
பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்
சில வருடங்களுக்கு முன்னர் நாகர்கோவிலுக்கு ஒரு ஜோலியாகச் சென்றிருந்தேன். நண்பர் ஜீவா சார்தான் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார். அன்றைய கதை விவாதம் முடிந்ததும், ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்றார். பத்திரியையும் ஆட்டுக்கறி பிரட்டலையும் ஆர்டர் கொடுத்துவிட்டு என்னிடம் திரும்பினார். “சார் பத்திரி நாரோயில் ஸ்பெஷல்... நல்லாருக்கும் சாப்பிடுங்கோ...” என்றார். ``பத்திரியைப் பிட்டு, அதில் பிரட்டலைவைத்து அப்படியே வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார். அதுவொரு ரசவாத சுவையாகத்தான் இருந்தது. அப்போது, நைந்துபோன காக்கி டவுசரும், வெற்றுடம்புமாக தொப்பையைத் தள்ளிக்கொண்டு ஹோட்டலை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளி சட்டென்று எழுந்து அவரிடம் சென்று, “கிட்ணா... உள்ள வரணும்...” என்று பவ்யத்துடன் நின்றார். `கிருஷ்ணன்’ என்ற பெயர்தான் ‘கிட்ணா’வாக அழைக்கப்படுகிறது. வழக்கமாக இம்மாதிரியான நபர்களை துரத்தித்தான் பார்த்திருக்கிறேன். முதன்முறையாக மரியாதையுடன் அழைப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சடை விழுந்த கேசத்துடன், வெளிர் தாடியில், தோளில் அழுக்கடைந்த பையை மாட்டிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் பிச்சை கேட்பவராக எனக்குத் தெரியவில்லை. நான் பார்த்துக்கொண்டிருப்பதை ஜீவா பார்த்துவிட்டார். “சார் அவர்தான் கிட்ணா... நாரோயிலோட ராசிக்காரன்... உள்ள வந்து கல்லாவத் தொறந்து கிட்ணா எவ்ளோ எடுக்கணும்னு நெனக்கிறாரோ அவ்ளோ எடுத்துகிட்டுப் போலாம்... அப்படி எடுத்துட்டா ஒரு மாசத்துக்கு இந்த ஹோட்டலோட வருமானம் சும்மா எகிறிடும் சார்... இது இந்த ஊரோட நம்பிக்கை சார்...” என்று பத்திரியை முடித்துக்கொண்டார்.
ஜீவா சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. முதலாளி அதே பவ்யத்தோடு நின்றுகொண்டிருக்க, கிட்ணா என்ன யோசித்தார் என்று தெரியவில்லை “முடியாது முடியாது... மொதலாளி ஏசுவா” என்று சொல்லி கடகடவென நடந்து, பக்கத்துக் கடைக்குள் நுழைந்துகொண்டார். பக்கத்துக் கடை முதலாளிக்கு அடித்தது யோகம். ராசிக்காரனை கும்பிட்டு, கல்லாவில் உட்காரவைத்தார். கிட்ணா வராத சோகத்தில் ஹோட்டல் முதலாளி மறுபடியும் கல்லாவுக்கு வந்து அமர்ந்துகொண்டார்.
ஜீவா பில்லை முடித்துக்கொண்டு வெளியே வந்தார். பெட்டிக்கடையில் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டோம். கிட்ணன் அந்தக் கடையிலிருந்து வெளியே வந்தார். விறுவிறுவென அவர் நடப்பது ஏதோ ராணுவத்துக்கான பயிற்சியைப் போன்றே இருந்தது. வலது கையை மூடி ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி, ‘வேண்டாம்! வேண்டாம்!’ என்பதுபோல ஆட்டிக்கொண்டே கொஞ்சம் உடலைச் சாய்த்தபடி நடந்ததும் வித்தியாசமாக இருந்தது. “ஜீவா சார்... இவர் வீடு எங்கே சார் இருக்கு?” என்று கேட்டேன். “நாரோயிலே இவன் வீடுதான் சார்” என்று சிகரெட்டை இழுத்துக்கொண்டார். “இவரோட பேசலாமா?” நானும் இழுத்துக்கொண்டேன். “இவன் எந்தத் திண்ணையில படுக்குறான்னு பார்க்கணும்... அப்புறம் அவன் நம்பகிட்ட பேசணும்னு அவன்தான் முடிவு பண்ணுவான்... ஒரு விஷயம் தெரியுமா சார்... நம்ம வீட்டுத் திண்ணையில படுத்துட மாட்டானா இந்த ராசிக்காரன்னு பல பேரு ஏங்குவானுக சார்... ஆனா, திடீர்னு போய் சுடுகாட்டுல படுத்துக்குவான்... அவன் முடிவு பண்றதுதான்” என்றார். எங்களின் நல்ல நேரம், பத்தடி தூரத்தில் பூட்டிய கடையின் வெளியே கிட்ணா உட்கார்ந்துகொண்டார். “இன்னிக்கு அந்தத் திண்ணதான்... நம்ம கிட்ணாவோட வீடு” என்று சிரித்தார். ஆகாசத்தைப் பார்த்தபடி, கால் மேல் கால் போட்டு விச்ராந்தியாகப் படுத்துக்கொண்டிருந்தவர் ஜீவாவைப் பார்த்ததும், காலை இன்னும் நன்றாக ஆட்டினார். பக்கத்தில் அமர்ந்துகொண்டோம்.
“என்ன கிட்ணா... நல்லாரிக்கியாடே...” ஜீவா கேட்டதற்கு, காலை ஆட்டிக்கொண்டே தலையை ஆட்டி, பதிலாகச் சொன்னார். “சார் இவன்ட்ட ஒரு பத்து ரூபா கொடுத்து வாங்குங்க... ரொம்ப ராசிக்காரன் சார்” என்றார். பத்து ரூபாயை எடுத்து கிட்ணாவிடம் நீட்டினேன். சிறிது நேரம் காலை ஆட்டிக்கொண்டிருந்தவர் “முடியாது... முடியாது... மொதலாளி ஏசுவா...” என்று கண்களை மூடிக்கொண்டார். “சார் இன்னும் கொஞ்சநாள் இங்கதான் இருக்கப் போறீங்க.. பார்த்துக்கலாம் வாங்க சார்” என்று ஜீவா அறையை நோக்கி நடந்தார்.

மறுநாள் கதை விவாதத்துக்கு விடுமுறை என்பதால், ஊரைச் சுற்றலாம் என்ற திட்டத்துடன் இருந்தேன். “சார் புத்தேரி குளத்துக்குப் போயி குளிக்கலாம்... நல்லாயிருக்கும்” என்றார். ஊர்க் குளம் என்றால், மனது குதூகலித்துக்கொள்கிறது. ஒரு சிறுவன் அநாயாசமாக நீரில் மூழ்கினான். நாங்களும் குளிக்கத் தயாரானோம். அப்போதுதான் கிட்ணன் கோவணத்தோடு ஆள்காட்டி விரலை ஆட்டிக்கொண்டே குளத்தில் குதித்தார். உள்ளே போன கிட்ணன் தாமரையாட்டம் மலர்ந்த தண்ணீர்க் குமிழிலிருந்து, ஒரு பூப்போல வெளியே வந்தார். நீந்தியபடியே முகத்தை அலம்பிக்கொண்டார். “என்னடே ஜீவா... சென்னயில உம்மா சொகமா இருக்காளா?” என்று கேட்டார். குளத்தின் கரையில் காலை மட்டும் தண்ணீரில்வைத்து, குளிரின் கதகதப்பில் ஆட்டிக்கொண்டிருந்த ஜீவா, “அவாள்லாம் சுகந்தான்... நீயென்ன பெரிய ராசிக்காரனா ஆயிட்டியோ... நீ கோட்டிக்காரனால்லா ஆவேன்னு நெனச்சன்...” ஜீவா கிட்ணனை வம்புக்கிழுத்தார். “ராசிக்காரனும் நாந்தான்... கோட்டிக்காரனும் நாந்தாண்டே... நீ பெரிய சினிமாக்காரன்ல? என்னைய படம் புடிடே...” என்று திரும்பவும் ஒரு முங்கலுக்குள் போனார். நானும் குளத்துக்குள் சாடினேன். பரஸ்பரம் என்னை கிட்ணனுக்கு அறிமுகம் செய்துவைத்தார். என்னைப் பார்த்துச் சிரித்தார். இனி பத்து ரூபாயைக் கொடுத்து வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது.
குளித்து முடித்து, குளத்திலிருந்து வெளியேறினோம். மூவரும் நடந்தோம். கடை வீதியில் வந்தபோது திடீரென கிட்ணன் சரிந்து விழுந்தார். ஒரு கையும் வாயும் கோணிக்கொண்டு வெட்டு வந்துவிட்டது. கடைவாயில் பெருகிய கோழை திரண்டு வெளியேறியது. கையும் காலும் இழுத்துக்கொண்டே இருக்க, எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கடையைத் திறக்கப் போன நபர் சாவியை எடுத்து வந்து வெட்டிக்கொண்டிருந்த கிட்ணனின் கையில் திணித்தார். ஜீவா காற்று வீசினார். சிறிது நேரம் வெட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்து, மெள்ள மெள்ள அடங்கியது. ஒரு சொம்பில் தண்ணீரைக் கொடுத்தார்கள். கொஞ்சமாகக் குடித்துக்கொண்டார். எழுந்து உட்கார்ந்து ஆசுவாசமானார். “கிட்ணா!” என்ற ஜீவாவை பாவம்போல பார்த்தார் கிட்ணா. “கிட்ணா அப்படியே கடைக்கு வந்து... கல்லாவுல உக்காந்துட்டு போடே...” என்றார் மரக்கடைக்காரர். “முடியாது... முடியாது... மொதலாளி ஏசுவா” என்று எழுந்தவர், ஆள்காட்டி விரலை ஆட்டிக்கொண்டே, உடலை சாய்த்துக்கொண்டு நடந்து சென்றார்.

இரவு அறையில் ஜீவா போத்தலின் வழியாக கிட்ணனை நினைவுபடுத்திப் பேசினார். “ஒரு ஊருக்கே ராசிக்காரனா இருக்குற கிட்ணன்... அவனுக்கு ராசிக்காரனா இருந்ததே இல்ல சார்... கடன் தொல்லையில தற்கொல பண்ணிக்கிட்ட குடும்பம் சார்... இவன் போதாத நேரம் பொழச்சிகிட்டான்... எங்க போறதுனு தெரியாம நாரோயிலுல கெடச்சதைச் சாப்பிட்டுகிட்டு... திண்ணையில தூங்குறான்... நொடிச்சுப்போன பானக்காரங்க வீட்டுத் திண்ணையில இவன் தூங்குன நேரம்... அவாளுக்கு வியாபாரம் சூடு பிடிச்சிக்கிச்சு சார்... இவன் வந்தா... நின்னா... காசு எடுத்தா எல்லாமே ராசியா மாறிடும்னு எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை... என்னமோ அப்படித்தான் நடக்கவும் செய்யுது...” ஒரு போத்தலை உறிஞ்சிக்கொண்டார்.
“சார் இவுரத்தான் ராசின்னு நம்புறாங்கல்ல... போயி கல்லாவுல காசு எடுத்து, வீடு வாசல்னு நல்லா இருக்கலாம்ல... ஜோசியம் மாதிரி பார்த்துகிட்டு... ஜம்முனு இருக்கலாமே சார்?” நானும் ஒரு போத்தலை இழுத்துக்கொண்டேன்.
“சார்... கிட்ணனுக்கு எந்தத் தேவையுமே இல்ல சார்... கல்லாவைத் தொடச்சி எடுத்தாக்கூட இங்க இருக்கிற மொதலாளிங்க சந்தோஷந்தான் படுவாங்க... ஆனா, இவனுக்கு ஒத்த ரூபா போதும்னு நெனப்பான்... அதுவும் அவனுக்குத் தோணணும்... அப்பத்தான் வருவான்... அவன் ஒரு சித்தன் சார்.” கோழியின் முள்ளைக் கடித்துத் துப்பினார்.
“அவனுக்குனு யாருமே இல்லியா சார்?” திரும்பவும் கேட்டேன். “அதான் சொன்னனே சார்... அவனுக்கு நாரோயிலே இருக்குன்னு...” சொல்லிவிட்டு போத்தலைக் கொஞ்சமாக எடுத்துக்கொண்டார் ஜீவா. சிறிது இடைவெளிக்குப் பிறகு “ஆனா சார்... அவனுக்கு... ஒரு பொண்ணைப் புடிக்கும் சார்... பேரு சுலோச்சனானு நினைக்கிறேன்... ஆனா, அவாள் வீட்டுல இவனைப் பைத்தியக்காரன்னு நெனச்சு அந்தப் பிள்ளைய வெளிய கட்டிக் குடுத்துட்டாங்க... `சுலோ’ன்னுதான் கூப்புடுவான்... அவகிட்ட பேசும்போதெல்லாம் கிட்ணன நீங்க பார்க்கணும்... சும்மா ஜம்முனு இருப்பான்... கிட்ணன அப்படித் தாங்குனா... ஒருவேளை அவளைக் கல்யாணம் பண்ணியிருந்தா... இப்படி ரோடு ரோடா அலையத் தேவையில்லாம போயிருக்கும்... காலையில நடக்க ஆரம்பிச்சான்னா... ஏன் நடக்குறான்... எதுக்கு நடக்குறான்னு அவனுக்கும் தெரியாது... நமக்கும் தெரியாது... கால்வலியில எங்கியாவது உக்கார்ந்தா, அந்தக் கடைக்குக் கொண்டாட்டந்தான்...” ஜீவா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டார். “அப்பிடி தெனமும் ஊரையே சுத்தி நடந்து வந்து... என்னதான் சார் பண்ணுவாரு?” நானும் பற்றவைத்துக்கொண்டேன்.

“சார் கிட்ணனுக்கு சுலோச்சனா கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனது தெரியாது சார்... அவனைப் பொறுத்தவரைக்கும்... நாரோயில்ல எங்கியாவது இருப்பான்னுதான்... அவன் நெனச்சிட்டு இருக்கானோன்னு தோணுது... அது அன்பா... லவ்வா... ஈர்ப்பா என்னன்னு தெரியலை... ஆனா, அவனுக்கு சுலோச்சனாவ ரொம்பப் புடிக்கும்... அவ்ளதான் சார்...”
“அப்படின்னா அவரு பைத்தியம்னு சொல்றீங்களா?”
“அவன் ராசிக்காரன் சார்... பைத்தியம் இல்ல... ஒருவேளை சுலோச்சனா இல்லைன்னும் கிட்ணனுக்கு தெரிஞ்சிருக்கலாம்... மொதலாளிங்க அவனை ராசிக்காரனாத்தான் பார்க்குறாங்க... எப்பயாவது ஒரு மனுஷனா பார்த்துருந்தாங்கன்னா... அவனுக்கும் எதையாவது பண்ணியிருப்பாங்க... ஆனா சார், கிட்ணனுக்கு எதைப் பத்தியும் கவலையில்ல... அவனுக்கு ராசி இல்லன்னாலும்... எல்லாருக்கும் ராசியக் கொடுக்குற மனுஷனாத்தான் நான் பார்க்குறேன்...” என்று அப்படியே தூங்கிவிட்டார் ஜீவா.
வழக்கம்போல பேச வந்த கதை நகராமல் அப்படியேதானிருந்தது. ஆனால், மனம் முழுக்க கிட்ணன் வந்து அமர்ந்துகொண்டான். ஊரே கொண்டாடி மகிழும் ஒரு ராசிக்காரனுக்கு, சொந்த வாழ்வில் எந்த ராசியும் இல்லாமல் இருப்பது ஒரு வேடிக்கைதான். தன்னை மனிதனாகப் பார்த்த ஒரு பெண்ணைச் சுமந்துகொண்டு விரலை ஆட்டியபடியே நடந்துகொண்டிருக்கிறான். ‘ராசி’ என்று சொல்கிற ஒன்று, இவனுக்கு எதைத் தந்திருக்கும்? அகாலத்தில் விம்முகிற ஒரு மழலையின் அழுகுரலாகத்தானே இவனின் ஆதார உணர்ச்சிகள் விம்மி அழும். எந்த ராசியைக்கொண்டு அவன் உணர்ச்சிகளுக்கு இதம் கொடுப்பது!
யாரோ ஒருவர் அல்ல இவர்கள். எங்குமிருக்கிற ‘ஒருவர்கள்’ இவர்கள். அடிப்படையில் எந்த நிம்மதியுமற்று வாழப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். நாதியற்றுத் திரிகிறவர்களை நாம் யோசிப்பதில்லை. அவர்களும் நம்மைப் பற்றி யோசிப்பதில்லை. ஆனால் கிட்ணன், `ராசிக்காரன்’ என்கிற ஒன்றினால் அந்த ஊரின் பிள்ளையாக நடந்துவருகிறான். தேவை என்று ஒன்றிருப்பதால்தான் கிட்ணன் கையேந்தவில்லை. மாறாக, ராசி என்கிற வேலையை முதலாளிமார்களுக்குச் செய்து கொடுத்து, உணவைக் கூலியாக பெற்றுக்கொள்கிறான். இல்லையெனில், கிட்ணனும் நாதியற்று, கணக்கில் வராத மனிதர்களோடு மனிதனாக அலைந்து கொண்டிருப்பான்.
மறுநாள் நானும் ஜீவாவும் பிரதான வீதியில் நடைப்பயிற்சியில், கதையைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசிக்கொண்டு நடந்தோம். ஒரு திண்ணையில் பாயைச் சுருட்டிக்கொண்டிருந்த கிட்ணனிடம் போய் நின்றோம். எங்களைப் பார்த்து எதுவும் பேசவில்லை. “என்னடே கிட்ணா... நடைப் பயணமா?” ஜீவா கேட்டதற்கு எந்த பதிலும் வரவில்லை. “சுலோச்சனா உன்னைக் கேட்டதா சொன்னாடே... சல்மான் அத்தா நிக்காவுல அவளைப் பாத்தேன்லா...” என்று ஜீவா சொல்ல, சட்டென்று திரும்பி ஜீவாவை ஒரு முறை முறைத்தான். ஜீவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “வர முடியாதுன்னு சொல்லு” என்று கிட்ணன் கிளம்பத் தயாரானான். அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ஜோபியில் இருந்த பத்து ரூபாய்த் தாளை கிட்ணனிடம் நீட்டி “சார் இத வாங்கிட்டு கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்” என்றேன். கிட்ணன் சற்றும் யோசிக்காமல் “முடியாது... முடியாது... மொதலாளி ஏசுவா” என்று சொல்லிவிட்டு ஆள்காட்டி விரலை ஆட்டியபடியே உடலைச் சாய்த்துக்கொண்டு ஊருக்கு ராசி வழங்கிவிட்டு, அப்படியே சுலோச்சனாவை பார்ப்பதற்காக விறு விறுவென்று நடந்தான்.
- மனிதர்கள் வருவார்கள்...