மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 22

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

உலகம் முழுக்கப் பிழைப்புக்காகப்புலம் பெயர்ந்து அலையும் ஏராளமான ஜீவன்களிடம் மிச்சம் இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும் இந்த மண்ணின் சொற்களும்தான்.

''ஊர்ல வூடெல்லாம் ஈரங்காத்துப்போச்சு மாப்ள... பத்தூரு வாய்க்கா ஒடைச் சிக்கிட்டு கீழப்பங்கு வரைக்கும் தண்ணி அட கட்டிருச்சி!''

- நேற்று ஊரில் இருந்து வந்திருந்த சின்ன மாமா பேசிக்கொண்டு இருந்தபோது, வெகு இயல்பாக வந்து விழுந்த 'ஈரங்காத்துப்போச்சு’ என்ற வார்த்தை, ஒரு மழைத் துளியாகி 'சொட்’டென முகத்தில் விழுந்து தெறித்தது. குழம்புக் கையைத் தட்டில் வழித்தபடி, ''ஏந்த... என்னாந்த நீயி இப்பிடி விட்டடிக்கிற...'' என அவர் அண்ணியைப் பார்த்துச் சொன்னபோது, 'சொடசொட’வென 'என்னாந்த’வும் 'விட்டடிக்கிற’வுமாகத் தூத்தல் போட ஆரம்பித்தது. போர்வையை உதறிப்போட்டபடி, ''நாளைக்கு செல்வம் பயல போய்ப் பாத்துரணும்... நெனப்புக் காட்டு மாப்ள...'' என அவர் படுத்துவிட்டார். அந்த 'நெனப்புக் காட்டு’, தூத்தலைப் பெருமழையாக்கி நினைவு முச்சூடும் வண்டலைக் கரைக்கிறது!

 ஒரே ஒரு வார்த்தை... எங்கோ கிடக்கும் ஊரையும் நிலத்தையும் வீட்டையும் இந்தப் பெருநகர இரவுக்குள் இழுத்து வந்துவிட்டதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. உழவடிக்கும் டிராக்டரின் பின்னால் புழுப் பூச்சித் தேடிப் பறக்கும் குருவிகள்போல மாமாவின் வார்த்தைகளுக் குப் பின்னால் பறக்கிறது மனம். எப்போதும் இப்படித்தான்... போனில் பேசிக்கொண்டு இருக்கும்போதே, ''அவனுவோ வறண்டிப் பயலுவோண்ணே...'' என பாரதிதம்பி நடுவில் போடும் ஒரு வார்த்தை, பச்சையும்

வட்டியும் முதலும் - 22

மஞ்சளுமாகக் கதிரை உருவி உள்ளங்கையில் கசக்கிய மாதிரி பொசுக்கென்று வாசம் அடிக்கிறது. ''அப்பிடி இல்ல மக்களே...'' என அருள் எழிலன் ஆரம்பிக்கும்போதே நாகர்கோவில் புத்தன்துறை சர்ச்சில் இருந்து மணி அடிக்கிறது. சத்யம் தியேட்டர் டிக்கெட் கவுன்ட்டரில் நின்றுகொண்டு, ''செவுட்டு மூதியா இருக்காம்ணே...'' என கார்ட்டூனிஸ்ட் பாலா சொல்லும்போது, லாலா கடை முக்கில் 'சொர்ர்ர்’ரென்று எண்ணெய் பொரிய... கரண்டி நிறைய சேவு எடுக்கும் அண்ணாச்சி முகம் வந்துபோகிறது. கூட்டம் கும்மும் கோயம்பேடு மார்க்கெட்டில், ''அலோ... சீனியெரக்கா அரக் கிலோ போடுங்க...'' என ஒருவர் கேட்ட நொடியில், சட்டென்று நிமிர்ந்து, ''சாருக்கு மதுரையா...'' எனக் கேட்கும் கடைக்காரரின் முகத்தில் எவ்வளவு பிரகாசம்? ஆட்டோவில் ஏறிய யாரோ ஒருவர், ''இல்லைங் மாப்ள... நங்கதான் சொல்லுச்சு...'' என மொபைலில் பேச, ''கோயம்புத்தூருங்ளா... பக்கமுங்ளா? நமக்கு எலச்சிப்பாளையம்ங்க...'' என ஆட்டோக்காரர் சந்தோஷம் வழிய வழிய சைடு கண்ணாடியில் சிரிக்கிறார்.

ஐ.ஐ.டி-யில் வேலை பார்க்கும் சாஸ்திரி நகர் நண்பன், ''டிட் யு சென்ட் தி ரிப்போர்ட் மை டிபார்ட் மென்ட்?'' என புரொஃபசர் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ''ரூமாண்ட அனுப்பிட் டேன் சார்...'' எனச் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொள்கிறான். ''சொம்மா பேசாத...'' எனச் சொல்லும்போதே 'சொம்மா’ வின் சின்னச் சுழிவில், பண்ருட்டி பக்கம் ஒரு கிராமத்து வீட்டின் முற்றத்தில் காயும் பலாக்கொட்டைகள் மணக்கின்றன!

உலகம் முழுக்கப் பிழைப்புக்காகப்புலம் பெயர்ந்து அலையும் ஏராளமான ஜீவன்களிடம் மிச்சம் இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும் இந்த மண்ணின் சொற்களும்தான்.

ஏதோ ஒரு நாளில் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது துரத்தப்படும் கணங்கள் செத்துப்போகிற வரைக்கும் மறக்குமா என்ன?

ஊரில் இருந்த நிலத்தை எல்லாம் விற்றுவிட்டு, மொத்தமாகக் காலி பண்ணிக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிய நாளில், மகமாயிக் கோயில் திண்டில் உட்கார்ந்து மணி தாத்தா மொசுமொசுவென அழுது 20 வருடங்கள் இருக்கும். பொருட்களை ஏற்றிக்கொண்டு டெம்போ வேன் கிளம்பி நிற்க, ''நா வர மாட்டேன்...'' என ஆத்தா வீட்டில் ஒளிந்துகொண்ட அத்தையை அடித்து இழுத்து ஏற்றிப் போனார்கள். காலையில், அதுவரை அறிந்தறியாத இடத்தில் திடுக்கிட்டு விழிக்கும் ஒரு பிள்ளையின் தவிப்பு அப்போது தெரியாது. இப்போது நினைத்துப்பார்த்தால் ஏதேதோ நினை வுக்கு வந்து மனசு கனக்கிறது.

தஞ்சா வூர் பக்கம் தாத்தா விற்றுவிட்டுப் போன அந்த நிலத்தில் இப்போது ப்ளாட் போட்டு, கலர் கலராகப் பெயின்ட் அடித்து, ரியல் எஸ்டேட் பலகைகள் நட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது எல்லாம் பிணத்தின் மீது வைக்கப்பட்ட மலர்வளையம் மாதிரி இருக்கிறது. அந்த மண்ணில் இருந்து இன்னும் ஆயிரமாயிரம் பேர் விவசாயத்தைக் கட்டி மாரடிக்க முடியாமல், நிலங்களை விட்டுவிட்டு, திருப்பூர் பனியன் கம்பெனிகளிலும் அரபு நாடுகளின் கொடும் வேலைகளிலும் உழல்கிறார்கள்.

யானை கட்டிப் போரடித்த, சோறுடைத்த சோழ வளநாடு இன்று ஒருவேளை சோற்றுக்கும் பணத்துக்கும் எங்கெங்கோ அலைகிறது. ''மாப்ள... பொங்கலுக்கு ஊருக்குப் போறியா?'' என மலேசியாவில் இருந்து ராஜி கேட்பதற்கும் ''எங்க மச்சான்... போவ முடியுமானு தெரியலையே...'' என சென்னையில் இருந்து நான் சொல்வதற்கும் நடுவில் விளையாடிக்களித்த ஒரு விவசாய பூமியின் வலி நிறைந்த நிகழ்காலமும் எதிர்காலமும் ஒளிந்திருக்கிறது. பண்டிகைக்கு முதல் நாள் போன் பண்ணி, ''யாருல்லாம் வந்திருக்கா? ஆத்துல தண்ணி ஓடுதா?'' எனக் கேட்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போவதை நினைத்தால் வருத்தம் கனக்கிறது!

கொஞ்ச காலம் இருந்த வீட்டைக்கூட நம்மால் மறக்க முடிவது இல்லை. முன்பு வடபழனியில் நான் தங்கியிருந்த வீட்டுப் பக்கம் சமீபத்தில் போனபோது பார்த்தால், அங்கு அந்த வீடே இல்லை. வீட்டை இடித்துவிட்டு சின்னதாக ஒரு காம்ப்ளெக்ஸ் வந்திருக்கிறது.

வீடு இருந்த இடத்தில் மொபைல் சர்வீஸ் கடை வந்திருக்கிறது. அதைப் பார்த்த நொடி, சட்டென்று எதையோ இழந்ததைப் போல இருந்தது. அந்த வீட்டில் தங்கியிருந்தபோது மொட்டை மாடியில் ஒரு நாகஸ்வர வித்வான் குடும்பம் தங்கியிருந்தது. தெலுங்கு நடிகர் பிரேமானந்தம் இன்னும் குண்டடித்து சிவப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார் அந்த வித்வான். காலையில் அஞ்சாறு மணிக்கெல்லாம் குளித்து முடித்து, மாடியில் உட்கார்ந்து நாகஸ்வரம் வாசிக்க ஆரம்பித்துவிடுவார். அரை மணி நேரத்துக்குக் காது அடைக்கும். எங்கள் ரூமில் அவனவனும் அவர் மீது பெருவெறியில் திரிந்தோம்.

வட்டியும் முதலும் - 22

''இவர் டார்ச்சர் தாங்கலைங்க...'' என அவர் மகனே எங்கள் அறையில் வந்து பதுங்கிக்கொள்வான். ஒருநாள் கேஸ் ஸ்டவ் வெடித்து அவர் மனைவிக்குப் பலத்த காயமாகிவிட்டது. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு ஓடியபோது அவருடன் நான் மட்டும்தான் இருந்தேன். ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலேயே அவர் கிடந்தபோது அவ்வப்போது நான் போய் ஒத்தாசைக்கு இருந்தேன். அப்போதுதான் அவரைப்பற்றிய விவரங்களே தெரியும்.

''அட... நீங்களும் நம்மூரா தம்பி'' என்பதில்தான் நெருக்கமானார். அவருக்கு கும்பகோணம் பக்கம் ஒரு கிராமம். அங்கே பிரபலமான நாகஸ்வர வித்வான். அவருக்கு அஞ்சு பெண் பிள்ளைகள். இரண்டு பையன்கள். ஏகப்பட்ட பணப் பிரச்னையில் ஊரைச் சுற்றிக் கடன் வாங்கி, திருப்பித் தர முடியாமல் இருக்கிற நில புலன்களைஎல்லாம் விற்றுவிட்டு, இங்கே ஓடிவந்துவிட்டார். திரும்ப ஊருக்கே போக முடியாத சூழல். ''என்னமோ தம்பி... எப்பிடியோ பொண்டுகளக் கட்டிக் குடுத்துட்டேன். இங்க ஏதோ ஜீவனம் ஓடுது. திரும்ப ஊருக்குப் போகணும்னுதான் ஆச... சாவறதுக்குள்ள அது நடக்காதுபோல இருக்கே. தெனமும் கொஞ்ச நேரம் நாகஸ்வரம் வாசிச்சாதான் ஏதோ கும்போணம் போயிட்டு வந்த மாரி இருக்கும் எனக்கு'' என அவர் சொன்னபோது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்போது அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவரைச் சகித்துக்கொள்கிற கீழ்வீட்டுக்காரர்களோ, மேல்வீட்டுக்காரர்களோ இருப்பார்களா என்றும் தெரியவில்லை!

'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ எனப் பாரி மகளிரின் சங்கப் பாடலிலேயே புலம் பெயர்வின் துயரம் வழிகிறது. இடப் பெயர்வுதான் மனித குலத்தின் ஆதி துயரம். பேரனுபவம். மகத்தான தரிசனம். இருளும் வலியும் விசித்திரமான புதிர்களும் நினைவுகளும் நிறைந்த புலம் பெயர்வை ஈழத் தமிழர்களைப் போல நம்மால் உணர முடியாது.

'உயிர் சுமந்து அலைபவளை ஊருக்குத் திரும்பவிடு கருணை பசுமையிலா பாழ்வெளியில் குந்தவொரு மரமுமிலை அந்தரத்து வானத்தில் நெடுங்காலம் சஞ்சரிக்கவியலாது பெருமித வெளிச்சம் அணைந்த விழிகளும் துரோகிக்கப்பட்ட இதயமும் தீர்ந்துபோன சொற்களுமாய் வாழ்வென்ற பெயரில் எப்படியோ நாட்களை நாம் எரித்துவிட்டுச் சாகலாம் உன் மூக்குத்திக் கல் பதிய முத்தமிட்டு வாவெனச் சொல் பளிங்கு மாளிகை முன் தொட்டிச் செடியாயிருப்பதிலும் எனது தாழ்வாரத்தினோரம் சிறுபுல்லாய் சீவித்தல் சுகம் அம்மா மரணக்கூடெனினும் என் மண் இனிது தாயே மறுக்காதே வருகின்றேன்!’ என்ற தமிழ்நதியின் கவிதையில் தகிக்கும் காயம், நிரந்தரமாக நிலம் இழந்து, புலம் பெயர்ந்து திரியும் கோடானுகோடி அகதிகளின் வலி. போலியான அரசியலுக்கும் ஆறுத லுக்கும் அப்பாற்பட்டு எரியும் அந்தக் காயத்தைக் கண்டு பயந்து, முகம் திருப்பிக்கொள்கிறேன் நான்.

இனம், மொழி, தேசம் எல்லாம் உடைந்து சிதறிக்கிடக்கும் ஒரு தெருவில், புன்னகைத்துக்கொண்டு இருக்கும் அவர்களின் இந்தக் கவிதைக்கு எதிரே வெட்கிக் குனிகின்றன நமது துன்பங் கள். இதைப்போலவே ஓர் ஒடுக்கப்பட்ட தமிழ் அகதியின் மன அவஸ்தைகளை, அலைதல்களைச் சின்ன எள்ளலுடன் பேசும் ஷோபா சக்தியின் கதைகளில் எரிந்துகொண்டு இருக்கின்றன நாம் அறிய முடியாத காயங்கள்.

'கொரில்லா’ நாவலில் வரும் அந்த அந்தோணிதாசனின் அலைதல்கள் பயங்கரமான அனுபவம். அ.முத்துலிங்கத்தின் கதைகள் எனக்குப் புலம்பெயர்வின் சிலிர்க்கச் செய்யும் ஆச்சர்யங்களை அளித்துக்கொண்டே இருக்கின்றன. தாய் நிலத்தின் தீராத நினைவுகளைச் சதா மீட்டிக் கொண்டே, இளைப்பாற ஒரு நிழல் இன்றி, சிறகுகள் வலிக்க வலிக்கப் பறந்து கொண்டே இருக்கும் ஓர் ஏதிலிப் பறவை யின் அபாரமான பாடல்கள் அவை. எத்தனை தேசங்கள்... எத்தனை மனிதர் கள்... எத்தனை கதைகள்... புலம்பெயர்வின் பாதை எங்கும் முத்துலிங்கம் திறந்து காட்டிக்கொண்டே போகும் மனித உணர்ச்சிகள் நாம் கண்டு உணராதவை. அவரது 'அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற சிறுகதையைப் படித்திருக்கிறீர்களா?

வட்டியும் முதலும் - 22

இவர் சூடானில் இருந்தபோது அங்கே இவருக்கு அலி என்ற நண்பர் இருப்பார். அலிக்குப் பல நாடுகளில் சுற்றிக்கொண்டு இருக்கிற வேலை. அதனால் நியூயார்க், டோக்கியோ என எதாவது ஒரு ஊரில் இருந்து இவர் வீட்டுக்குப் போன் பண்ணி 'அங்கே இப்ப என்ன நேரம்?’ என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார். பெரும்பாலும் அது நள்ளிரவாக இருப்பதால் இவர் டென்ஷனாவார். ஒருமுறை அவர் போன் செய்து தனக்கு ஜப்பானுக்கு மாற்றலாகிவிட்ட தால் அங்கேயே போகப்போகிறோம் என்பார்.

வீட்டைக் காலி பண்ணிக்கொண்டு போகும்போது அலியின் மகள் நுஸ்ரத், முத்துலிங்கத்தின் வீட்டில் இருந்து ஒரு முக்கியமான சரித்திரப் புத்தகத்தை எடுத் துப் போய்விடுவாள். இது சில நாட்கள் கழித்துத்தான் இவர்களுக்குத் தெரியும். 'புத்தகத்தைத் திருடிப் போய்விட்டாள். திரும்ப போன் பண்ணும்போது அதைக் கேட்க வேண்டும்’ எனக் கோபமாக இருப் பார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு அலி போன் பண்ணும்போது 'அங்கே இப்ப என்ன நேரம்’ என ஆரம்பிக்க மாட்டார். குரல் தடுமாற அவர் பேசும்போதே 'புத்தகத்தைக் கேளுங்க’ என இங்கே மனைவி சைகை செய்வார். அதற்குள் அலி அழுதபடி நுஸ்ரத் மூளையில் ரத்த நாளம் வெடித்துச் செத்துப்போன தகவலைச் சொல்வார். இதன் பிறகு அந்தக் கதையின் இறுதி வரிகளை முத்து லிங்கம் இப்படி முடிக்கிறார்... 'திருட்டுப்போன அதே அளவுக்கு வேறு ஒரு புத்தகத்தை என் மனைவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனபடியால், என்னுடைய புத்தக செல்ஃபில் செவ்வக வடிவான ஓட்டையன்று, நாங்கள் சூடானை விடும் வரைக்கும் அப்படியே நிரப்பப்படாமல் இருந்தது, உதிர்ந்துபோன கிழவரின் முன்பல்லைப் போல, எப்பவும் ஞாபகப்படுத்தியபடி!’ அட... எவ்வளவு உண்மை!

தொலைத்துவிட்டு வந்திருக்கும் நிலங்களும் வீடுகளும் மனிதர்களுமாக நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன நிரப் பப்படாத ஒரு புத்தக செல்ஃப்... உதிர்ந்து போன ஒரு கிழவனின் பல்!

சின்ன மாமா ஊருக்குக் கிளம்பும்போது வழியனுப்ப இன்னொரு ஊர் நண்பன் வந்திருந்தான். கோயம்பேட்டில் எங்கெங்கும் ஏதேதோ ஊர்களுக்குப் போகும் பஸ்களின் அலறல்களுக்கு மத்தியில் கொட்டு கிற மழையில் பிஸ்லெரி வாங்கிக் கொண்டு பஸ் ஏறியிருந்தார் மாமா. ஜன்னலில் இருந்து நண்பனிடம் பேசிக் கொண்டு இருந்தார் மாமா...

''என்னய்யா... நீ ஊர்ப் பக்கம்லாம் வர்றது இல்லையா?''

''இல்லைங்க... நமக்கு அங்க என்ன இருக்கு?''

''என்னப்பா இப்பிடிச் சொல்லிப்புட்ட...''

''ஆமாங்க... இங்க எவனைப் பாத்தா லும் சாதி கேக்க மாட்டான். சேரி கெடையாது. ஊர விட்டு வந்ததே சந்தோ ஷங்க... மண்ணு வேற... மனுஷங்க வேறங்க.''

மாமா திடுக்கிடும்போதே பஸ் கிளம்பிவிட்டது. தெப்பலாக நனைந்து வீடு வந்த பிறகும் விடிய விடிய அடித்தது எல்லோ ருக்குமான மழை!

(போட்டு வாங்குவோம்...)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan