மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 1

இறையுதிர் காடு - 1
News
இறையுதிர் காடு - 1

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்

அன்று அந்த வனம் வெகு அழகாக இருந்தது! யானைத் தலை போன்ற ஒரு மலைப் பாறையின் மேல் நின்றுகொண்டு, சில்லென்ற காற்றானது திறந்த மார்பின் மேல்பட்டு இடம் வலம் என இரு கூறாய்ப் பிரிந்து சென்ற நிலையில், அதன் சிலுசிலுப்பை ஒரு சுகானுபவமாய் உணர்ந்து, அப்படியே அண்ணாந்து விண்ணகத்தையும் பார்த்தபடி இருந்தான் அந்த முப்பது வயது இளைஞன்.

இறையுதிர் காடு - 1
இறையுதிர் காடு - 1

கூம்புபோல் முடிந்திருந்த தலைமுடியை அவிழ்த்து விட்டதில் அவையும் காற்றில் பறக்கும் கேசக் கொடியாயின! அப்படியே அவன் விண்ணைப் பார்த்தபோது ஒரு உள்ளான் குருவிக் கூட்டம் வியூகம் வகுத்துச் செல்வதுபோல் சீரான இடைவெளியில், சிறகசைக்கும் ஒரு வினைப்பாடும் இன்றி உடம்பாலேயே விசைப்பை நிலைப்படுத்திப் பறந்துகொண்டிருந்தன!

இறையுதிர் காடு - 1
இறையுதிர் காடு - 1விடிவெள்ளி அவிந்து ஆதித்தன் நிமிர்ந்ததில் கிழக்கு வானில் கொல்லன் ஊதிடும் தணல் நெருப்புபோல் ஒரு வெளிச்சம்! அந்த இளைஞன் பாறைமேல் நின்றபடியே ஆதித்தனை வெறித்தான். அரைக்கோளம் கடந்து மறு கரையின் முதல் பாகையில் அது முழுவதுமாய்க் காட்சி தந்தது. அதைக் கண்ட மாத்திரத்தில் அவன் கைகளைக் குவித்தான். மார்பை நிமிர்த்தினான் - அவனது சரீரம் விடைத்தது.

அவனிடம் சூரிய வணக்கம் ஆரம்பமானது. அப்போது அவன் மூச்சை மிக உச்சமாய் உள்ளிழுத்து விட்டான்! பன்னிரண்டு முறை அவ்வாறு செய்தவன், அதன்பின் பாறை மேல் விழுந்து வணங்கி, பின் எழுந்து நின்று என்று பன்னிரண்டு முறை ஆதித்ய வணக்கம் புரிந்தான். பன்னிரண்டாவது முறை அவன் விழுந்து வணங்கிய தருணம், அவனது கண்டங் கழுத்துப் பகுதியில் வியர்வை சுரந்து நீர்ப்பாம்பாய் அவன் தோள்பகுதியில் இறங்கியது. அந்த வியர்வையின் ஒரு துமியளவை ஆட்காட்டி விரலால் தொட்டு பின் நாவின் நடுவில் வைத்தான்.

அந்த வியர்வைத் துமியில் எந்த ருசியுமில்லை. பத்திய உணவு காரணமாக, குறிப்பாக உப்புக்கரிக்கவில்லை. அது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அவன் முகத்தில் அதன் நிமித்தம் ரேகைகள் ஓடி அவன் சிரிப்பதுபோல் தோன்றியது. அவனுக்குள் இப்போது அவனது குருவான போகரின் கட்டளைக் குரல் ஞாபகப்பதிவில் இருந்து ஒலிக்கத் தொடங்கியது.

இறையுதிர் காடு - 1
இறையுதிர் காடு - 1

‘அஞ்சுகா... நாளை அமாவாசை திதியின் முடிவிலும், பின் பிரதமையின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட அறுபது நிமிட நேரம் வேண்டல் நேரம். அவ்வேளையில் பூகோள ரீதியில் ஒன்றுபட்ட சூரிய சந்திரக் கலைகள் அசைந்து இடவலமாய்ப் பிரிந்திடும். அதுபோது சுவர் பல்லியின் ஒட்டிய பாகம் உணரத் தக்க அளவில் அதிர்வுண்டாகி பிரபஞ்சம் முழுக்கப் பரவிடும். இக்காலத்தில் மனதின் எண்ண அலைகளோடு, இந்த அதிர்வு கலக்கும் பட்சத்தில் அந்த எண்ண அலை எவர் குறித்ததாக உள்ளதோ,  அவரைச் சென்று சேர்ந்து அவர் கவனத்தை நம் பக்கம் ஈர்க்கும். நீ அவ்வேளையில் நம் தண்டபாணிச் சொரூபம் திரு உருக்கொள்ள அம்பிகையைப் பிரார்த்தித்துக்கொள்வதோடு, அதன் தொடர்பான நவ மூலங்களும் பாஷாணங்களும் மாத்திரைக் குறைபாடின்றிக் கிடைத்திட வேண்டிக்கொள். நவமரில் நீ கதிரவன்! அதாவது ஆதித்த பாகம் கொண்டவன். சூரியன் உச்சமிருக்கப் பிறந்த உன்னை அதனாலேயே என் ஒன்பது சீடர்களில் ஒரு சீடனாகக் கொண்டுள்ளேன். ஒளிக் கூறுகள் உனக்கு முழுமையாக வசப்படும். உன் மூலமே தண்டபாணிக்குள் ஒளிக் கூற்றைச் சேர்க்க உள்ளேன். எனவே, காலத்தைத் தீரத்தோடு பயன்படுத்து. பிராணக் காற்றை உபாசனையின்போது 9 அங்குலத்தில் நிலைப்படுத்திக்கொள். காலம் முடியவும் உபாசனை முடிந்து பொதினியில் உள்ள என் குடிலுக்கு வந்து சேர். நாளை உன்னை நான் ஒரு பாஷாணப் பரிசோதனையில் பொன்னன் ஆக்கிப் பரிசோதிக்கப் போகிறேன்...”

இறையுதிர் காடு - 1
இறையுதிர் காடு - 1அஞ்சுகன் என்னும் அந்த இளைஞனுக்குள் போகரின் குரல் ஒலித்து அடங்கவும்,  அவன் அவர் சொன்னவாறே நடந்துகொள்ளத் தயாரானான். கீழே விழத் தொடங்கியிருந்த நிழல் நிமித்தம் அப்போதைய கால நேரத்தைத் துல்லியமாய் அறிந்தவன், அப்போதே ‘அமாவாசை திதி’  முடியப்போவது உணர்ந்து,  அந்த யானைத்தலைப் பாறை மேல் அப்படியே பத்மாசனமிட்டு அமர்ந்து 9 அங்குலத்திற்குக் காற்று உள் செல்லும் அளவு சுவாசக் கட்டுமானம் செய்துகொண்டு அம்பிகையின் பீஜ மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்தான்.

இன்று அந்த வானம் அத்தனை அழகாய் இல்லை! அங்கும் இங்குமாய் மேகப் பொதிகள். அவ்வளவுதான்! பறவைகளையும் காண முடியவில்லை. பால்கனியில் நின்றபடி,  சோம்பல் முறித்துக் கொண்டே பார்த்தபடி இருந்தாள் பாரதி. பால்கனியிலேயே இரு தொட்டிச் செடிகள் இருந்து அவை வாடியிருந்தன. ஒன்றில் மணி பிளான்ட். இன்னொன்றில் ஊட்டி ரோஸ். இரண்டுமே தண்ணீர் கண்டிராத சோகையில் இருந்தன. அதைப் பார்க்கவுமே ஒரு சோகம் கலந்த கோபம்தான் அவளுக்குள் முதலில் வந்தது. முதல் காரியமாகத் தன் படுக்கை அறையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு வந்து இரு செடிகளுக்கும் சரிபாதி என்று விட்டாள். அப்போது காபியோடு வந்த பானுமதியைப் பார்த்து முறைக்கவுமே பானுவுக்குப் புரிந்து விட்டது.

இறையுதிர் காடு - 1
இறையுதிர் காடு - 1

“சாரிம்மா... நேத்து ஆரோக்யம் வேலைக்கே வரலை, நானும் இந்த ரூம் பக்கமே வரலை. வந்திருந்தா பார்த்து தண்ணீர் விட்ருப்பேன்...”

“நம்பள மாதிரிதான் பானு இந்தச் செடிகளும், நமக்கு வாய் இருக்கு, இதுக்கு இல்லை - அவ்வளவுதான் வித்தியாசம்.”

“நிறைய வாட்டி இதைச் சொல்லிட்டீங்கம்மா... மன்னிச்சிக்குங்கம்மா...”

“ஆமா, ஆரோக்யம் ஏன் வேலைக்கு வரலை?”

“அதுக்கு பேத்தி பிறந்திருக்கும்மா...”

“மை குட்நெஸ்... ஏன் ஆரோக்யம் எனக்குப் போன் பண்ணல?”

“பண்ணுச்சாம், லைன் கிடைக்கலியாம்...”

“அஃப் கோர்ஸ்... நான் நேத்து போயிருந்த இடத்துல எனக்கு சரியா சிக்னல் கிடைக்கல, போகட்டும் - குழந்தை எப்படி இருக்காம்?”

“அப்படியே செத்துப்போன அவங்கப்பனக் கொண்டிருக்குதாம்... சொல்லி அழுதுச்சு...”

பானு அறைக்குள் நடந்தபடியே பேசிட,  அவள் கொண்டு வந்த காபியைக் குடித்தபடியே உடன் நடந்த பாரதி அங்கங்கே தான் சேகரித்திருந்த கலைப் பொருள்கள் மேல் லேசாய்ப் படிந்திருந்த தூசியைக் கவனித்தவளாய் முகம் மாறினாள்.

‘ `பக்கத்துல புதுசா கட்டடம் கட்றவங்க பாடா படுத்தறாங்கம்மா. எப்பப் பார் சத்தம். ஒரே தூசி. அதாம்மா...’’ என்று பானு அதற்கும் ஒரு சரியான பதிலைச் சொன்னாள். பின் காத்திருந்து காபி டம்ளரை வாங்கிக்கொண்டு திரும்பிச் சென்றாள் பானுமதி. பாரதியும் தன் அன்றைய கடமைகள் நிமித்தம் தயாரானாள். டீப்பாய் மேல் இரவில் தூங்கப் போகும்போது,  பல தடவைகளில் ஒரு தடவையாக படித்த பொன்னியின் செல்வன் திரும்ப புத்தக அலமாரிக்குள் போய் அடங்கிக்கொண்டான். அந்தப் புத்தகத்தை அலமாரிக்குள் செருகும்போது அந்த நாளைய வாழ்க்கை முறை மனதில் காட்சியாக விரிந்து,  `தான்கூட இனி காரைப் பயன்படுத்தாமல் ஒரு ‘புரவி’ மேல் ஏறிக்கொண்டு அண்ணா சாலையில் இருக்கும் தனது ‘தமிழ்வாணி’ வார இதழ் அலுவலகத்திற்குப் போய்வந்தால் எப்படி இருக்கும்..!’ என்று ஒரு விநாடி நினைத்துப் பார்த்தாள். சுகமான அந்தக் கற்பனை ஒரு அரை நொடிக்கும் குறைவான சிரிப்போடு முடிந்து போனது. சட்டென்று ஒரு வேகம் அவளுக்குள் தொற்றிக்கொண்டது.  அந்த அறைக்குள் சகலமும் நேராகத் தொடங்கின.

இறையுதிர் காடு - 1
இறையுதிர் காடு - 1

சுவர்க் கடிகாரம் கையிருப்பு நேரத்தை அவளுக்கு உணர்த்திற்று. லேப் டாப்பின் அன்றைய டைம்டேபிள் ‘போ - முதலில் குளி’ என்றது. குளித்து முடித்துவிட்டு வந்து ஜீன்ஸ், டி ஷர்ட், போனி டைல் சிகை அழகோடு,  கழுத்தில் சன்னமான ஒரு குறப்பெண்மணியிடம் வாங்கிய ‘பவழமாலை’ என்று மாடியிலிருந்து இறங்கினாள்.

அற்புதமான சாம்பிராணி வாசம் அவளின் பாட்டியான முத்து லட்சுமி பூஜை அறைக்குள் இருப்பதை உணர்த்தியது. எட்டிப்பார்க்கவும் கண்ணாலேயே உள்ளே அழைத்து எரியும் கற்பூரச் சுடரை அவள் முன் நீட்டினாள். அவளும் பாட்டிக்காகக் கண்களில் ஏற்றிக்கொண்டாள். அப்படியே அதைக் கீழே வைத்து கன்னத்தில் போட்டுக்கொண்ட முத்துலட்சுமியும், அறைக்கு வெளியே வந்து பாரதியைச் சற்று உற்றுப் பார்த்தாள்.

‘`நோ பாட்டி...  என் டிரெஸ்ஸைப் பத்தின உன் கமென்ட்டை ஆரம்பிச்சிடாதே... திஸ் ஈஸ் வெரி கம்ஃபர்ட் ஃபார் மைசெல்ஃப்’’ என்றாள். முத்துலட்சுமி விடுவதாயில்லை.

‘`பருத்திப் புடவைல இல்லாத சௌகர்யமா இதுல இருக்குன்னு சொல்றே?’’ என்று கேட்ட மறுநொடி நெருங்கி வந்து பாட்டியின் உதட்டின் மேல் கை வைத்து செல்லமாய் இதற்கு மேல் பேசாதே என்று தடுத்தவள், ஆமா டெல்லியில் இருந்து டாடி வந்துட்டாரா?  என்று கேட்டபோதே ஒரு வித ‘சென்ட்’ வாசம் மூக்கை ஊடுருவவும் அது அவள் அப்பா தவறாமல் போட்டுக்கொள்ளும் ‘சென்ட்’ என்பதை உணர்ந்தவளாக,

“என்ன எனக்கு முந்தி ரெடியாயிட்டாரு...ரொம்ப சுறுசுறுப்பான எம்.பியா மாறிக்கிட்டு வராரே...”

என்கிற கமென்ட்டோடு டைனிங் டேபிளை நோக்கி நடந்தாள். அவள் அப்பாவான பாராளுமன்ற உறுப்பினர் ராஜா மகேந்திரனும் முழுக்கை வெள்ளைச் சட்டையை ஏற்றி விட்டபடி டைனிங் டேபிளுக்கு சாப்பிட வித்தியாசம் அமர்ந்தார்.

‘`ஹாய் டாட்...”

“ஹாய் க்யூட்.! எனக்காக வெயிட்டிங்கா?”

“அஃப்கோர்ஸ் - உக்காருங்க - நிறைய பேசணும்?” - அவரும் உட்கார்ந்தபடியே ‘`தெரியும்மா, நீ என்ன கேக்கப்போறேன்னு... பார்லிமென்ட்ல நான் என்ன பேசினேன்,  ரெஸ்பான்ஸ் எப்படி இருந்ததுன்னு கேப்பே நீ...  ரிப்போர்ட்டர்ஸ் மூலமா உங்களுக்குத்தான் எல்லாம் தெரிய வந்திருக்குமே!’’ என்றபடியே முத்துலட்சுமி போட்ட இட்லியை விண்டு சட்னியோடு புரட்டி, சாப்பிட ஆரம்பித்தார் ராஜா மகேந்திரன். பதிலுக்கு ஏதோ கேட்க நினைத்தவளை முறைத்த முத்துலட்சுமி ‘`பேசாம சாப்பிடு பாரதி... உடம்புல சாப்பிடுறது ஒட்டவேண்டாமா?’’ என்றாள்.

இடையிட்டது ராஜா மகேந்திரனின் கைப்பேசி.

‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ எனும் டி.எம்.எஸ் குரலிலான ரிங்டோன் காதருகே செல்லவும் முடிந்து போனது. யார் என்ன பேசினார்களோ தெரியாது. முகத்தில் அதுவரை நிலவி வந்த ஒரு வித சாந்தம் கலைந்து கலக்கம் தெரியத் தொடங்கியது. “ஓ.கே... ஓ.கே... நான் பாத்துக்கறேன்...” என்றபடியே அந்த ஐ போனை டேபிள் மேல் வைத்தார் ராஜா மகேந்திரன்.

‘`டாட் எனிதிங் ராங்?” - கொள்ளு சூப்பை அருந்தியபடியே கேட்டாள் பாரதி.

“நத்திங்... எ ஸ்மால் த்ரெட்... தனியா எங்கேயும் போகாதீங்கன்னு ஐ.ஜி. ஆபீஸ்ல இருந்து வார்னிங்...”

“உங்களுக்கா த்ரெட்?”

“சென்ட்ரல் மினிஸ்டர் ஆயிடுவேங்கற பொறாமைல சிலர் பூச்சி காட்றாங்கம்மா...”

“யார் டாடி அவங்க?”

“உனக்கு எதுக்கு அதெல்லாம்? இதெல்லாம் அரசியல்ல ரொம்ப சகஜம்...” - பேச்சோடு எழுந்து கொண்டு வாஷ்பேசின் நோக்கி நகர்ந்தார் மகேந்திரன். பாதிகூட சாப்பிடவில்லை.

திரும்பி வந்து அந்த ஐ போனை எடுத்துக்கொண்டு அவரது அலுவலக அறை நோக்கி நடந்தார். அவர் மறையவும் முத்துலட்சுமி ஆரம்பித்தாள்.

இறையுதிர் காடு - 1
இறையுதிர் காடு - 1

“உன் அப்பன் எப்படியும் இந்த வருஷம் சொந்தமா காலேஜ் கட்ட அஸ்திவாரம் போட்டுடணும்னு துடிக்கிறான். அதுக்கான இடம் வாங்கறதுலதான் பிரச்னை. அந்த இடத்துக்குப் போற வழில,  அரசியல்வாதிங்களோட ஆக்கிரமிப்பு கொஞ்சம் இருக்கும்போல... மத்தியில இருந்தே பிரெஷர் கொடுத்து ஆக்கிரமிப்புகளை எல்லாம் புல்டோசர் வெச்சு இடிச்சிருக்கான். அவங்க சும்மா இருப்பாங்களா... வெட்டுவேன் குத்துவேன்னு தொடங்கிடுவாங்களே?”

முத்துலட்சுமி மகேந்திரன் சொல்லாததைச் சொல்லி, பிரச்னையின் தன்மையைப் புரியச் செய்தாள்.

“என்க்ரோச்மென்ட் பிராப்ளமா?’ என்று கேள்வியாய் முணுமுணுத்தவள், மீதத்தைத் தன் பத்திரிகை ரிப்போர்ட்டர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிவு செய்தாள். பின் சாப்பிட்டு முடித்தவளாகப் புறப்படத் தயாரானாள்.

“பாரதி...” - முத்துலட்சுமி தடுத்தாள்.

“என்ன பாட்டி?”

“உனக்கு இந்த சண்டே லீவுதானே?”

“ஆமாம்... அதுக்கென்ன?”

“பழனி வரை போய்ட்டு வரலாமா?”

“பழனி... யூ மீன் பழனி கோயிலுக்கா?”

“ஆமாம்மா... உன் வரைல ஒரு வேண்டுதல் ரொம்ப நாளா பண்ணாம அப்படியே இருக்கும்மா...”

“என்ன வேண்டுதல்?”

“சொல்வேன்... அப்புறம் கத்தக் கூடாது.”

“அப்ப நான் கத்தாத மாதிரி சொல்லு.”

“அதான் முடியாதே...”

“டைம் ஆகுது பாட்டி, சீக்கிரமா சொல்லு...”

“நீ உன் அம்மா கிருத்திகை விரதம் இருக்க, பிறந்தவ - தெரியும்தானே?”

“எத்தனை தடவதான் சொல்வே... அதுக்கென்ன இப்போ?”

“இல்ல... நம்ம குலதெய்வமே பழனி முருகன்தாம்மா, அந்த முருகனுக்கு முடி காணிக்கை கொடுக்கறதுதான் நம்ம வழக்கம்.”

“வாட்... முடிவெட்டிக்கணுமா?”

-அதிர்ந்தாள் பாரதி.

“கத்தாமக் கேளு. உன் அப்பனும் என்னை இப்ப த்ரெட்டு, அது இதுன்னு ரொம்பவே பயமுறுத்தறான். நீகூட ஒரு கார் ஆக்ஸிடென்ட்ல சிக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய்ட்டு வந்தே...”

“சோ வாட்?”

“குலதெய்வ வழிபாட்டுல குறை இருந்தா தான் இப்படி எல்லாப் பக்கமும் பிரச்னை ஏற்படும்மா... அந்த முருகனை எல்லாரும் ஒரேயடியா மறந்தா எப்படிம்மா?”

“என்ன பாட்டி நீ பேசறே? நான் வந்து என் தலை முடியைக் கொடுத்துட்டா எல்லாம் சரியா போயிடுமா? உனக்கே இது ஒரு வடிகட்டின முட்டாள்தனமா தோணல?”

“காலம் காலமா நடக்கற விஷயத்தை முட்டாள்தனம்னெல்லாம் சொல்லாதே பாரதி. ஒவ்வொரு நாளும் திருப்பதிலயும், பழனிலயும்  ஆயிரக்கணக்குல முடிகாணிக்கை தர்றாங்க. அப்ப அவங்கெல்லாம் முட்டாள்களா?”

“ஐயோ பாட்டி... எனக்கு விவரம் தெரியறதுக்கு முந்தியே நீ இதை எல்லாம் முடிச்சிருக்கணும். இப்ப என்னக் கேட்டா நான் ஒத்துக்க மாட்டேன். நான் தெரியாமத்தான் கேக்கறேன். இந்த உலகத்தையே படைச்சதா சொல்லப்பட்ற கடவுளுக்கு, போயும் போயும் அல்ப தலை முடியையா தருவாங்க? இது என்ன பழக்கம் பாட்டி?”

 அலுத்துக்கொண்டே தன் ஹேண்ட் பேக்கிலிருந்து கார் சாவியை எடுத்துக்கொண்டு,  திரும்ப பேக்கை மூடியவள் ‘பை’ என்றபடி புறப்பட்டாள். அதற்குமேல் அவளிடம் பேச முடியாது. பேசினாலும் நின்று அவள் கேட்க மாட்டாள் என்று முத்துலட்சுமிக்கும் தெரியும்.

துரியானந்தத்தின் அந்தப் பழைய சாமான் மற்றும் பழைய புத்தகக் கடை மயிலாப்பூர் லஸ் பகுதியில் இடங்கோடான ஒரு பிளாட்பாரக் கடையாக விரிந்து கிடந்தது. ஒரு புறம் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ரமணி சந்திரன் போன்றோர் முகம் நாவல் அட்டையில் சிரித்தப்படி கிடக்க,  மறுபுறம் தேவி பாகவதம், அபிதான சிந்தாமணி, விக்கிரமாதித்தன் கதை, அர்த்தமுள்ள இந்து மதம் என்கிற தடித்தடியான புத்தகங்கள்! எல்லாப் புத்தகங்களும் பழுப்பேறிப்போய் முனைகள் ஒடிந்திருந்தன. பக்கத்திலேயே ‘வால்காவிலிருந்து கங்கை வரை’யில் தொடங்கி ‘ஹிட்லர் வரலாறு’ வரை என்று உலக சரித்திரத்தைச் சொல்லும் நூல்கள். இத்தனைக்கும் நடுவில் பல்லாங்குழி, ஊஞ்சல் பலகை, பாதாளக் கரண்டி உண்டிவில், லாந்தல் விளக்கு, பரமபத அட்டை என்கிற வீடு காலி செய்யும் போது ‘வேண்டாம்’ என்று கருதித் தூக்கிப் போட்ட பொருள்கள் கிடந்தன. ஒரு ஓரமாக ‘உடைவாள்’ ஒன்றும் கிடந்தது. இரண்டடி நீளத்தில் செப்புத் தகட்டு உறைக்குள் வேலைப்பாடுள்ள கைப்பிடியோடு கிடந்த அதை, புத்தகம் வாங்க வந்திருந்த ஒருவர் கவனித்து எடுத்தார்.

அந்த உடைவாள் நல்ல கனத்தோடு இருந்தது.

‘என்ன துரியானந்தம்... அந்தக் காலத்துக் கத்தியாட்டம் இருக்குது. எங்க கிடைச்சிச்சு?’  என்று கேட்டபடியே உறையிலிருந்து வாளை உருவ முயன்றார். சட்டென்று வராமல் இறுகிய பிடிப்போடு இருந்த கைப்பிடியை தம் கட்டி இழுக்கவும்,  சரக்கென்ற சத்தத்தோடு வெளிப்பட்ட அந்தப் பளபளப்பான வாள் முனை, மண்டியிட்டு சட்டை போடாமல் பனியனோடு அமர்ந்தபடி இருந்த துரியானந்தத்தின் தோளில் பட்டு ஒரு கோடு போட்டது. போட்ட வேகத்தில் ரத்தம் பீறிட எல்லாம் நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது. வேகமாய், ஒரு கிழிந்த துணியை எடுத்து ரத்தம் கசியும் இடத்தில் வைத்து அழுத்திக்கொண்ட துரியானந்தம் கோபமாய், ‘`என்ன சார் இப்படிப் பண்ணிட்டிங்க... பாத்து உருவ மாட்டீங்க?’’ என்று கோபமாய்க் கேட்டான். ‘`சாரி சாரி, துரியானந்தம்... நான் இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கல வெரி சாரி... காயம் பலமா பட்ருச்சா?’’

‘`அதான் பட்ருச்சே அப்புறம் என்ன? இதை யார் உருவினாலும் ரத்தம் பாத்துடுது! நான் எட்டாவது ஆள்” - என்று துணியை அமுக்கியபடியே துரியானந்தம் சற்று வலியை முகத்தில் காட்டினான். அதைக் கேட்ட நொடி அந்த நபர் அந்த வாளை பீதியோடு பார்த்தார். அதில் அவ்வளவாகப் புரியாதபடி அந்த நாளைய தமிழ் வட்டெழுத்துகள். ‘எட்டு கிணறு சுடலைக்கு இட்டமுடன் சமர்ப்பணம்’ என்கிற எழுத்துகள் மட்டும் படிக்க முடிந்ததாய் இருந்தன. அடுத்த நொடி அந்த வாளை, அந்தப் பழைய பொருள்களுக்கு நடுவில் போட்டுவிட்டு, தொடக் கூடாததைத் தொட்டு விட்டவர் போல் ஒதுங்கத் தொடங்கினார். துரியானந்தமும் ரத்தத்தைத் துடைத்துத் தனக்குத் தானே கட்டு போட்டு முடித்திருந்தான். அப்போது பாரதியின் கார், அவன் கடைமுன் நின்ற நிலையில் பக்கவாட்டுக் கண்ணாடி விர்ர் என்று இறங்கியது. அவளைப் பார்த்த நொடி `‘நீ கேட்ட அந்தப் புத்தகம் இன்னும் வரலை பாப்பா...’’ என்றான், தோள் கட்டைத் தொட்டபடியே...

“தோள்ல என்ன காயம்?”

“இப்பதான் பாப்பா... தா இந்தக் கத்தி பட்ருச்சு” - என்று உடைவாளைக் காட்டவும் டிரைவிங் சீட்டில் இருந்தபடியே பார்த்த பாரதி ‘ஹை அந்தக்காலத்துக் கத்தி... எடுத்து வைங்க. நானே வாங்கிக்கறேன். இப்ப டைமில்ல, வரேன். யாருக்கும் கொடுத்துடக் கூடாது” என்று சொன்னபடியே காரைக் கிளப்பினாள்.

அவள் கார் விலகவும் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த இன்னொருவர் தன் பங்குக்கு வாளைப் பார்த்தவராக நெருங்கிச் சென்று எடுத்துப் பார்த்தார்!

பார்த்தபடியே ‘`எங்கையாவது ஏலத்துல எடுத்தியா?’’ என்று கேட்டார். ‘`இல்லசாமி... என் மவன் எங்க இருந்தோ பொறுக்கிகிட்டு வந்திருக்கான். எண்ணெய் போட்டு சுத்தம் செய்யணும். உறைக்குள்ள பச்சை புடிச்சி ஒரே இறுக்கமா இருக்குது’’ என்று அவன் சொல்லும் போதே அவரும் அந்த வாளை உருவிப்பார்க்க முனைந்தார். இம்முறை வாள் நுனி அவர் வலது புருவத்துக்கு மேல் கீறலோடு பட்டதில் ரத்தம் துளிர்த்து அவரைத் துள்ளச் செய்தது.

‘`சொல்லச் சொல்ல உருவிட்டிங்களா... திரும்பவும் ரத்தமா?’’ என்றவன் முன் கத்தியைக் கீழே போட்டவர் கர்ச்சீப்பை எடுத்து நெற்றிமேல் வைத்துக்கொண்டவர் வேகமாய்ப் புறப்பட்டார்.

துரியானந்தம் பயத்தோடு அந்தக் கத்தியைப் பார்க்கத் தொடங்கினான்!

ன் அலுவலகத்திற்குள் நுழைந்த பாரதி தனக்கான ‘உதவி ஆசிரியர்’ சீட்டிலும் அமர்ந்து,  லேப் டாப்பையும் திறந்தபோது இன்டர்காமில் அமட்டல்! பெரிய வளையம் தொங்கும் தன் காதை ரிசீவருடன் பொருத்தவும். ``குட்மார்னிங், பாரதி’’ என்கிற எடிட்டர் ஜெயராமனின் குரல் ஒலித்தது. ‘`வெரிகுட் மார்னிங் சார்.”

‘`கொஞ்சம் என் டேபிளுக்கு வரியா?’’

‘`வித் இன் தர்ட்டி செகண்ட்ஸ் சார்.’’

சொன்னதுபோல் முப்பதாவது செகண்ட் அவரின் குளிரூட்டமான அறையில் அவர் முன் சென்று நின்றாள்.

“பாரதி ஒரு அசைன்மென்ட்...”

“சொல்லுங்க சார்”

“யோகா ஸ்காலர் திவ்ய ப்ரகாஷ் பற்றி கேள்விப்பட்ருக்கியா?”

“யெஸ் சார்...”

“அவர்தான் இந்த வாரம் நம்ப கவர் ஸ்டோரி ஹீரோ...”

“நம்ப கவர் ஸ்டோரிக்கு இந்த மனிதரா?”

“லெஃப்ட், ரைட்டால்லாம் டிவைட் பண்ணி யோசிக்காதே, நான் கல்கத்தா போய்ட்டு ஃப்ளைட்ல திரும்பும்போது எனக்குப் பக்கத்து  சீட்ல ஐயாதான் உட்காந்திருந்தார். மூணரை மணி நேரம் சாலிடா அவரோட கழிஞ்சது. நான் ஒரு விஷயத்தை நினைக்கும்போதே அதை அப்படியே போட்டு உடைக்கறாரு. எப்படின்னு கேட்டா,  ‘யோகாவுல இது சாதாரணம். எல்லாம் ‘மைண்ட் கான்சன்ட்ரேட் பவர்’னு சொல்றார். நீ நம்பமாட்டே ‘என்ன இந்த ஆள் பயங்கர ‘உட்டாலக்கடியா’ இருக்காருன்னு, நான் கொஞ்சம் லோக்கலா திங்க் பண்ண செகண்ட், ‘உட்டாலக்கடி’ இல்ல மிஸ்டர் ஜெயராமன் எல்லாமே ‘ஹ்யூமன் பவர்’தான்.  ‘ஹியர் ஈஸ் நோ மிஸ்ட்ரி, நோ மேஜிக்... எல்லாமே மென்டல் ஸ்ட்ரென்த் - இட்ஸ் எ செயின்ட்ஸ் சைன்ஸ் அதாவது இது ஒரு வகை ‘சாமியார்கள் விஞ்ஞானம்’ னு சொல்லி என்னை ஒரு உலுக்கு உலுக்கிட்டாரு.”

“அப்ப இவரை கொஞ்சம் பிரிச்சு மேயணுமா சார்?”

“எக்ஸாக்ட்லி. வித்தியாசமா புதுசா விஷயங்கள் கிடைக்கணும். நியூட்ரலா பிஹேவ் பண்ணு. ‘டுபாக்கூர்’னும் நினைச்சிடாதே ‘மகான்’னும் கவுந்துடாதே...”

“ஓ.கே. சார்...”

“நம்ப போட்டோகிராபர் கண்ணனைக் கூட்டிகிட்டுப் போ.”

“கண்ணனுக்கு இன்னிக்கு காட்ராக்ட் ஆபரேஷன் சார். லீவு போட்டிருக்கார். நானே போட்டோஸ் எடுத்துட்றேன் சார்.”

“டேக் கேர்!”

டுத்த நூற்று இருபதாவது நிமிடம் ஒரு கோயில் மண்டபத்தில் அவரைப் பின்பற்றும் ஒரு முப்பது பேருக்கு விசேஷ பயிற்சியைக் கொடுத்துவிட்டு வந்து,  காத்திருக்கும் பாரதியின் முன் உள்ள வெண்மையான மெத்தைமேல் திரிகோண கனத்தில் அமர்ந்த திவ்யப்ரகாஷ் ‘`வாம்மா பாரதி’’ என்றார் மிக இதமான குரலில்.

எழுபது வயதிருக்கலாம் - ஆனால் ஐம்பது தான் இருக்கும் என்று சொல்லும்படியான தேகம். தலைமுடியில் ஒரு முடிகூட வெளுப்பில்லை. டை அடித்த மாதிரியும் தெரியவில்லை. கண்ணிரண்டிலும் ஆசிட் விட்டுக் கழுவினது போல் ஒரு சுத்தம். கன்னக் கதுப்புகளில் சுருக்கமில்லாத பளபளப்பு - நாசியிலும் ஒரு குத்தாத கூர்மை... நெற்றியில் படுக்கை வாக்கில் விபூதிக்குப் பதிலாக ரேகைகள்!

மொத்தத்தில் தோற்றமே அவர் அசாதாரணன் என்பதை பாரதிக்குள் உணர்த்திய அந்த நொடிகளில் அவர் ‘`உன் உண்மையான பேர் கார்த்திகாதானே?” என்று கேட்கவும் பாரதிக்கு திக்கென்றது.

“ஆமாம்... உங்களுக்கெப்படித் தெரியும்?”

“உங்கம்மாகூட ஒரு கார் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க இல்லை?”

“ஆமாம்... நான் உங்களைப் பேட்டி எடுக்க வரேன்னு தெரிஞ்சு என்னப் பத்தி யார்கிட்டயாவது கேட்டுத் தெரிஞ்சுகிட்டீங்களா ஜீ?”

“நோ நோ... அந்த ஆக்ஸிடென்ட் சம்பவம் உனக்குள்ள இப்பவும் அழியாம அப்படியே இருக்கு. உன் அம்மா உயிர் பிரியும் போதுகூட கார்த்திகான்னு உன் பெயரைச் சொல்லிக்கிட்டே தான் செத்திருக்கணும், எனக்கு அந்தக் குரல் கேட்டது. எனக்கு ஒருத்தரைப் பத்தித் தெரிஞ்சுக்க மற்ற யார் தயவும் தேவையில்லம்மா...”

ஆரம்பமே திவ்யப்ரகாஷிடம் அதகளமாக இருந்தது. அவரை அடுத்து எப்படி அணுகுவது என்பதிலும் ஒருவிதக் குழப்பம் அவளுக்குள் ஏற்பட்டது.

“உன் பாட்டிகூட பழனிக்குப் போய்வர ஆசைப்பட்டாங்க இல்ல?”

-இந்தக் கேள்வி பாரதியை ஒரு உலுக்கே உலுக்கிவிட்டது.

‘`நீ இனிமே அடிக்கடி போவ... போயாகணும்! மாயம்னும் மந்திரம்னும் முத்திரை குத்தி, பயந்தும் அலட்சியமாகவும் பாக்குற பல விஷயங்கள் உன் வாழ்க்கைல இனி நிறைய நடக்கப்போகுது. அதெல்லாமே ‘சித்த விஞ்ஞானம்’னும் சொல்லலாம். நீ பிறந்திருக்கிறதே அதையெல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்காகத்தான்...” - அவர் போட்ட போடில் விக்கித்து நின்றாள் பாரதி.

- தொடரும் 

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்