது பால்யம் எப்படிப்பட்டது?”
“மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. அப்பா அதற்கொரு முக்கியக் காரணமாக இருந்தார். மற்ற நினைவுகளைப்போல அல்ல, பால்யம் என்பது தனித்தன்மையுள்ள ஒரு நினைவுலகம். எப்போதும் நாம் மகிழ்ச்சியாகச் சென்று கண்டு வரக்கூடிய ஒரு வெளியாக அது நினைவின் தூரத்தில் இருந்துகொண்டேயிருக்கிறது. மேலும், அன்று நம்மிடம் வந்துசேர்ந்த மொழி, மிக நுட்பமாகத் தொடர்ந்து வேலைசெய்துகொண்டே இருக்கிறது. பயணம், வாசிப்பு, அனுபவம் என எதுவுமே அங்கு நிகழாதிருந்தது என்றாலும்கூட, அது நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கக்கூடிய செழுமையான வெளியாகத்தான் எந்த ஒரு தனிமனிதருக்கும் இருக்கக்கூடும்.”

“பொதுவாகக் கலைஞர்கள் பள்ளியிலிருந்து தப்பிக்க விரும்பியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிக் கல்வி உங்களை பாதித்ததா, வடிவமைத்ததா?”
“எனக்குக் கல்விக்காலம் பெரிய அளவில் உதவியது. பாடம், வகுப்பறை என்பதைத் தாண்டி, பள்ளி வளாகம் என்பது எனக்குப் பிடித்தமான இடமாக இருந்தது. பள்ளி முடிந்து இரண்டு மணி நேரம் நண்பர்களோடு விளையாடுவது முக்கியமானஅனுபவமாக இருந்தது. இயல்பிலேயே நன்றாகப் படிக்கிற மாணவி என்பதால், பரீட்சை, ரிசல்ட் என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. விளையாட்டு, கலை ஆர்வமென எதிலாவது கலந்துகொண்டு ஆசிரியர்களோடு பல்வேறு போட்டிகளுக்கும் விழாக்களுக்கும் சென்றுகொண்டிருப்பேன். எனக்கு மிகச்சிறந்த ஆசிரியர்கள் கிடைத்தார்கள். அவர்கள்தாம் தமிழ் ஆர்வத்தைத் தந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, பள்ளி முடிந்து நடந்து வீடுதிரும்பும் மாலைநேர அனுபவங்கள் ஆகப்பெரும் இன்பமாக இருக்கும்.”
“திருக்குறளை முழுமையாக மனப்பாடம் செய்ததாகச் சொன்னீர்கள். அன்றைக்கு அது ஒரு மாணவியின் மனனம் மற்றும் மொழியறிவு சார்ந்த திறமை மட்டுமே. இன்றைக்கு நீங்கள் ஒரு படைப்பாளி. அது பேசும் அறம் சார்ந்த நினைவுகள், அதாவது அறவியல் சிந்தனைகள், இன்றைய வாழ்வியலில் சமரசங்களின்போது உங்களைத் தொந்தரவு செய்கிறதா?”
“ஆமாம். மிக நுட்பமான கேள்வி இது. தமிழ் இலக்கியம் கற்றதின் வழியாக அறவுணர்வையும் அழகியல் உணர்வையும் மிக ஆழமாகப் பெற்றுக்கொண்டவள் என்று நம்புகிறேன். நீங்கள் என்னைச் சுட்டிக் காட்டினாலும் சுட்டிக்காட்டாவிட்டாலும் என்னுள் பதிந்துள்ள அறவுணர்வு என்னைத் தூண்டும், துன்புறுத்தும். அழகியல் உணர்வும் அப்படித்தான். நான் அழகியல் என்று வெளிப்படையான புற அழகை, அலகுகளைக் குறிப்பிடவில்லை. நேர்த்தி, திருத்தம், லயம் போன்ற விஷயங்களைக் குறிப்பிடுகிறேன். எனது பொறுப்புகளில் வேலைகளில் கலைகளில் சொற்களில் இவையெல்லாம் இல்லையென்றால் நான் மிகுந்த தொந்தரவுக்குள்ளாகிவிடுவேன். ஒரு படைப்பாளிக்கு மட்டுமல்ல, உண்மையில் எவர் ஒருவருக்கும் இவ்விரு உணர்வும் இன்றியமையாதது. அறவியல் என்னை வழிப்படுத்துகிறது; வலியுறுத்துகிறது. அறம் என்பது ஒரு நல்ல உறுப்பைப்போல என்னுள் இருந்துகொண்டு என்னை இயக்குகிறது. அதை நம்பி நாம் எவ்வளவு துணிச்சலோடும் எதுவும் செய்யலாம்.”
“பொதுவாக கவிஞர்களுக்கு இசையின் மீது ஒரு தீராக் காதலிருக்கும். நீங்கள் இசை கற்றுக்கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்...”
“திருநெல்வேலியைப் பொறுத்தவரை நம்மைச் சுற்றி ஏதாவது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ‘நீ ஏன் எதுவும் செய்யாமலிருக்கிறாய்?’ என்று நச்சரிக்கும். 1993 – 98 காலகட்டத்தில் சித்த மருத்துவப் படிப்பிற்காக நான் திருநெல்வேலியில் இருந்தபோது, வயலின் கற்றுக்கொண்டேன். ஓராண்டுக்கும் மேல் கற்றுக்கொண்டேன், சில காரணங்களால் தொடர முடியவில்லை. இன்றைக்கும் அந்த வருத்தமிருக்கிறது. இயக்குநர் பரத் பாலாவிடம் வேலைசெய்து, ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகமாகி, பாடல் எழுதியதுதான் இசையுடனான எனது அடுத்த தொடர்பாக அமைந்தது. மனதின் அடியாழத்தில் கிடந்த இசை என்னை விட்டுவிடவில்லை. கவிதையைக் காட்டிலும் இப்போது இசையின்மீது தீராக் காதலும் தேடலும் கொண்டிருக்கிறேன்.”
“கவிஞர் தன்னளவில் சுதந்திரமான கலைஞர். ஆனால், பாடலாசிரியர் சினிமாவை உருவாக்கும் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களில் ஒருவர்தானே, அவர் அவ்வளவு சுதந்திரமானவரா?”
“மற்றவர்களோடு இணைந்து பணியாற்றும்போதுதானே உங்கள் சுதந்திரத்தை, உங்கள் தனித்திறமையை, படைப்பாற்றலின் வீச்சை நீங்கள் பரீட்சித்துப் பார்க்க முடியும். தனித்து இயங்குவதில் நம் விடுதலை உணர்வுக்கு என்ன சவால் இருக்கிறது; இருந்துவிடப்போகிறது? 20 துறை சார்ந்த ஆளுமைகளுடன் வேலை செய்யும்போது, உங்கள் சுதந்திரத்தை முழுமையாக நீங்கள் செயல்படுத்த முடிகிறது என்றால், அதற்குப் பெயர்தான் விடுதலை. சுதந்திரம் என்றால் நாம் தான்தோன்றித்தனம் என்றுநினைத்துக் கொள்கிறோம், அன்று. என் கையிலிருக்கும் கவித்திறமையைக்கொண்டு அங்கு நான் எதிர்கொள்ளும் சவால், படைப்புவெளி, சுதந்திரம், ஊக்கம், கற்பனை, மொழிச்சீர்மை… அவை தருகிற ஆனந்தம் வேறு. பாட்டு வெளியாகி அதன்வழியாகப் புகழ் வருகிறபோதுகூட இந்த ஆனந்தத்தை நாம் உணர முடியாது. ஆனால், பாடல் எழுதி, இசை கோக்கப்பட்டு அதை முதல்முறையாகக் கேட்கிற அனுபவம் இருக்கிறது அல்லவா, அது ஒரு பெரிய வானத்தை விரிக்கும். அப்போதுதான் நீங்கள் அறிந்துகொள்ள முடியும், உங்கள் ஆளுமை என்பது உண்மையில் எவ்வளவு, உங்கள் கலையை இங்கே எவ்வளவு விரிக்க முயன்றிருக்கிறீர்கள், எவ்வளவு முடிந்தது - முடியவில்லை, அவற்றின் மிகை வடிவங்கள் எவையெவை என்று. கூட்டாக உழைக்கும்போதுதான் கலைகளைப் பகிர்ந்துகொள்ளும் போதுதான் சுதந்திரம் குறித்த கூடுதல் புரிந்துணர்வு ஏற்படும். சினிமா என்பது கூட்டுக்கலை, தனித்தனித் திறமையாளர்களின் சுதந்திரமான கலைவெளிப்பாடுதான் நல்ல சினிமாவை உருவாக்கும். சுதந்திரம் ஒரு பொறுப்புணர்வும்கூட.”

“கலையில் வேறு வேறு துறையில் இயங்கும் ஆளுமைகள் நட்பு பாராட்டுவதும் இணைந்து பணியாற்றுவதும் குறைவு. உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருடன் பணியாற்றும் அனுபவம் எப்படி இருக்கிறது?”
“மிக நல்ல அனுபவம் அது. அருமையான கொடுக்கல் வாங்கல், பகிர்ந்துகொள்ளல். எப்போது சந்தித்தாலும் வாசிக்க நூல்கள் கேட்பார். முதல்முறை அவருக்கு, ‘கருணாமிர்த சாகரம்’ நூலையும், வைக்கம் முகமது பஷீரின் நூல்களையும் கொடுத்தேன். கருணாமிர்த சாகரத்தைப் புரட்டிப் பார்த்தவர், ‘வட்டப்பாலை’ என்ற முக்கியமான பகுதியைக் கண்டதும், ‘இது எனக்குத் தெரியும்... இது எனக்குத் தெரியும்’ என்று ஒரு சிறுவனைப்போல உற்சாகம் கொண்டார். அவர் தன் சிறு வயதில் அதைக் கற்றிருக்கிறார். ‘இந்த முழு நூலிலும் என்ன இருக்கிறது என்று எப்படி நான் தெரிந்துகொள்வது?’ என்று பேரார்வத்துடன், துடிப்புடன் கேட்டார். அதை முழுமையாக அறிந்துகொள்ளவும் அதை மக்களுக்குப் பொதுமைப்படுத்தவும் ஆசைப்பட்டார். இசைத்தமிழ் குறித்தும், ‘கருணாமிர்த சாகரம்’ குறித்தும் ஓர் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான தேடலில் பல்வேறு ஆளுமைகளைச் சந்தித்து தகவல்களைச் சேகரித்துவருகிறேன். புதிய தகவல்கள் குறித்த வீடியோவை அனுப்பிவைத்தால், பார்த்துவிட்டு அவ்வளவு உற்சாகமும் மகிழ்ச்சியுமாகப் பேசுவார். பொதுவாகக் கலை வடிவங்களைப் பொதுமைப்படுத்தி, மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நம்மிடம் பெரிய ஆர்வமோ திட்டமோ இருப்பதில்லை. அதைக் கொண்டுசெல்வதற்கான வழிகளை, கருவிகளைக் கண்டடைவதும் இல்லை. கருணாமிர்த சாகரம் நூலை மக்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் கொண்டு சேர்ப்பது குறித்து மிகக்கவனமாகத் திட்டமிட்டு வருகிறோம். இதில்
ஏ.ஆர்.ரஹ்மான் மிகத்தீவிரமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார். இசையும் கவிதையும் சங்கமிப்பது எவ்வளவு அழகான, உணர்வுபூர்வமான, மகிழ்ச்சியான விஷயமோ அதே மாதிரியானது நாங்கள் இணைந்து பணியாற்றும் அனுபவம்.”
“சரி, கருணாமிர்த சாகரம் நூலுக்கான தேடல் குறித்து விரிவாகச் சொல்லுங்கள்...”
“தமிழ்மொழியில் உருவான பொக்கிஷங்களில் ஒன்று ‘கருணாமிர்த சாகரம்.’ தஞ்சை ஆபிரகாம் பண்டிதரால் 1917-ல் எழுதப்பட்ட ஆய்வு நூல்; 1346 பக்கங்களில் தமிழிசையின் பெருமையை உலகுக்குச் சொல்லும் நூல். அந்தக் காலகட்டம் எப்படி இருந்தது என்று உங்களுக்குத் தெரியும். ஊர் ஊராகப் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் நமது கல்விக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டிருந்த காலம். அதற்குப் பின்னர்தான் நமக்குக் கல்வியே வந்துசேர்ந்தது. ஆனால், அதற்கும் முன்பே ஆபிரகாம் பண்டிதர் தமிழ்மொழிமீதும், மக்கள்மீதும் பரிவுகொண்டு தனி ஒருவராகத் தமிழிசை குறித்த தகவல்களைத் திரட்டி, இப்படி ஒரு நூலைப் படைத்திருக்கிறார் என்றால், அவரது உழைப்பு எவ்வளவு தன்னலமற்றது. எவ்வளவு அழகாக ‘கருணாமிர்த சாகரம்’ என்று பெயர் வைத்திருக்கிறார் பாருங்கள். உண்மையிலேயே இசைத்தமிழின் சாகரத்தன்மையைக் கொண்டாடும் நூல். இந்த நூல் குறித்த தேடலில் பல ஆளுமைகளைச் சந்தித்து வருகிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது, தமிழிசையில் கரைகண்ட பல ஆளுமைகள் பெரிய அறிமுகமோ வெளிச்சமோ பெறாமல் தமிழகச் சூழலில் தீவிரமாக இயங்கிக்கொண்டி ருக்கிறார்கள். இது வருத்தத்திற்குரிய விஷயம். ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள் அடிக்கடி சொல்வார், ‘தமிழின் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள், தமிழ் மருத்துவமும் தமிழிசையும்.’ இவை இரண்டோடும் தற்செயலாக என்னை இணைத்துக்கொண்டேன். இந்தப் பிடிமானத்தை விட்டுவிடக் கூடாது என்றும் இவ்விரண்டையும் அறிந்துகொள்வதிலும் எங்கெங்கும் கொண்டுசேர்ப்பதிலும் என்னைக் கூடுதலாகத் தகுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முயன்றுவருகிறேன்.”
“மீண்டும் கவிதைக்குள் வருவோம். ‘பூனையைப்போல அலையும் வெளிச்சம்’ தொகுப்பிலிருந்து ‘அகமுகம்’ தொகுப்பு வரையிலான பயணத்தை அவதானிக்கும்போது, உங்கள் கவிதைகள், அகத்துக்குள்ளிருந்து மெல்ல மெல்ல புறம் நோக்கி விரிந்துவந்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. அதை ஏற்கிறீர்களா?
“இருக்கலாம். ‘முலைகள்’ தொகுப்புக்குப் பிறகுதான் என் வாசிப்புவெளி பெரிதாக விரிந்தது. அந்தத் தொகுப்பைக் கொண்டுதான் சமூகம் என்னை நிர்பந்தித்தது. நீ யார், ஏன் எழுத வந்தாய், என்ன எழுதுகிறாய்? என எல்லாக் கேள்விகளையும் முன்வைத்தது. இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள ஒரு பலம் வேண்டுமல்லவா. அந்த பலத்திற்காக நான் கடுமையாக வாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்பு என்னுடைய வாசிப்புகள் வேறு தளங்களில் இருந்தன. அதற்குப் பிறகுதான், பிரமிளை வாசித்தேன். அவர் வழியாகப் பலரை அடைந்தேன். அங்கிருந்து கிளை விரிந்து விரிந்து, ஒரு கட்டத்தில் அம்பேத்கரைச் சென்றடைந்தேன். வாசிப்பின் வழியாக அண்ணல் அம்பேத்கரைக் கண்டடைந்தது என் வாழ்வில் நிகழ்ந்த மகத்தான தருணம். ஓர் அரசியல் செயற்பாட்டாளர், சிந்தனையாளர் என்ற நோக்கங்களில் அம்பேத்கரை வாசிப்பது வேறு; ஒரு கவிஞராய் வாசிப்பது வேறு. அம்பேத்கரின் ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலை இதுவரை மூன்று முறை முழுமையாக வாசித்திருக்கிறேன். மூன்று முறையும் வெவ்வேறு மாதிரியான அனுபவத்தையும் புரிதலையும் அது தந்தது. ஏனென்றால், மூன்று விதமான காலகட்டத்தில் வேறு வேறு குட்டி ரேவதியாக அதை வாசித்தேன். அது என்னுடைய ஆளுமை சார்ந்த தெளிவைக் கொடுத்தது. என்னிடம் ஏற்கெனவே மொழி இருந்தது, கவிதை இருந்தது. இந்தத் தெளிவையும் கருத்தியலையும் கூடுதலாக இணைத்துக்கொண்டு, அகத்தையும் புறத்தையும் இணைப்பது என எழுத ஆரம்பித்தேன். அகத்தையும் புறத்தையும் இணைக்கும் கலையை நம் மண்ணில் புத்தர்தான் மிகச் சிறப்பாகச் செய்தவர். ஒரு தனி மனிதனின் அகவெளியைச் சமூகத்துக்கான கருவியாக மாற்றுவது எப்படி என்று புத்தர்தான் முதன்முதலாகச் சிந்தித்தார்; செயல்படுத்தினார். சாதி இருக்குமிடத்து, மதம் இருக்குமிடத்து, ஒரு கடைச்சமூகத்துப் பெண்ணாகப் பேசவும் எழுதவும் வெளிப்படவும் அது எனக்கு உதவியது. ஒரு கருத்தியல் ஆயுதமாக அதை ஏந்திக்கொண்டேன். அது அடுத்தடுத்த கவிதைகளிலும் படைப்புகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுப்பும் ஒரு பரீட்சார்த்த முயற்சி; வெவ்வேறு மனவெளியிலிருந்து உருவாகிறவை. அகம் - புறம் என்கிற விஷயம் குறித்துப் பேச வேண்டுமென்றால், சாதி, மதம், தீண்டாமை, வர்க்கம், பால்சமத்துவமின்மை காரணமாக நிகழ்த்தப்படும் கணக்கற்ற வன்முறைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் உள்ளடக்கியே பேச முடியும். ஏனென்றால், அகம் என்பது பல்வேறு அர்த்தங்களைத் தருகிற ஒரு சொல். அகம் என்றால் எல்லோருடைய அகமும் ஒன்றே அன்று.”
“கவிதை என்பதை இலக்கியத்தில் நிகழும் ஓர் ஆரம்பச் செயல்பாடு என்பதாக மட்டுமே பார்க்கப்படும் நிலை உள்ளது. சிறுகதை, நாவல் என நகர்வது ஒரு முன்னேற்றம் என்று கருதப்படுகிறது. அதைப் பற்றிய உங்கள் கருத்து...”
“மீண்டும் மீண்டும் கவிஞர்களாகிய நாம் எதிர்கொள்ளும் கேள்வி இது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு மாற்றாக, நாமும் பதில் கேள்விகளை இனி உருவாக்க வேண்டும். கவிதை ஒரு தனிப்பெரும் கலை என்பது இப்படிச் சொல்கிற எல்லோருக்கும் தெரியும். கவிதை எழுதத் தெரியாதவர்களின், முயற்சி செய்தும் இயலாமற்போனவர்களின் குற்றச்சாட்டு இது. கவிதையின் உயர்நிலை இந்தச் சமூகத்திலிருக்கும் எல்லோருக்கும் தெரியும். கவிஞர்கள் ஓர் இயக்கமாக மக்களிடம் கவிதைக்கலையைக் கொண்டுசேர்க்காத காரணத்தால், இதுபோன்ற அவமரியாதையான கேள்விகளைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. கவிதை அறியாமல், ஆனால், யார் சிறந்த கவிஞர்கள் என்று தரவரிசைப் பட்டியல் போடுகிற தாழ்வுமனப்பான்மையாளர்களின் கூற்றுதான் இது. பொருட்படுத்த வேண்டியதில்லை. கவிதையோ இன்னும் எழுதித் தீராதபடி விரிந்துகிடக்கிறது!”

“ஓர் அமைப்பாகப் படைப்பாளிகள் திரள்வது சாத்தியமா?”
“அது அவசியம். ஆனால், இலக்கியத் தளத்தில் அப்படி நிகழ்வது கடினம். உண்மையில், இலக்கிய வெளியும் இலக்கியக் கருதுகோள்களும் சாதிமயமானதாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட ஒருவரின் கையில் மொழி கிடைத்திருப்பது குறித்து ஒட்டுமொத்தச் சமூகமும் எப்போதும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் கண்டிப்போடும் இருக்கிறது. இதில் எங்கே ஒன்றிணைவது? இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான ஓர் ஆளாக என்னை இச்சமூகத்தில் வைத்துக்கொள்ளக் கவிதை உதவுகிறது, அவ்வளவுதான்! என் கவிதைகள் இந்தச் சமூகத்துக்கு உதவுமா, பயன்படுமா என்பதில் கேள்விகளும் விவாதமும் அவசியம். நம் நவீன இலக்கியச் சூழல் அப்படியான ஓர் இடத்திற்கு இன்னும் வந்துசேரவில்லை. நாம் எல்லோரும் குறுவாள்களோடு அலைந்து கொண்டிருக்கிறோம். அந்தக் குறுவாளில் கடுமையான அதிகாரம் இருக்கிறது. கையில் குறுவாள்களுடனும் அதேசமயம் அவற்றில் ரத்தம் பட்டுவிடாதபடியும் நாம் எப்படி இணைந்து நிற்பது? குறுகிய அதிகார வெளிக்குள் நின்று மானுடம் குறித்தும் விடுதலை குறித்தும் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறோம். சிதிலமடைந்து கிடக்கும் மொழிவெளியில் நின்று இந்த ஆகச்சிறிய காரியத்தைச் செய்வதையே பெரியது என்று நினைத்துக் கொள்கிறோம். இந்தச் சிக்கல்களுக்குள்ளிருந்து விடுபட, எனக்குத் தமிழிசையின் மூர்க்கமான பாய்ச்சலும் மொழியுடன் அது தன்னைப் பிணைத்திருக்கும் வடிவங்களும் உண்மையான உற்சாகத்தை அளிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இசை சார்ந்து, மொழி சார்ந்து நடந்திருக்கும் சான்றோர்களின் முயற்சிகளோடு ஒப்பிடும்போது, எனது கவிதை முயற்சிகள் சிறியவை என்ற இடத்திற்கு வந்துசேர்ந்து நான் அமைதியாகிறேன்.”
“கவிதைகள் பிரசாரமாக இருப்பதில் உங்களுக்கு உடன்பாடா?”
“கவிதை என்பதே வாக்குமூலம்தானே...
A Statement! ஒரு சாட்டையடிதானே. ஒவ்வொரு பத்தாண்டுக்கும் புதிது புதிதாக எழுத வருகிறவர்களின் குரல்களைக் கவனமாகக் கூர்ந்து கேளுங்கள். ஏனென்றால், அது அந்தக் காலகட்டத்தின் சமூக வாக்குமூலம்; சமூக சுயவிமர்சனம். ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல, புறத்தால் வடிவமைக்கப்பட்ட அகத்தின் குரல், அதை மீறத்துடிக்கும் குரல். ஒரு கவிதை பிரசாரமாக, ஓலமாக, அழுகையாக, கூக்குரலாக, தட்டியெழுப்பும் சத்தமாக... எதுவாகவும் இருக்கலாம். இது கூடாது இது சரி என்று சொல்ல யாருக்கு அதிகாரமிருக்கிறது இங்கே. ‘பிரசாரம்’ என்பது கவிதைமீது சலிப்பைத் திணிக்க விரும்பும் ஒரு வார்த்தைப் பிரயோகம். எனவே, அதற்கொரு மாற்றுச் சொல்லை உபயோகிக்கலாம்.”
“கவிதையில் சத்தம் கூடாது’ என்றும் ‘கட்டளை வாக்கியங்கள் இடம்பெற கவிதையில் என்ன அவசியமிருக்கிறது?’ என்றும் குறிப்பிடப்படுவது பற்றி...”
“1960-களிலிருந்து 2000 வரை தமிழில் யார் இலக்கியம் எழுதிக்கொண்டிருந்தார்கள், யாரின் கையிலிருந்தது இலக்கியம்? அவர்கள் அன்று தாங்கள் எழுதியது வழியாக எதையெல்லாம் நிர்பந்தித்தார்களோ அதுவே இன்றைக்கும் நம்மீது நிர்பந்திக்கப்படுகிறது. அவர்கள் சொல்கிற அடக்கமான, பணிவான, ஒடுங்கிய குரல் நமக்கு அவசியமில்லை. அவர்களுக்குத் தோதான அவர்கள் நம்புகிற உலக இலக்கியங்களை நம்மீது திணித்தார்கள். அந்தக் கோட்பாடுகளைச் சொல்லி இன்றும் நம்மை ஏமாற்றுகிறார்கள். ‘சத்தமிடாதே’ ‘கட்டளையிடாதே’ என்பதெல்லாம் சாதிய மனநிலை சார்ந்த இலக்கிய முன்முடிவு. அவ்வளவே!
ஏன் இந்த இடத்தில் பிரமிளை நாம் முன்வைக்கிறோம் என்றால், மொழி ரீதியாக, கருத்தியல் ரீதியாக, சாதியை மறுத்து இதையெல்லாம் அவர் உரத்த குரலால் தாண்டினார் என்பதால்தான். எனக்கு இப்போதுதான் நாக்கும் விரலும் கிடைத்திருக்கிறது. பேசாமல் எழுதாமல் என்ன செய்வது? இரண்டாயிரம் வருடமாகக் கிடைக்காத நாக்கும் விரலும் கிடைத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், நாமெல்லாம் குற்றவாளிகள் இல்லையா? இதுதான் இலக்கியம், இதுதான் தரம் என்பதெல்லாம், முந்தையவர்கள் நம்மீது சுமத்த விரும்பும் சாதிய அதிகாரத் தடித்தன்மைகள். அவற்றை மறுப்பதும் உடைப்பதும்தான் நவீன இலக்கியத்தின் முக்கியமான முதன்மைச் செயல்பாடு.”
“ஆண் கவிதைகளில், பால்சமத்துவம் சார்ந்த உளவியல் ரீதியான முன்னகர்வை உணர்கிறீர்களா?”
“இல்லை. இதை ஒரு குற்றாச்சாட்டாக மட்டும் நான் சொல்லவில்லை. எதார்த்தத்தின் அளவிலிருந்தும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நம் சமூகத்தில் ஆண்களுக்குத் தமது உடலின் மாண்பு குறித்த பிரக்ஞையே இல்லை. சரி தவறுகளுக்கு அப்பால், உடை, அலங்காரம், அழகு பராமரிப்பு என வணிகம் சார்ந்தாவது பெண் உடல் குறித்த ஒரு மதிப்பீடு இந்தச் சமூகத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஆனால், குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, ஆண்களுக்கு அவர்களின் உடலின் மாண்பு குறித்து எந்தக் கல்வியும் இன்பமும் புகட்டப்படவே இல்லை. தம் உடல்மீதான வன்முறையின் தாக்கத்தை உணர்ந்துகொள்ளும் அளவுக்குக்கூட அவர்கள் சென்சிட்டிவாக இல்லை. சாதி, மதம் என இந்தச் சமூகம் தருகிற ஏதோ ஒரு சொகுசு உணர்வில், ஆண்கள் தங்கள் உடலின் முழு அனுபவத்தைப் பெறாமலேயே வாழ்கிறார்கள். ஆண்கள், தம் அதிகார ஒடுக்குமுறைகளால் தாம் பெற்றுக்கொள்ளும், தமக்குத்தாமே உருவாக்கிக்கொள்ளும் வாழ்வும் ஒரு முழுமையான வாழ்வு அன்று. உடலின் விழுமியங்களுடனான நல்ல அனுபவங்களை ஆண்கள் அனுபவிப்பதே இல்லை. ஒரு சித்த மருத்துவராகச் சொல்கிறேன், கடவுள் இல்லை என்று அதற்கு மற்றாக சித்த மருத்துவர்கள் முன்வைப்பது மனித உடலைத்தான். புத்தரும் அப்படித்தான் சொல்கிறார், ‘உடல் இல்லையென்றால் மனமில்லை. மனதை உடலோடு கூட்டித்தான் பொருள்கொள்ள முடியும்.’ இப்படி எல்லா வகையிலும் உடலுக்கான கருத்தியலும் தத்துவமும் கையிலிருந்தும் அது ஆண் சமூகத்தால் உணரப்படுவதே இல்லை. பால்சமத்துவம் எப்போது வரும், உங்கள்மீதும் உங்கள் உடல்மீதும் உங்களுக்குச் சுயமரியாதை இருந்தால்தானே மற்றவர்களுக்கான சுயமரியாதையை உங்களால் உணர முடியும். சமூகத்தில், தனி மனித வாழ்க்கையில் இல்லாமல் திடீரென்று எழுத்தில் பால்சமத்துவத்தைக் கொண்டுவந்துவிட முடியாது. இதில், தலைவர் பெரியாரை மட்டுமே நாம் குறிப்பிட முடியும். அவர் மட்டும்தான் தனது உடலைக் கள ஆயுதமாக வைத்து இயங்கியவர். பெரியாருக்கு விளக்கங்கள் அவசியமில்லை.”

“ஆண்கள், பெண்களின் வாழ்வை எழுத முடியாது. தலித் அல்லாதவர்கள், தலித்துகளின் வாழ்வை எழுத முடியாது போன்ற வாதங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“அது உண்மைதான். ஆனால், எழுதக்கூடாது என்று சொல்லமாட்டேன். சம்பந்தப்பட்டவர்களால் அதை மிகச் சரியாக சிறப்பாக எழுத முடியும் என்கிறேன். அதேசமயம், பெண்களின் தலித்துகளின் வாழ்வை வலிமையைப் புரிந்துகொள்ள முடியாது என்றில்லை, அவர்களுக்காகக் குரல்கொடுக்கக் கூடாது என்றில்லை. பொது மனித உரிமை சார்ந்து யாரும் எழுத முடியும். ஆனால், இலக்கியம் என்று வரும்போது, அதில் தன் வரலாற்றுச் சித்திரங்களைச் சம்பந்தப்பட்டவர்களால்தான் நுட்பமாகப் பேச முடியும் என்பது என் நம்பிக்கை.”
“பெண் படைப்பாளிகளின் இயக்கங்கள் குழுக்களாகப் பிரிந்திருப்பதாகக் கருதுகிறீர்களா? அல்லது உயிரோட்டமுள்ள ஒரு நரம்பு உங்களை ஆழத்தில் பிணைத்துதான் வைத்திருக்கிறதா?”
“இரண்டும்தான்! கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு பெரிய பெண்ணிய இயக்கத்தைக்கூட ஒருங்கிணைக்க முடியவில்லை. என்ன காரணம்? எந்த இரண்டு பெண்களுக்கும் இடையே இருக்கின்ற சாதிய அதிகார இடைவெளி. எழுத்தாளரும் அரசியல் தலைவருமான சிவகாமி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அந்த இயக்கத்திலேயே கேள்வி வந்தது. ‘நாங்கள் எப்படி ஒரு தலித் தலைவருக்குக் கீழே பணியாற்றுவது?’ என்று கேட்டார்கள். இன்றைக்குச் சமூகத்தில் தன்னைப் பெரிதும் முன்னிறுத்திக்கொள்கிற பெண்களேகூட அப்படிக் கேட்டார்கள். குடும்பத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நிகழ்கிற அதே அதிகாரப் பகிர்வு குறித்த சண்டைபோலத்தான், சாதி சார்ந்து பொதுவெளியில் பெண்களுக்கிடையேயும் நடக்கிறது. இது கடுமையான பாதுகாப்பின்மை உணர்விலிருந்து உருவாகிற விஷயம். இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிடைக்காத சமூகவெளி, ஜனநாயகத்தளம் இதைப் பயன்படுத்துவதில் நிகழும் தடுமாற்றம்...
பெண்கள் மிகுந்த தன்னுணர்வுடன் இதைக் கடந்து வரவேண்டும். கிடைத்த வாய்ப்புகளின் வழியே எல்லாம் இன்னும் நாம் எவ்வளவோ செய்திருக்க முடியும். ஒரு பக்கம் சாதி மறுப்பை முன்வைத்துக் கொண்டே, இன்னொரு பக்கம் சாதியின் அடிப்படை இயங்குமுறையான பிரித்தாளும் சூழ்ச்சியின் முதல் பலிகளாய்ப் பெண்கள் இருந்ததை, இருப்பதைப் பலமுறை நாம் வேடிக்கையாகப் பார்த்திருக்கிறோம். எவ்வளவு ஆபத்தான விசயம். தனக்கு மட்டும் கிடைக்கின்ற சுதந்திரத்தில், வாய்ப்பில், சலுகைகளில் பெண்கள் திருப்தியடையக் கூடாது. தனக்குக் கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்கும்
போதுதான், எல்லோருக்கும் கிடைக்கும் வழிமுறைகளை நாம் கண்டடையும் போதுதான், நமக்குக் கிடைத்த விடுதலை உணர்வும் நிரந்தரமான உரிமையாக மாறும்.”
“நவீன இலக்கியத்தில் விமர்சனங்கள் - விமர்சகர்களின் இடம் என்னவாக இருக்கின்றன?”
“தமிழில் விமர்சனம் என்று, சாதிய மனோபாவம் சார்ந்த மேம்போக்கான நம்பிக்கைகளைத்தான் முன்வைக்கிறார்கள். இன்று எழுதிக்கொண்டிருக்கிற பலரை எழுத்தாளரே இல்லை என்று நாம் பொதுவெளியில் மறுக்க முடியும்; நிறுவ முடியும். ஆனால், அவர்கள் தங்களது சாதிய பலத்தால் தங்களை வலுவாக இலக்கியத்தில் நிறுவிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து வருகிற விமர்சனத்திற்கு என்ன மதிப்பிருக்க முடியும்? என்னைக் கேட்டால், விமர்சனம் என்பதே அவசியமில்லை என்பேன். சமூகத்திற்குத் தன்னை ஒப்படைத்த படைப்பாளிக்குத் தன்னைவிடச் சிறந்த விமர்சகன் இருக்க முடியாது. இன்று எழுத வருகிற புதியவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு வருகிறார்கள். அவர்கள் முடிவுசெய்வார்கள். படைப்புகளை ஏற்பார்கள், விசாரிப்பார்கள், விமர்சிப்பார்கள்; தேவையில்லையெனில், நிராகரிப்பார்கள்.”
“பெண்களில் பெரும்பாலானோர் கவிதைகளைத் தாண்டி இயங்காதது ஓர் இழப்பில்லையா?”
“இழப்புதான். ஆனால், எழுத வாய்ப்புள்ளவர்கள் எழுதத்தான் செய்கிறார்கள். திட்டமிட்டு யாரும் எழுதக் கூடாது என்றில்லை. மேலும் எல்லோரும் நினைப்பதுபோல, கவிதை ஒரு சொகுசான விஷயம் இல்லை. எப்போதுமே கவிதையை யாரும் சொகுசாகப் பயன்படுத்தவும் முடியாது. செய்வதைச் சிறப்பாகச் செய்வது விரிவாக இயங்குவதைக் காட்டிலும் முக்கியம் என்று நினைக்கிறேன்.”
“நீங்கள் பெண்ணியவாதியா? உங்களது அரசியல் நம்பிக்கை குறித்துச் சொல்லுங்கள்...”
“ஆம். நான் பெண்ணியவாதிதான்.
‘Metoo’-வை நான் ஆதரிக்கிறேன், உரையாடலைக் கிளறும் இன்றைய நவீன வெளியாகப் பார்க்கிறேன். அதேசமயம், வெளி தேசங்களிலிருந்து இங்கு வந்துசேர்கிற பெண்ணியக் கோட்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு முன்வைப்பவள் அல்லள். நமது இந்தியச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வான பால் நிலை மிக விசித்திரமானது. ஆண்கள் - பெண்கள் என்று இந்தப் பிரச்னையை அணுக முடியாது. எழுத்தாளர் பாமா மிகத் தெளிவாகச் சொல்வார், ‘முதலில் மேல்சாதி ஆண், அவனுக்குக் கீழே மேல்சாதிப் பெண், அவளுக்குக் கீழே ஒடுக்கப்பட்ட ஆண், அவனுக்குக் கீழே ஒடுக்கப்பட்ட பெண் என்பதாகத்தான் நமது அடுக்கு உள்ளது.’ இது வழக்கமான அடுக்கு அல்ல. நமது அடுக்கு மிக நுட்பமானது. வழக்கமான அடுக்குகள்கொண்ட தேசத்திலிருந்து இங்கு வருகிற கோட்பாடுகளை, நம்பிக்கைகளை, திட்டங்களை அப்படியே பின்பற்ற முடியாது. இதனால் குழப்பங்களும் வன்முறையும்தான் அதிகரிக்கும். முதல் அடுக்கின் இரண்டாவது இடத்திலிருக்கும் பெண்கள், தங்களுக்கு நடந்த பாலியல் வன்முறை குறித்து ‘Metoo’-வில் எழுத முடியும். முதல் அடுக்கிலுள்ள பெண்களால் பாதிக்கப்படும் இரண்டாவது அடுக்கு ஆண் எழுத இங்கே ‘Metoo’ இருக்கிறதா? இரண்டாவது அடுக்கில் உள்ள கடைசிப் பெண்ணையும் நினைவில் கொண்டுதான் இதைச் சொல்கிறேன். இந்த அதிகார அடுக்குகள் குறித்து மிக விரிவாக அம்பேத்கர் தனது ‘சாதி ஒழிப்பு’ நூலில் குறிப்பிட்டுள்ளார். நமது சமூகம் கறுப்பு - வெள்ளையாக இல்லை. பல கறுப்புகள், பல வெள்ளைகள், இரண்டுக்குமிடையே பல சாம்பல் நிறங்கள். பால் சமத்துவத்தை அனுபவிக்க முடியாத என் சகோதரியைப்போலவே பால் சமத்துவம் பெறாத என் சகோதரனும் எனக்கு முக்கியம். எனது கள அனுபவம் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறது. இத்தகைய அரசியல் புரிதலோடுதான் ‘பெண்ணியம்’ என்பதைப் புரிந்துகொள்கிறேன். நவீன முற்போக்கு வடிவங்களை, நம் சமூகத்தில் பழக, இங்கே நிலவும் சாதிய வடிவங்கள் குறித்து ஆழமான புரிதல் உணர்வு பெண்ணியவாதிகளுக்கு அவசியப்படுகிறது. இங்கே இருக்கும் சாதியச் சிந்தனை நம்மிடையே கிளப்பியிருக்கும் பெண் - ஆண் பால்சார்ந்த நம்பிக்கைகள், உறவின் தன்மைகள், பிற்போக்குத்தனங்கள் எல்லாம் அரைகுறையான விடுதலை உணர்வையே நமக்கிடையே எழுப்பும். இன்னும் எதிரெதிர் பாலினத்தவரை வெறுக்கக்கூடியவர்களாய் நாம் மாறிப்போவோம். ‘Metoo’ இங்கு நிலவும், குறிப்பாக, பெண்களுக்கு இடையே நிலவும் சாதிய முரண்பாடுகளைக் கருத்தில் கொண்டு எழுந்தால், வெற்றிகரமான இயக்கம் என்று சந்தேகத்திற்கிடமின்றி நாம் முன்மொழியலாம்.”
“நம்பிக்கைக்குரிய பெண் படைப்பாளிகளின் பட்டியலில் எப்போதும் நீங்கள் உள்ளிட்ட ஐந்து பேரின் பெயர்களே எப்போதும் குறிப்பிடப்படுகின்றன...”
(இடைமறிக்கிறார்) இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படிச் சொல்வதின் வழியாக எங்களுக்குப் பிறகு எழுதவந்த எல்லோரையும் பொருட்படுத்தாமல் அவமதிக்கிறீர்கள். புதியவர்கள் எவ்வளவோ பேர் வந்துவிட்டார்கள். அப்படிச் சொல்கிறவர்களை தயவுசெய்து தொடர்ந்து வாசிக்கச் சொல்லுங்கள்.”
“இன்னும் எழுதப்படாமல் இருக்கிற விஷயங்களாக நீங்கள் கருதுகிறவை?”
“ஆண்கள் உடலரசியலையோ சமூக அரசியலையோ பெண்பாலையும் உள்ளிட்டுத் துல்லியமாக எழுதவில்லை. குறிப்பாகப் பெண்பாலைப் புரிந்துகொண்டு ஆண்கள் எழுதவே இல்லை. உடனே, இதை வெறும் செக்ஸ் சார்ந்த ஒன்றாக மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அழகிய பெரியவன், ராஜ்கவுதமன் உள்ளிட்ட சிலர் எழுதியிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் ஆண்களின் படைப்புகளில் அணுகுமுறைகளில் காணும் வாழ்வியல் அறங்களை, மற்றோரிடம், மற்ற படைப்புகளிடம் சமூகப்புழக்கத்தில்கூட காண முடிந்ததில்லை.
சமூகத்தை எழுத எழுத, அரசியலை எழுத எழுத, மொழியின் பரப்பை விரித்துக் கொடுத்துக்கொண்டே இருக்கும் நவீன ஆற்றல் கொண்ட மொழியை நாம் இன்னும் போதுமான அளவு பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடவுள் மறுப்பு இலக்கியங்களும், சாதி ஒழிப்பு இலக்கியங்களும் மீண்டும் மீண்டும் காலந்தோறும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் தேவை உள்ள நாடு நம் நாடு.

மேலும், பெண்கள் எழுதிய உடலரசியலை போதுமான அளவு படைப்பில் அரசியல் படுத்தவில்லை. முற்போக்கு நாடு என்று சொல்லிக்கொண்டு, மரத்துக்கு மரம் சாதி மீறிக் காதலித்தவர்களைக் கொன்று தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறோம். நாஜிக்களைவிட மோசமானவர்கள் நாம். இந்த அநாகரிகச் சமூகத்தின் சமகாலம் எழுதப்பட வேண்டும். தனிப்பட்ட உறவுகளையும் தனிமனித அக உணர்வுகளையும் உறவுமுறிவுகளையும் முதன்மையானவையாக முக்கியமா னவையாக எழுதிக்கொண்டிருப்பது போதாது.”
“பல்வேறு செயல்பாடுகள்கொண்ட குட்டி ரேவதியின் பிரதான அடையாளம் எது?”
“கவிஞர் என்பதுதான்!”
“இலக்கியத்திற்குள்ளான உங்களது நுழைவை உங்கள் குடும்பம் எப்படி எதிர்கொண்டது?”
“அம்மா மிகவும் வருத்தப்பட்டார்கள். ஒரு பெண்பிள்ளை இப்படி இலக்கியம், எழுத்து என்று போகிறதே என்று அவர்களுக்குக் கவலை. ‘ஆண் பிள்ளையைப்போல வளர்க்கிறீர்கள்; கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்’ என்று என் அப்பாவை எப்போதும் கண்டித்துக் கொண்டே இருப்பார்கள். அப்பா, நான் இப்படித்தான் ஆகவேண்டும் என விரும்பினார். முதல் தொகுப்பு வெளியிடும்போது, அப்பாவிடம் நான் சொல்லவில்லை. ஆனால், எப்படியோ தெரிந்துகொண்டு நிகழ்வுக்கு வந்திருந்தார். மேடையிலிருந்து பார்க்கிறேன், வாசலில் நின்றுகொண்டிருக்கிறார்; அவர் முகத்தில் நிறைய சந்தோசமிருந்தது. இரண்டாவது நூல் வரும் முன் அப்பா மறைந்துவிட்டார். எழுத்தின் தொடக்க காலத்தில், அம்மாவுக்கு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை. அவர்களுக்கு நான் என் செயல்பாடுகளைத் தெளிவுபடுத்த 20 வருடங்கள் ஆகிவிட்டன. பிறகு நம்பிக்கை வந்து, என் முதன்மையான ஊக்கமாக இன்று உருமாறியிருக்கிறார்கள்.”
“கவிதை தற்செயலானது, திட்டமிட இயலாதது என்று நம்புகிறீர்களா?”
“ஆமாம். அது வெளிப்படும்போது அது உங்கள் உடல், பொருள், ஆவியை உறிஞ்சிக்கொண்டு வெளிப்படும். அதற்குத் தயார் நிலையில் நீங்கள் இல்லையென்றால், கவிதை சொத்தையாக வெளிப்படும்.”
“அப்படியானால், ‘இடிந்தகரை’ போன்ற ஒரு கவிதைத் தொகுதியை எப்படி எழுதினீர்கள். அதில் திட்டம் ஏதுமில்லையா?”
“இல்லை. உங்களுக்குத் தோன்றலாம், ‘இடிந்தகரை’ போராட்ட சமயத்தில் அந்தத் தலைப்பில் ஒரு தொகுப்பு வெளியிடுவது திட்டமிட்டது என்று. ஆனால், இல்லை. அப்போது நான் அவ்வளவு கொந்தளிப்பான மனநிலையில் இருந்தேன். அந்தக் கவிதைகளை எழுதவில்லையென்றால், நான் நானாக இருந்திருக்க முடியாது எனும் நிலையில் எழுதப்பட்ட தொகுப்பு அது. இடிந்தகரைப் பெண்களின் போராட்ட உணர்வு, நம்பிக்கை நிறைந்த குழந்தைகளின் கண்கள், அலைகளை வீசியடிக்கும் கடல், உப்புக்காற்று என மனம் முழுக்க இடிந்தகரை ஆக்கிரமித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்ட எழுச்சியுடன், வடிவத்துடன் இடிந்தகரை மக்கள் வெகுண்டெழுந்தார்கள். உலகத்திற்கே முன்மாதிரியான ஒரு போராட்டமில்லையா அது! ‘மரியான்’ பட வேலைகளில் இருந்ததால், போராட்டத்தில் அவர்களோடு முழுமையாக உடன் நிற்க முடியவில்லையே என்ற குற்றவுணர்வும் அந்தத் கவிதைகள் எழுதக் காரணமாக இருந்தது.”
“பெண்கள் பெரிய அளவில் போராட்டக்களத்துக்கு வெளியே வந்துகொண்டிருக்கிறார்கள். இச்சமயம் ‘போராட்டத்திற்குச் செல்வது உயிராபத்தைத் தரவல்லது’ என்று மக்கள் மனதில் பதியவைக்கும் அதிகார அமைப்பின் வன்முறையை, உளவியல் பிரசாரத்தை எப்படி அணுகுகிறீர்கள்?”
“முன்பைப்போல களிப்பணியாளர்கள் என்று இப்போது தனியே குழுமமாய் யாரும் இல்லை. வழிநடத்தவும் தனியாய்த் தலைவர்கள் அவசியமில்லை. பெண்கள், சிறுவர்கள் உட்பட எல்லோருமே தங்களை சமூகச் செயல்பாட்டில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். ஏனெனில், எல்லாமே அவர்கள் கண்முன் நடக்கின்றன. கண்முன் நிகழாதவற்றை, சமூகவலைதளங்கள் கொண்டு சேர்க்கின்றன. அறியாமை என்பது பொதுச்சமூகத்திடம் இருக்கும்வரைதான் அரசு எந்திரம் ஒடுக்க முடியும். தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டம், ‘இடிந்தகரை’ போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஈழப்படுகொலைக்கு எதிரான போராட்டம் என மக்கள் அனைத்திலும் திரள்கிறார்கள். சமூகப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்வது அடிப்படையான உரிமை என இன்றைய சமூகம் உணர்ந்திருக்கிறது. இவ்வளவு பிரச்னை நடந்துகொண்டிருக்கும்போது, நாம் எதுவும் செய்யாமல் இருக்கிறோமே என்கிற குற்ற உணர்வை மக்களிடத்தில் உண்டாக்கி யிருக்கிறது. பேரறிவாளன்மீதான துக்குத் தண்டனையை ரத்துசெய்யவைத்தது நம் வெற்றிகரமான போராட்டங்களில் ஒன்று. தூத்துக்குடி உயிராபத்து பயங்காட்டுதல்களையும் தாண்டித்தானே ‘எட்டுவழிச் சாலை’க்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்தார்கள். போராடுவதில் நம் மக்களுக்கு எந்தத் தயக்கமும் அவநம்பிக்கையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், போராட்டத்தைத் தொடர்வது ஒன்றே நம் முன் இருக்கும் ஒரே வழி; போராடிப் பெறுவதே நம் பாணி.”
“ஆயுதப் போராட்டத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?”
“கத்தியும் துப்பாக்கியும் மட்டும்தான் ஆயுதமா? மனிதர்களின் குரல், எழுத்தெல்லாம் ஆயுதமில்லையா? பழைமைவாதச் சொற்பிரயோகங்களையும் நம்பிக்கைகளையும் முதலில் நாம் மாற்ற வேண்டும். அதிகாரத்திற்கு எதிராக ஏந்துவதற்கு மனித உடலைவிடப் பெரிய ஆயுதம் என்ன இருக்கிறது நம்மிடம்?”
“திருமண உறவு - குடும்பம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”
“இன்றைய திருமண வடிவத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். பொருளாதார ரீதியாக, சிந்தனை ரீதியாக இரண்டு ஆளுமைகள் தங்களைக் கீழ்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு வடிவமாகத்தான் இன்றைக்குத் திருமணம் இருக்கிறது. இதை இன்னும்தொடர வேண்டுமா? வாழ்க்கைக்கு ஒரு கம்பானியன்ஷிப் தேவைதான். அதை நான் மறுக்கவில்லை. அதைத் திருமணம் தருகிறது என்றால் சரி. ஆனால், அப்படித் தருகிறதா? பெண் - ஆண் இருவருக்கும் இடையே பாலியல் சமத்துவமின்மையை நிலைநிறுத்துவதில், தொடர்ந்து அவற்றைச் செயல்படுத்துவதில் திருமணம்தான் முதன்மையான வடிவமாக இருக்கிறது. இது, மறைமுகமாகவும் நேரிடையாகவும் சாதிய ஊக்கத்தைச் சமூகத்துக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் சாதிய ஒழிப்பை முன்மொழிந்துகொண்டே, இன்னொரு பக்கம் திருமண வடிவத்திற்குத் தன்னை யாரும் ஒப்படைக்க முடியாது. சமூக விமர்சனத்திற்கு பயந்து, திருமண வடிவத்தின் ஒடுக்குமுறை உண்மைகளை எல்லோரும் பேச பயப்படுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் இதில் கொஞ்சம் தெளிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆண் பெண் உறவு, காதல் குறித்த பழைய நம்பிக்கைகளிலிருந்து விலகி, தங்களது சுயமுடிவு நோக்கி நகர்கிறார்கள்.”
“உங்களுடைய இன்றைய மாபெரும் சமூகக் கவலை என்ன?”
“இந்து மதம் விளைவித்திருக்கும் சாதியச் சிக்கல்கள்தாம். முடிச்சவிழ்க்க முடியாத நிலையில் அதன் வன்மங்களும் வன்முறை உணர்வுகளும் நிறைந்த ஒரு நிரந்தரக் கொந்தளிப்பிற்கு ஆளாகியிருக்கிறோம். மனிதம் என்பதிலிருந்தும் மனித உரிமைகள் என்பதிலிருந்தும் வெகுதூரத்தில் ஒரு காட்டுமிராண்டி மனநிலையில் எந்த அமைதியையும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கத் தகுதியற்றவர்களாகி இருக்கிறோம். கையறு நிலையில் கொண்டுவிடும் சாதியின் கொடுமைகள் குறித்து, எந்தத் துறையிலும் அழகான ஆழமான உரையாடல் நிகழ்த்தக்கூடிய அளவிற்குப் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அற்றவர்களாய் இருக்கிறோம்.
வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் போதெல்லாம் தோன்றும் ஆற்றாமை, நம் நாட்டின் பிரச்னைகள், பிற்போக்குத்தனங்கள் எல்லாம் தொடங்கும் இடமும் முடியும் இடமுமாய் சாதி ஒன்றே இருக்கிறது என்று அறிய நேரும்போது வந்து கவியும் துக்கத்தினால் வருவது. ஆண்கள், பெண்களிடம் நடந்துகொள்ளும் விதமும் அவர்களை நடத்தும் விதமும் ஆண்களுக்கு இழுக்கானது, அவமதிப்பைக் கொண்டுவருவது என்றுகூட உணராத, உணரக்கூடிய சுயமரியாதை அற்ற ஆண்களை உற்பத்திசெய்துகொண்டே இருக்கின்றன சாதிய வடிவங்கள்.”
“உங்கள் கவிதைகளில் வரும் சுகுணா யார்?”
“நீண்ட காலத்திற்கு, ஆண்பால் - பெண்பாலின் எல்லைகளை அழித்தொழிக்கும் ஒரு பெயராகவே சுகுணா என்பவர் இருந்து வருகிறார். கவிதை எழுத, கவிதைகளுக்குள் ஒரு முழுமையான ஆளுமையை நிறைத்துவைக்க இந்தப் பெயர் உதவியது. கற்பனை மனிதரின் பெயர், சுகுணா. பல சமயங்களில் திருநங்கையாகவும் இருந்திருக்கிறார். 2003-ல் தொடங்கி, என் எழுத்தை ஆக்கிரமிக்கும் பெயர். என் அளவில் எனக்குள் இருக்கும் பெண் - ஆண் முரண்களைக் கடக்க இந்தப் பெயர் உதவிக்கொண்டே இருக்கிறது. மற்றபடி, இந்தப் பெயர் பின்னணியில் ஏதும் இல்லை. இந்தப் பெயர், ஒரு சிறகு. அவ்வளவே!”
“உங்களுடைய நூலான ‘ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள்’ முக்கியமான முயற்சி. பெண் படைப்பாளிகளில் இன்னும் பரவலாக வாசிக்கப்பட வேண்டியவர்கள் என யாரையெல்லாம் சொல்வீர்கள்?”
“நன்றி. மிகுந்த பேரார்வத்துடன் ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண் அமைத்துக்கொடுத்த இணையதளத்தில் எழுதியது. பல்லாயிரம் வாசகர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்துவிட்டு அன்புடன் உரையாடி னார்கள். குறிப்பாக, இளைஞர்கள் இந்தத் தொடரில் தம்மை இணைத்துக்கொண்டிருந்தார்கள். மறக்க முடியாத அனுபவம்.
பெண் படைப்பாளிகளில் இன்னும் பரவலாக வாசிக்கப்பட வேண்டியவர்கள் என்று கேட்டு மீண்டும் மீண்டும் என்னை ஒரு பட்டியலைச் சமர்ப்பிக்கச் சொல்கிறீர்கள். என்னால் அது இயலாது. ஆனால், புதிய தலைமுறை என்ன எழுதுகிறது என்று மிகுந்த விழிப்புடன் நான் கூர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.”
“காலவேக மதயானை நூலில் ‘கவிதை நெறியாளர்’ என்று கால சுப்பிரமணியம் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. வரவேற்க வேண்டிய விஷயம். அவரின் பணி அந்தத் தொகுப்பில் எப்படியானது?”
“எப்போதுமே, ஒரு கவிதை நூலை முடித்ததும், யாராவது அதைத் தொகுத்து, அதனைச் சீர்செய்து தரமாட்டார்களா என்ற ஏக்கம் எழும். படிமங்களோ, சொற்கோவைகளோ திரும்பத் திரும்ப நிகழாமல் கவனித்துத் தருவது, எழுதிய படைப்பாளிக்கு ஆற்றலாக இருக்கும். இதை இதற்கு முன்பும் பல கவிஞர்களிடம் தொகுப்பை அனுப்பிப் பெற்றிருக்கிறேன். கவிஞர் தேவதேவன், கவிஞர் சுகுமாரன், ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் வாசித்து நேர்செய்து தந்திருக்கின்றனர். ‘காலவேக மதயானை’ நூலில் கவிதைகளின் இலக்கிய, இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதுடன், ஒழுங்குசெய்து தந்திருக்கிறார். தொகுப்பின் ஓட்டத்தில் பொருந்தாத இரண்டு கவிதைகளை நீக்கப் பரிந்துரை சொன்னார். அவர்கள் சில விடயங்களை முன்மொழிந்தாலும், முடிவுகள் எல்லாம் என்னுடையவையே. அதில் எந்தச் சமரசமும் இல்லை. இது ஒரு கண்ணாடியின் முன் நின்று நம்மைச் சீர்செய்துகொள்வது போன்ற ஒரு பணிதான்.”
“குட்டி ரேவதி என்ற ஆளுமையின் பிம்பம், தமிழ்ச் சூழலில் இலக்கியத்தில் என்னவாக உருவாகியிருக்கிறது என்று தங்களால் அவதானிக்க முடிகிறதா?
“என்னைச் சூழ்ந்து என்னைவிட வலுவான, புகழ்மிக்க நிறைய ஆளுமைகளின் இருப்பை உணர்ந்தும் கவனித்தபடியேயும் இருக்கிறேன். ஆனால், ‘சமூகச் செல்வாக்கு’ என்று வருமிடத்து அவர்களுக்கும், இந்தச் சமூகத்தில் ஒடுக்கப்படுவருக்கும் இடையே எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. எல்லோரும் ஒரே சுழியமாக மாறிப்போகிறோம். நாம் எல்லோருமே நீக்கமற ஒரே நிலையில்தான் இருக்கிறோம், கையறு நிலையில். ஆனால், அவரவர் சாதி, மத நம்பிக்கைகளின் அணுகுமுறைகளில் இருந்து அவரவர்க்கான வெற்றி பிம்பங்களை அனுசரித்துக்கொள்கிறோம், ஒப்பனை செய்துகொள்கிறோம். சமூகத்தின் முன் தோரணையாக்கிக்கொள்கிறோம். நம் எழுத்தும் சொல்லும் சமூகத்தில் மாற்றங்களை உண்டாக்கும் செல்வாக்கு உடைய கருவிகளாக மாறும்போதுதான், இந்தக் கேள்வியை எழுப்பிக்கொள்ளும் தகுதி உடையவர்களாகிறோம். இங்கே நிலவும் இலக்கிய வெளியில் என்னை ஓர் ஆளுமை என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையோ மகிழ்ச்சியோ என்றுமே இருந்ததில்லை. எழுதுவதும் எழுத முடிவதும் மட்டுமே எனக்குப் போதுமானவையாக இருந்திருக்கின்றன. பேருவகையைத் தந்திருக்கின்றன. எழுத்தின் தொடர்ச்சியாக ஒரு படைப்பாளிக்கு நிகழும் எதுவுமே பொருளற்றவை. அந்தப் படைப்பாளிக்கு எந்தச் செல்வாக்கையும் ஈட்டித் தராதவை என்பதை என் நெஞ்சம் அறிய உணர்ந்திருக்கிறேன். இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள்தான் சொல்ல வேன்டும்!”
“உங்களுக்குப் பிடித்த கவிதை வரிகள்?”
“அடிக்கடி மனதில் தோன்றும் வரிகள் இவை. கவிஞர் தேவதேவனின் ‘அறுவடை’ கவிதை:
‘நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நாம் அதனை
நேரடியாய் அறுக்கமுடியாது!”
தங்களைப் பூக்களாகவோ பறவைகளாகவோ
எண்ணிக்கொள்ளும்
பெண்கள் நிறைந்த பாழ்மண்டபத்தில்
கண்மூடி எல்லோரும் உற்று நோக்கும்
ஓர் உருக்கமான மெழுகுவத்தி நான்
மௌனத்தை,
காலத்தின் மௌனத்தை
எனது சம்மட்டியால் ஓங்கி அடிக்கிறேன்
குழந்தையின் குரல்வளை திறந்துகொள்கிறது
விடுதலையின் ரத்தம் எப்பொழுதும்
பூமியை உஷ்ணப்படுத்திக்கொண்டேயிருக்கிறது.
இசைத்திடுங்கள் தோழியரே இசைத்திடுங்கள்
பித்தம் முற்றிய ஒரு மதயானை ஒளிந்திருக்கிறது
நம் ஒவ்வொரு தசை முறுக்கிலும்
கண்ணீரும் முத்தங்களும் உதிரமும்தான் பாடலாக முடியும்
சொற்கள் அல்ல.
நட்சத்திரங்கள் சுடும் உயரத்தில்
ஒரு பறவையாகி உடலை நீட்ட வேண்டும்
ஒவ்வொரு குடிசைக்கும்
ஒரு சூரியன் உண்டல்லவா?
உடல் முழுக்க போதையுடன் இச்சையுடன் எழுந்து பறக்கிறது
செம்பருத்திப் பூக்கள் பூத்த அரைப்பாவாடை
உலகத்தின் மையமாகிச் சுழல்கிறேன் நான்
தனிமையின் தருணங்களில்
சூரியன் மொத்தமுமாய்
என் ஒருத்திக்கு ஆகி வளர்கிறது
இவ்வேளையில் நீங்கள் எல்லோரும்
எங்கே சென்றீர்கள்