மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

மேரியோ மிராண்டா

##~##

மஞ்சுதேவன், நவிமும்பை.

 கார்ட்டூனிஸ்ட் மேரியோ மிராண்டாவின் மரணம்...

இந்தியாவிலேயே மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர் மேரியோ மிராண்டா என்பேன். கார்ட்டூனிஸ்ட்டுகள் எப்போதும் சுருக்கமாகப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மேரியோவின் முழுப் பெயர் ரொம்ப நீளம் - மேரியோ/ஜோவோ/கார்லோஸ்/டோ/ரோஸரியோ/டி/பிரிட்டோ/எ/மிராண்டா! கோவாவில் வசதி வாய்ந்தகுடும் பத்தில் பிறந்தவர் அவர். அங்கே, 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பிரமாண்ட மான பங்களாவில் தலைமுறையாக வசித்த குடும்பம் அவருடையது (இன்றும் அது ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்). இருப்பினும், கார்ட்டூனிஸ்ட் ஆவதற்காக மும்பை வந்து, அநேகமாக ரெட்லைட் ஏரியாவில் கிடைத்த ஓர் அறை யில் தங்கினார் மேரியோ. முதன்முதலில் மேரியோவின் திறமையைக் கண்டுபிடித்தவர்  'தி கரன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர் டி.எஃப்.கராக்கா.

ஹாய் மதன் கேள்வி - பதில்

20 நிறைந்த வயதில், மேரியோ அப்போது பம்பாயின் உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாயைக் கேலிச்சித்திரமாக வரைய, ஆசிரியர் 'பிரமாதம்’ என்றார். பம்பாய் மக்களும் அதைப் பார்த்து ரசித்துச் சிரித்தார்கள். மொரார்ஜிக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. டெலிபோனில் டோஸ்! வெறுத் துப்போன மேரியோ, அதன் பிறகு அரசியல் கார்ட்டூன் வரையவில்லை. 'நான் ஒரு சோஷியல் கார்ட்டூனிஸ்ட்!’ என்றே தன்னைச் சொல்லிக்கொண்டார். உலகின் அத்தனை நாடுகளுக்கும் சென்று, மக்கள் கூடும் இடங்களில் நிலவிய நகைச்சுவையை வரைந்து உலகப் புகழ் பெற்றார் மேரியோ. பிரபல பிரிட்டிஷ் கார்ட்டூனிஸ்ட் ரோனால்ட் ஸெர்ள்தான் மேரியோவின் மானசீகக் குரு (ஸெர்ள், நான் பிரமிக்கும் ஒரு கார்ட்டூனிஸ்ட்!). 'குழந்தைகள் மீது எதையும் திணிக்காமல் அவர்கள் விருப்பப்படி வளர்க்க வேண்டும்’ என்பார் மேரியோ. அதற்கேற்ப அவருடைய இரு மகன்களில் ஒருவரான ராவூல் அமெரிக்காவில் பிரபல மான ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக இருக்கிறார். மேரியோவின் கார்ட்டூன் ஓவியங்களைப் போல் வரைவதற்கு ரொம்பக் கவனமும் திறமையும் பொறுமையும் வேண்டும். அது எனக்குக் கிடையாது. என்றாலும், அவர் தலைவராக இருந்த இந்திய கார்ட்டூனிஸ்ட்டு கள் அமைப்பு எனக்கு பெங்களூரில் 'வாழ் நாள் சாதனையாளர் விருது’ தந்தபோது எனக்குச் சற்றுக் கூச்சமான பெருமை ஏற்பட்டது!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

''ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்குச் சென்று சபரிமலையில்தான் ஐயப்பனைத் தரிசிக்க வேண்டுமா? தமிழ்நாட்டில் சுவாமி ஐயப்பனுக்குக் கோயில் கட்டி, இங்கேயே கும்பிடக் கூடாதா?'' என்று விஜயகாந்த் கேட்பது சரியா சார்?

'ஐயப்பன் எங்கும் இருக்கிறார்’ என்கிற தத்துவத்தில் அவர் அப்படிச் சொல்கிறார். அதற்காக இங்கேயே ஒரு மலைமீது கோயில் கட்டி, அதைத் திருப்பதி என்று சொல்லிவிட முடியுமா? அது அது அங்கங்கே இருந்தால்தான் அதற்குத் 'திருத்தலம்’ என்று பெயர்!

என்.ராஜேந்திரன், காரைக்கால்.

ஹாய் மதன் கேள்வி - பதில்

சதாம் உசேன் விஷயத்தில் அவசரம் காட்டிய ஐ.நா. சபை, போர்க் குற்றவாளி என்று தெரிந்த பின்பும் - ராஜபக்ஷே விஷயத்தில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?

அது அவருடைய தலையெழுத்து, இது இவருடைய மச்சம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது!

விஜயலட்சுமி, சென்னை-74.

பள்ளியில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளில் உள்ள த்ரில் எங்கள் கேள்விகளில் இருக்கின்றனவா?

பள்ளியில் ஆசிரியர் கேட்ட எந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்னேன்? அடி வாங்கியதுதான் மிச்சம். நீங்கள் எல்லோரும் ரொம்ப சமர்த்து. எனக்குப் பதில் தெரிந்த கேள்விகளாகவே கேட்டு, எனக்கு 'த்ரில்’ ஏற்படுத்துகிறீர்கள்!