மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 2

இறையுதிர் காடு - 2
News
இறையுதிர் காடு - 2

இறையுதிர் காடு - 2

அன்று அஞ்சுகன் தியானத்தில் மூழ்கத் தொடங்கினான். அவன் மனதுக்குள் அம்பிகைக்கு உகந்த ‘பீஜாட்சர’ மந்திரம் அட்சரப் பிசகின்றி இடையறாது ஒலிக்க ஆரம்பித்தது. ஒரு தைப்பூச நன்னாளில் நவதானியங்களைத் தரைமேல் பரப்பி, அதன்மேல் தன் சீடர்களை பத்மாசனத்தில் அமரச்செய்து, அவர்கள் காதுகளில் போகர் அந்த மந்திரத்தை உபதேசித்திருந்தார்.

இறையுதிர் காடு - 2
இறையுதிர் காடு - 2

அதற்கு முன்பாக சீடர்களிடம் மந்திரம் தொடர்பாக கேள்விகள் ஏதும் கேட்பதாய் இருந்தால் கேட்கலாம் என்றும் கூறியிருந்தார். எல்லோரும் சற்றுத் தயங்கியபோது அஞ்சுகன் மட்டும் எழுந்து,  கைகட்டி நின்றவனாக தனக்கொரு கேள்வி என்பதுபோல் ஆயத்தமானான்.

“கேள் அஞ்சுகா...”

“மந்திரம் என்றால் என்னவென்று விளக்க வேண்டும் ஆசானே...’’

“மனத்தின் திறம்தான் மந்திரம்...’’

‘`எப்படி என்று தெளிவாக விளக்குங்கள் ஆசானே.’’

‘`விளங்கிக்கொள்ளக் கடினமானதாகவா இதை நீ கருதுகிறாய்?’’

‘`ஆம் ஆசானே... மந்திரம் சொன்னால் மனதுக்குள் எப்படித் திறம் வரும் அல்லது வளரும்... எனக்குப் புரியவில்லை...’’

இறையுதிர் காடு - 2
இறையுதிர் காடு - 2

‘`சொல்லிப்பார், உனக்குத் தானாகப் புரியும்...’’

‘`என்றால், இதை அனுபவித்துப் பார்த்து மட்டுமேதான் புரிந்துகொள்ள முடியுமா?’’

‘`ஆம்... ஆயினும் சுருக்கமாகக் கூறுகிறேன். இப்படி நான் கூறுவதுகூட சரியானதல்ல... சித்தத்தில் எல்லாவற்றையும் அனுபவமாகப் புரிதல் வேண்டும். எனது வார்த்தைகள் நான் உணர்ந்ததை முழுமையாக உனக்குள் செலுத்தாது. இருப்பினும் கூற முயல்கிறேன். நான் கூறுவதை ஒரு அடிப்படையாக மட்டும் வைத்துக்கொள்.

இறையுதிர் காடு - 2
இறையுதிர் காடு - 2மனம் என்பது ‘சப்தங்களின் தொகுப்பு.’ பல்வகை எண்ணங்கள், நினைவுகள், நோக்குகள் என்கிற அதன் சப்த வடிவம் கட்டுப்படுத்தப்பட்டு, எண்ணங்களே துளியுமில்லாத நிசப்தத்துக்குச் செல்ல உதவுவதே தியானம். இந்த நிலையை ‘மனோ நாசம்’ என்போம். `மனோ நாசம் ஆத்மபிரகாசம்!’ அதாவது, மனது நாசமாகி அடங்கி ஒடுங்கினால்தான் உள்ளிருக்கும் ஆத்மாவின் பிரகாசத்தை நாம் உணரமுடியும். இந்தப் பிரகாசத்தை அறியாமலும் உணராமலும் வாழ்ந்து மறைகின்றவர்களே அனேகர்.

சித்தத்தை ஒடுக்க முனைந்த சித்தனுக்கே இந்தப் பிரகாசம் புலனாகும். சித்தத்தை ஒடுக்க உதவுவதே மந்திரங்கள். மந்திரம் என்பது சில சொற்களின் சேர்க்கை. அந்தச் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அது பிற எண்ணங்களை விரட்டி  மனோநாசமடைய உதவுவதோடு, அப்போது உள்ளே புலப்படும் ஆத்மாவோடும் போய்க் கலந்துவிடும். இல்லையெனில் நம் உடலின் ஆதார சக்கரங்கள் ஏழும் ஒரு நேர்க்கோட்டில் தூண்டப்பட்டு அதன் சுழற்சி விசையால் புலன்கள் கூர்மையாகும். இந்நிலையில் ஒரு பூப் பூக்கும் ஓசையைக்கூட நம் செவிப்புலன் உணர்ந்திடும். எதிரில் நிற்பவரின் மன ஓட்டமும் ஒரு வகை உள்சப்தம்தானே? அது, அவர் நம்மோடு பேசியதைப்போல் நம் காதில் ஒலிக்கும். மந்திர தியானம் இப்படி நம் உடம்பின் சக்தியை நமக்கு அறிமுகம் செய்யும். இந்த உடம்பை நீ என்னவென்று நினைத்தாய்? புறத்தில் நீ காண்கின்ற எல்லாமும் அகத்தில் இதனுள்ளும் உள்ளது. மலை, மடு, சமுத்திரம், அருவி, நதி, வெளி, வீச்சு, அமிலம், அமுதம் எல்லாம் தோல் வேய்ந்த இந்தக் கூட்டுக்குள்ளும் இருக்கிறதப்பா!’’

இப்படி நெடிய விளக்கம் அளித்திருந்த அவர் கருத்தால் அஞ்சுகன் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவனாய் இப்போது யானைத் தலைப் பாறைமேல் மந்திர தியானத்தில் ஆழ்ந்திருக்கிறான். ஆயினும் உள்ளுக்குள் அனேக எண்ணங்கள். மனம் பீஜாட்சரத்தை முணுமுணுக்கும்போதே இந்த எண்ணங்கள் அதற்குரிய வடிவங்களாய் அவன் மனதில் தோன்றி அவனைத் தொடர விடாமல் செய்யப் பார்த்தன. அதுதான் மனதின் இயல்பும்கூட என்பது தெரியாமல் சில நிமிடங்களிலேயே அமர்ந்த நிலையிலிருந்து எழுந்துவிட்டான்!

‘என்ன இந்த மனம் இந்தப் பாடு படுத்துகிறது? எப்போதோ பார்த்த காட்சிகள், நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம் வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கின்றதே..? இந்த வாழ்வுக்கு நான் தகுதி இல்லாதவனோ?’ - அவன் கலங்கி நின்றபோது எதிரில் அந்த மலைத் தலத்தின் ஒற்றையடிப் பாதையில் புலிப்பாணி எனும் அவனின் சக தோழன் வந்தபடி இருந்தான்!

இறையுதிர் காடு - 2
இறையுதிர் காடு - 2

இன்று விக்கிப்போடு நின்றவளைச் சிரித்தபடியே பார்த்த அந்த யோகி, “என்னம்மா... என்கிட்ட எப்படி ஆரம்பிக்கறதுங்கற ஸ்டார்ட்டிங் ட்ரபிளா? உன்னைப் பேச விடாம நானே பேசிட்டேனா?” என்று கேட்கவும், சுதாரிக்கத் தொடங்கினாள் பாரதி.

“ஆமாம் சார்... என் பாட்டி பழனிக்குப் போகணும்னு ஆசைப்பட்டு என்னைக் கூப்பிட்டாங்க. ஆனா நான் வர முடியாதுன்னுட்டேன். அதை நீங்க அப்படியே சொல்லவும் எனக்கு அதிர்ச்சியாவும் இருக்கு.  ஆச்சர்யமாவும் இருக்கு...”

“நத்திங் மை சைல்ட்..! முதல் தடவைதான் இந்த அனுபவம் ஆச்சர்யம் தரும். அப்புறம் பயத்தைத்தான் தரும். நானும் முதன்முதலா சந்திக்கறவங்ககிட்டதான் என்னோட இந்த டெலிபதியைக் கொஞ்சம் சாம்பிள் காட்டுவேன்... தட்ஸ் ஆல்! மத்தபடி இது ஒரு சாதாரண ஆர்ட். பிராக்டிஸ் பண்ணுனா உன்னாலயும் செய்ய முடியும்.’’

``அப்ப இது மிஸ்ட்ரி இல்லையா?’’

‘`மிஸ்ட்ரியாவது ஹிஸ்ட்ரியாவது... அவ்வளவும் மைண்ட் பவர்!’’

‘`அப்ப இந்த பவரால கோர்ட்ல பொய் சொல்ற குற்றவாளிகளை உங்களால கண்டுபிடிக்க முடியுமா?”

“தாராளமா... ஆனா அதைவிடப் பெரிய வேலையெல்லாம் இருக்கிறதால நான் அதுக்கெல்லாம் போறதில்ல... யாரும் என்னைக் கூப்பிடுறதுமில்லை.”

‘`இதைவிடப் பெரிய வேலைன்னு நீங்க எதைச் சொல்றீங்க?’’

‘`என்னம்மா நீ உன் பேட்டியைத் தொடங்கிட்டியா?”

‘`அது எப்பவோ தொடங்கிடுச்சு...’’

இறையுதிர் காடு - 2
இறையுதிர் காடு - 2“ஓ.கே இப்படி உக்காந்தே பேசலாமா... இல்லை நடப்போமா?’’

‘`உங்க விருப்பம் சார்...’’

‘`டோன்ட் சே சார்... ‘குருஜி’ன்னு அழகா கூப்பிடு... சார்னா உனக்கு அர்த்தம் தெரியும்னு நினைக்கிறேன். ‘நான் உங்க அடிமை’ன்னு அர்த்தம்.’’

‘` ‘ஜி’ ன்னே கூப்பிட்றேனே?’’ - பாரதி குருவைக் கத்தரித்து மரியாதை மட்டும் தரத் தயாராக இருப்பதை உணர்த்தவும் அவரும் புரிந்துகொண்டவராய் சிரித்தபடியே ‘`ஓ.கே... கேரி ஆன்...’’ என்றார்.

‘`ரொம்ப நன்றி... என்னை ஆச்சர்யப்பட வெச்ச டெலிபதி மாதிரி உங்ககிட்ட இன்னும் என்ன மாதிரி சக்தியெல்லாம் இருக்கு ஜி?’’

‘`இந்தக் கேள்வியை பாஸ் பண்ணிடும்மா. இதுக்கு நான் பதில் சொன்னா எனக்குத்தான் கஷ்டம்.’’

‘`எந்த வகைல?’’

‘`நான் பூமில ஓட்ற நீரோட்டத்தை என் ஆல்பா பவரால் அதிகபட்சம் ஒரு நிமிஷத்துல கண்டுபிடிச்சுடுவேன். உடனே ஒரு கூட்டம் என்னைத் தேடிவந்து எங்க தோட்டத்துல எங்க தண்ணி கிடைக்கும்னு கண்டுபிடிச்சுக் கொடுங்கன்னு நிப்பாங்க. கைரேகையும் பார்ப்பேன்... உடனே கையை நீட்டி பலன் சொல்லச் சொல்வாங்க... கை நகங்களைப் பார்த்தே வியாதியைச் சொல்லிடுவேன். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...’’

‘`பூமிக்குக் கீழ எவ்வளவோ அடி ஆழத்துல இருக்குற தண்ணியை எப்படி நீங்க கண்டுபிடிக்கிறீங்க?’’

‘`இந்தக் கேள்வியே வேண்டாம்னேனே... அப்புறம் எதுக்குக் கேக்கறே?’’

‘`பர்சனலா நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?’’

‘‘அது ஒரு குரு, தன் சிஷ்யனுக்கும் சிஷ்யைக்கும் சொல்லித்தரும் விஷயம். ‘தீட்சை’ன்னு ஒண்ணு கொடுத்த பிறகுதான் அதையும் சொல்லித்தருவோம். உன் வரைல நான்தான் ‘குருஜி’ இல்லையே... சாதாரண ஜிதானே?’’ 

இறையுதிர் காடு - 2
இறையுதிர் காடு - 2

யோகியின் அந்த பதில் ஒரு சரியான மறுப்பாக மட்டுமன்றி, பாரதியைக் கொஞ்சம் குத்தவும் செய்தது.

‘`கமான், யோகா பத்திக் கேள்... சொல்றேன்’’- அவரும் தூண்டினார்.

‘`யோகா இப்ப ஒரு போரடிக்கிற சப்ஜெக்ட் ஜி. நிறைய அதைப் பத்திப் பேசியாச்சு. எழுதியாச்சு. அதோட இப்ப அது ஒரு கார்ப்பரேட் ஆர்ட்டாவும் மாறிடுச்சு. மேல்நாடுகளில் ஒரு இன்ஜினீயர், டாக்டரைவிட யோகா டீச்சர் அதிகம் சம்பாதிக்கிறார். நிறைய பேர் கத்துக்கவும் செய்யறாங்க. ஆனா வாழ்க்கைல யாரும் தொடர்ந்து யோகா பண்றதில்லை...’’

‘`அப்படி எல்லாம் அவசரப்பட்டுச் சொல்லிடாதே... நான்லாம் ரொம்பவே ரெகுலர். என் ஸ்டூடன்ட்ஸும் ரெகுலர்...’’

``இருக்கலாம்... ஆனாலும் யோகாங்கிறது அன்றாடம் காபி, டீ சாப்பிடுற மாதிரி ஒரு விடமுடியாத பழக்கவழக்கமா பலர்கிட்ட ஆகறதில்லையே?’’

‘`என்கிட்ட கத்துக்கோ... நீ ஒரு யோகா அடிக்ட் ஆகி யோகியாகி வாழ்க்கைய ரொம்ப சந்தோஷமா வாழ்வே...’’

‘`கிட்ட தட்ட எல்லா கார்ப்பரேட் யோகீஸும் இப்படித்தான் சொல்றாங்க.’’

``நீ என்னை  கார்ப்பரேட் யோகின்னா நினைக்கிறே?’’

‘`நீங்க அப்படித்தானே ஜி?’’

``பைஜாமா குர்தா, ஸ்பான்டேனியஸ் இங்கிலீஷ், விமானப் பயணம்னு  காலத்தை அனுசரிச்சு வாழ்ந்தா கார்ப்பரேட் யோகியா?’’

‘`அது ஒண்ணும் கெட்ட வார்த்தை இல்லையே ஜி... ஏன் மறுக்கிறீங்க?’’

``கார்ப்பரேட்னா அது ஒரு வர்த்தகம்மா.. வியாபாரம்! நான் யோகா வியாபாரி இல்லை... எனக்கு இவ்வளவு பணம் கொடுங்கன்னு நான் என் மாணவர்கள் கிட்ட கேட்டதுமில்லை...’’

‘`மன்னிக்கணும் - நீங்க போட்ருக்குறது பிராண்டட் டிரஸ் மெட்டீரியல். ஆன்லைன்ல பர்ச்சேஸ் பண்ணதாதான் இருக்கணும்.  குறைஞ்சது அஞ்சாயிரம் ரூபாய் இருக்கும். அப்புறம் உங்க கைல இருக்கிற ரோலக்ஸ் வாட்ச்... சிங்கப்பூர் ஏர்போர்ட்ல வித் அவுட் டேக்ஸ் 2000 டாலர்... உங்க மேல பிராண்டட் சென்ட் வாசனையையும் ஃபீல் பண்றேன். இந்த செகண்ட்ல உங்க மெட்டீரியல் வேல்யூவே இந்தியப் பணமதிப்புல 50,000 ரூபாய் இருக்கும். பணம் வாங்காம சேவை செஞ்சு, எப்படி ஜீ இவ்வளவு சௌகர்யமா இருக்க முடியும்?’’

‘`அப்ப நான் பொய் சொல்றதா நினைக்கிறியா பாரதி?’’

‘`நம்ப முடியலேங்கறேன்...’’

‘`சரிம்மா நம்பாதே... நீ எப்படி வேணும்னா நினைச்சுக்கோ...’’

‘`உங்க ஸ்டூடன்ட்ஸ் கிட்ட கேட்டு உண்மையத் தெரிஞ்சிக்கச் சொல்வீங்கன்னு நினைச்சேன். ஆனா நம்பாதேன்னு எதிர்பார்க்காத பதிலைச் சொல்லிட்டீங்களே?’’

‘`நான் எதுக்கும்மா ப்ரூவ் பண்ணணும்? அப்படி நான் பண்ண முயற்சி செய்தா நான் ஒரு சரியான யோகியாவே இருக்கமுடியாது.”

‘`நீங்க சொல்றது எனக்குப் புரியல... சரியான யோகிக்கும் ப்ரூவ் பண்றதுக்கும் என்ன  சம்பந்தம்?’’

‘`ஒரு சரியான யோகிங்கிறவன் எல்லாத்தையும் சமமா நினைக்கணும். பிறருடைய அபிப்ராயங்களுக்காக வருத்தமும் படக்கூடாது. சந்தோஷமும் படக்கூடாது.’’

‘`இது சாத்தியமா ஜி?’’

‘`நான் அப்படித்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். பை த பை , பிறப்பாலயே நான் ஒரு கோடீஸ்வரன். நூறு கோடிக்கு மேல சொத்து இருக்கும்மா. என் மெட்டீரியல் வேல்யுவுக்கு உனக்கு இப்ப பதில் கிடைச்சிருக்கும்னு நம்பறேன். பலப்பல வருஷங்களுக்கு முன்னால இமய மலைப்பக்கம் சும்மா ஊரைச்சுற்றிப் பார்க்கப் போனேன். அங்க ஒரு சாமியாரை சந்திச்சேன். அவர்தான் என் ஞான குரு. சாதாரண ‘திவ்யப் பிரகாஷை’ அவர்தான் ‘யோகி திவ்யப் பிரகாஷ்’னு மாத்தினார். என் உடம்பு, மனசுன்னு எல்லாத்தையும் எனக்குப் புரிய வெச்சார். என் பூர்வ புண்ணியம்தான் காரணங்கிறது பின்னால தெரிஞ்சது.

இறப்புக்குப் பிறகு கூட வரப்போறது புண்ணியம் மட்டும்தான். அதனால அதை உத்தேசம் பண்ணி எனக்குத் தெரிஞ்ச யோகக்கலையை மதிச்சு, கத்துக்க வர்ற அவ்வளவு பேருக்கும் சொல்லித்தரேன்.

யோகி திவ்யப்பிரகாஷின் சரளமான விளக்கமும் துளியும் பதற்றமில்லாத உடல் மொழியும், பாரதியை மெள்ள கட்டிப் போடத் தொடங்கியது. அணுகுமுறைக்கு அவரிடம் வேலையே இல்லை என்பது போலவும் தோன்றிற்று.

தொடக்கத்தில் அதிசயிக்கச் செய்தவர், அதைத் தொடராமல் யதார்த்தத்துக்குள்ளும் தத்துவத்துக்குள்ளும் சென்றது இன்னமும் ஆச்சர்யப்படவைத்தது. இப்படிப்பட்டவரை ஒரு மரியாதை நிமித்தமாகக்கூட ‘குருஜி’ என்று கூப்பிடத் தயங்கியதெல்லாமும் தவறுபோல் உணர்ந்தாள். அப்படியே மௌனித்தாள்.

‘`வேண்டாம் பாரதி... என்னை குருஜின்னு கூப்பிடாம விட்டதை நினைச்சு வருத்தமெல்லாம் படாதே... அதுல எந்தத் தப்பும் இல்லை’’ என்று அதற்கொரு பதிலைச் சொல்லவும் திரும்பவும் ஆடிப்போனாள்.

‘`ஜி... உங்க முன்ன உக்காந்து பேசவே பயமா இருக்கு... இப்படி மனசுல நினைக்குறத அப்படியே சொன்னா எப்படி?’’

‘`அதான் தொடக்கதுலேயே சொன்னேனே... முதல்ல ஆச்சர்யமா இருக்கும், அப்புறம் பயமா இருக்கும்னு...’’

‘`எல்லாத்துக்கும் ஒரு சரியான பதில் வெச்சிருக்கீங்க...’’

‘`உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கிலுண்டாகும். நான் சொல்லல...  ‘ஞானக் கிறுக்கன்’ பாரதி சொல்லியிருக்கான்!’’

‘`அதனாலதான்ஜி கார்த்திகாவான நான் கூட பாரதியானேன்.’’

‘`தெரியும்... வரப்போற நாள்கள்ல நீ என்ன ஆவேன்னும் தெரியும்.’’

‘`ஜோசியம் சொல்லப் போறீங்களா?’’

``உன் பேட்டிய முடிச்சுக்கோ - உன்னப்பத்தி நான் இன்னும் கொஞ்சம் சொல்றேன்.’’

‘`சரி ஜி முடிச்சுக்கிறேன். என்னப் பத்தி என்ன சொல்லப்போறீங்க?’’

‘`அதான் எடுத்த எடுப்புல சொன்னேனே... மாயம்னும் மந்திரம்னும் முத்திரை குத்தி பயந்தும் அலட்சியமாகவும் பார்க்கப்பட்ற பல விஷயங்களை நீ உன் வாழ்க்கைல சந்திப்பேன்னு.’’

‘`உதாரணத்துக்கு ஒண்ணு சொல்ல முடியுமா?’’

‘`சொல்றேன். அதை யார்கிட்டையும் சொல்லமாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்.”

‘`இதுக்கு எதுக்கு சத்தியம்?’’

‘`சரி வேண்டாம் விட்டுடு... நானும் சொல்லலை...’’

‘`உடனே இப்படிச் சொன்னா எப்படி?’’

‘`அப்படித்தான்... சில அதிசயங்கள் ரகசியமா மட்டுமே இருக்கணும். இல்லேன்னா அது அதிசயமா நீடிக்காது...’’

‘`அப்படி என்ன அதிசயம் அது? ஒண்ணே ஒண்ணைச் செல்லுங்களேன்... - சத்தியம்..!”

‘`தாங்கள் வாழ்ந்த காலத்துல சுமந்திருந்த இந்த உடம்பை ஒரு கட்டத்துக்குமேல சுமக்க முடியாம சமாதிக்குள்ள அடக்கிட்டு ஆத்ம உடம்போட  நடமாடுற சித்தர்களைச் சந்திக்க நேர்ந்தா அது அதிசயமில்லையா... அதுக்காக நீ பழனிக்குப் போகப்போறே!’’

யோகியின் பேச்சு பாரதியை விக்கித்திருக்கச் செய்தது. வெறித்துப்பார்த்தாள்.

‘`என்ன பாக்குற? உன்னால அவங்கள நானும் பார்க்கப்போறேன். நான் உன் எடிட்டரைப் பார்த்து, அவர் உன்னை என்கிட்ட அனுப்பினது எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒண்ணு. இது வெறும் ஆரம்பம்தான்... நிறைய இனிமேல்தான் இருக்கு!’’ அவர் அப்படிச் சொல்லவும் ஆழ்ந்த மௌனவயப்பட்டவள் சில விநாடிகள் கழித்து, பேசலானாள்.

‘`இல்லை ஜி! நீங்க கடைசியா சொன்ன சில கருத்துகளை என்னால ஏற்க முடியாது. என் எடிட்டர் உங்களைப் பார்த்த பிறகு என்னை அனுப்பியது, நான் உங்களைச் சந்தித்தது எல்லாமே ரொம்பத் தற்செயலான விஷயங்கள்... இதை ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒண்ணுங்கிறத என்னால ஏற்க முடியாது. இல்லாத சித்தர்களைப் பார்ப்பேன்னு சொன்னதைக்கூட ஒரு ‘இன்ட்ரஸ்ட் பேஸ்’ல நான் நடக்கட்டும் பார்க்கலாம்னு சொல்லி ஏத்துக்குவேன். ஆனா எல்லாருடைய வாழ்வும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதுங்கிற இந்தத் தலைவிதிச் சிந்தனையை நான் வெறுக்கிறேன், மறுக்கிறேன்.

எந்த ஒரு சம்பவமும் அதனுடைய தொடர்புடைய ஒரு முந்தைய சம்பவத்தின் தொடர்ச்சிதான். இதுக்கு நடுவுல எதிர்பாராமல் எதாவது நடந்தா அது ‘ஆக்ஸிடென்ட்’ இல்லேன்னா ‘இன்சிடென்ட்,’ அவ்வளவுதான். அவ்வளவேதான்!’’

‘`சரிம்மா... அடுத்து என்னை எக்காரணம் கொண்டும் சந்திக்கக்கூடாதுங்கிற உறுதியோட திரும்பிப்போ. அப்படியே நடக்கவும் முயற்சி செய். காலம் என்ன செய்யுதுன்னு பார்ப்போம்.’’

‘`இந்த டீல் அவசியமில்லை ஜி! வீம்பா நான் உங்களைப் பார்க்கிறத தவிர்த்தா, நான் நீங்க சொன்ன கருத்துகளால பாதிக்கப்பட்டுட்டேன்னு ஆயிடும். நான் நானா இருக்கேன். உங்க டெலிபதி பவருக்கு மட்டும் என் சல்யூட். கொஞ்சம் போட்டோ எடுத்துக்கிட்டு நான் கிளம்பறேன்’’ என்றவள் தான் கொண்டு வந்திருந்த டிஜிட்டல் கேமரா மூலமாக அவரை அப்படியும் இப்படியுமாக சுற்றி வந்து சில படங்களை எடுத்துக்கொண்டு அழகாய்க் கைகுலுக்கிவிட்டு விடைபெற்றாள். யதார்த்தமாய் அந்தக் கையை மோந்தபோது நல்ல சந்தன வாடை!

அலுவலகம் திரும்பி ஆசிரியர் முன்னால் அவள் வந்து அமர்ந்தபோது ஆசிரியர் ஜெயராமன், தன் ஐபோனில்,  வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ பார்த்தபடி இருந்தார். பாரதியை உட்காரச் சொல்லிவிட்டு வீடியோவைத் தொடர்ந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகே நிமிர்ந்தார்.

‘`என்ன பாரதி... எந்த வீடியோவை அப்படிப் பார்த்தேன்னு ஆச்சர்யமா இருக்கா?’’

‘`அதெல்லாம் இல்லை சார்... கைல செல்போன் இருந்து அதை அளவா பயன்படுத்தினா அதுதான் சார் இன்னிக்கு ஆச்சர்யம்.’’

‘`சரி நீ போன விஷயம் நல்லபடி முடிஞ்சதா?’’

‘`முடிஞ்சது சார்.. நல்ல ரிசப்ஷன்!’’

‘`ஆள் எப்படி?”

‘`நல்ல மனுஷனா, இல்லை, அப்படி இப்படியான்னுதானே கேக்குறீங்க?’’

‘`உம்...’’

‘`நல்ல மனுஷன் சார்... அதேசமயம் கொஞ்சம் அப்படி, கொஞ்சம் இப்படியும் சார்...’’

‘`இது என்ன புதுமையான விளக்கம்?’’

‘`கேரக்டர் நல்ல கேரக்டர்தான் சார். யோகாவை ஒரு முகமூடியா போட்டுக்கிட்டு பின்புலத்துல வேற நோக்கங்கள் கொண்டு நடக்கற ஒரு மனிதரா என்னால அவரை நினைக்க முடியல. ஆனா ரொம்பப் பழைய மரபு சார்ந்த மனுஷராத்தான் தெரியறார். தலையெழுத்து, கைரேகைன்னு அதுக்கான தடயங்கள் அவர்கிட்ட தெரிஞ்சது. ஆனா ரொம்பத் தெளிவா தன் வேலைகளைச் செய்யறார்.’’

‘`அது சரி... நம்ம மனசுல இருக்கறத எப்படி அவ்வளவு துல்லியமா அவரால சொல்ல முடியுது?’’

‘`அவரே அதை டெலிபதின்னு சொல்லிட்டார் சார். பிராக்டிஸ் பண்ணா நம்மாலயும் முடியும்ற மாதிரி சொன்னார். அவர் பாஷைல சொல்லப்போனா, அது ஒரு சித்த விஞ்ஞானம் அதாவது சாமியார்களின் சயன்ஸ்!’’

‘`உன்னைப் பத்தியும் எதாவது சொன்னாரா?’’

‘`சொன்னாராவா, அடுக்கிட்டார்!’’

‘`என்ன... என்ன?’’

‘`சாரி சார்... எதையும் வெளியே சொல்லக்கூடாதுனு சத்தியம் பண்ணாத்தான் சொல்லுவேன்னு சொன்னார். முதல்ல மறுத்தேன். அப்புறம் பண்ணிட்டேன்.’’

‘`என்ன பாரதி இப்படிக் கவுந்துட்டே?’’

‘`கவுரல சார்... அவர் போக்குக்குத்தான் போய்ப் பார்ப்போமேன்னு போனேன்.’’

‘`அப்ப அது என்னன்னு சொல்ல மாட்டே?’’

‘`அது வேண்டாம் சார். ஐ வான்ட் டு கீப் மை வேர்ட்ஸ்! ஆனா பொதுவா சில விஷயங்களைச் சொல்லமுடியும். என் லைஃப்ல நான் அமானுஷ்யமான பல அனுபவங்களுக்கு ஆளாவேன்னு சொன்னார் சார்.’’

‘`அதுபோதுமே... சுவாரஸ்யமா நமக்கு நிறைய ஆர்ட்டிகிள் கிடைக்குமே?’’

‘`மே பி... இருக்கலாம்...’’ - பாரதி தோள்களைக் குலுக்கி உதட்டைச் சுழித்து ஒப்புக்கொண்டாள்.

‘`பை த பை... அவர் டெலிபதி பவரால நாம் கவர்ஸ்டோரியா போட்றதுக்கு ஏதாவது பரபரப்பான செய்தி உண்டா?’’

‘`அப்படி எதுவும் இல்லை சார்... தன்னை ஒரு யோகா மாஸ்டரா மட்டுமே அவர் ப்ரொஜெக்ட் பண்ணிக்க விரும்பறார். இந்த டெலிபதி பத்தியெல்லாம் வெளிய தெரியறத அவர் விரும்பலை. இன்ஃபேக்ட் எனக்கே அடுத்து அவரைச் சந்திக்கத் தயக்கமாதான் இருக்கு. நம்ப மைண்டை அவ்வளவு ஃபாஸ்டா ரீட் பண்ணி போட்டுத் தாக்குறார்...’’

‘`யு ஆர் ரைட்! நான்கூட அவர் பக்கத்துல ரொம்ப டெலிகேட்டா ஃபீல் பண்ணிட்டேன். நம்ப சர்க்குலேஷன் பத்தின கவலை, நாம கோர்ட்ல சந்திக்கிற வழக்குன்னு எதையும் அவரைப் பக்கத்துல வெச்சுக்கிட்டு நினைச்சுப் பார்க்கவே பயமா இருந்தது. நம்ப மனச பத்திதான் உனக்குத் தெரியுமே... எதை எல்லாம் நினைக்கக் கூடாதுன்னு நினைப்போமோ அதைத்தான் மனசும் கிளறிக் கிளறிவிடும்.’’

‘`உண்மைதான் சார்... அவரைச் சந்திச்ச பிறகு மனம் பத்தின என் எண்ணங்கள்ல நிறையவே மாற்றங்கள்!’’

‘`மரம் சும்மா இருந்தாலும் காத்து அசைச்சுப் பார்க்கும்னு சொல்வாங்க. மனசும் அப்படித்தான்! சூழ்நிலை பாதிப்புக்கு ஏற்பதான் மனம் செயல்பட முடியும். போகட்டும், உனக்கு இன்னொரு அசைன்மென்ட்.’’

‘`என்ன சார்?’’

‘`நீ நாளைக்கே பழனிக்குப் போகணும்!’’

- ஆசிரியரின் உத்தரவு பாரதியை ஒரு விநாடி கிறுகிறுக்கச் செய்தது!

- தொடரும்

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியங்கள்: ஸ்யாம்