கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

பெருந்தேவி கவிதைகள்

பெருந்தேவி கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெருந்தேவி கவிதைகள்

பெருந்தேவி, ஓவியம் : வேல்

சமாதானம்

வள் முகத்தைத் திருப்பி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள்
அது முதல் சமிக்ஞை
அவன்தான் சமாதானப்படுத்த வேண்டும்
தன் பக்கத்து நியாயங்களோடு தொடங்குகிறான்
சுருதி குறைந்துகொண்டே வருகிறது
இது இப்படித்தான் இசைக்கப்படும்
ஒவ்வொன்றாகத் தன் தவறுகளைச் சொல்லத் தொடங்குகிறான்
மெல்ல மெல்லக் குரல் உயர்கிறது
தன் இரு கைகளைக் குரல் விரித்துக்கொண்டே வருகிறது
அச்சமும் பதற்றமும்
மன்னிப்பை இறைஞ்சும் உருவகங்களும்

பெருந்தேவி கவிதைகள்

ஒரு தீப்பொறியை உருவாக்கியதிலிருந்து
தரையில் அதைத் தவறவிட்டதிலிருந்து
அக்கறையின்றி அதனால்
பழைய பொக்கிஷங்களும் புதிய மரச்சாமான்களும்
சேர்ந்து எரிந்ததிலிருந்து
ஒரு பொறியில் அவர்கள் வீடே பற்றிக்கொண்டதிலிருந்து
தீ அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் வீதிகளுக்கும்
ஏன் நகரத்துக்கே பரவி
அதையும் தாண்டி ஒரு காட்டையே எரித்துவிட்டதற்குத்
தன்னைப் பொறுப்பாக்கிக்
கேவுகிற குரல்
ஒரு சுள்ளியைக்கூட அந்தத் தீயில் அவள் சேர்க்கவில்லை
கடைசி வரையில்

அப்பா

பெருந்தேவி கவிதைகள்

நீண்ட மூக்கு
தடித்த கண்ணாடித் தழும்புகள்
வேலை செய்யாத காது கேட்கும் கருவி
வெரிகோஸ் நரம்புகள்
அவருக்கு ஆரோக்கியம் என்றால் நன்றாகச் சாப்பிட முடிதல்
தைரியம் என்றால் வீட்டுச் சொந்தக்காரரிடம் இயல்பாகப் பேசுதல்
அறிவாளி என்றால் ஒரே ஒரு கலைஞர்
1960களின் சாமி காலண்டர்கள்
1970களின் டிரான்ஸிஸ்டர்
1980களின்  கணக்கெழுதிய டயரிகள்
எழுதாத தபாலட்டைகள் மஞ்சள் பைகள்
நாப்தலின் உருண்டைகள்
நரை விழத் தொடங்கிவிட்ட மகள்
அவளிடம் அவர் கூறிய ஒரேயொரு அறிவுரை
‘எதையும் எப்போதும் கடவுளிடம் கேட்காதே
அப்படிக் கிடைப்பது கஷ்டத்தில் முடியும்’
இறக்கும்போது பொட்டலமாய்ச்
சுருங்கிய உடலோடு
பரலோகம் என்று ஒன்றிருந்து
அங்கே அவர் சென்றிருந்தால்
முடிந்தவரை தன் குச்சிக் கைகளால்
அங்கிருந்து அதிசயமாக நீளும் கைகளைத்
தடுத்துக்கொண்டிருப்பார்
‘அவளுக்கு எதையும் தாராதிரும்,
முட்டாள் பிழைத்துப் போகட்டும்!’