கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஆதியில் கலை இறந்தது - கலையின் சமகாலப் பயன்பாடு குறித்து

ஆதியில் கலை இறந்தது - கலையின் சமகாலப் பயன்பாடு குறித்து
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதியில் கலை இறந்தது - கலையின் சமகாலப் பயன்பாடு குறித்து

ஆதிரன்

குறிப்பிட்ட படைப்பாளியின்மூலமாக ஒரு சமுதாயத் தளம் இலக்கியத்தை உருவாக்குகிறது. அவ்வாறு இலக்கியம் எனும் கலைப்பொருள் உருவானதும் அது சமுதாயத்தின் ஏனைய உறுப்புகளைப் பாதிக்கிறது. ஏனைய உறுப்புகள்போலவே, அழகினைச் சுவைக்கும் திறனும் கலையைப் புரிந்துகொள்ளும் திறனும்கொண்ட மக்கள்திரளை அந்தக் கலைப்படைப்பு உருவாக்குகிறது

– கார்ல் மார்க்ஸ்.


ழுத்துக் கலையில் அடிக்கட்டுமானமாக இருப்பது மொழி. மொழியின்மூலமாகவே ஒரு படைப்பிலக்கியம் தனது கட்டமைப்பை அடைகிறது. ஒரு படைப்பிலக்கியம் என்பதற்குக் குறிப்பிட்ட நோக்கம், அதற்கான பயன், இன்னும் சொல்லப்போனால் ஒரு லட்சியமும் இருந்தே தீரும். ஒரு படைப்பாளியின் நோக்கம் என்பது அவரைப் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்கம் சார்ந்து அமையும். அவ்வகையான நோக்கத்தை ஒரு படைப்பிலக்கியத்தின்மூலமாக வெளிப்படுத்த, ஒரு படைப்பாளி மொழியைப் பயன்படுத்துகிறார். அதாவது, அவர் மொழியை ஒரு செய்வினையாகப் பயன்படுத்துகிறார் என்பது அடிப்படை. ஒரு கலைப்படைப்பு அல்லது கலை என்ற ஒட்டுமொத்தமான செயல்பாடு, மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவவில்லை என நிரூபணமானால், அந்த வடிவம் நடைமுறையில் உபயோகப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தாலும் செயலிழந்துபோன ஒன்றாக அணுகப்பட்டு, அறிவார்ந்த வகையில் அவை நிராகரிக்கப்பட வேண்டும். மட்டுமல்லாமல், சமுதாய வளர்ச்சிக்குத் தேவையான ஒரு மாற்று வடிவத்தைக் கண்டடைய வேண்டியதும் அவசியமாகும்.

ஆதியில் கலை இறந்தது - கலையின் சமகாலப் பயன்பாடு குறித்து

இதனடிப்படையில் சமகாலத்தில் தனது செயல்பாட்டின் பயன்மதிப்பை முற்றிலும் இழந்து, மொண்ணையாகத் தனிமனித மற்றும் வர்க்க அடையாள உபகரணமாய் நிகழ்கிற, சமகாலக் கலையின் நிகழ்வுப்போக்கை அதன் அனைத்து வடிவங்களிலும் நிராகரித்துப் புறக்கணிக்கிற தவிர்க்கவியலா அவசியத்தை நாம் உணர வேண்டும். இது சாத்தியமா என்பதையும் தமிழகம் மற்றும் உலகத் தமிழ்த் தொகுப்புச் சூழலிலும் நிலவி வருகிற வறண்ட, மூச்சுவிட முடியாதபடிக்கு அழுகிப்போன அடையாளக் கலைவகைச் செயல்பாடுகள், கலைவடிவம் காலாவதியான பின்னும், உண்மையில் சொல்லப்போனால் கலை இறந்துபோன பின்னும் - எவ்வாறு வெட்கமில்லாமல் சுரணையற்ற மனிதர்களால் கொண்டாடப்படுகிறது என்பதையும், காலாவதியான கலைக்கு மாற்றுவகைகள் சாத்தியமா எனவும் ஆய்வு செய்ய முயல்கிறது இந்தச் சிறு கட்டுரை.

உலகில் அனைத்துவிதக் கலாசாரங்களிலும் இதுவே எப்போதையுமான பொதுவான நிலை. என்றாலும், தமிழகச் சூழலின் இவ்வகையான ஆய்வு, ஒரு குறிப்பிடத்தகுந்த வகையில் பிரத்தியட்சப்படுகிறது. அது என்னவென்றால், கலைப்படைப்பாளி களுக்கும் சமுதாயம் மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு நிலைதான் அது. தமிழக வரலாற்றின் பெரும்பாலான காலகட்டத்தில், அரசியல் செயல்பாட்டுக்கான உறவற்று வெறும் அடையாள / கேளிக்கை சார்ந்த படைப்பிலக்கியப் படைப்பாளிகள் தமிழ் இலக்கியச் சமுதாயத்திற்கு ஓர் அவமானமாகவே திகழ்கிறார்கள். நாம் விதிவிலக்குகளைப் பெருமை செய்வோம்.

ஆனால், முதலாம் வகைகளை நாம் நமது சக மனிதராக அன்பு செய்வது அவசியம்தான் என்றாலும், இவர்களது படைப்புகளைச் சரியான வகையில் விமர்சனபூர்வமாக அணுகுவதன்மூலம் இவர்களின் போலியான அருவருக்கத்தக்க அடையாளத்தையும் அடையாளப் பரப்பலையும் அதன்மூலமாக அவர்கள் கோரும் அதிகாரத்தையும் வெளிக்கொணரச் செய்வது ஒரு விமர்சகரின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். மேலும் சமுதாயத்தில் படைப்பாளி, படைப்பிலக்கியம், விமர்சகர், வாசகர் என்கிற உறவுச்சூழலில் இவ்வகையான போலிச் செயல்பாடுகளைக் கண்டடைந்து சொல்வது ஒரு விமர்சகருக்கான பொறுப்பு மட்டுமல்லாது ஒரு வாசகரின் பொறுப்பும்கூட. அந்தவகையில், சமகாலக் கலைச் செயல்பாடு எவ்வாறு காலாவதி ஆகிப்போனது என்பதைப் பார்க்கும்முன், கலை குறித்த சில அடிப்படைகளைப் பார்ப்பது நலம்.

னவே, நாம் ‘கலை என்றால் என்ன?’ என்கிற நெஞ்சு கூசச் செய்கிற மற்றும் ஒழுங்கீனம் படைத்த கேள்வியைத் தவறவிட்டுவிடலாம். மாறாக முந்தைய காலத்தில்  ‘ஏன் கலை?’ என்ற கேள்விக்கு நமக்குமுன் குவிந்துகிடக்கும் தரவுகளைச் சற்றுச் சிரமம் பார்க்காமல் குறுகிய அளவில் தொகுத்துப் பார்த்துவிட்டால், இந்தச் சிறிய ஆய்விற்குச் சில ஆதாரங்கள் கிடைக்கலாம். ஆக,  ‘மனிதர்களுக்கு ஏன் கலை?’ எனக் கேட்கப்பட்டபோது, பல சுவாரஸ்யமான பதில்கள் கிடைத்தாலும், ‘கலை கலைக்காக’ போன்ற மூன்றாம் தரச் சிந்தனை வரிசையைக் கணக்கிலேயே எடுக்காமல், கிடைப்பதில் வேறு இரண்டு வகைக் கருத்துகளை நாம் பார்க்கலாம். முதலாவது, வாழ்க்கையின் பதிலீடாகக் கலை உருவாகிறது. இரண்டாவது, மனிதருக்கும் அவர் சார்ந்த புற/அகச் சூழலுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வுகளைச் சமன்செய்யும் ஒரு சமநிலைச் செயல்பாடாக - இன்னும் சொல்லப்போனால் - குறிப்பிட்ட வகையில் ஒருவித வடிகாலாகக் கலை செயல்புரிகிறது.

இந்த இரண்டு கருத்தாக்கங்களின் அடிப்படையில் கலையின் செயல்பாடுகள் பற்றிப் பார்க்கலாம். ‘கலை வாழ்க்கைக்கு வெறுமனே பதிலீடு மட்டும்தானா’,  ‘மனிதருக்கும் புற உலகிற்கும் இடையிலான இன்னும் ஆழமான உறவுகளைக் கலை பிரதிபலிக்கிறதா’, ‘கலைச் செயல்பாட்டை மொத்தமாக ஒற்றைச் சூத்திரத்தில் தொகுக்க முடியுமா’ போன்ற தீவிரமான கேள்விகளை முன்வைத்து தனது ‘Necessity of Art’ என்கிற புத்தகத்தில் விவாதிக்கிறார் ஆசிரியர் Ernst Fischer.

ஆக, கலையின் செயல்பாடுகள் என்னவென்று பார்ப்போமேயானால் ஒன்று, வாழ்க்கையின் பதிலீடு கலை என்பதன் அடிப்படையில் ஒரு மனிதரை முழுமை அடையச் செய்வதாகச் செயல்படுகிறது. ஏற்றத்தாழ்வுகளைச் சமன்செய்யும் வகைப்பாட்டின் அடிப்படையில் கலை, புற உலகில் மனிதரால் மட்டுமே முடிகிற செயல்பாடாய், இயற்கையிலிருந்து மனிதரைத் தனித்துப் பிரித்துத் தனித்துவமான உயிரினங்களில் உன்னதமான இருப்பாக இயங்க உதவுகிறது என்பது மற்றொன்று. எனில், மனிதன் ஏன் முழுமையடைய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. கலை ஒரு மனிதரை முழுமையாக்கு
கிறது என்பதானது, மனிதர் பொதுவாக ஏதோவொரு குறையோடு இருக்கிறார் என்பதற்கு இட்டுச் செல்கிறது. ஆக, மனிதருக்கு ஏதோவொரு குறை இருந்துகொண்டிருக்கிறது என்பது வெளிப்படையான ஒன்றாகிவிட்டதைப் பார்க்கிறோம்.

ஆதியில் கலை இறந்தது - கலையின் சமகாலப் பயன்பாடு குறித்து

போலவே, ஏற்றத்தாழ்வுகளைக் கலை ஒருவகையில் நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. ஏற்றத்தாழ்வுகள்கொண்ட யதார்த்தமான வாழ்வில் மனிதருக்குத் தனது சூழல் சார்ந்து ஒருவகையான சலிப்பு வருகிறது. இது அந்நியமாதலின் ஒருவகையான வெளிப்பாடு என்றாலும், அவர் தம்மை மனரீதியாகத் தளர்த்திக்கொள்ள... சுயமாக உற்சாகப்பட்டுக்கொள்ள கலைவகைகள் உதவுவதாக நம்புகிறார். எடுத்துக்காட்டாக, யதார்த்த வாழ்வை மீறிய ஒரு சாகச மனிதரின் செயல்பாடுகளைக் காட்சிப்படுத்தும் திரைப்படத்தைப் பார்ப்பதன்மூலம், திரைபிம்பங்களில் தனது யதார்த்தச் சூழலைவிட்டு விலகி, தன்னை ஒரு சாகசக்காரனாக உருவகப்படுத்திக்கொள்ளும்போது, தாம் ஒரு முழுமை உணர்வை அடைந்துவிட்டதாக அவர் நம்புகிறார். படைப்புக் கலையும் மேற்சொன்ன மனரீதியான தளர்த்தலுக்கும் சுய உற்சாகம் கொள்ளவும் இன்னும் சொல்லப்போனால் வேதனை, துயரம் அல்லது மகிழ்ச்சி ஆகியவற்றின் வடிகாலாகவும் செயல்படுவதாகவும் நம்புகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பட்டவர்த்தனமான ஓர் உண்மை என்னவென்றால், கலை அல்லது படைப்பிலக்கியம் என்பது படைப்பாளியாகத் தன்னை நினைத்துக்கொள்பவரின் வர்க்கச் செயல்பாட்டைத் துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிடுகிறது என்பதே.

தனது படைப்பின்மூலம் தனது வர்க்கரீதியான அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்வதன்மூலம் மேற்சொன்ன சுயதளர்த்தல் இயலாமல் போய்விடுகிறது. கூடவே, சுயஉற்சாகம் நிரந்தரமற்ற மிகக் குறுகிய கால விளைவாகத்தான் இருக்கும் என்பதுமாகிறது. ஏனென்றால், வர்க்கச் சிந்தனை இல்லாமல் மனிதரால் சிந்திக்கவே முடியாது என்பது நிரூபணமான உண்மை. ஆனால், வேறொரு பிரச்னை இருக்கிறது. சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோலப் படைப்பெழுத்து என்பதும் ஒரு கைப்பழக்கமே.

தொடர்ந்த மொழிப் பயிற்சியினால், தொடர்ந்த எழுத்து மற்றும் வாசிப்புப் பயிற்சியினால் ஒருவர் முதல் தர எழுத்தாளராக உருவாகிவிட முடியும். தலித் சமுதாயத்திற்கான அற்புதமானதொரு சிறுகதையை ஜெயமோகனைவிட யாரால் எழுதிவிட முடியும் போன்ற எடுத்துக்காட்டு தமிழ் நாட்டிலேயே கிடைக்கிறது. ஆக, ஒரு படைப்பாளி எந்தவொரு வர்க்கத்திற்குமான படைப்பையும் அதாவது, தனது வர்க்கமல்லாத வேறொரு வர்க்கத்திற்கான படைப்பையும்கூட உருவாக்கிவிட முடியும் என்றாகிறது. காரணம், ஏற்கெனவே பார்த்ததுபோல படைப்பிலக்கியத்திற்கு அடிப்படை மொழி என்பதாகும். இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் ஒரு படைப்பாளி, தன் சுயத்தை மறைத்துத் தன்னை ஒரு வர்க்கமற்றவராக அல்லது நடுநிலையாளராகச் சமுதாயத்தின் முன்னால் முன்னிறுத்திக்கொள்ள முடியும் என்றாகிறது.

ஒரு படைப்பாளி, தன்னை ஒரு வர்க்கமற்றவராக அல்லது நடுநிலையாளராகச் சமுதாயத்தின் முன்னால் முன்னிறுத்திக்கொள்ளும் அதேநேரத்தில், தன்னை அரசியலில் தொழிற்படுகிற மனிதராக பிரகடனப்படுத்தவும் கலை வகைகளை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் என்பதே உண்மை. மறுமுனையில், கலையின் தன்னிச்சையான வெளிப்பாடு, படைப்பாளியின் வர்க்க குணங்களையும் மீறி யதார்த்தத்தை வெளிப்படுத்திவிடும் முரணும் நிகழ்கிறது. யதார்த்தம் ஓர் உத்தியாகவும் உள்ளடக்கமாகவும் ஏக காலத்தில் தொழிற்படும்போது, இவ்வகையான ஆசிரிய மீறல் நிகழும்எனக்கொள்ளலாம். ஒரு படைப்பாளியின் உண்மையுணர்வின் மீதான ஈர்ப்பு, இயல்பாகவே அவரது சார்புநிலைக்கான எதிர்நிலைப் படைப்புகளை உருவாக்கக் காரணியாக அமையும் என்று கூறும் மார்க்ஸ், அதற்கு எடுத்துக்காட்டாக பால் ஸாக்கின் படைப்புகளைப் பற்றி விவாதிப்பதை நாம் முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.

லை காலாவதியாகிவிட்டது அல்லது இறந்துவிட்டது என்பது, நீட்ஷே-வின்  ‘கடவுள் இறந்துவிட்டார்’ என்கிற பிரகடனத்துடன் ஒப்பீட்டளவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, கலைக்கான பயன்பாடு தேவையற்ற ஒன்றாக மாறிப்போனதாகக்கொள்ளலாம். ஆனால், இது உண்மைதானா என்ற கேள்வியைக் கேட்டால், ஒரு தெளிவற்ற பதிலே கிடைக்கிறது. ஏனென்றால், குறிப்பிட்ட வகையில், வரம்பிற்குட்பட்டு எதேச்சதிகாரம் எவ்வகையான செயல்பாடுகளைப் பயன்படுத்தி அடக்குமுறை செய்கிறதோ அவ்வகையான செயல்பாடுகளைப் போராட்ட நிலையாளர்களும் கையாள வேண்டும் என்பது இடது சிந்தனையின் சாரங்களில் ஒன்று. அதாவது, அவர்கள் அடக்குமுறைக்குக் கலை வகைகளைப் பயன்படுத்தினால், அதை எதிர்ப்பவர்களும் கலையை விழிப்புஉணர்வுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது அடிப்படையாகிறது. எனவே, ஏன் ‘கலை இறந்து விட்டது!’ எனச் சொல்ல வேண்டும். ஏனென்றால், கலைப் படைப்புகளை ஒரு போராட்ட வடிவமாக உபயோகப்படுத்தும் திறனைப் படைப்பாளிகள் இழந்து விட்டார்கள் அல்லது அடிப்படையிலேயே கலைப்படைப்பு பற்றிய அறியாமையுடன் ‘ஏற்கெனவே திணிக்கப்பட்ட’ நம்பிக்கைக் கருத்துருவுடன் (Paradigm) படைப்பிலக்கியத்திற்குள் நுழைகிறார்கள். மேலும், தன்முனைப்பின் வெளிப்பாடாகவும் அதன்மூலம் குறிப்பிட்ட சூழலில் தனது அதிகாரத்தை உருவாக்கிக்கொள்ளவும் அதன்மூலமாகத் தனது இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவும் கலைப்படைப்புகளை உற்பத்தி செய்கிறார்கள். அதைச் சூழ்ச்சிகரமான எண்ணத்துடன் விளம்பரப் படுத்துகிறார்கள்.

இவ்வாறாக எடுத்துக்கொண்டால், இங்கு  ‘கலை’ பிரச்னையாக இல்லை. படைப்பாளிகள்தான் பிரச்னை என்று ஆகும், அது உண்மைதான். ஏனென்றால், உண்மைமீதான ஈர்ப்பற்ற, அதை யதார்த்தமாக எதிர்கொள்ளத் திறனற்ற ஆளுமைகளின் துரதிர்ஷ்டவசமான படைப்புக் குவியல்களில், கலையின் உண்மையான மதிப்பு காலாவதி ஆகிவிட்டது. ஒரு படைப்பாளிக்குத் தனது படைப்பாக்க விழைவிற்கான ஒரு காரணமும் அதன் விளைவும் புரிந்துவிடுமானால் அவரிடமிருந்து ஒரு கலைப்படைப்பு உருவாவது தவிர்க்கவியலாததாகிறது. அவர் தான் வசிக்கும் சமுதாயக் கட்டுமானத்தின் அமைப்புகளின் உள்ளிருந்து அதன் பாதிப்புகளுக்கு ஏற்ப, தனது கருத்தாக்கத்தைக் கலையில் பதிவுசெய்கிறார். அவ்வகையில் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பின் உள்ளடக்கம், தனது வர்க்கச் சிந்தனையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் அல்லவா? ஆனால், ஒரு படைப்பாளி தன்னை அதில் வெளிப்படாமல் மறைத்துக்கொள்ளவும் இடமிருக்கிறது. நன்கு பயிற்சி செய்த ஒரு படைப்பாளி, தனது கருத்துகளை மிகச் சாதுர்யமாகத் தனது படைப்புகளில் நிறுவவும், தனக்கு ஒவ்வாத கருத்துகளையும்கூட நிறுவ முடியும் என்பதில் கலை தனது முதல் தோல்வியைச் சந்திக்கிறது. மேலும், தனது மாயக் கவர்ச்சியின்மூலமாக எதார்த்தத்திலிருந்து விலகி, வாசகருக்கு ஒருவித மனக்கிளர்ச்சியை அளிக்கும்போது கலை ஏமாற்று செய்யும் ஊடகமாகவும் மருவுகிறது.

“(கலைப் படைப்பு) வாழ்க்கையிலிருந்து தளைகளைத் தற்காலிகமாக அகற்றி விடுகிறது. ஏனெனில், எதார்த்தத்திலிருந்து வித்தியாசமான முறையில் கலை ஆட்கொண்டுவிடுகிறது. தற்காலிகமாக ஆட்கொள்ளப்படும் இந்த மகிழ்வுதான் சோகமான கதைகளிலிருந்துகூடப் பெறப்படும் ‘மன மயக்கத்தின்’ இன்பத்தின் இயல்பாகும்” என்று விவரித்துச் செல்கிறார் தனது புத்தகத்தில் எர்னஸ்ட் ஃபிஷர்.
ஆக, பயன்தராத கலைப்படைப்பை ஒருவர் உருவாக்குவதன் பின்னணியை நாம் அந்தந்தச் சமூக இயங்குதளத்திலிருந்தும் அதன் வரலாற்றுப் போக்கிலிருந்தும் புரிந்துகொள்வது அவசியமாகிறது. அவ்வாறான புரிதலின் அடிப்படையில், ஒருவரது படைப்புகளை விமர்சனபூர்வமாக அணுகுவோமானால், அவர் செய்ய நினைக்கும் பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்ட முடியும்.

மாற்றம் ஒன்றே நிலையானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இயற்கை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. பிரபஞ்சமும் பூமியும், பூமியில் நிகழும் உலக அமைப்பும் கொண்டிருக்கிற உள்ளடக்கம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. வரலாற்றில் இயற்கையான மாற்றங்களின் அளவைவிட மனிதக் காரணிகளால் உருவாக்கப்படும் மாற்றங்களில் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. “இயற்கை என்றென்றைக்குமாக மாறிக்கொண்டே இருக்கிறது. அதில் நிலையாக நின்றுகொண்டே இருப்பது என்று எதுவுமில்லை. அவ்வாறு இருக்கும் எண்ணமும் அதற்கு இல்லை. நிலையாக நின்றுகொண்டிருக்கும் எல்லாவற்றின்மீதும் அது தனது சாபத்தை இட்டிருக்கிறது” என்ற கதே-யின் கூற்றை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

சமூகக் கட்டுமானத்தில் நிகழ்கிற உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள், அவற்றின் செயல்பாடுகள், அதன்மூலமாக அதிகரிக்கும் உற்பத்திப் பண்டங்கள், புதிய புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆதாரங்களில் விளைவாக அதிகரித்துவரும் அறிவாற்றல், பலவகைப்பட்ட பொருளாதாரத் தேவைகள், தத்துவச் சிந்தனைகளினூடாக அளப்பறிய அபத்தச் செயல்பாடாகப் பெருகிவரும் ஆன்மிகத் தேடல்கள் ஆகியவற்றினூடாகச் சமுதாயத்திலிருந்து உருவாகும் எழுத்துக் கலை, ஒரு தவிர்க்க முடியாத செயல்பாடாக உருவாகிறது. எனவே, மிகத் தேர்ந்த விமர்சனப் பண்பாடு உருவாகிப் பரவுதல் கட்டாயமாகிறது. படைப்புகளின்மீதான விமர்சனங்கள், இங்கு தனிமனித தாக்குதல்களாக உள்வாங்கப்படும் சூழல் தொடர்ச்சியாக உள்ளது.

இவ்வகையான முட்டாள்தனமான ‘புரிதல்கள்’, தொடர் உரையாடல்கள்மூலம் களையப்பட வேண்டும். அதற்கான புறச்சூழலைப் படைப்பாளிகள் உருவாக்கத் தங்களைப் பழக்கிக்கொள்ள வேண்டும். “முட்டாளாக இருப்பது மனிதனின் உரிமை. ஆனால், அதேசமயத்தில், முட்டாள்தனத்தைப் பரப்புவது குற்றச்செயல்” என்கிற மார்க்ஸின் கூற்றை நாம் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கலைப்படைப்பு உருவாவதற்கு, சமுதாயத்தில் பல்வேறுபட்ட அடுக்குகளில் உருவாகும் இயங்கு பண்புகள் காரணமாகத் திகழ்கின்றன. அவற்றில் பிரதானமானது, பொருளாதார நிகழ்வுப்போக்கு. அடுத்ததாக, குடும்ப அமைப்பை உள்ளடக்கிய பாலுறவு நெறிமுறைகள். பின்பாக, பொருளாதாரம் மற்றும் பாலுறவு நெறிமுறைகள் சார்ந்த மனித உளவியல் பிரதிபலிப்புகள். இவை மூன்றும் பிரதானமாக இருந்தாலும் மதம், எதேச்சதிகாரம், பல்வேறுபட்ட வர்க்கப் பிரிவினைக் கொள்கைகள் ஆகியவை அடிக்கட்டுமானமாக முன்நிற்கின்றன. ஏனைய பண்புகள்போல இவையும் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஆதியில் கலை இறந்தது - கலையின் சமகாலப் பயன்பாடு குறித்து

என்றாலும், ஒட்டுமொத்தமான இவற்றின் ஒற்றை நோக்கம், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை இயற்கை என நம்பவைப்பதுதான். எனவே, அவற்றிற்குள்ளிலிருந்து வரும் படைப்பாளிகள், தங்களின் அறியாமையின் வழியிலேயே தங்களை வெளிப்படுத்து கிறார்கள். அதனாலேயே, இங்கு கலை என்ற பொருள், முட்டாள்தனத்தைப் பரப்பும் ஓர் ஊடகமாகச் சிதைந்துபோனது. இவற்றின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில், தமிழ்ச் சூழலில் படைப்பிலக்கியம் பயனற்ற தன்னிச்சையான அடையாளப் பரப்பலையும் அதிகாராக் கோரலையும் மட்டுமே தொக்கிநிற்பது வெளிப்படை. எனவே, ‘கலை அதன் இயங்குதளத்தில் உபயோகிக்கப்படும் வழிமுறையின் போக்கில் அதன் மரணத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டது’ என்கிற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. கலையின் இருப்பு, உண்மை எனவும் அதன் செயல்பாடுகள் காலாவதி ஆகிவிட்டன எனவும் கொள்ளலாம். அப்படியாயின் கலைக்கு மாற்றாக ஆவணப்படுத்துதலை (documentation) முன்வைக்கலாமா என்றால் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் முடியும் என்கிற முடிவுக்கு வர நேர்கிறது. ஒரு முழுமையான மாற்றாக ஒன்றுக்கு ஒன்று அமையாது.

வணம் என்பதற்கும் மொழிதான் அடிப்படை. ஆவணம், கிடைக்கும் தரவுகளைக்கொண்டு நேரடியாகச் சம்பவங்களை ஆதார அடிப்படையில் விளக்குகிறது. செவிவழிச் செய்திகளை, வதந்திகளை, யூகங்களை அது கேள்வி கேட்கிறது. புனைவை முழுமையாக ஒதுக்கித் தள்ளுகிறது என்றெல்லாம் நாம் ஆவணப்படுத்தலின் நம்பகத்தன்மைகளாக முன்னிறுத்தினாலும், ஓர் ஆவணப் படுத்துதலின் நோக்கம் தவறாக இருக்குமாயின், கலைச் செயல்பாட்டைப்போலவே ஆவணப்படுத்துதலிலும் நிகழும் என்பது வெளிப்படை. அதிகார வர்க்கம் உருவாக்குகிற ஆயிரக்கணக்கான ஆவணங்கள் உலகெங்கும் இதற்கான சாட்சிகளாக வலம்வருகின்றன. அவற்றின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தாலும், அவற்றின் நம்பகத்தன்மை ஒரு புனைவுக் கலையின் விளைவைப்போலவே மக்கள் மனதில் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்க வல்லது.

எடுத்துக்காட்டாக, ஜெர்மானிய அறிஞரான நோவாலிஸ் என்பவரின் ஒரு சிறு பத்தியைக் காணலாம். “வர்த்தக உணர்வுதான் உலகின் உணர்வு. அது அற்புதமான தூய்மையும் எளிமையுமான உணர்வு; அது எல்லாப் பொருள்களையும் இயங்கவைக்கிறது; இணைக்கிறது; நாடுகளையும் நகரங்களையும் உருவாக்குகிறது; அது மனித இனத்தினுடைய கலாசாரத்தின் முழு நிறைவின் உணர்வு” முதலாளித்துவத்தின் ஆக்கபூர்வமான கூறுகளைப் பற்றிய இவரின் இந்த எழுத்துகளில் நோக்கம் வெளிப்படையாகத் தெரிந்தாலும் வாசகருக்கிடையே இதன் நம்பகத்தன்மை நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எளிய வாசகர்கள் மேற்சொன்ன பத்தியைப் படிக்க நேர்ந்தால், இயல்பாய் முதலாளித்துவத்தின் பாலான ஒரு நேர்மறை புரிதல் சாத்தியமாகிவிடும் அபாயம் இருக்கிறது. இந்தப் போலியான நம்பகத்தன்மையை வாசகருக்குப் புரியவைக்க ஒரு வாசகர் அநேக அரசியல் கலாசாரப் பண்பாட்டுத் தளங்களின் அடிப்படைகளைப் புரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தவகையில் சமுதாயக் கட்டுமானங்களை எளியவர்களுக்கு புரியவைக்க, கதைசொல்லல் முறை தவறில்லை என்கிற புரிதலுக்கும் இட்டுச் செல்கிறது.

அனைத்துவிதமான கதைசொல்லல் முறைகளையும் மதம் கைக்கொண்டுவிட்ட ஒரே காரணத்திற்காக இடது சிந்தனைச் செயல்பாடுகளைப் பரப்ப, புனைவு அதாவது கதைசொல்லல் முறையைப் பயன்படுத்தக் கூடாது என்று புறந்தள்ளத் தேவையில்லை. எதார்த்தவாதக் கலையுருவாக்கம் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆவணங்கள் எங்கு தோல்விகளைச் சந்திக்கின்றன என்று புரிந்துகொள்ள எட்வர்ட் செய்த்-தின்  ‘ஓரின்டலிசம்’ என்ற புத்தகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கீழைத்தேயப் பண்பாடு, மேற்கில் எங்கனம் ஆவணமாகக்கொண்டு செல்லப்பட்டு, அவை ஓர் உலகளாவிய கருத்துருவாக மாற்றப்படுகின்றது என்பதை விரிவாக எடுத்துரைக்கும் நூல். இந்தியாவில் பாடப் புத்தகங்களின் மாறுதல்கள் அவ்வகையானவையே. எனவே, ஓர் ஆவணமும் படைப்பிலக்கியம்போலவே சமமான நம்பிக்கையையோ நம்பகமற்றத் தன்மையையோ உருவாக்குகிறது என்கிற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. ஆக, பொதுவாகச் சொல்வதென்றால் புனைவோ ஆவணமோ அதன் நோக்கம் சரியானதென்றால் அதன் பலன் நிச்சயமாக உருவாகும் என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப்போனால், படைப்பிலக்கியம்மூலம் சமுதாயச் சிக்கல்களை, யூகங்கள் மற்றும் புனைவுகளின் வழியாகப் பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்வதற்கான பன்மையான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. மாறாக, ஆவணம், பிரச்னையைக் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் அதை உருவாக்குபவரின் புரிதலின் அடிப்படையிலான ஒற்றைத் தன்மையுடன் நின்றுவிடுகிற அபாயமும் இருக்கிறது. ஏனென்றால், கிடைக்கும் தரவுகளின் நம்பகத்தன்மை பற்றிய ஆராய்ச்சியில் ஒருவர் ஈடுபட நேரும்போது, கணிசமான செவிவழிச் செய்திகளும் யூகங்களும் தரவுகளில் ஊடுருவியிருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது அல்லது புனைவுகளில் திரிபுகள் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவும் ஆவணங்களிலும் சாத்தியம் என்பதற்குச் சமகால 24/07 செய்திச் சேனல்கள் சாட்சி.

ளம் எழுத்தாளர்களுக்கு ஜூலியன் பார்ன்ஸ்ஸின் அறிவுரை இவ்வாறாக உள்ளது, “ஒவ்வோர் எழுத்தாளரும் ஒரு சிறந்த வாசகராக இருக்கத் தேவையாய் உள்ளது. அவர் குறிப்பிடத் தகுந்த வகையில் மொழியையும் புனைவுகளையும் நேசிக்க வேண்டும். ஆனால், ஓர் அசல்தன்மை என்பது புதிரானது. மேலும், அது அகத்திலிருந்து வெளிப்படுவது. அது அவர்களுக்குள் விளக்கிக்கொள்வதுமாகும். எழுத்தாளர்கள் அவர்களது வாசகர்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற வேண்டும். சரியான கரங்களில் நாம் இருக்கிறோம் என்கிற உணர்வை முதல் பக்கத்திலிருந்தே தக்கவைத்திருக்க வேண்டும்” எனத் தொடர்கிறது. இந்தக் கூற்றில் விமர்சனம் இருந்தாலும், ஒரு படைப்பாளிக்கு இது ஓர் அடிப்படை குணமாக இருப்பது அவசியமே. போலவே, இந்தக் குணங்கள் ஓர் ஆவணப்பதிவாளனுக்கும் அவசியமாகிறது.

தொகுப்பாக, சமகால கலைச் செயல்பாடுகளில் அதன் இயங்குதளம் சார்ந்த வகையிலும் அதன் நோக்கங்களின் அடிப்படையிலும் அதன் அவசியம் காலாவதி ஆகிப்போனது என்பது உண்மைதான் என்றாலும், ‘படைப்பிலக்கிய வகைமையே தேவையில்லை’ என்கிற முடிவுக்கு வரக் கூடாது. போலவே, ஆவணங்கள் முற்றும் முழுமையான நம்பகத்தன்மை உடையது என்கிற முடிவுக்கும் வரக் கூடாது. ஒட்டுமொத்த ஏற்றத்தாழ்வற்ற மனித சமுதாயத்திற்கு உதவும் வகையில் ஒரு குறிப்பிட்ட நோக்கம்கொண்ட மனிதர், தனது ஊடகமாகப் படைப்பிலக்கியத்தையோ ஆவண முறைமையையோ தேர்ந்தெடுத்துக் கொள்வது அவரின் உரிமை. ஆனால், தனது படைப்பின்மீதான விமர்சனபூர்வமான கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர். அதிலிருந்து பின்வாங்கும் உரிமை அவருக்குக் கிடையாது. மேலும், ஒருவரைப் படைப்பிலக்கியம் செய்ய வேண்டும் என்றோ ஆவணப்படுத்த வேண்டுமென்றோ வேண்டிக்கொள்ளலாமே ஒழிய, ஒன்றைச் செய்யச் சொல்லி வற்புறுத்துவது என்கிற உரிமை யாருக்கும் இல்லை என்ற முடிவோடு இந்தச் சிறு ஆய்வை முடித்துக்கொள்ளலாம்.