
சஹானா, ஓவியம் : வேல்
ஒரு மலையில்
புல்மீது தலைவைத்துப் படுக்கிறேன்
திடீரென்று எங்கிருந்து வருகிறதோ
இந்த மகிழ்ச்சியின் ஊற்று
தலையிலிருந்து
கால் வரை நனைத்து
பின்பு முழுமையாய் மூழ்கடித்து
அந்த மலைப்பரப்பே கடலாகி
நீந்தும் சிறு மீனாய்
மகிழ்ச்சியின் துடுப்புகளை அசைக்கிறேன்.
நான் ஓர் ஆமை
முயலின் வேகத்திற்கு
என்னால் ஈடுகொடுக்க முடியாது
ஆயினும்
நான் நகர்ந்துகொண்டேதான் இருப்பேன்
முயலால் போகமுடியாத எல்லைக்கு
முயலால் தொடமுடியாத உயரத்துக்கு
முயலால் நினைத்துப் பார்க்க முடியாத ஆழத்துக்கு.

மழை பொழிந்து
மண்ணின் வாசத்தை
எழுப்புவதுபோல்
பூ மலர்ந்து
வேரின் வாசத்தை எழுப்புகிறது.
பக்கத்துத் தெரு தேவாலய வழிபாடு
அரவை இயந்திரத்தின் ஒலி
தொலைக்காட்சி செய்திகள்
எதிர்வீட்டு மூதாட்டி யாருக்கோ கொடுக்கும் சாபம்
எல்லாம் காதில் விழுகிறது
வெளியே நின்று சத்தமிடும்
ஒரு பூனையின் குரல் மட்டும்
மனதில் விழுகிறது.
நேற்று முளைத்த செடியில்
பூவாக அமர்ந்திருக்கிறது பட்டாம்பூச்சி.